Vannam konda vennilave 1

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 1

1975 ஆம் வருஷம்.

பாரதி மேல்நிலைப் பள்ளி‘, பெரிய இரும்பு கேற்றின் மேலாக அரை வட்டமாக வளைத்து இரும்பிலே எழுதி இருந்தது. நேரம் காலை 7:40. 

இளமாறன் கேற்றுக்குப் பக்கத்தில் நின்று யாரையோ எதிர்பார்ப்பது போல வீதியையே பார்த்தபடி நின்றிருந்தான். ஆண்களும், பெண்களுமாக மாணவர்கள் வந்த வண்ணம் இருந்தார்கள்

வெள்ளை சட்டை, வெள்ளை காற்சட்டை ஆண்கள் அணிந்திருக்க, பெண்பிள்ளைகள் பச்சை ஹாஃப் சாரி, வெள்ளை தாவணி உடுத்தி இருந்தார்கள். கலவன் பாடசாலை என்பதால் ரொம்பவும் கண்டிப்பு இருந்தது

கனகம்மா டீச்சர் கையில் பெரிய பிரம்போடு, மன்னர்கள் நகர் வலம் வருவதைப் போல பள்ளியை சுற்றி நடை பயின்று கொண்டிருந்தார்.

கோயம்புத்தூரின் சிங்கா நல்லூர் ஏரிக்கு பக்கத்தில் இருக்கும்நல்லூர்கிராமம். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்திருப்பதாலும், கேரள மாநிலம் அண்மையில் இருப்பதாலும் உடலுக்கு இதமான, குளிர்ச்சியான, கூடுதல் வெப்பமில்லாத வானிலை அந்த நல்லூர் கிராமத்தின் சிறப்புகள்.

தூரத்தில் அந்த கறுப்பு அம்பாசிடர் கார் தெரியவும், சற்று ஒதுக்குப் புறமாக தன்னை மறைத்தவாறு நின்று கொண்டான் இளமாறன். காரில் வருவது அவன் நண்பன் தமிழ்ச் செல்வன்

நல்ல வசதியான வீட்டுப் பையன். இளமாறனைப் போல சாதாரணமான நிலையிலுள்ள குடும்பத்துப் பையனோடு தன் பையன் ஸ்நேகம் வைத்திருப்பதை தமிழ்ச்செல்வன் வீட்டில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதனால் இளமாறன் அவர்கள் முன்னிலையில் எப்போதும் சற்று ஒதுங்கியே இருப்பான்.

என்றும் போல இன்றும் சிதம்பரம் ஐயா தான் காரை ஓட்டிக் கொண்டு வந்தார். ஓங்கி உயர்ந்த ஆஜானுபாகுவான மனிதர். ஊரிலே பெரிய புள்ளி. ஏக்கர் கணக்கில் நிலங்களை வாங்கி, அதில் பருத்தி சாகுபடி செய்திருந்தார். நல்லூர் கிராமத்தின் கரிசல் மண் அவர் தொழிலுக்கு கை கொடுத்திருந்தது.

பரம்பரை பரம்பரையாக தொழிலில் கொடி கட்டிப் பறக்கும் குடும்பம். ஊரில் ஒரு இரண்டு ஏக்கர் நிலத்தில் பெரிய ஸ்பின்னிங் மில்லும் உண்டு. பக்கத்திலேயே திருப்பூர் இருப்பதால் இவர்கள் உற்பத்தி அங்கு அதிகமாக போய்விடும்.

தமிழ் நாடு முழுவதும் தங்கள் உற்பத்தியை கொண்டு செல்வதில் சிதம்பரம் ஐயா முழு மூச்சாக இறங்கி இருந்தார். தான் படிப்பை முடித்த பிறகு தங்கள் குடும்பத் தொழிலை வெளிநாட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது தமிழ்ச்செல்வனின் கனவு. அதை அடிக்கடி தன் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வான்.

உனக்கென்னடா! ராஜா வீட்டு கன்னுக்குட்டி. அப்பா சம்பாதிச்சு வச்சிருக்கிறதை உக்காந்துக்கிட்டே சாப்பிடலாம்.” என்று நண்பர்கள் சொன்னால்,

அப்படி இல்லைடா, தாத்தா மில்லைக் கட்டி திருப்பூர் வரைக்கும் கொண்டு போனாரு. அப்பா அதை இன்னும் விசாலப்படுத்துறாரு. என் பங்குக்கு நானும் ஏதாவது செய்யனும்டா.” என்பான்.

தமிழ்ச்செல்வன் ரொம்பவும் எளிமையான பையன். கார், பங்களா என்று அத்தனை வசதிகள் இருந்த போதும் எந்த பந்தாவும் காட்டமாட்டான். நட்பு என்று வந்துவிட்டால் அவனுக்கு எல்லோரும் ஒன்று தான். ஒருவருக்குத் தெரியாமல் மற்றவருக்கு உதவி செய்வதிலும் அவனை அடித்துக் கொள்ள முடியாது

இளமாறனுக்கும், தமிழ்ச் செல்வனுக்கும் இடையில் ஓர் ஆழ்ந்த நட்பு இருந்தது. இளமாறனின் அப்பா கடந்த ஆண்டு தவறி இருந்தார். அவர்களுக்கு சின்னதாக ஒரு கடையும், சொந்தமாக ஒரு ஓட்டு வீடும் இருந்தது. வீட்டிற்கு முன்பு இருந்த இடத்திலேயே அப்பா கடையை நடத்திக் கொண்டிருந்தார்

திடீரென்று ஒரு நாள் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்தவர்தான். அரசு மருத்துவமனையில் இரண்டு நாட்கள் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார். அதன் பிறகு அம்மா கடையை தொடர்ந்து நடத்துகிறார். கடைக்கு சாமான்கள் வாங்கிப் போடுவதிலிருந்து அனைத்து வெளி வேலைகளையும் இளமாறன் பார்த்துக் கொள்வான். ஆஹா ஓஹோ என்று இல்லா விட்டாலும் கடவுள் புண்ணியத்தில் வயிறு வாடாமல் வாழ்ந்தார்கள்.

இருவருக்கும் இடையே இருந்த நட்பில் எந்த ஒரு விரிசலும் வந்துவிடக்கூடாது என்பதில் இருவருமே கண்ணும் கருத்துமாய் இருந்தார்கள். இளமாறன் மிகவும் நேர்மையானவன். தன் நண்பனிடம் அத்தனை வசதி இருந்தும் எதுவும் பெற்றுக் கொள்ள மாட்டான். வறுமையிலும் செம்மை என்பது போல வாழுபவன். அதனாலேயே தமிழ்ச் செல்வனுக்கு அவனை மிகவும் பிடிக்கும்.

அந்த அம்பாசிடர் நகர்ந்ததும் இளமாறன் வெளியே வந்தான். நண்பர்கள் இருவரும் சிரித்தபடி இணைந்து தங்கள் வகுப்பிற்கு சென்றார்கள்

அன்று ஃபயாவெல் டே. பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் முடிந்து மாணவர்கள் சற்றே நிதானமாக மூச்சு விட்டுக் கொண்டிருந்தார்கள்லட்சியங்களும், கனவுகளும் அவர்கள் கண்களில் மின்னிக் கொண்டிருந்தது.

குந்தவி வந்துட்டாளா மாறா?” தமிழ்ச்செல்வன் கேட்க,

இல்லை தமிழ், நான் பாக்கலைப்பா. கனகம்மா டீச்சர் வேற கண்கொத்திப் பாம்பு மாதிரி திரியுறாங்க. அதனால பொண்ணுங்க கிட்ட கூட விசாரிக்க முடியலை.”

வேண்டாம் விட்டுரு. அந்த அம்மா கண்ணுல பட்டுச்சு, அவ்வளவுதான். மானம் கப்பலேறிடும்.”

ஏன் தமிழ்? இந்தம்மா அவங்க வீட்டுக்காரர் கிட்டயும் இப்படித்தான் குச்சியோட நிக்குமா?” இளமாறன் சந்தேகம் கேட்க, சிரித்த தமிழ்ச்செல்வன்,

அடேய்! அவங்களுக்கு ரெண்டு பசங்க இருக்காங்கடா.” என்றான். இளமாறனுக்குப் புரியவில்லை. நான் என்ன கேட்டால் இவன் என்ன சொல்கிறான் என்று தமிழ்ச்செல்வனைத் திரும்பிப் பார்க்க, அவன் கண்ணடித்தான்.

அடப்பாவி!” இளமாறன் வெடிச்சிரிப்பு சிரிக்க, தமிழ்ச்செல்வனும் இணைந்து கொண்டான்.

அந்த அரங்கமே களைகட்டியது. மாணவர்கள் தங்களது திறமைகளை நிரூபித்துக் கொண்டிருந்தார்கள். பெண்கள் ஒரு பக்கமும், ஆண்கள் ஒரு பக்கமுமாக அமர்ந்திருந்தார்கள். பெண்கள் பக்கத்தை கண்களால் ஒரு அலசு அலசிய தமிழ்ச்செல்வன்,

மாறா, குந்தவி இன்னைக்கு வரலைடா.” என்றான்.

ம்இது தெரிஞ்ச சங்கதி தானே. அவங்க அப்பா பண்ணுற கூத்து தாங்கமுடியல்லை தமிழ். பாவம்டா குந்தவி.” பெருமூச்சு விட்ட தமிழ்ச்செல்வன்,

நம்மளால என்னடா பண்ண முடியும்? அப்பாதான் இப்படி அமைஞ்சு போச்சு, கட்டிக்கிறவனாவது அவளை நல்லா புரிஞ்சவனா இருக்கனும்.”

ஆமா தமிழ், நல்ல மார்க் வாங்கனும், டாக்டர் ஆகணும்னு உசிரைக் குடுத்து படிச்சா. அவ கனவு நனவாகனும் தமிழ்.”

அதெல்லாம் கண்டிப்பா நடக்கும். மார்க் கொஞ்சம் குறைச்சலா இருந்தாலும் அவங்க அப்பா பணத்தைக் குடுத்து அதையெல்லாம் சரி பண்ணிடுவாரு.”

அதைச் சொல்லு. மத்த விஷயத்துல எப்படியோ? மனுஷன் படிப்பு விஷயத்துல கெட்டி. குந்தவியை டாக்டர் ஆக்காம ஓயமாட்டாரு.” அடுத்ததாக ஒரு பாடல் மேடையேற இவர்கள் கவனம் அங்கு திரும்பியது. அந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட்அபூர்வ ராகங்கள்லிருந்து

அதிசய ராகம்ஆனந்த ராகம்

என ஒரு மாணவன் உருகிக் கொண்டிருந்தான். விசில் சத்தம் காதைப் பிளந்தது.

                                **    **    **    **

2018, இன்று

‘Indian Institute of Management Bangalore’.

அந்தப் பெரிய வளாகத்தைக் கடந்து, ஹாஸ்டல் ரூமிற்கு நடந்து கொண்டிருந்தான் சுதாகரன். இரண்டு வருடங்கள் பறந்து விட்டது. முழு நேரமும் படிப்பு, அது சம்பந்தப்பட்டது என்று, எந்தவித கேளிக்கைகளுக்கும் இடம் கொடாமல் தன்னை முழுதாய் அர்ப்பணித்திருந்தான்.

இந்த இரண்டு வருடங்களில் மூன்று முறைதான் ஊருக்குப் போயிருக்கிறான். அதில் அவன் அம்மா குந்தவிக்கு கொஞ்சம் வருத்தம்.

சுதா! என்னடா இப்படி பண்ணுற? அம்மாக்குத்தான் உன்னை வந்து பாக்க முடியாது. நீயும் செமஸ்டர் லீவுக்கு வரலேன்னா எப்படி?” குந்தவி ஆதங்கப்பட,

அப்படி இல்லைம்மா. ஊருக்கு வந்தா கவனம் ரொம்பவே கலையுது. அதுக்கப்புறம் இங்க வந்தா கஷ்டமாப் போகுது. கொஞ்ச நாள்தானே, அதுக்குள்ள எல்லாத்தையும் முடிச்சிட்டு ஓடி வந்திருவேன்.” இப்படியே சொல்லி சமாளிப்பான்

இன்றோடு எல்லாம் முடிந்து விட்டது. ‘வைவாவும் மிகவும் திருப்தியாக இருந்தது சுதாகரனுக்கு. இன்று முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும். நாளை மறுநாள் ஃப்ளைட் டிக்கெட்டை அம்மாவே புக் பண்ணி இருந்தார். நாளை மூட்டை முடிச்சுகளை கட்டவே சரியாக இருக்கும்.

ரூம் கதவை திறந்து தோளில் இருந்த பையை கட்டிலில் போட்டவன், அப்படியே அவனும் சரிந்தான். ஏதோ சாதித்து விட்ட திருப்தி மனதுக்குள் இருந்தது. கொஞ்ச நேரம் கண்மூடி இருந்தவனைக் கலைத்தது ஃபோன்.

ஹலோ!”

சுதா, அம்மா பேசுறேன்பா. வைவா முடிஞ்சுதாப்பா?”

இப்பதான் எல்லாம் முடிச்சுட்டு ரூமுக்கு வந்தேம்மா.”

எப்படி பண்ணினப்பா? நல்லா ப்ரிப்பேர் பண்ணிட்டேன்னு சொன்னியே? எதிர்பார்த்த மாதிரி இருந்ததா?”

ம்ரொம்ப நல்லாப் பண்ணின திருப்தி இருக்கும்மா. அப்பா எங்க?”

அப்பாக்கு இன்னைக்கு முக்கியமான ஆப்பரேஷன் ஒன்னு இருக்கு. தியேட்டர் போயிருக்காங்க.”

அப்படியா? மாமா வந்தாங்களா?”

எந்த மாமாவைக் கேக்குறே? இளமாறன் மாமாவா? இல்லை தமிழ்ச்செல்வன் மாமாவா?”

தமிழ் மாமா.”

காலையிலேயே ஃபோன் பண்ணிட்டாங்க. இன்னைக்கு ஏதோ பிஸினஸ் விஷயமா மலேஷியா போறாங்களாம். சுதா எப்போ வரும்னு கேட்டாங்க. நாளை மறுநாள் வந்துருவான்னு சொன்னேன். அப்போ தம்பி வர்ற நேரம் நான் வந்திடுவேன்னு சொன்னாங்க.”

சரி, வேலையை முடிச்சிட்டு ஆறுதலா வரட்டும். இங்க பாத்துக்கத்தான் இளமாறன் மாமா இருக்காங்களே, ஒன்னும் பிரச்சினை இல்லை.”

எனக்குப் பிடிச்ச ரெண்டு பேரைப் பத்தியும் விசாரிச்சுட்டே. என் செல்லத்தை விசாரிக்க மாட்டியா?”

ஆமா, அது ஒன்னுதான் அவளுக்கு குறைச்சல். நீங்க தான் கொஞ்சிக்கனும் அந்த திமிர் பிடிச்சதை.”

டேய்! ஆடு உறவு, குட்டி பகையா? எந்த ஊர் நியாயம்டா இது?”

எல்லாம் நம்ம ஊர் நியாயம் தான். என்ன பண்ணுறா உங்க செல்லப் பொண்ணு?”

இன்னைக்கு புடவை கட்டிக்கிட்டு வந்தா பாரு! நான் அசந்து போய்ட்டேன். அவ பொறந்தப்போ முதல் முதலா தூக்கினது நேத்து மாதிரி இருக்கு. அதுக்குள்ள எவ்வளவு வளந்துட்டா!”

அவ பேச்சை ஆரம்பிச்சா நீங்க நிறுத்த மாட்டீங்க.”

ம்நான் பேசி என்னத்தை ஆகப்போகுது. என் மனசுல எவ்வளவு ஆசை இருந்தது, எல்லாம் கனவாப் போச்சு.”

அம்மா!” அதட்டலாக வந்தது சுதாகரனின் குரல்.

ம்சரி சரி, நான் பேசலை, உனக்கு குடுத்து வெக்கலைடா. எவ்வளவு அழகா இருக்கா! இன்னைக்கு என் கண்ணே பட்டிருக்கும். ஆராதனா கிட்ட சொல்லி சுத்திப் போடச் சொல்லனும்.” தனக்குத் தானே பேசிக் கொண்டார் குந்தவி.

அம்மா, இன்னைக்கு நைட் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து பார்ட்டி ஒன்னு அரேன்ஞ் பண்ணி இருக்காங்க. நானும் போறேன்மா. வர லேட்டாகும்.”

பாத்து சுதா, பசங்க அது, இதும்பாங்க. கவனம். உனக்கு சொல்லத் தேவையில்லை, இருந்தாலும் பத்திரமா நடந்துக்கோ.”

ம்…”

சரிப்பா, அம்மாக்கு லேட் ஆகுது, வச்சிடட்டுமா?”

ஓகேம்மா, பைஃபோனை வைத்து விட்டு கண்களை மூடிக் கொண்டான் சுதாகர். மூடிய விழிகளுக்குள் சின்னதாக ஒரு பெண், ஒரு பத்து வயதிருக்கும். ‘அத்தான், அத்தான்என்று அவன் கரம்பிடித்து ஏதோ ஓயாது பேசிக் கொண்டிருந்தாள். உதட்டில் புன்னகை உறைய கண்ணயர்ந்தான்.

                                    **    **    **    **

அந்த நட்சத்திர ஹோட்டலில் ஒரு ஹாலை புக் பண்ணி இருந்தார்கள். வண்ண விளக்குகளால் அலங்காரம் அற்புதமாக இருந்தது. அங்கிருந்த அனைவரது முகத்திலும் ஒரு பணக்காரக் களை இருந்தது

ஆண்கள் அனைவரும் கோட் சூட்டில் இருக்க, பெண்கள் அனைவரும் லெஹெங்காவில் வந்திருந்தார்கள்

சுதாகரன் அமைதியாக ஒரு டேபிளில் உட்கார்ந்து, சுற்றி வர நடப்பவற்றை ஒரு சுவாரஸ்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். சாம்பல் வண்ணத்தில் ஸ்லிம் ஃபிட் சூட் அவனுக்கு வெகுவாகப் பொருந்தியது. வெள்ளை நிறத்தில் ஷேர்ட் அணிந்திருந்தான். தலைக்கு நன்றாக ஜெல் தடவி படிய வைத்திருந்தாலும், கொஞ்சம் திமிராகத்தான் நின்றது. இரண்டு நாட்கள் ஷேவ் பண்ணாத முகம் கொஞ்சம் மயக்கியது.

கார்த்திக் பக்கத்தில் வந்து அமர்ந்தான். சென்னைக்காரன், இந்த இரண்டு வருடங்களில் ஒரு அழகான நட்பு இருவருக்குள்ளும் உண்டு.

என்ன சுதாகர்! ரவீனா உன்னை பிரிச்சு மேயுறா, நீ கண்டுக்க மாட்டேங்கிறே?”

கார்த்திக் கண்ணைக் காட்டிய திசையில் திரும்பிப் பார்த்தான் சுதாகரன். மெழுகு பொம்மை போல ஒரு அடர் பச்சை நிற லெஹெங்காவில், பியூட்டி பார்லர் கைவண்ணத்தில் இவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். இது அவர்கள் இன்ஸ்டிடியூட்டே அறிந்த ரகசியம்.

பாவம்டா! ரெண்டு வருஷமா ட்ரை பண்ணுறா. கொஞ்சம் பேசேன்டா அவகூட.” கார்த்திக் வற்புறுத்த, லேசாகச் சிரித்தவன்,

நமக்கு இதெல்லாம் செட் ஆகாது மச்சான்.” என்றான்.

டேய் மச்சான், உன்னை நான் என்ன அவளை கல்யாணம் பண்ணிக்கவா சொன்னேன். ஜஸ்ட் டைம் பாஸுக்கு தானேடா.”

இது அதை விட வில்லங்கம் கார்த்திக்.”

அடப்போடா! ரெண்டு வார்த்தை பேசி, கொஞ்ச நேரம் அந்தப் பொண்ணோட டைம் ஸ்பென்ட் பண்ணினா உன் கற்புக்கு பங்கம் வந்துருமா?”

அப்படி இல்லைடா, இன்ட்ரஸ்ட் வர மாட்டேங்குது. ஒரு பொண்ணை பாத்தா நம்மளை அறியாமலேயே அவங்க பின்னாடி போகணும் கார்த்திக்.”

எவ்வளவு அழகா இருக்கா! உனக்கு இவ பின்னாடி போகத் தோணலையா?”

கார்த்திக் கேட்க உதட்டை லேசாகப் பிதுக்கினான். ஏனோ அழகு என்று சொன்னதும் அம்மாவின் குரல் காதில் ஒலித்தது. ‘இன்னைக்கு எவ்வளவு அழகா இருந்தா தெரியுமா?’

மச்சான், விசித்திரமான பிறவிடா நீ! உன் மனசுக்குள்ள என்ன இருக்குன்னு என்னால புரிஞ்சுக்கவே முடியலை.”

சரி அதை விடு, அடுத்தது என்ன ப்ளான்? அதைச் சொல்லு.”

இனி என்ன, வேலை தேடும் படலம் தான். உன்னைப் போல நமக்கு மாமாவெல்லாம் கிடையாது. சோ, கொஞ்சம் கஷ்டம்தான்.”

நீயும் எங்க மாமா கிட்ட வந்திடு மச்சான், நான் சொல்றேன் மாமா கிட்ட.”

சாமி, ஆளை விடுப்பா. நமக்கு இந்த கிராமம் எல்லாம் செட் ஆகாது. வெள்ளி நைட் ஆரம்பிச்சா சன்டே நைட்தான் நமக்கு ஓயும்.”

அப்படி என்னதான்டா இருக்கு அந்த வீக் என்டுல உனக்கு?”

மச்சான், அது ஒரு சுகம்டா. அதெல்லாம் உனக்கெங்கே புரியப்போகுது. உனக்கு ஹிந்திக் காரியையும் பிடிக்க மாட்டேங்குது, மாமா மகளையும் பிடிக்க மாட்டேங்குது.” கார்த்திக் அங்கலாய்க்க, புன்னகைத்தான் சுதாகர்.

ஆனாலும் மச்சான், நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதே. உன் வாய்தான் மாமா பொண்ணை திட்டுதே தவிர, கண்ணும், முகமும் வேற கதை சொல்லுதுடா.”

கார்த்திக் சொல்லி வாய்மூடவில்லை, அவர்கள் டேபிளில் ரவீனா வந்து அமர்ந்தாள்.

ஹாய் கைஸ்

ஹாய் ஏன்ஜல், ஹௌ ஆர் யூ? பேசிக்கிட்டு இருங்க, இதோ வந்திடுறேன்.” கார்த்திக் மெதுவாக நழுவிக் கொண்டான்.

ஹாய் ஹேன்ட்ஸம், என் கூட எல்லாம் பேச மாட்டீங்களா?”

நோ நோ, அப்படியெல்லாம் இல்லை ரவீனா, சந்தர்ப்பம் அமையலை.”

சந்தர்ப்பம் கிடைச்சாலும் அதை நீங்க யூஸ் பண்ணிக்க மாட்டீங்க சுதா. பை வே, இன்னைக்கு ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கீங்க.” அவள் கண்களில் மயக்கம் தெரிந்தது. இயல்பாகவே அவனிடம் குடி கொண்டிருக்கும் அகம்பாவம் தலை தூக்க

இது மாதிரி நானும் திருப்பி சொல்லனுமா?” என்றான்.

நோ நோ, அப்படியெல்லாம் இல்லை. இங்க இன்னைக்கு நிறைய பேர் அதை சொல்லிட்டாங்க. என்ன, நீங்க அதை சொன்னா நான் சந்தோஷப் படுவேன், அவ்வளவுதான்.”

அவன் ஏதோ சொல்ல வாயெடுக்க, சட்டென்று அறிவிப்பு ஒலித்தது. டான்ஸ் பண்ணுவதற்கு எல்லோரையும் அழைத்துக் கொண்டிருந்தார்கள். ரவீனா இவன் புறம் கையை நீட்டி,

ஷால் வீ?” என்ற போது, மறுப்பது அநாகரிகம் என்று பட்டது. அவள் கையைப் பற்றியவன், அவளோடு சென்றான்.

மெல்லிய இசை ஒலிக்க, ஜோடி ஜோடியாக நடனமாட ஆரம்பித்தார்கள்.

தன் கை பற்றி இடை வளைத்திருந்த அவள் கையின் ஸ்பரிசத்தை உணர்ந்த போது, ஒரு பதினாறு வயது பருவப் பெண் கண் முன் தோன்றினாள். அவள் கைப்பிடித்து தர தரவென இழுத்துச் சென்று வீட்டிற்கு வெளியே விட்ட போது, தன்னை முறைத்துப் பார்த்த அந்தக் கண்களும், கடு கடுவென இருந்த முகமும் மின்னலடித்துப் போனது.

கண்களாலேயே கார்த்திக்கை தன்னருகே அழைத்தவன்,

ஆம் எக்ஸ்ட்ரீம்லி ஸொரி டார்லிங்.” என்றுவிட்டு, ரவீனாவை கார்த்திக்கின் கையில் ஒப்படைத்து, வெளியே நடந்து விட்டான்.

ஏதோ தப்பு செய்ததைப் போல ஒரு குற்ற உணர்வு. கார்த்திக்கின் கண்களும், ரவீனாவின் கண்களும் தன்னை விசித்திரமாக பார்ப்பதை அவனால் உணர முடிந்தது. எதையும் பொருட்படுத்தாது, அந்த சில்லென்ற காற்றில் போய் நின்று ஆழ மூச்சு விட்டான் சுதாகரன்.

 

Written by

Ardent reader, kirukkufying something, want to travel with characters around me.

error: Content is protected !!