Vaanavil – 13

images (52)-c26dd537

அத்தியாயம் – 13

மணிவண்ணன் இறந்து இன்றோடு மூன்று மாதம் முழுவதுமாக முடிந்திருந்தது. இதுவரை அண்ணன் இருக்கும் தைரியத்தில் மும்பையில் தங்களின் தொழிலைக் கவனித்து வந்த இளஞ்செழியனும், மேகவேந்தனும் நிறுவனத்தின் மெயின் பிரான்சை சென்னைக்கு மாற்றிவிட்டு குற்றாலத்தில் தங்கிவிட்டனர்.

தர்மசீலன் மற்றும் குணசீலன் இருவரும் காடுகரைத் தோட்டம் என்று அனைத்தையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில், தன் மூத்த மகனின் இழப்பில் இருந்து மீண்டு வருவதற்காக இளைய மகனாக இளஞ்செழியனுக்கு பெண் பார்க்க முடிவெடுத்தனர்.

முதல்நாள் சென்னையில் மீட்டிங் ஒன்றை முடித்துவிட்டு குற்றாலம் வந்து சேர்ந்திருந்தான் இளஞ்செழியன். இரவு உணவின் போது வீட்டில் இருந்த அனைவரும் டைனிங் டேபிளில் சாப்பிட அமர்ந்தனர்.

பூரணி அனைவருக்கும் பரிமாறிக் கொண்டிருக்க, “செழியா உமக்கு பொண்ணு பார்க்கலாம்னு இருக்கோம். நீ என்ன சொல்லுத?” நேரடியாக விஷயத்திற்கு வந்தார் குணசீலன்.

“குணா அவனிடம் என்னவே கேள்வி. நம்ம சொந்தத்துல ஒரு பொண்ணு பார்த்து கட்டுன்னு சொன்னால் கண்ணாலம் பண்ணிக்க போறான்” என்ற  தர்மசீலனின் பார்வை இளஞ்செழியன் மீது படிந்து மீண்டது.

அது எதையும் காதில் வாங்காமல் அவன் அமைதியாக சாப்பிட, “எம் மூத்த பேரனுக்கு தான் ஒரு கண்ணாலம் பண்ணி பாக்க நமக்கு கொடுத்து வைக்கல. இவனோட கண்ணாலத்தை ஊரே மூக்கில் விரல் வைக்கும்படி நடத்திபோடோணும்” என்றார் செண்பகம்.

“அம்மா நீங்க சொன்னா சரிதான். ஆனா அவனுக்கு விருப்பமான்னு தெரியாம நம்ம ஒரு முடிவுக்கு வர முடியாதுல்ல” இப்போது குணசீலன் பார்வை மகனின் மீது நிலைத்தது.

மேகவேந்தன் மெளனமாக இருக்க, “எனக்கு இப்போதைக்கு கண்ணாலம் செய்ய இஷ்டமில்ல. முதலில் தம்பிக்கும், அவன் விரும்பிய பொண்ணுக்கும் கண்ணாலத்தை முடிங்க. மத்ததை பொறவு பேசலாம்”  பாதி சாப்பாட்டில் கை கழுவிட்டு எழுந்தான்.

“ஏம்லே பாதி சாப்பாட்டில் எழுந்து போற.. என்ன  பழக்கம்லே இது?”  பூரணி தன் மகனை அதட்டினார்.

அதைக் காதில் வாங்காமல் இளஞ்செழியன் சென்றுவிட,“என்னப்பா இவன் பிடிகொடுக்காம பேசிட்டு போறான். இவனிருக்க இளையவனுக்கு எப்படி கண்ணாலம் செய்யறது?” என்றார் குணசீலன் ஆதங்கத்துடன்.

அவர் பதில் சொல்லும் முன்னர், “இவனால தாம்லே என் மூத்த பேரனோட உயிரே போச்சு. அவ இந்த வீடுக்கு மருமவளா வரவே கூடாதுவே” செண்பகம் கடைசி பேரனை முறைத்தார்.

அதுவரை அமைதியாக இருந்த மேகவேந்தன், “எனக்கு அந்த பொண்ணுதான் வேணும். வேற எந்த பெண்ணையும் கல்யாணம் கட்டிக்கிட மாட்டேன்” தன் முடிவினைக் கூறி அனைவரையும் அதிர வைத்தான்.

அங்கிருந்த நால்வரும் அதிர்ச்சியில் அமர்ந்திருக்க, “ஏம்லே அண்ணன்  உயிரை வாங்கின பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்லுத.. இது அந்த ஆண்டவனுக்கே அடுக்காதுலே” செண்பகம் பேரனிடம் சண்டைக்கு வந்தார்.

அவர் சொல்லும் எதையும் காதில் வாங்காமல், “எனக்கு அவதான் வேணும். இந்த முடிவில் எந்தவொரு மாற்றமும் இல்ல” என்று கத்திவிட்டு தட்டைத் தள்ளிவிட்டு எழுந்து சென்றான்.

இரண்டு மகன்களும் அடுத்தடுத்து தந்த அதிர்ச்சியில் இருந்து வெளி வர முடியாமல் செண்பகம், தர்மசீலன், குணசீலன் மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள, அனைவருக்கும் சாப்பாட்டைப் பரிமாறியதோடு தன் கடமை முடிந்ததென்று அடுக்களைக்குள் தஞ்சம் புகுந்தார் பூரணி.

அவர்களிடம் கோபமாக பேசிவிட்டு அறைக்குள் நுழைந்த மேகவேந்தன் தன் அண்ணனின் புகைப்படத்தை எடுத்து மார்புடன் சேர்த்து அணைத்துக் கொண்டான். விவரம் தெரிந்த நாளில் இருந்து அவனை மார்மீதும், தோள்மீது போட்டு வளர்த்தவன் இன்று உயிரோடு இல்லை என்று உண்மையை அவனால் சீரணிக்க முடியவில்லை.

எவ்வளவுநேரம் அப்படி அமர்ந்திருந்தானோ தெரியாது. வாசலில் நிழலாட கண்டு அவன் நிமிர, “என்ன இன்னும் தூங்கவில்லையா?” என்றபடி அறையினுள் நுழைந்தான் இளஞ்செழியன்.

அவனின் அருகே அமர்ந்தவன், “நீ அந்த பெண்ணை உண்மையாகவே விரும்புகிறாயா? இல்ல அண்ணனைக் கொன்றவளை பழிவாங்கும் எண்ணத்துடன் இருக்கிறீயா?”தமையனின் புகைப்படத்தை வாங்கினான்.

சிறிதுநேரம் அங்கே மௌனம் நிலவியது.

“அவளைக் கல்யாணம் செய்து கைக்குள் வைத்து பாத்திரமாக பார்த்துக்க நினைச்சேன் அண்ணா. ஆனால் அவ தங்கம் இல்ல தகரம்னு தெரிஞ்சிடுச்சு” அவன் பாதியில் நிறுத்திட, அவனின் மனநிலையைத் துல்லியமாக உணர்ந்தான் செழியன்.

அவனுக்கு என்னவென்று ஆறுதல் சொல்ல என்று அவனுக்கே புரியவில்லை. ஆனால் அண்ணனைக் காரணம் காட்டி தம்பி ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் கேள்வி குறியாக்குவதைக் கைகட்டி நின்று வேடிக்கைப் பார்க்க முடியவில்லை.

மெல்ல அவனின் கைப்பிடித்து தட்டிக் கொடுத்தவன், “ஒரு உயிரிழப்பை நம்ம யாராலும் ஈடு செய்ய முடியாதுதான். அன்னைக்கு என்ன நடந்தது யார் என்ன பேசினா அண்ணன் ஏன் தற்கொலை செய்தது என்று யாருக்குமே தெரியாது. அப்படியிருக்க அந்த பெண்ணை மற்றும் குற்றவாளி ஆக்க நினைக்காதே வேந்தா. எந்தவொரு நாணயத்திற்கும் இரண்டு பக்கம் உண்டு” என்று தம்பிக்கு எடுத்து சொல்லி புரியவைக்க முயற்சித்தான்.

சட்டென்று அவனின் கையைத் தட்டிவிட்டவன், “அவளோட இரண்டு முகத்தையுமே நான் பார்த்துட்டேன் அண்ணா. நம்ம அண்ணனை இழந்து நான் துடிக்கும் துடிப்பை அவளும் உணர்ந்தாகணும். அவளுக்கு பாவம் பார்த்தவரை போதும். இனிமேல் என் திருமண விஷயத்தில் தலையிடாதே” முகத்தில் அடித்தாற்போல கூறிவிட்டு படுக்கையில் படுத்து கண்மூடினான்.

 ‘ஒரு நொடியில் தன்னையே எடுத்து எறிந்து பேசிவிட்டானே’ என்ற  வருத்தம் இளஞ்செழியன் மனத்தைக் கவ்வியது. ஆனால் அதை நினைத்து அவனை வெறுக்க முடியவில்லை. விவரம் தெரிந்த நாளில் இருந்து பாசத்தைக் கொட்டி வளர்த்த அண்ணனை இழந்துவிட்டதை தாங்க முடியாமல் இப்படியெல்லாம் செய்கிறான் என்று புரிந்து கொண்டான்.

மணிவண்ணன் மீது அவனைவிட இருமடங்கு பாசம் வைத்திருந்த இளஞ்செழியன், ‘அண்ணா நீ இப்படியொரு முடிவு எடுக்கும் முன்னாடி எங்களை யோசித்திருக்கலாம். அந்த பெண் மீது பழிவிழும் என்று தெரிந்திருந்தால் நீ இப்படியொரு முடிவெடுத்திருக்க மாட்ட இல்ல’ என்று நினைத்தான்.

மேகவேந்தன் கட்டாயம் கார்குழலியைப் புரிந்து கொள்வான் என்ற எண்ணத்துடன் அவனருகே படுத்து விழி மூடி உறங்கினான்.

வானில் இருளைப் போக்கி வெளிச்சம் தருவதற்கு என்று கிழக்கே செங்கதிர் கொண்டு உதயமானான் கதிரவன். காலை நேரம் என்பதால் ஆற்றில் குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு வரலாம் என்ற முடிவில், “அம்மா நான் ஆத்துக்கு போயி குளிச்சிட்டு வரேன்” அங்கிருந்து கிளம்பிச் சென்றான் இளஞ்செழியன்.

காலைநேரம் என்பதால் காலை சீக்கிரமே  எழுந்து குளித்துவிட்டு தயாராகி வெளியே வந்தாள். அன்று நிறுவனம் செல்ல மனமில்லாத காரணத்தினால், “அம்மா நான் கொஞ்சநேரம் ஆத்தங்கரை வரை நடந்துட்டு வரேன்” என்றாள்.

தன் மகளை வினோதமாகப் பார்த்த பரிமளா, “இன்னும் அன்னைக்கு நடந்ததை மறக்காமலே இருக்கியா?” மெல்லிய குரலில் மகளிடம் கேட்டார்.

பல வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்வினையும், அந்த நிகழ்வு தந்து சென்ற பாதிப்பையும் அவளால் கொஞ்சம் கூட மறக்க முடியவில்லை. ஒவ்வொரு நாளும் அவனை நினைத்தே நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தாள்.

“அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாதும்மா. உங்களுக்கு எல்லாம் அவன் என்னோட நண்பன் அவ்வளவுதான். ஆனால் எனக்கு அவன் ரொம்ப ஸ்பெஷல். அவனை உயிராக நேசிச்சிட்டு இருக்கிற கிட்ட மறப்பதைப் பற்றி பேசிறீங்களே..” இல்லாத ஒருவனின் மீது வளர்த்த காதலைத் தாயிடம் சொல்லும்போதே உடைந்து அழுதாள்.

 மெல்ல மகளின் முதுகை வருடிவிட்டு, “வதனி நீ கிடைக்காததை நினைத்து வருத்தபட்டு உம் வாழ்க்கையைக் கொஞ்சம் கொஞ்சமா தொலைச்சிட்டு இருக்கிற.. நானும், அப்பாவும் இல்லன்னா உம் வாழ்க்கை என்னாகும்னு யோசிச்சு பாரு புள்ள” கலங்கிய கண்களோடு கூறினார்.

பெற்றவர்களுக்கு பிறகு தனக்கொரு துணை வேண்டும் என்று அவளுக்கும் புரியவே செய்தது. ஆனால் தன்னுடைய மனநிலை புரிந்த நபரைக் கணவனாக அடைய வாய்ப்பில்லை என்று நினைக்கும்போது காரணமே இல்லாமல் இளஞ்செழியன் முகம் மனதினுள் தோன்றி மறைந்தது.

“என் தலையெழுத்து என்னவோ அது நடக்கட்டும். ப்ளீஸ் தயவு செய்து கல்யாணம் பண்ணிக்க மட்டும் சொல்லாதிய அம்மா” கையெடுத்து கும்பிட்ட மகளைப் பார்த்து தாயின் மனம் ஊமையாய் கண்ணீர் வடித்தது.

மேலும் அங்கிருந்தால் தாயின் மனம் வலிக்கும் என்று நினைத்தவள், “நான் ஆத்தங்கரை வரைக்கும் போயிட்டு வரேன்” என்றவள் அங்கிருந்து கிளம்பி மெல்ல நடக்க தொடங்கினாள்.

தென்னை மரத்தோப்பின் நடுவே நடந்து சென்றவளின் எதிரே சட்டென்று அவனின் உருவம் நடந்து வருவதைக் கண்டு, “என்ன இன்னைக்கு இவ்வளவு தூரம் வந்திருக்கிற?” என்ற கேள்வியுடன் அவனை ஏறிட்டாள்.

“என்னையே நினைச்சிட்டு இப்படியே எம்புட்டு நாளைக்கு உன்னை நீயே ஏமாத்திக்க போறவ” அவளைப் பார்த்தபடியே கேட்க, சிலநொடிகள் அசைவற்று அங்கேயே நின்றுவிட்டாள் மகிழ்வதனி.

“ம்ஹும்.. எம் கேள்விக்கு பதில் சொல்லு புள்ள” என்றான் அவன்.

“இன்னும் எவ்வளவுநாள் முடிவுமோ அவ்வளவு நாள்” என்றாள் வரவழைக்கப்பட்ட சாதாரண குரலில்

“நீ உன்னையே ஏமாத்திட்டு இருக்கிறன்னு புரியுதா?” – அவனின் உருவம்.

அதற்கு பதில் சொல்லாமல் நடந்தவள் நேராக ஆற்றங்கரை படித்துறை வந்து அமர அவளின் அருகே அமர்ந்த அந்த உருவத்திடம், “எனக்கு எல்லாமே புரியுது. ஆனால் என்னால் உன்னை மறக்க முடியல. நீ ஏன் இதை புரிஞ்சிக்காமல் பேசற?” என்று கண்ணீரோடு அந்த உருவத்தை ஏறிட்டாள்.

“நான் வராமல் போயிட்டா உன் வாழ்க்கையை நீ அமைச்சுக்குவ இல்ல” என்றபோது ஆற்றங்கரை நீரின் சலசலப்பைக் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள்.

இளஞ்செழியன் இடுப்பளவு தண்ணீரில் மூழ்கி எழுந்தவன் வெற்று மார்பினை மறைக்க வெள்ளை நிற துண்டை மூடிக்கொண்டு மெல்ல வந்து அவளின் மறுபக்கம் அமரந்தான்.

அவனைக் கண்டதும் திகைத்த மகிழ்வதனி இடதுபக்கம் பார்க்க அவனின் உருவம் மெல்ல காற்றுடன் கலைந்து சென்றதைக் கண்டு அவளின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

விவரம் தெரிந்த நாளில் இருந்து உள்ளத்தில் பொத்தி வைத்திருந்த காதலை நினைத்து, “நீ ஏன் என் வாழ்க்கையில் வந்த செழியா? கார்காலத்தில் வானவில் வருகின்ற மாதிரி அபூர்வமாக அவனோட உருவத்தைப் பார்த்து சந்தோஷப்பட்டு இருந்தேன். உன்னால் எல்லாமே போச்சு” வாய்விட்டுக் கதறி அழுத மகிழ்வதனி அவனை நில்லாமல் அடித்தாள்.

அவளின் அத்தனை அடியையும் வாங்கிக்கொண்டு, “உன்னால்தான் வந்தேன்னு நீ என்னைக்கு புரிஞ்சிக்க போற வதனி. இதுவரை நீ வாழ்ந்தது வாழ்க்கை இல்ல. இனிமேல் நீ வாழப்போவது தான் வாழ்க்கை” அவளின் மனநிலை உணர்ந்து அவன் பதில் தந்தான்.

“இல்ல என்னால் அவனை மறக்க முடியாது” இரண்டு காதுகளையும் பொத்திக்கொண்டு சத்தமாக கத்தியவள் வேகமாக எழுந்து சென்றுவிட, இளஞ்செழியனுக்கு மழையடித்து ஓய்ந்தது போல தோன்றியது.

தன்னை அடித்ததைக் கூட உணராமல் கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்டு விறுவிறுவென்று நடந்து செல்லும் அவளின் உருவம் மனதில் ஆழ பதிந்து போக, ‘எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வேந்தனின் திருமணத்தை முடிக்க வேண்டும்..’ என்ற முடிவிற்கு வந்தான்.

அடுத்தடுத்து வந்த நாட்களில் ஓரளவு வீட்டினர்களை சமாளித்து மனோகர் – பரிமளாவிடம் கார்குழலியைப் பெண் கேட்க வைத்தனர். இந்த திருமணத்தில் மற்றவர்கள் யாருக்கும் கடுகளவு விருப்பமில்லை என்றபோதும், வேந்தனின் பிடிவாதம் அறிந்து விட்டுக் கொடுத்தனர்.

தன்னால் ஒரு உயிர் போய்விட்டது என்ற குற்ற உணர்வில் இருந்து தப்பிக்க நினைத்த கார்குழலியும் வேந்தனை திருமணம் செய்ய முழு மனதாக சம்மதித்தாள். ஊர் பெரியவர்களை அழைத்து முறையாக மேகவேந்தனுக்கும், கார்குழலிக்கும் பரிசம் போட்டு திருமணத் தேதியைக் குறித்தனர்.

“இவ உங்களோட பொண்ணு இல்லை என்றாலும் பெத்தவங்க ஸ்தானத்தில் இருந்து நீங்க செய்ய வேண்டிய அனைத்தையும் செய்யணும். பொறவு பொண்ணுக்கு போட வேண்டிய நகைநட்டு, சீரெல்லாம் முறைப்படி செய்வீங்கன்னு எதிர்பாக்கிறோம்” செண்பகம் ஊரார் நடுவே கறாராகக் கூறினார்.

“அதுக்கு என்னங்க எங்களுக்கு மகிழ்வதனி எப்படியோ அப்படித்தான் கார்குழலியும் அதனால் அவளுக்கு செய்ய வேண்டியதை நாங்க செய்யறோம்” என்று வாக்கு கொடுத்தார் மனோகர்.

தனக்கு இத்தனை வருடங்களாக செய்த உதவியோடு இதுவும் சேரவே, ‘ஐயோ இவங்களுக்கு இன்னும் என்னவெல்லாம் சிரமம் தர போறேன்னு தெரியல’ என்ற எண்ணத்துடன் கலங்கிய கண்களோடு சபையினர் நடுவே அமர்ந்திருந்த மேகவேந்தனைப் பார்த்தாள் கார்குழலி.

சிறுதுளி விஷம் விழுந்தால் பாலும் விஷமாகும் என்பது போல, வேல்விழி ஆதங்கத்துடன் சொன்ன வார்த்தைகள் அவனின் மனதில் நஞ்சாய் மாறி கலந்துவிடவே, ‘உன்னைப் பழிவாங்கியே தீருவேன்’ என்று உதட்டசைவால் அவளுக்கு உணர்த்தினான்.

அதைப் புரிந்துக்கொண்டு அவளின் மனம் வலிக்க, “அக்கா மாமா ரொம்ப அழகாக இருக்காரு இல்ல”அவளின் பின்னோடு நின்றிருந்த அனிதாவும், காயத்ரியும் சிரித்தபடி கேட்டனர்.

“ஆமாம்மா ராவணனை போல அழகாகவே இருக்காரு” என்று சொல்ல சரவணன், “என்னக்கா” குழப்பத்துடன் அவளை ஏறிட்டான். அவள் பதில் சொல்லாமல் சிரித்து மழுப்பினாள்.

தம்பிக்கு பரிசம் போடும் அதே நாளில் இளஞ்செழியன் முக்கியமான மீட்டிங் ஒன்றில் கலந்துகொள்ள சென்னை சென்றுவிட, மகிழ்வதனி தன் தொழிலை மேலும் விரிவுபடுத்த நினைத்து புதிதாக விலைக்கு வந்த நிறுவனத்தை வாங்கும் முடிவுடன் பெங்களூர் வரை சென்றிருந்தாள்.

மேகவேந்தன் – கார்குழலி திருமணத்திற்கு கட்டாயம் வந்துவிடுவதாக உறுதியாக கூறிவிட்டு கிளம்பி சென்றிருந்தாள். அடுத்த பதினைந்தாவது நாள் திருமணம் என்ற காரணத்தினால் வேலைகள் படு மும்பரமாக நடைபெற்றது.

சரியாக திருமணத்திற்கு ஒரு வாரமிருக்கும் நிலையில் சரவணனை சந்தித்து, “எங்க உறவினர் ஒருத்தர் ரொம்ப சீரியசான நிலையில் நிலக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருப்பதாக தகவல் வந்திருக்கு. நானும், அம்மாவும் போயிட்டு வரோம். நாங்க வரும்வரை மற்ற வேலைகளைக் கவனி” அவனிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு கார்குழலிக்கு நகை எடுக்க நிலக்கோட்டை புறப்பட்டுச் சென்றனர்.