vaanavil – 12

images - 2021-06-01T145806.655-363d561e

vaanavil – 12

அத்தியாயம் – 12

‘கார்குழலி திருமணத்திற்கு சம்மதித்தாளா?’ என அறிந்து கொள்வதற்கு மணிவண்ணனுக்கு அடிக்கடி போன் செய்தான். ஆனால் அவன் போனை எடுக்கவே இல்லை. ஒவ்வொரு நாளின் முடிவிலும் கேள்விகள் அதிகரித்துக் கொண்டே சென்றதே தவிர பதில் மட்டும் கிடைக்கவில்லை.

அன்று விடுமுறை நாளென்ற காரணத்தினால் அண்ணனும், தம்பியும் வீட்டில் இருந்தனர். இளஞ்செழியன் காலையில் தனது உடல்பயிற்சியை முடித்துவிட்டு சோபாவில் வந்து அமர்ந்து நியூஸ் பேப்பரை புரட்டினான்.

வழக்கம்போலவே தமையனுக்கு போன் செய்த வேந்தன், “இந்த மணிக்கு என்னாச்சு என்றே தெரியல. ஒருவாரமாக போன் பண்ணினால் எடுக்கவே மாட்டேங்குது” புலம்பிய தம்பியை புரியாத பார்வை பார்த்தான்.

பிறகு, “டேய் அண்ணனை என்ன நினைச்சிட்டு இருக்கிற.. ஊரில் காடுகரைத் தோட்டமெல்லாம் அவன் பொறுப்பில் தான் இருக்கிறது. நம்ம செய்யற மாதிரி கணினிக்கு முன்னாடி உட்கார்ந்து செய்யும் ஈசியான வேலை கிடையாது. அவனே உனக்கு போன் பண்ணுவான் கொஞ்சம் பொறுமையாக இரு” ஓரளவு அவனுக்கு சமாதானம் சொல்லிவிட்டு மாடிக்குச் சென்றான்.

இளஞ்செழியன் இரண்டு நாளாக மணிவண்ணனுக்கு போன் செய்து அவன் எடுக்கவில்லை. ஏனென்ற காரணம் புரியாமல் குழம்பியவன்  குளியலறைக்குள் சென்று மறைந்தான்.

மேகவேந்தன் மனமோ நிலையில்லாமல் தவித்தது. தன்னிடம் தினமும் பேசும் அண்ணன் போன் எடுக்காமல் இருக்க காரணம் என்னவென்று யோசிக்கும் போது அவனுக்கு தலையே வெடிப்பது போல இருந்தது. ஆனாலும் மனதின் நெருடல் குறைந்த பாடில்லை.

‘செழியன் அண்ணனோட அழைப்பைக் கூட சில நேரங்களில் எடுக்காமல் இருக்கும். இதுநாள்வரை என்னோட அழைப்பை எடுக்காமல் இருந்ததே இல்லையே..’ என்று யோசித்தபடி டி.வி.யை ஓடவிட்டு சோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

அன்று காலை பதினோரு மணியளவில் தோட்டத்திற்கு கிளம்பிய மணிவண்ணனின் விழிகள் பெற்ற தாயின் முகத்தை தேடியது. சிறிது நேரத்தில் எதையோ எடுத்துக்கொண்டு அவனைக் கடந்து சென்ற பூரணியைக் கண்டு, “அம்மா” என்றான்.

அவனின் குரல்கேட்டு திரும்பியவர், “என்னப்பா” என்று பாசத்துடன் வினாவினார்.

“காலையில் சாப்பிட்டீங்களா?” என்றவன் கேட்க ஒப்புதலாக தலையசைத்த மகனின் முகத்தைக் கூர்ந்து கவனித்தார்.

ஏனோ அவனின் முகம் சரியில்லாமல் இருப்பதைக் கண்டு வேகமாக அவனின் நெற்றியைத் தொட்டு பார்த்து, “காய்ச்சல் இல்லையே.. அப்புறம் ஏன் முகம் சோர்ந்து போயிருக்கு” என தனக்குதானே கேள்வி கேட்டவர் மகனை இழுத்து டைனிங் டேபிளில் அமர வைத்துவிட்டு அடுக்களைக்குள் சென்றார்.

மீண்டும் திரும்பி  வரும்போது கையில் சாதத்தை பிசைந்து எடுத்து வந்தவர், “எம்லே பசிக்குதுன்னா வாய் திறந்து சொல்ல மாட்ட. நீ ரெண்டு மூணு நாளா ஒழுங்கா சாப்பிடாமல் இருப்பதை நானும் கவனிச்சிட்டு தான் இருக்குதேன். இப்படியே இருந்தா உடம்பு உப்புக்குகூட பெறாது”  சாப்பாட்டை உருட்டி கையில் கொடுக்க அமைதியாக சாப்பிட்டான்.

பிறகு தோட்டத்திற்கு போகும்போது, “அம்மா உன் கையில் வயிறார சாப்பிட்டுட்டேன். மதியம் சாப்பாட்டுக்கு வரமாட்டேன். என்னைய தேடாத அம்மா” என்று சொல்ல அவரும் சரியென்று தலையசைத்து மகனை வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்தார்.

இத்தனை நாட்கள் இல்லாமல் மணிவண்ணன் பேச்சில் வித்தியாசத்தை உணர்ந்த பூரணி, “இன்னைக்கு இவனுக்கு என்னாச்சு.. ஏன் தேவையில்லாமல் இப்படி சொல்லிட்டு போறான்” என்ற சிந்தனையோடு மதிய சமையலைக் கவனிக்க சென்றான்.

அங்கிருந்து சென்ற அரைமணி நேரத்தில், “ஆத்தா மணியண்ணன் பால்டாயிலை குடிச்சுட்டாங்க. பசங்க எல்லாம் அவரைக் காப்பாத்த ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டு போயிருக்காங்க” பதறியடித்து ஓடிவந்த மதுரன் பூரணியின் தலையில் இடியை இறக்கினான்.

“ஏம்லே என்ன சொல்லுத.. எம் மவன் அப்படி பண்ண மாட்டேன்லே” என்று அதிர்ந்தபடி கேட்க,

“அண்ணே பம்பு செட்டில் தண்ணீர் திறந்துவிட்டு வரேன்னு சொல்லிட்டுப் போச்சு. அவரு போய் வெகுநேரம் ஆகியும் வரலேன்னு சந்தேகத்துல பம்பு செட் ரூமுக்கு போனேன்.. அங்கிருந்த கட்டிலில் அண்ணா உசுருக்கு போராட்டி இருந்தது..” அவன் நடந்ததை சொல்லி முடித்தான்.

“ஐயோ தவமிருந்து பெத்த பிள்ளயைத் தொலைச்சிட்டு நிக்குறேனே” என்று தலை தலையாய் அடித்துக்கொண்டு கதறிய பூரணியின் குரல்கேட்டு வீட்டில் இருந்த மற்றவர்கள் வாசலுக்கு வந்தனர்.

மதுரன் மற்றவர்களிடம் விஷயத்தைக் கூறும்போது ஆம்புலன்ஸ் வீட்டு வாசலில் வந்து நின்றது. இரண்டு பேர் மணிவண்ணனின் உயிரற்ற உடலைத் தூக்கிவருவதைக் கண்ட பூரணி நிலை தடுமாறி மயங்கி சரித்தார்.

தன்னுடைய மூத்த மகனை இழந்ததை சோகத்தை நம்ப முடியாமல் வேகமாக இளைய மகனுக்கு அழைக்க மறுபக்கம் இளஞ்செழியன் போனை எடுத்து,“ஹலோ அப்பா எப்படி இருக்கீங்க? வீட்டில் எல்லோரும் நல்லா இருக்காங்களா? யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லையே?” என்று விசாரிக்கும் போது அவரின் பின்னோடு தாயின் கதறல் சத்தம் காதில் விழுந்தது.

ஏதோ விபரீதம் என்று உணர்ந்து, “அப்பா யாருக்கு என்னாச்சு?” என்றான்.  

அடுத்த நொடியே உடைந்த குரலில், “டேய் நம்ம மணிவண்ணன் பால்டாயில் குடித்து இறந்துடாம்லே. நீயும், தம்பியும் வெரசா கிளம்பி ஊருக்கு வாங்கலே” என்றார்.

ஒரு நிமிடம் உலகமே காலடியில் நழுவியது போன்ற உணர்வு. மீசை முறுக்கிவிட்டு வெள்ளை வேட்டியைத் தூக்கி கட்டிக்கொண்டு அவன் நடந்து வரும் அழகைக் கண்டு ஊரே வியக்கும். அப்படியொரு ஆண்மகன் தற்கொலை செய்தான் என்பதை நம்ப முடியாமல் அதிர்ச்சியில் சிலையென உறைந்தான்.

“அப்பா.. பொய் சொல்லாதிய… அண்ணா அப்படியெல்லாம் செய்யற ஆளில்ல” என்ற இளஞ்செழியன் விழிகள் கலங்க தொடங்கியது.

அவர் மெளனமாக இருக்க பின்னோடு கிராமத்தில் ஆண்கள் இறந்தால் வயதானவர்கள் பாடும் ஒப்பாரி பாடலைக்கேட்டபிறகு, “நான் தம்பியை அழைத்துக்கொண்டு உடனே கிளம்பி வருகிறேன்” என்று போனை வைத்தான்.

வீட்டு ஹாலில் அமர்ந்து நியூஸ் சேனல் பார்த்த தம்பியிடம், “டேய் வேந்தா சீக்கிரம் உடையை மாற்றிவிட்டு வா. நம்ம இருவரும் இப்போதே குற்றாலம் போகணும்” என்று சொன்ன தமையனை ஏறிட்டவனின் புருவங்கள் முடிச்சிட்டது.

அவனின் விழியிரண்டு கலங்கி சிவந்திருப்பதைக் கண்டு, “அண்ணா யாருக்காவது பிரச்சனையா?” விசாரித்தவனின் மனக்கண்ணில் மணிவண்ணனின் பிம்பம் தோன்றி மறைந்தது.

“அண்ணனுக்கு எதுவும் இல்லையே” அவன் கேட்கும்போது தன் அழுகையை அடக்க முயன்று தோற்ற இளஞ்செழியன் விஷயத்தை சொல்லாமல் தம்பியின் தோளில் முகம் புதைத்து கதறினான்.

அதிலேயே விஷயம் விலகிவிட, “அண்ணனுக்கு என்னாச்சு?” அடுத்த கேள்வியைக் கேட்டான்.

“அண்ணன் பால்டாயில் குடித்து இறந்துவிட்டதாக அப்பா போன் பண்ணிருக்காருடா. நம்ம இருவரும் சீக்கிரம் போயாக வேண்டும்” விஷயத்தை போட்டு உடைக்க மேகவேந்தன் தமையனின் தோளில் முகம் புதைத்து அழுதான்.

அடுத்தடுத்து செய்ய வேண்டிய விஷயத்தை மனதினுள் திட்டமிட்டு, மும்பையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அடுத்த பிளைட்டில் ஏறினர்.

மற்றொரு பக்கம் மணிவண்ணன் இறந்த விஷயம் ஊருக்குள் தீயாய் பரவ தொடங்கியது.

காலையில் கிராமத்து ஆட்கள் எல்லாம் தர்மசீலன் வீட்டை நோக்கி செல்வதைக் கண்டு, “என்னாச்சு எதுக்கு எல்லாம் இப்படி போறீங்க?” என்று ஒரு பெண்ணிடம் விவரம் கேட்டாள்.

“குழலி நம்ம தர்மசீலன் ஐயா மூத்த பேரன் இன்னைக்கு பால்டாயிலை குடிச்சி இறந்துடுச்சு” என்று சொல்ல அதிர்ச்சியில் சிலையென உறைந்தாள் கார்குழலி.

அன்று நடந்தது மனதில் படமாக ஓட, ‘என்னால்தானோ? நான் சம்மதம் சொல்லியிருந்த இன்னைக்கு இந்த உசுரு பூமில இருந்திருக்குமே.. தம்பிக்காக எதவேணும் என்றாலும் செய்வான்னு ஊருக்குள் சொன்னதை இறந்து உண்மையாக்கிட்டாரோ.. என்னால ஒரு உசுரு போயிருச்சே..’ என்று மனதினுள் நினைத்தவள் எப்படி வீடு வந்து சேர்ந்தாள் என்று கேட்டால் அது அவளுக்கே தெரியாது என்று சொல்லலாம்.

அதே நேரத்தில் இந்த தகவல் மனோகரின் மூலமாக மகிழ்வதனியின் காதுகளுக்கு எட்டிட, “அப்பா என்ன சொல்றீய? அவரு அப்படியெல்லாம் செஞ்சிருக்க வாய்ப்பே இல்ல” என்றாள் உறுதியாக.

“நம்ம நினைக்கிற மாதிரி இல்லம்மா. அந்த புள்ள இறந்து ரெண்டு மணிநேரமாச்சு. ஊரே பெரியவர் வூட்டுல தான் கூடியிருக்கு” மகளிடம் கூறியவர் தர்மசீலன் வீட்டிற்கு சென்றார்.

மணிவண்ணனின் இறப்பு விஷயத்தைக் கேட்டு சற்றே அதிர்ந்த மகிழ்வதனி, ‘நான் அவ்வளவு தூரம் சொல்லியும் இவரு ஏன் இப்படி செஞ்சாரு. கார்குழலி கிடைக்கல என்பதைக் கூட காலப்போக்கில் அவங்க தம்பி மறந்து போகலாம். ஆனால்.. இவரோட இழப்பை எப்படி அந்த குடும்பம் தாங்க போகுது’ என்று நினைத்தவள் தாயிடம் சொல்லிவிட்டு வேகமாக கார்குழலி வீட்டிற்கு சென்றாள்.

அதே நேரத்தில் திருமணமாகி மறுவீடு வந்த வேல்விழி கணவனோடு பஸ்ஸில் வந்து இறங்குவதைக் கண்டு, “யாரு செந்தூரனோட மவ வேல்விழியா?” என்று கேட்டார் வயதான மூதாட்டி ஒருத்தி.

“ஆமா ஆத்தா..” என்ற வேல்விழியின் முகம் அன்று பூத்த ரோஜாவாய் மலர்ந்திருக்க, அவளின் அருகே நின்றிருந்த சுகுமாரன் இது யாரென்று மனைவியிடம் கண்ஜாடையில் கேட்டான்.

அவள் பிறகு சொல்வதாக சைகை செய்ய, “ஆத்தா வேல்விழி எந்த நேரமும் மாமா மாமான்னு உயிரையே விடுவியே.. அந்த மணிவண்ணன் இப்போ உயிரோட இல்லத்தா..” என்று அவளின் மீது சாய்ந்து அழுதார்.

அதைக்கேட்டு திடுக்கிட்ட வேல்விழி, “ஏன் அவருக்கு என்னாச்சு?” என்று அதிர்ச்சியுடன் அவரிடம் கேட்டாள்.

“பய மனசில என்ன நினைச்சானோ தெரியல.. காலையில வயக்காட்டுக்கு போனவன் பால்டாயிலை குடிச்சிட்டு இறந்துட்டான். இப்போ ஊரே அவக வூட்டுலதான் இருக்கு” என்று சொல்ல வேல்விழி கண்ணீரோடு கணவனைப் பார்த்தாள்.

ஏற்கனவே மணிவண்ணன் பற்றி நிறைய விஷயம் கணவனிடம் சொல்லி இருந்தாதால், “என்னபுள்ள இப்படி நிக்குத.. வா முதலில் போய் என்னன்னு பாப்போம்” என்று அவளை அழைத்துக்கொண்டு தர்மசீலன் வீடு நோக்கி சென்றான்.

அந்த காலத்து ஆட்களை போல இல்லாமல் சற்றே படித்திருந்த காரணத்தினால் இருவருக்குமான நட்பை தெளிவாக உணர்ந்திருந்தால் மனைவியுடன் இழவு வீட்டிற்கு சென்றான்.

ரேடியோவில் வயதானவர்கள் பாடும் ஒப்பாரி பாடல் கேட்க, வீட்டின் வாசலில் பந்தல் போடபட்டு ஊரே கூடியிருந்தது. வீட்டின் நடு கூடத்தில் மணிவண்ணனின் உடல் போடப்பட்டிருந்தது. வயதானவர்கள் அனைவரும் அவனை சுற்றி அமர்ந்திருக்க கண்டு உள்ளே நுழைந்தாள் வேல்விழி.

தன்னுடன் சிறுவயதில் இருந்து விளையாடிய மாமனை இந்த கோலத்தில் கண்ட வேல்விழி, “எந்த நேரமும் உதட்டில் சிரிப்பு குறையாம, மீசையை முறுக்கிவிட்டு கம்பீரமாக வலம் வருவீயே.. இப்போ நீயா இப்படி படுத்திருக்கிற.. கண்ணாலம் பண்ணிட்டுப் போகும்போது நல்ல வாழு புள்ளன்னு வாய்நிறைய வாழ்த்தி வழியனுப்பி வச்சியே.. உன்ன இந்த கோலத்தில பார்க்கவா பாவி நான் மறுவீடு வந்தேன்” என்று வாய்விட்டு கதறி அழுதாள் வேல்விழி.

அவள் அழுவதைக் கண்ட சுகுமாரனின் கண்கள் கூட கலங்க, “இந்த ஆத்தாள இப்படி தவிக்க விட்டுட்டு போவத்தான் அன்னைக்கு அம்பூட்டு நேரம் ஏதேதோ பேசினியா.. ஐயோ எம் மவனோட வாழ்க்கை எப்படியெல்லாம் இருக்கோணும்னு கனவு கண்டேன். என்ன வாழவச்ச ராசாவே இப்படி என்ன விட்டுட்டு போயிட்டியே..” என்று தலை தலையாய் அடித்துக்கொண்டு அழுதார் பூரணி.

அவர்கள் அழுவதை வேடிக்கைப் பார்த்த மற்றவர்களின் மனம் கலங்கியது. மற்ற ஏற்பாடுகளை செய்யும் வேலை ஒருபக்கம் வேகமாக நடந்து கொண்டிருந்தது.

ஊரார் சிலர் மற்ற மகன்களைப் பற்றி கேட்க, “தகவல் சொல்லியாச்சு.. வந்துட்டே இருக்காங்க” என்று கூறினார்கள்.

ஒருவழியாக இரண்டரை மணி நேரத்தில் திருவனந்தபுரம் வந்தடைந்த இளஞ்செழியன் மற்றும் மேகவேந்தன் ஏற்போர்ட்டில் இருந்து காரில் தங்களின் பயணத்தை தொடங்கினர்.

தோட்டத்திற்கு நீர் பாய்ச்ச நினைத்து பம்பு செட்டை போட்டுவிட்டு அங்கிருந்த கல்லில் அமர்ந்த கார்குழலி கண்களில் கண்ணீர் நீராய் பெருகி ஓடியது.

அவளை வீட்டிற்குள் காணோம் என்று தேடி வந்த மகிழ்வதனி, “கார்குழலி” என்று அவளின் தோளைத் தொட்டு தன்பக்கம் திருப்பினாள்.

தன் தோழியைக் கண்டவுடன், “வதனி நடந்த சேதி தெரியுமாலே. மணிவண்ணன் இறந்துட்டாராம். நான் கண்ணாலத்துக்கு சம்மதிக்க மாட்டேன்னு சொன்னதுக்கு இப்படி செய்யணுமா சொல்லு.. என்னால ஒரு உசுரு போயிருச்சுன்னு நினைக்க நினைக்க என்னாலே முடியல..” என்று தோழியைக் கட்டிக்கொண்டு அழுதாள்.

அவளின் முதுகை வருடிய மகிழ்வதனி, “இங்கே பாரு இதுக்கெல்லாம் நீ காரணம் இல்ல. இது இப்படித்தான் நடக்கணும்னு அவரோட தலையில எழுதியிருக்கு. அதுக்கு யாரு என்ன செய்ய முடியும்.. நீ இதெல்லாம் மனசில போட்டு குழப்பிக்காதே” என்று சொல்லி அவளைத் தேற்றினாள்.

இங்கே இருவரும் பேசிகொண்டிருந்த அதே நேரத்தில் தர்மசீலன் வீட்டிற்கு வந்து இறங்கினர் இளஞ்செழியனும், மேகவேந்தனும்! அவர்களைக் கண்ட கூட்டத்தினர் இடையே சற்றே சலசலப்பு ஏற்பட்டது.

தன் தமையனை உயிரற்ற சடலமாய் கண்ட தம்பிகள் இருவருமே அதிர்ச்சியில் சிலையென உறைந்து நின்றனர். ஊரில் உள்ள பெரியவர்கள் சிலர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

மணிவண்ணன் இறந்ததை பற்றி விசாரிக்க வந்த போலீஸாரிடம், “மணிவண்ணன் இறந்து கிடந்த பம்பு செட் ரூமில் இந்த கடிதம் கிடைத்தது” என்று சொல்லி ஒரு பேப்பரைக் கொடுத்தான்.

அதைப் பிரித்து படித்த போலீசார், “எனக்கு கொஞ்சநாளாக தீராத தலைவலி இருந்தது. அந்த வலியைத் தாங்க முடியாமல் தான் இந்த முடிவை எடுக்கிறேன். என் தற்கொலைக்கு வேற யாரும் காரணமில்லை” என்று தன் கைப்பட எழுதிய ஒப்புதல் வாக்குமூலம் கிடைக்கவே அவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

“எனக்கு பிடிச்ச பெண்ணைக் கல்யாணம் பண்ணி வைப்பதாக சொன்னீயே அண்ணா. இப்போ நீயே என்னை ஏமாத்திட்டியே” என்று கதறினான்.

அதைக்கேட்டு தன் கண்ணீரைத் துடைத்த வேல்விழி, “கடுகளவு யாருக்கும் கெடுதல் நினைக்காத நீ இப்படியொரு முடிவுக்கு வர அந்த குழலிதான் காரணம். அவ வந்து பேசினதுக்கு பொறவு தான் இதெல்லாம் நடந்திருக்கு. இல்லன்னா என்ற மாமன் அப்படியொரு முடிவெடுக்க வாய்ப்பே இல்ல” ஆதங்கத்துடன் கூறினாள்.

 “புள்ள என்ன பேசுத.. ஒரு பொட்ட புள்ளமேல அபாண்டமா பழி போடாத.. நீ சத்த சும்மா இரு..” என்று அவளை அடைக்கிவிட்டார் தர்மசீலன்.

அதைகேட்ட இளஞ்செழியன் அமைதியாக இருக்க, ‘என்னோட அண்ணன் இறப்புக்கு அவதான் காரணமா? தாயில்லாத கஷ்டப்பட்டவளை உள்ளக்கையில் வைத்து பாத்துக்க நினைச்சதுக்கு நல்ல பாடம் கத்து கொடுத்துட்டா.. என் அண்ணனோட இழப்புக்கு அவ எனக்கு பதில் சொல்லியே ஆகணும்’ என்று நினைத்தவன் கண்களில் பழிவெறி தாண்டவமாடியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!