Vanavil Vazhkkai 16

Vanavil Vazhkkai 16

வானவில் வாழ்க்கை 16

யாழினி, கண்டிப்பான குரலில் அப்படி சொல்லவும், ஆதித்யாவுக்கு, கோபம் வரத் தான் செய்தது. இருந்தாலும் தற்போதைய காதலி, வருங்கால மனைவி என்று நினைத்துக் கோபத்தை அடக்கிக் கொண்டான். ஆனால், யாழினி கோபப்பட்டுப் பேசும் போது, அவள் முகம் சிவந்து, முட்டைக் கண்ணை உருட்டி உருட்டி பேசும் அழகும், செர்ரிப் பழ உதடும், முத்துப் போன்ற பல்லையும் பார்த்து சொக்கித் தான் போனான்.

சரி மேடம், என் ஈமெயில் ஐடி இது என்று ******-* கூறிவிட்டு, நான் நாளைக்கு வருகிறேன், என்று கூறிச் சென்றான். கடையில் இருந்த பசங்களில், குமரன், என்னக்கா அந்த சார் உங்களைப் பார்த்து ஜொல்லியதில், கடையே மிதந்துவிடும் என்று நினைத்தோம், என்று கூறினான். குமரன், கேட்ட கேள்விக்கு, “ யாழினியின் ரியாக்சன் எப்படி இருக்கும்?, என்று தெரிந்து கொள்ள, ஆவலாக இருந்தாள் அமுதா.” யாழினியும், “தன் கன்னங்கள் சிவக்க, ‘ டேய் அடங்குங்கடா’, என்று கூறிவிட்டு, நான் சாப்பிடப் போகிறேன், என்று கூறி, அமுதாவையும் இழுத்துச் சென்றாள்.

கருணா, “ யாழினி அக்கா, நீங்க வெட்கப்படும் போது, எவ்வளவு அழகா இருக்கீங்க தெரியுமா!, இதை மட்டும் ‘ அந்த சார் பார்த்திருந்தாரு’, டோட்டல் பிளாட்க்கா, என்றான்.” சே, ஒரு போட்டோ எடுத்து வைச்சிருக்கலாம்க்கா, மிஸ் பண்ணியாச்சே, மிஸ் பண்ணியாச்சே என்று புலம்பினான். அடேய், ‘நீ இப்போ அடி வாங்கப் போறே ‘ என்றாள். போக்கா, போக்கா, நாளைக்கும் அந்த சார் வருவாரு தானே, அப்போ தெரிஞ்சிடும்க்கா என்றான்.

இருவரும் சிரித்துக் கொண்டே மேலே சென்றனர். பலராமன், கீழிறங்கி வந்தார். அமுதாவும், யாழினியும் சாப்பிட அமர்ந்தார்கள். அமுதா, யாழினியிடம், “ அந்த ஆதித்யா, பார்க்க ரொம்ப அழகா இருக்காருல என்றாள்.” யாழினி, “அவன் அழகா இருந்தால் நமக்கென்ன, அசிங்கமா இருந்தால் நமக்கென்ன”, என்றாள். அமுதாவோ, என்னடி இப்படி சொல்லிட்டே? என்றாள். அவர், “எவ்வளவு பெரிய பிசினஸ்மேன், எவ்வளவு அழகா வேறே இருக்காரு, அவரைப் போய் இப்படி உப்பு சப்பில்லாமல் சொல்லிட்டே”, என்றாள்.

“ அவரை உனக்குப் பிடிச்சிருக்கா?, சொல்லு. நானும், அப்பாவும் அவர் வீட்டில் போய் பேசி முடிச்சிட்டு வருகிறோம்”, என்றாள் யாழினி. ஏய் , நான் எப்படி சொன்னேன் ?, அவரைப் பிடிச்சுருக்கு னு என்றாள், அமுதா. அப்போ, மூடிக்கிட்டு சாப்பிடுற வேலையை மட்டும் பார். அந்த, நெட்டைக் கொக்கு வந்ததுலே, இடையிலே சாப்பிட வேண்டிய டீயும், பிஸ்கெட்டும் போச்சு. நானே கொலைப் பசியிலே இருக்கேன். மூடிட்டு சாப்பிடு, என்னையும் சாப்பிட விடு என்றாள்.

அமுதா, மனதிற்குள், “ நீ எத்தனை நாளைக்கு இப்படி தப்பிப்பே? நானும் பார்க்கிறேன்டி”, என்று நினைத்துக் கொண்டாள். பின், இருவரும் ஏதேதோ பேசிச் சிரித்தபடி, சாப்பிட்டு முடித்தனர். பின், கிச்சனை ஒதுக்கிவிட்டு, கீழே இறங்கிச் சென்றனர். யாழினியின், டிசைன் செய்த புடவைகள், அந்த ஏரியாவில் பரவ, கடையில் அதிகக் கூட்டம் இருந்தது.

யாழினியும், அமுதாவும் வந்த கஷ்டமர்களிடம் புடவையை, எடுத்துப் போட்டு காண்பிக்க, பையன்கள் மற்றவர்களைக் கவனித்துக் கொண்டார்கள். அதில், சில ஆண்கள் , பெண்களுக்கு மட்டும், இப்படி டிசைன் செய்து கொடுக்கிறீர்களே, “எங்களுக்கெல்லாம் அப்படி செய்து கொடுக்க மாட்டீர்களா?” என்றனர்.

யாழினி, சிரித்துக் கொண்டே உங்களுக்கும் நிறைய டிசைன் வரைந்து , ஆர்டர் கொடுத்திருக்கிறேன் சார். அநேகமா, நாளை அல்லது நாளை மறுநாள் வந்துவிடும் சார். அப்போ வந்து உங்களுக்குப் பிடித்ததை எடுத்துக் கொண்டு போங்கள் சார் என்றாள். வேண்டுமானால், அப்பாவிடம் உங்க போன் நம்பர் கொடுத்து விட்டுப் போங்கள். நாங்கள் கொடுத்த ஆர்டர் வந்ததும், உங்களுக்குப் போன் பண்ணுகிறோம். உடனே, வந்து எடுத்துக் கொண்டு போங்கள் என்றாள்.

அவர்களில் சிலர், “ஆண்களுக்கு என்று என்னத்தைப் பெரிசா செய்துவிட முடியும், எப்படிப் பார்த்தாலும், ‘குதிரைக்குக் கடிவாளம் கட்டியது மாதிரி’, ஒரு பேண்ட், சர்ட், மிஞ்சிப் போனால் கோட் சூட், சபாரி இதைத் தவிர வேறு”, என்ன இருக்கப் போகிறது, என்றனர். யாழினி, சிரித்துக் கொண்டே, நான் கொடுத்த ஆர்டர்கள் வந்தவுடன், வந்து பார்த்து விட்டு, அப்புறம் பேசுங்கள் சார் என்றாள். சரி அதையும் பார்ப்போம், என்று கூறி, தங்களது போன் நம்பரை பலராமனிடம் கொடுத்து விட்டுச் சென்றனர்.

இங்கு, யாழினி கஷ்டமர்களைக் கவனிப்பது, பசங்களிடம் வேலை வாங்குவது என்பதைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்தான். இரவு டிபன் செய்ய , அமுதா, முன்னே சென்று விட, வேலைக்கு அமர்த்திய பெண்களையும் கிளம்பச் சொன்னாள் யாழினி. சரிக்கா, என்று கூறிவிட்டுச் சென்றனர்.

பசங்களுக்கும் சாப்பாடு வந்து விட, இனிமேல் யாரும் கடைக்கு வரமாட்டார்கள், என்று கூறி கடையைப் பூட்டிவிட்டு பலராமனும், யாழினியும் மேலே சென்றனர். யாழினி, தன் அறைக்குச் சென்று குளித்துவிட்டு இலகுவான உடை அணிந்து வெளியே வந்தாள். அமுதா, இட்டிலியும் , சட்டினி, சாம்பார் வைத்திருந்தாள். யாழினி, பலராமனிடம் , என்னப்பா இன்று எவ்வளவு இலாபம் கிடைத்திருக்கும்? என்று கேட்டாள்.

தெரியலைம்மா, இனிமேல் தான் பார்க்க வேண்டும் என்று கூறினார். அமுதா, “ அப்பா, இன்னிக்கு ஆதித்யா, என்று ஒருத்தர் வந்தாரே, அவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், என்று கேட்டாள். ஏம்மா, திடீர்னு கேட்கிறே? என்று கேட்டார். இல்லை, அவரைப்பற்றி உங்கள் கருத்து என்ன?, என்று தெரிந்து கொள்ளலாம், என்று தான் கேட்டேன், என்றாள்.

அதற்குள் யாழினி, சாப்பிட்டு முடித்து, கை கழுவச் சென்றவுடன், அமுதா, பலராமனிடம் கண் ஜாடையில் யாழினியைக் காண்பித்தாள். அதை, உடனே புரிந்து கொண்டார் பலராமன். அவரும், ஆதித்யாவைத் தானே சொல்றேம்மா. பரவாயில்லைம்மா நல்ல பையன் தான். அவ்வளவு பெரிய பணக்காரப் பையன், ஏன் நம்ம யாழினியைத் தேடி வந்து டிசைன் பண்ணிக் கேட்கிறான்? என்று தான் புரியவில்லை என்றார்.

அவர் நினைத்தால், பெரிய பெரிய டிசைனர் எல்லாம் வேலைக்கு நிரந்தரமாக சேர்க்கலாம். ஏன் இங்கே வந்து காத்துக் கிடக்கிறார் என்று புரியவில்லை? என்றார். நான் முடியாது என்று சொல்லியும், இங்கே தான் டிசைன் வேண்டும் என்று கேட்டு, “பிடிவாதமாக இங்கேயே இருந்து, யாழினியிடம் தான் டிசைன் வேண்டும் என்று இருக்கிறார், என்று புரியவில்லை, என்றார்”, பலராமன்.

ஏம்மா யாழி, “நாளைக்கும் அந்தத் தம்பி வருவாரா?, என்று ஏதும் அறியாதது போல் கேட்டார்.” ம்ம் வருவார், வருவார் என்று கூறினாள். தன் அறைக்குள் நுழைந்து, தன் லேப்டாப்பில் ஆதித்யாவிற்கு வரைந்த டிசைனை அவனுடைய ஈமெயில் ஐடிக்கு அனுப்பி வைத்தாள். பின், இன்று சில கஷ்டமர்கள் கேட்ட டிசைனை, வரைய ஆரம்பித்தாள்.

அவள் வரைந்து கொண்டிருக்கும் டிசைன்களைப், பார்த்தாள். என்னடி இது புது டிசைனா இருக்கு என்று கேட்டாள்? இன்று நம் கடைக்கு வந்திருந்த கஷ்டமர்கள் சிலர் இந்த மாதிரி டிசைன் பண்ணிய புடவை வேண்டும் என்று கூறினார்கள். அது தான் அவர்கள் டிசைனை வரைந்து கொண்டிருக்கிறேன் என்றாள்.

போன் ஒலிக்கவும், எடுத்து அமுதா பேசினாள். நீங்க ஆர்டர் கொடுத்த ஆடைகள் நாளைக்குக் காலையில் வந்துவிடும் என்றனர். ஓகே தேங்க்ஸ் என்று வைத்தாள். அமுதா, படுத்து விட்டாள். யாழினி, லேப்டாப்பில் வேலை செய்தபடியே, அந்த டேபிளின் மீது தலை வைத்தபடியே தூங்கிவிட்டாள். இடையில் எழுந்த அமுதா, அவளை எழுப்பிக் கட்டிலில் படுக்க வைத்தாள்.

காலையில் அமுதா தான் எழுந்து எல்லா வேலைகளையும் செய்தாள். ரொம்ப தாமதமாக எழுந்த யாழினி, கடிகாரத்தில் மணியைப் பார்த்து, ஐயோ! இவ்வளவு நேரமா தூங்கினோம். இந்த அமுதாவும், என்னை எழுப்பாமல் விட்டிருக்கா, என்று மனதில் புலம்பியபடி, பாத்ரூமுக்குள் நுழைந்து, தன் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு வெளியே வந்தாள்.

ஏன்டி என்னை எழுப்பலை? என்று கேட்டாள் யாழினி. நீ இராத்திரி இரண்டு மணிக்கு டேபிள் மேல் தலையைக் கவுத்திக்கிட்டு தூங்கிட்டு இருந்தே. அதனாலே எழுப்பலை என்று கூறி, அவள் கையில் காபி டம்ளரைத் திணித்தாள்.

ஆதித்யாவோ, இரவு தன் வீட்டிற்குப் போன் செய்தான். அதுவும் வீடியோ கால். போன் சத்தம் கேட்கவும், அவன் தங்கை தாரணி தான் எடுத்தாள். “ டேய் அண்ணா, எங்கேடா போனே? காஞ்சிபுரம் போயிட்டு வருவதற்கு இத்தனை நாளா? என்று கேட்டாள்.” ஆதித்யாவோ, ஏய் ரேடியோ பெட்டி, உன்னை யாருடி போனை எடுக்கச் சொன்னது? எங்கே, என் வாசு டார்லிங்கும், சிவா டார்லிங்கும் என்று கேட்டான்.

ஆனால், தாரணியோ “என்னடா அண்ணா, உன் முகத்திலே ஏதோ மாற்றம் தெரியுதே, எந்தப் பொண்ணுக்கிட்டேயும் சிக்கிட்டியா? என்று கேட்டாள். ஏய் நீலாம் சின்னப் பொண்ணு, இதெல்லாம் பற்றிப் பேசக் கூடாது என்றான். யாரு, நான் சின்னப் பொண்ணா?, உன்னாலே தான்டா, என் கல்யாணம் தள்ளிப் போயிட்டு இருக்கு, இல்லைனா ‘இந் நேரம் உனக்கு மருமகனையோ, மருமகளையோ எப்போவே பெத்துக் கொடுத்திருப்பேன்?” தெரியுமா, என்றாள்.

ஆதித்யாவோ, அடிப்பாவி, ஒரு அண்ணண்கிட்டே பேசுற பேச்சாடி! என்றான். என்ன செய்யச் சொல்றே? என்னை. உன் ப்ரண்ட், அந்த ஆந்தைக் கண்ணணையிலே காதலிச்சுட்டேன். அவன், ‘என்னடானா உனக்கு எப்போ, கல்யாணம் ஆகிறதோ , அப்பத்தான் கல்யாணம் பண்ணுவேனு சொல்றான்டா.

பாவம் இல்லை இந்தப் பச்சை மண்ணு. டேய் நீ எப்போ வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கோ, அதுக்காக எங்களை ஏன்டா கல்யாணம் பண்ண விடாமல் தடுக்கிறே, என்று புலம்பினாள். அதைக் கேட்டுக் கொண்டே வந்த, மொத்த குடும்பமும், இவளைப் பார்த்து முறைத்தது. முதல்லே இவளைத் துரத்தனும், என்று கூறி ஆதித்யாவின் அம்மா கோகிலா, அவளின் தலையில் ஒரு கொட்டு வைத்தார்.

என்னை எதுக்குமா கொட்டுறே? என்று கூறினாள். டேய் ஆதி, எங்கேடா இருக்கே? என்று கேட்டார் கோகிலா. பெங்களூரில் இருக்கேன்மா என்றான். ஆதித்யா, அப்பா அங்கே நமக்கு எந்த பிஸ்னெஸும் கிடையாதே. பின்னே, அங்கே எதுக்குப் போனே? என்றார். அதற்குள் வாசுகியும், சிவராமனும் வந்து விட்டனர். ஏய்யா ராசா, எங்கேயா போனே? எனக்கு நீ இல்லாமல் ரொம்ப போரிங்டா பேராண்டி என்றார் சிவராமன்.

அது ஒரு பெரிய கதை சிவா டார்லிங். அப்படி, என்ன பெரிய கதைடா?, என்று சித்தப்பாவின் மகன் வெங்கடேஷ் கேட்டான். சிவா டார்லிங், வாசு டார்லிங் என்று ராகம் பாடினான். என்ன விசயம் என்று சொல்லித் தொலைடா? என்று எகிறினான், அடுத்த சித்தப்பா பையன் ஹீகரன். அதைச் சொல்ல, எனக்கு வெட்கமா இருக்குடானு நெளிந்தான்.

என்னது உனக்கு வெட்கமாயிருக்கா! என்று, அவன் அத்தை மகள் ரஞ்சனி கேட்டாள். அடியேய் , உன் தம்பி எந்தப் பொண்ணுக்கிட்டேயோ கவுந்துட்டான்டி, என்றான், அவன் அக்கா கணவர் ரகு. ஐ மாமா! கரெக்டா கண்டு பிடிச்சிட்டீங்களே என்றான், ஆதித்யா. எப்படி மாமா கண்டுபிடிச்சீங்க? என்றான். ம்ம் இதைக் கண்டு பிடிக்கிறது, கம்ப சூத்திரம் பாரு.

கேட்கிற கேள்வியைப் பாரு, என்றாள் ரஞ்சனி. மாப்பிள்ளை அது தான் உன் மூஞ்சியே காட்டிக் கொடுக்குதே. அப்புறம் நீ விடுற பாரு ஜொல்லு. அதை விட நீ வெட்கப்படுறே பாரு, இந்தக் கண்றாவிலாம் பார்த்தாலே தெரியும். பையன் எவள்கிட்டேயோ சிக்கிக்கிட்டானு நல்லா வே தெரியும்.

டேய் கண்ணா, நிஜமாவாடா! யாருடா பொண்ணு? எந்த ஊருடா? நல்லா அழகா இருப்பாளா? என்று மூச்சு விடாமல் கேட்டார்கள். இவனும், அவள் கோவிலில் இருந்த போது எடுத்த போட்டோவைக் காட்டினான். ஏய் சூப்பரா இருக்காடா, என் பேத்தி, என்று தாத்தாவும் பாட்டியும் கூற, அப்பா, சித்தப்பாக்கள், அம்மா, சித்திகள் மருமகள் ரொம்ப அழகா இருக்காடா, என்க, நண்டுலேயிருந்து பெரிசு வரைக்கும் யாழினியின் போட்டோவைப் பார்த்துக் கூறிக் கொண்டனர்.

நாங்க உடனே வரவாடா? பொண்ணு கேட்க, என்றார்கள். என்னது! உடனே வாரீங்களா! எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க. நான் தான் அவளை விரும்புறேன். இன்னும் அவளிடம் காதலைச் சொல்லலை என்றான். எல்லோரும் அவனை முறைக்க, “ கோகிலாவோ, கண்களில் நீர் தேங்க ஆதி, உன் வயசுப் பசங்க எல்லாம் குழந்தை குட்டினு இருக்காங்க. நீ இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படி இழுத்து அடிப்பே?, என்று அழுதார்.”

சிவராமனும், வாசுகியும், ஐயா! ஆதி நீ தான் இந்த வீட்டுக்கு மூத்த பிள்ளை. உனக்குக் கல்யாணம் ஆகாமல் , மற்றதுகளும் கல்யாணம் பண்ண மாட்டேனு காத்துட்டிருக்குதுக. அதனாலே, சீக்கிரமா ஒரு முடிவெடு ராசா என்றனர். ஐயோ! வாசு டார்லிங், சிவா டார்லிங், டோன்ட் ஒரி. அம்மா, அழுகாதீங்க. எப்படியும் இந்த வருசம் கல்யாணம் பண்ணிடுவேன்.

நடந்தது அனைத்தையும் ஆதி கூற, சிவராமன், ஏன்டா உனக்குத் திருமணமாவதற்கு, நாங்க ஏன்டா மொட்டை போட வேண்டும் என்றார். பாரு வாசு டார்லிங், உன் சிவா டார்லிங்கை. அவர் கேட்கிறதும் நியாயம் தானேடா. நீ திருமணம் செய்து கொள்வதற்காக, அவர்கள் ஏன் மொட்டை போட வேண்டும், என் ரஞ்சனி கேட்க, அத்தை பாரு, உன் மகளை , எப்படிப் பேசுறானு.

அவள் கிடக்கிறா கண்ணா. நீ சொல்லு, ஏன் தாத்தா, பாட்டிக்கு மொட்டை போட வேண்டும் என்று வேண்டிக்கிட்டே. அத்தை, இப்போ நான் சொல்றது எல்லாத்தையும் நல்லா கேட்டுக்கோங்க. கல்யாணத்தப்போ அப்பா, அம்மா, சித்தப்பாக்கள், சித்திகள் மொட்டை போட்டால் நல்லாயிருக்காது. மாமா, அத்தை, அக்கா, அவர்கள் வீட்டுக்காரர்கள் மொட்டை போட்டாலும் நல்லாயிருக்காது.

சரி, சுத்தி நிற்குதுகளே இளமை ஊஞ்சலாடுகிறது பசங்க, இதுகளுக்கு மொட்டை போட்டால், அவங்க தானே அவ்வளவு வேலையும் பார்க்கனும். அதனாலே, அவர்களுக்கும் மொட்டை போட முடியாது. அதனால், தான் சிவா டார்லிங்கையும், வாசு டார்லிங்கையும் மாட்டிவிட்டேன். எப்புடி என்று கேட்டான்.

நீ என்ன காரணம் சொன்னாலும், நான் மொட்டை போட மாட்டேன். எவ்வளவு பெண்கள் வருவாங்க கல்யாணத்துக்கு. அப்போ நான் மொட்டையோட இருந்தால் அவ்வளவு பெண்களும், என்னை வித்தியாசமா பார்க்க மாட்டாங்க, என்று ஆதங்கப்பட்டார். அதற்குள் அவர் மனைவி வாசுகி, நானே எப்படா என் பேரன் கல்யாணத்தைப் பார்ப்பேன், என்று இருக்கேன்.

உங்களுக்கு உங்க முடி தான் பெரிசாப் போச்சா. “பிள்ளை இல்லாதவன் வீட்டில் கிழவன் துள்ளி விளையாண்ட கதையா இருக்கு”, பேரன், பேத்திகளுக்குக் கல்யாணம் பண்ணும் போது, உங்களைக் கவனிக்கனுமா , கல்யாணத்துக்கு வரும் பெண்கள். அப்படி மட்டும் நடக்கட்டும், கண்ணை நோண்டிப்புடுறேன். ஐயா ராசா! நீ எப்படியாவது அந்தப் பெண்ணிடம் முதல்லே சம்மதத்தை வாங்கு.

இந்த வருசத்திலேயே கல்யாணம் பண்ணிடுவோம் , என்று கூறினார். எல்லாரும் அதையே கூற, தன் அப்பாவிடம் இங்கேயே , ஒரு கடை ஆரம்பித்தால் தான், என் காரியம் சீக்கிரம் முடியும், என்று கூறினான். அவர்களும் சரி என்று ஒப்புக் கொண்டார்கள். அங்கேயே ஒரு வீட்டையும் வாங்குப்பா. எல்லாரும் அடிக்கடி வந்து போனால் தங்குவதற்கு லாட்ஜில் தங்க முடியாது என்றார்.

சரிப்பா, என்றான். ரொம்ப தேங்க்ஸ்ப்பா என்றான். அங்கே, முதலில் வீடு பார். நம் தொழில் தொடங்க இடமும் பாரு. அங்கே, உனக்குத் துணையா இங்கே யார் வருகிறார்கள் என்று கேட்டுச் சொல்றேன் என்றார். மறு நாள் பொழுது, சீக்கிரமே எழுந்து கிளம்பி யாழினி கடைக்கு வந்து விட்டான்.

அப்போது தான் யாழினி, கடையைத் திறந்து, விளக்கேற்றிக் கொண்டிருந்தாள். பசங்களும் அவளும் தான் இருந்தார்கள். தூபக்காலில், சாம்பிராணி போட்டு குமரனிடம் கொடுக்க, அவன் கடை முழுவதும் பரப்பினான். பலராமன், கீழே இறங்கி வந்தார். இவன், கடைக்குள் நுழைந்து, குட் மார்னிங் சார். கிளம்புவோமா என்றான். இவர் குழப்பத்துடன் எங்கே போக வேண்டும்?, என்று கேட்டார்.

சரியாப் போச்சு. ரெஜிஸ்டர் ஆபிசுக்குத் தான் சார் என்றான். அது, நீங்கள் சும்மா சொல்லவில்லையா?, உண்மையாகவே சொன்னீர்களா?, என்று கேட்டார். சார், நான் எப்போதும் கொடுத்த வாக்கை எப்போதும் தவறவிட்டதில்லை என்றான். அம்மா , ரம்யா, மேலே அக்காவை வரச் சொல்லு என்றார். அமுதா, வந்தவுடன் தனியே அழைத்துச் சென்று, யாழினியுடன், என்னம்மா!, அந்தப் பையன் உண்மையிலேயே ரிஜிஸ்டர் பண்ண கூப்பிடுறான் என்றார்.

நிஜமாவாப்பா! என்றார்கள் பெண்கள். ஆமாமா, அவன் வந்து கிளம்பச் சொல்கிறான்மா , என்றார். அமுதா, ஏதோ யோசனையில் இருந்தவள், சரிப்பா அவர் சொல்றபடியே போய் செஞ்சிடுங்க என்றாள். அப்படியா சொல்றே!, என்று கேட்கும் போது, அவர்கள் ஆர்டர் கொடுத்த துணிகள் வந்தவுடன் யாழினி, அதைக் கவனிக்கச் சென்றாள்.

அமுதா பலராமனிடம் , அப்பா ஆதித்யாவுக்கு, யாழினி மேலே ஒரு கிரஸ் இருக்கு. அவர் , கண்ணில் யாழினி மேல் காதல் தாம்ப்பா தெரியுது. அதனாலே, ஒத்துக்கோங்க அப்பா. அவரிடம் சகஜமாக நடந்துக்கோங்க. அப்புறம், வெண்பா அப்பாவிடம் , கூறி ஒரு நாள் வந்து ஆதித்யாவைப் பார்க்கச் சொல்லுங்க.

அவருக்கும் பிடிச்சிருந்தால், அவரைப்பற்றி விசாரிக்கச் சொல்லுவோம் என்றாள். நல்ல இடமாக இருந்தால், யாழினிக்கு முடிச்சிடுவோம் என்றாள். ம்ம் முதலில் இரண்டு பேரும் விரும்புகிறார்களா என்று பார்ப்போம், என்றார். கண்டிப்பா ஆதித்யா யாழியை, விரும்புகிறார். இப்போ யாழியோட நிலைமை தான் என்னவென்று தெரிய வேண்டும். அதற்கு, அவர்கள் இருவரும் அடிக்கடி சந்திக்க இது தான் நல்ல வாய்ப்பு. அதனால், நீங்கள் பத்திர ஆபிஸுக்குப் போய் ரிஜிஸ்ட்டர் பண்ணிவிட்டு வாருங்கள்.

அவருடைய பிடியும் நம்மிடம் இருந்தால் நல்லது தானேப்பா. இப்போ, உங்களுக்கு சாட்சி கையெழுத்துப் போட வெண்பா அப்பாவை வரச் சொல்றேன். அவர்களும் பார்க்கட்டும் என்றாள். சரிம்மா, நீ போன் பண்ணு. நான் வெளியிலே போறேன் என்று சொல்லி வெளியே வந்தார். யாழினி, கடைக்கு வந்த கஷ்டமர்களை, வேலை செய்யும் பெண்களுடன் சேர்ந்து கவனித்துக் கொண்டிருக்க, ஆதித்யா, அவளைப் பார்ப்பதும், பசங்களைப் பார்ப்பதுமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அமுதா, வெண்பா வீட்டிற்குத் தகவல் சொல்ல, நான் உடனே வருகிறேன் என்றார். அமுதா, வந்தவுடன், யாழினி ஆதித்யாவிடம் அவனுக்காக வரைந்த டிசைனைக் காட்டி, ஏதாவது மாற்ற வேண்டுமா என்று கேட்டாள். அவனும், பார்த்து விட்டு , எல்லாமே அருமையா, அழகாயிருக்கு. எதுவும் மாற்ற வேண்டாம் என்று கூறினான், கூடவே இந்த டிரெஸ்ஸில் ரொம்ப அழகாயிருக்கீங்க என்று, லேப்டாப்பில் டிசைனைப் பார்ப்பது போலவே, அவள் கண்ணைப் பார்த்து அப்படிக் கூறவும் அவளுக்கருகில் அவன் முகம் இருக்கவும், மூச்சு விடவும் மறந்து அவனைப் பார்த்தாள். அவன் கண்களில் தெரிந்த ஒளியும், அவன் உதட்டில் இருந்த புன்னகையும், அவளுக்கு ஏதோ புரிந்தது போல் இருந்தது.

வானவில் வளரும்.

இது வரை வானவில் வாழ்க்கை கதையைப் படித்த அத்தனை சகோதர, சகோதரிகளுக்கும் பானுமதியின் வணக்கங்களும்,நன்றிகளும். தொடர்ந்து படித்து எனக்கு ஆதரவும், குறைகள் இருந்தால் கூறும்படிக் கேட்டுக் கொள்கிறேன். என்றும் அன்புடன் பானுமதி.

error: Content is protected !!