Vaanavil – 10

Keerthy-Suresh-Cute-Smilng-Pics-efe494a7

Vaanavil – 10

அத்தியாயம் – 10

இரவு உணவிற்கு சாப்பிட வந்த மகளிடம் எப்படி விஷயத்தை சொல்வதென்ற யோசனையுடன் பரிமாறிய மனைவியிடம் கண்ஜாடை காட்டினார் மனோகரன். தாயும் – தந்தையும் தன்னிடம் ஏதோ சொல்ல வருவதைப்  புரிந்துகொண்ட மகிழ்வதனி, “என்ன விஷயம்?” நேரடியாக கேள்வியைத் தொடுத்தாள்.

“இல்லம்மா தர்மசீலன் அய்யா வூட்டுல இருந்து நம்ம கார்குழலியை பெண்கேட்டு வந்திருக்காங்க. இந்த விஷயத்தை அவகிட்ட எப்படி எடுத்து சொல்றது? கல்யாணம்னு சொன்னாலே தம்பி, தங்கைன்னு புலம்ப தொடங்கிடுவ” என்று கையைப் பிசைந்தார்.

அந்த தகவலைக் கேட்டு மகிழ்வதனிக்கு சந்தோசம் அதிகரித்தது. அவளே பெற்றவர்களிடம் சொல்லி அவளுக்கு ஒரு வரன் பார்க்க சொல்லலாம் என்று நினைக்கும்போது தானாக வந்த வாய்ப்பை தட்டிகழிக்க அவளுக்கு மனம் வரவில்லை.

“ஆமா அவுக வூட்டுல யாருக்கு கேட்குறாவ?” உணவை உண்டபடி அடுத்த கேள்வியைக் கேட்டாள்.

“தர்மசீலனின் கடைசி பேரனுக்கு தான் கேட்டு வந்திருக்காங்க. பைய இந்த ஊரில் இல்லையாம். மும்பையில சொந்த தொழில் செய்யுதுன்னு சொன்னவ. அவளுக்கும் நல்ல இடம். பக்கத்திலேயே இருப்பதால அடிக்கடி தம்பி, தங்கை பாக்க முடியும் இல்ல” என்றார் மனோகரன்.

அவளுக்கும் அது சரியென்று மனதில் படவே, “சரிப்பா நான் கார்குழலிகிட்ட பேசி சம்மதிக்க வைக்குதேன்” என்று பேச்சை முடித்துவிட்டு எழுந்து சென்றாள்.

 மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்தது. செவ்வானம் சிவக்கும் முன் எழுந்து குளித்துவிட்டு தயாராகி வந்த மணிவண்ணன் பார்வை அங்கும்மிங்கும் அலைபாய்ந்தது.

அதை கவனித்த செண்பகம், “என்ன ராசா யாரை தேடுற?” என கேட்க,

“இல்ல கத்திரிக்கா தோட்டத்து ஆள் அனுப்பனும்னு தாத்தாகிட்ட சொல்லிப்புட்டு போன ஞாபகம். காலங்காத்தால எங்க போனாருன்னு தேடுத்தேன்” என்று பதில் கொடுத்தான்.

அவன் சொல்வதைப் பொறுமையாக கேட்டவர், “அதெல்லாம் நம்ம வேல்விழி காலையில வெள்ளன வந்து ஆட்கள கூட்டுட்டு காட்டுக்கு போயிட்டா ராசா.. நீ எதுக்கும் கத்திரிக்கா காட்டுக்குப் போய் பாருலே” என்றதும் சரியென்று தலையசைத்துவிட்டு தன் புல்லட்டில் கிளம்பினான்.

காலை நேரத்தில் சுற்றிலும் இருக்கும் வயல்வெளியை ரசித்தபடி சென்றவன் புல்லட்டை நிறுத்திய இடம் கத்திரிக்காய் காடு. தோட்டத்தில் பெண்கள் அனைவரும் காய் பறிக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்க, “என்னாலே வேலையெல்லாம் எப்படி நடக்குது” என்று கேட்டபடி உள்ளே நுழைந்தான்.

அவனின் குரல்கேட்டு நிமிர்ந்த வேல்விழியின் பார்வை ஒரு நிமிடம் சுவாரசியமாக அவனை அளவிட்டு, “அதெல்லாம் நல்லாவே நடக்குது மாமா” வெக்கத்தில் காலில் கோலம் போட்டாள்.

கண்ணுக்கு அழகாக கண்டாங்கியை அணிந்து விளக்கெண்ணை வைத்து தலைவாரிய பின்னலை மடித்து கட்டி செப்பு சிலையாக நின்றிருந்தவளை கண்டு மனம் என்னவோ செய்தது. ஒரு பெண்ணிடம் தடுமாறி அலைபாயும் மனதை நொடிக்குள் கட்டுக்குள் கொண்டுவந்தான்.

“இந்த மாமா மச்சான்னு கூப்பிடாதேன்னு உனக்கு எத்தன முற புள்ள சொல்லுறது?” எனச சிடுசிடுத்தான் மணிவண்ணன்.

அவன் சொன்னதும சுர்ரென்று கோபம் வரவே, “அட நான் கூப்பிடாம வேற எந்த சிறுக்கி மவ வந்து கூப்பிடுவா காத்துகிட்டு இருக்கிற.. நீ சொன்னாலும் சொல்லைனாலும் நாந்தான்வே உம்மோட மொரப் பொண்ணு” அவள் அதிகாரம் செய்ய பக்கத்தில் நின்று வேலை செய்த வயதான மூதாட்டி வாய்விட்டுச் சிரித்தாள்.

“ஏய் கிழவி எதுக்கு இப்போ சிரிக்கிறவ?” என்று எரிந்து விழுக,

“கள்ளிப்பட்டி மாப்பள வந்து பரிசம் போடுதேன்னு சொல்லும்போதே மணிவண்ணனை இந்த போடு போறீயே.. இவன் உன்ன கண்ணாலம் கட்டுன பொறவு தம்பி பாடு திட்டாட்டம்தான்” அவளை கேலி செய்து சிரித்தாள்.

அங்கே நடக்கும் பிரச்சனையைக் கண்டு கொள்ளாமல் தன் மீசையை முறுக்கிவிட்டு நகர்ந்தவனை பார்வையால் அளந்தாள். ஏனோ அவனின் கம்பீரம் கன்னியின் மனதினை அசைத்துப் பார்த்தது.

அதே நேரத்தில் அலுவலகம் செல்ல தயாராகி வந்த மகிழ்வதனியிடம் மீண்டும் கல்யாண விஷயத்தை ஞாபகப்படுத்தவே, “மொதல்ல விஷயத்தை அவகிட்ட சொல்லுதேன். அப்புறம் அவ யோசிச்சு சொன்ன பொறவு மத்ததை யோசிக்கலாம்” என்று சொல்ல அவரும் சரியென்று தலையசைத்தார்.

காலையிலேயே தென்னை மரத்தில் இருந்த காய்களை பறித்து போட சொல்லி மற்றவர்களை வேலை வாங்கிக் கொண்டிருந்தாள். அவளைத் தேடிச் சென்ற மகிழ்வதனியைக் கண்டவுடன், “உம்ம ஆபீஸ் போவ சொன்ன காதுல வாங்குறதே இல்லை?” என்ற கேள்வியோது அவளை நெருங்கினாள் கார்குழலி.

“நீங்க தான் ஊருக்குள் ரொம்ப பிஸியான உமனாக இருக்கிறியே.. அதனாலதான் உம்ம சந்திக்க நேருல வர வேண்டியதா இருக்குது..” சலித்துக்கொண்டே கூறியவளின் தோளில் செல்லமாக இரண்டு அடிப்போட்டாள்.

“என்ன விசயம்லே.. வெள்ளனா இம்பூட்டு தொலைவு வந்திருக்கிற?” கார்குழலி விசாரிக்க வேலை செய்யும் ஒருவர் இளநீர் வெட்டி கொண்டு வந்து இருவரிடமும் கொடுத்தார்.

அதை வாங்கி குடித்த மகிழ்வதனி, “உமக்கு இந்த ஊரிலேயே நல்ல ஒரு வரன் வந்திருக்குலே. அம்மாவும், அப்பாவும் உன்கிட்ட சொல்லி சம்மதம் கேக்க சொன்னாவ. அதான் வேலைக்குப் போற வழியில அப்படியே உன்னையும் பாக்கலாம்னு வந்தேன்” தான் வந்த விஷயத்தைப் போட்டு உடைக்க பகீரென்றது கார்குழலிக்கு.

அவள் திருமணம் செய்து சென்றுவிட்டால் அடுத்து இருக்கும் மூவரின் நிலையும் என்னவாகும் என்று யோசிக்கக் கூட தோன்றாமல், “என் நிலைமை தெரிஞ்சும் நீ பேசறது சரியாவ? நான் கண்ணாலம் கட்டிக்கிட்டு போயிட்ட பொறவு இருக்கிற மூவரோட நிலைமையை என்னாகறது?” என்று அவளிடம் சண்டைக்கு வந்தாள்.

அவளை தீர்க்கமாக பார்த்த மகிழ்வதனி, “பெரிய வீட்டுக்காரங்க கடைசி பேரனுக்கு உம்ம கேக்காங்க. என்னப பொறுத்தவர இது நல்ல இடம். உனக்கும் கிட்டக்க இருப்பதால அடிக்கடி வந்து தம்பி, தங்கச்சியைப் பாக்க முடியும்” என்று மேகவேந்தனின் விவரங்களைப் புட்டு புட்டு வைக்க சிறிதுநேரம் அங்கே அமைதி நிலவியது.

அந்த வீட்டின் பெரியவனான மணிவண்ணன் பற்றி ஊருக்குள் உலா வரும் செய்திகளைக் காதுபட கேட்டிருந்த கார்குழலி மனம் நெருடியது. அதை எப்படி தோழியிடம் சொல்வதென்று யோசிக்கும்போதே, “என்னால அமைதியா இருக்கிற?” என்றாள்.

“எனக்கு கொஞ்சம் யோசிக்க டைம் வேணும்” மெல்லிய குரலில் கூறினாள்

“இன்னும் இரண்டு வாரம் எடுத்துக்கோ நல்லா யோசிச்சு ஒரு முடிவு சொல்லு” என்று சொல்லிவிட்டு அலுவலகம் கிளம்பி சென்றாள் மகிழ்வதனி.

காலையில் பத்து மணி மீட்டிங்கை வெற்றிகரமாக முடித்தவள் பேக்டரியைப் பார்வையிட கிளம்பியவள், “இளஞ்செழியன் பேக்டரி வரை போறேன்” என்று சொல்லவே அவன் சரியென்று தலையசைத்தான்.

திடீரென்று என்ன நினைத்தாளோ, “சரி நீங்களும் என்னோட வாங்க”  முன்னே சென்றவளை அவளை பின்தொடர்ந்தான்.

கம்பெனியைவிட்டு வெளியே வந்தவள் டிரைவர் சீட்டில் அமர, “மேம் நான்..” என்று ஏதோ சொல்லவர, மறுப்பக்கம் அமரும்படி சைகை செய்ய  மறுப்பேச்சுயின்றி அவன் ஏறியமர காரை எடுத்தாள்.

அவளின் கார் செல்லும் பாதையை அவன் வேடிக்கைப் பார்த்துக்கொண்டே எப். எம்மை ஆன் செய்ய, “உங்களுக்காக அடுத்து வரும் பாடல்,  நான் பாடும் பாடல் படத்தில் இருந்து பாடவா உன் பாடலை சாங்” என்ற குரலைத் தொடர்ந்து பாடல் ஒலித்தது.

அதுவரை வெளியே வேடிக்கை பார்த்தவன், “ஓல்ட் சாங் வேண்டாமே வேற ஏதாவது கேட்கலாம் மேடம்..” என்றான் வரவழைக்கப்பட்ட சாதாரண குரலில்.

“ஏன் இந்த பாடலுக்கு என்ன குறைச்சல்” என்ற கேள்வியுடன் காரை சீரான வேகத்தில் செலுத்தினாள்.

“இல்ல இந்த பாடத்தில் வரும் கதாநாயகன் இறக்கும் சீன்ஸ்க்கு முன்னாடி இந்த பாடல் இருக்கும். அதனால் எனக்கு இந்த பாடல் பிடிக்காது” அவளிடம் நேரடியாக கூறினான்.

அவனை திரும்பிப் பார்த்த வதனி, “அதுக்கு முன்னாடி அவளோட முதல் பாடல் கேட்க தன்னவன் அருகில் இல்லாமல் போனதை நினைத்து தவிப்புடன் பாடுவாங்க. அது இன்னும் அழகாக இருக்கும் தெரியுமா?” என்றபோது அவள் சொல்லி முடிக்க சரணம் ஒலித்தது..

“உன்னைக் காணாமல் கண்கள் பொங்கும் அதுவே நெஞ்சின் ஆதங்கம்..

உனக்காக என் பாடல் அரங்கேறும் வேலை.. நீ கேட்க வழியில்லை இது என்ன லீலை..

பூமேகம் இல்ல ஆகாயம் எங்கே.. நீ சென்ற வழிப் பார்த்து வாடும் உன் பூ இங்கே..” என்ற ஜானகியின் குரலோடு இணைந்து பாடியவளின் குரலில் அதே தவிப்பு வெளிப்பட்டது.

அவள் பேக்டரி முன்பு வண்டியை நிறுத்த, ‘தன்னவன்’ என்று சொன்ன இடத்தில் யாரை வைத்திருக்கிறாள் என்ற கேள்வி அவனின் மனத்தைக் குடைந்தது.

 ‘உம்மோட தவிப்பும், துடிப்பும் கலந்த குரலை பக்கத்துல உட்காந்து கேட்க மனசுக்கு நிறைவா இருக்குவ..’ என்ற அவனின் குரல் காதோரம்  கேட்க சட்டென்று தன்னிலைக்கு மீண்டு காரின் பின்னே பார்த்தாள்.

அவளை நோக்கி கண்சிமிட்டியவன், ‘என்னை ரசிச்சது போதும் போய் வேலையைப் பாருடி. உம் பி.ஏ. என்ன கவனிக்குதான் பாரு’ என்று சொல்லும்போது இளஞ்செழியனின் மீது தன் கவனத்தை திருப்பினாள்.

“மேடம் இங்கே நீங்களும் நானும்தான் இருக்கோம். நீங்க ஏன் பின் சீட்டை பார்க்கிறீங்க?” என்று கேட்க மறுப்பாக தலையசைத்துவிட்டு இறங்க மறுபக்கம் காரின் கதவைத் திறந்து இறங்கினான்.

பேக்டரியில் கெமிக்கல் அளப்பதில் தொடங்கி அந்த பைப் முழுமையடையும் வரையில் என்னன்னா நிகழ்வுகள் என்று அவனுக்கு விளக்கம் கொடுத்தபடி கேபின் நோக்கி நடந்தாள்.

அங்கிருந்த மேனேஜரிடம், “இந்த வருடம் எல்லோருக்கும் செக்கப் செய்ய டாக்டரை வரவழைத்து விடுங்கள். அப்புறம் இங்கே வேலை செய்பவர்களுக்கு கெமிக்கல் பாதிப்பு வராமல் இருக்க தற்காப்பு நடவடிக்கையாக அனைவருக்கும் முககவசம், கைக்கு கிளவுஸ் மற்ற சில உடைகளை வாங்கி அனுப்பறேன் கட்டாயம் வேலை செய்பவர்கள் அணியனும்னு நோட்டிஸ் போர்டுல போட்டுடுங்க” என்றவள் அங்கே நடக்கும் மற்ற வேலைகளை பார்வையிட்டு நடந்தாள்.

திடீரென்று கப்ளின் போடுதல் (இரண்டு பைப்புகளை இணைக்க செய்யப்படும்) வேலை நினைவுவரவே வேகமாக அந்த இடத்திற்கு சென்றாள்.

ஒரு புதிய பெண் கடலெண்ணெய்யை அடுப்பில் கொதிக்க வைத்தபடி அமர்ந்திருப்பதைக் கண்டு, “நீ வேலைக்கு புதுசாக வந்திருக்கிறாயா?” என்று கேட்டாள்.

அவளின் அதட்டலில் பயந்து நடுங்கி எழுந்திருக்கும் போது அந்த பெண்ணின் கால் அடிப்பில் இடிக்க,“ஏபுள்ள நீ இங்கன வா.. கொதிக்கிற எண்ணெய் காலில் கொட்டின என்னவாகும்?” என்ற கேள்வியோது சட்டென்று அவளை விலகி நிறுத்தினாள்.

பக்குவமற்ற பெண்ணை இந்த வேலை செய்ய சொன்னது யாரென்ற கேள்வியுடன், “இந்த வேலையை முதலில் செய்துட்டு இருந்தவங்க எங்கே?” கோபத்துடன் மேனேஜரிடம் எரிந்து விழுந்தாள்,

அவளின் சத்தம்கேட்டு ஓடி வந்த பெண்மணி, “மேடம் நான்தான்” என்று முன்னே வந்து நின்ற ராஜேஸ்வரியைக் கண்டவுடன் மகிழ்வதனியின் கோபம் அதிகரித்தது.

“சின்னபிள்ளன்னு நினைக்காம இந்த வேலையை செய்ய சொல்லி இருக்கிற.. நாளைக்கே ஏதாவது ஒண்ணுன்னா யார் அவுங்க வீட்டில் பதில் சொல்றது. உன்னால் இந்த வேலையை செய்ய முடிந்தால் செய் இல்லன்னா வேலையைவிட்டு கிளம்பு” என்று திட்டி தீர்த்தாள்.

ராஜேஸ்வரி பயத்துடன், “இனிமேல் நானே இந்த வேலையை செய்யறேன் மேடம்” என்றாள்.

“ஒருத்தங்களுக்கு வேலை கற்றுக் கொடுக்க சொன்னால் நீயும் பக்கத்தில் இருந்து சொல்லி தரணும். அப்போதான் அந்த பிள்ளயும் சரியா கத்துக்குவா” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

“இவியலுக்கு செய்ய தெரியாத வேலைய நம்மட்ட கொடுத்துட்டு பேச்ச பாரு” என்று அவர் முணுமுணுப்பது காதில் விழுந்தது.

இரண்டடி எடுத்து வைத்தவள் மீண்டும் திரும்பி வந்து, “நீ நகரு” என்று சொல்லிவிட்டு சின்ன பைப் கட்டிங் பிளேடில் கையில் எடுத்தவள் கொதிக்கும் எண்ணெயில் சிறிது விட்டு வெளியே எடுக்க பைப் விரிவாங்கியது.

அதன் சூடு தணியும் முன்பே இடது கையில் வைத்திருந்த டையில்  வைத்து திருப்ப அழகான பைப் சரியான விகிதத்தில் விரிவாங்கி இருந்தது. கிட்டதட்ட பத்து நிமிடத்தில் வேகமாக அவள் செய்யும் வேலையைக் கண்டு வியந்தான் இளஞ்செழியன்.

பிறகு அந்த இடத்தைவிட்டு எழுந்தவள், “எந்தவொரு வேலையும் தெரியாமல் ஒரு நிறுவனத்தை விலைக்கு வாங்கி இத்தனை பேரை வைத்து வேலை வாங்குவது அவ்வளவு சுலபமான விஷயம் இல்ல. ஒவ்வொரு முதலாளியும் ஆரம்பத்தில் தொழிலாளியாக இருந்தவங்க தான்” என்றவள் சொல்லிவிட்டு முன்னே செல்ல அங்கிருந்த அனைவரும் தலை குனிந்தனர்.

அவள் வேலை செய்த வேகத்தை வைத்தே இந்த வேலையெல்லாம் ஆரம்பத்தில் இருந்து மிக நுணுக்கமான முறையில் கற்று இருக்கிறாள் என்று தெளிவாக புரிந்து கொண்டான். ஒரு பெண் என்று தாழ்வாக நினைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று உணர்ந்தான்.

யாருக்கும் காத்திருக்காமல் அடுத்தடுத்து வந்த நாட்கள் ரேக்கைக்கட்டி பறந்தது. கார்குழலிக்கு யோசிக்க தந்த டைம் அன்றோடு முடிய மாலை சரவணனை அழைத்து விஷயத்தை கூறினாள் மகிழ்வதனி.

அவள் சொன்னதைக்கேட்டு, “அக்காவுக்கு இவ்வளவு பெரிய இடத்தில இருந்து சம்மதம் அமையும்னு நினைக்கல அக்கா” சந்தோசத்தில் கண்கலங்க கூறினான்.

“நீ சந்தோசப்படுற.. உங்கக்கா இன்னும் சம்மதம் சொல்லாமல் சுத்திகிட்டு இருக்கிறாலே..” என்று விஷயத்தைப் போட்டு உடைக்க சரவணனின் புருவங்கள் சிந்தனையில் சுருங்கியது.

 “உள்ளூருக்குள் இப்படியொரு வரனை வேண்டாம்னு சொல்ல முடியாது அக்கா. அக்கா கண்ணாலத்துக்கு பொறவு தங்கச்சிங்க இருவரையும் நான் பத்திரமாக பார்த்துக்குவேன்” என்று உறுதியளித்தான்.

அவன் சம்மதம் சொன்னது மகிழ்வதனியின் மனதிற்கு நிறைவைக் கொடுக்க, “நான் உங்க அக்காவிடம் பேசிட்டு முடிவு சொல்லுதேன்” என்று கூறிவிட்டு சிந்தனையுடன் ஆபீஸ் மொட்டை மாடிக்கு சென்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!