Vaanavil – 15

28d408c83493f4c63c19fd8822df8bfa-ef900b9f

Vaanavil – 15

அத்தியாயம் – 15

பரிமளா இறந்த செய்தியை அறிந்த அக்கம்பக்கத்தினர் வந்து துக்கம் விசாரித்து செல்வதுமாக இருந்தனர். அந்த சமயத்தில் பைக்கில் வந்து  இறங்கிய இளஞ்செழியன் வீட்டிற்குள் நுழைந்தான்.

அவனைப் பார்த்தும் அங்கிருந்த சிலர் வாய்க்கு வந்த காரணத்தைக் கூறி விடைபெற்றுச் செல்ல, அவன் வந்ததை உணராமல் தாயின் புகைப்படம் முன்பு விளக்கேற்றி வைத்துவிட்டு அழுதபடி அமர்ந்திருந்தாள் மகிழ்வதனி.

இதுநாள்வரை யாருடைய கையையும் எதிர்பார்க்காமல், தைரியமான பெண்ணாகவே பார்த்திருந்த அவளை இப்படியொரு நிலையில் பார்த்தும் செழியன் கண்கள் தானாக கலங்கியது.

அவள் உதட்டைக் கடித்து கண்ணீரை அடக்குவது புரியவே மெல்ல அவளருகே அமர்ந்து, “மகிழ் நீ இப்படி அழுவதால் நடந்த எதுவும் மாறிவிட போறல்ல. அதனால முடிந்தவரை நிதர்சனத்தை ஏத்துக்க முயற்சி செய்” அவளுக்கு ஆறுதலாக அவளை அணைத்துக் கொண்டான்.

அவனது கைவளைக்குள் பாதுகாப்பை உணர்ந்த வதனி, “இத்தனை நாளாக எனக்கு பக்கபலமாக இருந்த அப்பா அரை உயிராக ஹாஸ்பிட்டலில் கிடக்கிறாரு. அம்மா இப்படி இறந்து போவாங்கன்னு நான் நினைக்கவே இல்ல” என்றவளால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

அவளின் பார்வை வீடெங்கும் ஒரு முறை வலம் வந்தது. எந்தப்பக்கம் திரும்பினாலும் தாய் – தந்தையின் பிம்பங்கள் தோன்றி மறைய, “எவ்வளவு சந்தோஷமாக வாழ்ந்த வீடு. இனிமேல் நான் மட்டும் தனியாக எப்படி வாழ போறேன்னு தெரியல” என்றவள் திடீரென்று எதையோ நினைத்து தலை தலையாக அடித்துக்கொண்டாள்.

அவளின் செயலுக்கான அர்த்தம் புரியாமல், “ஹே என்னடி லூசு மாதிரி பண்ற?” அவன் பதறித் தடுக்க வரவே, “ஆமா நான் லூசுதான். அதனால் தான் என்னைக்கோ செத்துப்போன ஒருத்தனை நினைச்சுட்டே கல்யாணம் வேணாம்னு இருந்துட்டேன். அன்னைக்கு அவன் என்னை தவிக்கவிட்டு போன மாதிரியே, இன்னைக்கு அம்மாவும் என்னை விட்டுட்டு நிரந்தரமாக போயிட்டாங்க” என்று முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.

அவளை என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று அவனுக்கே தெரியவில்லை. தாயை இழந்த இளங்கன்று கதறுவதைப் பார்க்க முடியாமல், “இப்படி பேசினால் மட்டும் எல்லாமே மாறிவிட போகுதா?” என்றவனின் குரலில் வருத்தம் இழையோடியது.

அவனது கேள்விக்கு அவளிடம் பதிலில்லை. அடுத்ததாக அவன் சொன்ன எதையும் அவள் காதில் வாங்காமல் அழுதுக்கொண்டே இருந்தாள். தன்னுடைய எந்த விளக்கமும் அவளுக்கு புரிய போவதில்லை என்று உணர்ந்து, ஒரு முடிவிற்கு வந்தான்.

அவளின் முகத்தை நிமிர்த்து பெருவிரலால் கண்ணீரைத் துடைத்துவிட்டு எழுந்து நின்று, அவள் முன்பு தன்னுடைய வலது கரத்தினை நீட்டினான். அவன் கண்களில் தெரிந்த நம்பிக்கை அவளுக்கு புது தைரியத்தைக் கொடுக்க, அவன் நீட்டிய கரங்களைக் கெட்டியாக பிடித்துக்கொண்டாள்.

அவளது இந்த செய்கை அவன் மனதைத் தொட, ‘இன்னைக்கு பிடிக்கின்ற கையை என்னைக்கும் விட மாட்டேன்’ என்ற உறுதியுடன் அவளை அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே வர, அக்கம்பக்கத்தினர் பார்வை முழுதும் இருவரின் மீது மட்டும் நிலைத்தது.

அவள் எதுவும் பேசாமல் தலைக்குனிய, மக்களின் நடுவே சலசலப்பு ஏற்பட்டது. நகரத்தில் யார் என்ன செய்தால் நமக்கென்ன என்று ஒதிங்கி போவதுபோல, கிராமமக்கள் இருக்க மாட்டார்கள். கிராமத்தில் முக்கால்வாசி மக்கள் சொந்த இல்லத்தில் இருப்பவர்கள்.

அத்துடன் அங்கே பக்கத்தில் உற்றார், உறவினர் என்று அனைவரும் இருப்பதால், அவர்களின் முன்பு தவறு நிகழ்வது என்பது நடக்காத ஒன்று. அதே நேரத்தில் நேர்மையான வழியில் செல்பவர்களுக்கு உயிரையும் கொடுக்க துணிவதும் உண்டு. பல நேரங்களில் தவறு என்று தெரிந்தால் தலையெடுக்க தயங்காத மக்கள்.

அனைவரின் பார்வையும் தங்களின் மீது படிவத்தை உணர்ந்த செழியன், ‘இன்னைக்கு இவளை இப்படியே விட்டுவிட்டு போனால், நாளை இவளின் நிலையை நினைத்து நான்தான் வருந்தணும். இனி என்ன நடந்தாலும் சரி, அவளை யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுகொடுக்க மாட்டேன்’ என்று மனதிற்குள் நினைத்தபடி வீட்டைப் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு அவன் பைக்கில் ஏறினான்.

அந்த வீட்டை கண்ணீரோடு நிமிர்ந்த பார்த்த மகிழ்வதனி நெஞ்சைக் கல்லாக்கிக் கொண்டு அவனின் பின்னோடு அமர, அந்த ஊரே அவர்கள் இருவரும் செல்வதை வேடிக்கைப் பார்த்தனர்.

இளஞ்செழியன் வீட்டை நோக்கி வண்டியை செலுத்த, அவன் எந்த திசையில் செல்கிறான் என்றுகூட கவனிக்காமல் தாயின் இழப்பிலேயே நின்றது அவளது மனம். பரிமளம் இறந்த செய்தி மெல்ல தர்மசீலன் காதுகளுக்கு எட்டியது.

இந்த விஷயம் அறிந்த சரவணன் தமக்கையிடம் சொல்லிவிட நினைக்க, “நல்ல காரியம் நடந்திருக்கும் வீட்டில் துக்க விஷயம் பேசக்கூடாது” என்று அவனைத் தடுத்துவிடவே, அவன் கலங்கிய விழிகளைத் துடைத்துக்கொண்டு விலகி நின்றான்.

வீட்டின் வாசலில் நின்ற மேகவேந்தன் – கார்குழலி இருவரையும் ஆரத்தி எடுத்து வரவேற்க, ‘இந்த செழியன் எங்கே காணோம்’ என்று பார்வையைச் சுழற்றினார் சத்தியசீலன். அவன் கண்ணுக்குத் தென்படாமல் போகவும் அவரின் மனதில் சிறு சலனம் தோன்றி மறைந்தது.

அவள் வீட்டிற்குள் அழைத்துச் சென்று விளக்கேற்றிவிட்டு வெளியே வர, மணமக்களை அமர வைத்து பாலும், பழமும் கொடுத்தனர். கொஞ்ச நேரத்தில் மற்றவர்களும் செழியனைக் காணாமல் அங்குமிங்கும் தேட, “தம்பி மண்டபத்தில் இருக்கும்போதே கிளம்பிடுச்சுங்க” வேலைக்காரன் ஒருவன் ஓடிவந்து பவ்வியமாக நடந்ததைக் கூறினார்.

வீட்டில் உறவினர்கள் நிறைந்திருக்கும் சமயம் சொல்லாமல் அங்கிருந்து கிளம்ப நினைத்த சரவணனைக் கண்டு, “என்னவே பழக்கம் பழகிற? இந்த வூட்டுல உங்க அக்கால கட்டிக்கொடுத்துட்டு சொல்லாமல் கிளம்புதே! முதலில் உள்ளே போய் அவகிட்ட சொல்லிட்டுப் போ ராசா” என்று உறவுக்கார பெண் ஒருத்தி உரிமையுடன் அதட்டி அவனை வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்.

இத்தனை நாளாக தன்னுடைய அக்காவாக இருந்தவளை இப்போது அடுத்த வீட்டின் மருமகளாக பார்த்த சரவணன் மெல்ல கார்குழலி இருக்கும் அறைக்குள் நுழைய, “என்னவே அங்கன தயங்கி நிக்குதே!” என்று தம்பியை அருகே அழைத்தாள்.

அப்போதுதான் அவன் கண்கள் கலங்கிச் சிவந்து இருப்பதைக் கண்டு, “இப்போ எதுக்காக கண்ண கசக்குற? ஆமா வதனி வீட்டில இருந்து இன்னும் யாருமே வரலயே! தன்னோட பொண்ணுக்கு கண்ணாலம் பண்ணி பார்க்க ஆசைப்பட்டாவ, அதுதான் முடியாமல் போயிடுச்சு. இப்படி என்னோட கண்ணாலத்தை ஏற்பாடு பண்ணிட்டு கடைசிவரை வராமலே இருந்துட்டாவ. என்னவோ மனசே சரியில்ல சரவணா” என்றவளின் குரலில் தவிப்பு அப்பட்டமாக தெரிய, அவளின் கண்கள் லேசாக கலங்கியது.

அவள் சொன்னபிறகும் உண்மையை மறைக்க முடியாமல், “அக்கா நீ நினைச்சாலும் இனிமே அவிய வரமாட்டாங்க” என்றவன் வாயை மூடிக்கொண்டு சத்தமின்றி அழுவதைக் கண்டு, அவளுக்கு பதட்டம் அதிகரித்தது.

இரண்டே எட்டில் தம்பியை நெருங்கியவள், “ஏய் என்னிடம் எதை மறச்சுத் தொலைச்சே! இப்படியே மரமாதிரி நிக்காமல் என்ன நடந்ததுன்னு வாயைத் திறந்து சொல்லுலே” என்று அவள் போட்ட அதட்டலில், பரிமளா இறந்த விஷயத்தை தமக்கையிடம் கூறினான்.

அதைகேட்ட கார்குழலி அப்படியே மடங்கி அமர்ந்து, “அம்மா” என்று கதறி அழுக, அந்த சத்தம்கேட்டு வீட்டில் இருந்த மற்றவர்கள் அவளின் அறைக்கு விரைந்தனர்.

முதல் ஆளாக உள்ளே நுழைந்த பூரணி என்னவென்று விசாரிக்க, “அத்த பரிமளா அம்மா விபத்தில் இறந்துட்டாகலாம். அவங்களுக்கு இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லத்த. இப்போ அப்பாவும் சீரியசான நிலையில ஹாஸ்பிட்டலில் இருக்காங்கன்னு சொல்லுதான். பாவம் அத்த வதனி ஆறுதல் சொல்ல ஆளில்லாமல் தவிச்சிட்டு இருப்பா. நான் போயிட்டு வரட்டுமா?” என்று அழுகையினூடே அவரிடம் விஷயத்தைக் கூறி அனுமதி கேட்டாள்.

அப்போதுதான் திருமணம் முடிந்து இருக்கிறது. கழுத்தில் கட்டிய மஞ்சள் கயிறின் ஈரம் காயும் முன்பே, அவள் இழவு விழுந்த வீட்டிற்கு செல்லணும் என்று அனுமதி கேட்டது செண்பகத்திற்கு கோபத்தை வரவழைத்தது.

“என்னது இழவு விழுந்த வீட்டுக்கு போறீயா? இன்னும் மூணு மாசத்துக்கு அந்த வீட்டு வாசப்படி நீ மிதிக்கக்கூடாது சொல்லிபுட்டேன்” என்றவர் மிரட்டியதும் கண்களின் வழிந்த கண்ணீரோடு பட்டென்று எழுந்து நின்றாள்.

தன்னிலையில் இருந்து அவர்கள் யோசிக்கவில்லையே என்ற ஆதங்கத்தில், “இப்படி ஈவு இரக்கம் இல்லாமல் பேசுதிய? அவிய கொடுக்காமல் இந்த நகைநட்டு, சீரூ செனத்தி எல்லாம் எப்படி வந்துச்சு? அப்படியொரு நல்ல மனசு உடையவங்க இறந்துட்டாங்கன்னு சொல்லிட்டு இருக்கேன். நீங்க என்னன்னா இப்படி ஈவு இரக்கம் இல்லாமல் பேசுதியா!” கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்டு கோபத்துடன் சண்டைக்குப் போனாள்.

வீட்டிற்குள் அடியெடுத்து வைத்த முதல்நாளே அவள் பேசிய பேச்சைக்கேட்டு, “என்னடி வருஞ்சிகட்டிட்டு வர? இங்கன நான் சொன்னதை கேட்டு அடங்கியொடுங்கி அடக்கமாக இருக்கிற வழியப் பாரு. இல்ல அம்புட்டுதான் சொல்லிட்டேன்” என்று கூறியவரின் கோபம் கடைசி பேரனின் மீது திரும்பியது.

அவன் அசைவின்றி நிற்பதைக் கண்டு, “என்னாலே வேந்தா அப்படி செஞ்சு வச்ச சேல மாதிரி நிக்குத? உன் பொண்டாட்டி பேசியது சரியா? எல்லாம் உன்னாலே வந்துதான்லே. இவதான் உன் அண்ணன் உசுருக்கு உலை வைச்சவன்னு தெரிஞ்சும் கட்டிகிட்டு வந்திருக்கியே. உன்னதாம்லே முதலில் அடிக்கணும்” என்றவர் காலில் சலங்கை கட்டிவிட்டது போல ஆட ஆரம்பிக்க, அவரின் சுயரூபம் அறிந்திருந்த மற்றவர்கள் அமைதியாக நடப்பதை வேடிக்கைப் பார்த்தனர்.

ஆனால் கார்குழலி அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அந்த அறையைவிட்டு வெளியேற நினைக்கும்போது, “எங்கடி போறே” என்ற வேந்தனின் குரல் அவளைத் தடுத்தது.

“நான் மகிழின் வீட்டுக்குப் போறேன்” என்று கணவனின் கண்ணைப் பார்த்து பயப்படாமல் கூற, “என்னைய மீறி நீ வெளியே போகக்கூடாது. அதையும் மீறி நீ போறேன்னு முடிவு செய்தால், கழுத்தில் கிடப்பதைக் கலட்டி வைத்துவிட்டுப் போ” குரலை உயர்த்தாமல் தன் கடுமையைக் கட்டிய வேந்தனை அதிர்ச்சியுடன் நோக்கினாள்.

அவனிடம் இப்படியொரு அழுத்தம் இருக்கும் என்று அவள் கனவிலும் நினைக்காததால், “அவங்கதான் அந்த காலத்து ஆள்ளுங்க. ஆனா நீங்களும் ஏன் புரியாமல் பேசறீங்க? அவிய எனக்கு எவ்வளவோ நல்லது செஞ்சிருக்காங்க” அவனுக்கு எடுத்து சொல்லி புரியவைக்க முயன்றாள்.

ஏற்கனவே அவள் மீது கோபத்தில் இருந்த மேகவேந்தன், அவள் சொன்னது எதையும் காதில் வாங்காமல், “உம்மோட விளக்கம் எனக்கு தேவையில்ல. இப்போ நீ அங்கே போகக்கூடாது அவ்வளவுதான்” என்று பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அங்கிருந்து நகரும் முன்பு சரவணன், அனிதா மற்றும் காயத்ரி மீது அவனின் பார்வைப் படிந்தது.

“இதுவே நீங்க இந்த வீட்டுக்கு வருவது கடைசியாக இருக்கணும். இன்னொரு முறை உங்கள இங்கன பார்த்தால் அவ்வளவுதான்” என்று மிரட்டிவிட்டு வெளியேற, நல்லவன் என்று நினைத்து தமக்கையைத் தாரவார்த்து கொடுத்த சரவணனுக்கு வேந்தனின் மற்றொரு முகம் அதிர்ச்சியைக் கொடுத்தது.

இனி நடந்ததை நினைத்து எந்த பயனும் இல்லை என்ற நிதர்சனம் உணர்ந்து, “அக்கா இவிய யாரும் உன்னைய இங்கிருந்து அனுப்ப மாட்டாங்க. எனக்கு நீ மட்டும் இல்ல, வதனி அக்காவும் முக்கியம்தான். அதனால நான் இப்போ கிளம்புதேன்” என்று சொல்லிவிட்டு தன் தங்கைகளை அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேற வாசல்வரை சென்றவன் அப்படியே நின்றான்.

கொஞ்ச தூரத்தில் தன்னுடைய பைக்கில் மகிழ்வதனியை அமரவைத்துகொண்டு கம்பீரமாக வரும் செழியனைக் கண்டு, ‘இவுக எதுக்காக இங்கன வாராகன்னு புரியலயே’ என்ற சிந்தனையுடன் அவன் சிலையாகி நின்றிருக்க, வீட்டிற்கு வந்த உறவினர்களின் நடுவே சலசலப்பு ஏற்பட்டது.

அவன் வீட்டின் வாசலில் வண்டியை நிறுத்திட, அப்போதுதான் வந்திருக்கும் இடத்தைக் கவனித்த மகிழ்வதனி அதிர்ச்சியுடன் இளஞ்செழியனை பார்க்க, “இது எங்க வீடுதான்” அவளின் மனதை படித்தது போலவே கூறினான்.

கடைசி பேரனின் செயலால் ஆத்திரம் அடைந்திருந்த செண்பகம், ‘இவள எதுக்காக இங்கன கூட்டிட்டு வந்திருக்கான்னு தெரியலயே’ என்ற கேள்வியுடன் வாசலை நோக்கி விரைய, மற்றவர்களும் அவரைப் பின்தொடர்ந்தனர்.

அந்த வீட்டைப் பார்த்தும் நெஞ்சில் இனம்புரியாத ஒரு பயம் வர, அங்கிருந்த மற்றவர்கள் மீதும் அவளின் பார்வை கலக்கத்துடன் படிந்து மீள, “இந்த புள்ளயோட அம்மா தவறிச்சுன்னு சொன்னாக. இப்போ எதுக்காக இங்கன இவளை இழுத்திட்டு வந்திருக்கிற?” என்ற கேள்வியுடன் தன் பேரனை எதிர்கொண்டார்.

அவரிடம் இந்த கேள்வியை எதிர்பார்த்து இருந்த இளஞ்செழியன், “இப்போ அவளை பார்த்துக்கொள்ள அங்கே யாரும் இல்ல. இந்த மாதிரி சூழ்நிலையில் இவளை அப்படியே தவிக்க விட்டுட்டு வர மனசில்லாமல் கையோடு கூட்டிட்டு வந்துட்டேன். உங்களுக்கு இந்த விளக்கம் போதுமா?” என்றவன் தன்னவளின் கரம்பிடித்து உள்ளே அழைத்துச் செல்ல முற்பட்டான்.

அவனது செயலைக் கண்டு மற்றவர்கள் அமைதியாக நின்றிருக்க, செண்பகம் பேரனின் வழியை மறித்து நின்று, “ரோட்டில் போற எல்லோரும் வந்து தங்க இது ஒன்னும் சத்திரம் இல்லவே. இவள இப்படியே கொண்டுபோய் விட்டுட்டு வா” என்று கட்டளைப் பிறப்பிக்க, அவனோ அசையாமல் கற்சிலைபோல நின்றது அவரின் கோபத்தைக் கிளறியது.

அங்கிருந்த பெரியவர்கள் அவனுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது என்று யோசித்தனர். இத்தனை நாளாக இல்லாமல் தன்னை எதிர்த்து பேசிய பேரனின் மீதிருந்த கோபம் அப்படியே மகிழ்வதனி பக்கம் திரும்பியது.

“இந்த ஊரே உன்ன பைத்தியம்னு சொல்லுது, ஆனா எனக்கு இப்போதானே புரியுது நீ காரியக் கிறுக்குன்னு. அம்மா தவறிய கையோடு  ஆறோ குளமோ பார்த்து விழுந்து செத்துப் போயிருந்தா நல்லவள்னு சொல்லி இருப்பேன். நீ என்னடான்னா இதுதான் சான்ஸ்னு என் பேரனோடு வந்திருக்கிற இல்ல? ச்சீ நீயெல்லாம் ஒரு பெண்ணா?” என்று கோபத்துடன் வார்த்தைகளை சிதறவிட, அவள் நெருப்பின் மீது நின்றிருப்பதை போல உணர்ந்தாள்.

அவரைத் தடுக்க கார்குழலி வர, “ஏய் இங்கன நின்னு வேடிக்கை மட்டும் பாரு! இல்ல அப்புறம் என்ன செய்வேன்னு தெரியாது” என்று மிரட்டியபடி அவளின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டான். அங்கிருந்த அனைவரின் பார்வையும்  அவர்களின் மீதே நிலைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!