Vaanavil – 6

Keerthy Suresh Images (34)-419eabaf

Vaanavil – 6

அத்தியாயம் – 6

அதுவரை ரைஸ்மில் பற்றிய சிந்தனையில் வண்டியை செலுத்திய மணிவண்ணன் முதலில் கவனித்தது வழியை மறுத்து நிறுத்தபட்டிருந்த காரைத்தான்.

அவன் திட்டுவதற்கு வாயெடுக்கும் முன்பே தம்பியை கண்டுவிட்டவன் தோரணையாக அவனின் அருகே சென்று வண்டியை நிறுத்த, “ஏலே மணி இங்கன தர்மசீலன் அய்யா வூட்டுக்குப் போவுற வழி எதுவே?” பெரிய அண்ணனை வம்பிழுக்கும் நோக்கத்துடன் கேள்வி கேட்டான்.

அவன் வளர்ந்தபோதும் இன்னும் குழந்தைத்தனம் மாறாமல் இருப்பதை நினைத்து வாய்விட்டு சிரித்த மணிவண்ணன், “எம்லே சொந்த வூட்டுக்கு போவ வழி தெரியாம நிக்குதியே.. நீயெல்லாம் எப்படிவ அம்புட்டு பெரிய கம்பெனியே நடத்துற?” என்றான்.

“அதுக்குதாம்ல இளஞ்செழியனை எம்.டி.யா வைச்சிருக்கோம். தம்பிக்கு வேலை கொடுக்காம அவனே அம்புட்டு வேலையும் செய்யுதாம்ல”  என்று சொல்ல பெரியவனுக்கு பெருமை தாளவில்லை.

“நீ  காரை எடுத்துட்டு வீட்டுக்கு போ. நான் புல்லட்டில் உன் பின்னால வருதேன்” என்று சொல்ல மறுப்பாக தலைசைத்தவன், “இந்தாங்க கார் சாவி. நான் புல்லட்டில் வருதேன்.. அப்போதான் பாட்டி – தாத்தா பார்த்து அசந்து போவாக” என்று சொல்லிவிட்டு தமையனின் வண்டியை வாங்கிக் கொண்டான்.

மறுபேச்சு இன்றி புல்லட்டை தம்பியிடம் கொடுத்துவிட்டு மணிவண்ணன் சென்று காரை எடுத்தான். தன்  அண்ணனின் புல்லட்டை வருடிவிட்டு அதில் ஏறியவன் தமையனைப் பின்தொடரந்தான்.

வீட்டின் போர்டிகோவில் காரை நிறுத்திவிட்டு இறங்கிய பெரியமகனைக் கண்டு, “எம்லே நீ புல்லட்டுல தானே ரைஸ்மில்லுக்கு போன.. திடீர்ன்னு கார் எங்கிருந்துல வந்துது?” அடுத்தடுத்து கேள்வியை அடுக்கினார் குணசீலன்.

மணிவண்ணன் பதில் சொல்ல வாய்திறக்கும் முன்பே புல்லட் வரும் சத்தம்கேட்டு மற்றவர்களின் கவனம் அனைத்தும் வாசலின் மீதே நிலைத்தது. வீட்டின் முன்னே புல்லட்டை நிறுத்தி இறங்கி வந்த பேரனிடம், “ஏன் ராசா அம்புட்டு பெரிய ஊருல உனக்கொரு காரு கிடக்கல. போயும் போயும் இந்த தகர டப்பாவாலே உனக்கு கெடச்சுது” என்று சிரித்தபடியே கேட்டார்.

அதைக்கேட்டு அங்கிருந்த அனைவரும் சிரித்துவிட, “ஆச்சி இம்மாம் பெரிய புல்லட்டு உங்க ஊருல தகர டப்பாவா?” என்றான் பேரன்  எரிச்சலோடு.

“பின்ன இல்லையா?” என்றவர் பேரனை வேண்டுமென்று வம்பிற்கு இழுக்க,

“சொந்த ஊருக்கு காருல போன கெத்து இல்லன்னு நினைச்சு மணிகிட்ட புல்லட் வாங்கி ஓட்டிட்டு வந்தால் நீ என்னையே வச்சு செஞ்சிட்ட.. ரொம்ப தரமான சம்பவம் ஆச்சி.. வாழ்நாளுல மறக்கவே முடியாது” என்றவன் பாட்டியின் கன்னங்களை பிடித்து செல்லமாக கிள்ளினான். 

அவனின் முகத்தை இரு கையால் ஏந்தியவர், “நீனு இல்லாமல் வீடே களையிழந்து போயிடுச்சு” என்றவரின் கண்கள் கலங்க பாட்டியை ஆரத்தழுவி சமாதானம் செய்தான்.

அதற்குள் ஆரத்தி தட்டுடன் வந்த பூரணி, “அங்கனயே நில்லு” தன் மகனுக்கு ஆரத்தி எடுத்துவிட்டு நகர குணசீலன் மகனை ஆரத்தழுவி கொண்டார். அதன்பிறகு தர்மசீலன் பேரனை நலம் விசாரிக்க பல நாட்களுக்கு பிறகு வீட்டில் பெரியவர்கள் அனைவரும் கேலியும் கிண்டலுமாய் பேசி சிரிப்பதை மனதிற்குள் ரசித்தான் மணிவண்ணன்.

சிறிதுநேரத்தில் குளித்துவிட்டு வந்தவனை கிராமத்து அசைவ சமையலின் வாசனை நாசியில் நுழைய, “ஹப்பா என்னவொரு வாசனை?” என்று வந்து சாப்பிட அமர்ந்தான் மேகவேந்தன்.

அன்று இளஞ்செழியனைத் தவிர மற்றவர்கள் தாரையில் அமர பூரணி வீட்டு வேலையாளின் உதவியோடு அனைவருக்கும் பரிமாற வெகுநாட்களுக்கு பிறகு திருப்தியாக சாப்பிட்டு எழுந்தவன் படுக்கையில் சென்று விழுந்தான்.

மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்தது..

காலையில் வழக்கம்போல முக்கியமான வேலையெல்லாம் முடித்துவிட்டு வீட்டிலிருந்து கிளம்பிய செழியன் ஒரு நண்பனை வழியனுப்ப ஏர்போர்ட் சென்றபோது செழியன் எதிர்பாராதவிதமாக மகிழ்வதனியை அங்கே சந்திக்க நேர்ந்தது.

காத்திருப்பவர்கள் இருக்கையில் அமர்ந்திருந்தவளைக் கண்டவுடன்,   ‘என்ன மேடம் இங்கே உட்கார்ந்திருக்காங்க’ என்ற சிந்தனையோடு அவளை நெருங்கினான்.

பெண் என்பவள் குனிந்த தலை நிமிராமல் இருக்கவேண்டும் என்ற கட்டுபாடுகளை மீறி நேர்கொண்ட பார்வையுடன் கால்மேல் கால்போட்டு கம்பீரமாக அமர்ந்திருந்தவளின் தோற்றம் அவனின் மனதில் சலனத்தை உருவாக்கியது.

“இப்போ எதுக்குடா இங்கே வந்த” என்ற வாக்கியத்தைக் கேட்டு திடுக்கிட்டவன், ‘நம்மளத்தான் சொல்றாளா’ அவன் சுற்றிலும் பார்வையை சுழற்றினான்.

அவளின் அருகே அவனைத் தவிர வேறு யாருமில்லை என்ற உண்மை உணர்ந்தவன், ‘நல்ல மரியாதையான பொண்ணாக இருப்பான்னு பேச வந்தால் இப்படி நடந்துக்கிறாளே.. செழியா இவளிடமா உன் மனசு சலனப்படணும்’ மனதிற்குள் புலம்பியபடி அவளின் அருகே அமர்ந்தான்.

தன்னருகே யாரோ அமரும் ஆராவாரம்கேட்டு சட்டென்று திரும்பிப் பார்த்தவளின் காதிலிருந்த புளூடூத் பார்த்தும், ‘இவ போனில் யாரோட பேசிட்டு இருப்பா போல. நல்லவேளை நம்மள சொல்லல’ என்று பெருமூச்சை வெளியிட்டான் செழியன்.

அவனை ஏறயிறங்க பார்த்துவிட்டு மறுபக்கம் திரும்பியவள், “உன்னைத்தான் கேட்கிறேன் காதில் விழுகிறதா இல்லையா?” என்று வார்த்தையைக் கடித்து துப்பியவளைப் பார்த்து இளஞ்செழியனின் பொறுமை மெல்ல குறைய தொடங்கியது.

இதெல்லாம் அறியாத மகிழ்வதனி தன்னருகே அமர்ந்திருந்த அவனின் உருவத்துடன் சண்டையிட, ‘நான் அப்படித்தான் வருவேன். உன்னை வழியனுப்ப நான் வராமல் வேற யாரு வருவா?’ என்று அவளை வம்பிற்கு இழுத்தது.

“நீ வந்து வழியனுப்பலன்னா எனக்கு ஊருக்கு போக வழியா தெரியாது பாரு” கோபத்துடன் அந்த உருவத்துடன் சண்டையிட்டாள்.

“அப்புறம் எதுக்கு நீ என்னை நினைச்ச? நீ நினைக்காமல் இருந்திருந்திருந்தா நான் வந்திருக்க மாட்டேன் இல்ல” அவளைப் பார்த்து குறும்புடன் கண்சிமிட்டியது.

தங்கள் இருக்கும் இடத்தை உணர்ந்து தன்னைக் கட்டுபடுத்திக் கொண்டு,  “நீ வேற நேரம் காலம் தெரியாமல் என்னை சோதிக்காதே. மரியாதையாக எழுந்து போயிரு..” என்றவளின் மிரட்டலைக் கண்டு அந்த உருவம் அவளைப் பார்த்து குறும்புடன் கண்சிமிட்டி சிரித்து, “முடியாது” என்றது.

அவளின் காதிலிருந்த புளூடூத் கீழே விழுந்ததைக் கூட உணராமல் பேசிகொண்டிருந்தாள். அவளின் நடவடிக்கையில் வித்தியாசமாக இருப்பதை அப்போது தான் கவனித்தான் செழியன்.

அவளின் இடதுபுறம் அமர்ந்திருந்த செழியன் அவளையே இமைக்காமல் கேள்வியாக நோக்கினான். அந்த பார்வையைக் கூட உணராதவளோ வலதுபுறம் இருந்த அமர்ந்திருந்த அந்த உருவத்துடன் சண்டையிட்டு கொண்டிருந்தாள்.

“இப்போ நீ போகல அப்புறம் நான் உன்னோட பேசவே மாட்டேன்” என்றாள் பிடிவாதமாகவே.

“நான் போறது பற்றி அப்புறம் யோசிக்கிறேன். அந்தப்பக்கம் திரும்பிப் பாரு உன்னை ஒருத்தன் குறுகுறுன்னு பார்த்துட்டு இருக்கான்” என்றதும், ‘யாரது’ என்றவள் சட்டென்று திரும்பிப் பார்த்தாள்.

செழியன் முகத்தை வேறுபுறம் திருப்பிவிட, “ஹலோ மிஸ்டர்” என்று அவனை அழைக்க, “என்ன” என்று திரும்பியவனை விழி விரிய பார்த்தாள்.

செழியன் என்றாலே பெண்கள் எல்லாம் பத்தெட்டு நகர்ந்து நிற்கும் பெண்களின் நடுவே, தன்னை விழிவிரிய பார்த்த அவளின் பார்வை அவனின் உள்ளத்தில் தடுமாற செய்தது. ஏற்கனவே அவளை பார்த்த நொடியிலிருந்து ஏற்றப்பட்ட சலனத்துடன் இந்த தடுமாற்றமும் இணைந்து அவனின் மனதை என்னவோ செய்தது.

இந்த பார்வைக்கு அர்த்தத்தை அவனால் உணரமுடியாவிட்டாலும் தனக்குள் நிகழும் மாற்றத்திற்கு காரணம் காதல் என்ற உண்மையைக் கண்டுபிடித்த செழியன், ‘நானா இவளை காதலிக்கிறேன்’ என்று ஒரு நிமிடம் இமைமூடி திறந்தான்.

காதல் என்று சுற்றிவரும் பெண்களை அவன் ஏறெடுத்தும் பார்த்ததில்லை. எந்தொரு பெண்ணின் மீது ஏற்படாத ஒரு ஈர்ப்பு அவளின் மீது ஏற்பட்டது. அவன் உள்ளத்தை உணர்ந்தநொடியை மனதில் பொக்கிஷமாக சேகரித்தான்.

அவள் அப்போதும் பார்வையை மாற்றாமல் இருப்பதுக்கண்டு, ‘அடியேய் முட்டக்கண்ணி முழியை மாத்துடி’ என்றவன் நினைக்கும் அளவிற்கு இருந்தது அவளின் செய்கை.

அவளின் முகத்தின் முன்னாடி சொடக்கு போட்டு அவளின் கவனத்தை ஈர்த்தான் செழியனைப் பார்த்து அவள் பே என்று முழித்தாள்.

அவளின் நிலையுணர்ந்து மனதிற்குள் புன்னகைத்துக் கொண்டவன், “என்னவோ பேச வந்தீங்க” என்றவன் கேட்க அவளுக்கோ மற்றது எல்லாம் மறந்தே போனது.

அதை வெளிக்காட்டாமல் மனதிற்கு மறைத்து தன்னை நிலைபடுத்திகொண்டு நிமிர்ந்தவள், “ஏன் என்னையே பார்த்துட்டு இருந்தீங்க” என்றாள் கோபமாகவே.

“நான் உங்களைப் பார்த்தது உங்களுக்கு எப்படி தெரியும்?” கேள்வியை அவளின் பக்கம் திருப்பினான்.

அவள் மௌனமாக இருக்க, “ம்ம் சொல்லுங்க மேடம்” என்றவனின் அழைப்பில், “நீங்க பார்த்ததாக என் உள்ளுணர்வு சொல்லுச்சு” அவளின் காரணத்தைக்கேட்டு அவனின் உதடுகள் ஏளனமாக வளைந்தது.

அவளை இமைக்காமல் பார்த்தவனோ, “உங்க மனசுக்கு நான் அவ்வளவு நெருக்கமானவனா?” என்றவன் கிசுகிசுப்பாக கேட்டு புருவம் ஏற்றி இறக்கியவனின் கம்பீரம் அவளின் மனத்தைக் கவர்ந்தபோதும் அவளால் நிதர்சனத்தை ஏற்க முடியவில்லை.

“நான் எப்ப அப்படி சொன்னேன்” அவள் கேள்வியை அவனின் பக்கம் திருப்பினாள். 

“பழக்கம் இல்லாதவங்களை பற்றி உள்ளுணர்வு அவ்வளவு சீக்கிரம் உண்மை சொல்லாது. அப்படி இருக்கும்போது என்னைப்பற்றி உங்க உள்ளுணர்வு எப்படி சொல்லுச்சு” என்று பிளேட்டை திருப்பிப் போட்டுவிட்டான்.

இந்த இரண்டு வருடங்களில் ஆண்களோடு அவள் பழகியபோதும் இவன் அளவிற்கு யாருடனும் அவள் இணக்கம் காட்டியதில்லை. ஆனால் எங்கிருந்தோ வந்த ஒருவன் தன்னிடம் இவ்வளவு இயல்பாக பேசுவது தன் நிலையை எண்ணி அவளுக்கே வியப்பாக இருந்தது.

அத்தோடு அங்கே கடந்து செல்பவர்களின் கவனம் தங்களின் மீது படிவத்தை உணர்ந்து, “ஹலோ மிஸ்டர் பேச்சை மாற்றாமல் எதுக்காக என்னை பார்த்தீங்க என்ற காரணத்தை சொல்லுங்க” என்றாள் அவளோ கோபமாக.

அவன் அதை ஒப்புக்கொள்ளும் விதமாக, “ஏன் உங்களை நான் பார்க்கக் கூடாதா?”என்றவனின் பார்வையில் ரசனை கூடியது.

அவள் கோபத்துடன் முறைத்தவளின் பார்வையை சளைக்காமல் எதிர்கொண்ட இளஞ்செழியன், “உங்க கேள்விக்கு பதில் சொல்ல முடியாது” வீம்புடன் கூறி அவளின் கோபத்தை அதிகரிக்க செய்தான். 

இதற்குமேல் அவனோடு பேசுவதில் பயனில்லை என்ற உண்மையை உணர்ந்த மகிழ் எழுந்து சென்றுவிட்டாள். அவள் சென்ற திசையை பார்த்தபடி அமர்ந்திருந்தவனின் கவனத்தை ஈர்த்தது செல்போனில் ஒலித்த பாடல்.

“என்னைக் காதலிக்க பிறந்தவனே நீதானென்று..

கைகள் கோர்த்து என் தோள் சாயும் தோழனேன்று..

எனக்கு தோன்றியதாலே.. எல்லாம் மாறியதாலே..

உன் கண்ணுக்குள்ளே காதலனே விழுந்து எழுகிறேன்..” அவளின் செல்போனை எடுத்தான் செழியன்.

“இவ எல்லாம் டாப் டென் லிஸ்ட் ல எப்படி இடம்பிடிச்சா? இவ்வளவு கவனக்குறைவாக இருக்காளே”  அவளின் கேலரியை ஓபன் செய்து ஒவ்வொரு பிக்சராக பார்த்தபடி வந்த இளஞ்செழியனின் விரல்கள் அந்த பெயிண்டிங் பார்த்தும் அப்படியே நின்றது.

அவளின் சிந்தையில் பதிந்திருந்த எண்ணங்களை தூரிகையின் உதவியால் வர்ணங்களாக மாற்றி இருந்தாள். அவளின் கேலரி முழுவதும் இருந்த ஓவியங்களை வேகமாக பார்வையிட்ட இளஞ்செழியனின் மனதில் குழப்பம் சூழ்ந்தது.

அதுவரை இருந்த இலகுத்தன்மை மாறிவிட சிந்தனையோடு அவள் சென்ற திசையைப் பார்த்தான். அப்போது தான் அவன் வந்தபோது புளூடூத் கீழே விழுந்ததை உணராமல் பேசிய அவளின் செயல் அவனின் மனதில் வந்துசென்றது.

மகிழ்வதனி பற்றிய பிஸ்னஸ் விவரங்கள் தெரியும் என்றபோதும், ‘எந்த ஊரிலிருந்து வந்திருக்கிற’ நெற்றியை தடவி யோசிக்க அவன் கைபட்டு ஆடியோ அவளின் குரலில் ஒலித்தது.

ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்
ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்
வாடக் காண்பது சூல்உளைச் சங்கு
போடக் காண்பது பூமியில் வித்து
புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து
தேடக் காண்பது நல்லறம் கீர்த்தி
திருக்குற் றாலர் தென் ஆரிய நாடே!என்ற பாடலைக்கேட்டதும் அவனின் முகம் பளிச்சென்று மலர்ந்தது.

நெற்றியைத் தடவி சிந்தித்தவன், “திருக்குற்றால குறவஞ்சி இலக்கிய பாடல். ஓஹோ குற்றாலம் தான் இவளோட சொந்த ஊரா” அடுத்து செய்ய வேண்டிய விஷயங்களை மனதிற்குள் பட்டியலிட்டுக் கொண்டே ஆபீஸ் கிளம்பினான் செழியன்.

அவனிடம் சண்டையிட்டு கோபத்துடன் பிளைட் ஏறியவளின் மனம் ஏனோ அவனை சுற்றியே வலம் வந்தது. இத்தனை வருடங்களாக இல்லாமல் மனதில் ஒரு மெல்லிய சலனத்தை அவனின் சந்திப்பு ஏற்படுத்தி சென்றிருந்தது.

ஒவ்வொரு பயணத்தின் முடிவிலும் எங்கோ யாரோ அவர்களின் இதயத்தை தொலைத்து விடுகின்றனர். அந்த சிலநொடி சலனம் நெஞ்சமென்ற சிப்பியில் விழும் முதல் மழைத்துளியாய் மாறிப்போகிறது. அவளின் இதயத்தில் ஊடுருவிய சலனம் காதல் என்ற முத்தாக  மாறுமோ?

வானம் செவ்வானமாக மாறுவதைப் பார்த்தபடி ஜன்னலின் அருகே நின்ற குழலியின் மனம் தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. தன் காட்டில் வேலை இல்லையென்று பக்கத்து காட்டிற்கு வேலைக்கு கிளம்பினாள்.

“என்ன பிள்ள இந்த நேரத்தில எங்கிட்டு போறவ?” முத்தம்மா வேணுமென்றே வம்பிற்கு இழுத்தாள்.

“எங்க வயலுல வேலையே இல்லவ. நம்ம பெரிய மிராசுதாரர் வயகட்டுல வேலையிருக்குன்னு சொன்னவ.. அங்கனதான் போறே..” என்றாள்.

 “அடியாத்தி ஒரு ஏக்கரா நிலம் வச்சிருக்கும் நீனு வேற காட்டுக்கு வேலைக்கு போனா பொறவு எங்களோட பொழப்பு என்னாவறது?” என்றவளின் குரலில் ஆதங்கம் வெளிப்படையாகவே தெரிந்தது.

சட்டென்று திரும்பிய குழலி, “கௌரவம் பாத்துட்டு வீட்டுல உட்கார்ந்து வெறும் கஞ்சியைக் குடிக்க சொல்லுதியா? அந்த வரட்டு கௌரவத்த வைச்சு ஒண்ணுமே பண்ண முடியாதுவ” என்றவள் களத்துமேட்டில் நின்றிருந்தவரிடம் விஷயத்தை சொல்லிவிட்டு வேலை செய்ய தொடங்கிவிட்டாள்.

சூரியன் உச்சியைத் தொடும்போது களைபிடுங்கும் வேலையை முடித்துவிட்டு கிளம்ப, அதே நேரத்தில் ஊரைச் சுற்றிபார்த்தபடி ஒற்றையடி பாதை வழியாக வீடு நோக்கி நடந்தான் மேகவேந்தன்.

பத்தடி தொலைவில் நடந்து சென்றவளை அடையாளம் கண்டு அவளை பின்தொடர்ந்தான். இருவரும் பேசுவது அவனின் காதுகளில் தெளிவாக வந்து விழுந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!