Varaaga nathikaraiyoram 7

வராக நதிக்கரையோரம் 

அத்தியாயம் 7

காரில் இருந்து இறங்கிய மாணிக்கவேல் மற்றும் அவரது குடும்பத்தினரை கருணாகரன் வண்டியை நிறுத்தி விட்டு வந்து வரவேற்றார். அனைவரும் அந்த ஊரிலேயே பெரிதாக இருந்த… அந்த பழங்கால வீட்டையும் அதை சுற்றியுள்ள பசுமையான தோட்டத்தையும் ரசித்துக்கொண்டே சென்றனர்… கார்முகிலனை தவிர…

அவன் தான் பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியின் முதலாளி ஆச்சே… இது போல் பல மடங்கு பெரிதாக, ஆடம்பரமாக எத்தனை  கட்டடம் கட்டியிருப்பானோ… சுற்றுப்புறம் அவன் கவனத்தில் பதியவில்லை.

அனைவரும் உள்ளே வரவும் சீதாவும் வாயிலில் வந்து வரவேற்றார். பின்னர் வீட்டினுள் நுழைந்து, சோபாவில் அமர்ந்து பழங்கதை பேசத்தொடங்கினர். சீதாவும் உள்ளே சென்றுவிட்டார்.

இவ்வளவு நேரம் தெரியாத சட்டையின் கசங்கலும் மணலும் இப்போது கார்முகிலனிற்கு தெரிந்தது… அவனால் அங்கு இருக்க முடியவில்லை… உடனே மாற்ற வேண்டும் போல் தோன்றியது.

இதை எப்படி சொல்வது என்று அவனிற்கு தெரியவும் இல்லை.

“பேசாமல் இன்னொரு நாள் வந்திருக்கலாம்… அப்பா பார்த்ததும் சரி என்றது தப்பாப்போச்சி… இப்போ சாப்பிடாம கிளம்ப முடியாதே…”

என்று சட்டையை பார்க்க…

முகிலனின் முகமாற்றத்தைப் பார்த்தே கருணாகரன் அவனது எண்ணத்தை அறிந்து கொண்டார்.

அதனால் அவனிடம் தம்பி என்னாச்சு…

“உடை மாத்தனுமா ? இங்க நீங்க உடுத்துறதுலாம் இருக்காது… வேஷ்டி சட்டைதான் இருக்கும்.. புதுசு இருக்குது தம்பி எடுத்துத் தரவா…?

என்று வினவினார்.

அவர் கேட்டதும் “இல்ல வேண்டாம்…”

என்று முகிலன் சொல்லும் முன்பே… கார்த்தி

“இல்ல அங்கிள் வேணாம்… அண்ணா எப்போவும் கார்ல வச்சிருப்பாங்க…”  

என்று கூறியவன்… பின் தன் தமையனை பார்த்து…                          

“இருங்க அண்ணா நான் போய் எடுத்துட்டு வரேன்…”

என்றவாறு வெளியே சென்றான்.

அவன் சென்ற பிறகு மாடியில் இருந்து சாம்பிராணிக்காக கீழே வந்த முத்ரா… வீட்டில் இருந்தவர்களை பார்த்ததும் மீண்டும் அந்நாளில் மூன்றாம் முறையாக அதிர்ந்தாள்.

“இன்று இந்த வீட்டுக்கு என்ன தலையெழுத்தோ… காலையில் இருந்து தெரியாதவங்கலாம் வந்துட்டு போறாங்களே…”

என்றவாறு கண்களை சுழல விட…  ஓரமாக சற்று தள்ளி இருந்த சோபாவில் முகிலனை பார்த்தாள். அப்போது தான் இவளிற்கு தனது அக்காவை காப்பாற்றிய குடும்பம் இது என்றே தெரிந்தது… தெரிந்ததும் தனது தலையில் மானசீகமாக கொட்டியவள்…. அவர்களை பார்க்கவும், அபிராமி இவளை பார்த்து புன்னகைத்தார். முத்ராவும் புன்னகைத்துக்கொண்டே தாயிடம் சாம்பிராணி வாங்க அடுப்படிக்கு சென்றாள்.

முத்ரா உள்ளே வந்ததும் சீதா…

“முத்ரா… சாம்பிராணி பொடி தீர்ந்திருச்சிடி.. இப்போ தான் நியாபகம் வருது… உடனே செய்யவும் முடியாது… வாங்கவும் முடியாது… அதனால தோட்டத்துல இருக்குற காய்ந்து போன மருதாணி விதையை பறிச்சிட்டு வா சீக்கிரம்… அதுக்குள்ள உன் அக்கா தலைய காயவச்சிற போறா… அதை வச்சி இன்று சமாளிடி…”

என்றார்.

எப்போதும் சாம்பிராணி பொடி தீர்ந்தால் இப்படி செய்வது பழக்கம் தான் என்பதால் முத்ராவும்

“சரி.. மா”

என்று கூறி பின்வாசல் வழியாக தோட்டத்திற்கு சென்றாள்.

ஹாலில் முகிலன் சோபாவில் இருந்து எழுந்திக்கவே… கருணாகரனும் எழுந்தவர்…

“கீழ இருக்குற அறை எல்லாம் உங்களுக்கு வசதியா இருக்காது தம்பி… பாத்ரூம் போகணும்னா கொல்லைபுறம் தான் போகணும்… ஆனா மேல  2 அறை இருக்கு… எங்க 2 பொண்ணுக்கும்… அவங்க ஒரே அறையில் தான் இருப்பாங்க.

நீங்க இன்னொரு அறையை பயன்படுத்திக்கோங்க… அதுல எல்லா வசதியும் இருக்கும்”

என்று கூறி அவனை அழைத்து செல்ல… அவனுக்கு தேவையான ஆடையும் வந்து சேர்ந்தது கார்த்தியின் உதவியில்.

அந்த நேரம் சரியாக வாசலில் கருணாகரனின் நண்பர்கள் சிலர் ருத்ராவை குறித்து கேள்விப்பட்டு விசாரித்து செல்ல வந்தனர். அவர்களை பார்த்தவர்…

“நீங்க போங்க தம்பி.. மாடியில் வலதுபுற அறை…”

என்று கூறி அவனை அனுப்பி வைத்தார். பின்பு மாணிக்கவேல் மற்றும் அபிராமியையும் அறிமுகப்படுத்தி பேச ஆரம்பித்தார்.

இங்கு கார்த்தியும் காயுவும் தான் போர் அடித்து அமர்ந்திருந்தனர்.

“அண்ணா.. இதுக்கு மேல என்னால முடியாது… நான் வெளிய தோட்டத்துல நிறைய பூச்செடிய பார்த்தேன்… அது பக்கத்துல போய் இந்த அங்கிள் கிட்ட பர்மிசன் வாங்கி  செல்பி எடுக்க போறேன்… டாடா..”

என்றவாறு எழுந்து போக பார்த்தாள்…

“ஏய்.. இருடி.. நானும் வரேன்.. நீ செல்பி எடு நான் சுத்தி பார்க்கிறேன்..” என்றவாறே அவள் கையை பிடித்தான் கார்த்தி.

“சரி…அப்போ நீயே கேளு.. அந்த அங்கிள் கிட்ட..”

என்று கூறி சட்டமாக காயு அமரவும்.. அவளை முறைத்தவன்.. பின்பு எழுந்து கருணாகரனிடம் சென்று..

“அங்கிள்… என் தங்கச்சிக்கு உங்க தோட்டம் ரொம்ப பிடிச்சிருக்காம்… அங்க போய் பார்க்கணும்னு சொல்றா.. நாங்க அங்க போய் சுத்தி பார்க்கலாமா..”

என்று கேட்டான்.

“இதுக்கெல்லாம் கேட்கணுமா தம்பி… நீங்க போய் பாருங்க”

என்று கருணாகரனும் அனுமதி தந்தார்.

“தான்க்ஸ் அங்கிள்…”

என்றவன்.. அங்கே தன்னை முறைத்து கொண்டிருக்கும் தங்கையை கண்டு குஷியாகி..

“என்ன காயு…? அங்கிள் தான் பர்மிஷன் குடுத்தாச்சி ல இன்னும் ஏன் இங்கேயே இருக்க வா…”

என்று காயுவை முன்னால் செல்ல விட்டு வழக்கம் போல் பின்தொடர்ந்தான்.

பெரியவர்கள் கண்ணை விட்டு மறைந்ததும்… காயு அவனிடம் கத்த தொடங்கினாள்…

“இப்படி தான் என் பெயரை சொல்லி கேட்பியா… இது எனக்கு கேட்க தெரியாது பாரு.. நல்ல வேலை நான் செல்பி எடுக்க னு சொன்னதை சொல்லாம விட்ட.. இல்லனா அம்மா என்ன முறைச்சே போகவிடாம பண்ணியிருப்பாங்க… அதனால இப்போ உன்னை சும்மா விடுறேன்..இல்லனா…”

என்று மிரட்டி கொண்டே திரும்ப…

கார்த்தியோ அவளை கவனிக்காமல் காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு தோட்டத்தை சுற்றி நடந்து கொண்டிருந்தான்.

அதை பார்த்ததும் காண்டாகிய காயு…

“இவனெல்லாம் என்கூட வந்து பிறக்கலைனு யாரு அழுதா…

என்று கூறி தலையில் அடித்தாள்.. அப்போது அவள் மனசாட்சி அவள் மண்டையை தட்டி…

“அவன் கூட தான்மா நீ வந்து பிறந்திருக்க… அவன் ஒன்னும் உன்கூட பிறக்கலை”

என்று வாரியது.

அதை அலட்சியம் செய்தவள்..

“எல்லாம் ஒன்னு தான்..”

என்றவாறு செவ்வனே தான் வந்த வேலையை செய்ய ஆரம்பித்தாள்.

கையில் போனை வைத்து பாட்டு கேட்டுக்கொண்டே நடந்துகொண்டிருந்த கார்த்தியின் கையின் மேல் திடிரென்று ஒரு கம்பு வந்து விழுந்தது.

அது விழும் என்று எதிர்பார்க்காததால் அவன் லேசாக பிடித்து கொண்டிருந்த போனை தவற விட… பாவம்.. காலையில் தப்பிய அதற்கு ஆயுள் மிக குறைவோ… ஹெட்போனோடு கீழே விழுந்து…. விழுந்த வேகத்தில் சுவிட்ச் ஆப் ஆகியது. அதை எடுத்து ஆராய்ந்தவன்…

“யாருடா இந்த வேலைய செஞ்சது…!!!

என்று சுற்றும் முற்றும் பார்க்க… அவனுக்கு இடப்புறம், குனிந்து நீலநிற சுடிதார் கீழே இருந்து எதையோ அள்ளி துப்பட்டாவில் போட்டு கொண்டிருந்தது.

அவளை நெருங்கியவன்…

“உனக்கு என் போன் மேல என்ன தான் கோபம்.. எப்போபாரு இதை தள்ளி விட்டுட்டே இருக்க…”

என்று போனை நீட்டி காமித்தவாறு கோபத்தில் பொங்கிவிட்டான்.

அப்போது தான் நிமிர்ந்து உள்ளே போக பார்த்த முத்ரா… தன் முன் ஒரு வாலிபன் வந்து கோபமாக போனை பற்றி கேட்கவும்… ஒன்னும் புரியாமல் முழித்தவாறு நின்றாள்.

                           -******-

மாடிக்கு சென்ற கார்முகிலன்..

“வலதுபுற அறை தான சொன்னாங்க…”

என்று எண்ணி அந்த பழங்கால கதவை திறந்து உள்ளே செல்ல…

அங்கு தலையை குனிந்து… முன்புறம் முடியை போட்டு தலைத்துவட்டி கொண்டிருந்த ருத்ராவையும்..  அவ்வாறு முன்னால் போட்டதால் தெரிந்த அவளது வெண்மையான சங்கு கழுத்தோடு கூடிய முதுகையும் கண்டு லேசாக அதிர்ந்தான்.

பின் சடுதியில் தன்னை மீட்டவன்… அவளறியாமல் செல்ல பார்க்க.. அதற்குள் முடியை பின்னால் போட்டு நிமிர்ந்த ருத்ரா… தன் முன் நிற்கும் முகிலனை நம்ப முடியாமல் பார்த்தாள்.

அவளிற்கு தான் இவர்கள் வீட்டிற்கு வந்ததே தெரியாதே…

“நீங்க எப்படி…? யாரு சொன்னா..? எப்படி வந்தீங்க…?”    

என்று பதட்டத்தில் திக்கி திணற…

முகிலனிற்கு புன்னகை இதோ வந்து விடுவேன் என்றது… அதை வாயிலேயே அடக்கியவன்.

“அதை கீழ போய் தெரிஞ்சிக்கோ… இப்போ நான் ட்ரெஸ் மாத்தனும்.. நீ வெளிய போறியா…”

என்றான் தில்லாக.

அதை கேட்டதும் அவள் எப்படி உணர்ந்தாள் என்றே தெரியவில்லை. ஆனால் தன் வீட்டிற்க்கு வந்து தன்னையே வெளியே போக சொல்லும் அவனது தைரியம் அவளை கட்டிப்போட்டதோ…

உடனே சுதாரித்த அவள்…

“இல்ல.. இது இப்போ எங்க ரூம்.. நீங்க பக்கத்து ரூம் யூஸ் பண்ணிக்கோங்க…” என்று மட்டும் கூறினாள்.

இவ்வளவு நேரம் ருத்ராவை மட்டுமே கண்டதால் வேறு எதிலும் செல்லாத அவனின் கவனம்… இப்போது அறையின் அலங்காரத்தை பார்த்ததும் இனிய ஆச்சரியம் மற்றும் இதை கிஞ்சித்தும் எதிர்பார்க்காத பிரமிப்பு உண்டானது.

என்னவேனில்… பழங்கால கதவை பார்த்ததும் உள்ளே சிமென்ட் தரையும் சுண்ணாம்பு சுவரையும் எதிர்பார்த்து வந்தவனுக்கு…

அவ்வாறு இல்லாமல் ஆகாய நீல வண்ணத்தில் பெயிண்ட் அடித்த சுவரும், கீழே வெண்மையான டையிஸ்சும், மாடர்ன் கட்டிலோடு கூடிய மெத்தையும், கூடவே கார்பெட், டிரெஸ்ஸிங் டேபிள், எல்இடி தொலைக்காட்சி, அலங்கார பொருட்கள்… என அனைத்தும் ஒரு ஹைடெக் மனிதர்கள் வாழும் வசதியுடன் இருந்தது.

சுருங்க சொன்னால் அவனது அறைக்கு குறையாத அனைத்து வசதியும் இருந்தது… ஏசியை தவிர…

அதே ஆச்சரியத்தோடு ருத்ராவிடம் திரும்பியவன்…

“இதெல்லாம் எப்படி…? அதுவும் பழமையான வீட்டுல மாடர்ன் ரூம்… யாரோட யோசனை இது…?”

என்று வினவினான்.

அவன் அறையை ரசனையோடு பார்ப்பதை வைத்தே அடுத்து இதை தான் கேட்பான் என்று எதிர்பார்த்த ருத்ரா…

அவன் கேட்டதும் சிறு புன்னகையோடு,

“நான் படித்தது சிவில்… அப்பா வேலைக்கு போகவிடல… சோ.. என் படிப்பு வீணாக கூடாதுனு என்வீட்டிலேயே அத யூஸ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்… அவ்வளவு தான்”

என்றாள்.

“அவன் தன் கேள்விக்கு பதில் சொல்லாததால்… நாம் ஏன் இவனுக்கு சொல்லணும்..?”

என்றெல்லாம் அவளிற்கு தோன்றவே இல்லை.

“உங்க அப்பா அம்மா ஒன்னும் சொல்லலையா இந்த மாற்றத்துக்கு”

என்று முகிலன் கேட்க…

“இல்ல.. வேலைக்கு போக வேண்டாம்னு சொன்னதும் வீட்டையே மாற்ற கேட்டேன்… கீழ மட்டும் மாற்றாம மேல என்ன வேணும்னாலும் பண்ணிக்கோனு சொல்லிட்டாங்க…”

“இது எங்க 2 பேருக்கு மட்டும் பொதுவான பகுதி… இங்க  வெளியாளுங்க யாரும் வர மாட்டங்க… முதன் முதலா வந்ததும் நீங்க தான்… என்னை காப்பாத்துனதால அப்பா உங்களை விட்ருக்கலாம்…”

என்று நீண்ட விளக்கம் தந்து முடித்தாள். அவளிற்கு தெரிந்தது தன் தந்தையின் சம்மதம் இல்லாமல் இவனால் மேலே வந்திருக்க முடியாது என…

அவனும் அவள் கண்டுபிடித்து விட்டாள் என்று உணர்ந்து,

“சரி… பட் உங்க அப்பா இந்த ரூம்மை தான் யூஸ் பண்ண சொன்னாங்க… இப்போ இது உங்க ரூம்னு நீ சொல்ற…”

என்றான் கார்முகிலன்.

அவனுக்கு தெரிகிறது… தான் இவளிடம் அதிகம் பேசுகிறோம் என்று… ஆனாலும் நிறுத்த முடியவில்லை என்பது தான் உண்மை.

ருத்ராவும்

“இது என் தங்கச்சி விருப்பத்துல உருவானது… இன்னொரு அறை என்னோட விருப்பத்துல உருவானது… இரண்டு பேரும் ஒன்னா தான் இருப்போம்… சோ… மாசம் மாசம் அவங்கவங்களுக்கு பிடிச்ச ரூம் மாறிட்டே இருப்போம். இந்த மாசம் நேத்து ஆரம்பித்ததால், இது தான் இப்போ எங்க ரூம்… அப்பா மறந்திருப்பார்…”

“நீங்க வாங்க… அடுத்த ரூம்க்கு போகலாம்…”

என்று கூறி அவனை இவளது அறைக்கு அழைத்து சென்றாள்.

அவனை ரூம் வாசலில் விட்டவள்… தன் ரூமிற்கு செல்ல திரும்ப…

ஒரு நிமிஷம் என்று அவளை நிறுத்திய முகிலன்…

“லாஸ்ட் கொஸ்டின்…”

என்று விட்டு…

“ஏன் அந்த ரூம்ல ஏசி இல்லாம பேன் மட்டும் மாட்டியிருக்கிங்க…?”

என்று வினவ

“ம்ம்ம்…” என்று யோசித்தவள்,

“சுத்தி இயற்கையான காற்று வரும்போது செயற்கை எதுக்கு… அதுவும் இல்லாம என்ன பொருத்தவரைக்கும் ஏசில நாம இருக்குறதும்… காய்கறிலாம் குளிர்சாதனப்பெட்டில இருக்குறதும் ஒன்னு தான்… ஈரப்பதத்தை உறிஞ்சி ஒரு சத்தும் இல்லாம பண்ணிவிடும்…”

என்று கூறி மேலே நிற்காமல் சென்றுவிட்டாள்.

                         –*********-

கீழே தோட்டத்தில் மருதாணி விதை உயரமாக இருந்ததால் எப்போதும் தோட்டத்தில் இருக்கும் கம்பை வைத்து பறித்துவிட்டு… வழக்கமாக கம்பை போடுவது போல் போட்டு செல்ல பார்த்த முத்ராவின் முன்பு தான் கார்த்தி கோபமாக நின்றுக்கொண்டிருந்தான்.

முத்ராவிற்கு முதலில் தோன்றிய கேள்வி,

“இவன் போனை நான் எப்போ தட்டி விட்டேன்…?

என்பது தான்.

முத்ராவை பொறுத்தவரை படித்துறையில் வைத்து தான் கார்த்தியை முதலில் பார்த்தது… பின்பு அவளுக்கு எப்படி தெரியும். அவளிற்கு தன் அக்காவை காப்பாற்றியவரின் தம்பி என்ற அளவில் தான் கார்த்தியை குறித்து தெரியும்.

முத்ரா கார்த்தியையே பார்த்துக்கொண்டிருக்க கார்த்தியும் விடாமல்…

“ஹலோ மேடம்… என்ன என் முகத்தையே பார்த்துட்டு இருக்கீங்க…? கம்பு போடுறதுக்கு முன்னாடி அக்கம் பக்கம் பார்த்து போடமாட்டிங்களா…?

என்று வறுத்து எடுத்தான்.

அவ்வளவு தான் முத்ராவிற்கே லேசாக கோபம் வந்தது… அவளும்

“ஏன் மிஸ்டர் நீங்க பார்த்து வர மாட்டிங்களா… தோட்டத்துக்கு போற வழி அங்க இருக்கு… நீங்க ஏன் பின்வாசலுக்கு போற வழியில வந்தீங்க…?”

என்று கிடுக்கிப்பிடி போட்டாள். அப்போது தான் அவனும் பார்த்தான்… தோட்டத்தில் நடைப்பாதைக்காக போடப்பட்ட கற்கள் எதிர்புறத்தில் செல்ல.. அவன் அதை கவனிக்காமல் மணலில் நடந்து இங்கு வந்துவிட்டான்.

அதற்கு இவன் பதில் பேச போகும் சமயம்.. அண்ணனை தேடி அங்கே வந்த காயு… அவனை பார்த்ததும்…

“அண்ணா அப்பா கூப்பிட்டாங்க… உனக்கு போன் பண்ணுனா போகலயாமே…”

என்றவாறு வந்தாள்.

அப்போது தான் அருகில் நிற்கும் முத்ராவை பார்த்தவள்…

“ஹாய்.. ஐ அம் கார்த்திகாயினி… ஷார்ட் டா காயு னு கூப்பிடுவாங்க…”

என்று தன்னை அறிமுகப்படுத்தி கையை குலுக்க நீட்டினாள்.

முத்ராவும் அவளிடம்

“ஹாய்.. ஐ அம் முத்ரா…”

என்று கூறி கைகுலுக்கியவள்… பின்னர்,

“சாரி… எங்க அம்மா சீக்கிரம் வர சொன்னாங்க… நான் போயிட்டு வரேன்”

என்றவாறு கார்த்தியை கண்டுகொள்ளாமல் ஓடிவிட்டாள்.

கார்த்தியோ

“நாம தப்பிச்சோமா இல்ல அவ தப்பிச்சிட்டாளா”

என்று குழம்பி கொண்டிருந்தான்.

“சோ ஸ்வீட் நேம்ல ணா…”

என்று கார்த்தியிடம் கேட்ட காயு…

“வா எனக்கு பசிக்குது”

என்றவாறு அவனின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றாள்.

                         -*************-

மேலே ருத்ரா சொன்னதை அசை போட்டு கொண்டே உடைமாற்றிய முகிலன்… அந்த அறையையும் சுற்றிப் பார்த்தான்.

வலதுபுற அறை நீலநிறம் என்றால் இந்த அறையோ பிங்க் மற்றும் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டு இருந்தது…

முற்றிலும் வேறு டிசைனில் கண்ணோடு சேர்த்து கருத்தையும் கவர்ந்தது.

ஒரே வித்தியாசம் ஓரத்தில் நாற்காலி, கம்ப்யூட்டர்.. அதன் அருகே கட்டிட டிசைன் சம்பதமான பேப்பர் மற்றும் புத்தகங்கள் இருந்தன.

அறையின் சுவற்றில் சில குடும்ப படங்களும்… பல அக்கா தங்கையின் படங்களும் இருந்தன…

கடைசியில் அவன் கம்ப்யூட்டரை நெருங்கி அதில் உள்ள படங்களை பார்க்க… ஒவ்வொன்றும் தனித்தன்மையுடன் திகழ்ந்தது.

“இவ்வளவு திறமை வைத்து விட்டில் இருக்க முடியுமா…?”

என்றவாறு மேலும் ஆராய… அவன் கையில் சிக்கியது “விகாஷினி கன்ஸ்ட்ரக்ஷன்”

என்று பெயரிட்ட காகிதம்.

அதை பார்த்ததும் இத்தனை நேரம் இருந்த இதமான மனநிலையை தொலைத்து இரும்பென இறுகி நின்றான் கார்முகிலன்.

 

error: Content is protected !!