Uyir thedal niyadi final epi

Uyir thedal niyadi final epi

உயிர் தேடல் நீயடி 30

“எனக்கு என் கவி இருக்கா ஜெனி!”

விபீஸ்வர் பதிலில் ரவி, காசிநாதன் தவிர மற்றவர்கள் திகைத்திருக்க, சிவாவிற்கு சொல்லில் அடங்காத மகிழ்ச்சி.

“மாம்ஸ் நிஜமாவா சொல்றீங்க! அக்கா உயிரோட தான இருக்கா! முன்னவே எனக்கு மட்டுமாவது சொல்லி இருக்கலாம் இல்ல மாம்ஸ்” என்று சந்தோசத்திலும் பரிதவிப்பிலும் விபீஸ்வரை கட்டிபிடித்து கலங்கி விட்டான் சிவா.

“காவ்யாவ நான் இப்பவே பார்க்கணும் பிளீஸ் மாம்ஸ்” சிவா கெஞ்சலாக கேட்க, விபீஸ்வர் முகத்தில் எந்தவித சந்தோச அறிகுறியும் தெரியவில்லை. ஆமோதிப்பாக தலையசைத்து ரவிக்கு பார்வையால் உத்தரவிட்டான்.

#
#
#

தொடர் மருத்துவ சிகிச்சையாலும் காவ்யாவை சுயநினைவுக்கு கொண்டு வர இயலவில்லை. அவள் சுயநினைவிற்கு வந்தால் மட்டுமே அவளின் உயிரை காப்பாற்ற முடியும் என்ற நிலையில் தான் கடைசி முயற்சியாக விபீஸ்வர் காவ்யாவை சுயநினைவுக்கு கொண்டு வர முயன்றது.

ஆனால் அவள் விழிக்கவே இல்லை!

திரைப்படங்களிலும் கதைகளிலும் வருவது போல தன் குரலை கேட்டதும் சுயவுணர்வு வந்து தன்னை கட்டிக்கொள்வாள் என்ற அவனின் அசட்டுதனமான எண்ணம் நிதர்சனத்தின் தகிப்பில் எரிந்து பொசுங்கி போயிருந்தது.

அன்று விபீஸ்வருடன் ரவி மட்டுமே இருந்தான். மற்றவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணம் கூட அவனுக்கு இருக்கவில்லை.

தயக்கத்துடன் அவன் அறைக்குள் வந்த மருத்துவர், “சாரி விபி, உங்க மனைவி… கோமா ஸ்டேஜ்க்கு போயிட்டாங்க! இப்போதைக்கு அவங்க உயிரோட இருக்காங்கனு ஆறுதல் படுத்திக்கிங்க” என்று சொல்ல, அவனின் மொத்த உலகமும் ஒளி குன்றி போனது.

“காவ்யா எப்ப நார்மலாவா டாக்டர்?” விபீஸ்வர் தவிப்பாக கேட்க,

“நாள் கணக்குல குணமான பேஷன்ட்ஸும் இருந்திருக்காங்க, வருச கணக்கா ரிக்வேர் ஆகாத பேஷன்ட்ஸும் இருக்காங்க” மருத்துவர் விளக்கம் தர,

“இனிமே உங்களால எதுவும் செய்ய முடியாது அதானே?” அவன் கேள்வி வேதனையோடு வந்தது.

“தலையில பலமா அடிப்பட்டு, நிறைய பிளட் லாஸாகி இருக்கு. பேஷன்ட் ரொம்ப கிரிடிக்கல் ஸ்டேஜ்ல இருந்தாங்க, அவங்களுக்கு சுயநினைவு வராததால எங்களால ஃபர்தர் டீரிட்மெண்ட்ஸ் கொடுக்க முடியல. ரெகுலர் டீரிட்மெண்ட்ல அவங்க குணமாவாங்கன்னு நம்புங்க விபி” மருத்துவர் நம்பிக்கை தந்து விலகிவிட, விபீஸ்வர் அதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்திருந்தான்.

“விபி சர், உங்க ஃபேமிலிக்கும் மேடம் ஃபேமிலிக்கும் தகவல் சொல்லிட்டேன்”
ரவி சொல்ல,

“இனி யார் வந்து என்ன? காவ்யா திரும்பி வர போறாளா?” அவன் முழுவதுமாக விரக்தியின் பிடியில் சிக்கி இருந்தான். இத்தகைய மனநிலை அவன் உடல்நிலைக்குமே ஏற்றது இல்லை.

“மேடம் சீக்கிரமே குணமாகி வருவாங்க, நம்பிக்கையோட இருங்க சர்”

“நம்பிக்கை!?” கசப்பாக சிரித்தவன், “யாரை நம்ப சொல்ற ரவி? அம்மா வீட்டுக்கு போனவளை கடத்தி இருக்காங்க, யாருன்னு கண்டுபிடிக்க முடிஞ்சதா உன்னால? ரோட்டோரமா பேசிட்டு இருந்த எங்கமேல காரை மோதிட்டு போயிருக்கான், யாரவன்? என்மேல அப்படி என்ன கொலைவெறி அவனுக்கு? பதில் தெரியாது நமக்கு! என்கூட இருக்கறவங்களே எனக்கு எதிரா செய்யற மாதிரி தோணுது” விபீஸ்வர் புலம்பி தள்ளினான்.

“அது யாருன்னு சீக்கிரம் கண்டு பிடிச்சிடலாம் சர்” ரவி உறுதி தர,

“அதுவரை காவ்யாவோட நிலைமை? காவ்யாவோட இந்த நிலைமைக்கு காரணமானவங்க யாருன்னு தெரியாம யாரை நம்பி காவ்யாவை நான் ஒப்படைக்கிறது? டே ஆர் நைட் என்னால அவகூடவே இருக்க முடியுமா என்ன?” தன்னவளை முழுவதுமாக இழந்துவிடுவோமோ என்று கோழைத்தனமாய் பயந்திருந்தான் அவன்.

“சர், அப்ப எல்லாரும் மேடம் பத்தி கேட்டா என்ன சொல்றது?” ரவி கேட்க, “எல்லாரும் காவ்யா இறந்து போனதாவே நம்பட்டும்…!” விபீஸ்வர் திடமாக சொன்னான்.

“இது ரொம்ப ரிஸ்க் சர்” ரவி தயங்க, “எங்களை சுத்தி இருக்க பிரச்சனை எல்லாம் தீர்றவரை காவ்யா இல்லாதவளாவே இருக்கட்டும், அதுக்கு வேண்டிய ஏற்பாடு பண்ணு ரவி” உத்தரவோடு முடித்து கொண்டான்.

ரவியின் முயற்சியால் காவ்யதர்ஷினி இறந்தவளாகவே காட்டப்பட்டாள். அவளின் பெயரில் முகமறியா ஒரு பெண்ணின் சடலம் ஊரார் பார்வைக்கு வைக்கப்பட்டது.

விசயம் கேள்விப்பட்டு பறந்தோடி வந்த ஜனனி விபியுடனே இருந்துவிட, எதையும் நேரடியாக செய்யாமல் அனைத்திற்கும் ரவியை ஏவினான். நம்பிக்கையான நண்பனாய் திறமையான வேலைக்காரனாய் ரவி அவனுடனிருந்தான்.

விபீஸ்வரின் மென்மையான மனதில் இறுக்கம் பரவி, அனைவரையும் சந்தேக பார்வையாகவே பார்க்க ஆரம்பித்தது.

காவ்யா இழப்பை பெரிதுபடுத்தாது அடுத்த நாளே லலிதாம்பிகை மகனின் அடுத்த திருமணத்திற்கான திட்டமிட, இவனின் சந்தேகப் பார்வையில் அவரும் விழுந்தார்.

அவரின் வாயால் உண்மையைக் கொண்டு வர, ரவி செய்த வேலை தான் காவ்யா போன்ற மாய உருவத்தை ப்ரோஜக்டர் மூலம் வடிவமைத்து பயமுறுத்தியது. அந்த திட்டம் ஓரளவு செயல்பட்டது.

இவர்கள் குற்றவாளியை நெருங்குவதில் தாமதம் ஏற்பட, இந்த வழக்கை கொலை முயற்சியாக புகார் தந்து காவல் துறையின் உதவியையும் நாடினர்.

காசிநாதன் எல்லாவகையிலும் வழக்கிற்கு துணையாக இருந்தார். மாணிக்க சுந்தரம் தான் குற்றவாளி என்று அவர் கண்டுபிடித்து சொன்னபோதும் கூட விபீஸ்வரால் அதை நம்ப முடியவில்லை. அத்தோடு அவருக்கு எதிரான வலுவான ஆதாரத்தை சேர்க்க வேண்டிய கட்டாயம் வேறு.

சரியான நேரத்தில் ஜனனி தந்தையோடு இவனை தேடி வந்திருந்தாள்.

காவ்யா கடத்தலில் ஜனனி பங்கை முதலிலேயே அறிந்து வைத்திருந்தாலும் விபீஸ்வர் அதை சரியான நேரத்தில் பயன்படுத்தி அவள் மீது கொலைப்பழி சாற்றினான்.

ஆம், மாணிக்க சுந்தரம் தன் குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்க அவர் மகளை தூண்டிலாக பயன்படுத்திக் கொண்டான்.

மாணிக்க சுந்தரம் தன் செயலை நியாயப்படுத்த வில்லை. திடமாகவே ஒப்புக் கொண்டார். காரணத்தையும் தெளிவாக விளங்கியவர் தண்டனையும் முன் வந்து ஏற்க துணிந்தார்.

தான் விளையாட்டாய் செய்த வினையெல்லாம் காவ்யாவை சேர்ந்ததை எண்ண இவன் மனம் துடித்தது. தன் தவறின் முழு உருவமாக நிற்கும் ஜனனியிடம் தானென்ற கர்வத்தை விட்டு மன்னிப்பை வேண்டினான். அவனுக்காக அல்ல, அவன் கவிக்காக.

இந்த பேதை பெண் தன்னை மன்னித்தால் தன்னவள் மீண்டு வருவாளென்ற அற்ப நம்பிக்கையை அவனால் தள்ள முடியவில்லை.

தன் காதலானவளை உயிர்ப்பிக்க அவன் எதுவும் செய்ய தயாராக இருந்தான். உலகை புரட்டி போடவும், இவள் முன்பு மண்டியிட்டு பாவ மன்னிப்பு வேண்டவும்!

ஆனால் காவ்யா?

வெளியுலக தாக்கம் சிறிதும் இன்றி, சலனமற்ற நித்திரையைக் கலைக்க மனமின்றி ஆழ்ந்திருந்தாள்.

அந்த உயர்ரக மருத்துவமனையின் தனி அறையில், அவளுக்கு முழுநேரம் துணையாக இருந்த செவிலிப்பெண் வந்தவர்களை உள்ளே அழைத்து வந்தார்.

விபீஸ்வர் உள்ளே செல்லவில்லை. அவளை இந்த நிலையில் மறுபடி பார்க்கும் திடம் இல்லை அவனுக்கு. அறையின் எதிர்ப்புறம் இருந்த நாற்காலியில் தோய்ந்து அமர்ந்து விட்டான்.

அந்த மருத்துவ அறையின் கட்டிலில் காவ்யதர்ஷினி கிடத்தி வைக்கப்பட்டு இருந்தாள்.

மெலிந்த தேகம், மொட்டையிட்ட தலையை மூடி இருந்த கட்டு,
கருமை படர்ந்து காயங்களின் தழும்புகளை காட்டும் முகம், இமை திறவா கண்கள், செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருந்தது. டிரிப்ஸ் ஏறியபடி இருக்க, பலவித வயர்கள் அவளின் உடலில் ஆங்காங்கே பிணைக்கப்பட்டு இருந்தன.

தன் மகளை அந்த நிலையில் பார்த்த பார்கவி அங்கேயே வாய்மூடி கதறி விட்டார். சிவாவும் மஞ்சரியும் கூட கலங்கி விட்டனர்.

காவ்யா உயிரோடு இருக்கிறாள் என்ற சந்தோசத்தை விட, அவள் இப்படி அசைவற்று கிடப்பதை பார்க்க மனம் தாங்கவில்லை யாருக்கும். லலிதாம்பிகையும் கூட கலங்கி விட்டார் தான்.

ஜனனிக்கு என்னவென்று பிரித்தறிய இயலாத மனநிலை. அமைதியாக அங்கிருந்து வெளியேறி விட்டாள்.

வெளியே நாற்காலியில் பின்புறம் தலை சாய்த்து கண்கள் மூடியபடி விபீஸ்வர் அமர்ந்திருந்தான். அவன் முகத்தில் அப்பட்டமான வேதனை சாயல் படர்ந்திருக்க, அவனை தன்னோடு சேர்த்தணைத்து ஆறுதல் தர இவள் மனம் விழைய, அவனை நோக்கி ஓரடி எடுத்து வைத்தவள் அப்படியே நின்றாள்.

‘இவன் உன்னோட விபி இல்ல, அந்த காவ்யாவோட விபி! இவனோட மனசுல உனக்கு எந்த இடமும் இல்லன்ற போது அவனோட வாழ்க்கையில இடம் தேடாத, விலகிடு’ முதல் முறை அவளின் அறிவு தெளிவுறுத்த, ஆழ மூச்செடுத்து திரும்பி நடந்தாள்.

தனக்கான பாதையை தானே தேர்ந்தெடுத்து முன்னேறிவள் தளிர் நடையில் இப்போது புதுவித நிமிர்வும் மிளிர்ந்தது.

# # #

ஒரு வருடம் ஆறு மாதம் நான்கு நாட்கள் கடந்திருந்திருக்க,

இன்று மாலை நேரம்,

தன் கைக்கடிகாரத்தை பார்த்தபடி காரிலிருந்து இறங்கி தன் பங்களாவிற்குள் நுழைந்தான் விபீஸ்வர் தன் துறுதுறு வேகநடையோடு.

வெளித்தோற்றத்தில் வெகுவாக மாறி தெரிந்தான். அவன் வழுவழு கன்னத்தை முரட்டு தாடி மறைத்து இருக்க, குறும்பு மின்னும் பார்வையில் சற்றே ஒளி குன்றித் தெரிந்தது.

மாடிப்படிகளில் ஏறி தன் அறைக்குள் ஆர்வமாக எட்டி பார்த்தவன், பின் ஆழ மூச்செடுத்து உள்ளே வந்தான்.

“சாரி பேபி, கொஞ்சம் லேட் ஆகிடுச்சு டியர், கோவிக்காத ப்ளீஸ்” என்றான் கெஞ்சலாய்.

“…”

“நான் ஏன் லேட்னு கேட்க மாட்டியா பேபி? ஓகே நானே சொல்றேன். எல்லாம் சிவா மேட்டர் தான். உங்க அப்பார்ட்மெண்ட்ல இருக்க தாரிகாவுக்கும் இவனுக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிடுச்சாம், ஆனா இவன் இன்னும் ஓகே சொல்லாம இருக்கான். ஏன்டான்னு கேட்டா, நீதான் முன்ன நின்னு அவங்க கல்யாணத்தை நடத்தணுமா உன் பாசமலர் தம்பி உருகுறான் டா… முடியல” என்று போலியாக அலுத்துக் கொண்டான்.

“…”

தன் கோர்ட், டையை கழற்றிய படி, “ம்ம் நேத்தே சொல்ல மறந்துவிட்டேன் பேபி, மாணிக்க சுந்தரத்தோட கேஸ்ல அடுத்த வாரம் தீர்ப்பு வரும்னு சொல்லி இருக்காங்க, அவசரத்தில தப்பு செஞ்சுக்கிட்டு இப்ப கோர்ட், கேஸ்னு அலைஞ்சிட்டு இருக்காரு மனுசன்” மறந்த தகவலையும் நினைவுபடுத்தி அவளிடம் கூறினான்.

“…”

அறையின் ஃபிரிட்ஜில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து கொண்டு, “மார்னிங் மீட்டிங்ல ஜெனிய பார்த்தேன் சும்மா விறப்பா வந்து நிக்கிறா! அவங்க அப்பாவோட டெக்ஸ்டைல் பிஸ்னஸை இப்ப இவ தான் கவனிச்சுக்கிறா, அவளுக்குள்ள இத்தனை டேலன்டை நான் கூட எதிர்பார்க்கல காவ்யா, நிஜமா அவளை இப்படி பார்க்க நிம்மதியா இருந்தது” என்று சொல்லிவிட்டு ஜில்லென்ற தண்ணீரை வாய்க்குள் கவிழ்த்துக் கொண்டான்.

“…”

இன்னும் காவ்யாவிடம் எந்த பதிலும் வாராமல் இருக்க, “ப்ச் நான் எவ்வளவு நேரமா பேசிட்டு இருக்கேன், நீ இப்படியே அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? ஓஹோ பேச மாட்ட இல்ல ஓகே” என்று தோள் குலுக்கி கொண்டவன், துண்டை எடுத்துக் கொண்டு மீண்டும் அவளை திரும்பி பார்க்க, எப்போதும் போல அசைவற்று தெரிந்த அவளின் பூமுகம் இவனை அசைத்து பார்த்தது.

தலையை குலுக்கி தன்னை மீட்டுக் கொண்டவன் குளியலறைக்குள் சென்றான். இதமான சுடுநீரும்‌ அவனை தகிக்கவே செய்தது.

அனைவருக்கும் உண்மையை தெரியபடுத்திய உடனேயே காவ்யாவை தன் அறைக்கு மாற்றி இருந்தான் விபி. பகல் பொழுதில் துணையாக ஒரு செவிலியை அமைத்து அவளுக்கான மருத்துவ சிகிச்சையும் தொடர செய்திருந்தான்.

இன்று விழிப்பாள், நாளை பேசுவாள் என்று நம்பிக்கையோடு நாட்களை நகர்த்தி வருகிறான். நாட்கள் கடக்கிறதே தவிர காவ்யா கோமா நிலையில் இருந்து மீள்வதாக இல்லை.

காவ்யாவுடன் எப்போதும் போலவே பேச, நடக்க பழகிக் கொண்டான். தினம் தினம் நடக்கும் ஒவ்வொன்றையும் அவளிடம் ஒப்புவிப்பதை வழக்கமாக ஏற்றிருந்தான். மற்றவர்களையும் அவளிடம் இதமாகவே பேச கட்டளை இட்டிருந்தான்.

மஞ்சரி, சிவா, பார்கவி, காவ்யாவை காண வரும்போதும் இயல்பாகவே பேசிவிட்டு, ‘நீ எழுந்து வா காவ்யா, நீயில்லாம நாங்கெல்லாம் துடிச்சிட்டு இருக்கோம், எங்களுக்காக வேணாம், விபிக்காக எழுந்து வா’ கெஞ்சலோடே விடைப்பெற்று கிளம்பினர்.

லலிதாம்பிகையும் மருமகள் மீண்டு வர பூஜை, யாகம் என்று அவருக்கு தெரிந்த வழிகளில் தன் பிரார்த்தனைகளை‌ மேற்க்கொண்டிருந்தார். காவ்யாவிற்காக தினமும் ஒரு கோவில் பிரசாதம் வீட்டிற்கு வரும்படி ஏற்பாடு செய்திருந்தார்.

மருத்துவரும் காவ்யாவின் உடல்நிலையில்‌ நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவே கூறினார். ஆனாலும் அவள் எப்போது எழுவாள் என்பதை அவராலும் உறுதியாக சொல்ல முடியவில்லை.

காவ்யாவிற்கு பிடித்த ஒவ்வொன்றையும் அவளருகிலேயே கொண்டு வந்திருந்தான் விபீஸ்வர்.
அவளுக்கு பிடித்த பாடல்களை அறையில் இசைக்க செய்தான். அவளின் பேவரேட் பிள்ளையார் சிலைகள் விதவிதமாக அவர்கள் அறையில் நிறைத்திருந்தான். தங்களுக்கு இடையேயான காதல், ஊடல் நிகழ்வுகளை மறுமுறை அலசி பேசுவான். தனிமையில் இன்பம் துய்த்த நினைவுகளை அவளின் காதருகில் வந்து சின்ன வெட்க சிரிப்போடு ரகசியமாய் ஓதுவான்…

இத்தனைக்கும் விபீஸ்வரின் காதலுக்கும் கெஞ்சலுக்கும் அடிப்பணியாத கல்நெஞ்சக்காரியாகவே காவ்யதர்ஷினி இருந்து வருகிறாள் இன்னும்!

விபீஸ்வர் குளித்து முடித்து வந்திருக்க, அவனுக்கான பிளாக் காஃபியும், அவளுக்கான தேநீரையும் பரிமாறிவிட்டு கலில் நகர்ந்து கொண்டான். இது தினப்படி நிகழ்வு தான்.

தன் குளம்பியை எடுத்து பருகியவன், காத்திருந்த தேநீரையும் அவள் முகத்தையும் பார்க்க, ‘உனக்கு காஃபி ஓகேவா காவ்யா?’, ‘இல்ல சர் எனக்கு டீ சோல்லிடுங்க’ என்று முன்பு மேலாளரிடம் சொல்லி விட்டு நாக்கைக் கடித்துக் கொண்ட காவ்யா இவன் நினைவில் வந்து போனாள்.

‘சரியான டீ பைத்தியம் போல’ இவன் அப்போது அவள் பழக்கத்தை அலுத்துக் கொண்டதை நினைத்து சன்னமாய் சிரித்தவன் முகம் வாடிபோனது. அவளின் இன்றைய நிலையை பார்த்து.

“நீ ராட்சசி டீ, என்னை தினம் தினம் கொல்லாம கொன்னுட்டு இருக்க… இன்னும் எத்தனை நாள் இந்த வேதனையை எனக்கு தரபோற கவி? இப்பெல்லாம் ரொம்ப பயமா இருக்கு டீ! நீயில்லாத நரக வாழ்க்கையே எனக்கு கடைசிவரைக்கும் தருவியா?”.

அதற்கு மேல் பேச இயலாமல் அவன் அங்கிருந்து எழுந்து சென்று விட்டான். மூடியிருந்த காவ்யாவின் இமையோரங்களில் மெல்ல ஈரம் கசிந்து வந்தது!

தோட்டத்தில் தூர வானை வெறித்தபடி அமர்ந்திருந்த விபீஸ்வர் மனம் காதலின் ஏக்கத்தில் வெதும்பி மரித்துக் கொண்டிருந்தது.

தன் தொழில் முறையிலும் வாழ்விலும் வெற்றிகளை மட்டுமே வசமாக்க தெரிந்த அவனுக்கு, ஏமாற்றங்களை மட்டுமே பரிசளிக்கும் தன் காதல் மீதும் காதலி மீதும் கோபம் வரத்தான் செய்தது.

காதல் தரும் அடங்கா கோபம் கூட, அந்த காதலிலேயே அடங்கி போவது விந்தையில் விந்தை தான்!

“விபி, காவ்யா கூட இல்லாம இங்க தனியா என்ன பண்ற?” லலிதாம்பிகை கேட்டபடி அவனிடம் வர, விபீஸ்வர் தன் முகத்தை சாதாரணமாக மாற்றிக் கொண்டு அவர் புறம் திரும்பினான்.

“ப்ச் போங்க மாம், நான் என்ன பேசினாலும் உங்க மருமக ரிப்லே பண்ணவே மாட்டேங்கிறா, அதான் திட்டிட்டு வந்துட்டேன்” என்றான் சிணுங்களோடு.

“பிரபல மாயூர் ஜோசியர் நாடி ஜோசியம் கணிச்சு, கூடிய சீக்கிரமே காவ்யா குணமாகி எழுந்துடுவான்னு அடிச்சு சொன்னாரு விபி… அவர் சொன்னா சொன்னமாதிரி நடக்குமாம் சந்திரா சொன்னா” என்று உற்சாகமாய் சொன்ன தாயை சின்ன சிரிப்போடு பார்த்திருந்தவன், “இதில எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்ல மாம், பட் உங்க நம்பிக்கையும் நான் அவமதிக்க விரும்பல” என்று முடித்துக் கொண்டான்.

“ஜோசியம் பலிக்கதோ இல்லையோ நீ அவமேல காட்ற அன்புக்கு அவ நிச்சயமா விழிச்சு எழுந்து வருவா பாருடா” என்று நெகிழ்வாக சொல்ல,

“காவ்யா எனக்காக எழுந்து வருவா மாம்” இவனும் சுணங்காத நம்பிக்கையோடு சொல்லிக் கொண்டிருந்த வேளையில்,

“சார்…” என்று மூச்சு வாங்க அவர்கள் முன் ஓடி வந்தார் செவிலிப்பெண். இருவரும் என்ன என்பது போல் பார்க்க, “மேடம்… மேடமுக்கு கான்சியஸ் வந்துடுச்சு சார்…” திக்கி திணறி சொல்ல, அந்த நொடியில் விபீஸ்வர் உறைந்து மீண்டு அறையை நோக்கி ஓடினான்.

காவ்யா விழித்திருந்தாள்! ஆம் அவனை தான் பார்த்திருந்தாள்!

அந்த நிஜ தருணத்தின் கனத்தை அவனால் தாங்க முடியவில்லை.

“கவி…!” குரலே எழும்பாமல் ஒலித்தது அவன் அழைப்பு.

“வி…பு…!” தடுமாற்றமாய் சிக்கி தவித்து ஒலித்தது அவளின் விளிப்பு.

வெகு நாட்களுக்கு பின்னான அவளின் ‘விபு’வில் இவன் மொத்தமாய் நிறைந்து போனான்.

தனதுயிரானவளை அள்ளி எடுத்து மார்போடு சேர்த்து கொண்டான். “என்னை ரொம்ப படுத்திட்ட டீ” அவன் விழி நிறைந்த கண்ணீர் அவள் கன்னங்களில் பட்டு தெறித்தது.

“உனக்கு… ஒண்ணும்… ஆகல… இல்ல… அந்த… கார்… மோதி…” அவள் திக்கிய வார்த்தைகளில் தன்னவன் நலனை உறுதிபடுத்திக் கொள்ள விழைந்தாள்.

“அந்த ஆக்ஸிடென்ட் என்னை ஒண்ணுமே பண்ணல டீ, நீ தான் என்னை மொத்தமா சாச்சிட்ட” என்று அவளின் நெற்றியில் இதழ் பதிக்க, அவள் இமைகள் மூடி அவன் இதத்தை அனுபவித்தாள்.

மருத்துவர் அங்கே வர, விபீஸ்வர் மனமே இல்லாமல் அவளை விலகி நின்றான்.

மேகமூட்டம் விலகிய வானம் போல அவர்கள் வாழ்விலும் இதமான ஒளி பரவுவதாய்.

மருத்துவ சிகிச்சைகளும் உடற் பயிற்சிகளும் தொடர, காவ்யதர்ஷினி மெதுமெதுவாக இயல்பான வாழ்க்கைக்கு மீண்டு கொண்டிருந்தாள்.

நாட்கள் மாதங்களாக ஓட, அவளுடல் நிலையும் வெகுவாகவே தேறி இருந்தது.

அம்மா, தம்பி, தங்கையின் கரையுடைத்த பாசத்திலும் கணவன், மாமியாரின் அன்பிலும் அக்கறையிலும் காவ்யா திக்குமுக்காடித்தான் போனாள்.

ஆனாலும் விபீஸ்வர் காதல் பார்வைகள், நேச பேச்சுக்களோடு மட்டும் தன்னிடமிருந்து விலகி இருக்க, ஒரு கட்டத்திற்கு மேல் இவள் சுணங்கி தான் போனாள்.

என்ன மந்திரம் செய்தானோ இவளின் உரிமையான உலகம் முழுவதும் அவனேயாகி போயிருந்தான்.

முன்பு அவன்மேல் தனக்கு வந்தது காதலா? வேறா? என்று பிரித்தறிய முடியாமல் தவித்திருக்கிறாள். ஆனால் இப்போது அவன்மேல் கிளர்ந்தெழும் உணர்வு குவியலை எந்த பெயருக்குள்ளும் அடைக்க விருப்பமில்லை அவளுக்கு.

அவளின் இதய சுவர்களில் எல்லாம் அவனின் பிம்பச் சிதறல்களே!

“விபு…!” சுகமாய் அவன் பெயரை உச்சரித்து பார்க்க, சொல்லாமல் கொள்ளாமல் அவள் முகத்தில் வெட்க புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.

“இப்பெல்லாம் என்னாச்சு விபு உங்களுக்கு? ரொம்ப சமத்து புள்ளையா நடந்துக்கிறீங்களே! ஆனா இந்த நல்ல விபு எனக்கு ரசிக்கல, அந்த வம்பு விபு தான் வேணும் எனக்கு!” அவன் நிழற் படத்திடம் உதட்டை சுழித்து காட்டினாள்.

மனம் முழுவதும் ஆசை மழை தூறிட, ஷவரின் நீர் திவலைகள் தன்னை நனைக்க நின்றாள். தன் கப்போர்ட்டை தலைகீழாக புரட்டி எடுக்க, அவள் பார்வையில் அந்த சேலை சிக்கியது.

‘ச்சே என்ன சேலை இது மொத்தமா ஓட்டை ஓட்டையா இருக்கு’ என்று காவ்யா அந்த வலை போன்று வடிவமைக்கப்பட்டிருந்த அடர்நீல சேலையை பார்த்து முகம் சுருக்க, ‘உனக்காகவே நான் ஸ்பெஷலா டிசைன் பண்ண சேரி பேபி, ஒருமுறை கட்டிக்கோ கவி” என்ற அவனின் பார்வை கெஞ்சலை ‘முடியாது, என்னை கம்பல் பண்ணாதீங்க, எனக்கு பிடிக்கல’ என்று முன்பு மறுத்தது இவள் நினைவில் வர, அந்த நெட் டிசைனர் சேலையை இப்போது பிடித்தமாக உடுத்திக் கொண்டாள் தன்னவனுக்காக.

கண்களில் மையிட்டு லேசாய் தன்னை அலங்கரித்துக் கொண்டவள், மறவாமல் தன் கண் கண்ணாடியையும் அணிந்து பார்க்க, முகம் காட்டும் கண்ணாடியில் அவள் பிம்பம் வேறாக தெரிந்தது!

நீண்டிருந்த அவளின் கூந்தல் இப்போது சற்றடர்ந்த ஆணின் சிகை அளவே குறைந்து வளர்ந்திருந்தது. அவளின் மென்மையான முகத்தில் காயத்தின் தழும்புகள் வேறு, நிலவு முகத்தின் கலங்கம் போல காட்சியளிக்க இவள் வாடி போனாள்.

காவ்யா எப்போதும் தன்னை அழகியாக எண்ணியதில்லை தான் என்றாலும் விபீஸ்வருக்கு தான் அவலட்சணமாக தெரிகிறோமோ என்று மனம் வெதும்பியது.

விபீஸ்வர் அறைக்குள் வந்தபோது கண்ணாடி முன் அமர்ந்து தன் முக தழும்பை கவலையாக வருடி தந்திருந்த காவ்யா தான் பார்வையில் பட்டாள்.

“ஓய் பொண்டாட்டி என்ன செய்ற டீ?” என்றபடி அருகில் வர, “நான் ரொம்ப அசிங்கமா ஆகிட்டேன் இல்ல விபு” என்றவளின் கண்கள் கலங்கவா? என தவித்ததிருந்தன.

பதிலாய் புன்னகை விரித்தவன், அவளின் பூமுகம் பற்றி, கண் கண்ணாடியை கழற்றி வைத்து, ஒவ்வொரு தழும்பையும் வருடி இதமாய் இதழ் ஒற்றி எடுத்து அவள் மன வாட்டத்தையும் மாற்றலானான்.

தழும்புகள் தாண்டியும் அவன் இதழ் தேடல்கள் நீள, இவள் பெண்மை நெகிழ்ந்து உரியவன் கைகளில் அடங்கிட, விபீஸ்வர் சட்டென தன்னை விலக்கி கொண்டான்.

“ஹே பேபி, செம டயர்ட்ல வந்திருக்கேன், எனக்கொரு பிளாக் காஃபி சொல்லிடு” என்று குளியலறைக்குள் புகுந்து கொண்டவனை, காவ்யா கண்கள் சுருங்க சாற்றிய கதவை முறைத்து வைத்தாள்.

“ரொம்ப தான் பண்ற போடா!” சத்தமாகவே குரல் கொடுக்க, விபி புருவம் உயர தனக்குள்ளே சிரித்து கொண்டு குளியலை கவனிக்கலானான்.

விபீஸ்வர் தயாராகி வெளியே வர அவனுக்காக ப்ளாக் காஃபி காத்திருந்தது. அத்தோடு தேநீர் கோப்பையுடன் அவளும்!

இவன் இமைகளை அழுத்தி தட்டி திறந்து பார்க்க, வெற்று பார்வையில் தாகம் ஏற்றி நின்றிருந்தாள் அவள்.

அந்த அடர்நீலநிறச் சேலை அவளின் மஞ்சள் மேனியை மறைத்தும் மறைக்காமலும் தழுவி இருக்க, சுவற்றில் ஒருபுறமாக சாய்ந்து நின்றபடி, தேநீர் கோப்பையை இரு கைளில் ஏந்தி ஆழ மூச்செடுத்து புத்துணர்வு வாசம் நுகர்ந்து காவ்யா மெதுவாய் பருக, இவன் பொதுவாய் விழுந்து போனான்.

‘பாவி! ராட்சசி! கட்டுன்னு ஆசையா கேட்டப்போ கட்டாம, இப்ப கட்டிட்டு வந்து கொல்றீயே டீ’ என்று மனதுக்குள் அவளை வறுத்தெடுத்தவன் எதையும் காட்டிக் கொள்ளாமல் தன் குளம்பியை எடுத்துக் கொண்டு பால்கனி நோக்கி நழுவினான்.

சற்று நேரம் பொறுத்து அவனெதிரில் வந்த காவ்யா, “நைட்க்கு என்ன டின்னர் சொல்லட்டும் சர்…” இவள் அப்பாவியாக இழுக்க, அவளை காட்டமாக முறைத்தவன், “என்னை சார்னு கூப்பிடாதன்னு சொல்லி இருக்கேன் இல்ல” என்று எச்சரித்தான்.

“எனக்கு உங்களை சர்னு கூப்பிடத்தான் சர் கம்ஃபர்டபுளா இருக்கு சர், நான் அப்படி தான் சர் கூப்பிடுவேன் சர்…” என்று வார்த்தைக்கு வார்த்தை ‘சார்’களை கணக்கின்றி சிதறவிட்டவளை வெட்டவா? குத்தவா? என்பதைப் போல முறைத்தான்.

“இப்ப சொல்லுங்க சர், நைட்டுக்கு என்ன டின்னர் சொல்லட்டும் சா…!” அவள் இதழ்களுக்கான தண்டனையை தவறாமல் நிறைவேற்றி இருந்தான் பிடிவாதக்கார கணவனாய்.

மென்மையில் தோய்த்தெடுத்த முரட்டுதனமான இதழணைப்பு!

நீள பிரிவுக்கு பிறகான இணைவில் மென்மை காதல் எல்லையை கடந்திருந்தது!

அவனின் இத்தனை வேகத்தில் காவ்யா திணறி துடித்து போனாள். அவன் விடுவித்தபோது அவன் மார்போடே தொய்ந்து விட்டாள்.

“ஆர் யூ ஓகே பேபி?” என்று அவள் தலை வருடியவன், “இதால தான் விலகி போனேன், வேணும்னே என்னை உசுப்பேத்தி விடாத கவி” என்று அவளை கைகளை ஏந்தி கட்டிலில் கிடத்தி விட்டு நகர, அவன் சட்டையை பற்றி கொண்டவள், “நிஜமா நீ ரொம்ப மோசம் விபு! சரியான முரடன்” என்று தவிப்போடு பட்டம் தந்தாள்.

“என்னை என்ன செய்ய சொல்ற, வருச கணக்கா காஞ்சி கிடக்கேன் டீ” என்று அவள் மூக்கோடு மூக்கு உரசி விலக முயன்றவன் அவளின் இழுப்பில் அவள் மீதே சரிந்தான்.

“நமக்கு லைஃப் லாங் இருக்கு, இப்ப எந்த அவசரமும் தேவையில்ல கவி, முதல்ல நீ உடம்பு தேறி வா” என்று நிதானமாக சொல்ல,

“நான் சரியாகிட்டேன் விபு, ஸ்டாராங் ஆகிட்டேன்” என்றாள் தீவிரமாக.

“ஆமா நம்பிட்டேன், ஃபர்ஸ்ட் நைட்ல மயங்கி தொலைச்ச வீரி தான நீ” என்று கேலி பேசியவன் வாயை பொத்தியவள், “ஷு அதெல்லாம் நீ சொல்லக் கூடாது” என்று கண்களால் உருட்டி மிரட்ட, விபி வாய்விட்டே சிரித்து விட்டான்.

“சிரிச்சு தொலைக்காத டா, இப்பெல்லாம் உனக்கு என்னை பிடிக்காம போச்சோன்னு தோணுது, கஷ்டமா இருக்கு” என்று அவள் முணுமுணுக்க,

தன் அருகாமைக்காய் ஏங்கும் தன்னவளின் காதல் ஏக்கம் இவனையும் ஏங்கச் செய்வதாய்.

“ஆமாண்டி உன்ன எனக்கு பிடிக்காம தான் போச்சு போடி” என்று அவளின் காதோரம் கிசுகிசுத்து அவளை தன்னோடு இறுக்கி கொண்டான்.

“நீ எதுக்கும் பயப்பட வேணாம் விபு, நான் டாக்டர் கிட்ட இதைப்பத்தி கேட்டேன், அவங்க ஓகே சொன்னாங்க” என்று வெட்கம் இழையோட சொன்னவளை கடிக்கவா? விழுங்கவா? என்று அவன் பார்வை கேட்க,

“அதே டாக்டர் தான் இன்னும் கொஞ்ச நாளைக்கு உனக்கு அதிகமான பிரஷர் தர எதுவும் நெருங்காம பார்த்துக்க சொன்னார்” என்று நிதானமாக சொன்னவனை காட்டமாக முறைத்து வைத்தாள்.

“இப்பெல்லாம் நீ ரொம்ப ரொம்ப நல்லவனா மாறிட்டு வர, இதெல்லாம் சரியில்ல!” என்று காவ்யா மிரட்ட,

“நீயும் தான் இப்பெல்லாம் கெட்ட பொண்ணா மாறிட்டு வர்ற டீ” என்றான் அவன்.

“பின்ன விபீஸ்வர் பொண்டாட்டி கெட்ட பொண்ணா தான் இருக்கணுமாம்” காவ்யா அலட்டலாய் சொல்ல,

“ஆஹான் காவ்யா புருசன்னா நல்ல பையனா தான் இருக்கணுமாம்!” என்று இவனும் அசறாமல் சொல்ல,

“எனக்கு இந்த நல்ல விபு வேணாம், அந்த கெட்ட விபு தான் வேணும்” என்று காவ்யாவும் சிணுங்களாக வார்த்தையாட,

“அப்பவும் இப்பவும் உனக்கு சொல்லி புரியவைக்க முடியாதடீ…” என்றவன் அதன்பிறகு எதுவும் சொல்லவில்லை! அவளையும் கேட்க விட வில்லை!

காத்திருப்பில் வைத்திருந்த அவர்களின் இன்பத் தருணங்களை எல்லாம் சுகிக்க தொடங்கி இருந்தனர் இருவரும் ஒருவராய்.

காதலில் உருகி!
கனிவில் பெருகி!
காத்திருப்பின் எல்லைத் தொட்டு!
தீண்டலின் எல்லை உடைத்து!
தேடலின் எல்லை விரித்து!

# # # # # முற்றும் # # # # #

error: Content is protected !!