வானவில் வாழ்க்கை 4 (1)
யாழினி தன் கதையைக் கூறி முடிக்கவும் ஒரு “மோட்டல்” முன் காரை நிறுத்தினாள் அமுதா. இருவரும் இறங்கி அந்த மோட்டலுக்குள் நுழைந்து கை கழுவி விட்டு ஒரு மேஜையின் முன் அமர்ந்தனர். உள்ளே நுழையும் போதே ஒரு கரும்பலகையில் எழுதியிருந்த மெனுவையும் படித்து விட்டூ உள்ளே சென்றார்கள். சப்ளையர் வந்து என்ன வேண்டும் என்று கேட்க
“ இரண்டு பிளேட் மட்டன் பிரியாணி, இரண்டு பிளேட் மட்டன் சுக்கா, இரண்டு முட்டை ஆம்ளேட்”, என்று சொல்லி நிறுத்தினர். சீக்கிரம் கொண்டு வரவும் கூறினர்.
சப்ளையர் அவர்கள் கேட்டதை எல்லாம் கொண்டு வந்து மேஜை மேல் பரப்பி வைத்தார். அவ்வளவு தான் சுற்றிலும் உள்ளவர்கள் நம்மைப் பார்த்து முகத்தை சுழிக்கிறார்கள் என்ற எண்ணம் எல்லாம் இல்லை. “காய்ந்த மாடு கம்பங் கொல்லையில் விழுந்தது”, போல் அவ்வளவு வேகமாகச் சாப்பிட்டனர்.
சப்ளையர் மேலும் என்ன வேண்டும் என்று கேட்க “ வொய்ட் ரைஸ்”, மீன் குழம்பு, மீன் வறுவல்”, என்றனர். அதையும் கொண்டு வந்தவுடன் சப்புக் கொட்டி “ரசிச்சு ருசிச்சு” சப்புக் கொட்டி சாப்பிட்டு முடித்தனர். பில் வந்தவுடன் சப்ளையருக்கு டிப்ஸ் ஐம்பது ரூபாயைக் கொடுத்து விட்டு, பில்லில் இருந்த பணத்தைக் கொடுத்து விட்டு, இரண்டு பாட்டில் தண்ணீர் வாங்கிக் கொண்டு காரில் ஏறினர்.
இப்போது அமுதாவை அந்தப் பக்கம் தள்ளி விட்டு யாழினி காரை ஓட்டத் தொடங்கினாள். இப்போ நீ சொல்லு. நீ எப்படி இங்கே வந்து சேர்ந்தாய்? என்று கேட்டாள் யாழினி. அமுதா ஆழமாக ஒரு மூச்சை இழுத்து விட்டு, கண்ணை மூடி காரில் சாய்ந்து கொண்டு தன் கதையை சொல்லத் தொடங்கினாள்.
என் ஊர் “ சென்னை”. அப்பா மட்டும் தான். அம்மா நான் பிறந்தவுடனேயே இறந்து விட்டார்களாம். அப்பா பெயர் பலராமன். ஜவுளிக்கடை வைத்துள்ளார். அம்மா இறந்தவுடன் அப்பாவை உறவினர்கள் எல்லாம் “ மறு திருமணம்”, செய்து கொள்ளச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அப்பா அதற்கு ஒத்துக் கொள்ளாமல் எனக்கு என் பொண்ணே போதும் என்று சொல்லி மறுத்து விட்டாராம். அதன் பிறகு சொந்தமெல்லாம் அவ்வளவாக ஒட்டவில்லை.
என் அப்பா தான் என்னை வளர்த்து ஆளாக்கியதெல்லாம். என்னைப் பள்ளியில் சேர்க்கும் வரை ஒரு ஆயாவின் துணையோடு என்னைக் கவனித்துக் கொண்டார். எனக்குக் கிடைத்த அப்பா போல் யாருக்கும் கிடைத்திருக்க மாட்டார்கள்.
அவ்வளவு அன்பு என் மேல். பள்ளியில் சேர்க்கும் வரை அவரைத் தவிர யாரும் தெரியாது.
நான் சின்ன வயதிலிருந்தே ரொம்ப அமைதியா ஆனால் துருதுருனு ஒரு விசயத்தை சீக்கிரம் அப்சர்வ் பண்ணிக் கொள்வேன். என் குணத்தைப் பார்த்து அப்பா அம்மாவின் போட்டோவைப் பார்த்து நம்ம பொண்ணு உன்னைப் போலவே துருதுருனு அமைதியா எதையும் சீக்கிரம் உள் வாங்கிக் கொள்கிறவளா இருக்கா என்று சொல்லுவார்.
பள்ளியில் சேர்ந்த போதும் மற்ற குழந்தைகள் போல் அழாமல் இருந்தேன். எனக்கு அப்போ அங்கே என்னைக் கவர்ந்தது நான்கு பேர். அமிர்தா, எல்சி, அமலா, சாந்தி.” அன்றே நாங்கள் ஐந்து பேரும் ஒன்றாக இருக்க ஆரம்பித்தோம். அப்பாவுக்கு நான் எங்கே அழுது ஆர்ப்பாட்டம் செய்வேனோ என்று பயந்து பள்ளி முடிவதற்கு முன்பே வந்து நிற்பார்.
ஆசிரியரிடம் கேட்பார் நான் ரொம்ப அழுதேனா என்று. அப்பா நான் அழல, இவங்க என் ப்ரண்ட்ஸ்னு அவர்கள் பெயரையும் கூறியிருக்கிறேன்.
ஆசிரியரும் ரொம்ப சமத்துப் பொண்ணுகங்க “ இந்த ஐந்து பேரும்” என்று பெருமைப்பட்டார்கள். வளர வளரத் தான் எனக்கு அம்மா இல்லை என்பதே தெரிந்தது.
அப்பாவிடம் கேட்டதற்கு அம்மா கடவுளா இருந்து உன்னைப் பார்ப்பார்கள் என்று கூறி அழுதார். அப்பா அழுததைப் பார்த்து அதற்கப்புறம் அம்மாவைப் பற்றி நான் கேட்பதில்லை. எனக்கு “பாட்டு, நடனம்”, என்றால் உயிர். அப்பா அதை அறிந்து எனக்குக் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.
வளர வளர நான் வீடு பெருக்க, பாத்திரம் கழுவ, என் துணியை நானே துவைக்க என்று பார்த்துக் கொண்டேன். பள்ளியில் நாங்கள் ஐந்து பேரும் எங்கே போனாலும் ஒன்றாகத் தான் இருப்போம். படிப்பிலும் நாங்கள் ஐவரும் தான் முதலிடத்தில் இருப்போம். “பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு நிறைய கோப்பைகள், சர்டிபிகேட்ஸ்லாம் வாங்கினோம்.
நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது பூப்பெய்தினேன். எனக்கு அம்மா இல்லாததால் ஆயா எனக்குப் புரியும் படியாகச் சொல்லிக் கொடுத்து அப்படி வரும் போது பயப்படவோ, அழுகவோ கூடாது என்று சொன்னார்கள். அதனால் அதைக் கண்டு பயப்படாமல் ஆசிரியரிடம் கூறினேன்.
அவரும் அப்பாவிற்கு போன் பண்ணி அழைத்துப் போகச் சொன்னார்கள். அப்பாவும் வந்து அழைத்துப் போனார். ஆயா தான் என்னென்ன செய்ய வேண்டும் என்று கூறினார்கள். விசயம் கேள்விப்பட்ட என் தோழிகளின் அம்மாவும் வந்து எனக்கு செய்ய வேண்டியதெல்லாம் செய்து, இனி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்கள். தினமும் முட்டை, கழி, புட்டுனு என்னென்னவோ செய்து கொண்டு வந்து கொடுத்தார்கள். அதற்கப்புறம் பள்ளி சென்ற போதும் பையன்களிடம் அளவோடு தான் பேசுவேன்.
ஒன்பதாம் வகுப்பு முடிந்து பத்தாம் வகுப்பு வந்தோம். பப்ளிக் எக்ஸாம் என்பதால் சீக்கிரமே சிலபஸ் முடித்து நிறைய தேர்வு வைப்பதாக பெற்றோர் ஆசிரியர் பொதுக் குழுவில் சொன்னார்கள். நானும் அப்பா செய்யும் சமையலைப் பார்த்து நானும் செய்யப் பழகிக் கொண்டேன். ஆயா அப்பா கடை அடைத்து வரும் வரைக்கும் துணையாக இருப்பார்கள்.
விடு முறை நாள்களில் அப்பாவுடன் கடைக்குப் போக ஆரம்பித்தேன். அப்பாவுக்கு உதவியாக வரும் வாடிக்கையாளரிடம் அவர்கள் மனசு நோகாமல் அப்பாவைப் போலவே பேசி வாங்க வைப்பேன். எல்லாரும் அப்பாவிடம் உங்களைப் போலவே பெண்ணையும் வளர்த்திருக்கிறீர்கள்.
இவள் தலையெடுத்து விட்டால் நீங்கள் பெரிய ஷோ ரூமே வைத்து விடுவீர்கள் என்று கூறிச் செல்வார்கள். வீட்டுக்கு வந்தவுடனே அப்பா என்னை உட்கார வைத்து சுத்திப் போடுவார். இன்னைக்கு என் பொண்ணு மேலே எவ்வளவு பேர் கண்ணு பட்டிருக்கும் என்று சொல்வார். நானும் அவரைப் பிடித்து உட்கார வைத்து இன்னிக்கு என் அப்பா மேலே எவ்வளவு கண்ணு பட்டிருக்கும்னு சொல்லி சுத்திப் போடுவேன்.
அப்பா வாலு வாலுனு சொல்லி அனைத்துக் கொள்வார். கிச்சனுக்குள்ளே அவர் நுழையும் முன்னே நான் போய் இட்டிலியோ, தோசையோ செய்து சட்டினி வைச்சுக் கொடுத்துடுவேன்.
அதற்கப்புறம் பப்ளிக் எக்ஸாம் நெருங்கி விட்டதால் பள்ளி , வீடு, புத்தகம், தேர்வு என்று நாட்கள் பறந்தன. தேர்வும் வந்தது.தேர்வு நாள் அன்று அப்பாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி அவர் விபூதி பூசியவுடன் தான் நான் பள்ளிக்குச் செல்வேன்.
வானவில் வளரும்.