Vanjam 5

Vanjam 5

வஞ்சம் – 5

இன்று ( சென்னை பட்டணம் )

விஷ்ணுவிற்கு, தேவேந்திரன் என்ற பெயரை கேட்டாலே அவனை அறியாமலே ஏதோ ஒரு உணர்வு, அது கோபமா..?, இயலாமையா.?, வேறு ஏதாவதுமா என்று அவனுக்கே தெரியவில்லை… காரணம் ஏன்.? அதுவும் அவனுக்கு தெரியவில்லை…

ஆனால் ஓன்று அந்த பெயர் அவனை மிகவும் பாதிக்கிறது என்பதை இந்த ஒரே நாளில் அறிந்துக் கொண்டான்….

இதற்கு மேலும் இங்கிருந்தால் சரி இல்லை என்று எண்ணிய விஷ்ணு, கார் சாவியை எடுத்துக் கொண்டு ஆபிஸ் விட்டு வெளியில் வந்தான்…

ஆபிஸ் வெறிசோடி இருக்க, “ தான் இத்தனை நேரமா அந்த பெயரில் லயித்திருந்தோம் “ என எண்ணியவன் மேல் அவனுக்கே கோபம் வந்தது,

“ விஷ்ணு உன்னை எதுவும் அடிமைபடுத்தாது, அடிமை படுத்தகூடாது, நீ ஒரு ராஜா, தொழில் பிரம்மா… எதற்கும் அடிமையாகதே “ என்ற  அவனின் தாயின் வார்த்தைகள் காதில் ஒலிக்க, பழைய விஷ்ணுவாக கம்பீரமாக எழுந்தவன், முகத்தை மறைத்து விழுந்த முடியை அழுந்த கோதி, தனது கூலரை எடுத்து கண்ணில் அணிந்து வேக நடையுடன் தனது ஜாக்குவாரை நோக்கி சென்றான்… 

அந்த சாலையில் அவனது ஜாக்குவார் சீரான வேகத்தில் பயணிக்க, மனமோ கொந்தளித்துக் கொண்டு இருந்தது,

காரணம் “ அவள் “…  அந்த அவள் தான் எல்லாவற்றிக்கும் காரணம்., “ அவள் ஒரு விதவை “ என்று அவளின் செர்டிபிகேட் கூறுகிறது, எப்படி அவளால் மீண்டும் எழ முடிந்தது,

“ என் பணத்தை சுற்றி வட்டமிட்டவள், அது முடியாமல் போக, பெரிய ஆளாக பிடித்து விட்டாளா.? அது தான் இந்த ஆட்டம் ஆடுகிறாளோ ..? தன் கணவன் இறந்த பின்னும் அவன் நினைவாகவே வாழும் மக்கள் மத்தியில் இருந்துக் கொண்டு அவளால் எப்படி உடனே அடுத்தவன் பின்னே செல்ல முடிகிறது  “ என அவளை பற்றி தாறுமாறாக யோசித்தவன் ஜாக்குவார் அவனின் வீட்டின் முன் மெதுவாக நின்று வேகமாக ஹாரனை அழுத்த, ஓடிவந்த காவலாளி கேட்டை திறந்து விட்டான்…

அந்த பைபர் பாதையில் ஊர்ந்து அவனது ஜாக்குவார் செல்ல, அதற்கு முன்னே அங்கு ஒரு BMW நிற்பதை கண்டு, யாராக இருக்கும் என்று  யோசனையாக புருவத்தை வருடிக் கொண்டவன் இறங்கி வீட்டின் உள் சென்றான்….

வேக நடையுடன் தன் அறைக்கு செல்ல மாடியில் கால் வைத்தவனை  “ விஷ்ணு “ என்ற தாயின் குரல் தடுக்க, நிதானமாக அவரைப் பார்த்து திரும்பியவன் கண்ணில் ஷோபாவில் வெள்ளை சட்டை, வெள்ளை பாண்ட் அணிந்திருந்த ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்டவன், அவரையே பார்த்து நின்றான்…

தியாகராஜ் அவனையே பார்த்திருந்தார்.. அவனிடம் இருந்து ஒரு வரவேற்பையும் அவர் எதிர் பார்க்கவில்லை தான், ஆனால் அவரையும் அறியாமல் அவர் முகம் அவனை ஆவலாக பார்த்தது,

தியாகராஜ்க்கு விஷ்ணுவை எப்படியும் தன் மருமகனாக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது, அவன் ஓகே சொல்லிவிட்டான் தான், ஆனால் ரிஷி பேசியது அவரை கொஞ்ச யோசிக்க வைக்க, அவனிடம் நேரடியாக பேசவேண்டும் என்று எண்ணி அவனை காண வந்திருந்தார், ஆனால் அவனோ அவரை கண்டு கொள்ளாமல் செல்லவும், “ இந்த கல்யாணம் நடக்காதோ “ என்று யோசனை வர அவனையே பார்த்திருந்தார்..

காரிகை அழைக்கவும், நிதானமாக நடந்து அவர் முன் வந்தவன், அவருக்கு எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்து, அவருக்கு முன்னே கால் மேல் மேல் கால் போட்டவன், தனது ஓவர் கோர்ட்டை இழுத்து விட்டு “ சொல்லுங்க அங்கிள் “ என்றபடி அலட்சியமாக அமர்ந்துக் கொண்டான்..

 அவன் அமர்ந்த விதம் அவருக்கு பிடிக்கவேயில்லை, ஆனால் அவன் அப்படி தான் என்று அவர் அறிந்ததே “ நிச்சயத்துக்கு நாள் குறிக்க அம்மா சொல்லிருந்தாங்க விஷ்ணு, அதை பற்றி தான் பேசவந்தேன் “ என நேரடியாக அவனிடம் கேட்க,

அவரையே ஒரு நிமிடம் கூர்ந்துப் பார்த்தவன், அவர் மனத்தை படித்தவன் போல் வேகமாக அந்த இடத்தை விட்டு எழுந்துக் கொண்டான்.. 

அவன் எழவுமே பதறி எழுந்த தியாகராஜ் “ என்னாச்சு விஷ்ணு “ என அவனிடம் கேட்டார்..

அவரையே நிதானமாக பார்த்தவன் “ அங்கிள், நீங்க என்ன நினைச்சு வந்திருக்கீங்க என்று உங்க முகத்தை பார்த்தேலே தெரிகிறது.. என்னை நம்பாமல் இத்தனை தூரம் வந்திருக்கீங்க “ என்றவன் அவரை ஆழ்ந்து ஒரு நொடி நோக்கியவன் “ இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும் இதற்கு மேற்கொண்டு நடக்கும் விஷயம் எல்லாம் அம்மாவிடம் பேசிவிடுங்கள்.. “ தீவிரமாக அவர் முகம் பார்த்து கூறியவன் வேகமாக தன் அறை நோக்கி சென்றான்…

தியாகராஜ் நோக்கி திரும்பிய காரிகை “ என்ன தியாகராஜ் நீங்க அவன் கிட்ட போய் சந்தேகமா கேட்குறீங்க, ஏதோ இன்னைக்கு அவன் நல்ல மூடில் இருக்கிறான். இல்லையென்றால், இந்த நேரம் நீங்கள் இப்படி இங்கு இப்படி நின்று பேசிருக்க மாட்டீங்க…? “ என்றவர் “ உங்க பொண்ணு தான் என் மருமகள்… சீக்கிரம் எல்லாம் சரியாபோகும் “ என்றவரிடம் விடை பெற்று தியாகராஜ் செல்ல, அப்படியே சோபாவில் அமர்ந்துக் கொண்டார் காரிகை…

இன்று விஷ்ணு முகத்தில் பெரும் வித்தியாசம் தெரிந்தது காரிகைக்கு, டாக்டர் அவனை ரொம்ப யோசிக்க வேண்டாம் என்று கூறி இருக்கிறார்.. அதனால் தான் அகில்தேவ்வை அவன் அருகிலையே வைத்திருக்கிறார் காரிகை…. மிகவும் கவனமாக விஷ்ணுவை பார்த்து வருகிறார்… அவருக்கு எல்லாமே அவன் தானே…? அவனின் உடல் நிலையை கருத்தில் கொண்டு தான் சீக்கிரமே அவனுக்கு திருமணத்தை நடத்த முடிவெடுத்தார்… அவனின் அதிக யோசனை என்றும் அவருக்கு ஆபத்தே..?

தன் அறைக்கு வந்த விஷ்ணு நேராக குளியல் அறைக்கு சென்றான்.. எப்பொழுதும் அவன் நாளில் இரண்டு முறை குளிப்பது வழக்கம், அது அவனின் சிறுவயது முதலே கடைபிடிக்கும் ஒரு வழக்கம்…

குளித்து டவலை கட்டி தலையை துவட்டிக் கொண்டே வெளியில் வந்தவன் கண்ணாடி முன் நின்றுக் கொண்டு உடலை துடைக்க, எப்பொழுதும் போல் இப்பொழுதும் அவன் நெஞ்சில் இருந்த டாட்டூ  அவன் புருவத்தை யோசனையாக உயர செய்தது…

அவன் அறை முழுவதும் அவனின் புகைப்படமே இடம் பெற்றிருக்கும் அதில் இருக்கும் ஒரு படத்திலும் அவனின் நெஞ்சில் இருக்கும் டாட்டூ தெரியவே இல்லை… அதை எப்பொழுது அவன் வரைந்தான் என்றும் அவனுக்கு நினைவில்லை…. ஆனால் அவன் வலது நெஞ்சில் இருக்கும்  எழுத்துக்களால் பின்னி பிணைக்கப்பட்ட சிங்க முகம் கொண்ட டாட்டூ அவனை போலவே கர்சிக்கிறது…

அதை பற்றி என்ன யோசித்தும் அவனுக்கு பதில் கிடைக்கவில்லை… அதற்கு மேல் அவனும் யோசிக்க எண்ணவில்லை… அதில் என்ன எழுதி இருக்கிறது என்றும் தெரியவில்லை… வித விதமாக போட்டோ எடுத்தும், ஜூம் செய்தும் பார்த்துவிட்டான் அதில் எழுதி இருப்பது அவனுக்கே தெரியவில்லை… எப்படி யோசித்தாலும் அவனுக்கு பதில் கிடைக்கபோவதில்லை… அவனுக்கு ஓன்று மட்டும் நன்றாக தெரிந்தது… இப்பொழுது அவன் வாழும் வாழ்க்கை மிகவும் போலியானது…!!

அவனின் முந்தைய வாழ்வு எப்படி பட்டது என்று வெளியிலும், செய்திதாளிலும், தன் தாயின் வாயிலாகவும் அறிந்துக் கொண்ட வாழ்க்கை தான் அவன் இப்பொழுது வாழும் வாழ்க்கை… இனியும் அதை பற்றி யோசித்து என்ன பயனும் இல்லை என்ற முடிவுக்கு வந்த விஷ்ணு, அவன் தாய் கூறியபடி அது முடிந்து போன வாழ்க்கை…

யோசனையில் இருந்து மீண்டவன் ஷேர்மார்கெட் பக்கம் பார்வையை திருப்பினான்… அவன் மனதை திசைதிருப்பும் ஒரே விஷயம் அது தான் அவனுக்கு, அதில் வரும் ஷேர்ஸ் அவனை அத்தனை சந்தோசப்படுத்தும், மடிகணினியை தூக்கிக் கொண்டவன் அவனின் அறை பால்கனிக்கு சென்று, அங்கிருந்த கூடை ஊஞ்சலில் அமர்ந்தவன், கால்களை பால்கனி கம்பியில் நீட்டி சாய்ந்து வசதியாக அமர்ந்து கொண்டவன் மடியில் மடிகணினி இருந்தது.. எப்போதாவது உதவும் என்று அகில் உதவியுடன் அங்கும் தன் கால் பதித்திருந்தான் விஷ்ணு காரிகை…

அகில் ஷேர்மார்க்கெட்டில் மிகவும் கெட்டிக்காரன்.. ஏற்ற, இறக்கம் நன்கு அறிந்தவன்.. எப்பொழுது ஷேர்ஸ் அதிகமாகும், எப்பொழுது டவுண் ஆகும் என்று விரல் நுனியில் கற்று தேர்ந்தவன்…

இடையிடையே விஷ்ணுவிற்கு கற்றுக் கொடுப்பவன்… பல மாதங்களுக்கு முன் ஒரு மந்தமான கம்பெனியில் தனது ஷேர்ஸ்ர்சை இன்வெஸ்ட் பண்ணி வைத்திருந்தான்….

இப்பொழுது கூட அவனின் ஷேர்ஸ் ஏறிக் கொண்டே இருந்தது, எப்பொழுது இறங்கும் என்று தெரியாது, ஆனால் இன்று கண்டிப்பாக இறங்கும் என்று அகில் கூறியிருந்தான், அதற்குள் தனது ஷேர்ஷை தூக்க வேண்டும் என்று பார்த்துக் கொண்டு இருந்தான்… அவனின் முழு கவனமும் அதில் தான் இருந்தது,

அந்த நேரம் அவனின் போன் அழைக்க, கண்ணை மடிகணினியில் இருந்து விலக்காமலே இடது கையால் அருகில் இருந்த டேபிளில் எட்டி போனை எடுத்தவன், முன்னால் விழுந்த முடியை வலது கையால் கோதிக் கொண்டே  “ ஹலோ.. விஷ்ணு ஹியர் “ என்றான் காம்பீரமாக.,

“ பாஸ் பிஸியா “ என அந்த பக்கம் அகில் கேட்க,

“ ம்ம்..யா.. பிஸிதான் நீ சொல்லு “ என்றபடி பார்வையை எங்கும் திருப்பாமல் கணினியில் மிகவும் கவனமாக இருந்தான்….

“ அப்புறம் பேசுறேன் பாஸ் “ என்றபடி அழைப்பை நிறுத்த செல்ல,

“ நீ சொல்லு அகில், என்ன விஷயம் “

“ பாஸ்… நாளைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு “ தயக்கமாக கூறினான் அகில்தேவ்….

செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்தி விட்டு போனில் கவனமானான் விஷ்ணு.. முகம் புன்னகையில் விரிந்திருந்தது… செய்துகொண்டிருந்த வேலை கட்சிதமாய் முடிந்து விட்டதை போல், “ என்ன விஷயமாம்..?” என புன்னகை முகமாகவே கேட்டான் கொழுத்த லாபம் கிடைத்த மகிழ்ச்சியில்….

“ அது வந்து பாஸ் “ என அகில் இழுக்க,

ஊஞ்சலில் இருந்து எழுந்தவன், பால்கனி கம்பியில் சாய்ந்து நின்று “ என்ன விஷயம் அகில் “ என அழுத்தமாக கேட்டான்..

“ பாஸ் நாளைக்கு ஒட்டுமொத்த கார்மெண்ட்ஸ் கம்பெனி MD, GM எல்லாருக்குமான அழைப்பு “

 “ யா.. மறந்தே போயிட்டேன்,“ என்றபடி யோசனையாக புருவத்தை வருடிக் கொண்டவன் மனமோ “ எல்லாருக்குமான அழைப்பு என்றால் கண்டிப்பாக அவள் வருவாள், இப்பொழுது யாருடன் இருக்கிறாள் என்று அறிந்துக் கொள்ளவேண்டும் “ என்றபடி எண்ணி கொண்டிருக்கையில், தான் ஏன் எப்பொழுதும் அவளையே எண்ணிக் கொண்டிருக்கிறோம் என்று அவன் எண்ணவே இல்லை…

“ பாஸ் “ என மீண்டும் அகில் அழைத்தான்…

“ ம்ம்.. மீட்டிங் எத்தனை மணிக்கு அகில் “.

“ நாளை ஈவ்னிங் 7 மணிக்கு பாஸ் “

“ ஓகே அகில், எனக்கு மீட்டிங் நடக்கும் இடத்தை பார்வோர்ட் பண்ணு “ என்றபடி அழைப்பை நிறுத்தினான் விஷ்ணு…

அடுத்த நாள் சண்டே என்பதால் ரிலாக்ஸாக எழுந்த விஷ்ணு, காலையில் செய்யும் சிறு யோகாவை முடித்தவன் மெதுவாக கீழிறங்கி வந்தான், அவனுக்கு முன் காரிகை ஹாலில் அங்கும், இங்கும் நடமாடிக் கொண்டிருப்பதை கண்ட விஷ்ணு,

“ மாம், காலையிலையே என்ன டென்ஷன் “ என்றபடி வர, அவனுக்கு டீயை  கொண்டு கொடுத்து சென்றாள் வீட்டில் வேலை செய்யும் பெண்,

அங்கிருந்த டேபிளில் அமர்ந்து டீயை பருகிக் கொண்டே தாயை நோக்க,

அவரோ அவன் கேட்டதையே காதில் எடுக்காமல் ஏதோ யோசனையும் நடந்துக் கொண்டு இருந்தார்..

“ மாம் “ என்றபடி அழுத்தி அழைத்தான் விஷ்ணு

” ஹான்… சொல்லுடா விஷ்ணு. எப்போ வந்த ” என்றபடி அவன் முன் வந்து அமர்ந்தார் காரிகை, ஆனால் முகமோ யோசனையில் நிறைந்து இருந்தது,

 ” என்னாச்சு மாம்.., தீவிரமா எதையோ யோசிச்ச மாதிரி இருக்கு “

” அதெல்லாம் ஒன்னும் இல்லை விஷ்ணு, எல்லாம் நம்ம சாயப்பட்டறை பற்றி தான் யோசனை ஓடுது ”

யோசனையாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்ணு, மெதுவாக கையில் இருந்த டீயை  உறுஞ்சியவனை யோசனையாக பார்த்த காரிகை,

” விஷ்ணு நாம மீண்டும் சாயப்பட்டறை கட்ட ஏற்பாடு செய்யவேண்டும், நமக்கு வரும் ஆடர்ஸ் முடிக்க நம்மிடம் இருக்கும் ஒரு பட்டறை போதாது, இன்னொன்னு கண்டிப்பா வேண்டும், அதற்காக நாம மூன்று வருடங்களுக்கு முன்பே கோடி கணக்கில் முதலீட்டு செய்து விட்டோம், இது உனக்கு நினைவில் இருக்கு தானே ” என கேட்க, யோசனையாக தலையை ஆட்டிக் கொண்டான் விஷ்ணு,

” எதற்கும் அகிலை ஒருமுறை சோளகாடு கிராமத்துக்கு போயிட்டு அங்கிருக்கும் நிலவரம் பார்த்து வர சொல்லு ” என கூறினார்.. அவருக்கு எதிலும் தோற்று போகும் எண்ணம் இல்லை, விட்டு போனவற்றை மீண்டும் உருவாக்க ஆரம்பித்தார்…

வாழ்க்கையில் மிகவும் மோசமாக தோற்று போன அவர் தொழிலில் தோற்று போக கூடாது, பாதியில் விட்டதை மீண்டும் தொடர ஆரம்பித்தார்… இதில் விஷ்ணு தனது வாழ்க்கையை முற்றிலும் மாற்றிக் கொள்வான் என்று அவர் அந்த நேரம் அறியாமல் போனார்…

வேகமாக தன் அறைக்கு சென்றவன், வெள்ளை ஷர்ட், கறுப்பு பாண்ட் அணிந்து முழுக்கை சட்டையை முழங்கை வரை மடக்கி விட்டபடி வந்துக்கொண்டிருந்தான்,

எப்பொழுதும் போல் இப்பொழுதும் அவனை கண்டு அவரால் வியக்காமல் இருக்க முடியவில்லை… தன் வாழ்வில் நடந்த அத்தனையும் மறந்துவிட்டு, புதிதாக வாழ்க்கையை ஏற்று அதன் போக்கில் அதே கம்பீரத்துடன் வாழும் மகனை கண்டு அவருக்கு பெருமையாக இருந்தது, அதே நேரம் அவனுக்கு எதுவும் நியாபகம் வரக்கூடாது என்று அந்த தாயுள்ளம் பரிதவித்தது…

” எங்கப்பா கிளம்புற ”

” ஆபிஸ் வரைக்கும் போய்ட்டுவாரேன்ம்மா ” என்றவன் அவரின் பதிலை எதிர்பார்க்காமல் தனது ஜாக்குவாரை படுவேகமாக எடுத்து அந்த சாலையில் செலுத்திக் கொண்டிருந்தான்…. மனமோ இரு விதமாக அலைக்கழித்துக் கொண்டிருந்தது…

நேராக தங்களது கார்மெண்ட்ஸ் வந்திருந்தான்… வந்தவன் தான் தேடிய சேலம் பைல் கிடைக்காமல் போக அகிலை அழைத்தான்..

” அகில்… சேலம் பட்டறை அக்ரீமென்ட் பைல் எங்க வச்சிருக்க “

சேலம் பைல் என்றவுடன் ஒரு நிமிடம் ஜெர்க் ஆன மனதை சமன்படுத்திய அகில் ” பாஸ்.. நான் இப்போ வெளியில் இருக்கேன் ” என மெதுவாக கூறினான்…  

” என்ன…! வெளியில் இருக்கியா ” என பல்லைகடித்தவன், ” என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது, இன்னும் அரைமணி நேரத்தில் நீ இங்கிருக்கணும்.. சீக்கிரம் கிளம்பி கார்மெண்ட்ஸ் வா  ” என்றபடி அழைப்பை நிறுத்தினான்…

விஷ்ணு அழைப்பை நிறுத்தவுமே அகிலுக்கு பழைய நினைவுகள், அதே நேரம் மனதில் ஒரு சிறுபெண்ணின் முகம் மின்னி மறைந்தது, மனமோ “ மீண்டும் முதலில் இருந்தா “ என எண்ணியது….

கார்மெண்ட்ஸ் சென்று விஷ்ணு கேட்ட பைல்ஸ் தேடி எடுத்து கொடுத்தவன் கிளம்ப எத்தனிக்க,

“ அகில் “ என தயக்கமாக அழைத்தான் விஷ்ணு..

“ என்ன பாஸ் “ என்றபடி அவனை நோக்கி திரும்பினான் அகில்… விஷ்ணுவிடம் முதல் முறையாக தயக்கத்தை காண்கிறான் அவன்…

“ அது ஒன்னும் இல்லை “ என இழுத்தவன், அவனின் யோசனையான முகத்தை பார்த்து விட்டு “ கிளம்பு “ என கூறி அகில் கொண்டு வந்து கொடுத்த கோப்புகளில் ஆழ்ந்து விட்டான்…

விஷ்ணுவை யோசனையாக பார்த்த அகில் வீட்டை நோக்கி கிளம்பினான்… வீட்டை திறந்து கட்டிலில் விழுந்தவன் மனதில் “ தேஷிகா “ என்று கொஞ்சும் குரலில் கூறிய சிறு பெண்ணின் முகம் வந்து அவனை இம்சித்தது…

மீண்டும் விஷ்ணு சேலம் கிளம்ப கூறவும் “ அவளை இப்பொழுது காணமுடியுமா..? அவளுக்கு தன்னை நினைவிருக்குமா..? திருமணம் முடிந்திருக்குமா ..? “ என அவன் மனம் அவளை நோக்கியே பயணிக்க, போன் அழைத்து அவனை கலைத்தது,

அவளின் நினைவை இந்த அழைப்பு அழித்த கடுப்பில்  “ ஹலோ “ என்றான்..

“ டேய்.. இன்னும் என்ன பண்ணுற “ என்றபடி அந்த பக்கம் விஷ்ணு பல்லை கடிக்க,

மணியை பார்த்தவன் மணி ஏழு ஆகவும் இத்தனை நேரமா அவள் நினைவில் மூழ்கினோம் என எண்ணியவன் “ ஆன் தி வே பாஸ் “ என்றவன் சீக்கிரமாக கிளம்ப ஆரம்பித்தான்….

எஸ்.ஆர்.எம். ஹோட்டலில் தன் ஜாக்குவரை நிறுத்தியவன், அதிலிருந்து இறங்கி தனது ஓவர் கோட்டை இழுத்து விட்டு, பாண்ட் பாக்கெட்டில் இருகைகளையும் நுழைத்தவன், அந்த ஹோட்டலை நிமிர்ந்துப் பார்த்தான்,

அதே நேரம் அவன் அருகில் ஹாரன் சத்தம் கேட்க, தன் பார்வையை அந்த பக்கம் திருப்பினான் விஷ்ணு காரிகை…

அதற்குள் “ பாஸ் “ என்ற அகில் குரல் அருகில் கேட்க, திரும்பி அவனைப் பார்க்க, இருவரும் ஹோட்டல் உள்ளே சென்றனர்….

உள்ளே செல்லவும் வழியில் அவனை தியாகராஜ் பிடித்துக் கொண்டார்… அங்கு இருந்தவர்களிடம் “ தன் வருங்கால மருமகன் “ என பெருமையாக கூறிக் கொண்டார் தியாகராஜன்… பெரிய பிஸ்னெஸ்மேனை பிடித்து விட்டு கர்வம் அவர் முகத்தில் தெரிந்தது…

அதை பார்த்துக் கொண்டே தனது கூலரை எடுத்து அணிந்துக் கொண்ட விஷ்ணுவின் கண்கள் எல்லாரை நோக்கியும் சுழன்றது… பாண்ட் பாக்கெட்டில் இருகைகளையும் விட்டு, காலை அகல விரித்து கம்பீரமாக நின்ற தோற்றம் அங்கிருந்த அத்தனை பேரையும் “ அவனை பார், அவன் கம்பீரத்தை பார் “ என பார்க்க வைத்திருந்தது…

இரண்டு டேபிள் தள்ளி இருந்த வட்ட நாற்காலியில் இருந்த ஒரு அழகிய பெண்ணின் கண்கள் இவனை ஆர்வமாக பார்ப்பதை அவன் மனம் குறித்துக் கொண்டது, அதே நேரம் அவள் அருகில் இருந்தவன் கண்கள் கோபத்தில் சிவந்ததையும் அவன் கண்கள் குறிப்பாக பார்த்தது. மனமோ “ இவர்கள் எனக்கு தெரிந்தவார்களா..? இல்லை என் எதிரிகளா..?” என்ற யோசனையில் ஆழும் நேரம்,

கூட்டத்தில் பெரும் சலசலப்பு “ விஷ்ணுவிற்கு கிடைக்க இருந்த காண்ட்ராக்ட் பறித்தது இவர்கள் தான் “ என சில பொறமை கூட்டம் விஷ்ணு காதின் அருகில் நின்று கூறியபடி வாசல் பக்கம் நகர, கோபத்தில் பல்லை கடித்தவன் அப்படியே நின்றிருந்தான்..

வருவது யார் என்று அவன் நன்கு அறிவானே “ அவள் என்ன பெரிய மகாராணியோ, அவள் வந்ததும் அவள் பின்னே ஓடவேண்டுமோ “ என வீம்பாக எண்ணியவன் அப்படியே நின்றிருந்தான்..

“ யா… “ என்றபடி அருகில் நின்றிருந்தவர்களிடம் பேசிக் கொண்டே வந்தவள் விஷ்ணு அருகில் வரவும் அவனை ஒரு அற்ப பார்வை பார்த்து சென்றாள்…

அன்று அவனை கண்டு பயந்து ஓடியவள் இன்று ராணியின் கம்பீரத்துடன் அவனை கடந்து சென்றாள்.. அவன் கண்களில் அனல் தெறிக்க அவளை பார்த்திருந்தான். நல்லவேளை அவன் கூலர் அணிந்திருந்ததால் அனலில் வீசிய சூட்டை அவள் அறியாமல் போனாள்…

“ பாஸ் “ என அகில் அழைத்து அவனை கலைக்க, அருகில் இருந்த வட்ட நாற்காலில் இருவரும் அமர்ந்துக் கொண்டனர்…

அவர்களுக்கு நேர் எதிரே மகேந்தர மூர்த்தி வந்து அமர, அவர் அருகில் மனோகீர்த்தி அமர்ந்துக் கொண்டாள்…

மூர்த்தியின் கண்களோ இரு மகனையும் கனிவுடன் பார்த்துக் கொண்டிருந்தது….

விஷ்ணுவின் பார்வை இருவரையும் எரிக்க, கீர்த்தியோ அவன் அருகில் அமர்ந்திருந்த அகிலை கண்டு திகைத்துப் போனாள்.. இவன் அவனல்லவா..? தேஷி வாழ்கையை அழித்தவன் கோபத்தில் பல்லை கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்… அடுத்த நொடியே அவளின் பார்வை விஷ்ணு பக்கம் திரும்பியது,

இருவரின் பார்வையிலும் அனல் அடித்தது…. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் பற்றிக்குமாம்.., ஆனால் இங்கோ இருவரின் கண்களிலும் பழிவெறி பற்றி எரிந்தது…!!! யார் யாரை எரிக்க போகிறார்களோ..? இல்லை ஒரே கயிற்றில் பிணைய போகிறார்களோ..?

கொ(வெ)ல்வாள்…

 “ எமனாய் இருந்தால் என்ன?

நீ எவனாய் இருந்தால் என்ன?

சிவனாய் இருந்தாலும் உனக்கு சமமாய் அமைவேன் நான்.

பணமாய் இருந்தால் என்ன? நீ பிணமாய் இருந்தல் என்ன?

நான் உயிரோடு இருந்திடவே,எவரையும் உணவாய் உன்பேன் நான்.

சூதாய் இருந்தால் என்ன?அது தீதாய் இருந்தால் என்ன?

யாதாய் இருந்தாலும் எனக்கு, தோதாய் அமைந்திடுமே.

பூலோகம் அதை வென்று அதள பாதாளம்வரைச் சென்று

கோலாகளமாக எந்தன் ஆட்சி புரிந்திடுவேன். “

 

error: Content is protected !!