Uyir thedal Niyadi 28(1)

Uyir thedal Niyadi 28(1)

உயிர் தேடல் நீயடி 28(1)

விடியற்காலையில் சைக்கிளிங் முடித்து வியர்த்து அலுத்து அறைக்குள் வந்தவன், துண்டை எடுத்து கொண்டு குளியலறைக்கு வர, கதவு மூடியிருந்தது.

இவன் கசகசப்போடு கதவை தட்ட, காவ்யா வெளி வந்தாள்.

இப்போது தான் குளித்து இருப்பாள் போல, வழலை கட்டியின் சுகந்த மணம் அவனை சுகமாய் தாக்கியது. 

பிங்க் நிற பூ அங்கி அவள் பொன்னுடலை மறைத்து முழங்கால் வரை நீண்டிருக்க, சரியாக துவட்டாத கூந்தலில் இருந்து வழிந்த ஈரம் அவள் முகத்தில் நீர் தெளிக்க, அவன் பார்வையோ திக்கற்று அவளிடமே சிக்கி கொள்ள நெருங்கினான்.

அவன் வியர்வை நாற்றம் இவள் நாசியை இதமாய் தீண்ட, அவன் செயலுணர்ந்து கண்களை இறுக மூடி கொண்டாள்.

அந்த நூலிழை இடைவெளியை கடந்து விடலாம் தான், ஆனாலும் அவள் நம்பிக்கையில்லை என்றது நினைவு வர அவனுக்குள் ஏதோ வடிவது போலானது.

“நான் குளிக்கையில் நீயும் 

கொஞ்சம் நனைந்து விடு,

என் கொஞ்சலில் சின்ன 

சிணுங்கல் கொடு,

என் விரல்கள் மீறுகையில் 

சில அதட்டல்களால் மிரட்டிடு,

என் காதல் மிஞ்சுகையில் நான் உனக்கானவன் மட்டும் என 

உரிமை கொண்டாடிடு,

இந்த உலகின் கடைசி துளி காதல் வரை சேர்ந்தே துய்க்க 

பேராசை கொண்டேன்,

உன் ஒற்றை துளி காதலுக்காய் யாசித்து நின்றேன்,

என் உயிர் உரசும் 

வெற்று பார்வைகள் வேண்டாம், 

ஒரு காதல் பார்வை வீசிடு, 

உன் செவ்விதழ் ஒற்றல்களால் 

என்னை புனிதம் செய்திடு,

என் உடலின் உயிர் தேடல் நீயடி, 

எனக்காய் உயிர் கொடு!

தன்னுள் முட்டி மோதும் ஆசைகளை பட்டியலிட்டு சொல்ல தெரியவில்லை அவனுக்கு.

கவிதை அறியா காதலனாய் அவன்! உள்ளத்து உணர்வுகளை வார்த்தைகளில் மொழிப்பெயர்க்க தெரியா மழலையாய் அவன்!

நொடிகள் நீண்டும் அவன் செயலற்ற நிலை உணர்ந்து இவள் இமைகள் திறக்க, அவன் காதல் பார்வை இவள் உயிரின் ஆழம் தொட முயல்வதாய்.

காதல் அறியா காதலியாய் அவள்!

விரிந்த வானில் தன் முதல் சிறகை விரிக்க மருளும் தேன் சிட்டாய் அவள்!

அவன் பார்வை வீச்சு தாளாமல், இவள் முகம் தாழ்த்திக் கொள்ள, அவன் கை அவள் கழுத்தை நெரித்தன கோபமாய்.

“நீ என்னை அவாய்ட் பண்ணா எனக்கு பிடிக்காது கவி” அவன் முரட்டு எச்சரிக்கையில் இவள் கண்களில் நீர் கோர்க்க, அவன் முன்னால் அடிக்கடி அழுது நிற்பது அவளுக்கே அசிங்கமாய் இருந்தது.

“ச்சே ரொம்ப படுத்தற டீ என்னை, அப்ப

நான் தப்பு செஞ்சிட்டேன் தான், இப்ப எதையும் மாத்த முடியாதில்ல, விட்டு தள்ள வேண்டியதை எல்லாம் சேர்த்து குழப்பிக்கிட்டு, என்மேல நம்பிக்கை இல்லன்னு விலகி போறதுல என்ன புத்திசாலித்தனம் இருக்கு?” ஆதங்கமாக கேட்டவன்,

“நான் பொறுமைசாலி எல்லாம் கிடையாது, அந்த பாழாபோன‌ காதல் உன்மேல வந்து தொலைச்சது என் தப்பா டீ?” என்று உதறினான்.

அவளுக்கு சுருக்கென்று ஏறியது. “உங்களுக்கு என்மேல காதல் வந்தா… நானும் உங்களை காதலிச்சே ஆகணும்னு எந்த சட்டதிட்டமும் இல்லையே” அழுத்தமாகவே பதில் பேசினாள். 

“எங்க வீட்டு பொறுப்பு, அம்மாவோட பொறுப்பு, தம்பி ஹாஸ்பிடல் செலவு, தங்கச்சி படிப்பு, ஏன் வீட்டு கடன் கூட சேர்த்து எல்லாத்தையும் ஒரே நாள்ல எங்கிட்ட இருந்து பறிச்சிட்டிங்கல்ல! நான்  பார்த்து பார்த்து எண்ணி எண்ணி கஷ்டபட்டு செஞ்சது எல்லாமே வேஸ்ட்ன்ற மாதிரி பண்ணிட்டிங்க, உங்களுக்கு தெரியுமா நீங்க சுலபமா மாத்தி வச்ச ஒவ்வொண்ணுத்துக்கும் நான் எவ்வளவு மெனக்கெட்டு இருக்கேன்னு!”

இந்த கோணத்தில் விபீஸ்வர் யோசிக்கவே இல்லையே! அவளின் கடமைகளை பொறுப்புக்களை தனதாக எடுத்து கொண்டான் தான். ஆனால், அங்கு அவளின் சுயம் அடிபடும் என்பதை கவனிக்க தவறி இருந்தான்.

“எனக்குள்ள இருக்க என்னை வலுக்கட்டாயமா தூக்கி வெளியே எரிஞ்சுட்டு, அதுக்கு பதிலா உங்களை நிறைப்பிக்க சொன்னா, அது எப்படி முடியும் என்னால?”

“…”

“நீங்க காதலை சொன்னதும் மயங்கறத்துக்கும் நெருங்கி வந்ததும் கிறங்கறத்துக்கும் எனக்கு தெரியாது! வரவும் வராது! நான் அந்த டிசைன் இல்ல!”

‘அடிபாவி…’ இவன் புருவங்கள் நெற்றி மேடேறி நின்றன.

“எனக்கு வராத காதலை வேணும் வேணும்னு கேட்டா, நான் என்ன செய்ய!” அவள் ஆதங்கமாகவே முடித்தாள்.

என்னுள் காதல் விதைத்தவள் நீ!

ஏன் அறுவடை செய்ய மட்டும் மறுக்கிறாய்! – அவன் மனம் அடம்பிடிக்க,

‘உனக்கு இந்த பெட்ரமாஸ்‌ லைட்டே தான் வேணுமா?’ – அவன் அறிவு சலித்து கொண்டது.

# # #

காவ்யா மனம் ஒருநிலை இன்றி பரிதவித்து கொண்டிருந்தது. முழுமையற்ற திருமண வாழ்க்கையில் விரக்தியும் கோபமும் சேர, தன்னால் விபீஸ்வருக்கும் கஷ்டம் என்ற குற்றவுணர்ச்சி வேறு அலைக்கழித்தது.

இப்போது அம்மா வீட்டிற்கு தான் போய் கொண்டிருந்தாள் சற்று ஆறுதல் தேடி. விபீஸ்வர் மாலை தானே வந்து அழைத்துக் கொள்வதாக கூறியிருந்தான். அவளின் கார் பாதிவழியில் நின்றுவிட, ஓட்டுநரை சரிபார்க்க உத்தரவிட்டு, ஆட்டோவில் ஏறி வந்திருந்தாள்.

ஆட்டோ பாதை மாறி செல்வதை தாமதமாக கவனித்தவள், “அண்ணா நீங்க வேற ரூட்ல போறீங்க” என்க.

அவன் ஆட்டோவை நிறுத்தி, இவளிடம் திரும்பி, “நீ எந்த ரூட்டுல மா போவணும்’ என்று கேட்க, “நீங்க முதல்ல ரிவர்ஸ் எடுத்து…” அவள் முகத்தில் எதையோ அவன் பீய்ச்சி அடித்திருக்க, காவ்யா மூர்ச்சையானாள்.

நினைவு திரும்பி கண்விழித்தவளுக்கு திக்கென்ற உணர்வு!

வெட்டவெளியில் மணற்பரப்பு பகுதியில் ஒரு மரத்தில் சேர்த்து கயிற்றால்  கட்டி வைக்கப்பட்டு இருந்தாள். அவளின் வாய் பட்டியால் ஒட்டியிருக்க, கைகள் இரண்டும் ஒட்டும் டேப்பைக் கொண்டு பின்னால் சேர்த்து பிணைக்கப்பட்டிருந்தது. 

எத்தனை முயன்றும் அவளால் அசைய முடியவில்லை. உடலும் உள்ளமும் வெயிலின் தாக்கம், பயத்தின் தாக்கத்தால் சோர்ந்து போனது.

‘யார் தன்னை கடத்தியது? எதற்காக?’ என்ற கேள்விக்கு பதிலாக எதிரே மரத்தில் அந்த வாசகம் தெரிந்தது.

‘என் விபியை விட்டு போயிடு’ என்று  எதிரே இருந்த மரத்தில் எழுதப்பட்டு இருக்க, அந்த அலைபேசி குரல் தான் காவ்யா நினைவில் ஒலித்தது.

சென்ற வாரம் அவள் பேசிக்கு வந்த அழைப்பை எடுத்ததும் ‘என் விபிய விட்டு… போயிடு’ என்று பெண்குரல் குழறலாக கேட்க,

காவ்யா, ‘பாடன்!’ என்றாள். அவளுக்கு புரியவில்லை தான்.

‘யூ பிளடி …‌‌, நீ மட்டும் விபியை விட்டு போகல! உன்…ன உயிரோட விடமாட்டேன்’ எதிர்முனையில் குரல் குழற, ‘என் புருசனை விட்டு என்னால

போக முடியாது. உன்னால என்ன செய்ய முடியுமோ செய்துக்கோ’ கடுப்பாக சொல்லிவிட்டு வைத்திருந்தாள்.

விபீஸ்வரின் முன்னால் பழக்கத்தின் மிச்சம் தான் யாரோ குடி போதையில் உளறுகிறாள்‌ என்று அதை அப்போதே மறந்து விட்டிருந்தாள்.

ஆனால் இப்போது?

தப்பிக்க வழி தேடி சுற்றிலும் பார்க்க,

உயர்ந்த மரங்களும் மணற்பரப்பும் தவிர எந்த மனித நடமாட்டமும் அங்கு இருப்பதாக தெரியவில்லை. இந்த இடம் கடற்கரை அண்மையில் இருக்க வேண்டும் என ஊகித்துக் கொண்டாள்.

அவளின் கைப்பை கீழே கிடந்தது அதை கால்களை எட்டி எடுக்க முயன்றாள் முடியவில்லை.

அந்த இடம் அத்தனை பாதுகாப்பற்றதாக இருக்க, எதிர்வரும் ஆபத்துக்கள் உள்ளுக்குள் நடுக்கம் பரப்பின.

எப்படியும் விபீஸ்வர் தன்னை தேடி வருவான் என்ற நம்பிக்கை அவள் தைரியத்தை பிடித்து வைத்திருக்க,

அவன் காதல் மீது நம்பிக்கை இல்லையென்று சொல்லிவிட்டு இப்போது ஆபத்து என்றதும் அவனையே நம்பும் அவளின் முரண்பாட்டு நிலையை உணர்ந்து திகைத்து போனாள்.

காதலில் தொய்ந்த அவன் ஏக்க பார்வை நினைவில் எழுந்து இதயத்தின் பாரம் கூட்டியது. இறுக மூடிய இமைகளின் ஊடே விபீஸ்வர் முகமே வந்து போக, மையிட்ட இமையோரம் நீர் கோட்டிட்டது.

முதல் முதலாய் உயிர் துணையின் அருகாமையை அவள் பெண்மை யாசித்து மறுகியது.

# # #

உயிர் தேடல் நீளும்…

 

error: Content is protected !!