Uyir thedal niyadi 28(2)

உயிர் தேடல் நீயடி 28(2)

மிதமான வேகத்தில் விபீஸ்வர் காரை செலுத்திக் கொண்டிருக்க, காவ்யதர்ஷினி கண்ணீர் கரையோடு அவன் தோளில் அடைகலமாகி இருந்தாள்.

ஏதோ மாயம் போல தான் தொன்றியது. சரியான நேரத்தில் விபிஸ்வர் வந்து அவளை காப்பாற்றிது.

அங்கே, விபியை சந்தித்த நாள் தொட்டு தங்களுக்குள் நடந்தேறிய சம்பவங்களை புரட்டி புரட்டி காவ்யா மாய்ந்து கொண்டிருந்த வேளையில் ஏதோ சலசலப்பு அவளை கலைத்தது.

அவள் கண்ணுக்கெட்டும் தூரத்தில் சில ஆடவர்கள் போதை வஸ்துங்களுடன் கதையாடி வந்து கொண்டிருந்தனர்.

அவர்கள் பார்வை இவள் மீது விழ மொத்தமாக நடுங்கி போனாள்.

அங்கு தான் கட்டி வைக்கப்பட்டிருக்கும் காரணம் அவளுக்கு அப்போது தான் விளங்கியது.

உயர பறக்கும் கொடுங் கழுகுகளுக்கு இரையாக பிணங்களை கட்டி தொங்கவிடுவதைப் போல, கயவர்கள் உலவும் இந்த இடத்தில் தன்னை கட்டி நிறுத்தி இருக்கும் குரூரமான திட்டம் தீட்டிய அந்த முகம் தெரியா பெண் மீது இவளுக்கு ஆத்திரமும் ஆவேசமும் தான் வந்தது.

அதோடு தன்னிலையெண்ணி கழிவிரக்கமும்!

அவர்கள் இவளை சூழ்ந்து கொக்கரித்த போதும், தவறாக சீண்டிய போதும் அவளால் பெரிதாக எதிர்க்க முடியவில்லை. தன் கைகட்டு தளர்ந்தால் அனைவரையும் அடித்து நொறுக்கும் வெறியில் பொறுத்திருந்தாள்.

அப்போதுதான் விபீஸ்வர் வந்து அவர்களை புரட்டி எடுத்து இவளை மீட்டதும், உடன் ரவி மட்டுமே வந்திருந்தான். அவன் கையில் துப்பாக்கியை பார்த்ததும் அந்த பிணந்திண்ணி கழுகுகள் அலறியடித்து ஓடி போயின.

கட்டுக்கள் கழன்றதும் தன்னவன் மார்பில் முகம் புதைத்து அழுகையில் கரைந்தாள். அவன் கைகளும் அவளை நானிருக்கிறேன் என இறுக்கமாக அணைத்துக் கொண்டன.

ரவி காவ்யாவிடம் விவரம் கேட்க, அந்த வாசகத்தைக் கைக்காட்டிவள், தனக்கு வந்த மிரட்டல் அழைப்பு பற்றியும் விவரம் சொன்னாள். கணவனின் கைகளுக்குள் இருந்தபடியே.

சரியான நேரத்தில் விபிஸ்வர் அங்கு எப்படி வந்தான் என்பது அவளுக்கு இப்போதும் புரியவில்லை. அதோடு இதுவரை அவன் தன்னிடம் ஏதும் பேசாதது அவளை வருத்தியது.

“விப்…பி!”

“ம்ம்”

“சாரி”

“எதுக்கு சாரி” சாலையில் கவனம் வைத்தே பேசினான்.

“உங்களை ரொம்ப… கஷ்டப்படுத்திட்டேன்” என்றவளை திரும்பி ஒரு பார்வை பார்க்க, கலைந்து களையிழந்து கலங்கி தெரிந்தாள். காரின் வேகத்தை கூட்டினான்.

“ரொம்ப பயந்துட்டியா கவி” அவன் கரம் ஆறுதலாக தட்டி கொடுக்க, “ம்ம் உங்களை பார்க்க முடியாதோன்னு பயந்திட்டேன்” கார் பிரேக் அடித்து நின்றது.

வானம் இருள் போர்த்திக் கொண்டதால், அருகே இருந்த அவர்களின் கடற்கரை விருந்தினர் மாளிகைக்கு வந்திருந்தனர்.

குளித்து முடித்து, உண்டு, அவளின் சிறு காயங்களுக்கு முதலுதவியும் முடிய சற்று தெளிந்திருந்தாள்.

“நீங்க எப்படி அங்க வந்தீங்க?” காவ்யா கேள்வி தொடுக்க,

“நீ எவ்வளவு தூரம் போனாலும் என் பார்வை உன்மேல தான் இருக்கும் பேபி” என்று மனையாளை அருகிழுத்து தன்மேல் போட்டுக் கொள்ள, அவளும் விரும்பியே தன்னவன் மார்பில் இடம் கொண்டாள்.

“அப்ப ஏன் அவ்வளவு நேரம் என்னை கஷ்டபட விட்டீங்காளாம்?” முகம் சிறுத்தாள்.

“நீ காணோம்னு தெரிஞ்சு தேடி வரத்துக்குள்ள நான் தான் டி தவிச்சு போயிட்டேன், தானா பிரச்சனைல போய் மாட்டிக்கிறதே உன் வேலையா போச்சு” கடிந்து கொண்டே, அணைத்து கொண்டான். அந்த அணைப்பின் இறுக்கத்திலேயே அவனின் அன்பும் பயமும் புரிவதாய்.

நிறைய பேச இருந்தும், அவர்களிடையே மௌனம் மட்டும் நீள, ஒரு நிலைக்கு மேல் அவன் குறும்பு கைகள் உரிமையை நிலைநாட்ட விழைய, பெண்மையும் இசைந்து தழைய, அவன் இனிமையாய் அதிர்ந்தான்.

“பேபி… யாரோ மயங்க மாட்டேன், கிறங்க மாட்டேன்னு சொன்னாங்க என்னாச்சு?” காதோரம் கிசுகிசுக்க,

“உங்களால என் டிசைன் மாறிபோச்சு விபு” என்ற பிதற்றலோடு அவன் மார்பில் தன் முதல் முத்தம் ஈந்தாள்.

அவசரமாய் அவளை பிரித்து, “என்னை என்ன சொன்ன இப்போ?” பரவசமாய் அவள் முகம் ஆராய்ந்து கேட்க,

இவள் வெட்க நகைப்பின் ஊடே, “விபு…” என்க, பெயர் சுருக்கம் பிடிக்காது என்று வீம்பு பேசியவளின் செல்ல பெயர் சுருக்க அழைப்பில் உருகி தான் போனான்.

தயங்கி மயங்கி காதல் மொழி கற்கும் அவள் கண்களில் இதழ் பதித்து, “என்ன திடீர்னு” கேள்வியை நீட்டினான்.

“அவ… வார்த்தைக்கு வார்த்தை என் விபின்னு சொன்னது எனக்கு பிடிக்கல” இவள் பொறாமையோடு சிணுங்க,

“ஆஹான்… இப்பவாவது நீ என்னை நம்புறீயா? இல்ல…” தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் அவனுக்கு.

எதற்கும் அசறாமல் சுற்றி திரிந்தவனை நான் எத்தனை அசைத்து பார்த்து இருக்கிறேன் என்ற கர்வம் காவ்யாவிற்கு எழுந்தது. “அத்தனை ஆபத்துலயும் நீங்க வருவீங்கன்ற நம்பிக்கையை மட்டும் பிடிச்சிட்டு இருந்தேன் விபு… பைத்தியகாரி நான் மொத்த நம்பிக்கையும் உங்க மேல வச்சுட்டு, சுத்தமா நம்பலன்னு சொல்லிட்டு திரிஞ்சு இருக்கேன்” என்று கண்கள் கலங்க குழந்தையாய் சிரித்தவளை ரசனையாய் பார்த்திருந்தான்.

காதலானவளின் காதலை திகட்ட திகட்ட ரசிக்க தோன்றியது அவனுக்கு.

“எனக்கு இதுமட்டும் போதாது பேபி, இன்னும் இன்னும் வேணும்! நீ வேணும்! மொத்தமா உன் காதல் வேணும்!” அவன் தீவிரமாக கேட்க, இவள் திருதிருத்து விழித்தாள்.

சட்டென தடுமாறி தனக்குள் ஏதேதோ மாற்றங்களை தருவிக்கும் இந்த உணர்வுக்கு பெயர் தான் காதலா? அவளுக்கு தெரியவில்லை. இதை அவனிடம் சொன்னால் மறுபடி முரண்டி கொள்வான் என தயங்கினாள்.

“என்ன செய்யணும்? அதையும் நீங்களே சொல்லுங்க” என்று மேலுக்கு அலட்டினாள்.

“முதல்ல எனக்கு பிரோபஸ் பண்ணு பார்க்கலாம்” சாதரணமாக கேட்க, இவள் மொட்டு விழிகள் அலர்ந்து விரிந்து அடங்கின.

“ம்ம்… ஐ லவ் யூ” அவள் தயங்கி மொழிய,

“த்தூ சகிக்கல கொஞ்சம் கூட ஃபீலிங்க்ஸே இல்ல” இவன் ஏகத்துக்கும் முகம் கசக்கினான்.

“போங்க” என்று முறுக்கிக் கொண்டவள், “நீங்க தான் ஃபீலிங்க்கா ப்ரோபோஸ் பண்ணுங்க நானும் பார்க்கிறேன்” என்று திருப்பினாள்.

அதற்கே காத்திருந்தவன் போல அவளிடையை வளைத்து இழுத்து, “லவ் யூ டி சோடாபுட்டி” என்று கண்கள் மின்ன சொல்லி அவளின் மென்னிதழில் அழுத்தமாய் முத்தமிட்டு கண் சிமிட்ட,
வெட்கமும் ஆசையும் காதலும் இருவரிடமும் போட்டி இட்டு கொண்டிருந்தன.

“சோடாபுட்டினு சொன்னா எனக்கு கோபம் வரும் சொல்லிட்டேன்” என்று அவள் போய் முறைப்பை காட்ட,

“சும்மா பேச்சை மாத்தாதடி லவ் யூ சொல்லு முதல்ல” பிடிவாதக்காரன் விடுவதாய் இல்லை.

அவளின் முகம் அழகான அவஸ்தையை வெளிக்காட்ட, இவனுக்கு அவஸ்தையான சுவாரஸ்யம் கூடியது.

தயங்கி தயங்கி இரு கைகளால் அவன் கழுத்தை சுற்றியவள் எச்சிலை கூட்டி விழுங்கி, “ஐ…” என்று ஆரம்பித்து, அவன் முரட்டு இதழ்களில் தன்னாலான மட்டும் அழுத்தமான முத்தம் பதித்துவிட்டு, “லவ் யூ டா விபு” மூச்சு வாங்க சொல்லி முடித்திருந்தாள்.

விபியின் கண்கள் விரிந்து இன்ப அதிர்ச்சியில் கிறங்கின. நிச்சயம் அவன் தன்னவளிடம் இருந்து இத்தனை உரிமையை எதிர்பார்த்திருக்கவில்லை.

அவனிடமிருந்து நழுவி விலக முயன்றவளை அள்ளி எடுத்து இத்தனை நாட்கள் பொதிந்து வைத்திருந்த அவளுக்கான நேசம் மொத்தத்தையும் கொட்டலானான்.

காதலை மிஞ்சும் முத்தங்களால்!
முத்தங்கள் மிஞ்சும் தீண்டல்களால்!
தீண்டல்கள் மிஞ்சும் காதலாய்!

# # #

உயிர் தேடல் நீளும்…