Uyir Thedal Niyadi 29(2)

Uyir Thedal Niyadi 29(2)

உயிர் தேடல் நீயடி 29(2)

“ஏன் இப்படி பண்ண விபி?”

ஜனனி நேரடியாக அவனது அலுவலக‌ அறைக்குள் வந்து விபீஸ்வரின் சட்டையை பிடித்து கேட்டாள் ஆங்காரமாய்.

விபீஸ்வரின் நெற்றி சுருங்க, தன் சட்டையிலிருந்து அவள் கைகளை பிரித்து விட்டு, அவளை தாண்டி பார்வையை உயர்த்தினான்.

அங்கே, மாணிக்க சுந்தரம் உடன் லலிதாம்பிகையும் வந்திருனர். காவ்யாவின் செயற்கை மாயத் தோற்றம் பற்றி இருவரிடமும் விளக்கி காட்டி இங்கே இழுத்து வந்திருந்தாள் ஜனனி.

விபீஸ்வர் ஏன் இப்படி எல்லாம் செய்கிறான் என்பதற்கான விளக்கம் அவளுக்கு உடனே தெரிய வேண்டியிருந்தது. தான் மட்டும் கேட்டால் அவனிடம் நேரடியான பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை ஜனனிக்கு. அதனால் உடன் அவர்களையும் அழைத்து வந்திருந்தாள்.

அந்த அறையில் இவர்களை தவிர இன்னும் மூவரும் இருந்தனர். ரவி, சிவா மற்றும் காசிநாதன்.

காசிநாதன் தன் முதற்கட்ட விசாரணை முடித்து, குற்றவாளியை அடையாளப்படுத்தி இருந்தார். ஆனாலும் குற்றவாளிக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்று தன் இயலாமையை சொல்லி கொண்டிருந்த வேளையில் தான் ஜனனி புயலாய் அறைக்குள் நுழைந்திருந்தாள்.

அங்கே நிலையை புரிந்து கொண்ட ரவி, எழுந்து சென்று அறையின் கதவோரம் பாதுகாப்பாக நின்றான் பிறர் உள்ளே வராதபடி..

“பதில் சொல்லுங்க விபீஸ்வர், எதுக்கு இப்படி உங்க வீட்டுக்குள்ளயே பொய்யான பேய் நாடகத்தை நடத்திட்டு இருக்கீங்க?” மாணிக்க சுந்தரம் ஆத்திரமாக கேட்டார். ‘என்ன மாதிரியான பைத்தியக்காரன் இவன்’ என்ற எண்ணம் ஓட.

“என்கூட இருக்கிறவங்க எத்தனை நம்பிக்கை ஆனவங்கன்னு தெரியணும் இல்ல அதுக்காக தான்” வெகு நிதானமாக வந்தது விபீஸ்வர் பதில்.

“அப்ப என்னையும் சந்தேகபட்டியா விபி? பெத்த மகனை கஷ்டபடுத்துற அளவுக்கு என்னை கல்நெஞ்சகாரியா நினச்சுட்டியா?” லலிதாம்பிகை கலங்கி கேட்க,

“நீங்க காவ்யா கிட்ட மாமியாரா தான நடந்துட்டீங்க மாம்” அவன் பதில் கத்தி வீசியது.

அவர் பேச்சற்று அருகிருந்த சோஃபாவில் உடைந்தமர்ந்து தலைக்கவிழ்த்துக் கொண்டார்.

“பாப்பா, அம்மாவையே பேயை காட்டி மிரட்டி இருக்கான். இவனை நம்பி உன்ன கட்டி கொடுக்க முடியாது” மாணிக்க சுந்தரம் முடிவாக சொல்லி விட, பதறிய ஜனனி, “என்னாச்சு விபி உனக்கு? இன்னும் ரெண்டு நாள்ல எங்கேஜ்மெண்ட் வச்சிகிட்டு நீ செய்யறது எதுவுமே சரியில்ல டா” என்று அவனை தவிப்பாய் கேட்டாள்.

“என்னால யாரையும் நம்ப முடியல ஜெனி, ஆக்ஸிடென்ட் நடந்த ஒரு வாரத்துக்கு முன்னாடி, காவ்யா கடத்தப்பட்டிருந்தா! நானும் ரவியும் அலைஞ்சு திரிஞ்சு அவளை கண்டுபிடிச்சு மீட்டெடுத்தோம்… அந்த பாதிப்பு அடங்கறத்துக்கு உள்ளேயே இந்த ஆக்ஸிடென்ட் எங்களை மொத்தமா சுருட்டி போட்டுடுச்சு…”

ஜனனி முகம் பயத்தோடு வெளிற, காசிநாதன் கூர்பார்வை குறித்துக் கொண்டது.

“என்னையும் காவ்யாவையும் கொலை செய்ற அளவு பகை வச்சிருக்க அந்த எதிரி என் முன்னாடியே இருக்க மாதிரி ஒரு பயம்! அது யாருன்னு கண்டுபிடிக்கிற வரைக்கும் என்னால வேற எதை பற்றியும் யோசிக்க முடியல, முடியாது” விபீஸ்வர் சொல்லி நிறுத்த,

“நீங்க ஏன் பயப்படுறீங்க மிஸ் ஜனனி?” காசிநாதன் கேள்வியில் இவள் பதறி நிமிர்ந்தாள்.

ஏசி அறையிலும் அவள் பளிங்கு நெற்றியில் வியர்வை முத்துக்கள் மின்னின.

“மிஸஸ் காவ்யதர்ஷினி கடத்தலுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?” அவள் முன்னே வந்து அடிக்குரலில் காசிநாதன் கேட்க, ஜனனி இல்லையென்று வேகமாய் தலையசைத்தாள்.

“இல்ல, உங்க முகமே உங்களை காட்டி கொடுக்குது உண்மைய சொல்லுங்க” காசிநாதன் மிரட்ட, “என் பொண்ண மிரட்டற வேலையெல்லாம் வச்சுக்காதீங்க” என்று மாணிக்க சுந்தரம் குறுக்கே தடுத்து நின்றார்.

மேலே பேச முயன்ற காசிநாதனை நிறுத்திய விபீஸ்வர், அவள் அருகில் வந்து, “ஜெனி, காவ்யாவ கிட்நப் பண்ணது நீயா? என்கிட்ட உண்மையை மறைக்காத பேப்!” அவன் குழைவான குரல் அவள் நெஞ்சை பிசைய, ஆமோதிப்பாக மேலும் கீழும் தலையாட்டினாள்.

மாணிக்க சுந்தரம், லலிதாம்பிகை இருவரும் அதிர்ந்து பார்க்க, விபீஸ்வர் ஜனனி கழுத்தை நெறித்து பிடித்திருந்தான் கண்கள் சிவக்க,

“ச்சீ நீயும் ஒரு பொண்ணா இருந்திட்டு… நான் சரியான நேரத்தில போகலைன்னா கவ்யா நிலைமை என்னாகி இருக்கும்! உனக்குள்ள இத்தனை குரூரமா?” என்று கையில் அழுத்தம் கொடுக்க,

“அங்க இருந்தது என்னோட ஃப்ரண்ஸ்… அவளை பயமுறுத்தினா உன்ன விட்டு போயிடுவான்னு தான் அப்படி பிளான் பண்ணோம்… வேற எதுவும் இல்ல…” அவள் திக்கி திணறி தன்னிலை விளக்கம் சொல்ல, இவன் கை உதறி விட்டான்.

சற்று நேரம் அந்த பரந்த அறையில் ஜனனியின் விசும்பல் மட்டுமே கேட்டிருந்தது.

“செத்து போனவளுக்காக இப்படி உருகுறீங்களே, இதோ உங்களையே பித்து பிடிச்சு சுத்தி வராளே இவளை பத்தி யோசிச்சீங்களா?” மாணிக்க சுந்தரம் தந்தையாக தன் ஆதங்கத்தை கொட்டினார்.

“இன்ஸ்பெக்டர் யூ ப்ரோஸீட்” என்று விபீஸ்வர் ஜனனி புறம் கைக்காட்ட, “மிஸ் ஜனனி, கடத்தல், கொலை முயற்சி குற்றத்திற்காக உங்களை கைது செய்றேன்” காசிநாதன் சொன்னதும் அங்கிருந்த அனைவரின் முகத்திலும் அடுத்தகட்ட அதிர்ச்சி பரவியது.

“இல்ல, நான் கொலை பண்ணல…” ஜனனி கத்தி விட்டாள்.

“இனி தப்பிக்க முடியாது ஜனனி, விபீஸ்வர், காவ்யதர்ஷினியை ஆக்ஸிடென்ட் பண்ணது உங்களோட கார் தான்னு அதிகாரபூர்வ ஆதாரங்கள் எங்களுக்கு கிடைச்சிருக்கு” அத்தனை அழுத்தமாக முழு உண்மை மறைத்து கூறினார் அவர்.

ஜனனி முகம் அப்பட்டமான அதிர்ச்சியைக் காட்ட, “விபி, நீயாவது நம்பு நான் கொலை எல்லாம் பண்ணல” அவள் அழுது கெஞ்ச,

“கிட்நாப் பண்ண உனக்கு கொலை பண்றது பெரிய விசயமா தெரியல இல்ல… நான் உன்கிட்ட இருந்து இதை எதிர்பார்க்கல” அவன் விரக்தியாக சலித்து கொண்டான்.

“அச்சோ என்னை ஏன் நம்ப மாட்டேங்கிற… உன்ன கொலை பண்ண நான் நினைப்பேனா? நீ என்னோட உயிர் டா?” அவன் முன்னே மடந்தமர்ந்து அழுது கரைந்தாள்.

விபீஸ்வர் நிர்சலனமாய் அவளை பார்த்திருக்க, மாணிக்க சுந்தரத்தின் இரத்த அழுத்தம் கூடிக் கொண்டிருந்தது.

“அந்த ஆக்ஸிடென்ட் பண்ணது நான் தான்” மாணிக்க சுந்தரம் சாதாரணமாக சொல்ல, அனைத்து பார்வையும் அவரை மோதி நின்றன.

“டேட்?” ஜனனி பதைத்தாள்.

“உங்க பொண்ணை காப்பாத்த நீங்க கொலை பழிய ஏத்துக்கிறீங்களா மிஸ்டர் மாணிக்க சுந்தரம்?” காசிநாதன் கேலி இழையோட உசுப்பெற்றிவிட,
ஆழ மூச்செடுத்துக் கொண்டவர் சாதாரணமாக விளக்கம் தந்தார்.

“அன்னைக்கு என் கார் ரிப்பேர் அதனால ஜனனி காரை நான் தான் எடுத்துட்டு போனேன்! ஜனனி தினம் தினம் அழுது கரையிறதை என்னால‌ பார்க்க முடியல அதான் மனசு அமைதிக்காக லாங் ட்ரைவ் கிளம்பினேன். திரும்பி வர வழியில தான் இவங்க ரெண்டு பேரும் ரோட்ல பேசி சிரிச்சுட்டு நிக்கறதை பார்த்தேன், எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? நான் பெத்து வளர்த்த என் பொண்ணு இவனுக்காக செத்து பொழச்சி துடிச்சி கிடக்கிறா… அவளை பழைய நிலைமைக்கு கொண்டு வரதுக்காக நானும் என் பொண்டாட்டியும் படாதபாடு பட்டுட்டு இருக்கோம்… எங்க பாப்பா வாழ்க்கைய நாசமாக்கிட்டு இவன் மட்டும் புது பொண்டாட்டியோட சந்தோசமா இருப்பானா? அந்த நிமிச ஆத்திரம், கோபம், ஆவேசம்… போன வேகத்தில காரை திருப்பிட்டு வந்து, இதோ இவனை குறிவச்சு தான் அடிச்சு தூக்கினேன்… லாஸ்ட் மினிட்ல இவன் தர்மபத்தினி இவனை காப்பாத்துறேன்னு வந்து விழுந்து தொலைஞ்சா…”.

அவ்வளவு தான் என்பது போல அவர் கைவிரித்து நிற்க, மற்றவர்கள் அவர் சொல்வதை முழுவதுமாக உள்வாங்கி கொள்ள முடியாமல் உறைந்திருந்தனர்.

அங்கே முதலில் தன்னை மீட்டுக் கொண்ட ஜனனி தந்தையை சரமாரியாக அறைய தொடங்கினாள்.

“என் விபிய கொல்ல பார்த்தீங்களா டேட், எப்படி நீங்க அப்படி செஞ்சீங்க, நான் அவன்மேல எவ்ளோ லவ் வச்சிருக்கேன்னு தெரிஞ்சும்… ஐ ஹேட் யூ டேட்… ஹேட் யூ…” பித்து போல் ஆர்ப்பாட்டம் செய்தவளை சிவாவும், காசிநாதனும் விலக்கி பிடித்தனர்.

“உனக்கு கொஞ்ச நாள் பழகுன அவன் பெருசுன்னா, நீ கருவானதுல இருந்து பார்த்து பார்த்து வளர்த்த எனக்கு நீ ரொம்ப பெருசு மா… உங்களுக்கு எல்லாம் வயசு கோளாறுல காதலும் காதலனும் மட்டும் தான் பெருசா தெரியுது… உங்களை பார்த்து, பொத்தி, வளர்த்த பெத்தவங்க நாங்க இளிச்சவாயங்களா தான் தெரிவோம்… பெத்தவங்களுக்கு புள்ளகுட்டிங்க தான் மா உலகம். ஆனா நீங்க சுலபமா வேற உலகத்தை தேடி போயிறீங்க…” என்று கசப்பாக சிரித்து கொண்டார்.

ஜனனி கண்ணீரோடு தாவி வந்து அப்பாவின் கழுத்தை கட்டிக் கொண்டு வார்த்தையின்றி கதறினாள்.

இன்னும் முதிராத குழந்தை அவள்!

அவளை தன்னிடம் இருந்து விலக்கியவர், “என் நம்பிக்கைய உடைச்சு என் மக எனக்கு கொடுத்த‌ தண்டனைய விட சட்டம் கொடுக்கிற தண்டனை பெருசில்ல இன்ஸ்பெக்டர். நான் குற்றத்தை ஒத்துக்கிறேன்” என்று சரணடைந்தார்.

“அவசியமில்ல…”

அதுவரை மௌனம் காத்து இருந்த விபீஸ்வர் தன் மறுப்பை சொல்ல, மற்றவர்கள் விளங்காமல் விழித்தனர்.

“இன்ஸ்பெக்டர், நான் கொடுத்த கேஸை வித்ரா பண்ணிக்கிறேன்!” என்று விபீஸ்வர் திடமாக சொல்ல சற்று யோசித்த காசிநாதன், அவன் மனநிலை உணர்ந்து ஆமோதிப்பாக தலையசைத்தார்.

“மாமா… காவ்யாவுக்கு நியாயம் கிடைக்கணும்” அதுவரை பொறுத்திருந்த சிவா அழுத்தமாக சொல்ல,

“யார் கரிசனமும் எனக்கு தேவையில்ல, என்னோட குற்றத்தை நானே ஒத்துக்கிறேன். என்ன தண்டனை வேணாலும் ஏத்துக்கிறேன்” என்று வீம்பாக சொன்னவர் மகளின் நிலையை கவனித்து, “என்மேல இருக்க கோவத்தில ஜனனிய பழி தீர்த்துக்காத, அவளுக்கு உன்ன தாண்டி வேற எதையும் யோசிக்க தெரியல” என்று முடித்தார். அவர் குரலில் சிறிதும் மன்றாடல் இல்லை. வேதனை மட்டும் தான் இருந்தது. ஒரு தந்தையாய் தான் தோற்றுவிட்ட வேதனை.

விபீஸ்வரின் பார்வை ஜனனியிடம் சென்றது. ஜனனியை தான் சந்தித்தது முதல் இன்று வரையிலான நினைவுகள் அவனுள் ஓடி மறைந்தன. தங்களுக்கான தனிமை பொழுதுகளில் எல்லைக்கடந்த இன்பத்தைத் தந்தவள்! இப்போது தான் அடிப்பட்டு கிடந்தபோது ஓடிவந்து தன்னை கவனித்து கொண்டவள்! தன் ஒதுக்கத்தையும் உதாசீனதையும் தாண்டி தன் மேல் தீரா காதலை ஏந்தி நிற்பவள்!

கண்களை அழுத்த மூடி திறந்தான்.

“ஜனனிய தவிக்கவிட்ட பாவம் தான் போல, உன்னால அந்த மகராசி கூட வாழ முடியாம போயிடுச்சு, இவ்வளவுக்கு பிறகும் நீ வேணும்னு நிக்கிறா, ஏத்துக்க விபி” லலிதாம்பிகையும் கெஞ்சினார்.

‘அப்படியும் இருக்குமா?’ என்ற மின்னல் வெட்ட, ஜனனியின் முன்பு அப்படியே மண்டியிட்டு அமர்ந்து விட்டான் விபீஸ்வர்.

அங்கிருந்த அனைவரும் திகைத்து பார்த்திருக்க, “சாரி ஜெனி… எல்லாத்துக்கும்! உன் இன்னசென்ட்ட நான் மிஸ் யூஸ் பண்ணிக்கிட்டேன் அதுக்கும்” அவள் முன் தலை தாழ்ந்து பாவ மன்னிப்பு வேண்டினான். இறுக மூடிய அவன் இமைகளில் கண்ணீர் கசிய, ‘நான் விளையாட்டா செஞ்சதுக்கெல்லாம் மன்னிப்பும் கேட்டுட்டேன், இப்பவாவது எனக்காக எழுந்து வருவல்ல கவி’ மனக்குரல் மன்றாடியது.

எதைப்பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் கடந்து செல்பவன் இப்போது அவளிடம் அடிபணிந்து இருந்தான் தன்னவளுக்காக!

பாவ புண்ணியம் பற்றி நம்பிக்கை அற்றிருந்தவன் இப்போது பாவமன்னிப்பு வேண்டினான் தன் உயிரானவளுக்காக!

“நீ ஏன் விபி என்கிட்ட சாரி கேட்கிற, நான் உனக்கு வேண்டாமா?” ஜனனியும் முட்டியிட்டு கேட்க,

விபீஸ்வர் மறுப்பாக தலையசைத்தான். “எனக்கு என் கவி இருக்கா ஜெனி” நம்பிக்கையோடு உதிர்ந்தன அவன் வார்த்தைகள்.

# # #

உயிர் தேடல் நீளும்…

error: Content is protected !!