Vaanavil – 7

download (56)-4e8e9333

Vaanavil – 7

அத்தியாயம் – 7

இரண்டு பெண்களும் உச்சி வெயிலில் தங்களுக்குள் பேசியபடியே சென்றனர். மேகவேந்தன் பத்தடி இடைவெளிவிட்டு அவர்களைப் பின் தொடர்ந்தான்.

“இன்னைக்கு வூட்டுக்குப் போய் என்ன சமைக்கறதுன்னு தெரியலவே..” முத்தம்மா புலம்ப தொடங்கிவிட்டாள்.

“நீ சத்தநேரம் போலம்பாம வருதியா..” என்றவளின் கண்ணின் விழுந்தது அத்திபழமரம்.

“அங்கன பாரு அத்திபழ மரம் இருக்குது. அதுல காய் பறிச்சிட்டு போய் போரியல் பண்ணி ரசம் வச்சா வேலயே முடிஞ்சிது” என்றாள்.

“இதுல போரியல் பண்ணலாமா?” முத்தம்மா சந்தேகமாக இழுக்க, அவளைக் கண்டுகொள்ளாத கார்குழலி சுற்றும் முற்றும் பார்வையை சுழலவிட தூரத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவன் கண்ணில் தென்பட்டான்.

“ஏலே சின்னவனே இங்கன கொஞ்சம் வாலே” என்றழைக்க, “என்னக்கா” அவர்களை நோக்கி ஓடி வந்தான்.

“இந்த மரத்தில ஏறி காயைப் பறிச்சி போடுதியா?” என்றாள்.

“அத செஞ்சா எங்களுக்கு என்ன தருவீய…” பேரம் பேசினான் சிறுவன்.

“ஆமா உமக்கு ஏதாவது கொடுக்கோணும். அப்பத்தான் என்ற வேலையாகும்..” அவள் தீவிரமாக சிந்திக்க, அங்கிருந்த மரத்தின் மீது சாய்ந்து நின்றபடி ரசித்தான் மேகவேந்தன்.

பக்கத்து தோட்டத்தில் குச்சிகிழக்கு மூன்று மாதமாகி இருப்பதைக் கண்டவளின் மனதில் அந்த எண்ணம் உதயமானது.

அவளின் சிந்தனை படர்ந்த முகத்தையும், பார்வை சென்ற திசையும் கண்டு முத்தம்மாள், “அடியேய் சொன்னா கேளுவ.. காட்டுக்காரன் கையில சிக்கின நம்மள உண்டு இல்லன்னு செய்துடுவாகலே..” என்றாள் பயத்துடன்.

“ஏலே நீங்க மரத்துல ஏறி கையைப் பறிச்சு போடுங்களே.. நான் இதோ வந்துடுதேன்” என்றவள் சுற்றும் முற்றும் பார்க்க, மேகவேந்தன் சற்று மறைந்து நின்றுகொண்டு அங்கே நடப்பதை நோட்டம்விட்டான்.

காட்டிற்குள்  சென்றவள் நன்றாக நீரில் ஊறியிருந்த செடிகளில் ஒன்றை வேரோடு பிடிங்கினாள். வேரோடு வந்த கிழங்கை மட்டும் எடுத்துகொண்டு செடியை அங்கேயே நட்டுவிட்டு எழுந்து வந்த கார்குழலியைப் பார்த்து, ‘அடிப்பாவி அடுத்த காட்டுக்காரன் தோட்டத்தில் புகுந்து கிழங்கைத் திருடிட்டு வராலே’ வாயைப் பிளந்தான்.

“என்னவே காயெல்லாம் பறிச்சிட்டியா?” என்று கேட்டதும் வேகமாக தலையாட்டிய சிறுவனின் கையில் கிழங்கை கொடுத்துவிட்டு இரண்டு பெண்களும் அங்கிருந்து கிளம்பினர்.

அப்போது எதிரே வந்த பெரியவர், “என்னவே குழலி வேலையெல்லாம் வெரசா முடிச்சிட்டு வூடு போறாப்புல இருக்கு” என்றதும் அவளையும், குழலியும் மாறி மாறிப் பார்த்த முத்தம்மா, ‘இவ செஞ்சக் காரியம் பெருசுக்கு தெரிஞ்சிது.. பொறவு அம்புட்டுத்தான்..” மனதினுள் நினைத்தாள்.

“ஆமாங்க..” என்றவள் அவரைக் கடந்து சென்றவள் கீழே கிடந்த பணத்தைக் குனிந்து எடுத்தாள்.

இரண்டாயிரம் நோட்டைக் கண்டவுடன், “இது உங்களோட பணமா?” என்று கடந்து சென்ற பெரியவரிடம் கேட்க, அவரும் தன் பாக்கெட்டை தொட்டுப் பார்த்தார்.

“ஆமாம்லே..” என்றவர் அவளிடமிருந்து பணத்தை வாங்கிகொண்டு அங்கிருந்து செல்ல, மீண்டும் தன் வழியில் நடக்க தொடங்கிய குழலியின் செயலிற்கு அர்த்தம் புரியாமல் நின்றிருந்தான் மேகவேந்தன்.

அவனின் மனதில் தோன்றிய சந்தேகம் முத்தம்மாள் மனதுக்குள் வந்திருக்கும்போல, “ஏட்டி இந்த ஐயாவோட காட்டில கிளங்க திருடி அந்த மாடு மேய்க்கிற பையளுவ கையில கொடுத்தவ.. இப்போ அந்த ஆளோட பணம்னு தெரிஞ்சும் நேர்மையா கொடுத்துட்டு வருதீயே என்னால உம்ம புரிஞ்சிக்க முடியல” என்றாள்.

“அவிய காட்டுல வேலைக்கு வர பையலுகள எம்புட்டு வேல வாங்குறாங்க தெரியுமா? மூணு நேரம் சோறும் போட்டு பணத்தைக் கொடுத்தா அம்புட்டும் முடிஞ்சி போயிடுச்சுன்னு நினக்கிடுதியா? அவன் படிப்பு பறிபோச்சு..” என்றவள் இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தாள்.

“பணம் கிடக்குதுன்ற மமதையில கூலிக்கு சின்ன பயலுவல வேலைக்கு வக்கிறாவ. அவிய கொடுக்கிற பணம் இன்றைய தேவைக்கு உதவுமே தவுத்து நாளைக்கு இந்த பயலுவலு வாழ்க்கைக்கு பயனில்ல” என்று சொல்ல வியப்புடன் அவளை நோக்கினான்.

“அதுதாம்லே கிழங்க பயலுவளுக்கு பறிச்சு கொடுத்தேன். ஒரு செடியில கிழங்கு இல்லன்னா நட்டம் பெருசா வராதுலே” அவள் சாதாரணமாக சொல்ல, ‘உன்னை மாதிரி நாலுப்பேர் நினைச்சா மிராசுதாரர் எல்லாம் தலையில் துண்டை போட்டுட்டு தான் போகணும்’ என்று மேகவேந்தன் கடுப்புடன் நினைத்தான்.

“சரிபுள்ள அந்த ஆளோட பணத்த எதுக்குவ கொடுத்த?” என்றாள் புரியாத பாவனையோடு.

“அதைய வச்சு என்னவ செய்யறது.. உழச்ச காசே உடம்புல ஓட்ட மாட்டேங்குது. இந்த லட்சணத்துல அந்த ஆளோட காசுக்கு நான் ஆசைப்பட்டா என்னோட காசு இரண்டு மடங்கா செலவாவும். அது எனக்கு தேவையா?”அவளின் விளக்கத்தில் மேகவேந்தன் தான் விழி பிதுங்கி நின்றான்.

அவளின் செயலில் இருந்த ஞாயம் அவனின் மனத்தைக் கவர்ந்தது. ஒரு தொழிலாளரின் உயிரை குடிப்பதுபோல அவனின் உழைப்பை திருடும் முதலாளிகளின் முதல் எல்லாம் இப்படித்தான் வீணாக போகுமென்று அவளின் மூலம் உணர்ந்தான்.

மதியம் வேந்தன் வீடு திரும்பும்போது மணிவண்ணன் தம்பியின் வரவை எதிர்பார்த்தபடி ஹாலில் அமர்ந்திருந்தான். அதே நேரத்தில் செழியன் ஏதோ முக்கியமான மீட்டிங் விஷயமாக பேசவேண்டும் என்று வேந்தனுக்கு அழைத்து அவன் எடுக்கவில்லை என்றதும் பெரிய அண்ணனுக்கு போன் போட்டு தம்பியைப் பற்றி விசாரித்தான்.

“சின்னவன் ஊரைச் சுத்திப் பார்க்க போயிருக்கான் செழியா. அவன் வந்ததும் விஷயத்தை சொல்லி கூப்பிட சொல்லுதேன்” என்று தம்பியை சமாளிக்கும் முயற்சியில் இறங்கினான்.

“ரொம்ப வருஷத்துக்கு பிறகு ஊருக்குப் போனதால் அங்கிருக்கும் இடத்தை சுற்றிப் பார்ப்பது தவறு இல்ல.. ஆனால் போன் பண்ண எடுத்து பேசக்கூட நேரமில்லையா?” என்று அண்ணனிடம் சண்டைக்கு வந்தான்.

“சரிலே.. ஏதோ நினவுல போனை எடுக்காமல் விட்டுருப்பான். அதுக்காகவா இம்பூட்டு தூரம் அவனை வையுத.. விடுலே சின்னவன் வரட்டும் விவரத்த சொல்லி பேச சொல்லுதான்” என்று போனை வைத்தவனின் கோபம் அதிகரித்தது.

‘இந்த சின்னவனுக்கு பொறுப்பு அறவே இல்ல. செழியனின் கோபத்திலும் தப்பில்ல. அங்கன என்ன அவசரமோ? முக்கியமான விசயமா பேச போன் போட்ட எடுத்திருந்த அவன் ஏன் கோபபட போறான்’ என்று தனக்குள் நினைத்துக்கொண்டு இருக்க வாசலில் நிழலாட கண்டு நிமிர்ந்தார்.

அவன் வீட்டிற்குள் நுழைய, “வேந்தா இம்பூட்டு நேரமா எங்களே சுத்திட்டு வருதே..?” என்று விசாரித்தான்.

அண்ணனின் கேள்வியில் குழப்பத்துடன், “காலையில் உங்ககிட்ட சொல்லிட்டுத்தானே போனேன்.. நம்ம ஊரை சுத்தி பார்க்க போயிருந்தேன் என்ற விஷயம் தெரிந்தும் கேள்வி கேட்கிறீங்க?” என்றான்.

தம்பியை உறுத்து விழித்தவன், “உம் செல்லு எங்கவே.. போன் போட்ட எடுக்கவே இல்ல..” என்றபோதுதான் சைலண்ட் மோடில் போட்டது நினைவு வந்தது.

சட்டென்று போனை எடுத்துப் பார்க்க கால் லிஸ்டில் செழியனின் பெயர் பதிவாகி இருப்பதைக் கண்டு, “சுத்தம் அண்ணன் போனை எடுக்கல என்றதும், மணிக்கு போன் பண்ணி சொல்லிடுச்சா?” என்று இடது கையால் பின்னந்தலையை வருடியபடி வேகமாக படியேறி மாடிக்கு சென்று செழியனுக்கு அழைத்தான்.

அதே நேரத்தில் அந்த மீட்டிங்கை முடித்துவிட்டு வெளியே வந்த செழியனின் போன் சிணுங்கியது. திரையில் ஒளிர்ந்த இலக்கத்தைக் கண்டவுடன், “ஒரு கம்பெனியோட ஜி.எம். என்பது ஊருக்குப் போனதும் மறந்து போயிடுச்சா தம்பி?” என்று நக்கலோடு கேட்டான் இளஞ்செழியன்.

“இல்ல அண்ணா சைலண்ட் மோடில் போட்டதால் கவனிக்கல” என்று நாக்கை கடித்தான் சின்னவன்.

“அதை வைப்ரேட்டிங் மோடில் போட்டுக்கோ” என்றவன் கம்பெனி பற்றி சிறிதுநேரம் பேசிவிட்டு போனை வைத்தான்.

காலை எழும்போதே மனம் ஏதோ மாதிரி இருக்கவே தன் தம்பி, தங்கைகளுக்கு சாப்பாடு செய்துகொடுத்து கல்லூரிக்கு அனுப்பிவிட்டு வீட்டில் இருக்க பிடிக்காமல் சேலை ஒன்றை எடுத்துக் கட்டிக்கொண்டு கோவிலுக்கு கிளம்பிவிட்டாள் கார்குழலி.

அதன் கரையில் குற்றாலநாதர் கோவிலுக்கு சென்று சாமியை மனமுருக வேண்டிக்கொண்டு நிமிர்ந்தவளின் பார்வை அவனின் மீது படிந்தது. கட்டுகோப்பான உடலுடன், வசீகரமான புன்னகையுடன் விழிமூடி நின்றவனை எங்கோ பார்த்த ஞாபகம்.

அவன் சாமி கும்பிட்டுவிட்டு விழி திறக்கும் முன்னரே பூசாரி விபூதியைக் கொடுத்துவிட்டு நகர்ந்துவிடவே, “நான் தூங்கிட்டான்னு போயிட்டாரே இந்த பூசாரி” என்று புலம்பியவனை நிமிர்ந்து பார்த்தவள் கையில் இருந்த விபூதியை அங்கிருந்த கிண்ணத்தில் கொட்டிவிட்டு செல்ல அதை எடுத்து நெற்றியில் வைத்துவிட்டு அவளை பின் தொடர்ந்தான்.

மற்ற பிரகாரங்களை சுற்றிவிட்டு வந்து ஓரிடத்தில் அமர்ந்த கார்குழலியின் மனதில் சிந்தனை படர்ந்தது. அடுத்து தம்பி தலையெடுத்த பிறகு அனிதா, காயத்ரி திருமணத்தை செய்ய என்ன செய்யலாம் என்ற யோசனையுடன் வேடிக்கைப் பார்த்தாள்.

அவள் கைகளை ஆராய்ந்தபடி அமர்ந்திருக்க கண்டவன், ‘இந்த பொண்ணு ஏன் இவ்வளவு யோசிக்கிறா?’ என்று நினைத்துக்கொண்டே அவளை தூரத்தில் நின்று நோட்டம் விட்டான்.

அப்போது அவளின் எதிரே வந்த இளைஞன் ஒருவன், “ஹே கார்குழலி உன்னய பார்க்க ஊருக்கே வரலாம்னு நினச்சிட்டு இருந்தேன்” என்ற குரல்கேட்டு நிமிர்ந்தவளின் கண்களில் கனல் பறந்தது.

“ஏலே உமக்கு வேற வேலயே இல்லயாவே. நான் அம்புட்டு தெளிவா சொல்லுதேன் இல்ல. உன்ன எனக்கு பிடிக்கலவே! உமக்கு சொத்து, படிப்பு, அந்தஸ்து எதிலும் குறைவில்ல தான். ஆனால் திருமணம் செஞ்சிட்டு சந்தோசமாக புகுந்த வீடு போகிற மனநிலையில நானில்லவே” என்று அவள் புலம்ப எதிரே நின்றவனின் முகம் கசங்கிப் போனது.

“நான் இப்போ உம்மோட பேச வந்த விஷயமே வேற குழலி. எமக்கு பொண்ணு பாத்துப் பரிசம் போட்டு முடிச்சிட்டவ. உம்ம இங்கன கண்டதும் பேச வந்த பொறவுதான் உன்ன இம்பூட்டு அளவு கஷ்டபடுத்தி இருக்கேன்னு புரியுது” என்று அவளிடம் மனமார மன்னிப்பு கேட்டான்.

பக்கத்து ஊரைச் சேர்ந்த வர்மன். தன்னுடைய கல்லூரிக்கு தேர்வு எழுத வரும் கார்குழலியைப் பிடித்து போய்விட்டது. அடிக்கடி அவளிடம் காதலைச் சொல்லி இம்சை செய்ய தொடங்கினான். இடைப்பட்ட நாட்களில் அவளின் ஊருக்கு வருவான். அவனிடம் ஏற்கனவே தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்று தெளிவாக கூறிவிட்டாள்.

அதன்பிறகு இன்று சந்தித்ததும் படபடவென்று பொரிந்து தள்ளிவிட்டாள். தன் தவறை உணர்ந்து அவன் மன்னிப்பு கேட்க, “விடுலே! நீ சந்தோஷமா இருந்தா  அதுவே போதும். உன்னோட திருமணத்துக்கு என்னோட வாழ்த்துகள்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள்.

அவளின் பேச்சைக் கேட்டவுடன், ‘இவ்வளவு கஷ்டப்படும் பெண்ணைத் தன் உள்ளங்கையில் வைத்து தாங்க வேண்டும்’ என்று மனம் சொல்ல, சொந்த ஊருக்கு வந்தவுடன் வழி தெரியாமல் திணறியபோது அவளிடம் வழிகேட்டது, மறுநாளே பண்ணையாரின் தோட்டத்தில் கிழங்கு பறித்து சிறுவனுக்கு கொடுத்தது அனைத்தும் அவனின் மனதில் இடம்பிடித்தது.

அவளின் அதட்டல் இல்லாத பேச்சும், மற்றவருக்கு நல்லது நினைக்கும் குணமும் அவனை அவளின் புறமாக கவர்ந்திழுக்க, ‘நீயே என் மனைவியானால்..’ தன் மனம் செல்லும் பாதை நினைத்து திடுக்கிட்டான்.

அவனின் பின்னோடு சென்ற மனதைத் தடுக்கும் விதமாக அவனின் கைப்பேசி சிணுங்கியது. தன் நினைவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, “ஹலோ அண்ணா சொல்லுங்க” என்றான்.

அடுத்தடுத்து செழியன் சொன்னதை பொறுமையாக கேட்டவன், “நான் இப்போதே கிளம்பி வருகிறேன்” என்று அங்கிருந்து கிளம்பியவன் நேராக வீடு வந்து சேர்ந்தான்.

தன்னுடைய உடைகளை வேகமாக எடுத்து வைப்பதை கவனித்த பூரணி, “வேந்தா எங்கன இவ்வளவு வெரசா கிளம்புதீய” மகனின் அருகே வந்தார்.

“அண்ணா முக்கியமான விஷயமா வெளிநாடு கிளம்புதாம் அம்மா. அதுதான் என்னய உடனே புறப்பட்டு வர சொல்லுதவ. அதுதான் நானும் வெரசா கிளம்புதேன்” அவனின் விளக்கம் கேட்டு அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் தடுமாறினார்.

இந்த விஷயம் அறிந்த வீட்டினர் அவனை செல்ல விடாமல் தடுக்க நினைக்கும் நேரத்தில் மணிவண்ணன் வீடு வந்து சேர, “அண்ணா நீரு கொஞ்சம் புரியும்படி அவியளுக்கு எடுத்து சொல்லு. என்னால அவையளுக்கு பதில் சொல்ல முடியல” என்றான் சலிப்புடன்.

“அம்மா பெரிய தம்பி அழைக்குதான் என்றால் அதுக்கு ஒரு காரணம் இருக்கு. நீங்க சும்மா சின்னவனையே திட்டாதீய” கண்டிப்புடன் கூறவே வீட்டினர் அனைவரும் அவனின் ஒரு சொல்லுக்கு அடங்கிப் போக தன் தம்பியை அழைத்துக்கொண்டு சென்றான்.

மணிவண்ணன் தன்னுடன் வருவதைக் கண்ட வேந்தனோ, “அண்ணா எனக்காக ஒன்னு செய்வியலா?” காரை ஓட்டியபடி தம்பியை கேள்வியாக நோக்கினான்.

“எனக்கு நம்ம ஊரில் இருக்கும் கார்குழலியை ரொம்ப பிடிச்சிருக்கு. அவிய வீட்டில் முறைப்படி பேசி திருமணம் செய்து வைக்கிறீயலா?” என்றவுடன் சடன்பிரேக் போட்டு காரை நிறுத்தினான்.

“ஏலே என்ன சொல்லித.. அந்த புள்ள அப்பன் – ஆத்தா இல்லாதது. அது ஒத்த புள்ள வேலை செஞ்சுதான் தம்பி, தங்கைகளை பாத்துக்குது. அந்த புள்ளைய கல்யாணம் செய்யணும்னு சொல்லுதியே” என்றார் ஆதங்கத்துடன். அவளின் பின்புலனைக் கேட்ட அவனின் முகம் கனிந்தது.

“அவளுக்கு எல்லாமாக நான் இருக்க நினைக்கேன் அண்ணா. எனக்கு அந்த பிள்ளய பிடிச்சிருக்கு. நம்ம வீட்டில் பேசி நீதான் எங்க கல்யாணத்தை செய்து வைக்கணும்” என்றான் தீர்மானமாய்.

மணிவண்ணனுக்கு தம்பிகள் என்றால் உயிர். அவனுக்காக எதை செய்ய நினைக்கிறானோ இல்லையோ தம்பிகளுக்காக அவன் எதையும் துணிந்து செய்வான். அதுவும் வீட்டிற்கு கடைக்குட்டியான மேகவேந்தன் எதை கைகாட்டினாலும் அதை வாங்கிக் கொடுத்துவிடுவான்.

“நான் வூட்டுல பேசிட்டு நல்ல முடிவா சொல்லுதேன்.. நீ கவலையில்லாமல் போயிட்டு வா..” என்று சொல்ல சின்னவனின் முகம் பிரகாசமானது.

“அண்ணே! அந்த பெண்ணோட குணம் பிடிச்சுபோய் தான் உன்கிட்ட விஷயத்தை சொல்லுதேன். அந்த புள்ளக்கு இந்த கல்யாணத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்ல” என்று சொல்லும் தம்பியை வியப்புடன் பார்த்தான் பெரியவன்.

“அந்த புள்ளய தூர நின்னு பாத்ததுக்கே அவ பேருல ஒரு களங்கம் வந்துடக்கூடாதுன்னு நினக்கிதியே. இத்தன வருஷமா அவ அனுபவிச்ச கஷ்டத்துக்கு ஒரு விடிவு வந்த போதும்லே” காரை எடுக்க வேந்தனின் முகம் முற்றிலும் தெளிந்திருந்தது.

பாவம் அவளின் பேருக்கு தானே களங்கத்தை வரவழைக்க போகும் உண்மையறியாமல் தம்பியின் விருப்பத்தை மணிவண்ணன் யோசிக்க, பிற்காலத்தில் அவளை சந்தோசமாக வைத்துகொள்ள நினைத்த தானே அவளை கொடுமை செய்ய போவது தெரியாமல் பயணத்தை மேற்கொண்டான் மேகவேந்தன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!