வண்ணம் கொண்ட வெண்ணிலவே 5
1986 அன்று.
வீடே அமைதியாக இருந்தது. தமிழரசி புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்தபடி இருந்தார். கண்களில் கண்ணீர் பெருகிய வண்ணம் இருந்தது.
“அரசி விடு, நடந்தது நடந்து போச்சு, அழுது அழுது நீ எதையாவது இழுத்துக்காதே.” சிதம்பரம் ஒரு அதட்டல் போட்டார்.
“ஐயா தமிழ், என்னை மன்னிச்சிடுய்யா. இப்படி நடக்கும்னு நான் கனவிலயும் நினைக்கலைய்யா.”
ஜன்னலோரமாக நின்று கொண்டு வெளியே வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்த தமிழ், தன் அம்மா தன்னை நோக்கி கரம் குவித்து அழவும் பதறிப் போனான்.
“அம்மா! என்ன பண்ணுறீங்க? கொஞ்ச நேரம் அமைதியா இருங்க.”
“இல்லைப்பா, நீ எவ்வளவோ சொன்னே இப்போ கல்யாணம் வேண்டாம்னு. நான்தான் உன்னைக் கட்டாயப்படுத்தி உன் முகத்துல கரியைப் பூசிட்டேன்.”
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை. விரும்பத்தகாத நிகழ்வொன்னு நடந்து போச்சு. இல்லேங்கலை, அதுக்காக இப்படி மனசை தளரவிடக் கூடாதும்மா. எழும்புங்க, முதல்ல கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க.”
இவர்கள் பேச்சைக் குலைத்தது அழைப்பு மணியோசை. இவர்கள் மூவரும் திரும்ப, வாசலில் மாறன் நின்றிருந்தான்.
“உள்ளே வாப்பா, ஏன் அங்கேயே நின்னுட்ட.” சிதம்பரம் அழைக்கவும் வெகு பவ்வியமாக அவரருகே வந்தவன் சாவிக் கொத்தை அவரிடம் நீட்டினான்.
“ஐயா, மண்டபத்தோட சாவி. எல்லா கணக்கு வழக்குகளையும் சரி பாத்து, குடுக்க வேண்டியவங்களுக்கு எல்லாம் குடுத்துட்டேன். இது மீதிப்பணம், எல்லாம் இந்த நோட்டுல எழுதி இருக்கேங்க.” அனைத்தையும் அவரிடம் நீட்ட,
“ரொம்ப நன்றிப்பா, இக்கட்டான நிலமையில ரொம்ப பெரிய உதவி பண்ணுற.”
“இது என்னோட கடமை ஐயா.” மறந்தும் என் நண்பனுக்காக செய்கிறேன் என்று மாறன் சொல்லவில்லை.
தமிழ்ச்செல்வனுக்கு சொந்தமாக ஒரு கல்யாண மண்டபம் இருந்தது. அதன் சாவியையும், நின்று போன கல்யாணத்தின் கணக்குகளையும் சரிபார்த்து சிதம்பரம் வசம் ஒப்படைக்க வந்திருந்தான் இளமாறன்.
“அரசி! போ, போய் ஒரு மாத்திரையை போட்டுக்கிட்டு கொஞ்ச நேரம் தூங்கு. இல்லைன்னா இப்படியே அழுது அழுது நீ எதையாவது இழுத்துக்கப் போறே.” சிதம்பரம் கையோடு மனைவியை அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.
தமிழ்ச்செல்வன் எழுந்து வெளியே செல்ல அவனைப் பின் தொடர்ந்து மாறனும் வெளியேறினான். தோட்டத்தில் ஒதுக்குப் புறமாக இருந்த அந்த பெஞ்சில் இருவரும் அமர்ந்தனர்.
“தமிழ், மனசுல எதையும் போட்டு குழப்பிக்காத.”
“அப்படியெல்லாம் இல்லை மாறா.”
“நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே?”
“கேளு மாறா.”
“இல்லை… அந்தப் பொண்ணு மேல ரொம்ப ஆசைப்பட்டியோ?”
“மாறா, நான் உண்மையைச் சொல்லட்டுமா? அம்மா ஆசைப்படுறாங்களேன்னுதான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். எப்படியும் அம்மா நல்ல பொண்ணாத்தான் பாப்பாங்கன்னு எனக்கு நிச்சயமாத் தெரியும்.”
“தமிழ், நான் விசாரிச்ச வரைக்கும் பொண்ணு ரொம்ப நல்ல மாதிரிதான் தெரியுது. படிப்புல ரொம்பவே ஆர்வமாம். கோல்ட் மெடல் வாங்கின பொண்ணாம்பா“
“ம்… அப்படித்தான் அம்மாவும் சொன்னாங்க. படிச்ச பொண்ணு, தொழில்லயும் உனக்கு உதவியா இருக்கும்னாங்க.”
“வீட்டுல கட்டாயப்படுத்தி இருப்பாங்க போல இருக்கு தமிழ்.”
“ம்… எனக்கும் அப்படித்தான் தோணுது. ஃபோட்டோவை பாத்துட்டு விட்டுட்டேன். பேசியிருக்கனுமோன்னு இப்ப தோணுது.”
“ஆமாம்பா, ஒருவேளை நீ பேசியிருந்தா, அந்தப் பொண்ணு தன் மனசுல இருக்கிறதை சொல்லி இருக்கும்.”
“ம்… விடு மாறா, பாவம்பா அந்தப் பொண்ணு. படிக்கணும்னு ஆசைப்படுறது ஒரு குத்தமா? என்னோட கவலை எல்லாம் இப்போ அது எங்க போய் மாட்டிக்கிட்டு நிக்குதோங்கிறதுதான்.”
“இல்லையில்லை, பொண்ணோட தம்பியை பாத்துட்டு தான் வர்றேன். ஏற்கனவே ஹைதராபாத் யூனிவர்சிட்டியில இடம் கிடைச்சிருக்கும் போல. அதுக்கு முன்னாடி சட்டுப் புட்டுன்னு கல்யாணத்தை முடிக்கப் பாத்திருக்காங்க.”
“நிச்சயமா தெரியுமா மாறா?”
“இன்னைக்கு போஸ்ட்ல லெட்டர் வந்துதாம். என்னை மன்னிச்சிடுங்க, ஃப்ரெண்ட்ஸ் உதவியோட நான் ஹைதராபாத் போறேன்னு.”
“எப்படியோ நல்லா இருந்தா சரி, என்ன? இதை எங்கிட்ட சொல்லி இருக்கலாம். ஊரைக் கூட்டி, மாப்பிள்ளைக் கோலத்துல மணவறை வரை போய், எல்லாம் கேலிக் கூத்து மாதிரி ஆகிப் போச்சு.”
“விடு தமிழ், இதை விட அமோகமான பொண்ணு உனக்கு விதிச்சிருக்கு போல.”
“ஐயா சாமி! ஆளை விடுங்கப்பா. இது ஒன்னே போதும். எனக்கு என் தொழில் போதும்பா. நான் அதைக்கட்டிக்கிட்டு அழறேன். வேற ஒன்னும் வேணாம்.”
“சரி அதை விடு, குந்தவி இன்னைக்கு உன்னை கோவிலுக்கு வரச் சொன்னா. நாளைக்கு அவ கிளம்பனுமாம்.”
“ம்… போகலாம், வேற என்ன சொன்னா? பிரபாகரன் மச்சான் பத்தி ஏதாவது சொன்னாளா?”
“கடிதம் போட்டிருந்தாராம். போய் சேந்துட்டார் போல. இவளும் பதில் போட்டிருக்காளாம்.”
“என்னத்தை சொல்ல, ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பிரச்சினை. நீயாவது ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கோ மாறன்.”
“ஆமாப்பா, அது ஒன்னுதான் குறை இப்போ. சும்மாவே நமக்கு கல்யாணம்னா ஆகாது. இப்போ உங்க ரெண்டு பேரையும் பாக்கும் போது வாழ்க்கை பூரா இப்படியே இருந்திரலாம் போல தோணுது.”
“அது வாஸ்தவம் தான். நினைச்சுக் கூட பாக்கலை மாறா. போறதுன்னு முடிவெடுத்த பொண்ணு ஒரு நாள் முந்திப் போயிருக்கப்படாதா?”
“ஆமாம்பா, மணவறை வரைக்கும் இழுத்து விட்டுட்டு போயிருக்க வேணாம்.”
“அப்போதான் சந்தேகம் வராதுன்னு நினைச்சிருக்குமாக்கும்.”
“கல்யாணத்துக்கு அப்புறமா நான் உன்னை படிக்க வைக்கிறேன்னு நீ ஒரு உத்தரவாதம் குடுத்திருந்தா இந்தக் கல்யாணம் நடந்திருக்கும்பா.”
“சரி விடு, இனி அதைப் பேசி என்னத்தை ஆகப்போகுது.” இருவரும் அனைத்தையும் மறந்து தங்கள் புதிய ஏற்றுமதி பற்றி பேச ஆரம்பித்தார்கள்.
** ** ** ** ** **
2018 இன்று
அந்தப் பெரிய மில் வளாகத்திற்குள் சென்றான் சுதாகரன். முன்னர் பார்த்ததை விட நிறைய வித்தியாசம் தெரிந்தது. தொழில் மேலாண்மையில் தேர்ந்த அவன் கண்கள் அத்தனையையும் அளவிட்டது.
நேராக தமிழின் அறைக்குச் சென்றவன், கதவை இருமுறை தட்டிவிட்டு உள்ளே சென்றான். உள்ளே தமிழ் ஏதோ ஒரு ஃபைலில் மூழ்கி இருந்தார். நிமிர்ந்து பார்த்தவர்,
“வா சுதா, உன்னைத்தான் எதிர்பாத்துக் கிட்டு இருக்கேன்.”
“பிஸியா மாமா?”
“எப்போதும் உள்ளதுதான், உக்காருப்பா. அப்புறம் சொல்லு சுதா, படிப்பை முடிச்சாச்சு, இனி என்ன ஐடியா?”
“எப்பவும் உள்ள அதே ஐடியா தான் மாமா. தமிழ் மாமாவோட சேந்து தொழில் பண்ணனும். பிஸினஸ் கத்துக்கணும்.”
“ரொம்ப சந்தோஷம் சுதா, உனக்காக நான் எப்பவுமே காத்துக்கிட்டு இருப்பேன், அதே நேரம் இன்னொரு விஷயத்திலயும் நான் ரொம்பவே உறுதியா இருக்கேன்பா.”
“சொல்லுங்க மாமா.”
“எனக்கும், குந்தவிக்குமான உறவில எந்த விரிசலும் வர்றத நான் எந்த விதத்திலும் அனுமதிக்க மாட்டேன் சுதா.”
“ஓ… நீங்க பாட்டிய சொல்லுறீங்களா? அதற்கு வாய்ப்பே இல்லை மாமா. அவங்க மேலே எனக்கு பாசம் இருக்கு, இல்லேங்கலை. ஆனா அதுக்காக என்னோட ஆசைகளை பாதிக்கிற அளவுக்கு கண்மூடித்தனமானது இல்லை.”
“அப்போ சரிப்பா, ஏன் சொல்லுறேன்னா இத்தனை நாள் வரைக்கும் குந்தவி விஷயத்துலதான் எங்களை தாக்கிப் பேசினாங்க. ஆனா இந்தத் தடவை வார்த்தை கொஞ்சம் தடிச்சிருச்சு சுதா.”
“…”
“நமக்குள்ள ஒளிவு மறைவு இருக்கக் கூடாது சுதா. எல்லாத்தையும் தெளிவா பேசிட்டா பின்னாடி பிரச்சினைகளை தவித்துக்கலாம்“
“புரியுது மாமா.”
“பிரபாகரன் மச்சான் விஷயத்துல ஒரு தாயா அவங்க உணர்வுகளை என்னால புரிஞ்சுக்க முடியுது. ஆனா, என்னோட பொண்ணு விஷயத்துல தலையிடுற உரிமையை இன்னும் நான் யாருக்கும் குடுக்கல்லை சுதா.”
“…”
“எனக்கும் சரி, உங்கத்தைக்கும் சரி, அந்த எண்ணம் கொஞ்சங் கூட இல்லைப்பா. அப்படி இருக்கும் போது எதுக்கு வீணா வார்த்தையை விடனும். இதை யாரு புரிஞ்சுக்கலைன்னாலும் பரவாயில்லை. நீ புரிஞ்சுக்கனும் சுதா.”
“உங்களுக்கும், அத்தைக்கும் ஏன் மாமா அப்படி ஒரு எண்ணம் வரலை?”
“சுதா!”
“சொல்லுங்க மாமா, எங்கிட்ட என்ன குறை இருக்குன்னு உங்களுக்கு அப்படி ஒரு எண்ணம் வரலை?”
“நிறை, குறைக்கே இங்க இடம் இல்லைப்பா. குந்தவியோட பையன் எங்கிற ஒரு தகுதி போதும் சுதா. ஆனா உனக்கும், உமாக்கும்தான் ஆகாதே.”
“அப்படி நான் எப்போ சொன்னேன்?”
“சுதா… நீ என்ன சொல்ல வர்றே?”
“ஒன்னுமில்லை மாமா, பாட்டியோட எனக்கிருக்கிற பாசத்தை வச்சு என்னை கணக்குப் போடாதீங்க. அது வேறே, இது வேறே.”
“அதனால…”
“உங்களுக்கும் எனக்கும் இடையில எந்த ஒளிவும் மறைவும் இருக்கக் கூடாதுன்னு நீங்க சொன்னதால நான் சொல்லுறேன். அத்தைக்கிட்டயும் சொல்லி வையுங்க.” மென்மையாக புன்னகைத்த தமிழ்ச்செல்வன் சுதாகரனை ஆழமாகப் பார்த்தார்.
“என்ன சொல்லனும் சுதா?”
“இப்போதைக்கு என்னால ஒன்னும் சொல்ல முடியலை மாமா, ஆனா ஒரு நாள் சொல்லுவேன். அப்போ நான் எதைச் சொன்னாலும் நீங்க ஏத்துக்கனும்.”
அதிகாரமாக வந்தது சுதாகரனின் குரல். தான் பார்த்து வளர்ந்த குந்தவியின் மகன் தன்னை மிரட்டுவதை ஒரு ரசனையோடு பார்த்த தமிழ்ச்செல்வன்,
“ஏத்துக்கலைன்னா…?” என்றார்.
“எங்கம்மா விஷயத்துல எங்கப்பா பண்ணின மாதிரி நான் கெஞ்சிக்கிட்டு நிக்க மாட்டேன்.”
“ம்… அப்போ என்ன பண்ணுவே?” சிரிப்போடு வந்தது தமிழின் கேள்வி. அவரை புன்னகையோடு பார்த்தவன்,
“தூக்கிருவேன்.” என்றான்.
வாய்விட்டு சிரித்தார் தமிழ்ச்செல்வன். சற்று நேரம் தன்னை மறந்து சிரித்தவரை கலைத்தது அவரது ஃபோன். நம்பரை பார்த்தவர், அழைப்பை ஏற்றார்.
“சொல்லு உமா.”
“அப்பா, அத்தை வீட்டுல நேத்து என்ன நடந்துது?”
ஐய்யைய்யோ என்று தமிழ்ச்செல்வன் தலையில் கை வைக்க, அவரைக் கேள்வியாகப் பார்த்தான் சுதாகரன். ஸ்பீக்கரை ஆன் பண்ணியவர் மேற்கொண்டு பேச, இப்போது உமா பேசுவதும் தெளிவாகக் கேட்டது.
“என்ன நடந்ததுன்னு சொல்லுங்கப்பா?”
“என்னடா ஆச்சு? சுதாவை பாக்கப் போனோம், அவ்வளவுதான்.”
“இன்னைக்கு மகேஷ் வீட்டுக்கு வந்திருந்தான்பா.”
“போச்சுடா, போட்டுக் குடுத்துட்டானா?”
“நீங்க எதுக்குப்பா அங்க போய் கதை கேக்குறீங்க? என்னமோ அவங்க பேரன் பெரிய மன்மதன், இதுல அவரை வளைச்சுப் போட நாங்க அலையிறோமா? ஆனாலும் அந்தப் பாட்டிக்கு இத்தனை தலைக்கனம் ஆகாதுப்பா!”
“இது நியாயம் இல்லை உமா, அவங்க பேரன் மன்மதன் கணக்கா இருக்கான் தானேம்மா.”
“அப்பா, உங்க கண்ணை ஒரு தரம் செக் பண்ணனும்பா?”
“ஏம்மா?”
“அந்த சிரிக்காத மூஞ்சியைப் போய் மன்மதன்னு சொல்லுறீங்களே.”
“ஹா… ஹா… பாத்துப் பேசு உமா, ஒரு வேளை அந்த சிரிக்காத மூஞ்சியைத் தான் ஆண்டவன் உன் தலையில எழுதி இருக்கானோ என்னவோ.”
“சான்ஸே இல்லை. யாரோ ரவீனாவாம், ஹிந்திப் பொண்ணாம். அத்தைக்கு ஹிந்திக்காரிதான் மருமகள்பா.”
தமிழ்ச்செல்வன் கேள்வியாய் சுதாகரனைப் பார்க்க, இல்லையெனத் தலையாட்டினான் சிரித்துக் கொண்டே.
“உனக்கு யாரும்மா சொன்னாங்க இதெல்லாம்?”
“மகேஷ்தான்பா சொன்னான். அதை விடுங்க, இனிமேல் அத்தையை பாக்கனும்னா ஹாஸ்பிடல்ல போய் பாருங்க. வீட்டுக்கு போய் வீணா அவமானப் படாதீங்கப்பா, ப்ளீஸ்.”
“அத்தனை சீக்கிரத்துல விட்டுக் குடுக்கிற உறவில்லைம்மா அது.”
“என்னமோ பண்ணுங்க. நான் சொல்லிட்டேன் அவ்வளவுதான். என்னை அந்த சிரிக்காத மூஞ்சியோட சம்பந்தப் படுத்தி இனிமேல் யாராவது பேசினா எனக்கு கெட்ட கோபம் வரும் சொல்லிட்டேன். நான் கோவிலுக்கு போகனும், பை.”
அழைப்பை பட்டென்று ஆத்திரத்துடன் துண்டித்தாள் உமா. தமிழ்ச்செல்வன் சிரித்தபடி சுதாகரனைப் பார்க்க, எழுந்து கொண்டவன்,
“கொஞ்சம் வெளியே வேலை இருக்கு மாமா, முடிச்சுட்டு சீக்கிரம் வந்தர்றேன்” அவசரமாக சுதாகரன் வெளியேற, தலையசைத்து அனுமதித்தார் தமிழ்ச்செல்வன்.
** ** ** ** **
கோவிலில் அமைதியாக கண்மூடி அமர்ந்திருந்தாள் உமா. மனம் மகேஷ் சொன்ன விஷயத்திலேயே நின்றது.
‘யாரோ ரவீனாவாம் உமா, கார்த்திக் அண்ணாதான் சொன்னான். சுதான்னா அவளுக்கு அவ்வளவு பிரியமாம். பாக்குறதுக்கு அவ்வளவு அழகாம்.’
மகேஷின் வார்த்தைகள் காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. வெளியே ‘எனக்கென்ன வந்தது‘ என்று காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் வலித்தது. கண்கள் லேசாகக் கலங்கியது. ஃபோன் அதிரவும் எடுத்துப் பார்த்தாள். வைப்பிரேட் மோடில் போட்டிருந்தாள். புது நம்பர், யாராக இருக்கும்? யோசனையோடே ஆன் பண்ணியவள்,
“ஹலோ” என்றாள்.
“மது!” அந்த வார்த்தையும், அந்தக் குரலும் அவள் உயிர் வரை சென்று மீண்டது.
“…..”
“மது…!”
“அ..த்..தா..ன்!”
“ம்… வெளியே கார்ல வெயிட் பண்ணுறேன், சீக்கிரமா வா.”
“…..”
“மதூ…!”
“ஆங்…”
“கோவிலுக்கு வெளியே வெயிட் பண்ணுறேன் சீக்கிரமா வா.”
“ம்…”
சட்டென்று எழுந்தவள் மடமடவென வெளியே நடந்தாள். இன்றைக்கென்று பார்த்து பாட்டி வற்புறுத்தவும் சேலை கட்டி இருந்தாள். அவசரமாக நடக்க முடியாமல் அது வேறு இடைஞ்சல் பண்ணியது.
கோவிலுக்கு வெளியே வந்தவள் ஒரு எதிர்பார்ப்போடு பார்க்க, அவள் எண்ணத்தைப் பொய்ப்பிக்காமல் நின்றது அந்த ‘black Audi’. நெஞ்சம் படபடக்க, அதை நோக்கி நடந்தவள் அருகில் சென்றதும் காரின் பின் டோரில் கை வைத்தாள்.
‘சென்ற்றல் லொக்‘ சட்டென்று இயங்க, டோரை ஓபன் பண்ண அவளால் முடியவில்லை. முன்னே நகர்ந்து ஃப்ரொன்ட் டோரில் கை வைக்க இப்போது அனுமதி கிடைத்தது.
கதைவைத் திறந்து உள்ளே உட்கார்ந்தாள் உமா. எதற்கு தனக்கு இத்தனை படபடப்பு என்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. நிமிர்ந்து அவனைப் பார்க்கும் தைரியம் இருக்கவில்லை. ஆனால் அவன் கூர் பார்வை தன்னை அளவெடுப்பதை அவளால் உணர முடிந்தது.
காரை ஸ்டார்ட் செய்தவன் எதுவும் பேசாமல் மௌனமாகவே ஓட்டினான். கார் ஊரின் எல்லையைத் தாண்டி போய்க் கொண்டிருந்தது. கேள்வியாக அவனைத் திரும்பிப் பார்க்க, அப்போதும் எதுவும் பேசவில்லை. ஆள் அரவமற்ற ஓரிடத்தில் காரை நிறுத்தியவன், அமைதியாக இருந்தான்.
“மகேஷ் என்ன சொன்னான்?”
இப்போதும் அவளைத் திரும்பிப் பார்க்கவில்லை. கேள்வி மட்டும் வந்தது. இதற்கு என்ன பதில் சொல்வது? மகேஷ் நிறைய விஷயங்கள் பேசினான். அதில் இவன் எதைக் கேட்கிறான்? அவள் புறமாக திரும்பி அமர்ந்தவன்,
“மகேஷ் இன்னைக்கு வீட்டுக்கு வந்தான் இல்லையா?”
“ம்…”
“என்ன சொன்னான்?”
“உங்க பாட்டி…” அவள் முடிப்பதற்கு முன் குறுக்கிட்டவன்,
“அது இல்லை.”
“வேற எது?”
“ரவீனா பத்தி என்ன சொன்னான்?”
“அ.. அது… உங்களுக்கு… எப்பிடி தெரியும்?”
“ம்… கிளி வந்து சொல்லிச்சு, நான் கேட்ட கேள்விக்கு பதில் இன்னும் வரலை.” அவன் ஆங்காரமாகக் கேட்க, அவளுக்கும் அத்தனை நேரமும் இருந்த அதிர்ச்சி போய் கோபம் வந்தது.
“நாங்க ஆயிரம் பேசிப்போம், அது எதுக்கு உங்களுக்கு?” அவளும் இப்போது கோபமாக பேச, அவன் முகம் மாறியது.
“உனக்கெதுக்கு தேவையில்லாத பேச்சு மகேஷோட?”
“ஏன்? உங்க வண்டவாளம் எல்லாம் வெளியே வருதேன்னு கோபம் வருதா?”
“பல்லைப் பேத்திருவேன், இங்க ஒரு வண்டவாளமும் இல்லை நீங்க தண்டவாளத்தில ஏத்துறதுக்கு.”
“அப்போ ஏன் இவ்வளவு கோபம் வருது உங்களுக்கு? விட்டுட்டு போக வேண்டியது தானே?”
“மதூ… என்னை சும்மா சீண்டாதே, நீயும், மகேஷுமா சேந்து மட்டும் பேசியிருந்தா பரவாயில்லை, அதை உங்கப்பாக்கிட்ட எதுக்கு சொல்லுற?”
“ஏன் சொன்னா என்னவாம்? பெரிசா உங்களை தலைல தூக்கி வெச்சு ஆடுறார் இல்லையா, அவருக்கும் தெரியட்டுமே உங்க அழகு.”
“இங்கப் பாரு மது, உங்கப்பாக்கு தெரிய வேண்டிய விஷயம்னா நானே அவர்கிட்ட நேரடியா சொல்லுவேன். அந்தத் தைரியம் என்கிட்ட இருக்கு. நீ இல்லாததை எல்லாம் சொல்லாதே.”
“யாரு கண்டா, நாங்க என்ன பாத்துக்கிட்டா இருந்தோம்.” அவள் தனக்குத்தானே பேசிக்கொள்ள,
“அங்க என்ன முணு முணுக்குறே?”
“ஒன்னும் இல்லை.”
“ரவீனா கூடப் படிச்ச பொண்ணு, அவ்வளவுதான் புரியுதா?”
அவள் எதுவும் சொல்லாமல் மௌனமாக தலை குனிந்திருந்தாள். முகம் நான்கு முளத்தில் நீண்டிருந்தது. அவளையே பாத்திருந்தவன் வாய்விட்டுச் சிரிக்க, திரும்பி அவனைப் பார்த்து முறைத்தவள்,
“என்னைப் பாத்தா எப்பிடி இருக்கு உங்களுக்கு? அத்தனை கேலியா இருக்கா? இருங்க, வீட்டுக்கு போனதும் முதல் வேலையா அத்தைக்கு ஃபோனை போட்டு உங்களை மாட்டி வைக்குறேன்.” விட்டால் அழுது விடுவாள் போல அவள் பேச,
“அப்படியா? உங்க அத்தைக்கிட்ட என்னை மாட்டி விடுவீங்களா?” என்றவன், ஃபோனை எடுத்து யாரையோ அழைத்தான். மறுபுறம் ரிங் போவது உமாவுக்கு தெளிவாகக் கேட்டது.
“சுதா, என்னடா இந்நேரத்துக்கு கூப்பிடுறே? அம்மா கொஞ்சம் பிஸிடா.”
“அதை விட இங்க முக்கியமான பஞ்சாயத்து இருக்கும்மா.”
“பஞ்சாயத்தா? என்னடா சொல்லுற?”
“உன் செல்லப் பொண்ணை கார்ல அள்ளிப் போட்டுக்கிட்டு வந்திருக்கேன்.”
“டேய், விளையாடாத சுதா. எங்க இருக்கே இப்போ? தமிழ் மாமாவை பாக்கப் போகலையா நீ?”
“அங்கதான் போனேன், பேசிக்கிட்டு இருக்கும் போது அவர் பொண்ணு, அதாம்மா அந்த அடங்காதது இருக்கில்ல, அது ஃபோன் பண்ணிச்சு” வேண்டுமென்றே அவன் பேச, பல்லைக் கடித்தாள் உமா.
“சுதா, திஸ் இஸ் டூ மச், எதுக்கு இப்போ உமாவைப் பத்தி பேசுறே? அவளுக்கு தெரிஞ்சுது, நீ அவ்வளவு தான்.”
“என்ன பண்ணிருவா என்னை?”
“ஹா… ஹா… சின்ன பொண்ணா இருக்கும் போது ஒரு தரம் உன்னை…” குந்தவி முடிக்கும் முன்பே,
“அத்தை…!” உமாவின் குரல் கீச்சிட்டது.
“சுதா…! உமா உங்கூட இருக்காளா? டேய்…! நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டீங்களா? எங்க இருக்க சுதா? ஏதாவது பேசுடா. உமா…! உமா… சுதா உங்கூட பேசினானா?” குந்தவியின் குரல் உணர்ச்சி மிகுதியில் தடுமாறியது.
“அம்மா, எதுக்கு இவ்வளவு உணர்ச்சி வசப்படுறீங்க? மது எங்கூட தான் இருக்கா, பேசுங்க.” ஃபோனை அவளிடம் நீட்ட, அதை வாங்கியவள்,
“அத்தை.” என்றாள்.
“உமா, எனக்கு இது போதும்டா, நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டதே எனக்கு போதும். நான் இதை ப்ரபாகிட்ட சொல்லனும், அத்தை வைக்கிறேன்டா.” சட்டென்று அழைப்பை துண்டித்து விட்டார் குந்தவி.
கையிலிருந்த அவன் ஃபோனை பார்த்தவள், உள்ளே செல்ல முயற்சிக்க அனுமதி கேட்டது. அவனை நிமிர்ந்து பார்க்க,
“டேட் ஒஃப் பேர்த் குடு.” என்றான். அவன் பிறந்த தேதி, மாதம் கொடுக்க தவறு என்றது. மீண்டும் அவனைக் கேள்வியாகப் பார்க்க, சிரிப்பு மட்டுமே பதிலாகக் கிடைத்தது.
ஆச்சரியத்தோடு அவள் பிறந்த தேதி, மாதம் கொடுக்க அனுமதி கிடைத்தது. ஹோம் ஸ்க்ரீனில் அவர்கள் இருவரது குழந்தைப் பருவ ஃபோட்டோ இருக்க, விக்கித்துப் போனாள் உமா.
அவனை நிமிர்ந்து அதிசயமாகப் பார்க்க, அவளையே பார்த்திருந்தான் சுதாகரன்.