varaaga 29

varaaga 29

திருமணம் மற்றும் வரவேற்பு முடிந்து மணமக்கள் வீடு வந்து சேர இரவு பத்து மணி ஆகியது..

அவர்களை காயு ஆரத்தி எடுத்து வரவேற்க.. வெளியே கொண்டு அதை ஊற்றுவதை அவளின் உடல்நிலை கருதி ருத்ரா வாங்கி கொண்டாள்.

ஆரத்தி எடுத்ததற்கு காசு கேட்ட காயுவிற்கு இப்போது கார்த்தி பணம் குடுக்க.. முத்ரா மற்றும் கார்த்தி இருவருக்கும் பழைய நியாபகத்தில் புன்னகை பூத்தது..

பின் தான் கார்த்தியின் ஆப்பு ஆரம்பித்தது. சாந்தி முகூர்த்தம் நாளை தான் என்பதால் இப்போது முத்ராவை அவள் எப்போழுதும் வந்தால் தங்கும் அறையில் தங்க வைத்தனர்.

கார்த்திக்கு ஏற்கனவே திருமணத்திற்கு அடுத்த நாள் தான் சாந்தி முகூர்த்தம் என்று குறித்தது தெரிந்தாலும் கல்யாண சந்தோஷத்தில் மறந்திருந்தான்இப்போதோ அறையில் தனியே புலம்ப வேண்டிய நிலைமை.. அவனிற்கு தோதாக புலம்ப இன்னொரு ஜீவனும் இவனின் அறைக்குள் நுழைந்து கட்டிலில் படுத்தது. அது வேறு யாரும் இல்லை நம் முகிலனே தான்..

முத்ரா தனியே படுக்கிறாள் என்றும்.. இனி அவளுடன் இரவில் கதை அடிக்க முடியாது என்பதால் கெஞ்சி கெஞ்சி அவன் சரி சொல்லும் முன்பே மித்ராவை தூக்கி சென்று விட்டாள்.

தோள்வளைவில் மனைவியையும் நெஞ்சில் மகளையும் வைத்து உறங்கிப் பழகியவனுக்கு எங்கிருந்து தூக்கம் வரும்.. மித்ராவை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கேட்டான் தான்.. ஆனால் நடுவில் அவள் அழுதாள் சமாளிக்க முடியாது என்று அவளே பார்த்துக்கொள்வதாக கூறி சென்றுவிட்டாள்.

மனைவி மகளின்றி அறை வெறுமையாக இருக்க.. வெளியே வந்தான்.. அப்போது தான் கார்த்தி புலம்பியதும் காதில் விழுந்தது.. நமக்கே இப்படி என்றால் பாவம் அவனிற்கு எப்படி இருக்கும் என்ற எண்ணத்தில் தான் அவனின் அறைக்குள் நுழைந்து படுத்தது.

அப்போதாவது இருவருக்கும் உறக்கம் வருகிறதா என்ற நல்ல எண்ணத்தில்.. ஆனால் அவன் தம்பியோ..

“என்ன அண்ணா.. நீயும் இங்க வந்துட்டஹா ஹா.. அண்ணி என் பொண்டாட்டி கூட படுக்க போயாச்சா..”

என்று கிண்டல் அடிக்க..

“அடேய்.. வாய மூடிட்டு தூங்குடா.. அது என்ன உன் பொண்டாட்டி.. அது அவ தங்கச்சிடா.. மனுஷன் கடுப்புல குளிர்காய்ந்துட்டு..”

என்று எரிந்து விழுந்தான்.

ஆனால் கார்த்தி அடங்கினான் இல்லையே..

“இப்போ என் பொண்டாட்டியும் தான் அண்ணா..

என்று எனக்கும் பொண்டாட்டி இருக்கா.. எனக்கும் பொண்டாட்டி இருக்கா என்று தம்பட்டம் அடித்தான். பின் முகிலன் ஏதோ பேச வர.. அதை பேச விடாமல்...

“ஐ போனா நீ இருந்தா.. உன்னை என் கைக்குள்ளயே வச்சிருப்பேன்..

ஹான்ட் பாக்கா ( handbag ) நான் இருந்தா உன் தோளிலேயே தொங்கிருப்பேன்..

ஆப்பிள்லா நீ இருந்தா உன்னை ஜூஸ் போட்டு குடிச்சிருப்பேன்..

என்று முத்ராவை நினைத்து பாட.. இல்ல இல்ல அலற..

“உருட்டுக்கட்டையா நான் இருந்தா உன்னை ஓங்கி ஓங்கி அடித்திருப்பேன்…”

என்றவாறு அவனை மிதித்தான் கார்முகிலன்.

அட முகிலனா இது.. என்ற ஆச்சரியம் நமக்கு வந்தாலும் கார்த்திக்கு வரவில்லை.. அவன் மகள் பிறந்த பின் வெகுவாகவே மாறியிருந்தான்.

அவனின் கணினித் தொழிலும் நன்றாக செல்ல.. கூடிய விரைவில் அந்த துறையில் கோலோச்சுவான் என்று நம்புவோமாக..

காரத்தியோ அவன் மிதித்ததற்கு அசைய கூட செய்யாமல்..

“ஹாஹா.. இப்போ மட்டும் என்னவாம்.. உருட்டுக்கட்டை மாதிரி ஓங்கு தாங்கா தான்னா இருக்க..

என்று கூற..

“உன்கிட்ட வந்தேன் பாரு..

என்றவாறு எழுந்து செல்ல பார்த்தான்..

உடனே கார்த்தி அவனை செல்ல விடாமல் பிடித்து..

“உன்னை விட்டா யாரும் எனக்கில்லை.. பாரு பாரு.. என்னை கண்டேன் நானும் உனக்குள்ள..

என்று பாடினான்.

“டேய்.. நான் உன் அண்ணன்டா.. பொண்டாட்டிய பார்த்து பாட வேண்டிய பாட்டை என்கிட்ட பாடாத..”

என்று கூறி நகைக்க..

“இல்லை ணா.. நான் உனக்காக தான் பாடுனேன்.. இப்போதைக்கு உன்னை விட்டா யாரும் எனக்கில்லை.. அதே மாதிரி நான் முத்ராவ பிரிஞ்சி தவிக்கிற மாதிரி நீயும் அண்ணிய பிரிஞ்சி தவிக்கிற அதான்.. என்னை கண்டேன் நானும் உனக்குள்ள.. எப்புடி…?”

என்று சட்டை காலரை இழுத்துவிட்டு கேட்க..

சிரித்து விட்டான் அவன்..

“எப்படிடா இப்படி.. நான் எவ்ளோ மிஸ் பண்ணிருக்கேன்” என்று வருந்த..

“அதெல்லாம் ஒன்னும் இல்லை.. இப்போவாவது திருந்தி வந்தீங்களே.. எல்லாம் அண்ணி வந்த நேரம்.. அன்று மட்டும் அம்மா பேசல”

என்று பழங்கதை பேச..

“எப்பேர்ப்பட்ட வாழ்க்கையை இழந்திருப்பேன்..

என்று கையை தலைக்கடியில் வைத்து மேல்சுவரை பார்த்து புன்னகையோடு  சொன்னான்.

“அம்மா உன்கிட்ட பேச செஞ்ச கூத்த நீ கவனிச்சிருக்கணும்.. ஹாஹா.. நீ இவ்ளோ ஈசியா சம்மதிப்பனு நினைக்கல..”  

“நானே நினைக்கல.. நீ வேற”

என்று முகிலனும் உரையாடலில் பங்கு கொள்ள..

அங்கே அழகிய சகோதர பாசம் தாமதமாக என்றாலும் பிரகாசமாகவே ஒளிவீசியது.

அடுத்த நாள் அதிகாலையில் நாம் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்த காட்சி அரங்கேறிக் கொண்டிருந்தது.

“கார்த்தி எழுந்திரு.. நீ தான சொன்ன.. கல்யாணத்துக்கு அப்புறம் நான் டெய்லி யோகா செய்ய வரேன்னு.. வா.. எனக்கு தனியா செஞ்சி செஞ்சி போர் அடிக்குது..

என்ற சுப்ரபாதத்தை கார்த்தியை எழுப்ப அன்றைய நாளில் ஆரம்பித்தாள் முத்ரா.

காயுவிற்கு கல்யாணம் ஆகியதும்.. ருத்ராவிற்கு குழந்தை பிறந்ததும் இவளிற்கு துணை யாரும் இல்லாமல் தான் போய்விட்டது.

கார்த்தியை கேட்க..

அவன் ஜம்பமாக,

“கல்யாணத்துக்கு அடுத்த நாள் வரேன்டி..”

என்று தப்பிக்க சொல்ல.. அவள் அதை பிடித்து இப்போது கேட்பாள் என்று கனவா கண்டான்.. ?

தூக்க கலக்கத்தில்..

“நாளைக்கு பண்ணலாம் நீலப்பிசாசே.. ப்ளீஸ் கொஞ்ச நேரம்..”

என்று வழக்கம் போல் கெஞ்ச.. தாயிற்கு பிறகு தாரம் என்பது இவன் விஷயத்தில் உண்மையாகியது.

என்னது நீலப்பிசாசா.. என்று முழித்தவள்.. இருக்கட்டும் அதை அப்புறம் பார்த்துக்கலாம் என்று ஒதுக்கியவள்.. வலுக்கட்டாயமாக அவனை எழுப்பி தள்ளி கொண்டு மொட்டை மாடி அடைந்தாள்.

அங்கே இதுவரை வளையாத அவனின் உடல் முத்ராவிடம் படாத பாடுபட்டு முதல் நாள் என்பதால் அங்கங்கே பிடித்தும் கொண்டது.

“ஏய்.. சத்தியமா முடியலடி.. இதையே படிச்சி.. எப்படி இன்னும் உசுரோட இருக்க”

என்று மனையாளிடம் முக்கிய சந்தேகத்தைக் குப்புறப்படுத்துக் கொண்டே கேட்க..

“நாலு செஞ்சிட்டு நாற்பது செஞ்ச மாதிரி பில்ட் அப் பாரு..” என்றவள்..

அவனின் வேர்வை வழிந்த அய்யோ பாவம் முகத்தை பார்த்து..

“போதும் கார்த்தி.. கொஞ்சம் கொஞ்சமா அதிகப்படுத்திக்கலாம்... கீழ போகலாமா..”

என்று கேட்டு கையோடு அழைத்து சென்றாள்.

அனைவரும் கீழே தான் இருந்தனர். பெரியவர்கள் நால்வரும் இப்போது இன்னும் நெருக்கம் ஆகியிருந்தனர்.

“அடடா.. ஏங்க.. அங்க பாருங்க.. வந்த ஒரே நாளுல என்னால முடியாததை என் மருமக செஞ்சிட்டா.. வா சின்ன மருமகளே.. இனி இந்த பையனை யோகா செய்ய வைக்க வேண்டியது உன் பொறுப்பு தான்..”

என்று அபிராமி கூறி வழக்கம் போல் கார்த்தியை வெறுப்பேத்தினார்.

இனி தினமுமா.. என்னடா இதுமாமியாரும் மருமகளும் உன்னை கொலை பண்ண பிளான் போடுறாங்கஎன்று மனசாட்சி கதறியது.. கண்டுக்கொள்ள தான் யாரும் இல்லை..

பின் அதை ஒதுக்கி தள்ளியவன்..

“எல்லாரும் போய் நல்ல ட்ரெஸ் பண்ணி ஒரு பத்துமணி போல ரெடி ஆகுங்க.. நாம ஒரு முக்கியமான இடத்துக்கு போறோம்..

என்று வீட்டு பெண்களை விரட்டி விட்டான். எங்கே என்று மாணிக்கவேல் ருத்ரா மற்றும் முகிலனிற்கு மட்டும் தான் தெரியும்.. ஆனால் அவர்களும் தெரியாதது போல் கிளம்பினர்.

பத்து மணிக்கு அனைவரும் வீட்டை விட்டு சில நிமிடம் தள்ளியிருக்கும் இடத்தை காரில் அடைந்தனர்.

அங்கு சென்று இறங்கியதும் அனைவரும் ஆச்சரியத்தில் புருவம் உயர்த்த.. முத்ரா கண் கலங்கி சுற்றுப்புறம் மறந்து உறைந்திருந்தாள்.

அங்கே “முத்ரா யோகா சென்டர் அண்ட் நேச்சரல் ஸ்பா” என்ற பெயரை தாங்கி அந்த இருமாடிக் கட்டிடம் கம்பீரமாக நின்றுக்கொண்டு திறப்பதற்கு தயாராக ரிப்பன் எல்லாம் கட்டி இருந்தது.

அவளின் யோகா மற்றும் அழகுக்கலை படிப்பு வீணாக கூடாது என்றே கார்த்தி இதனை உருவாக்கியிருந்தான்.

இடத்தை வாங்கியது மட்டுமே கார்த்தியின் வேலை.. இந்த மாதிரி என் மனைவிக்கு பரிசலிக்கணும் என்றதும்.. அடுத்த அடுத்த வேலையை அபிவிகாஷி கன்ஸ்ட்ரஷன் எடுத்து செய்து கொடுத்ததுமேலும் இதனை வடிவமைத்தது ருத்ராமுத்ராவின் ரசனையை சிறுவயதில் இருந்து பார்த்து பார்த்து வளர்ந்த உயிர் தமக்கை.. அவளின் ஆசைக்கு உயிர்வடிவம் கொடுத்தாள்.

இப்பொழுது தான் தன் கைவண்ணத்தையே நேரில் காண்கிறாள் ருத்ரா.. அதுவே மகிழ்ச்சி என்றால்.. அதனை பார்த்து நெகிழ்ந்து வாயடைத்து நிற்கும் தங்கையை பார்த்து இன்னும் இரட்டிப்பு மகிழ்ச்சி தான்

 

“என்ன ரிப்பன்லாம் கட்டி வச்சிருக்க.. யாருடா கட் பண்ணனும்…?”

என்று அபிராமி கேட்க..

சீதா மற்றும் கருணாகரன் என்ன பேசுவதென்றே தெரியாமல் நின்றனர்.

சீதாவோ இதை படிச்சி என்ன பண்ண போற என்று தான் அடிக்கடி கேட்டதால் தான் என்னைப்போல் யாரும் கேட்க கூடாது என்பதற்காக இப்படியோ என்று தோன்றாமல் இல்லை.. அதுவே அவனின் காதலின் அளவை பறைசாற்றியது.

‘முக்கியமானவங்கல தான்மா கூப்பிட்டிருக்கேன்.. அவங்க வரட்டும்”

என்று கூறி வெளியே இருக்கும் குட்டி பார்க்கில் அமர..

அந்த முக்கிய நபரும் வந்தார்.. அவர் வேறு யாரும் இல்லை.. 99 வயதிலும் யோகா செய்து நோய் நொடியின்றி வாழும் நானம்மாள் பாட்டி தான்.. உலகம் முழுக்க யோகாவின் பயன் அடைய வேண்டும் என்று நினைப்பவர்.

சென்ற வருடம் இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதினை குடியரசுத் தலைவர் கையால் வாங்கியவர்.. கார்த்தி நேரில் சென்று சந்தித்துப் பேச.. அவரும் வருவதாக ஒத்துக்கொண்டு இதோ விழாவை சிறப்பிக்க வந்திருக்கிறார்.

முத்ராவிற்கு அவர் தான் ரோல் மாடல்.. கோவையில் தான் இருக்கிறார் என்று தெரியும்.. ஆனால் நேரில் சந்திக்க சந்தர்ப்பம் அமையவில்லை.. இப்போது அவரிடம் ஓடி சென்று ஆசிர்வாதம் வாங்க.. கார்த்தியும் ஆசிர்வாதம் வாங்கினான்.. புன்னகையோடு இருவரையும் வாழ்த்தியவர்..

“இவள் தான் நீ சொன்ன யோகமங்கையா” என்று கார்த்தியை பார்த்து கேட்க..

கார்த்தியை முறைத்தவள்..

“அச்சோ.. அப்படில்லாம் இல்லை பாட்டி நீங்க தான் யோகமங்கை.. உங்களே மாதிரி நானும் இந்த வயசுலயும் யோகா செய்யணும் பாட்டி.. செய்வேன் கண்டிப்பா..

என்று சலுகையோடு கூற..

அது தெரிஞ்ச சங்கதி தான என்று ஒட்டுமொத்த குடும்பமும் ஒரே மாதிரி நினைத்தது.

பின்னர் அவர் திறப்பு விழாவை சிறப்பித்து ஓரிரு ஆசனம் செய்து விடைபெற.. அவருக்கு தகுந்த மரியாதை செய்து வழியனுப்பி வைத்தனர்.

முத்ராவிற்கு விண்ணில் பறப்பது போல இருந்ததுஎத்தனை நாள் கனவு.. மற்றவர்களுக்கு யோகாவின் நன்மையை கொண்டு சேர்க்க வேண்டும் என்றுஅது பாதி நிறைவேறிய திருப்தியில் நிறைவாக உணர்ந்தாள்.

இது அனைத்திற்கும் காரணமான தன் கணவன்.. தமக்கை மற்றும் குடும்பத்திற்கு என்ன கைமாறு செய்ய முடியும்..

அவள் தன் மகிழ்ச்சியை நன்றி சொல்லியே தீர்க்க.. மற்றவர்கள் மிரட்டிய பின்பே அடங்கினாள்.

இவ்வாறு அந்த நாள் ஒரு மெல்லிய பூஞ்சாரலாய் அனைவரையும் நனைத்துச் சென்றது

***********ஆசை ஆசையாய் இருக்கிறதே இது போல் வாழ்ந்திடவே

பாச பூமழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே..**************

வானில் முழுநிலா பவனி வர.. தன் நிலா தன்னை காண வரும் நேரத்தை ஆவலாக இல்லை மிகவும் ஆவலாக எதிர்பாத்துக் கொண்டிருந்தான் கார்த்தி..

ஆனால் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை.. அவனின் நீலப்பிசாசு காலையில் வச்சி செய்ததில் பக்கவாட்டு இடுப்பு பிடித்துக் கொண்டது.. காலையிலே வந்துவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி இப்போது அசைத்தாலே இடுப்பு வலித்தது..

அதே நேரம் முத்ரா அறைக்குள் பாலோடு வர.. அவனின் முகம் வலியையும் மீறி பிரகாசித்தது

ஆனால் அவனின் முக மாற்றம் காதல் மனையாளின் கண்ணில் படாமல் இருக்குமா.. ?

“என்ன ஆச்சு கார்த்தி.. ஏன் ஒரு மாதிரி இருக்க..

என்று லேசாக பதற..

“ஒன்னும் இல்ல.. சும்மா தான்..”

என்றான் அவன்..

“இல்லையே நீ பொய் சொல்லுற..” என்று சந்தேகமாக பார்க்க..

“வந்து.. காலையில யோகா செய்யும் போது இடுப்பு பிடிச்சிகிச்சி.. வேலையில கண்டுக்காம விட்டேன்.. இப்போ அசைத்தாலே வலிக்குது..”

என்று உன்னால தான் என்ற விதமாக முறைத்தான்.

“இதுல இருந்து என்ன தெரியுது.. உடல் உழைப்பே சுத்தமா இல்லைன்னு தெரியுது.. சாப்பிட்டு சாப்பிட்டு தூங்குனா இப்படி தான் ஆகும்.. அப்புறம் இன்னும் கொஞ்ச நாள்ல தொந்தியெல்லாம் வச்சி கிழவன் ஆகிருவீங்க”

என்று பயமுறுத்த..

“ஏய்.. என்னடி.. சாபம் விடுறியா.. அடிச்சேன்னா பாரு.. யாருடி கிழவன் நானா.. பாரு நாளையில் இருந்து உன்கூட சேர்ந்து யோகா சென்டர்ல யோகா செஞ்சி பிட் ஆகி காமிக்குறேன்..

என்று சவால் விட்டான்.

“பாக்கலாம் பாக்கலாம்..

என்றவள்.. தைலம் எடுத்து..

“எங்க வலிக்குதுன்னு சொல்லுங்க.. தேய்ச்சி விடுறேன்... ஒரு நாலு நாள் வலிக்கும் அப்புறம் சரி ஆகிரும்..?

என்றவாறு சட்டையை கழட்ட சொல்ல..

அவன் கழட்டியதும் குப்புறப்படுக்க வைத்து தேய்க்க ஆரம்பித்தாள்..

அதில் சிறிது வலி குறைந்தவன்.. அவளை வம்பிலுக்கும் பொருட்டு..

“பிரஸ்ட் நைட் செய்ய வேண்டிய வேலையா இது..?”

என்று கேட்க..

அதில் அவன் முதுகில் குத்தியவள்..

“என்ன பண்றது.. என் புருஷன் இப்படி”

என்று முணுமுணுக்க..

அது அவனின் காதில் துல்லியமாக விழுந்தது..

“ரொம்ப சலிச்சிக்குற பொண்டாட்டி.. உனக்கு மசாஜ் பண்ணவே தெரியல.. வா நான் சொல்லி தரேன்”

என்று அவளை இழுத்து அருகில் போட்டு சொல்லிக் கொடுக்க தொடங்கினான்.. அங்கே என்னத்தை சொல்லித்தந்தானோ.. அவள் எதைக் கற்றுக்கொண்டாளோ யான் அறியேன் பராபரமே..

********************************************

ஒரு வாரம் கழித்து

பெரியகுளம்.. ராஜேந்திர சோழீஸ்வரன் திருக்கோவில்..

மித்ராவிற்கு ஒரு வயதை தாண்டியதால்.. அவளிற்கு மொட்டை போட்டு காது குத்த அனைவரும் குல தெய்வம் கோவிலுக்கு வந்திருந்தனர்.. அப்படியே கார்த்தி முத்ராவின் திருமணம் முடிந்ததால் பொங்கலும் வைத்துக் கொண்டிருந்தனர்.

அனைவரும் இலையில் பொங்கலை வைத்து உண்ண… காயு தனக்கு முடியாமல் இருப்பதையும் பொருட்படுத்தாமல் செல்பி எடுக்க முயற்சி செய்தாள்.. வருண் தான்…

“உனக்கு எங்க எங்க எந்த பொசிஷன்ல எடுக்கணும்னு சொல்லு.. நான் எடுக்குறேன்”

என்று தாங்கிக்கொண்டிருந்தான்..

“ஆனாலும் மாப்பிள்ளை நீங்க எங்களுக்கு மேல செல்லம் குடுக்குறீங்க சொல்லிட்டேன்..

என்று அபிராமி தான் புலம்பினார்.

வருணின் மடியில் அமர வைத்து மித்ராவிற்கு காது குத்த.. ருத்ரா முகிலனையும் முத்ரா கார்த்தியையும் சிறிது பயத்தில் கெட்டியாக பிடித்துக் கொண்டனர். ஒரு வழியாக அனைத்தும் சுபமாக முடிய..

மித்து காது குத்தியதால் பயங்கரமாக கதறி அழுதாள்... இனிப்பு சாப்பிட்டும் அழுவதை நிறுத்தாமல் இருக்க..

கார்முகிலன் அவளை வாங்கி தன் தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்து கொஞ்சியவாறே வராக ஆற்றை நோக்கி சென்றான்..

அதே படித்துறையில் அமர்ந்து அழுத மகளை சமாதானம் செய்ய ஆற்றை பார்த்து கதை சொல்ல ஆரம்பித்தான்…

“அதோ அங்கே நடுல பாறை இருக்கு பாரு.. அங்க தான் உங்க அம்மாவ முதன் முதலா பார்த்தேன்..” என்று மகளின் முகத்தை பார்த்து விழி விரித்து குழந்தையாய் பேச..

அதற்கு என்ன புரிந்ததோ.. அம்மா என்பதை மட்டும் புரிந்து

“மா..”

என்றது..

“ஆமா டா.. உங்க அம்மா தான்.. நாம இங்க கொஞ்ச நேரம் உக்கருவோம்..”

என்று அமர..

அவன் கை அன்னிசையாய் போனை எடுத்து பாட்டை உயிர்ப்பித்தது..

************ஓகண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்..

காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்..

வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்..

புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்சே..******************

கைகளில் குறுக்காக படுத்திருந்த மகள் வேடிக்கை பார்த்தும் அழுத களைப்பிலும் பாட்டின் ஓசையிலும்  உறங்கியிருக்க.. தோளை எப்போழுதும் உணரும் மென்மையான ஸ்பரிசம் தீண்டியது..

ருத்ரா தான் அவன் மீது சாய்ந்து கடந்து வந்த காலத்தை சுகமாய் அசைப்போட்டுக் கொண்டிருந்தாள். அவர்களுக்கு நாம் தனிமை தந்து.. அனைவரும் இன்று போல் என்றும் மகிழ்ந்திருக்க வாழ்த்தி விடைப் பெறுவோமாக..

வராக நதி முற்றும்….!!!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

error: Content is protected !!