Vaanavil – 9

ranibow-9c616964

Vaanavil – 9

அத்தியாயம் – 9

தன்னுடைய தாய் ஒரு பெண்ணை இழிவாக நினைப்பது மகனின் மனதை வெகுவாக பாதித்தது. அதே நேரத்தில் மகிழ்வதனி தனியே நின்று பேசுவதன் பின்னோடு மறைந்திருக்கும் மர்மம் இன்னதென்று தெரியாதபோதும் ஏனோ அவளின் மீது இறக்கம் சுரந்தது மணிவண்ணனுக்கு!

சட்டென்று தாயை நிமிர்ந்து பார்த்தவன், “அந்த புள்ள இந்த வயசில அம்புட்டு பெரிய நிறுவனத்த தனியா நின்னு நிர்வாகம் செய்யுது. அந்த பிள்ளய நம்ம தம்பிக்கு கண்ணாலம் கட்டிவச்சா நாளைய பின்ன அவனுக்கும் உதவிய இருக்கும்னு யோசிச்சது தப்பா?” என்றவன் தொடர்ந்து பேசிய வார்த்தை பூரணியின் மனதைக் காயப்படுத்தியது.

“ஆச்சி பெத்ததும் ஆம்பள பையல.. அவங்க மருமக நீனு முத்துமுத்தா மூணு ஆம்பள பிள்ளைய பெத்து வெச்சிருக்கோம்னு தலக்கனத்தில பேசாதிய..” என்று தாயை எச்சரித்தான்.

“இங்க பாருலே பொட்ட புள்ள தாழ்ந்தது.. ஆம்பள புள்ள ஒசத்தின்னு நான் நெனச்சது இல்லவ. ஒரு வார்த்தைய பேசும் முன்ன யோசிச்சு பேசுலே” மகனை திட்டுவிட்டு கலங்கிய கண்களோடு அங்கிருந்து சென்றார்.

மருமகளின் வருத்தத்தை கண்ட  செண்பகத்தின் கோபம் அதிகரிக்க, “நம்ம சின்னவனுக்கு குழலிய கட்டி வைக்க எங்களுக்கு பரிபூரண சம்மதம்லே. ஆனா அந்த வதனி இந்த வூட்டுக்கு மருமவளா வருவத என்னால ஏத்துக்க முடியாது” தன் முடிவை சொல்லிவிட்டு சென்றார்.

 தர்மசீலன் மற்றும் குணசீலன் இருவரும் சிந்தனையில் ஆழ்ந்துவிட, “நம்ம நினக்கறதே நடக்கும்னு நினைக்கக்கூடாது. மேலே இருக்கவன் யாருக்கு யாரை முடிச்சுபோட காத்திருக்கானோ.. நான் கார்குழலிய பத்தி வதனியோட பெத்தவங்ககிட்ட பேசிட்டு வந்துடுதேன்” பொதுவாக சொல்லிவிட்டு கிளம்பி சென்றான் மணிவண்ணன்.

பெரிய புயலடித்து ஓய்ந்தது போல வீடே அமைதியாக இருந்தது.

வீட்டில் இருந்து கிளம்பிய மணிவண்ணனுக்கு தம்பியின் விஷயத்தை எப்படி மகிழ்வதனியின் பெற்றோரிடம் பக்குவமாய் பேசுவதென்ற குழப்பம் அதிகரித்தது. தன் விருப்பம் தெரிந்தபிறகும் மகிழ்வதனியை வேண்டாமென்று வெறுக்கும் வீட்டினரைப் பற்றி மனோகரன் – பரிமளாவிடம் சொல்ல வேண்டாமென்ற முடிவிற்கு வந்திருந்தான்.

தன் மனைவியிடம் விடைபெற்று வாசலுக்கு வந்த மனோகரன், “வாங்க தம்பி. என்ன சிந்தனையோட வாசலில் நின்னுட்டு இருக்கிறீயா?” என்று மணிவண்ணனை எதிர்க் கொண்டார்.

அவரைப் பார்த்தும் பளிச்சென்று புன்னகைத்தவன், “இல்ல உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசோணும்” அவன் பாதியில் நிறுத்திட பெரியவரின் முகம் சிந்தனையில் சுருங்கியது.

அவனை அழைத்துச் சென்று அமர வைத்தவர், “பரிமளா தம்பிக்கு காபி போட்டு எடுத்துட்டு வா” மனைவிக்கு சட்டென்று கட்டளையிட்டார்.

அலுவலகம் கிளம்பிய கணவன் திடீரென்று காபி போட்டு எடுத்து வர சொல்ல வந்திருப்பது யாரென்று எட்டிப் பார்த்தவர், ‘இந்த பைய எதுக்கு இங்கன வந்திருக்கு?’ என்ற யோசனை ஒருபக்கம் தலைதூக்க கைகள் தன்போக்கில் வேலையைத் தொடர்ந்தது.

அவர் காபி கொண்டு வந்து கொடுக்க, “உங்ககிட்ட ஒரு சங்கதி சொல்லுதேன். நான் பேசி முடிச்சபோறவு உங்க முடிவ சொல்லுங்க” என்றவனை புரியாத பாவனையோடு ஏறிட்டனர் கணவனும், மனைவியும்!

“என் கடைசி தம்பி மேகவேந்தனுக்கு கார்குழலிய ரொம்ப பிடிச்சு போச்சு. அவிய வூட்டுல மொரப்படி பேசி கண்ணாலத்துக்கு தேதி குறிக்க சொன்னான். அந்த புள்ளக்கு உறவுன்னு சொல்ல யாருமில்ல. ஆனா இன்னைக்கு வரக்கும் தாயா, தகப்பானா இருந்து அந்த குடும்பத்துக்கு நீங்க செய்த உதவி ஏராளம்” என்றவன் பாதியில் நிறுத்தினான்.

மற்றவர்கள் இருவரும் அவனைக் கேள்வியாக நோக்கிட, “உங்க வூட்டில பொண்ணு இருக்கும்போது அந்த பிள்ளய கேட்டு வந்திருக்கேன்னு நினைக்காதிய. என் சூழ்நில அப்படி அமஞ்சிடுச்சு” தயக்கத்துடன் கூறிவிட்டு நிமிர்ந்து பார்த்தான்.

அவன் நினைத்தற்கு மாறாக அவர்களின் முகத்தில் சந்தோசம் அரும்பிட, “பெத்த பிள்ள இருக்கும்போது அடுத்த வூட்டு புள்ளய பெண்கேட்டு வந்திருகோம்னு தயங்கிறியன்னு புரியுது. அதே நேரத்தில அவளும் எங்களுக்கு ஒரு பொண்ணுதான். அதுல நாங்க பாகுபாடு பாக்கல. எதுக்கும்  ஒரு வார்த்தை குழலிட்ட பேசிட்டு முடிவு சொல்லுதேன் தம்பி” என்று நிறுத்தி நிதானமாக கூறினார் மனோகரன்.

அவரின் பேச்சு மனதிற்கு நிறைவைக் கொடுத்தது. அடுத்த வீட்டு பெண்ணை பாரமாய் நினைக்காமல், தன் தயக்கத்தைப் புரிந்துகொண்டு பதில் கொடுத்ததில் மணிவண்ணனின் மனதில் பலபடி மேலே உயர்ந்தார்.

உலகம் அறியாத நாளில் இருந்து திக்கற்று நிற்கும் குழலிக்கு நல்வாழ்க்கை அமைந்தால் போதும் என்று இறைவனை வேண்டிக் கொண்டார் பரிமளா. அதே நேரத்தில் அடுத்த பிள்ளையைக் கரையேற்ற உதவி செய்தால் தன் பிள்ளைக்கு ஒரு நல்வாழ்வு அமையாதா என்ற எண்ணமே அவரை நல்வழிபடுத்தியது.

“சரிங்க.. நீங்க முடிவு சொன்னா நல்ல நாளாக பார்த்து வந்து புள்ளக்கும், பயனுக்கும் பரிசம் போட்டு முடிச்சிடலாம். பொறவு உங்க வசதிக்கு தகுந்த மாதிரி கண்ணாலம் பற்றி பேசிக்கலாம்” என்று கூறியவன் இருவரிடமும் விடைபெற்று கிளம்பினர்.

அவன் செல்லும் வரை பொறுமையாக இருந்த மனோகரன், “நீனு இதபத்தி என்ன நினக்கிறவ?” அவரின் பார்வை மனைவியின் மீது கேள்வியாக படிந்தது.

“அந்த புள்ளக்கு முதலில் கண்ணாலத்தை முடிக்கலாங்க. நம்ம புள்ளக்கு ஆண்டவன் நல்ல வழிவிடுவான்” என்று அந்த பேச்சிற்கு முற்றுபுள்ளி வைத்தார் பரிமளா.

தன் வீட்டில் நடக்கும் விஷயம் எதுவும் அறியாத மகிழ்வதனி வழக்கம்போல நிறுவனத்தில் தன் வேலையைத் தொடர, இளஞ்செழியனின் கரங்கள் தன் போக்கில் கடமையைச் செய்தாலும் மனம் என்னவோ அவளையே சுற்றி வந்தது.

மதியநேரம் என்பதால் கேபினைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்த சரவணாவைக் கண்டதும், “என்னலே இம்பூட்டு வெரசா வர.. மதியம் சாப்பிடும் நேரம் நெருங்கிடுச்சோ?” என்றவள் அப்போது தான் கடிகாரத்தையே கவனித்தாள்.

தவறு செய்துவிட்ட குழந்தைபோல நாக்கைக் கடித்துக்கொண்டு கையை உதறியதைக் கண்டு அவனின் உலகம் சில நொடிகள் தற்காலிகமாக வேலை நிறுத்தம் செய்து மீண்டும் பழையபடி சுழல தொடங்கியது.

 “நீனு நேரத்தைக் கவனிக்காம இப்படியே உட்கார்ந்து வேலைய பாரு. அப்புறம் வீட்டுக்குப் போனதும் சாப்பிட நேரமில்லன்னு சொல்லு அம்மா என்னைய வையட்டும்” என்று தமக்கையைத் திட்டுவிட்டு ஓய்வறை நோக்கி சென்றான்.

அங்கிருந்த டேபிளில் உணவை எடுத்து வைத்தவன், “நீங்க இன்னும் சாப்பிட போவம இருக்கியா?” என்று இளஞ்செழியனை அக்கறையோடு விசாரித்தான்.

“வழக்கமா ஹோட்டலில் தான் சாப்பிடுவேன். இன்னைக்கு வேலை செய்துட்டே அமர்ந்ததில் கடிகாரத்தைக் கவனிக்கல” என்று இழுக்க அவன் இனி சென்று சாப்பிட்டு வருவதற்கு நேரம் இருக்காது என்று உணர்ந்தவள்,

“எங்க அம்மா எப்போதும் ஒரு ஆள் சாப்பாடு சேர்த்துதான் கொடுத்து அனுப்புவாக.. நீங்க இன்னைக்கு எங்களோடு உட்கார்ந்து சாப்பிடுங்க” என்ற மகிழ்வதனி எழுந்து சென்று கை கழுவிவிட்டு அமர்ந்தாள்.

“இல்ல நீங்க சாப்பிடுங்க. நான் வெளியே ஹோட்டலில் சாப்பிட்டுக்கிறேன்” என்று சொல்வதைக் காதில் வாங்காமல் அங்கிருந்த தட்டில் இரண்டில் ஒன்றை எடுத்து செழியனின் முன் வைத்தவள்,

“ஆமா எங்க வூட்டு சாப்பாடெல்லாம் நீங்க சாப்பிடுவியலா? உங்களுக்குத்தான் வக்கணைய சமைத்து வைச்சிருப்பான் ஹோட்டல் காரன்” திட்டிக்கொண்டே பரிமாற மறுப்பின்றி அமர்ந்தவனைக் கண்டு சரவணனுக்கு சிரிப்புதான் வந்தது.

மெல்ல அவனின் அருகே குனிந்த சரவணன், “அக்காவுக்கு சாப்பாடு வேண்டாம்னு சொன்னா பிடிக்காது..” மெல்லிய குரலில் கூறியவன் கொண்டுவந்த சாப்பாட்டை திறக்காமல் சரவணன் சிந்தனையோடு அமர்ந்திருப்பதைக் கவனித்தவள், “ஏம்லே சாப்பிடாம என்ன யோசிக்குதே?” என்று அதட்டினாள்.

இளஞ்செழியனின் பார்வை சரவணனின் மீது கேள்வியாக படிய, “இல்ல அக்கா” என்றபோது அவனின் கையிலிருந்த டிப்பனை வாங்கி திறந்து பார்த்தவளின் முகம் பூவாய் மலர்ந்தது.

“என்னாலே அக்கா கம்மஞ்சோறு கொடுத்து விட்டுட்டாலே எப்படி சாப்பிடுறதுன்னு யோசிக்கிதியா?” என்றவள் கேட்க அவனின் முகம் கவிழ்ந்தது.

தான் முன்னால் சாப்பிட சங்கடப்படுகின்றான் என்பதை உணர்ந்த செழியன், “நான் வெளியே இருக்கேன் நீங்க இருவரும் சாப்பிடுங்க” என்று எழுந்தான்.

“ஐயோ நீங்க உட்காருங்க.. நானு சாப்பாடு சாப்பிட சங்கடப்படல..அதுமட்டும் இல்லாம சாப்பிடும் சாப்பாட்ட பலிச்ச உள்ளதும் இல்லாமல் போயிடும்” சரவணன் அவசரமாக சொல்ல, சரவணனுக்கு தான் கொண்டு வந்த சாப்பாட்டை பரிமாறினாள்.

“உங்க அக்காகிட்ட நேத்துதாம்லே சொன்னேன் கம்மஞ்சோறு சாப்பிடணும்னு.. இன்னைக்கே செஞ்சி கொடுத்து அனுப்பிட்டா” என்றவள் தயிரை ஊற்றி கரைத்து மற்றொரு கிண்ணத்தில் வறுத்த மீனை எடுத்து வைத்துகொண்டு சாப்பிட அமர்ந்தாள்.

அவ்வளவு பெரிய நிறுவனத்தை எடுத்து நடத்துபவள் எந்தவிதமான பந்தாவும் இன்றி பழைய சோறை சாப்பிடுவதைக் கண்டு, “மேடம் நீங்க கம்மஞ்சோறு சாப்பிடுறீங்க” என்று திகைப்புடன் கேட்டான். தனக்கு கீழ் வேலை செய்பவன் முன்னால் தமக்கை பழைய சோறு உண்பதை கண்டு சரவணனுக்கும் சங்கடமாக இருந்தது.

“நம்ம ஓடியோடி சம்பாரிப்பதே ஒரு ஜான் வயித்துக்காக தான். அந்த சாப்பாட்டை நம்ம என்னைக்கும் பழிக்க கூடாது. நம்ம தினமும் வேண்டான்னு எடுத்து ஊத்தும் பழைய சோற்றில் அதிக சத்து இருக்கு. பரம்பர பணக்காரனும் பழங்கஞ்சி குடிச்சு வளர்ந்தவனாகத்தான் இருப்பான்” என்று சொன்னவள் எதையோ நினைத்து சிரித்தாள்.

ஆண்கள் இருவரும் காரணம் புரியாமல் விழிக்க, “இன்னொரு விஷயம் தெரியுமா? மதுரை பஸ்ஸ்டேண்டில் பழைய சோறு, வறுத்த மீனுக்கு தனி கடையே இருக்கு. பழைய சோற்றிற்கு டிமேண்ட் அதிகமாகிடுச்சு. அந்தளவுக்கு நாடு டெவலப் ஆகிருக்கு” என்றவள் உணவை ருசித்து உண்பதைக் கண்டவன் பதில் பேசாமல் எழுந்து கைகழுவ சென்றான்.

அவன் அங்கிருந்து நகர்ந்ததும், “அக்கா எனக்கும் கொஞ்சம் கொடு.. மீனு என்னை வான்னு கூப்பிடுது” சரவணன் கேட்கவே அவனுக்கும் ஒரு டிப்பனில் கரைத்து கூழ் ஊற்றி தந்துவிட்டு சாப்பிடும்போது திடீரென்று தன்னருகே யாரோ அமர்வது போல தோன்றவே சட்டென்று திரும்பிப் பார்த்தாள்.

“எனக்கு கம்மங்கூல் தர மாட்டியா.. என்னைய வீட்டுட்டு சாப்பிட்ட பொறவு உனக்குத்தான் வைத்த வலிக்கும்” பொய் கோபத்துடன் அவளை முறைத்தபடி கூறினான்.

அதற்குள் சரவணனும் எழுந்து செல்ல, “அது எப்படிலே.. நான் சாப்பிடும்போது சரியா ஆஜரவாவுற” என்று கேட்டபடி மீன் துண்டுகளை எடுத்து அவனுக்கு கொடுக்க நினைக்கும்போது செழியன் அறைக்குள் நுழைந்தான்.

“நம்மள நிம்மதியா இருக்க விடமாட்டானுவ” என்று அந்த உருவம் அங்கிருந்து எழுந்து செல்வதை வலியுடன் நோக்கியவளை சிந்தனையோடு ஏறிட்டான்.

அவனின் பின்னோடு வந்த சரவணன், “அக்கா..” என்று அதட்டிட தன்னிலைக்கு மீண்டவள் வேண்டாவெறுப்பாக சாப்பிடுவதைப் பார்த்தபடி அந்த அறையைவிட்டு வெளியேறினான் இளஞ்செழியன்.

“சீக்கிரம் சாப்பிடு அக்கா” என்றவன் தன் வேலையைக் கவனிக்க சென்றுவிட்டான்.

சிறிது நேரத்தில் உணவை முடித்துக்கொண்டு அறையைவிட்டு வெளியே வந்தவளை துளைத்தெடுத்தது அவனின் பார்வை. அதை உணராத வதனியோ தன் வேலையில் மூழ்கி போனாள்.

அன்றிரவு வீடு திரும்பிய செழியன் அசதி தீர குளித்துவிட்டு லாப்டாப்பை எடுத்துகொண்டு வந்து ஹாலில் அமர்ந்து தன் வேலையில் மூழ்கினான். அதிகநாள் ஹோட்டலில் தங்குவது ஆபத்தென்று அறிந்து தனக்கென தனியாக ஒரு வீட்டை தனியாக வாங்கி அதில் வந்து தங்கிக் கொண்டான்.

ஆயிரம்தான் தம்பியிடம் நிறுவனத்தை பொறுப்பாக பார்த்துக் கொள்ளும்படி கூறினாலும் அவன் நேரடி மேற்பார்வை செய்வதை நிறுத்தவில்லை.

இருவரும் நிறுவனம் பற்றி பேசி முடித்தபிறகு, “நீ வெளியே எங்கேயும் போகலையா அண்ணா?” என்று தமையனிடம் விசாரித்தான் மேகவேந்தன்.

“இல்ல எனக்கு கொஞ்சம் யோசிக்க தனிமை வேணும்னு தேவைபட்டுச்சு அதுதான் வீட்டில் இருக்கேன்” பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்க,

“நீ தனிமையில் யோசிக்கும் அளவுக்கு முக்கியமான விஷயம் எதுவும் இருக்கிற மாதிரி எனக்கு தெரியலயே.. ஒருவேளை நீயும் என்னை மாதிரியே அண்ணியை நேரில் பார்த்து காதலில் தொபுக்கடீர் விழுந்துவிட்டாயா?” யோசனையோடு அவன் இழுக்க பக்கென்று வாய்விட்டு சிரித்தான் செழியன்.

“ஏண்டா தொபுக்கடீர்ன்னு விழுக காதல் என்ன கிணறா?” மேகவேந்தனிடம் கேட்டான்.

“யாருக்கு தெரியும் அண்ணா.. குற்றாலம் போன இடத்தில் ஒரு பெண்ணைப் பார்த்தேன். அவளோட குணங்கள் ரொம்ப பிடிச்சு போச்சு.. அதுதான் மணியிடம் பொண்ணு கேட்க சொல்லிட்டு வந்தேன். இன்னும் ஒரு தகவலும் தெரியல” என்று புலம்பினான்.

அவன் சொல்லி முடிக்கும் வரை பொறுமையாக கேட்டவன், “ஒரு திருமணம் என்றால் ஆயிரம் விஷயம் இருக்கும்டா.. நீ பொறுமையா இருந்தால் எல்லாமே நல்லதாக நடக்கும்” என்று பேச்சை திசை திருப்ப நினைக்க மீண்டும் மேகவேந்தன் அங்கேயே வந்தான்.

“அண்ணா வீட்டுக்கு கடைக்குட்டி நானே திருமணத்திற்கு ரெடியாகிவிட்டேன். மணிகிட்ட கல்யாணம் பற்றி பேசினால் சிரிச்சே மழுப்புது.. நீயும் எதுபற்றியும் யோசிக்காமல் இருந்தால் எப்படி?” என்று அவனிடம் சண்டைக்கு வந்தான்.

“சீக்கிரம் இந்த கேள்விக்கு பதில் சொல்றேன்.. இப்போ போனை வைக்கிறீயா? நான் கொஞ்சநேரம் தூங்கணும்” என்றவன் பதிலை எதிர்பார்க்காமல் போனை வைத்தான்.

மெல்ல சோபாவில் சாய்ந்து அமர்ந்த செழியனின் மனமோ மீண்டும் அவளைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தது. அதுவும் உணவு இடைவேளையின் போது தன்னையும் மறந்து அமர்ந்திருந்தவளின் கண்ணில் தெரிந்த வலிக்கான அர்த்தம் புரியவே அடுத்து என்ன செய்வதென்று யோசிக்க தொடங்கினான்.

அந்த வீட்டில் அனைத்து இடங்களிலும் மகிழ்வதனி வரைந்த ஓவியங்களை மாட்டி வைத்திருந்தான். ஒவ்வொரு ஓவியமும் ஒவ்வொரு கதை சொல்ல, ‘சீக்கிரமே உன் மனசில் இருப்பதை சொல்ல வைக்கிறேன்’ என்று மனதிற்குள் சபதம் எடுத்தான். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!