Varaaga nadhikaraiyoram 1

Varaaga nadhikaraiyoram 1

தேனி மாவட்டம், பெரியகுளம்.

புலர்ந்தும் புலராத அந்த அதிகாலை பொழுதில்… வானில் ஆதவனும்,

“இன்று உலா போகவேண்டுமா ? இன்னும் சிறிது நேரம் உறங்கினால் தான் என்ன ?”

என்று மனிதர்களை போல் எண்ணி சோம்பலாக வெளிவந்த அதிகாலை வேளை.

அங்குள்ள பழங்காலத்து மச்சு வீட்டின் வாசலில், சுடிதார் அணிந்த ஒரு இளம்பெண் வாயில் எதையோ முனுமுனுத்தவாறு கோலம் போட்டு கொண்டிருந்தாள்.

அவளது முகம் செல்ல கோபத்தை தத்தெடுத்திருந்தது. அதே நேரம் மொட்டைமாடியில் இருந்து ஒரு குரல்,

“ அக்கா இன்னும் எவ்ளோ நேரம் தான் கோலம் போடுவ மேல வா “

என்று அழைத்தது.

எதற்கு அழைக்கிறாள் என்று தெரியும் முன் அந்த வீட்டில் உள்ளவர்களை பற்றி ஒரு குட்டி அறிமுகம்.

பெரியகுளத்தில் சுமார் 5 ஏக்கர் விவசாய நிலத்திற்கு சொந்தக்காரரான கருணாகரன் – சீதா தம்பதியினருக்கு பிறந்த இரு செல்வங்கள் தான் மேற்கூறிய இருபெண்களும்.

மூத்தவள் ருத்ரா,

சிவில் இன்ஜினியரிங் முடித்து தந்தை வேலைக்கு அனுப்பாததால் தனது வீட்டிலேயே தன் கைவண்ணத்தை காண்பிக்கும் 24 வயது அழகுப்பாவை. ( அது என்ன என்பது கதையின் போக்கில் தெரியவரும் ) கோபக்காரியும் கூட.

இளையவள் முத்ரா,

மதுரை காமராஜ் பல்கலைகழகத்தில் சமீபத்தில் bsc யோகா முடித்த 22 வயது யோகமங்கை.

(அட அட அவளது பெற்றோர் தீர்கதரிசர்களாக இருந்திருப்பார்களோ… என்ன ஒரு பேர் பொருத்தம். சரி வாங்க போய் பார்ப்போம் எதற்கு அழைத்தாள் என்று.)

“ இதோ வந்துட்டேன்… “

என்று கூவியவாறு கோலடப்பாவை திண்ணைமேல் இருக்கும் ஜன்னலில் வைத்துவிட்டு மாடிக்கு சென்றாள் ருத்ரா.

அங்கு தனது சுடிதாரின் துப்பட்டாவை பரதநாட்டியம் ஆடினால் உடம்பில் சுற்றுவார்களே, அதுபோல் சுற்றிக்கொண்ட முத்ரா… தரையின் மீது யோகவுக்கேன்றே பிரத்யோகமாய் தயாரான பாயின்மேல் நின்று,

“ வா ருத்ரா… நீ வருவதற்குள் நான் ஐந்துமுறை சூரியநமஸ்காரம் செஞ்சிட்டேன், மீதி ஐந்தாவது கூடசெய், அப்புறம் போய் குளிக்கலாம் ”

என்றாள்.

ஆம்… அவள் யோகாகலையை எடுத்து படித்தாலும் படித்தாள், அதற்கு முதலில் பலிகடாவானது அவளது அக்கா ருத்ராவே…

இருவரும் வெவ்வேறு துருவம்,

ருத்ரா கோபக்காரி என்றால் முத்ரா புன்னகை மன்னி.

அவள் நன்கு படித்து கவர்ன்மன்ட் கல்லூரியில் இடம் கிடைத்த மாணவி என்றால்,

இவளோ படிப்பிற்கு டிம்மிக்கி கொடுக்க, பள்ளியின் யோகா கிளப்பில் மெம்பெர் ஆகி, எப்படியோ அதன் மீது ஆர்வம் பொங்கி, தட்டுதடுமாறி பன்னிரெண்டாம் வகுப்பை பாஸ் செய்து, கல்லூரியில் யோகா தான் எடுப்பேன் என்று பிடிவாதம் பிடித்து சேர்ந்த மாணவி.

கூடவே அழகுக்கலை கோர்ஸ் படித்துக்கொண்டிருக்கும் கட்டுமஸ்தான அழகி.

இருவரையும் இணைக்கும் ஒரே பாலம் பாசம் மட்டுமே.

ருத்ராவை ஆரோக்யமாகவும் அழகாகவும் ஆக்குவதோடு, பெற்றவர்கள் முன் அக்கா என்றழைத்து தனிமையில் வா, போ என்று பேசி பழகும் உயிர்தோழி முத்ரா.

ருத்ரா மட்டும் குறைந்தவளா ?… தங்கைக்காக தனக்கு பிடிக்காத யோகாவையும், அவள் சேர்ந்து செய்ய விரும்பினாள் என்று, பாதி ஓடி ஒளிந்து , மீதி மனதிற்குள் முனுமுனுத்துக்கொண்டே செய்யும் பாசப்பறவை.

அவளது கோபத்தை சம்பாதிக்காத ஒரே ஜீவன் என்றால் அது முத்ராவாக தான் இருக்கும். தங்கையை நினைத்தாலே முகம் கனிந்து உருகிவிடும் ருத்ராவிற்கு.

ருத்ராவும் அவளைப்போலவே துப்பட்டாவை உடம்பில் சுற்றிக்கொண்டு தனது நமஸ்காரத்தை சூரியனுக்கு செலுத்த தொடங்கினாள்…

அவளது மனமோ இதனை தொடங்கிய நாளுக்கு சோகத்தோடு பயணித்தது…

3 வருடங்களுக்கு முன்…

ருத்ரா கல்லூரியின் இரண்டாம் ஆண்டு படிக்கையில் தான் முத்ரா கல்லூரி சேர்ந்த புதிது…

இதுவரை யோகாவை படிப்பில் இருந்து காப்பாற்றும் தெய்வமாக கருதி வந்த முத்ராவிற்கு, அதன் அருமை பெருமை புரிய ஆரம்பித்தது தான் தாமதம்,

“ நாமளும் நீண்ட காலம் நோய் நொடியின்றி வாழனும் ருத்ரா… அதற்கு நாம இனிமேல் ஆசனம் செய்யலாம் “
என்று கூறி ருத்ராவின் அதிகாலை தூக்கத்தை பறித்துக்கொண்டாள்.

பாவம் ருத்ரா… தங்கையை கடிந்துகொள்ளவும் முடியாமல், இன்றுவரை மாட்டிகொண்டு முழிக்கிறாள்.

ஆனாலும் தங்கையால் ஆரோக்கியமும் அழகும் மெருகேறி, இருவருக்கும் மருத்துவசெலவு என்ற ஒன்று இல்லாமலே போனது.

அதை எண்ணியபடியே புன்னகையோடு ருத்ரா தனது இன்றைய சூரியநமஸ்காரத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தாள்.

error: Content is protected !!