Vaanavil – 11

Keerthy-Suresh-New-Nice-Wallpapers-2ef8df32

Vaanavil – 11

அத்தியாயம் – 11

நேராக மாடிக்குச் சென்ற மகிழ்வதனி அங்கே நின்று இருந்த இளஞ்செழியனைக் கண்டு கேள்வியாக புருவம் சுருக்கினாள். மாலை நேரம் டீ டைம் என்பதால், ‘இந்நேரத்தில் என்ன செய்துட்டு இருக்கார்’ என்ற சந்தேகத்துடன் அவனை நெருங்கினாள்.

அவளுக்கு முதுகாட்டி நின்றிருந்த இளஞ்செழியன், “வேந்தா நான் பக்கத்தில் இல்லை என்றால் தொழிலை ஒழுங்காக கவனிக்க மாட்டியா? தொழிலாளர்கள் ஸ்ட்ரைக் பண்ற அளவுக்கு கொண்டு வந்திருக்கிற. இன்னும் நீ விளையாட்டு பையன் கிடையாது. சரி முடிந்தவரை நிலைமையை சமாளி.. நான் நைட் பிளைட்க்கு அங்கே வருகிறேன்.” என்று பேசிவிட்டு  போனை வைத்துவிட்டு திரும்பினான்.

மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்த மகிழ்வதனி பார்வை அவனைத் துளைத்தெடுக்க, “அப்போ நீங்க மும்பையில் பெரிய பிஸ்னஸ் மென் இல்லையா?” என்ற அவளின் கேள்விக்கு ஒப்புதலாக தலையசைத்தான்.

அவனின் மீது வைத்திருந்த மதிப்பு குறைய, “அவ்வளவு பெரிய பிஸ்னஸ் மேக்னெட் இந்த குற்றாலத்தில் அதுவும் வளர்ச்சியில் ரொம்ப பின்தங்கி இருக்கும் நிறுவனத்தில் வேலை செய்ய என்ன காரணம்?” என கிடுக்குப்பிடி போட்டாள். 

சில்லென்ற தென்றல் தீண்ட கார்மேகங்கள் நகர்ந்து நடுவானில் முகாமிடும் காட்சியை ரசிக்கும் மனநிலை இன்றி நின்றிருந்த இளஞ்செழியன் ஆழ மூச்சிழுத்து விட்டு ஒரு முடிவுடன் நிமிர்ந்தான்.

“நீதான் காரணம்” என்றான் தெளிவான குரலில்.

“வாட் நானா?” என்று நம்பாமல் கேட்டவளை அழுத்தமாக பார்த்தான்.

“ஆமா. அவ்வளவு பெரிய மும்பையில் என் நிழல் தீண்ட கூட பொண்ணுங்க யோசிப்பாங்க. இத்தனை வருடத்தில் எத்தனையோ பெண்களைக் கடந்து வந்த என் மனதிற்குள் சலனத்தை ஏற்படுத்திய முதல் பொண்ணு நீ அதுதான் உன்னைத் தேடி இவ்வளவு தூரம் வர வைத்தது” என்று அவன் குற்றாலம் வந்த காரணத்தை ஒப்புக் கொள்ள மகிழ்வதனி அதிர்ச்சியுடன் அவனை ஏறிட்டாள்.

“நான்..” என்றவள் அவன் சொல்வதை உண்மை என்று நம்ப முடியாமல் மறுப்பாக தலையசைத்தாள்.

“நீ நம்பாமல் இருந்தாலும் அதுதான் உண்மை. சொந்த ஊரில் கால்பதிக்காத என்னை இங்கே இழுத்து வந்தது உன்மீதான என் காதல்தான். உனக்கு கீழே வேலைக்குச் சேர தூண்டியது. நான் பெரிய பிஸ்னஸ்மேன் என்று உன்னிடம் மறைத்தது எனக்கு தவறாக தெரியல. அதனால் உன்கிட்ட ஸாரி கேட்க முடியாது” என்று விஷயத்தை பட்டென்று போட்டு உடைத்தான்.

அவன் பேசுவதைக் கேட்ட மகிழ்வதனிக்கு உலகமே தட்டமாலையாக சுழல, “என் வாழ்க்கையில் உன்னைத் தவிர வேறொரு பெண்ணுக்கு இடமில்லை. ஐ லவ் யூ மகிழ்வதனி” என்றவன் தன் காதலை வெளிபடுத்தினான்.

சிறுவயதில் இருந்து மனதில் வைத்திருந்த பாசம் காதலை வடிவெடுத்து கண்முன்னே நிற்பதைப் போன்றொரு பிரம்மை தோன்றி மறைந்தது. தன் முகத்திற்கு நேராக நின்று காதலைச் சொல்லும் அவனின் கம்பீரம் மனத்தைக் கவர்ந்தபோது உதட்டைக் கடித்து மெளனமாக நின்றாள்.

சிலநொடி இருவருக்கும் இடையே மௌனம் நிலவியது.

ஓரளவு தன் மனதைத் திடபடுத்திக்கொண்டு, “நீங்க திறமையாக செயல்படும் மகிழ்வதனியை விரும்புறீங்க. ஆனால் ஊருக்குள் அவளுக்கு இருக்கும் பட்டப்பெயரே வேற. எஸ் பைத்தியம்னு சொல்வாங்க. இதெல்லாம் உங்க வீட்டுக்குத் தெரிந்தால் கண்டிப்பாக என்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க மாட்டாங்க. அதனால் நம்ம இப்போதே பிரிவது இருவருக்கும் நல்லது” மார்பின் குறுக்கே கையைக் கட்டிக்கொண்டு அவளைப் பார்ப்பது அவனின் முறையானது.

“கடைசியாக நீ என்ன சொல்ல வருகிறாய்?” என்றவன் நேரடியாகவே கேட்டான்.

அவனின் விழிகளை நேருக்கு நேராக சந்தித்தவள், “நீங்க நெஞ்சோடு வளர்த்த காதலை மறந்துவிட்டு இங்கிருந்து கிளம்புங்க என்று சொல்றேன்” என்று கோபத்துடன் கூறிவிட்டு விலகி செல்ல நினைத்தாள்.

அடுத்த கணமே அவளின் கைப்பிடித்த வேகத்தில் மார்பில் வந்து விழுந்தவளின் மலர் முகத்தை இரு கரங்களில் ஏந்தியவன், “மேடம் நீங்க சொல்லும் பேச்சு கேட்டு செயல்பட நான் உங்க பி.ஏ. இல்ல. நான் உன்னை விரும்பறேன்.. நீயில்லாமல் என்னால வாழ முடியாது..” தீர்க்கமான முடிவை அவளின் விழிகளைப் பார்த்து கூறினான்.

தனக்கே கட்டளையிடும் அவனின் கம்பீரத்தில் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்துக் கொண்டிருந்த பெண்ணின் விழிகளைப் பார்த்தபடி அவளின் இதழோடு தன் இதழைப் பொருத்தி முத்தமிட்டான்.

அவனின் திடீர் தாகுததில் திகைத்து விழித்த பெண்ணைவிட்டு விலகியவன், “இன்னொரு முறை என் முன்னாடி உன்னை நீயே பைத்தியம்னு சொல்லாதே. அதை என்னால் ஏத்துக்க முடியாது. ஐ லவ் யூ.. நீ சொன்ன மாதிரி இன்னைக்கு மும்பை போறேன். மறுபடியும் வரும்போது கட்டாயம் உன்னைக் கையோடு கல்யாணம் செய்து என்னோட கூட்டிட்டு போவேன்” என்று தன் முடிவை சொல்லிவிட்டு அவளை விலகி சென்றான்.

சற்றுமுன் என்ன நடந்ததென்று உணர முடியாமல் திகைப்பும், அதிர்ச்சியுமாய் நின்றிருந்த மகிழ்வதனியைப் பார்த்து சிரித்தவன், “ஹே அடுத்தமுறை உன்னைப் பார்க்க வரும்போது ஐ லவ் யூ சொல்லணும். உன்னோட கற்பனையையும், ஊரார் புரளியையும் ஓரம்கட்டிவிட்டு ஐ லவ் யூ சொல்ல ரெடியாகும் வழியைப் பாரு” என்று சொல்ல கோபத்துடன் திரும்பி அவனை முறைத்தாள்.

அவன் சிரித்தபடி கீழிறங்கி சென்று தன்னுடைய ரிஸைனிங் லெட்டரை டைப் செய்து அவளின் டேபிளில் வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான். அவள் தன் கேபினுக்குள் நுழையும்போது அவன் அங்கில்லை. தன சீட்டில் சிறிதுநேரம் அமர்ந்தவள் பிறகு வீட்டிற்கு கிளம்பிச் சென்றாள்.

நேராக கார்குழலி வீட்டிற்கு சென்ற மகிழ்வதனியைப் புன்னகையுடன் வரவேற்க, “எங்கே அனிதா, காயத்ரியைக் காணோம்” என்ற கேள்வியுடன் வீட்டின் வாசலில் போடப்பட்டிருந்த கயிற்று கட்டிலில் அமர்ந்தாள்.

“அவிய இருவரும் தோட்டத்துக்கு போயிருக்காவ” என்று மகிழ்வதனி அருகே அமர்ந்த கார்குழலியின் கரத்தைப் பற்றி அழுத்தம் கொடுத்தாள். காற்றில் சலசலக்கும் தென்னங்கீற்று சத்தம் மனதிற்கு தைரியத்தைக் கொடுத்தது. 

“என்ன அந்த பையனைக் கல்யாணம் கட்டிக்க சம்மதமா?” என்ற கேள்வியுடன் நிதானமாக தோழியின் முகத்தை ஏறிட்டாள் மகிழ்வதனி.

அவள் அமைதியாக இருப்பதைக் கண்டு காரணத்தை ஓரளவு தானே யூகித்தவள், “மணிவண்ணன் குணம் சரியில்ல. சரியான பெண் பித்தன்னு ஊருக்குள் பேசப்படும் புரளியை நம்பி அவன் தம்பியைக் கண்ணாலம் கட்டிக்க யோசிக்கிதியா?” என்றாள்.

“ச்சீ! அப்படியெல்லாம் இல்லவே. கிராமத்து ஆளுங்க குணத்தில் தங்கமாக இருந்தாலும் சில விஷயத்தை உண்மை தெரியாமல் வேணும்னு புரளியைக் கிளப்பி விடுவாக. அதை நம்பிட்டு இருந்தா நம்ம நிம்மதி போயிடும்” குழலி அவசரமாக மறுக்கவே மகிழ்வதனி அமைதியாக இருந்தாள்.

“அதுமட்டும் இல்லாமல் ஒருத்தர் சொல்வதை நம்பி முடிவெடுக்க முடியாது. நம்ம கண்ணால் பாத்திருந்தா அவரைத் தவறா நினைக்கலாம். அதுமாதிரி எதுவுமே நடந்ததில்லையே.. பொறவு நான் ஒண்ணும் அவரை கண்ணாலம் கட்டிக்க போவது கிடையாது. அவரோட தம்பியைத் தானே.. அதனால எனக்கு இந்த கண்ணாலத்தில் பூரண சம்மதம்” எனச் சொல்ல மகிழ்வதனியின் முகம் மலர்ந்தது.

 “ஹே ரொம்ப சந்தோசமாக இருக்குடி.. இரு நான் அம்மா, அப்பாவுக்கு போன் செய்து சொல்லுதேன்” என்றவள் உடனே இருவருக்கும் அழைத்து தகவலைக் கூறினாள்.

அடுத்த சிலநொடிகளில் விஷயம் மணிவண்ணனின் காதுகளுக்கு எட்டியது. உடனே மனோகருக்கு அழைத்து அந்த பெண்ணை நேரடியாக வந்து தன் சம்மதத்தை சொல்ல சொன்னான்.

அதை மகிழ்வதனியிடம் கூறவே, “சரிங்கப்பா.. நானே அவளை நேரில் கூட்டிட்டுப் போறேன்” என்று சொல்லிவிட்டு போனை வைத்தவள் கார்குழலியை அழைத்துக்கொண்டு சென்றாள்.

அந்திவானம் மெல்ல சிவந்து கொண்டிருந்த சமையத்தில் தோட்டத்தில் வேலையை முடித்துக்கொண்டு நிமிர்ந்தவள், “என்ன மாமோய் கள்ளிபட்டி மாப்பிள்ளை வந்து பரிசம் போட்டு கண்ணாலத்திற்கு நாள் குறிச்சு வேலையெல்லாம் பலமாக நடந்துட்டு இருக்கு அத பத்தி ஒரு வார்த்தை கேக்கிறியாலா?” வேல்விழி வரப்பின் மீது நடந்து சென்று கொண்டிருந்த மணிவண்ணனை வேண்டுமென்றே வம்பிற்கு இழுத்தாள்.

“அடியேய் வாய் கொழுப்பு பிடிச்சவளே. கண்ணாலம் ஆக போகுது இன்னும் உம்மோட வாய்க்கொழுப்பு அடங்கலையே..” என்று அவளை அதட்டினான் மணிவண்ணன்.

அவனை ஏறயிரங்க பார்த்தவள், “கருத்த நேரமா கண்ணுக்கு அழகாக இருந்தாலும் இந்த மாமனால் என் வாய்க்கொழுப்பு அடக்க முடியலையே..” என்று பெருமூச்சு விட்டாள்.

“அடியேய் இப்போ எதுக்கு என்னைப் பாத்து பெருமூச்சு விடுறவ. இப்போவே போய் உங்கப்பன் கிட்ட நீ பார்த்த கள்ளிபட்டி மாப்பிள்ள எனக்கு பிடிக்கலன்னு சொல்லுடி. அப்புறம் நானே உன்ன கண்ணாலம் கட்டிட்டு துடுக்கு பேசும் இந்த வாயை அடைக்கிறேன்” என்று வரப்பிற்கு மீது நின்று கம்பீரமாக மீசையை முறுக்கி சிரித்தான் மணிவண்ணன்.

வரப்பிற்கு கீழே நின்றிருந்த வேல்விழியோ, “யோவ்! உண்மையைத் தான் சொல்லுதியா? இந்த வாய்ச்சண்டை, வரப்பு சண்டையெல்லாம் இல்லலே.. இது வாழ்க்கை.. நான் நிஜமா கேக்குதேன் கண்ணாலத்தை நிறுத்திப்புட்ட நீ என்னை கண்ணாலம் கட்டிக்குவியா?” என சேலையை தூக்கி இடுப்பில்  சொருகியபடி முடிவாக கேட்டாள்.

அவளின் குறும்பு மின்னும் கண்களைப் பார்த்தவன், “அடியேய் என்னடி இந்த விஷயத்தில் நான் பொய் சொல்வேனா? நீ மட்டும் கண்ணாலத்தை நிறுத்து உன்ன கட்டிகிட்டு அடக்கி காட்டுகிறேன்” என்று சிரித்தபடி கூறினான்.

அவனை ஏறயிறங்க பார்த்தவள், “அது உன்னால முடியாதுய்யா? என் மாமனுக்கு அம்புட்டு தைரியம் இல்லன்னு சொல்லுதேன்” என சவால் விடும்போது வானம் செந்நிற போர்வை போர்த்தி கொள்ள தோட்டத்தில் யாருமின்றி இருந்தனர்.

“என்னால என்னையே வம்புக்கு இழுக்குதியா? இரு இதோ வரேன்” என்றவன் வரப்பைவிட்டு கீழிறங்க கலகலவென்று வேகமாக வரப்பில் ஏறி ஓடியவளை துரத்திக்கொண்டு ஓடினான் மணிவண்ணன்.

அவனின் கைகளுக்கு அகப்படாமல் அங்குமிங்கும் ஆட்டம் காட்டிய வேல்விழியை பிடித்துவிடும் நோக்கத்துடன், “ஏய் நில்லுடி. நானாக பிடிச்சேன் மகளே அப்புறம் தெரியும் இந்த மணிவண்ணன் யாருன்னு” என்று அவளை மிரட்டினான்.

சட்டென்று தன் ஓட்டத்தை நிறுத்தி அவனை நிமிர்ந்து பார்த்தவள், “ஒரு வெடலப்பிள்ளய விரட்டி பிடிக்க முடியல. சும்மா நின்னு வசனம் பேசுறியளா மிஸ்டர் மணிவண்ணன்” என்று நாக்கைத் துருத்து அவனை கேலி செய்துவிட்டு ஓட்டம் பிடித்தாள்.

“என்னை பேரு சொல்லி அழைக்கும் அளவுக்கு வந்துட்டியோ? இருடி உன்னை இன்னைக்கு என்ன செய்யுதேன் பாருலே” என்று அவன் அவளைத் துரத்திக்கொண்டு ஓடினான்.

அந்த வழியாக பேசியபடி வந்து கொண்டிருந்த மணிவண்ணனின் தாத்தா தர்மசீலன் மற்றும் வேல்விழி தந்தை செந்தூரனும் திருமணத்தை எந்த தேதியில் வைக்கலாம் என்று தங்களுக்குள் பேசிக்கொண்டே வந்தனர்.

அப்போது தூரத்தில் தோட்டத்திற்குள் இருவரும் ஒருவரையொருவர் துரத்திக்கொண்டு ஓடுவதைக் கண்டு செந்தூரன் தன் பேச்சை நிறுத்த தர்மசீலன் திரும்பி அவர் பார்வை சென்ற திக்கை நோக்கினார்.

அவர்கள் இருவரும் சிறுவயதில் ஓடிப்பிடித்து விளையாடுவதையும், இறுதியில் மணிவண்ணன் அவளின் காதைச் செல்லமாக திருகிவிட்டு விலகி செல்வதையும் கண்டு, “இந்த புள்ள கண்ணாலத்தை எப்படி நடத்த போறேன்னு நீ புலம்புத. அங்கன பாரு உன்புள்ள மாமனை வம்புக்கு இழுத்துட்டு வரப்புக்குள் ஓடுவதை..” என்று கலகலவென்று சிரித்தார்.

அதே நேரத்தில், “இந்த புள்ளைக்கு கண்ணாலம் ஆகப்போகுது இன்னும் பொறுப்பு வருதா பாருங்க. மணிவண்ணனை வம்புக்கு இழுத்துட்டு திரியறா. சின்ன வயசுல இருந்து இப்படியே இருக்குதுக.. இன்னும் கொஞ்சம் கூட மாறவே இல்ல” என்று செந்தூரன் தன் போக்கில் நடக்க தொடங்கினார்.

கிராமங்களில் முறைப்பையனோடு விளையாடுவது வழக்கம். மணிவண்ணன் – வேல்விழி இருவரும் சிறுவயதில் இருந்தே ஒருவரையொருவர் சண்டையிட்டுக் கொள்வார்கள். ஆனால் ஒருநாள் கூட எல்லை மீறியது கிடையாது. அந்த உண்மை ஊருக்கே தெரியும் என்பதால் இருவரின் செயலை இயல்பாக கருதி பெரியவர்கள் இருவரும் அங்கிருந்து சென்ற சில நொடிகளில் மகிழ்வதனியும், கார்குழலியும் ஸ்கூட்டியில் வந்து இறங்கினர்.

வானில் சூரியன் மறையும் சமையத்தில் வயலுக்கு நீர் பாய்ச்சிட மோட்டரை திறந்துவிடப்பட்டிருந்தது. பெரும் சத்தத்துடன் கொட்டும் தண்ணீரைக் கண்ட கார்குழலி, “இங்க பாரு தண்ணீர் எப்படி ஓடுதுன்னு” என்று சொல்லி பம்பு செட்டில் முகம் கழுவ அவளின் பின்னோடு வந்த மகிழ்வதனி சந்தோஷத்துடன் சில்லென்ற தண்ணீரில் கால் பதித்தாள்.

“இங்கே காட்டுக்குள் யாரும் இல்லாத மாதிரி தெரியுதே” என்ற கேள்வியுடன் வதனி பார்வையைச் சுழற்றினாள்.

சட்டென்று முகம் கழுவிவிட்டு கார்குழலி நிமிரும்போது மணிவண்ணன் மீசையை முறுக்கியபடி வெளியே வர அவளின் பின்னோடு வேல்விழி வருவதைக் கவனித்தவளின் முகம் மாறியது.

தன் கேள்விக்கு பதில் வரவில்லை என்றவுடன் திரும்பிப் பார்த்த மகிழ்வதனியின் முகம் யோசனையில் சுருங்கியது. வேல்விழியை அங்கிருந்து அனுப்பிவிட்டு திரும்பிய மணிவண்ணன் இருவரையும் கண்டு சிலநொடிகள் அசைவற்றுப் போனான்.

அத்தியாயம் – 12

அடுத்து வந்த ஒரு வாரம் எந்தவிதமான மாற்றமும் இன்றி அமைதியாக நகர்ந்தது. முன்பைவிட தற்போது திருமணம் என்ற பேச்சை எடுத்தாலே எரிந்து விழுகும் அவளிடம் யாரும் நெருங்க முடியவில்லை.

அதே நேரத்தில் கடந்த சில நாட்களாகவே தன்னுடைய பெரிய மகன் சிந்தனையுடன் இருப்பதைக் கவனித்துக்கொண்டு இருந்தார் குணசீலன். அது என்னவென்று அவருக்குப் புரியாதபோதும், விட்டு பிடிக்கலாம் என்று அமைதி காத்தார்.

இளஞ்செழியன் மும்பை சென்றவுடன் தன்னுடைய கவனத்தைத் தொழில் மீது திருப்பினான். அவன் வந்த ஒரே வாரத்தில் மொத்த பிரச்சனைகளையும் முடித்துவிட மேகவேந்தனின் கவனம் மீண்டும் கார்குழலி பக்கம் திரும்பியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!