Uyir thedal niyadi 26

உயிர் தேடல் நீயடி 26

கேரம்போர்ட் காய்களை சிவா லாவகமாக தட்டிவிட, அது சரியாக வெள்ளைக்காயைக் குழிக்குள் வீழ்த்தியது. அடுத்த காயை அவன் அடிக்க, இப்போது குறி தப்பி போனது.

அடுத்து விபீஸ்வரின் முறைவர, சிவப்பு காயை சுலபமாக தட்டி விட்டான். அடுத்து ஃபாலோவை குறி வைக்க, சிவா சற்று பதற்றத்தோடும் மஞ்சரி ஆர்வத்தோடும் கூர்ந்து பார்த்திருந்தனர். இருவரையும் ஓர பார்வை பார்த்துவிட்டு விபி தட்டிவிட்ட காய் வேகம் குறைந்து பாதியில் நின்றது.

“ஹேய்ய்” சிவா சந்தோசமாக கூச்சலிட்டான்.

“ம்ச் என்ன விபி மாமா மிஸ் பண்ணிட்டீங்க” மஞ்சரி சுணங்க, விபி தோள் குலுக்கி கைவிரித்து காட்டினான்.

தங்கைக்கு அழகு காட்டிவிட்டு சிவா அவன் முறைக்கு விளையாட்டைத் தொடர்ந்தான்.

விபீஸ்வர், காவ்யதர்ஷினி மறுவீட்டு விருந்திற்கு மாமியார் வீடு வந்திருந்தனர். சிவா முழு உடல்நலம் தேறும் வரை கட்டாய ஓய்வில் இருக்க, மச்சானோடு சேர்ந்து மாமனும் சுண்டாட்ட பலகையில் ஆடிக் கொண்டிருந்தனர்.

பார்கவி பார்த்து பார்த்து மருமகனுக்கு விருந்து தயாரிக்க, காவ்யா சமையலில் உதவி செய்து கொண்டிருந்தாள். கணவனை நல்ல முறையில் உபசரிக்க வேண்டுமே என்ற படபடப்பு அவளிடம் தொற்றி இருந்தது.

இந்த சிறிய வீட்டில் விபீஸ்வருக்கு கூடுமானவரை வசதி குறைவு ஏற்படா வண்ணம் பார்த்துக்கொள்ளவே முயன்றாள். அதுவும்‌ உணவு விசயத்தில் அவனுக்கு பிடித்ததை தேடி தேடி சமைக்க, சமையலறையில் அதிக நேரம் கழித்திருந்தாள் அவள்.

திருமணம் முடிந்த இந்த ஒருவாரத்தில் விபீஸ்வரின் பழக்கவழக்கங்களை ஓரளவு அறிந்திருந்தாள். அதுவும் உணவு முறையில் அவனுக்கு நிச்சயமாக அசைவம் வேண்டும். அந்த வீட்டின் சமையல்காரர் கலில் தினம் தினம் புது புது அசைவ வகைகளை சமைத்து தருவதை இவள் கவனித்திருந்தாள். இவளுக்கு எப்போதுமே அசைவத்தில் விருப்பம் இருந்ததில்லை. தன் பசிக்காக இன்னொரு உயிரை புசிப்பதா! என்று எப்போதும் இவள் மனம் முரளும். அப்படிபட்டவள் இப்போது பார்த்து பார்த்து கணவனுக்காக அசைவம் சமைப்பதை நமட்டு சிரிப்புடன் பார்த்திருந்தார் பார்கவி.

‘பெண்களின் விருப்பு, வெறுப்புகள் கணவன் என்று வரும்போது முற்றிலுமாக மாறி போகும் விந்தை, என்ன மாயமோ?’ என்றெண்ணி. தானும் அப்படி மாறிப்போனது பார்கவியின் நினைவிற்கு வர, அர்த்தமாக சிரித்து கொண்டார்.

விபீஸ்வருடன் தான் ஒவ்வொரு விசயத்திலும் முரண்பட்டு நிற்பது காவ்யாவிற்கு சஞ்சலத்தை கொடுத்திருக்க, இப்போதெல்லாம் பலவற்றிலும் அவனிடம் விட்டு கொடுக்க பழகி இருந்தாள். உணவுமுறையையும் சேர்த்து.

தினமும் அவன் காலையில் நிறுவனத்திற்கு சென்று மாலை திரும்பும் வரை தனிமையில் இருந்து பரிதவித்து தான் போயிருந்தாள் காவ்யா. ஏதேனும் வேலை செய்யலாம் என்றாலும் அங்கு எல்லா வேலைகளுக்கும் தனித்தனி ஆட்கள் இருந்தனர். ஓயாமல் ஓடிக் கொண்டிருந்தவள் தங்க கூண்டில் அடைப்பட்டதைப் போல இருந்தது இப்போதைய அவளின் நிலை.

தானும் வேலைக்கு வருவதாக விபியிடம் கேட்டு பார்க்க, ‘இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்’ என்று அவன் பதில் தந்திருந்தான்.

தினமும் காலையில் சைக்கிளிங் செல்வது விபியின் வழக்கமாக இருந்தது. காவ்யாவை உடன்வர அழைக்க, அவளும் மறுப்பின்றி சரியென்று இணைந்து கொண்டாள்.

விடிந்தும் விடியாத விடியற்காலை பொழுதில் அவனுக்கு இணையாக சைக்கிள் சவாரி செய்வது மிகவும் பிடித்திருந்தது. முதலில் அவன் வேகத்திற்கு இவளால் ஈடு கொடுக்க முடியாமல் இருந்தாலும் இப்போதெல்லாம் இவளும் சற்று வேகம் பிடித்திருந்தாள், அவனும் இவளுக்காக தன் வேகத்தை குறைத்திருந்தான்.

மாலையில் மனைவியை வெளியே அழைத்து செல்வதை பழக்கப்படுத்திக் கொண்டான். சினிமா, மால், பீச், பார்ட்டி என்று அவனோடு ஊர் சுற்றவும் இவள் பழகி இருந்தாள்.

ஆனாலும், திருமண இரவிற்கு பிறகு விபி, தன்னை நெருங்க முயலாதது அவளை ஒருபுறம் உறுத்திக் கொண்டிருக்க, மறுபுறம் அவன் எதையும் காட்டிக்கொள்ளாமல் அவளிடம் செல்ல சீண்டல்களை நடத்திக்கொண்டு தான் இருந்தான்.

எப்போதும் தன்னை உசுப்பேற்றிவிடும் அவன் குறும்பு பார்வையை இப்போது உணர்ந்திருந்தாள் இவள்!

அவனின் சின்ன சின்ன அத்துமீறல்களை கணவனின் உரிமை என்று ஏற்று ரசித்திருந்தாள்!

ஆம், இப்போதெல்லாம் விபியை ரசிக்க துவங்கி இருந்தாள் கவி!

உரிமை கணவன் என்ற விருப்பினால் வந்தது அது!

வழிவழியாய் பெண்கள் கட்டுப்படும் பந்தம் அது!

மனதின் நெருடல்களை ஓரம் தள்ளிவிட்டு தன்னாலான மட்டும் அக்மார்க் மனைவியாக இருக்கவே முயன்றாள்.

“ஹேய்ய்ய்… மாம்ஸ நான் ஜெயிச்சுட்டேன்…” சிவா உற்சாக குரலில் கத்த, “டேய் அண்ணா ரொம்ப துள்ளாத உனக்கு உடம்பு சுகமில்லாததால விபி மாமா விட்டு கொடுத்தாரு, அதான் வின் பண்ணிருக்க” என்று மஞ்சரி அலட்டாமல் அடக்கினாள்.

“அப்படி இல்ல தான மாம்ஸ்?” சிவா பாவமாக கேட்ட, “நீயாதான் வின் பண்ண சிவா, வேணும்னா செகண்ட் மேட்ச் ஆடலாமா? மஞ்சு நீயும் எங்களோட விளையாட ரெடியா?” விபி இயல்பாக அடுத்த ஆட்டத்திற்கு வழி செய்தான்.

சிவாவும் மஞ்சரியும் வார்த்தைக்கு வார்த்தை தன்னை மாமா என்று அழைப்பது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏதோ தனக்கு புது உயர் தகுதி வந்ததாக உணர்ந்தான். அவர்களின் அண்ணன், தங்கை சண்டை சுவாரஸ்யமாக இருக்க, தனக்கும் தம்பி, தங்கை இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் என்று தோன்ற செய்தது.

“அதெப்படி மூணு பேர் விளையாட? நாலு பேரா விளைடினா தான நல்லா இருக்கும், காவ்யா க்கா நீயும் வரியா” சிவா காவ்யாவை அழைக்க, “நீங்க விளையாடுங்க, வேலை முடிஞ்சதும் நான் வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்” காவ்யா நழுவ, “நோ வே பேபி நீ வந்தே ஆகணும்” என்று விபி அவளை பிடித்து இழுத்து வந்து அமர வைத்தான்.

ஆட்டம் கலகலப்பாக தொடங்கியது.

“மஞ்சு… அடுத்தென்ன படிக்கலாம்னு ப்ளான் வச்சிருக்க?” விசாரித்தப்படி விபி தன் காயை தட்டி விட்டான்.

“எனக்கு டாக்டர் படிக்கணும்னு ஆசை மாமா, நீட் எக்ஸாம்க்கு ப்ரபேர் பண்ண சொல்லி அக்கா சொல்லி இருக்கா” பதில் தந்தபடி மஞ்சரி தன் காயை அடித்துவிட,

“முதல்ல டுவல்த்ல நல்ல மார்க் ஸ்கோர் பண்ற வழிய பாரு” என்று சிவா தன் காயை அடித்து விட்டான்.

“அதெல்லாம் நான் நல்லா தான் ஸ்கோர் பண்ணுவேன், உன்னமாதிரி இல்ல” என்று மஞ்சரி அண்ணனை முறைக்க,

“குட் மஞ்சு, நீ ப்ரபேர் பண்ணு, நானும் காவ்யாவும் உனக்கு ஃபுல் சப்போட் பண்ணுவோம்” விபீஸ்வர் உறுதி தர,

தம்பி, தங்கையிடம் விபீஸ்வர் இயல்பாக பேசி பழகுவது காவ்யாவிற்கு பிடித்திருந்தது. கணவனிடம் நிறைவான பார்வை வீசிவிட்டு தனக்கான காயை தட்டி விட்டாள்.

மதியம் கடந்த மாலை நேரம், விருந்து முடிந்து விபீஸ்வர் சற்று ஓய்விலிருக்க, வீட்டு வேலைகள் முடிந்து பார்கவியும் காவ்யாவும் சற்று ஆசுவாசமாக கூடத்து தரையில் அமர்ந்தனர். முன்பிருந்தே இவர்களுக்கு தரைவாசம் பழகி விட்டிருந்தது.

“நீ போனதுக்கு அப்புறம் இவன் ரொம்ப ஓவரா பண்றான்க்கா” நேரம் பார்த்து மஞ்சரி சிவா மீது குற்றப்பத்திரிகை வாசிக்க ஆரம்பிக்க,

“இல்ல க்கா, என்னால‌ முன்ன போல‌ நடமாட முடியலைன்னு நாலு வேலை சொன்னதுக்கு என்னை குத்தம் சொல்றாக்கா இவ” சிவாவும் முறை இட்டான்.

“ஆமா, உன்ன யாரு பைக் ரேஸ் போயி டேமேஜ் ஆக சொன்னது” மஞ்சு விடாமல் வாயடித்தாள்.

“அதான் இனி போக மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணிட்டேன் இல்லக்கா, இதோ இவ தான் இப்பெல்லாம் உன்னமாதிரியே இமிடேட் பண்றா, எங்களுக்கு தான் தாங்கல” சிவா மஞ்சுவை போட்டு கொடுக்க,

“இல்ல க்கா, மளிகை லிஸ்ட், கரண்ட் பில், காய்கறி, வரவு செலவு அதெல்லாம் கணக்கு பார்த்து, நீ எழுதற மாதிரி நானும் எழுதி வச்சேன் க்கா, அதுக்கு இப்படி பேசுறான்” சின்னவள் சிணுங்களோடு பதில் தர,

“சரிதான், இதுங்க ரெண்டும் இப்படி தான் அடிக்கடி முட்டிகிதுங்க காவ்யா, நீ போனதும் ரெண்டுக்கும் வாய் நீண்டு போச்சு” பார்கவி இருவரையும் சேர்த்து போட்டு கொடுத்தார்.

“அப்ப நான் இங்க இல்லாதது உங்க ரெண்டு பேருக்கும் கொண்டாட்டமா போச்சு போல” காவ்யாவும் விளையாட்டு போல‌ கேட்டு வைக்க, மற்ற மூவரின் முகமும் கூம்பி போனது.

“உன்ன ரொம்ப மிஸ் பண்ணோம் காவ்யா, நீயில்லாம வீடே வெறிச்சோடி கிடந்துச்சு தெரியுமா!” சிவா வரண்ட குரலாய் சொல்ல,

“தினமும் உனக்கும் சேர்த்து அம்மா சமைச்சு வக்கிறாங்க க்கா, டீ போடும்போது உனக்கும் எடுத்து வச்சுட்டு நீ வரலைன்னதும் கஷ்டமா இருக்கும்” என்று உடைந்த குரலாய் மஞ்சரி சொல்லி அக்காவின் தோள் சாய்ந்து கொண்டாள். “நானும் உங்க எல்லாரையும் மிஸ் பண்ணேன் மஞ்சு” சொன்ன காவ்யாவின் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.

தன் குடும்பத்தில் தானே விருந்தாளியாக எட்டி நிற்கும் நிலை அவளை கலங்கடித்தது.

“பெத்து வளர்த்து இத்தனை வருஷம் கூட இருந்த புள்ளைய பிரியறது எல்லாரும் கடந்து வர கஷ்டம் தான் காவ்யா, நீ நல்லா இருக்கன்றது தான் எங்க சந்தோசம் இப்ப” என்று அனுபவ மொழிகள் சொன்ன அம்மாவை ஆமோதித்து தலையசைத்து அவரின் தோள் சாய்ந்து கொண்டாள் பெரியவள்.

தாயின் தோளில் மகளும் அக்காவின் தோளில் தங்கையும் சாய்ந்திருக்க, “என்னையும் சேர்த்துக்கோங்க பா” என்று சிவா எழுந்து வர, அவர்களை பார்த்திருந்த விபீஸ்வருக்கு சற்று பொறாமையாக கூட இருந்தது. அவர்களின் பாச பிணைப்பில் இவனிதழ் புன்னகை மேலும் விரிய,

“ஹேய் நானும் இங்க தான் யா இருக்கேன் என்னை மறந்துட்டீங்க” விபீஸ்வர் தன் கைகள் விரித்து தலையசைத்து கேட்க, அனைவரின் முகத்திலும் ஆச்சரியமான சந்தோசம் பரவி விரிந்தது.

“மாம்ஸ் இந்த பொண்ணுங்க சேர்ந்ததும் நம்மல டீல்ல விட்டுட்டாங்க பாருங்க” சிவா, விபீஸ்வரோடு இணைந்து கொள்ள,

“விபி மாமா நீங்க எங்க டீம் அவன் கூட சேராதீங்க” என்றவள், “நீ வர வேணா போடா” மஞ்சரி சிவாவை மறுத்து தள்ளினாள். “நானும் வருவேன், நீ போடி” பதிலுக்கு அவனும் தங்கையை தள்ளிவிட, அங்கே மீண்டும் அலப்பறை ஆரம்பமானது.

இரவின் தனிமையில்,

“முன்ன நீ அம்மா, தம்பி, தங்கை, குடும்பம்னு பேசும் போது என்னடான்னு தோணும், இப்ப நேர்ல பார்க்கும் போது தான் உங்க ஃபேமிலி அட்டாச்மெண்ட் புரியுது” என்றவன், “உன்னோட கூட்டுக்குள்ள என்னையும் சேர்த்துக்கோ கவி” என்ற யாசிப்போடு அவளை பின்னோடு அணைத்து கொள்ள,
காவ்யா சிறு அதிர்வோடு தன்னவன் கைகளுக்கு சம்மதமாய் சரணடந்தாள்.

அவனின் மாட மாளிக்கைக்குள் இவளை சிறையெடுத்தவன், இவளின் சிறு கூட்டுக்குள் அடைக்கலம் வேண்டி நின்றான்!

“நான்… மாம், டேடோட இவ்வளோ அட்டாச்மென்ட்டா இருந்ததில்ல கவி, எனக்கு நினைவு தெரிஞ்சு நாங்க ஒண்ணா சாப்பிட்ட வேளைகளை விரல்விட்டு எண்ணிடலாம், நானும் அதெல்லாம் பெரிசா ஃபீல் பண்ணது இல்ல. இப்ப உங்கள பார்க்கும் போது… நான் மிஸ் பண்ணது இதெல்லாம்னு தோணுது…” விபீஸ்வர் அவளின் தோள்மீது முகம் வைத்தபடி தன் மனம் திறந்து பேச,

இதேபோல முன்பு மருத்துவமனையில் தன் கை பிடித்தபடி அவன் தந்தையை பற்றி சொன்னது நினைவில் ஆடியது இவளுக்கு.

“சிவா, மஞ்சு சான்ஸே இல்ல, லைஃப்ல ஃபர்ஸ்ட் டைம் எனக்கு தம்பி, தங்கை இருந்திருந்தா நல்லாயிருந்திருக்கும் தோண வச்சுட்டாங்க! ஆன்ட்டி என் வாய்ல சக்கரை போட்டது, அப்புறம் நேத்து ஏதோ… ம்ம் திருஷ்டி கழிக்கணும்னு என்னை உட்கார வச்சு ஏதோ சுத்தி போட்டாங்க! அவங்க வெகுளி தனமான பாசம் ரொம்ப பிடிச்சு இருக்கு” அவன் மென் சிரிப்போடு சொல்ல,

அவனின் முகம் நோக்கி திரும்பிய இவளின் பார்வையில் வியப்பின் ரேகைகள்…

“சின்ன சின்ன விசயங்களை பெருசா ஃபீல் பண்றீங்க” என்று தோன்றியதை சொன்னாள்.

“ம்ம் நான் பார்க்கறது, நினைக்கிறது எல்லாம் எனக்கு சுலபமா கிடைச்சிடும். அதால, பெருசா எதிலையும் எனக்கு இன்ரஸ்ட் வந்தது இல்ல… அதுபோல இது கிடைக்கலன்ற ஏக்கமும் வந்தது இல்ல…” என்றவன்,

“என்னை இம்ப்ரஸ் பண்ணது… இப்ப ஏங்க வக்கிறது எல்லாம் நீ மட்டும் தான் பேபி” அவன் இதமாகவே சொல்ல, இவள் பார்வை சங்கடம் காட்டியது.

அவள் மென் கரத்தை எடுத்து தன் கன்னத்தோடு சேர்த்து அழுத்திக் கொண்டவன், “உன்னால என் உலகம் மொத்தமா மாறி போச்சுடி, லவ் யூ டி பொண்டாட்டி” என்று வார்த்தைகளில் மட்டும் காதல் தந்து விலகி கொண்டான்.

“விபி…!” அவன் விலகலால் மனதின் பாரம் ஏற, தயக்கமாய் அழைப்பு தந்தாள் பெண்ணவள்.

“ம்ஹூம் எனக்கு நீ வேணும் கவி… உன் காதல் வேணும்! என்னை பிடிச்சிருக்குன்னு நீ சொன்ன வார்த்தை மட்டும் போதல டி எனக்கு…!” விபீஸ்வர் தீவரமாக சொல்ல,

“வேற… நான் என்ன சொல்லணும்…?” அப்பாவி தனமாய் கேட்டு வைத்தாள் அவள்.

“வேற சொல்லணும்னு அவசியம் இல்ல, உனக்கு என்னை எவ்வளவு பிடிக்கும்னு காட்டு போதும்” என்று அவன் படுத்துக் கொள்ள,

“அதெப்படி…?” இவள் திருதிருத்து விழிக்க, “எனக்கும் தெரியாது, நானும் இப்ப தான் காதலை படிக்கிறேன், ரொம்ப கஷ்டமான சப்ஜட் யா” அலுத்தபடி அவன் போர்வைக்குள் புகுந்து கொள்ள, காவ்யா சின்னதாய் சிரித்து வைத்தாள்.

அவளும் கல்யாண பள்ளியில் காதல் பாடத்திற்கு புதியவள் தானே!

# # #

உயிர் தேடல் நீளும்…