UYIRODU VILAIYADU 18
UYIRODU VILAIYADU 18
(துப்பாக்கி கட்டுப்பாடு, மாநில மேலாதிக்கம் ஆகிய இரண்டு முக்கிய காரணங்களால் இந்தியாவில், PMC என்ற தனியார் ராணுவம்/ mercenaries அதிகார்வ பூர்வமாய் இல்லை.
2022 ஆம் ஆண்டில் சுமார் 3 மில்லியனுக்கும் அதிகமானவர்களை வேலைக்கு அமர்த்தும் திறனுள்ள, முன்னாள் படைவீரர்களால், மனிதவளம் ஆதிக்கம் செலுத்தும், வளர்ந்து வரும் தொழில், செக்யூரிட்டி நிறுவனங்கள்.
உலகெங்கிலும் தனியார் இராணுவ நிறுவனங்கள், தங்கள் நாட்டின் அரசாங்கத்தால் வழங்கப்படும் சுதந்திரத்தின் காரணமாக உருவாகியுள்ளன.
பாதுகாப்பு சக்திகளுடன் தொடர்புடைய பணிகளை மேற்கொள்ளும் திறன் கொண்ட ஊழியர்களின் தனித்துவமான சக்தியை உருவாக்குவது, பயிற்சி வளங்கள், வசதிகள், வருமானம், உயர்மட்ட ஆயுதங்களைக் கூடுதலாக வழங்குகின்றன. இவையெல்லாம் சேர்ந்து, PMC, ‘வாடகைக்கு ஒரு வல்லரசாக’ பாதுக்காப்பு துறை சாம்ராஜ்யங்களை ஆள்கின்றன.
இந்தியாவின் தனியார் துறையில் துப்பாக்கி ஏந்தியவர்களைப் பற்றி நினைக்கும்போது, வங்கிகள், தளவாடங்கள் மற்றும் மலையக இடங்களின் பாதுகாப்பிற்காகக் காவலர்கள் மிகவும், ‘மிதமான’ ஆயுதங்களைக் கொண்டு பயன்படுத்துவதை நம்மால் காண முடியும். எல்லாமே அவுட்டேட்டட் ஆயுதங்கள்.
இளமையான, கட்டுக்கோப்பான உடல் அமைப்பு கொண்ட ராணுவ வீரனாய் இவர்கள் இருப்பதில்லை.
ஒரு தந்திரோபாய ஆயுதக் களஞ்சியத்துடன் கூடிய ஒரு முழுமையான அலகு உருவம் நமது கண் முன்னே கிளிக் ஆகாது. ஏனெனில் முடக்கும் யதார்த்தம் மிகவும் தெளிவாகத் தெரிகிறது.
இந்தியாவின் முதல் அறியப்பட்ட துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டம், 1962 அதன் காலனித்துவ சகாப்தத்திற்கு முந்தியுள்ளது. இவை இந்தியாவில் துப்பாக்கிகள் வைத்திருப்பதையும் விநியோகிப்பதையும் கட்டுப்படுத்துகின்றன.
இந்தியாவில் துப்பாக்கிகள் வாங்குவது மளிகை சாமான்களை வாங்குவது அவ்வளவு எளிதானது அல்ல. ஆனால், வெளிநாடுகளில் வால்மார்ட் போன்ற நிறுவனங்களில், துப்பாக்கி விற்கும் கடைகளைத் தெருவிற்கு ஒன்றாக நம்மால் காண முடியும்.
இந்தியாவில் ஒரு குடிமகன் தற்காப்பு, பயிர் பாதுகாப்பு, விளையாட்டு, படப்பிடிப்பு பயிற்சியாளர் என்ற கூற்றுகளின் கீழ் துப்பாக்கியை வைத்திருக்க முடியும் என்று சட்டம் கூறுகிறது.
கிடைக்கக்கூடிய துப்பாக்கிகளின் தேர்வில் இரண்டு கைத்துப்பாக்கிகள், ஷாட்கன்கள், போல்ட் அதிரடி துப்பாக்கிகள் ஆகியவை மட்டுமே. அவை இந்திய ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலையால் தயாரிக்கப்படுகின்றன. சட்ட அமலாக்க மற்றும் பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்படும் கனரக ஆயுதங்கள் குடிமக்களின் அணுகலுக்கு அப்பாற்பட்டவை.
எனவே ஆட்டோமேட்டிக் ஆயுதங்கள் இல்லாத PMC என்பது எவ்வாறு இந்தியாவில் சாத்தியமாகும்?)
அத்தியாயம் 18
‘சீனியில் செய்த கடல்!
வெள்ளை தங்கத்தில்
செய்த உடல்!…
நான் முத்தம் தின்பவள்!
ஒரு முரட்டு பூ இவள்!
நான் தினமும் தோற்பவள்
அந்த ஆடை சண்டையில்!…
இனி குறையட்டும் திருவிளக்கு
நீ இடம் சுட்டி
பொருள் விளக்கு!…
அட கடவுளை அடையும் வழியில்,
என் பேர் எழுதிருக்கு…’ என்ற பாட்டுக்கு, மழையில், அரை குறை ஆடையுடன், நிஷா ஆடிய நடனத்தை நீங்கள் பார்த்து, உங்கள் நெஞ்சம் அதிர்ந்து இருக்கவில்லை என்றால், நிச்சயம் நீங்கள் வேற்றுகிரக வாசி தான்.
வருடங்கள் பல கடந்த பின்னரும், you tubeல் அதிகளவு பார்க்கப்பட்டு கொண்டிருக்கும் வீடியோ என்ற கின்னஸ் சாதனை புரிந்து கொண்டிருப்பது இந்த மழையாட்டமே!
ஆணோ, பெண்ணோ நிஷாவின் அந்த மழை ஆட்டத்திற்கு நிச்சயம் உங்கள் இதயம் துடிப்பதை நிறுத்தியிருக்கும்.
வெளிநாட்டினர் உட்பட, ‘we love நிஷா’ என்று டெடிகேஷன் வீடியோ போடுபவர்கள் அதிகம்.
அந்தக் காலத்தில், ‘சில்க் ஸ்மிதா’ ஒரு பாடலுக்கு ஆடினால் கூடப் படம் ஹிட் என்ற ட்ரெண்ட் இருந்தது. சில்க் ஸ்மிதா என்ற பெண் ஆடியதற்காகவே ஓடிய படங்கள் உண்டு. காலம் கடந்த பின்னும் அந்த மாயையிலிருந்து மீள்வதோ, அந்த வெற்றிடத்தை நிரப்புவதோ யாராலுமே முடியாத ஒன்று.
அதற்கு அடுத்த நிலையில் இருப்பவள் நிஷா.
மணிரத்தினத்தின், ‘குரு’ படத்தில், அந்தப் பாட்டிற்கு நடனம் ஆடிய மல்லிகா ஷெராவத்தோ, இல்லை அதன் பிறகு அந்தப் பாடலுக்கு ஆடி விட்ட, இனி மேல் யாராவது ஆட என்று வந்தாலும் கூட, உலக மக்களின் மனதில் நிஷாவின் இந்த மழையாட்டம் மட்டுமே நினைவில் இருக்கும்.
நிஷா அழகி!
பேரழகி!.
இது நாம் தினமும் பார்த்து, பழகும் பெணகளிடம் உள்ளது போன்ற அழகு கிடையாது.
மர்லின் மன்றோவிடம் இருந்த ஆகர்சனம், சில்க் ஸ்மிதாவிடம் இருந்த மனதை கிறங்கடிக்க செய்யும் கவர்ச்சி, அஞ்செலினா ஜோலியின் அதரங்கள் என்ற வகையான அழகு.
‘மதி மோகி, மதி மயக்கி’ என்று சொல்லப்படும் போதை வஸ்துக்களை உள்ளுக்குள் எடுத்துக் கொண்டால் தான், மதி மயங்கும். ஆனால், நிஷாவின் வனப்பான உடலும், those intoxicating eyes!… Those luscious lips!…. காண்பவரை மதி மயங்கச் செய்து விடும்.
இதற்கும் நிஷா சின்னத் திரை, வெள்ளி திரை நட்சத்திரம் கிடையாது.
மாடல்!…
பட்டுப் புடவை, வீட்டு உபயோக பொருளுக்கு மாடல் என்று நினைத்தால் ஏமாந்து விடுவீர்கள். எல்லாமே exotic வகை மாடலிங்.
பிகினி எனப்படும் நீச்சல் உடைகள், மர்லின் மன்ரோவின் பறக்கும் வெள்ளை உடை, நீரிலிருந்து ஆண்கள் மனதை கொள்ளையடிக்க வந்த கடல் கன்னியோ என்னும் வண்ணம் நீரில் முழுகி எழும் திராட்சை தோட்டம், அணிகலனே ஆடை என்று இவளின் போட்டோஷூட் exotic வகையாக இருக்கும்.
பரண் மேல், கட்டிலுக்கு அடியில், கப்போர்டுக்கு அடியில் என்று ஒளித்து வைக்கப்படும் பத்திரிக்கையின் நடுப்பக்கத்தில் சிருங்கார மொழி பேசும் கனவு காரிகையாய், மாடலிங் உலகை ஆண்டு கொண்டிருப்பவள். கவர்ச்சி சூறாவளி.
’நிஷா!… நிஷா!….’ என்று இவள் பின்னால் பைத்தியமாய் அலைபவர்கள் அதிகம். Hearthrob of people.
சம்யுக்தாவின் அழகு குத்து விளக்குபோல் மனதை குளிர்விக்கும் தன்மை கொண்டது என்றால் நிஷாவின் அழகு தீப்பந்தம் போல் பற்றி எரியும், பார்ப்பவர்களை உணர்ச்சிகளால் பற்றி எரிய வைக்கும் ரகம்.
அபின், கஞ்சாவிற்கே சவால் விடும் அளவுக்குப் பார்ப்பவர் மனதை மயக்கும் மோகினி!
ஐந்தடி ஏழு அங்குல உயரத்தில், ஐம்பத்தியாறு கிலோ எடையில், இருக்கும் அழகிய புதைகுழி. அப்படியொரு கந்தக தன்மை நிஷாவிடம்.
கவர்ச்சி உடை மாடல் மட்டுமில்லை, நிஷா ஜர்னலிஸ்ட்டும் கூட.
ஒரு பக்கம் தன் உடல், கவர்ச்சி, வசீகரத்தை கொண்டு மாடல் என்ற உலகின், ‘முடிசூடா ராணி’ என்றால் இன்னொரு பக்கம், பத்திரிகை ஒளிபரப்பு/broadcast journalism துறையில் உள்ள பெண் சுறா.
அப்படியொரு முரண்களின் ராணி.
வரைமுறைக்குள் அடங்காத, அடக்க முடியாத strong personality / வலுவான ஆளுமை கொண்ட பெண்.
புத்திசாலி, நன்கு படித்தவள், உலக ஞானமுள்ளவள்.
‘பார்பி பொம்மை, ஐட்டம் கேர்ள்’ என்று எண்ணி விட முடியாத அளவுக்கு, கூறிய அறிவும், சிந்தனை திறனும் கொண்ட சமூகம் போடும் எல்லைகளையும், வரைமுறைகளைத் தகர்க்கும் பெண்.
சின்னத் திரையும், வெள்ளி திரை உலகமான ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் கோடிகோடியாக ஒரு பாட்டிற்கு ஒப்பந்தமாகக் கொட்டி கொடுக்கக் காத்திருக்க,
“சினிமா துறை ஒரு இல்லுசன். மாயை. அங்கு எதுவுமே உண்மை இல்லை. லட்சம் உழைப்பாளர்கள் தோள் கொடுத்துத் தூக்கி, அத்தனை பேரின் உழைப்பிற்கு ஒருத்தரை ஹீரோ, கடவுள், தலைவன், உலகை ரட்சிக்க வந்தவன் என்பதை ஏற்று கொள்ள முடியாது.
இவர்களைவிட உலகில் தினம் தினம் தன் குடும்பத்திற்காக உழைக்கும் நிஜ ஹீரோக்களைப் பேட்டியெடுப்பதே எனக்குப் போதும். நமது வீட்டில் இருக்கும் அப்பா, சகோதரன் இந்த வீரர்களின் சாதனைகளை வெளிக்கொணரும் ஆத்ம திருப்தியை விட நீங்கள் கொட்டி கொடுக்கும் பணம் கொடுத்து விடாது.
போலி நிஜ வைரத்தைவிடப் பிரகாசிக்கும் தான். ஆனால் நிஜத்தின் மதிப்பு அது தனி. லட்சம் கதா நாயகர்கள் வருவார்கள் போவார்கள். ஆனால், இவர்கள் அந்தந்த கதைக்கு மட்டுமே நாயகர்கள். எனக்கு நிஜம் போதும்.” என்ற ஸ்டேட்மென்ட் கொடுத்து, புயலை கிளப்பிய பெண் நிஷா.
ஏறக்குறைய நடிக்க வரவில்லை என்றால் என்னவாகி இருப்பீர்கள் என்று கேட்கப் பட்டத்திற்கு, “நக்சலைட் ஆகி இருப்பேன்” என்று மிகத் தைரியமாக அறிக்கை விட்ட சில்க் ஸ்மிதாவின் அறிக்கைபோல் புயல் களப்பிய இன்டெர்வியூ நிஷாவினுடையது.
“Don’t judge me for my looks, by my size, by my profession until you know my true self.” / எனது உண்மையான சுயத்தை நீங்கள் அறிந்து கொள்ளும் வரை, எனது தொழிலைக் கொண்டு, எனது தோற்றத்திற்காக, என் அங்கத்தைக் கொண்டு என்னைத் தீர்மானிக்க வேண்டாம்.” என்ற நிஷாவின் ஸ்டேட்மென்ட் மக்கள் மத்தியில் திகைப்பை உண்டாக்கியது என்னவோ உண்மை.
வீட்டை விட்டுப் படிக்கச், வேலை செய்ய என்று தினம் தினம் வாசல் தாண்டி, நூற்றுக்கணக்கில் வல்லூறுகள் வட்டமிடும், ஆயிரம் மிருங்கங்கள் உரசி பார்த்து, வேட்டையாடத் துடிக்கும் நிஜ யுத்த களத்தில், வாழ்க்கை என்னும் போராட்டத்தில் வருவதையெல்லாம் எதிர் கொள்ள பெண்களுக்கு இருக்க வேண்டிய அந்தத் தன்னம்பிக்கை, மன துணிவு அதிக அளவில் வெளிப்படுத்தும் பெண் நிஷா.
தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு நிஷாவின் இந்த மன துணிவு, தன்னம்பிக்கை, திமிர், கர்வம், அகங்காரம், போல் தோன்றலாம். இது ஒவ்வொரு பெண்ணிடமும் உள்ள சுய கெளரவம், SELF RESPECT, என்பது அவளின் தோழமைகளுக்கே தெரியும்.
எத்தனை, ‘சொல் என்னும் கற்கள், பாறைபோல்’ மேல் தூக்கி எறியப்பட்டாலும், கீழ்த்தரமான பட்ட பெயர்கள் கொடுக்கப்பட்டாலும், அதையெல்லாம் ஒரு புன்னகையுடன் கடந்து விடும் அந்தத் துணிச்சல், ‘டோன்ட் கேர் பாலிசி’ என்று இருக்கும் பெண் நிஷா.
முன்னே பின்னே அறியாதவர்களைப் பற்றி, அவர் தொழில், தோற்றம் வைத்து, ‘இவர் இப்படி தான்’ என்று சுட்டி காட்டி பேசுவது, கமெண்ட் அடிப்பது, கீழ் தரமாய் பதிவு போடுவது வெகுசுலபமாய் நடக்கும் ஒன்று. இன்றைய சமூக வலை தளங்களைப் பற்றிக் கேட்கவும் வேண்டாம். MORAL, சோசியல் RESPONSIBITY போன்றவை எல்லாம் காற்றில் பறக்க விட்டுக் கொண்டிருக்கும் மாய உலகம்.
“நீ, நானாக இல்லாதபோது என்னைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?” என்று அப்படி கமெண்ட் பேசிய ஒருவனை, ஒரு நாள் முழுக்க தன்னை போல் வாழ வைத்து, அவன், ‘சத்தியமாய் என்னால் முடியவில்லை’ என்று ஓட வைத்து, அதை வீடியோ எடுத்து YOU TUBEல் பதிவிட்டு, NEXT WHO?… என்று வெகுநக்கலாக ஒற்றை வார்த்தை கேட்டு, “என்னைப் பற்றிக் கமெண்ட் அடிக்க அடுத்து யார் வரீங்க?” என்று திமிருக்கு ட்ரெண்ட் செட் செய்தவள் நிஷா.
தனக்கு இருக்கும் fandom, நட்சத்திர அந்தஸ்து கொண்டு கோடிகளில் புரள இருக்கும் வாய்ப்பை எல்லாம் தூசு போல் தட்டி, கடந்து கொண்டு இருப்பவள்.
பாம்பென்று அடிக்கவும் முடியாது. பழுதென்று கடக்கவும் முடியாது. பிடிக்கிறது என்று சொல்லவும் முடியாது, வெறுக்கவும் முடியாது என்ற விதமான கேரக்டர்.
நிஷா தேர்ந்தெடுத்த துறைகளும் அப்படிப்பட்டது தான்.
ஒன்று உடல் அழகை அடிப்படையாகக் கொண்டது. இன்னொன்று மூளைக்கு வேலை கொடுக்கும் தொழில் என்று ரெண்டு களமும் வேறுப்பட்டவை.
‘மாடலிங்க் தானே அதில் என்ன இருக்கு!… ‘ என்று கடந்து செல்பவர்கள் அறிவதில்லை, சகிப்புத்தன்மை, ஆளுமை, பொறுமை, கடின உழைப்பு, தொடர்புத் திறன், தோற்றம், உடல் வகை, உடல் மொழி, உடை, ஃபேஷன் உணர்வு, Poise, A thick skin போன்றவை மாடலிங் தொழிலுக்குத் தேவையானவை என்பதை.
ஒரு சிறந்த போட்டோ வர, பல மனிதர்களின், பல மணி நேர உழைப்பு தேவை.
பருவர்/Brewer என்பவர் சொன்னது போல், ஊடக துறையில் எழுதும் திறன், ஆர்வம், விமர்சன சிந்தனை, செய்திக்கான பசி, தளத்தைப் பொருட்படுத்தாமல் ஒரு நல்ல கதையைச் மக்களிடம் கொண்டு செல்ல விரும்பும் கொழுந்து விட்டெரியும் ஆசை/burning desire, துல்லியம், நேர்மை, சமநிலை, ஊடக நெறிமுறைகளுக்கு அர்ப்பணிப்பு, presence of mind போன்றவை தேவை.
பத்திரிகை துறையில் உள்ள,
Investigative journalism(புலனாய்வு),
Watch dog journalism (நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகள் போன்ற சமூக சக்திகளிடமிருந்து சட்டவிரோத நடவடிக்கை அல்லது திறமையின்மைக்கு எதிராகச் சமூகத்தைப் பாதுகாப்பது),
Opinion journalism(புறநிலை உண்மைகளைவிட அகநிலை கருத்துக்களைப் பயன்படுத்தி ஒரு தலைப்பில் கருத்துப் அறிக்கை, தங்கள் சொந்த எண்ணங்கள் மற்றும் சார்புகளை உள்ளடக்கிய கதைகளைத் தங்கள் கண்ணோட்டத்தில் தெரிவிப்பது)
Online journalism(ஆன்லைன் செய்தித்தாள் டிஜிட்டல் செய்தித்தாள்கள், வலைப்பதிவுகள், சமூக ஊடகங்கள் போன்ற இணைய ஊடகங்கள்மூலம் உண்மைகளை அறிக்கையிடுகிறது) என்று எல்லா துறைகளிலும் புகுந்து விளையாடும் செய்தியாளர்.
ஹிந்தி, ஆங்கில செய்திகளைப் பார்க்கும் பழக்கம் இருந்தால் நிச்சயம் நிஷாவை உங்களுக்குத் தெரிந்து இருக்கும். யுத்த செய்திகளைப் படம் பிடிப்பதில், செய்திகளைக் கூட ஈர்க்கும் வண்ணம் கொடுப்பதில் நிஷாவை அடித்துக் கொள்ளவே முடியாது.
ஆங்கிலத்தை தாய் மொழியாகக் கொண்டவர்கள் கூட, அத்தனை நளினத்துடன் பேச முடியுமா என்ற சந்தேகம் எழும் வண்ணம் இருந்தது நிஷாவின் குரல் வளம், மொழியைக் கையாண்ட பாங்கு, உடல் மொழி.
எட்டு மொழிகள் தெரியும். இன்னும் மூன்றை கற்று கொண்டு இருக்கிறாள். எத்தனை மணி நேரம் ஆனாலும் ஒரு தலைப்பு கொடுத்தால், அதைச் சுவைபட டிபேட் செய்வதில் நிஷாவை அடித்துக் கொள்ள ஆளே இல்லை.
நிஷா செய்தியைப் படிக்கிறாளா, இல்லை கேட்பவரின் காதருகே ஏதேனும் மந்திரத்தை உச்சரித்து வசியம் செய்து கொண்டிருக்கிறாளா என்ற சந்தேகம் நிச்சயம் வந்து விடும்.
‘Got hooked, Mesmerising’ என்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிய வேண்டும் என்றால், நிஷாவின் பேட்டியைப் பார்த்தால் போதும்.
“ஹாய் ஹலோ வெல்கம்… இது நீங்கள் விரும்பிப் பார்க்கும், ‘ரியல் ஹீரோஸ் ஆப் இந்தியா’ ஷோ. நான் உங்க நிஷா.” என்று சொல்லிப் புன்னகையை பரிசளிக்க, ‘உங்க நிஷா’ என்ற ஹஸ்கி வாய்ஸில் சொல்லப்படும் அந்தச் சொற்களிலேயே கவிழ்ந்து விடும் உள்ளம், அவள் புன்னகையில் சரணாகதி அடைந்து விடும்.
நிஷாவின் பேட்டிகளைப் பார்ப்பவர்கள் விடும் பெருமூச்சுகளை இணைத்தால், அதன் முன் சூறாவளி கூடத் தோற்று விடுமாம்.
அந்தப் பெண் புயல், அப்பொழுது இந்திய எல்லை புற கிராமங்களைப் பற்றிய டாக்குமெண்டரி ஷூட்டிங்கில் இருந்தது.
“இந்தியா!
பெயரைக் கேட்டாலே சும்மா நச்சுன்னு அதிருதில்லை
பெயரைச் சொல்லும் போதே தேகம், நாடி நரம்பில் எல்லாம் ஒரு சிலிர்ப்பு ஓடுகிறது இல்லையா?
எத்தனை உன்னதமான பூமி!… தாய் மண் என்று சொல்லும் போதே தோன்றும் கர்வத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியுமா என்ன?
ராஜாக்கள் காலம் தொட்டு, பல்வேறு படையெடுப்புகளை பார்த்து, வென்று, இன்றும் அந்தக் கர்வம் அழியாமல் நிமிர்ந்து நிற்கும் உன்னத நாடு.
அழிக்க முயன்றாலும், அழியாத பீனிக்ஸ் பறவைபோல் சாம்பலிலிருந்து உயிர்த்து எழும் நாடு.
பாசத்துடன் வந்தால் அன்பையும், பகையுடன் வந்தால் எதிரிகளின் ரத்தத்தையும் சிந்த வைக்கும் துணிச்சல் கொண்ட ஆண் மக்களை, வீர மங்கைகளை கொண்ட வல்லரசு.
நேரிடையான போரால் இந்த நாட்டை வெல்ல முடியாது என்று ஜாதி, மதம், இனம், மொழி என்று ஆயிரம் முகமூடிகளை அணிந்து கொண்டு, தங்கள் சுயநலத்திற்காக நாட்டைக் காட்டி கொடுக்கவும் தயங்காத சில விஷ கிருமிகளால் எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்ற அரக்கன் மூலமாகவும், உள் நாட்டு கலவரம் மூலமாகவும் அடிபணிய வைக்க நடக்கும் எல்லா முயற்சிகளையும் வென்று கொண்டிருக்கும் நாடு.
15,106.7 கிலோமீட்டர் நிலப்பரப்பும், தீவுப் பிரதேசங்கள் உட்பட 7,516 கிலோமீட்டர் கடற்கரை நீளம் கொண்டது நமது இந்திய கண்டம்.
பூட்டான், பங்களாதேஷ், சீனா, ஆப்கானிஸ்தான், மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் உள்ளிட்ட ஏழு நாடுகளுடன் நில எல்லைகளையும், இலங்கை, மாலத்தீவு மற்றும் இந்தோனேசியாவுடன் கடல் எல்லைகளையும் இந்தியா பகிர்ந்து கொண்டுள்ளது.
‘எதுக்கு இப்பொழுது இந்தியாவின் எல்லை கோட்டை பற்றிக் கிளாஸ் எடுக்கிறே நிஷா?… இதையெல்லாம் நாங்க ஸ்கூலில் பூகோளவியல் வகுப்பிலேயே படிச்சுட்டோமே! … இப்போ இதை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன, உனக்குப் பேச வேறு விஷயமே கிடைக்கலையா?…’ என்றால், இந்த எல்லை கோடுகள் என்பது, ‘ஆயிரம் எரிமலைகள் ஒன்றாய் குமுறும் இடத்தைப் போல் ஆபத்தானவை’ என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டும் இல்லையா?
நாட்டிற்குள் உங்கள் குடும்பத்தோடு நீங்கள் அமைதியாக, சந்தோசமாக இருக்க வேண்டும் என்றால் இந்த எல்லை கோடுகளை, அங்கு வசிக்கும் மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றி அறிந்தால் தான், எத்தனை கொடுத்து வைத்தவர்கள் நாம் என்பது புரியும்.
வாழ்வை, ‘taken for granted’ என்று வந்தோம், பிறந்தோம் வேளை வந்தால் போய்ச் சேருகிறோம்’ என்ற சுலபமாய் எடுத்துக் கொள்ளும் எண்ணம் மாறும்.
இந்தச் சர்வதேச எல்லை கோடுகளுக்கு அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் தான் நாம் இப்பொழுது நிற்கிறோம்.
‘sleeping villages’ என்று சொல்லப்படும், ‘உறங்கும் இந்திய கிராமங்களில்’ இதுவும் ஒன்று.
எந்தவித வசதியும் இல்லாமல், வளர்ச்சி என்பதே இல்லாமல் இப்படி கிராமங்கள் இருப்பதே அரசாங்கமும் அதன் அதிகாரிகளும் மறந்து விட்டார்களோ என்று எண்ண தூண்டும் வகையில் உறைந்து போன புகைப்படும் போல் காட்சி அளித்துக் கொண்டு இருப்பதை நீங்களே பார்க்கலாம்.
இவையெல்லாம் சரித்திர பிரசித்தி பெற்ற இடங்களாய் ஒரு காலத்தில் இருந்தவை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒட்டக வணிகர்கள் பண்டமாற்றம் செய்த வளமான பகுதி இது.
நகரத்தின் பாதுகாப்பிற்காக, ராஜாக்கள் காலத்தில் அரபு காவலர்களுக்காகக் கட்டப்பட்ட புங்காக்கள்/bhungas (பாரம்பரிய குச்சே வீடு) இங்கே இருப்பதை நீங்கள் பார்க்கலாம். செங்கற்களால் கட்டப்பட்டவை. அதன் மீது மணல் பூச்சுகள் இருக்கும்.
ஆனால், இந்த இடத்திற்கு அப்பால் உள்ள நிலம் விவசாயத்திற்கு உகந்தது அல்ல. மண்ணின் மேலே உப்பு அடுக்கு உள்ளது. இது இந்தக் கிராமத்தைத் தாண்டிய முழு பகுதிக்கும் ஒரு வெள்ளை நிறத்தை அளிக்கிறது.
ஒரு பக்கம் தடை இல்லாமல் ஓடும் சட்லெஜ் நதி. இன்னொரு புறம் ஆற்றின் திசை மாறியதால் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலம்.
பாகிஸ்தானால் மூன்று பக்கங்களிலும், நான்காவது இடத்தில் சட்லெஜ் நதியும் சூழப்பட்டுள்ளது, 1,500 மக்கள் வசிக்கும் அந்தக் கிராமத்திற்குள் நுழைய இரண்டு வழிகள் உள்ளன.
ஒன்று ஆற்றின் வழியாக அல்லது உயர் பாதுகாப்பு பாலத்தைக் கடக்க வேண்டும். கிராமத்தின் நுழைவாயிலில் ஒரு எல்லை பாதுக்காப்பு படையினரின் கேம்ப் ஒன்று உள்ளது. அங்கு ஒவ்வொரு பார்வையாளரும் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு கேள்வி கேட்கப்படுகிறார்கள்.
இந்த எல்லையில் ஏற்கனவே நான்கு முறை தாக்குதல் பாகிஸ்தான் நடத்தி இருக்க இருக்க மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. கூப்பிடும் தொலைவில் பாகிஸ்தான் நாடு இருக்க, வெறும் இரும்பு வேலிகள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தடுப்பதில்லை.
(இரும்பு வேலி மட்டுமே இந்தியா, பாகிஸ்தான் நாட்டுக்கு நடுவே இருப்பது. )
எப்பொழுது மீண்டும் அந்தத் தாக்குதல் நேருமோ, எப்பொழுது மீண்டும் அந்த இடத்தை விட்டு வெளியேற நேரிடுமோ என்று மக்கள் தங்கள் இல்லங்களை, அந்தக் கிராமத்தைப் பேணுவதில் அக்கறை காட்டுவதில்லை. இருபத்தி நாலு மணி நேரமும் ஒவ்வொரு நாலும், ஒவ்வொரு நொடியும் எந்தப் பக்கம் இருந்து துப்பாக்கி முழங்குமோ, எந்தப் பக்கம் இருந்து ராக்கெட் லாஞ்சர் வந்து விழுமோ என்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழும் இந்த மக்களைப் பற்றி நாட்டுக்குள் மிகப் பத்திரமாய் இருக்கும் நீங்கள் அக்கறை கொள்ள போகிறீர்களா என்ன?
‘தானை தலைவன், அஞ்சா நெஞ்சன்’ என்று யார் யாருக்கோ விருதுகளைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள்.
இந்தக் கிராம மக்கள் தாயின் கருவில் உருவான அந்த நொடியில் இருந்தே நிம்மதியாக இருந்தது கூட இல்லையென்றாலும், இந்தக் குண்டு மழைகளுக்கு நடுவே கூட மன தைரியத்துடன் தங்கள் இடத்தை விட்டுக் கொடுக்காமல், ‘எங்கள் இந்திய மண்’ என்று துணிவுடன் வாழும் இவர்கள் வீரர்களா இல்லை போலி அரசியல்வாதிகளும், சினிமா நடிகர்களும் உண்மையான வீரர்களா?
இங்கு ரியல் எஸ்டேட் துறை என்ற ஒன்றே கிடையாது. எந்த நேரம் எங்கிருந்து ராக்கெட் லாஞ்சர் பாயும், எங்கே குண்டு வெடிக்கும் என்று சொல்ல முடியாத, ‘highly volatile’ கிராமம் இது.
என்று பொது மக்களின் வீடுகளைத் துளைத்த துப்பாக்கி குண்டுகளையும், தெருவில் கிடக்கும் விளையாட்டுப் பொம்மைகள்போல், மக்கள் எடுத்துக் காட்டும் ராக்கெட் உதிரி பாகங்களையும் மக்கள் சுட்டி காட்ட, பற்றி எறிந்த வீடுகளும், ஓட்டைக்குள் வீடு போன்ற காட்சிகள் பார்க்கும் மக்களின் மனதை அசைத்துப் பார்க்கவே செய்தது.
விவசாயம் பிரதான தொழில். அதுவும் அனைத்து விவசாயங்களும் காலைப் பத்து மணி முதல் மாலை நான்கு மணிவரை கடுமையான பி.எஸ்.எஃப் பாதுகாப்பின் கீழ் செய்யப்படுகின்றன. இவர்கள் வாழ்வாதாரம் என்பது துப்பாக்கி முனையில் தான் இருக்கிறது என்பது வருந்தத் தக்க விஷயம்.
‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று தமிழ்நாட்டை சேர்ந்த வள்ளலார் கூறியிருக்கிறார்.
ஒரு தாயின் கருவறைக்கு சமமாய் புனிதமானது விவசாய நிலம். பெண் கூட ஒற்றை குழந்தையைத் தான் பெறுகிறாள். ஆனால், கோடிக்கணக்கான பிள்ளைகளைச் சுமக்கும் கருவறை, விவசாய நிலம். ஒவ்வொரு பயிரும் அன்னை பூமியின் குழந்தை தானே!
ஒவ்வொரு ஆணும் தாயாக மாறும் இடம் ரெண்டு.
ஒன்று தன் குழந்தையைக் கையில் குழந்தையை ஏந்தும் சமயம். இது எல்லோராலும் செய்யக்கூடிய ஒன்று.
ஆனால், நிஜ தாயாய் உலகில் வாழும் ஆண்மகன்களுக்கு, ‘விவசாயி’ என்று பெயர். விவசாயி என்பவர் அன்னையாய் மாறி, உலகின் பசியையே போக்கும் அதி உன்னத தொழில்.
குழந்தையைப் பிரசவிக்கும்போது ஒவ்வொரு தாயும் புன்னகையுடன், மனத்துணிவுடன் ஏற்று கொள்ளும் இன்னல்களை, வலியை, அதே தியாகதிற்கு ஈடானது ஒவ்வொரு விவசாயின் உழைப்பு.
இங்கே வேண்டும் என்றே எல்லை தாண்டிய தீவிரவாதம், அறுவடை சமயத்தில் நடத்தப்படும்போது அத்தனை உழைப்பும் வீணாகப் போவது என்பது ஒவ்வொரு விவசாயிக்கும் பெற்ற மகனையே பலி கொடுப்பது போன்றது தான்.
ஒரு முறை பிள்ளையை இழப்பதே வேதனை என்றால், ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் இதே கதி தான் என்றால் இங்கே விவசாயியின் நிலைமை?
அடிப்படை வசதிகள் கூடக் கிடையாத, ஏதோ வாழ்கிறோம் என்று மரண பயத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இது போன்ற கிராமங்கள் இந்தியாவில் எழுநூறை தாண்டும். இவர்களின் வாழ்க்கை முறை உங்கள் இதயத்தை உலுக்க வில்லை என்றால் மனிதன் என்று சொல்லிக் கொள்ளவே நாம் தகுதியை இழக்கிறோம்.
துப்பாக்கி முனை எப்பொழுது வேண்டும் என்றாலும் குண்டுகளை முழங்கும் என்ற நிலை இருக்கும் அப்படியொரு வாழ்க்கை வாழ்வது நரகம். அதற்குத் தனி மனதைரியம் வேண்டும் தான். இந்த எல்லை புற கிராம மக்கள் தாங்கள் வாழ்வும் இடத்தைக் காலி செய்து கொண்டே வந்தால், ஒவ்வொரு இந்திய எல்லை புறமும் மக்கள் வசிக்கவே தகுதியற்றதாய் மாறத் துவங்கி விடும்.
அது நேராமல் இந்திய எல்லைகளை, அந்த எல்லைகளை இரவு பகல் பாராமல் காக்கும் எல்லை பாதுக்காப்பு படையினர் (BSF border security force) பக்க துணையாய் இருக்கும் இந்தியாவின் நிஜ வீரர்களான இந்திய எல்லைகள் ஒவ்வொன்றிலும் வசிக்கும் கிராம மக்களுக்கு ராயல் சலூட். இப்போ சொல்லுங்கள் யார் உண்மையான ஹீரோ?” என்று நிஷாவின் டாகுமெண்டரி முடிய, அந்தப் பேட்டியை நேரடி ஒளிபரப்பில் பார்த்த இந்திய மக்களின் இதயங்கள் குலுங்கி தான் போனது.
அங்கிருந்த கிராம மக்கள் சிலரின் வீடுகள், அவர்களிடம் பேட்டிகள், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டில் உள்ள துப்பாக்கி, ராக்கெட் துளைத்த ஓட்டைகள் என்று படமாய் மீண்டும் ஓட, பார்ப்பவரின் அடிவயிறு பிசைய ஆரம்பித்தது.
சொகுசாயிருக்கும் தங்கள் வாழ்க்கை முறை, இந்த எல்லை புற கிராம மக்களின் வாழ்க்கை என்று ஒப்பிட்டுப் பார்த்து, கடவுள் தங்களை இது போன்ற தொடர் மரண பயம் கொடுக்காத ஒரு இடத்தில் பிறக்க வைத்ததற்கு நன்றி சொல்லவும் மறக்கவில்லை.
தங்களின் அருகில் அமர்ந்திருந்த தங்கள் குடும்ப உறுப்பினர்களின் கைகளைப் பெருமூச்சுடன் பிடித்துக் கொள்ளவும் மறக்கவில்லை.
நிஷாவின் பேட்டி பேட்டியைத் தடை செய்வது போல் புழுதி காற்று கிளம்ப, அங்குச் சேர்ந்திருந்த கூட்டம் சட்டென்று களைந்து போனது. ஒரு வாரமாய் அங்கே தங்கி இருந்ததில் நிஷாவுக்கும் அவள் வீடியோக்ராபருக்கும் இது பழகிப் போயிருக்க, தங்கள் வேனில் ஏறிக் கதவைச் சாத்தி கொண்டார்கள்.
தலையில் பதிந்திருந்த புழுதி மண்ணை தட்டி விட்ட காமெராமன் ரக்ஷத், “நிஷா!… இந்தக் கிராமத்திற்கு வந்து ஒரு வாரம் ஆச்சு. மண்ணு இருக்கும் சாப்பாட்டையும், எப்பொழுது தோட்டா துளைக்கும் என்று தெரியாத பயத்திலும், செய்ய ஒன்றுமே இல்லாமல் போர் அடிக்கும், ஏதோ பேய் நகரம் போலிருக்கும் இந்த நரகத்தை விட்டு எப்போ போவோம்?…” என்றான் அலுப்புடன்.
நிஷாவுடன் பணி புரிவது என்பது கொடுத்து வைத்திருக்க வேண்டிய விஷயம். அலுப்பு தட்டாத வேலை. சம்பளமும் மிக அதிகமாகவே கொடுப்பாள். நிஷா கவர் செய்யும் எல்லாமுமே சென்சேஷனல் வகை என்பதால், இவனுக்கும் விருதுகள் குவிந்து கொண்டு தான் இருக்கிறது. அதைக் குறை சொல்லவே முடியாது என்றாலும், இந்த முறை மரணம் கண் முன்னே, ‘லுங்கி டான்ஸ்’ ஆடிக்கொண்டு இருக்க, அவனுக்குச் சகலமும் நடுங்கி கொண்டிருந்தது.
“ஆர்டர் வரும்போது…” என்றாள் நிஷா அலட்டிக் கொள்ளாமல்.
“எப்பொழுது ஆர்டர் வரும் நிஷா?” என்றான் ரக்ஷத்.
“வரும்போது வரும்.”என்றாள் நிஷா.
“நிஷா!… ஒண்ணு நீ, தேஜ் ஜீ கிட்டே பேசு… இல்லையென்றால் எனக்காவது நம்பர் கொடு. நான் பேசுகிறேன். இப்படி மணல் மேட்டையும், வறண்டு போன நிலத்தையும் பார்த்துட்டு இருந்தால், பைத்தியம் பிடிச்சுடும்.” என்றான் அவன் கடுப்புடன்.
டிவி நாடகம், சமூக வலைத்தளம் என்று ஊறி போயிருக்கும் மக்கள் மனதில், இந்திய நாட்டில் நடக்கும் அக்கிரமங்களையும், ராணுவ வீரர்கள் தியாகத்தையும், தேசப்பற்றையும் உருவாக்கச் செயல்பட்டு கொண்டிருக்கும், ‘third eye/ மூன்றாவது கண் டிவி சேனல், பத்திரிகையின் உரிமையாளர் வெளி உலகத்திற்க்கு நிஷா தான். ஆனால், அதன் பின் இருந்து இயக்கும் கரம் தேஜ்.
தேஜ் உத்தரவின் பெயரிலேயே இந்த அழகு புயல், எல்லையில் மய்யம் கொண்டு, அங்கு நடக்கும் எல்லை தாண்டிய ஆயுத பயங்கரவாதத்தை கவர் செய்து கொண்டிருந்தது.
அழகான, மிகக் கவர்ச்சியான பெண், அதுவும் கோடிக்கணக்கில் விசிறிகள் இருக்கும் ஒருத்தி, ஒரு கவர் ஸ்டோரியை நேரடி ஒளிபரப்பு செய்கிறாள் என்றால் அதன் impact/ தாக்கம் என்பதை வரையறுக்க அளவுக் கோல் தான் ஏது?
check mate!
ஒன்று மக்களுக்குப் பிடிக்கும் வரை தான், ஒன்றின் தரம்பற்றி உணராத வரை தான் கவனம் செலுத்த மாட்டார்கள். ஆனால், பிடித்து விட்டாலோ, ஒரே இரவில் ஸிரோ, ஹீரோ ஆவது எல்லாம் இங்கே சகஜம்.
ஆனால் நிஷா இங்கே ஏற்கனவே மக்கள் மனதை ஆண்டு கொண்டிருப்பவள். நிஷாவின் புகழ், இங்குத் தேஜ் கொள்கைக்கு ஆயுதமாய் பயன்பட்டுக் கொண்டிருந்தது.
நிஷா என்ற அழகு, நாட்டிற்காக ஆயுதமாய் மாறி இருந்தது .
துப்பாக்கி, ராக்கெட் லாஞ்சர் மட்டும் இல்லை… அழகான பெண்ணும் ஆயுதம் தான்.
marketing. opinion journalism என்பது இது தான்.
பொது மக்கள் ஒன்றை பற்றிப் பேசுவதற்கும், நட்சத்திரங்கள் மேடையேறி ஒன்றை சொல்வதற்கும் உள்ள வித்தியாசம் இது தான். பொது மக்கள் பேசுவது அதி முக்கியமான ஒன்று என்றாலும் அதன் தாக்கம் குறைவே!… அதுவே ஒரு நட்சத்திரம் உளறி வைத்தால் கூடத் தீயெனப் பரவும்.
சிம்பிள் லாஜிக் அண்ட் ஸ்ட்ராட்டஜிக் மைண்ட் game.
அடுத்த நொடி அவன் நெற்றி பொட்டில் நிஷா வைத்த துப்பாக்கி பதிய, பயத்தில் அவன் விழிகள் விரிந்தது.
“இன்னும் எத்தனை வருஷம் என்றாலும், தேஜ் இங்கிருந்து கிளம்ப சொல்லாதவரை, நாம் இங்கிருந்து கிளம்ப முடியாது. பெட்டர் understand தட். காரணம் இல்லாமல் தேஜ் இங்கே நம்மை இருக்க சொல்லவில்லை.
தேஜ் ஜி எடுக்கும் முடிவுகளைக் கேள்வி கேட்கும் அளவிற்க்கு நீ பெரிய ஆள் இல்லை. சோ வாயை மூடிட்டு இரு. சொல்வதை ஏன், எதற்கு, எத்தனை நாள் என்று கேள்வியே கேட்காமல் செய்யத் தான் நாம் இருக்கோம்.
இல்லை, இப்படியே புலம்பிட்டு இருப்பாய் என்றால், உன்னைப் போட்டுத் தள்ளிட்டு, ‘கொள்ளைக்காரர்கள் உன்னைக் கொன்னுட்டாங்க’ என்று ஒரு ட்ராமா போட்டுடுவேன். இந்தத் தொழிலில் பொறுமை அவசியம்.” என்ற நிஷா, துப்பாக்கியைத் தன் உள்ளாடைக்குள் மறைத்து, வேனின் தரையில் அப்படியே படுத்து உறங்க ஆரம்பித்தபிறகு தான், பிடித்து இருந்த மூச்சை விட்டான் அவன்.
‘உனக்கு இது தேவை தானாடா!… உன் நேரம் நல்லா இருக்கு. அதான் இந்தப் பிசாசு நல்ல மூடில் இருப்பதால் தோட்டாவை உள்ளே இறக்காமல் விட்டுடுச்சு. இல்லையென்றால் இந்நேரம் எந்தக் குப்பை மேட்டில் உன்னை வீசி இருப்பாளோ!…
தேஜ் பாய்!… எதுக்கு பாய் இப்படியொரு கிராமத்தில் எங்களை ஒரு வாரமாய் தங்க வச்சி கொடுமை செய்துட்டு இருக்கீங்க… பார், அழகான பொண்ணுங்க… என் அபார்ட்மெண்ட் எப்போ பார்ப்பேன்…பார்ப்பேனா?…ஹ்ம்ம் நோ சான்ஸே இல்லை.
எந்த வேலைக்குன்னு கொஞ்சம் சீக்கிரம் சொல்லிடுங்க பாய்… இந்தப் பிசாசு கிட்டே இருந்து என்னைக் காப்பாத்துங்க ஜி.’என்று மனதிற்குள் பொங்கியவன் பெருமூச்சுடன் அடித்துக் கொண்டிருந்த புழுதி காற்றை வெறித்துக் கொண்டிருந்தான்.
உள்ளே ரக்ஷத் ஒரு வாரமாய் எதுக்கு அந்தக் கிராமத்தில் தங்கி இருக்கிறோம் என்று புரியாமல், தேஜ் திட்டம் என்ன என்று புரியாமல் குழம்பி கொண்டிருக்க, அவர்கள் டிவி சேனல் வேன் நிறுத்தப்பட்டு இருந்த இடத்தைக் கடந்து வெகுவேகமாய் ஒருவன் சென்றான்.
எந்தச் சமயத்தில் அது, high volatile கிராமம் என்று நிஷா தன் பேட்டியில்
சொல்லியிருந்தாளோ, அங்கு வெளியே தெரியாமல் பல ரகசிய நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருந்தது.
வெளியே தெரியாமல் அங்குப் பல ஆட்டக்காரர்கள் உயிரோடு விளையாடும் ஆட்டத்தினை அந்தக் கிராமத்தில் நடத்தி கொண்டிருக்க, தேஜ் ஆட்டத்தின் ஒரு காயாக, நிஷா ஒரு அங்கம் என்றால், நிஷா வேனை கடந்து சென்று கொண்டிருந்தவன் இன்னொரு ஆட்டத்தின் அங்கம்.
அது ஆயுத ஆட்டம். arms smuggling.
புழுதி மணல் பறந்து கொண்டிருக்க, சாப்பிடும் சாப்டில் கூட அந்தக் கிராமத்தின் மணல் துகள்கள் மிக அதிகமாய் இருக்கும்.
புழுதி காற்று வலுவாய் அடிக்க ஆரம்பித்து இருக்க, சுழன்றடிக்கும் காற்றை பொருட்படுத்தாதவனாய், யாரும் அற்ற அந்தக் கிராமத்தின் சாலையில் முகத்தைத் துணி கொண்டு மூடியவாறு நடந்து வந்துகொண்டிருந்தான் அந்த மனிதன்.
நிசப்தம் ஆக்ரமித்து இருக்க, அதைக் கலைப்பது போல் ஒன்றாக எழுந்த பூட்ஸ் சப்தம் அந்தப் பிராந்தியத்தில் ஒலிக்க, சட்டென்று மறைந்து நின்றான் அவன்.
அந்தப் பூட்ஸ் கால் சப்தம் இந்தியாவின் எல்லை பாதுகாப்பு படையினர் அந்தக் கிராமத்திற்குள் ரோந்து வரும்போது எழும் சப்தம்.
வெயில், மழை, புழுதி, வெள்ளம் என்று எதையும் பொருட்படுத்தாமல், குறைவான ஊதியத்திற்கு, வருடத்திற்கு சில மாதம் கிடைக்கும் விடுமுறை கொண்டு ஒரு தியாகமாய் செய்யும் பணி நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்களின் பணி.
சுழன்றடிக்கும் புயல் காற்றையும் பொருட்படுத்தாமல் எல்லை பாதுக்காப்பு படையின் ஒரு குழு தங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தது.
அவர்கள் தன்னை கடந்து போகும் வரை ஒரு தண்ணீர் தொட்டியின் பின் உடலைக் குறுக்கி மறைந்து அமர்ந்திருந்தவனின் இதயம் அப்படி துடித்துக் கொண்டிருந்தது.
அவர்கள் பார்த்து விட்டால் என்ன செய்வது என்று யோசித்தவன் தன் ஆடைகளை நெகிழ்த்தி விட்டு அமர்ந்தான்.கேட்டால் இயற்கை உபாதை என்று சொல்லிக் கொள்ள வேண்டியது தான் என்று அவன் அமர்ந்திருக்க, எல்லை பாதுகாப்பு படையினர் மெல்ல விலகிச் சென்றார்கள்.
அவர்கள் சென்ற பிறகே சாதாரண மூச்சு அவனிடமிருந்து வெளிப்பட, தன் ஆடைகளைச் சரி செய்து கொண்டு வெகுவேகமாகத் தன் வீட்டை நோக்கி எட்டுக்கள் வைத்து நடந்தான்.
அவன் பெயர் குல்ஷன் சிஷ்டி. அறிந்து கொள்ளும் அளவுக்கு அவன் முக்கியமானவன் இல்லை.சாதாரண பொதுமக்களில் அவனும் ஒருவன் தான் என்றாலும், வெளியே தெரியாமல் நடந்து கொண்டிருக்கும் பல ரகசிய திட்டங்களுக்கு உறுதுணையாக நிற்பவன்.
வெகுவேகமாய் தன் வீட்டிற்குள் நுழைந்தான். அதை வீடு என்று கூடச் சொல்ல முடியாது… வீடு மாதிரி. பாழடைந்த என்ற வார்த்தை பத்திற்கும் மேலாக ஒன்று ஏதாவது இருந்தால் அப்படியொரு வீடு அது.
அந்த வீட்டில் விறகு அடுப்பு ஒன்று எரிந்து கொண்டு இருக்க, சமையல் வேலையில் ஈடுபட்டு இருந்தாள் ஒரு பெண்.
கை முழுவதும் தந்த வளையல்கள் அடுக்கப்பட்டு இருக்க, hijab, naqaab, burqa and chadoர் இதில் ஏதோ ஒரு வகையான துணிமூலம் முகத்தைக் கொண்டு தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
உடையைப் பார்த்தால் இந்தியாவின் நாடோடி பழங்குடியினர் மாதிரியான தோற்றம்.
ஒரே அறை கொண்ட அந்த வீடு, தகர சீட்டுகள், படுத்தாக்கள் கொண்டு ரெண்டாய் பிரிக்கப்பட்டு இருக்க, இன்னொரு பக்கம் நால்வர் ஆழந்த உறக்கத்தில் இருந்தார்கள்.
வீட்டிற்குள் புயல் போல் நுழைந்தவன், அங்கே சமைத்து கொண்டிருந்த தன் மனைவியைப் பார்த்து, “பாய் எங்கே?”என்றான் பதட்டத்துடன்.
அந்தப் பெண் எதுவும் பேசாமல் தகர ஷீட் பக்கம் கைக்காட்ட, அங்கே சென்றவன் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அருகில் சென்று அதில் ஒருவனை தட்டி எழுப்பினான்.
அடுத்த நொடி பயத்தில், தன் ரெண்டு கைகளையும் மேல் தூக்கியவாறு பின்னால் சாய்ந்தான். அவன் முகத்தில் மரண பயம் தெரிந்தது.
முகத்தின் முன் துப்பாக்கி சட்டென்று நீட்டப்பட்டால் யாருக்கு தான் பயம் வராது?
“ச்சே நீ தானா… என்ன விஷயம்?” என்றான் அவன், தன் துப்பாக்கியை மீண்டும் உள்ளே வைத்தவாறு.
துப்பாக்கியை எடுத்தவன் பார்க்கவே நிஜ அரக்கன் போலிருந்தான்.கறுத்த முகம், எண்ணெய் படாமல் பழுப்பேறி இருந்த தலை, சரியாகத் தூக்கம் இல்லாததால், சிவப்பேறி இருந்த கண்கள், பல நாள் சவரம் செய்யப்படாத முகம் என்று பஞ்ச பரதேசி போலிருந்தான்.
இந்தக் கோலத்தில் அவன் வீட்டினர் முக்கியமாய் அவன் அண்ணா, அண்ணி தோழி பார்த்து இருந்தால், கண்ணீர் வெள்ளத்தில் ஊரையே முழுகச் செய்திருப்பார்கள். வீட்டின் செல்லப் பிள்ளை அவன். பல பெண்களின் கனவு நாயகன்.
இன்றோ எல்லை கிராமத்தில் யாருக்கும் தெரியாத அனாதை போல், எந்த வசதியும் இல்லாத ஓலை குடிசைக்குள் இருக்கிறான்.
அந்தக் குடிசை வீட்டின் வெளியே சென்று தன்னை சுத்த படுத்தி கொண்டு வந்தவனிடம், துடைக்கத் துண்டையும், குடிக்க கறுப்பு டீயையும் கொடுத்தான் சிஷ்டி.
“பாய்!… அங்கேயிருந்து பொருள் வந்துடுச்சு… ஏத்த ஆரம்பிச்சுட்டாங்க… இன்னும் ஒரு மணி நேரத்தில் கிளம்பிடும்… போகப் போகும் இடம் தமிழ்நாடு.” என்றான் சிஷ்டி.
அடுத்த நொடி அவன் விறைத்து நிமிர உறங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பினான் அவன்.
“வேலை வந்துடுச்சு கிளம்புங்க…” என்றவன் கட்டளைக்கு அடுத்த நொடி அவர்கள் தங்கள் பொருள்களைச் சேகரித்து தயாரானார்கள்.
கிளம்பிய அவர்களும் அந்தக் கிராம மக்கள் அணியும் பழங்குடி மக்களின் உடையில், தாடி, டர்பன் வைத்து இருந்தார்கள்.
“இந்தா பிடி… இதில் பணமும், ட்ரைன் டிக்கெட்டும் இருக்கு. நேரா ஒதிஷா போய்டு… அங்கே xxx ஹாஸ்பிடலில் உனக்கு வார்டுபாய் வேலை ரெடியா இருக்கு… இங்கே நீ திரும்பி வந்தால், உன் உயிர்க்கு உத்தரவாதம் இல்லை… இனி உன் வீடு ஒதிஷா தான்…” என்று குல்ஷனிடம் கத்தை பணத்தையும், ரெண்டு ட்ரெயின் டிக்கெட் கொடுத்தான் முதலில் பேசியவன்.
“வேணாம் பாய். நான் என் பிறந்த தேசத்திற்கு என்னால் முடிந்த சேவையைத் தான் செய்தேன். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் எங்க வீட்டில் இருந்த ஆண்களை எல்லாம் நள்ளிரவில் இழுத்து சென்றார்களாம். ஒருத்தர் கூட மீண்டும் வரவில்லை. அந்தமான் சிறையில் தான் எல்லோரும் இறந்து போனாங்க.
எங்க அப்பா இந்தியா பாகிஸ்தான் யுத்தத்தில் தான் மரணம் அடைந்தார். எங்க வாழ் ஜீவனம் பென்சனில் ஓடிட்டு இருக்கு. என் தங்கச்சி சக்கோரி இப்போ தமிழ்நாட்டில் மருத்துவத்திற்கு படிச்சுட்டு இருக்கு. அது மொத்த படிப்புக்கும், எங்க ஜீவனத்திற்கும் கூட, அந்த நல்ல மனுஷன் மரைக்காயர் பொறுப்பேற்று இருக்கார்.
எனக்கு உடலில் குறையிருப்பதால் என்னை இந்திய ராணுவத்தில் சேர்த்து கொள்ளவில்லை என்றாலும், இது தலைமுறை தலைமுறையாய் இந்திய தேசத்திற்காக உயிரைக் கொடுத்த வீரர்களின் குடும்பம்.
வீட்டுக்குப் பின்னாடி வயல் இருக்கு. நாலு ஆடு இருக்கு.பண தேவை எங்களுக்கு இல்லை.
இது தான் என் மண். இந்த மண் தான் என் உயிர், சுவாசம் எல்லாமுமே. இதை நீங்கிச் செல்வதாய் இருந்தால் அது உயிர் அற்ற உடலாக மட்டுமே நான் செல்வேன்.
இந்த உதவியைப் பணத்திற்காக நான் செய்யவில்லை. இந்திய தேசத்தில் பிறந்து, இந்திய மண்ணில் வளர்ந்து, அதன் உப்பைச் சாப்பிட்ட ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமை தேசத்தைக் காப்பாற்றுவது.
இதற்கு உங்களை மாதிரி யூனிபார்ம் போடணும் என்று அவசியம் இல்லையே.நான் செய்தது இந்த அதி உன்னத தேசத்திற்கான என் கடமை.கடமைக்கு விலை வைக்காதீர்கள். விலை வைக்கவும் முடியாது.
தவிர இப்படி எல்லை தாண்டிய பயங்கரவாதம் இதோடு நிற்கப் போவதில்லையே!… தொடர்ந்து அங்கிருந்து போதை மருந்துகளும், ஆயுதங்களும் இந்தியாவிற்குள் அனுப்பி கொண்டே தான் இருக்க போகிறார்கள். இங்கே இருந்து கொண்டே நாட்டைத் துண்டாட நினைக்கும் புல்லுருவிகளும் அவர்களுக்குத் துணையாக இருக்க தான் போகிறார்கள்.
இங்கிருந்து உயிருக்குப் பயந்து கொண்டு நான் சென்று விட்டால், அடுத்த முறை இது மாதிரி ஆயுதங்கள் வருவதை உங்களுக்கு யார் தகவல் தருவார்கள். மிஞ்சிப் போனால் போகப் போவது உயிர் தானே. அதுவும் என் இந்திய திருநாட்டிற்காகத் தானே!….
பொம்பளை ஷோகில், குடித்து குடல் வெந்து, நீசத்தனமாய் பணத்திற்கு ஆசை பட்டு நாட்டின் பாதுகாப்பிற்க்கு பங்கம் விளைவித்து, எதற்கும் உபயோகம் இல்லாமல் என் உயிர் போகப் போவதில்லையே!…” என்றவனை பார்த்து ஒரு கணம் திகைத்த அந்த நால்வர் அடுத்த நொடி அட்டென்ஷனில் நின்று ஒரு சலூட் அடித்தார்கள்.
“இந்திய தேசத்தின் பாதுகாப்பை உள்நாட்டிலும், வெளி நாட்டிலும், எல்லை பகுதிகளிலும் எல்லா விதத்திலும் ஏற்று கொண்டிருக்கும் ஒவ்வொரு ராணுவ வீரனும், பாதுக்காப்பு, இன்டெலிஜென்ஸ் துறை அதிகாரிகளும் சீருடை அணிந்த இந்திய குடிமக்கள்.
பொது மக்கள் எல்லோரும் சீருடை அணியாத அதிகாரிகள்.
இந்த உணர்வு, ‘என் தேசம் என் நாடு, என் உயிர் மூச்சு என்ற தேசப்பற்று’ என்று உன்னைப் போல் போல் ஒவ்வொரு இந்திய பொது மக்களின் ரத்தத்தின் ஒவ்வொரு அணுவிலும், நாடி நரம்பிலும் எழும்போது தான் நாட்டினை வெளியில் இருந்தும், உள் இருந்தும் கரையான் போல் பங்கம் விளைவிக்கும் தீய சக்திகளிடமிருந்து காக்க முடியும்.
எல்லாம் இருந்தும் நேர்மையாக, தேசப்பற்றுடன் இருப்பதில் பெருமை இல்லை. இந்தக் குல்ஷன் மாதிரி எல்லை பகுதிகளில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழும்போது, பணம், வசதியான வாழ்க்கை என்ற டெம்ப்டேஷன் கொடுக்கப்படும் போதும், என் தேசம் என்று வாழ்வதில் தான் நம் முன்னோர்கள் இந்தச் சுதந்திரத்தை பெற்று தந்தத்திற்கான முழு பலன் கிடைக்கிறது.
ஆனால் இதே பணத்திற்காக நாட்டினை விற்க தயங்காத சில வேசிகளும் இருப்பதால் தான், URI, புல்வாமா, மும்பை அட்டாக், இந்திய நாடாளுமன்ற தாக்குதல் என்று லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.
இவையெல்லாம் ஒரு அரசாங்கத்தின், ராணுவத்தின், உளவு துறையின் களங்கம் மட்டும் இல்லை. ஒவ்வொரு இந்திய குடிமகனின் களங்கம்.” என்றான் அந்த அரக்கன்.
“நாட்டைக் காப்பாற்றுவது சீருடை அணிந்தவர்களின் கடமை மட்டுமே, அதுக்கு தான் அவங்களுக்கு ஊதியம் என்று பேசிக் கொண்டிருக்கும், சில பைத்தியங்களுக்கும் ஜாதி, மதம் இதன் போர்வையில் ஒளிந்து கொண்டு, நாட்டைத் துண்டு போட நினைவுபவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.”
என்றார் அந்தக் குழுவில் இருந்த வயதானவர்.
குல்ஷனின் தேசப்பற்றை பார்த்துச் சலூட் அடித்த அந்த நால்வரின் உடல் மொழியே சொல்லாமல் சொன்னது, அவர்கள் இந்திய பாதுக்காப்பு துறையில் ஏதோ ஒரு பிரிவில் இருப்பவர்கள் என்பதை.
‘ரா’ போன்ற இந்திய உளவு துறையில் பணியாற்றும் அதிகாரிகள் யார், யாரார் எந்தப் பதவியில் இருக்கிறார்கள், எந்தவிதமான இன்டெலிஜென்ஸ் operation நடந்து கொண்டிருக்கிறது என்பது எப்படி தெரிந்து கொள்ள முடியாதோ, அப்படியொரு குழு இது.
அரக்கன் போலிருந்த இளையவன், உண்மையில் அரக்கன் இல்லை. ரட்சகன். பாதுகாவலன். இந்திய கமாண்டோ பிரிவின் ஒரு குழுவின் தலைவன். மனித கடத்தல் கூட்டத்தையும், பஞ்சாப் போதை மருந்து கூட்டத்தையும் பிடித்தவன். விஜய கருணாகரனின் தம்பி. ப்ரீத்தியின் நண்பன்.
ரஞ்சித் சாகர்!
(யார் இந்த ரஞ்சித் சாகர் என்று தெரியாதவர்கள்- ranjith sagar என் முதல் நாவல் என்ன தவம் செய்தேன்(ஹியூமன் ட்ராபிக்கிங் task force), மூன்றாவது நாவல் ஊரு விட்டு ஊரு வந்து'(போதை மருந்து task force) ரெண்டிலும் வரும் ஸ்பெஷல் கமாண்டோ பிரிவின் தலைவன்.)
ஆட்டம் தொடரும்.