Uyir kadhal 10

Uyir kadhal 10

உயிர் காதலே உனக்காகவே… 10

வேட்டை ஆரம்பம்…

காற்றில் விரவியிருந்த பனி உடலைக் குளிரச் செய்ததில், தம் மேல் விழுந்த சூரியக் கதிர்கள்கூட சுகமாக இருந்தது ஹரிணிக்கும் சரணுக்கும். உச்சிக்கு வர இன்னும் நேரமிருப்பதால் சற்று பதமாகவே கதிர்களை அனுப்பிக் கொண்டிருந்தான் கதிரவன்.

சரண் வீட்டின் மாடியில் அவனது அறை பால்கனியில் போடப்பட்டிருந்த நீள் சாய்விருக்கை வடிவிலான ஊஞ்சலில் ஹரிணி அமர்ந்திருக்க, அவளது மடியில் தலைசாய்த்துப் படுத்திருந்தான் சரண்.

பால்கனி முழுவதிலும் விதவிதமான நிறங்களில் ரோஜா பூஞ்செடிகள் தொட்டிகளில் வைக்கப்பட்டு, அவை கொத்துக்கொத்தாக மலர்ந்திருந்ததில் வீசிய சுகந்தம் மாடி முழுவதுமே பரவியிருந்தது.

வார இறுதி நாளாகையால் காலையிலேயே அவளது ஹாஸ்டலுக்குச் சென்று அவளை அழைத்து வந்திருந்தான். மாடியில் தனதறையை சுற்றிக் காட்டுகிறேன் என்று அழைத்து வந்தவன், அவளை கீழே இறங்க விடாமல் வம்பிழுத்துக் கொண்டிருந்தான்.

“ம்ப்ச், எந்திரிங்க கீழ இறங்கிப் போகலாம். வந்து எவ்வளவு நேரமாச்சு. அத்தை ஏதாவது தப்பா நினைச்சுக்கப் போறாங்க.”

“ஏன் ஹனிக்குட்டி தப்பா நினைச்சுக்கற அளவுக்கு இங்க ஏதாவது நடக்குதா என்ன? எனக்கு இதுவரை ஐடியா இல்லை. ஒருவேளை உனக்கு ஐடியா இருந்தா ஐ யம் வெயிட்டிங்.” குறும்பாக கண்சிமிட்டியவனை முறைத்தவள் அவனது தலையில் ஒரு கொட்டு வைத்தாள்.

“என்னடி இப்பவே அடிக்கிற? அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான். இப்ப தடவிக்குடு.” என்றபடி அவளது வலது கரத்தை எடுத்துத் தன் தலைமீது வைத்தவன் சுகமாக கண்களை மூடிக் கொண்டான்.

சிரித்தபடி அவனது தலையை வருடியவள், “நான் எங்க காலேஜ்ல ஏற்பாடு பண்ணியிருக்கற ட்ரிப்புக்குப் போகட்டுமா? அப்பாகிட்ட கேட்டா, உங்ககிட்ட கேட்க சொல்லிட்டாங்க.” லேசாகச் சிணுங்கியது அவளது குரல்.

“உங்கப்பாகிட்டயே இதுக்கு பதில் சொல்லிட்டேன் நான். நீ கொஞ்ச நாளைக்கு எங்கயும் போகாம எங்க பார்வை வட்டத்துக்குள்ளயே இருக்கறதுதான்டா நல்லது. ஹெப்பி ஃபால்ஸ்தான, அப்புறமா நான் கூட்டிட்டுப் போறேன் உன்னை.”

“ப்ச்… இது ஃபைனல் இயர் சரண். நாங்க எல்லாரும் ஃபிரெண்ட்ஸ்ஸோட சேர்ந்து போற சந்தோஷம் கிடைக்குமா? நான் வரலைன்னா சுஜியும் போக மாட்டா.

என் ஃபிரெண்ட்ஸ் எல்லாருமே கேவிச்சுக்கறாங்க. நான் பத்திரமா போயிட்டு வரேன்பா.”

“என்னால இப்ப எங்கயும் அசையக்கூட முடியாதுடா. உன்கூட செக்யூரிட்டியும் யாரையுமே அனுப்ப முடியாது. உன்னை தனியா அனுப்பி வச்சிட்டு நான்தான் தவிச்சுகிட்டு இருக்கனும். அதுவுமில்லாம இந்த வாரம் உனக்கு பிறந்தநாள் வேற வருது. என்கூட செலிபரேட் பண்ணுவன்னு நினைச்சேன்.”

“செக்யூரிட்டிலாம் யாருமே தேவையில்ல சரண். நான் என்ன தனியாவா போறேன்? எங்ககூட ஸ்டாஃப்ஸ் வராங்க. என்கூடப் படிக்கிற பசங்க தடிதடியா வர்றானுங்க. என்ன பயம்? நான் எங்கயும் தனியா போகாம பத்திரமா இருந்துக்குவேன். என் பிறந்தநாள் அன்னைக்கு சாயந்திரம் நான் இங்க வந்துடுவேன். நாம ஈவ்னிங் செலிபரேட் பண்ணலாம்.”

அரைமனதாக தலையசைத்தபடி, அவளுடன் வருபவர்கள் யார்யார், எங்கெங்கு செல்கிறார்கள் அனைத்தையும் விசாரித்தவன்,

“ஓ.கே. சேஃபா போயிட்டு வா.” என்றான்.

“ஹைய்யோ, சோ ஸ்வீட். தேங்க்யூ.” என்றபடி அவனது கன்னம் கிள்ளி முத்தம் வைத்தவளைப் பார்த்தவன்,

“ஹேய், என்ன இது? சின்னப்புள்ளைக்கு மிட்டாய் குடுக்கற மாதிரி குடுத்து ஏமாத்துற. ஒழுங்கா ஒரு கிஸ் இங்க குடு.”
கண்களைச் சிமிட்டியபடி இதழைக் காட்டியவனை முறைத்தவள்,

“போதும் போதும்… அத்தை கீழத் தேடுவாங்க. வாங்க போகலாம்.” என்றபடி எழ முற்பட்டவளின் தோளில் கை போட்டு வளைத்தவன் அவளது இதழை தன்வசப்படுத்தியிருந்தான்.

நொடிகளைத் தாண்டி நிமிடங்களாய் நீண்ட இதழொற்றல் முடிவுக்கு வந்தபோது, அங்கிருந்த ரோஜாக்களை ஒத்திருந்தது அவளது வதனம். வெட்கம் தாளாமல் எழுந்து ஓடியவளைத் துரத்தியது அவனது அட்டகாசமான சிரிப்பு.

சீண்டலும் சிரிப்புமாக மதிய உணவை முடித்தவர்கள், திலகவதியிடமும் தீரனிடமும் விடைபெற்றுக் கிளம்பினர். நேராக மார்க்கெட் ரோட்டில் உள்ள பழைய புத்தகக் கடைக்கு அவளை அழைத்துச் சென்றான். இவர்களுக்கு முன்பே அங்கு வந்து காத்திருந்தாள் சுஜி.

ஹரிணி இறங்கிக் கொள்ளவும், “ஓகே. நான் கிளம்பறேன். நீங்க புக்ஸ் வாங்கிட்டு சேஃபா ஹாஸ்டல் போனதும் எனக்கு கால் பண்ணுங்க.” என்றபடி கிளம்பிச் சென்றான் சரண்.

அந்த புத்தகக் கடையினுள் நுழைந்தனர் சுஜியும் ஹரிணியும்.
பெயர்தான் பழைய புத்தகக்கடை. ஆனால் அங்கு கிடைக்காத புத்தகங்களே இல்லை என்னுமளவுக்கு விஸ்தாரமான கீழ்தளம் முழுவதும் ரேக்குகள் அடிக்கப்பட்டு, புத்தகங்கள் வகையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்த மதிய வேளையிலும் சிலர் நின்று புத்தகங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர்.

வாயெல்லாம் சிந்திய புன்னகையோடு வரவேற்றார் பாய்,

“ஆவோ… ஆவோ… பேட்டி. நீங்க கேட்ட புக்கெல்லாம் இங்க இருக்கு.” தமிழும் கன்னடமும் ஹிந்தியும் கலந்து கட்டி அடித்த மொழியில் பேசியவர் புத்தகக் கட்டை எடுத்து நீட்டினார்.

ஐந்தாறு புத்தகங்கள் சேர்ந்து கட்டப்பட்டிருந்த அந்த புத்தகக்கட்டை வாங்கியவர்கள் பிரித்து அவர்கள் கேட்ட அனைத்து புத்தகங்களும் இருக்கின்றதா என்று சரிபார்த்தனர்.

மாஸ் கம்யூனிகேஷன் சம்பந்தப்பட்ட புத்தகங்களைத்தான் கேட்டிருந்தனர்.
“பாய், இதுல வில்லியம் டி புரூக்ஸ்ஸோட ஸ்பீச் கம்யூனிகேஷன் புக் இல்லயே.”

“எனக்கு கிடைச்சவரை எடுத்து வச்சேன் பேட்டி. அந்த புக் வந்தமாதிரியே தெரியலையே.”

“ஹைய்யோ, அது எங்க தேடியும் கிடைக்கல பாய். அதான் உங்ககிட்ட கிடைக்குமான்னு பார்த்தோம்.” ஹரிணி அலுத்துக்கொள்ள, “ ஆன்லைன்ல ஆர்டர் போட்டு வாங்க முடியுமான்னு பார்க்கலாம் இரு” சமாதானப்படுத்தினாள் சுஜி.

“நேத்து புதுசா சரக்கு வந்தது. இன்னும் கட்டு பிரிக்கக்கூட இல்லை. அதுல இருக்கான்னு தேடிப் பார்க்கறீங்களா?”
பாய் கேட்கவும் சரியென்று தலையசைத்தவர்கள், அவர் கைகாட்டிய குறுகிய மாடிப்படியில் ஏறினர். கீழ்தளத்தில் கடையும் மாடியில் அவரது வீடும் இருந்தது.

சிறு சிறு அறைகளைக் கொண்ட வீட்டினுள் ஒரு பெரிய அறை மட்டும் குடோனாகப் பயன்படுத்தப்பட்டு வந்திருந்தது.

மாடியேறியதும் எதிர்ப்பட்டு வணக்கம் வைத்த பாயின் மனைவியிடம் பதில் வணக்கம் வைத்தவர்கள், அவருக்கு ஹிந்தியைத் தவிர வேறொன்றும் தெரியாததால், தங்களுக்குத் தெரிந்த அரைகுறை ஹிந்தியை வைத்து தாங்கள் வந்த காரணத்தை விளக்கிவிட்டு குடோனுக்குள் நுழைந்தனர்.

பழைய புத்தகத்தின் வாசம் குப்பென்று முகத்தில் அடித்தது. வெளிச்சமாக இருக்க இரண்டு குழல் விளக்குகளைப் போட்ட பாய் மனைவி இருவருக்கும் தேநீர் தந்து உபசரிக்க, அவருக்கு நன்றி கூறிவிட்டு புத்தகத்தைத் தேடத் துவங்கினர்.

பொறுமையாக வந்திருந்த அனைத்து கட்டு புத்தகங்களிலும் தேடியவர்களுக்கு அவர்கள் அப்போது தேடிய புத்தகம் கிடைக்காவிட்டாலும், வெகு நாட்களாக வாங்க வேண்டும் என்று எண்ணியிருந்த சில புத்தகங்கள் கிடைத்தன.

அப்பொழுது மாடியேறி வந்த பாய், “பேட்டி, தேடிய புக்ஸ் கிடைச்சுதா?”

“இல்ல பாய், அந்த புக் கிடைக்கல. ஆனா வேற கொஞ்சம் புக்ஸ் கிடைச்சிருக்கு.” என்றபடி நிமிர்ந்த சுஜிக்கு அந்த அறையின் சுவர் முழுவதும் இரும்பு அலமாறிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களில் பார்வை விழுந்தது.

“அதெல்லாம் என்ன புக்ஸ் பாய்?”

“அதெல்லாம் பழைய சரக்கும்மா. பத்து பன்னென்டு வருஷத்துக்கு முந்தின புக்கெல்லாம்கூட இருக்கும்.”

“ஓ… நாங்க தேடி வந்த புக்கோட பழைய எடிஷன் கிடைச்சாகூடப் பரவாயில்ல. அதுல இருக்கான்னு தேடிப் பார்க்கவா?”

“தேடிப்பாரு பேட்டி. கிடைச்சா எடுத்துக்கோ.” பதில் சொன்னவர் மதிய உணவை அருந்தச் சென்றுவிட, சுஜியும் ஹரிணியும் பொறுமையாக ஒவ்வொரு ரேக்காகத் தேடினர். கண்களை புத்தகங்களின் மீது பதித்தவாறே,

“ஹேய் சுஜி, நாளைக்கு ட்ரிப்புக்குப் போக பர்மிஷன் குடுத்துட்டாரு சரண்.”

“நிஜமாவா, எப்படிடி எப்படி ஒத்துக்கிட்டாரு? அவரும் கூட வராரா? போலீஸ்கார் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆச்சே.” அதிசயித்தாள் சுஜி.

“இல்ல, அவரால வரமுடியாதாம். என்னை பத்திரமா போயிட்டு வரச்சொன்னார். போலீஸ்கார் நல்ல போலீஸ்கார்டி.”

“ஹேய், போலீஸ்க்கு லஞ்சம் குடுத்து காரியம் சாதிச்சிருக்க, கேடிடி நீ.”

“ச்சீப்போ… அதெல்லாம் ஒன்னுமில்ல.” வெட்கச் சிரிப்போடு கையில் வைத்திருந்த புத்தகத்தால் சுஜியை மெல்ல அடித்தவளைக் கண்டு சுஜியின் சிரிப்பும் பெரிதானது.

“ஹே… ஹேய், யார்கிட்ட மறைக்கிற? நீ வரும்போதே கவனிச்சேனே. முகம் அப்படியே மின்னுச்சே. காலையில லைட் பிங்க் கலர்ல போனவ, வரும் போது டார்க் பிங்க்கா வந்தா எங்களுக்குப் புரியாதா?”

“போதும்டி லூசு. ஓவரா ஓட்டாத. எங்களுக்கும் ஒரு காலம் வரும். அப்ப நாங்களும் ஓட்டுவோம்.”

“ஓட்டிக்கோ ஓட்டிக்கோ. அதுவரைக்கும் நான் ஓட்டிக்கறேன்.” ஒருவருக்கொருவர் கிண்டலடித்தவாறு அந்த அறையில் இருந்த அனைத்து புத்தகங்களையும் பார்த்தவர்களை, கடைசி அடுக்கில் லேசாக தூசு படிந்து இருந்த பெட்டி ஈர்த்தது.

வேலைப்பாடுகள் செய்யப்பட்ட அந்த பெட்டி கண்களைக் கவரும்படி அழகாக இருந்தது. அதனைக் கையில் எடுத்துப் பார்த்தாள் சுஜி. சற்று கணமாக இருந்தது.

வேலைப்பாடுகளூடே அந்தப் பெட்டியின் சாவியும் பதிந்து வைக்கப்பட்டிருந்தது வித்தியாசமாக அழகாக இருந்தது. இருவரும் அதை ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருக்கும் போது பாய் வந்தார்.

“தேடின புக் கிடைச்சுதா பேட்டி?”

“இல்ல கிடைக்கல பாய். இது என்ன பெட்டி பாய் வித்தியாசமா இருக்கு?”

“இது ஒரு டைரிம்மா.”

“டைரியா?” நம்ப முடியாமல் பார்த்தனர் இருவரும்.

“ம்ம்… ஆமா, அதுலயே சாவி இருக்கு பாருங்க. அதை எடுத்து பெட்டியத் திறங்க. அதுக்குள்ள டைரி இருக்கும். டைரி சாதாரணமாதான் இருக்கும். இந்த பெட்டிதான் அழகா இருக்கும். இது இங்க வந்து பல வருஷமாகுது.”

சாவியை எடுத்து பெட்டியைத் திறந்தவர்களை வரவேற்றது 2009ம் வருட டைரி ஒன்று. சிகப்பு நிற வெல்வெட் துணியால் ஆன அந்த டைரியே பார்வைக்கு அழகாக இருந்தது.

“வாவ்… பத்து வருஷத்துக்கு முந்தின டைரி. புதுசு மாறாம எவ்வளவு அழகா இருக்கு பாரேன்.” சிலாகித்த சுஜி,

“எதுவுமே எழுதாத டைரியா பாய்?” என்று வினவ,

“இல்ல பேட்டி, இருபது முப்பது பக்கம் ஏதோ எழுதியிருக்காங்க. ஆனா தமிழ்ல இருக்கு. என்ன எழுதியிருக்காங்கன்னு எனக்குத் தெரியல. உங்களுக்கு வேணும்னா இந்த டைரிய எடுத்துக்கோங்க.” என்றபடி வியாபாரத்தை கவனிக்கச் சென்றார் பாய்.

“இதை வச்சு என்னடி செய்யப்போற?” ஹரிணியின் கேள்விக்கு,

“இருக்கட்டுமே, எவ்வளவு அழகா இருக்கு? சும்மா ஏதாவது எழுத வச்சுக்கலாம்.”
பெட்டிக்குள் டைரியை வைத்து மூடினாள் சுஜி. இருவரும் தாங்கள் வாங்கியிருந்த மற்ற புத்தகங்களையும் எடுத்துக் கொண்டு கீழே இறங்கி வந்தனர்.

வாங்கிய புத்தகங்களுக்கான விலையைக் கொடுத்தவர்கள், ஆட்டோ ஒன்றைப் பிடித்து ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்தனர்.

பத்திரமாக வந்து சேர்ந்ததை சரணுக்கு அழைத்துச் சொல்லிய பின், மறுநாள் செல்ல வேண்டிய சுற்றுலாவுக்குத் தேவையானவற்றை எடுத்து வைப்பதில் மும்முரமாகினர்.

அவர்கள் வாங்கி வந்திருந்த புத்தகங்களோடு டைரியும் ஷெல்ஃபில் ஐக்கியமானது.

மறுநாள் விடியற்காலையில் உற்சாகமாகத் துவங்கியது சுற்றுலா பயணம். கல்லூரி மாணவர்களின் உற்சாகத்திற்கு கேட்கவா வேண்டும். ஆட்டம் பாட்டம் என்று ஆனந்தமாக குதூகலித்தபடி வந்தனர் ஹரிணியும் சுஜியும். ரேணுவும் வந்திருந்தாள்.

மனக்கசப்பைத் தாண்டி தோழிகள் நன்கு பேசிக்கொள்ள ஆரம்பித்தனர்.
கல்லூரிப் பேருந்து ஆறு மணிநேரப் பயணத்துக்குப்பின், கர்நாடகாவில் சிக்மகளூரை சென்றடைந்தது.

சிக்மகளூரை ‘கர்நாடகாவின் காஷ்மீர்’ என்று அழைக்கிறார்கள். ட்ரெக்கிங்குக்கும், வனப் பகுதிகளுக்கும் பிரபலமான இந்த சிக்மகளூர் பகுதியில்தான் நம் நாட்டில் முதல் முதலாக காபி பயிரிடப்பட்டதாம்.

கடல் மட்டத்தில் இருந்து 1,090 மீட்டர் உயரத்தில் இருக்கும் சிக்மகளூரில் உள்ள மலைப்பகுதிகள், , நீர்வீழ்ச்சிகள், வனவிலங்குகள் சரணாலயம் அனைத்துமே அனைவரையும் கவரும் வண்ணம் இருந்தது.

அவர்கள் தங்குவதற்கு காட்டேஜ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தங்கள் உடமைகளை காட்டேஜில் வைத்தவர்கள் வனப்பகுதிக்குள் ட்ரெக்கிங் செல்லத் துவங்கினர்.

தோழர் தோழிகளோடு வனப்பகுதியில் ட்ரெக்கிங் செல்வது புதுவித அனுபவமாக இருந்தது.
கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேர நடைபயணத்துக்குப் பின் கண்களில் தென்பட்ட ஹெப்பி அருவியும் இயற்கை சூழலும் மனதை மயக்குவதாக இருந்தது.

மேலும் உயரமாக இருந்த மலைக்குன்றுக்குச் செல்ல மாணவர்கள் சிலர் ஆயத்தமாக சிலர் அருவிக்கரையிலேயே நின்று விட்டனர். ஹரிணியும் சுஜியும் மலைக்குன்றுக்குச் செல்பவர்களோடு இணைந்து கொள்ள, அவர்களோடு ஆசிரியர்கள் சிலரும் வரவும் பொறுமையாக மலையேறத் துவங்கினர்.

 

அழகு கொஞ்சும் இயற்கைவளங்களை ரசித்தபடி வந்தவர்களை பெரிதாக ஈர்த்தது, அந்த குன்றின் உச்சியில் அமைக்கப்பட்டிருந்த இயற்கையோடு இயைந்த வைத்தியசாலை ஒன்று.

சத்ய சஞ்சீவினி வைத்திய சாலை என்று கன்னடத்தில் பொறிக்கப்பட்ட பெயர் பலகையை அடுத்து சிறுசிறு குடில்கள் தென்பட்டன.

அந்த குடில்களில் பலர் அமைதியான சூழலில் தியானம் செய்து கொண்டிருந்தனர். வயதில் சற்று முதிர்ந்த தோற்றமுடைய துறவி ஒருவர், அந்த வைத்திய சாலையின் பெருமைகளை எடுத்துக்கூற ஆரம்பித்தார்.

மருத்துவர்கள் கைவிட்ட எத்தனையோ பேரை தாம் பிழைக்க வைத்திருப்பதாகவும், இறந்து விட்டதாகக் கூறப்பட்டவர்களைக்கூட எழுப்பி நடமாட வைத்ததாகவும் பெருமையாகக் கூறிக்கொண்டிருந்தார்.

மேலும் அங்கு வைத்தியக் கலையும் வர்மக் கலையும்கூட கற்றுத் தரப்படுகிறது என்று கூறியவர், மாணவர்கள் இங்கேயே தங்கி குருகுலம் போல கற்றுக்கொள்கின்றனர் என்றும் கூறினார்.

அவர் கூறியதைக் கேட்டவர்கள் பின் அந்த இடத்தை சுற்றிப் பார்த்தனர். மேகத்தை உரசும் மலையுச்சியில் குளிர் உடலைத் துளைக்க கைகளை உரசி கன்னத்தில் வைத்துக் கொண்ட ஹரிணி அந்த மலைக்குன்றின் ஓரத்தில் கிடுகிடு பள்ளத்தாக்கை ஒட்டியிருந்த ஒரு பாறையின் விளிம்பில் பத்மாசனம் போட்டு அமர்ந்து தியானம் செய்த ஒருவரைக் கண்டாள்.

“ஹேய் அங்க பாரேன். எங்க உட்கார்ந்து தியானம் பண்றாருன்னு.” சுஜியை அழைத்துக் காட்டினாள்.

கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் லேசாக கவனம் சிதறினாலும் பள்ளத்தினுள் விழும் அபாயகரமான நிலையில் தியானம் செய்பவரைக்கண்டு மயிற்கூச்செறிந்தது இருவருக்கும்.

காடாய் அடர்ந்து வளர்ந்திருந்த சிகையும் அவரது முதுகுப்புறமுமே பார்வைக்குக் கிடைத்தது. முகத்தைப் பார்க்க முடியவில்லை.

அங்கே இருந்த இளம் வைத்தியரை அழைத்தவர்கள், தியானம் செய்தவரைச் சுட்டிக்காட்டி,

“எவ்வளவு ஓரமா உட்கார்ந்து இருக்காரு. விழுந்துட மாட்டாரா?” கன்னடத்தில் வினவ.
சுத்தமான கன்னடமொழியில்,

“இன்னைக்கு நேத்தா அங்க உட்கார்ந்து தியானம் பண்றாரு. அவர் கண்விழிச்ச மூனு வருஷமா அங்க உட்கார்ந்துதான் தியானம் செய்வாரு.”

அவர்கூறியதின் அர்த்தம் புரியாமல் குழப்பமாகப் பார்த்தவர்கள்,

“கண்விழிச்சதிலிருந்தா?”

“ம்ம்… ஆமா அவர் இங்க வந்தப்ப பிழைக்கவே மாட்டார்னு நினைச்சோம். எங்க ஐயாதான் இவரை பிழைக்க வைத்தது. அந்த அளவுக்கு குற்றுருயிரும் குலையுயிருமாக கொண்டு வந்தாங்க ஆதிவாசிங்க.

விபத்து எதிலோ சிக்கி அடிபட்டு சாகக்கிடந்தவரை காப்பாத்தி இங்க கொண்டு வந்திருந்தாங்க.

கிட்டத்தட்ட ஐந்து வருஷகாலம் பிணம் மாதிரி அசைவில்லாம கிடந்தாரு. தொடர் சிகிச்சையின் பலனா மூனு வருஷத்துக்கு முன்னதான் கண்விழிச்சாரு.

ஆனா அவருக்குத் தான் யாருங்கறதே தெரியலை. அடிபட்டதுல அவருடைய மூளை எல்லாத்தையும் மறந்துடுச்சி. அதுல இருந்து இங்கதான் இருக்காரு. இங்கயே வைத்தியக்கலைகள் எல்லாம் கத்துக்கிட்டாரு.

வர்மக்கலைகூட அவருக்கு அத்துபடி. தினமும் இந்த பாறை விளிம்புல உட்கார்ந்துதான் தியானம் பண்ணுவார்.”

விபரங்களைக் கூறிவிட்டு அந்த வைத்தியர் நகர்ந்துவிட, விளிம்பில் அமர்ந்து தியானம் செய்பவரின் முகத்தைப் பார்க்க முனைந்த இருவருக்கும் தோல்வியே கிட்டியது.

சிறிது நேரத்தில் அனைவரும் கீழே இறங்க ஆயத்தமாக ஹரிணியும் சுஜியும் இணைந்து கொண்டவர்கள் காட்டேஜை வந்தடைந்தனர்.

காட்டேஜுக்கு வந்ததும் சரணுக்கு ஃபோன் செய்து அன்றைய நிகழ்வுகளைக் கூறியவள் அந்த வைத்தியசாலையைப் பற்றியும் கூறினாள். அவளிடம் பேசிவிட்டு அலைபேசியை வைத்த சரணுக்கு அவள் கூறியதில் வர்மக்கலை மட்டும் வெகுவாக யோசிக்க வைத்தது.

ஜனார்த்தனன் கொலை வழக்கில் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் ஜனார்த்தனன் வர்மக்கலை மூலமாக செயலிழக்கப்பட்டிருந்தார் என்ற தகவல் இருந்தது.

பொதுவாகவே வர்மக்கலைக்கு கேரளா பெயர் போனது என்பதால் அதுகுறித்து விசாரிக்க கேரளாவில் இருந்த தனது நண்பனிடம் உதவி கேட்டிருந்தான் சரண். சிக்மகளூரில் இத்தகைய வைத்திய சாலை இருப்பது இதுவரை அவனுக்குத் தெரியாததால், அங்கு சென்று விசாரிக்க வேண்டும் என்று எண்ணியவன், அதற்கான ஆயத்த வேலைகளில் இறங்கினான்.

— வேட்டை தொடரும்.

error: Content is protected !!