Varaaga26
Varaaga26
திருமணம் நல்லபடியாக முடிந்ததும் அனைவரும் மணமக்களை வாழ்த்த மேடையேற… ஏற்கனவே இவர்கள் கல்லூரியின் லவ் பேர்ட்ஸ் என்பதால் கேலி கிண்டலுக்கு அளவில்லாமல் தான் இருந்தது.
அந்த நேரம் பார்த்து முகிலன் ருத்ராவுடன் மேடையேற அவனையும் கலாட்டா செய்ய பிடித்துக் கொண்டார்கள் நண்பர்கள். சொல்லாமல் கொள்ளாமல் கல்யாணம் செய்தான் அல்லவா.. ? நன்றாக அனுபவிக்கட்டும்.. நாம் சற்று கீழே நடப்பதை கவனிப்போம்..
அண்ணன் மேடையேறியதை பார்த்த கார்த்தி.. பெற்றோரையும் அழைத்து செல்ல தேட, அவர்கள் கருணாகரன் – சீதா தம்பதியினருடன் உரையாடிக் கொண்டிருந்தனர்.. கூடவே இன்னும் சில பெரியவர்களும்.
சற்றுத்தள்ளி முத்ரா கலக்கம் சுமந்த முகத்தோடு சீதாவின் பின் நின்று அவர்கள் பேசுவதை கவனிப்பது தெரிய.. என்னவோ என்று எண்ணி அருகே விரைந்தான் கார்த்தி.
“என்னை மன்னிச்சிருங்க.. தெய்வம் கூறியதை வைத்து நான் பேசியது தப்பு தான்..”
என்று சீதாவின் அருகில் அமர்ந்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருந்தார் கல்யாணி… ( நியாபகம் வருதே.. நியாபகம் வருதே.. என்ன யாருக்கும் நியாபகம் வரலையா.. நோ ப்ரோப்ளம்.. நானே சொல்றேன்.. வராக நதி இரண்டாம் அத்தியாயத்தில் வந்த தெய்வத்தின் தோழி )
அருகில் அமர்ந்திருந்த ராஜசேகரின் முகமோ மனைவி மற்றும் மகன் ஆகாஷை எரிச்சலுடன் தழுவியது. பின்னே மகன் தானே பேசி பேசியே தாயை கரையாய் கரைத்திருந்தான்.
பிரகாஷோ தூரத்தில் முகிலன் அருகில் நெருங்கி நின்று மணமக்களோடு போட்டோவிற்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்த ருத்ராவை ஏக்கமா.. ? ஏமாற்றமா..? என்று தெரியாத உணர்வில் பார்த்துக் கொண்டிருந்தான்.
பின் சட்டென்று சுதாரித்து… எனக்கானவள் எங்கேயாவது எனக்காக பிறந்திருப்பாள்.. அவ என்கிட்ட வரும் வரைக்கும் அவளுக்காக காத்திருப்பேன்.. என்று எண்ணிக் கொண்டான்.
கார்த்தி வந்து.. தன் பெற்றோரின் பின் நின்றுக் கொண்டான்.. அதாவது முத்ராவின் நேர் எதிர்.. அவள் முகத்தை தான் குழப்பத்தோடு நோக்கினான்.. என்னவானது இவளிற்கு என்று..
சீதா..
“அதெல்லாம் பரவால்ல.. விட்டுருங்க..”
என்று கல்யாணியின் கைப்பற்றிக் கூற..
“உங்களுக்கு எங்க மேல வருத்தம் இல்லையென்றால் திரும்ப நாம் சம்பந்தம் பண்ணுவோமே.. உங்க மூத்த பெண்ணிற்கு நல்ல இடத்தில் கல்யாணம் முடிந்ததுன்னு கேள்விப்பட்டோம்..”
என்று தன் மகனின் விருப்பத்தை தன் விருப்பமாக மாற்றிக் கூறினார் அந்தத்தாய்.
எது வரக்கூடாது என்று இவ்வளவு நேரம் மனக்கலக்கத்தோடு முத்ரா பார்த்திருந்தாளோ அது வந்தே விட்டது…
அவர்கள் பேசுவது ஏன் என்றே தெரியாமல் பிடிக்காமல் போக.. அங்கிருந்து நகர பார்க்க..
எதிரில் அடிப்பட்ட தோற்றத்தில் கார்த்தி இவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனைப் கண்டதும் துக்கம் அலையலையாய் மனதில் பொங்கி.. அவனின் மீதான காதலை வலியுடன் முத்ராவிற்கு பறைச்சாற்றியது.
காயு தன் அம்மாவுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்ததால் இந்த நாடகத்தை கவனிக்கவில்லை.
விழிநீர் இமைதாண்ட துடிக்க.. யாரின் பார்வையையும் ஈர்க்காமல் அந்த இடத்தை விட்டு சென்றிருந்தாள் முத்ரா..
அவளின் பார்வையும் கண்ணீரும் அவளை மட்டுமே கண்ணுற்ற கார்த்தியின் கண்களிடம் இருந்து தப்பவில்லை. தன் மீதான அவளின் நேசத்தை வார்த்தைகள் இன்றி தெள்ளத்தெளிவாக உணர்த்தி விட்டாள் முத்ரா.. அவள் பின்னால் போக உடம்பின் ஒவ்வொரு அணுவும் துடித்தது. ஆனால் சீதாவின் பதில் முக்கியமென்பதால்.. அனைத்து மத கடவுளையும் துணைக்கழைத்து அங்கேயே நின்றிருந்தான்.
“இல்ல.. வந்து” என்று சீதா தயங்க..
கருணாகரன் தான்..
“இன்னும் இரண்டு வருஷம் கழித்து தான் சின்ன பொண்ணுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்திருக்கோம்.. அதனால.. நீங்க தப்பா நினைக்காம வேற நல்ல பொண்ணா பார்த்து தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைங்க.. அடுத்து ஒரு பையனுக்கும் பார்க்கணும் இல்லையா.. ?”
என்றார் நயமாக.
அதற்கு மறுமொழி கூறுவதற்குள் கல்யாணியை தேடி வந்த ரிஷியின் தந்தை..
“என்னமா கல்யாணி.. இங்க தான் இருக்கியா.. அங்க உன் அண்ணி உன்னை தேடுறா பாரு..”
என்று தன் ஒன்று விட்ட தங்கையை மனைவியிடம் அனுப்பியவர்.. மச்சானோடும் மருமகனோடும் கைக்கோர்த்து.. பொதுவாக சிறிது நேரம் பேசி அந்த இடத்தை விட்டு அவர்களையும் அழைத்துக் கொண்டு அகன்றார்.
கார்த்தி வந்த வேலையை மறந்தே விட்டான். இக்கட்டான சூழலில் காதலை உணர்ந்த தன்னை நினைத்து வருந்துவதா.. ? இல்லை காதலியின் திருமணப் பேச்சு தற்காலிகமான தடை ஏற்ப்பட்டதற்கு சந்தோஷப்படுவதா..? என்றே தெரியாத நிலை.
நண்பர்களை பந்திக்கு பற்றிவிட்டு.. ரிஷியும் முகிலனும் ஏதோ பேச.. ருத்ரா அமைதியாக அவர்களை வேடிக்கை பார்த்தாள்.. ஆனால் விகாஷினி சும்மா இருப்பாளா.. ? என்ன பண்ணலாம் என்று யோசித்தவாறே ருத்ராவையும் முகிலனையும் நோட்டமிட்டவள்.. பின் ஒரு முடிவெடுத்தவளாக ருத்ராவிடம்
“ருத்ரா.. முகில் உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணிட்டானா.. ?”
என்று கேட்டாள்.
இப்பொழுதெல்லாம் தாயின் தடைகள் அகன்றதால் அவளின் குறும்புத்தனம் நாளுக்கு நாள் அதிகமாகியது என்று தான் சொல்ல வேண்டும்.
“விகாஷி”
என்று ரிஷி அடக்க பார்க்க.. முகிலன் அவளை முறைத்தான். ருத்ரா தான் ஒன்றும் புரியாமல் குழப்பமாக மூவரையும் பார்த்தாள்.
“உனக்கு புரியலையா… இரு இரு இப்போ புரியும் பாரு..”
என்று கூறிய விகாஷினி.. தன் அருகில் இருந்த ரிஷியின் கையைப் பிடித்து..
“டேய் எனக்கு கல்யாணம் ஆகிருச்சி டா.. அதுவும் இப்போ நானும் காதலிக்குறேன் டா.. அது கூட தெரியாம அவளை நான் கல்யாணம் பண்ணிட்டேன்…”
என்று அச்சுப்பிசகாமல் மருத்துவமனையில் முகிலன் பேசிய டையலாக்கை விகாஷினி எடுத்து விட..
ருத்ராவின் முகம் ருத்ரனை விட ஜெகஜோதியாய் பிரகாசித்தது மகிழ்ச்சியில்.
முகிலனோ.. விகாஷினியை மனதிற்குள் இவளை.. என்று திட்டி ருத்ராவை பார்க்க..
அவள் விகாஷினியின் பாவனையை பார்த்து புன்னகைக்கவும்..
“ருத்.. நான் இன்றைக்கு சொல்லலாம்னு பிளான்லாம் வச்சிருந்தேன்.. இவ உள்ள புகுந்து கெடுத்துட்டா..”
என்று நெற்றியோரம் ஒற்றை விரலால் தேய்த்துக் கொண்டே கூறினான் முகிலன். சிறிது அசடும் வழிந்ததோ..
ஆனாலும் விகாஷினி அடங்காமல்..
“ருத் ஆஆஆ.. நடக்கட்டும் நடக்கட்டும்..”
என்றவள்.
“ஆமா ருத்.. உன் ரியாக்ஷன் பார்த்தா நீயும் விரும்புற மாதிரி தான் இருக்கு.. எங்க நீ முகில் கிட்ட ஐ லவ் யூ சொல்லு பார்ப்போம்..”
என்று அவளை பிடிக்க..
“அவர் சொன்ன பிறகு சொல்லலாம்னு நினைச்சேன்..”
என்று சிறுகுரலில் கூறி அவளிடம் இருந்து தப்பித்து ஓடிவிட்டாள்.
அதை மயக்கத்தோடு பார்த்த முகிலனின் மயக்கத்தை அவன் தோளில் அடித்துக் கலைத்த விகாஷினி..
“நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் கீழ போய் ரொமான்ஸ் பண்ணுறீங்களா.. இங்க நாங்க தான் ஹீரோ ஹீரோயின்”
என்று நக்கலடிக்க..
அவளை பார்த்து தலையில் அடித்தவாறே இறங்கி சென்றான் கார்முகிலன்.
அவன் போனதும் ரிஷியின் புறம் திரும்பி.. எப்புடி என்பது போல் புருவம் உயர்த்த.. அவனோ கலக்கிட்ட போ.. சூப்பர் என்று விரலால் அபிநயம் பிடித்தான். அதனை காமிரா அழகாய் உள்வாங்கியது.
********************************************************
அந்த டஸ்டர் கார் தொண்டாமுத்தூர் சாலையில் சென்றுக் கொண்டிருந்தது. இரு பக்கமும் மரங்கள் சூழ்ந்திருக்க பச்சை கம்பளம் போர்த்தி அவ்வழியே செல்வோரை வரவேற்றது.
நேரம் மாலை ஐந்தரை… காரிற்குள் இருக்கும் முகிலனும் ருத்ராவும் மனதின் மௌனமொழியோடும்.. கண்களின் காதல் பாஷையோடும் வழிநெடுக சலிக்காமல் பயணிக்க.. சுமார் அரை மணி நேரத்தில் முகிலனின் தாய்வழி சொந்தத்தின் பூர்விக வீட்டை அடைந்தனர்.
அந்த பழங்காலத்து வீட்டின் கம்பீரத்தில் தன்னை மறந்து ருத்ராவும் இறங்கினாள். மூளையோ சிவில் என்ஜினீயரிங் வேலையை கச்சிதமாக செய்தது.. எப்படி கட்டியிருக்கிறார்கள் என..
திருமண மண்டபத்தில் இருந்து அனைவரும் கிளம்ப.. முகிலன் ஏற்கனவே நினைத்திருந்த பிளானை செயல்படுத்தினான். ருத்ராவை காரில் அமர சொன்னவன்..
வீட்டினரிடம் தொண்டாமுத்தூரில் இடம் பார்க்கும் வேலை ஒன்று இருப்பதாகவும் அதனை மாலை பார்த்துவிட்டு அப்படியே தாத்தாவின் வீட்டில் தங்கி நாளை வருவதாகவும் சொன்னான்.
அதைக்கேட்டு விகாஷினி..
“ஓஹ் ஓஹ்..”
என்று ரிஷியிடம் ராகம் இழுக்க..
“இன்று நமக்கும் ஓஹ் ஓஹ் தான்…”
என்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு கூறி அவளின் கவனத்தை திசை திருப்பினான்.. எங்கே மீண்டும் சண்டை போட்டுவிடுவார்களோ என்று அஞ்சி..
இவன் கூறும் பொய்யை நம்ப அங்கு யாரும் இல்லை தான்.. ஆனால் என்ன செய்ய முடியும்.. நீ மட்டும் போனால் என்ன என்று கேட்டு அவன் ரோஷம் கொண்டு தனியாக கிளம்பிவிட்டால்.. அதனால் அனைவரும் மகிழ்ச்சியோடு இனியாவது இவர்கள் வாழ்க்கை மலரட்டும் என்று மனதால் ஆசிர்வதித்து அனுப்பி வைத்திருந்தனர்.
வீட்டை பார்த்துக்கொண்டிருந்த ருத்ராவிடம் முகிலன்..
“ருத்.. உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு இங்க.. என்னவென்று கண்டுபிடி பார்க்கலாம்..”
என்றான்.
அவள் ஒன்றும் தோன்றாமல் உதட்டை பிதுக்க..
“ஹ்ம்ம்... ட்ரெஸ் மாற்றிவிட்டு வா... நானும் மாற்ற வேண்டும்…”
என்றவாறு காரின் பின்பக்க இருக்கையில் இருந்த சிறுபெட்டியை திறந்து அவளிற்கான சுடிதாரை எடுத்துக் கொடுத்தான்.
இருவருமே பட்டுப்புடவை மற்றும் கோட் சூட்டில் இருந்ததால் இந்த ஏற்பாடு. இதை எப்போது எடுத்தான் என்று ஆச்சரியம் கொண்டே உடைமாற்றி வந்தாள் ருத்ரா. பின்னர் அவளை வீட்டினுள் அழைத்து சென்று பின்வாசலை திறந்தான்.
அங்கே கண்ணுக்கெட்டிய தூரம் வரை தென்னை மரங்கள் வரிசை கட்டி நின்றது. தொடுகை அவர்களுக்குள் இயல்பாகி பல நாட்கள் ஆனதால் அவளது கையை தன் கையோடு கோர்த்துக்கொண்டு தயக்கமின்றி பேச ஆரம்பித்தான்.
“சுற்றி இருக்குற எல்லா நிலமும் தாத்தாவோடது தான்.. அந்த காலத்துலயே இந்த வீட்டை கட்டிட்டார்.. இங்க நாங்க மட்டும் இல்லை அம்மாவோட சொந்தகாரங்களும் வந்து தங்குவாங்க.. அப்பா ஊரு பெரியகுளம் மாதிரி அம்மா ஊரு தொண்டாமுத்தூர்”
என்று கதை பேச..
அவனை பார்த்துக்கொண்டே நடந்தவளது நாசி பழக்கமான நீரின் வாசனையை உணர.. அதை ஆழ்ந்து அனுபவித்தவள்..
“இங்க தண்ணீர் இருக்கு... ஆறு தான.. அது தானே சர்ப்ரைஸ்!!!!!”
என்று ஆர்ப்பரித்தாள்.
“ரொம்ப புத்திசாலி தான்..” என்று கூறி மனையாளின் தலையை இரு கை வைத்து ஆட்டியவன்…
“இதோ இந்த மேடுக்கு கீழே இறங்க படிக்கட்டு இருக்கு பாரு.. அதுல இறங்கு”
என்றான்.
படிக்கட்டை நெருங்கியதும் கீழேப்பார்க்க.. ஆற்று அன்னை நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தாள்.
பல நாட்கள் கழித்து ஆற்றங்கரையை கண்ட மகிழ்ச்சியில் ருத்ரா கீழிறங்க… குரலிலும் குதூகலம் நிரம்பி வழிந்தது.
“இது என்ன ஆறு… ?”
என்று கேட்டபடியே குனிந்து நீரை அள்ளி தன் முகத்தில் தெளித்தாள்.
“கோயம்புத்தூர்ல என்ன ஆறு ஓடும்.. வராக நதியா ஓடும்… ? நொய்யல் தான்..”
என்றான் அவளின் சிறுபிள்ளைத்தனத்தை ரசித்துக்கொண்டே.
“எனக்கெப்படி தெரியும்…”
என்றவள்.. பின்
“ஆமா…இங்க யாரும் வர மாட்டாங்களா…”
என்று அடுத்த கேள்வியை கேட்டாள்.
முகிலனும்..
“வர மாட்டாங்க.. வேலை செய்யுறவங்களை ஐந்து மணிக்கே அனுப்பிருவோம்.. அதுவும் இல்லாம நம்ம இடத்தை சுற்றி பாதுகாப்பு வேலியும் இருக்கு.. ஆறு நம்ம இடத்து வழியா போகுது..”
என்று அங்கிருக்கும் நடைமுறையை விலக்கியவன்..
“ஏன் கேட்குற ருத்.. ?”
என்று அவளை பார்த்து கேட்க..
அவளோ... இடுப்பில் கட்டிய துப்பட்டாவோடு
“இதுக்குத்தான்..”
என்றவாறு தொப் என்று நீரினுள் குதித்தாள்.. முதன் முதலாக கோபம் இல்லாமல் மகிழ்ச்சியில்.
அருகிலேயே குதித்ததால் நீர் இவன் மீது பட்டு சிறிது நனைத்தது.
“ஏய்.. ருத்.. உன்னோட முடியலடி.. இப்படியா தொப் தொப்ன்னு விழுந்து வைப்ப”
என்று கடிய..
“ஒஹ்.. ட்ரெஸ் நனைந்திருச்சா… உங்க கவலை உங்களுக்கு… எவ்ளோ நாள் ஆச்சு தெரியுமா ஆத்துல குளிச்சு.. உங்க வீட்டு நீச்சல் குளம் நல்லாவே இல்லை.. தண்ணீர்னா ஓடனும் இதே மாதிரி.. தேங்க கூடாது”
என்று நியாயம் பேசியவாறு லாவகமாக நீச்சல் அடித்தாள்.
வழக்கம் போல் மீனாக துள்ளி விளையாடியவளை அமைதியாக அங்கிருந்த பாறையில் அமர்ந்து உயிரை உருக்கும் தாபப்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.
பத்து நிமிடம் சென்றிருக்கும் இருட்டுவதை உணர்ந்து தலையை உலுக்கி தன்னை மீட்டவன்..
“ருத் போதும்.. நாளை காலை விளையாடிக்கலாம் வா..”
என்று கரையேற சொல்ல..
“ஓகே முகி…” என்று இவனருகே நீந்தி வந்தாள்… பின் அவனை அன்னாந்து பார்த்து..
“கொஞ்சம் கைக்கொடுத்தா ஈஸியா வந்துருவேன்ல”
என்றபடி ஒற்றை கையை நீட்ட..
முகிலன் சிறு புன்னகையோடு அவளின் கைப்பற்றினான்.. அடுத்த நொடி அவன் எதிர்பார்க்காத நேரத்தில் கையோடு அவனையும் நீரினுள் இழுத்திருந்தாள் ருத்ரா.
இழுத்து விட்டவள்.. அவன் சுதாரித்து நிற்கும் முன் சற்றுத்தள்ளி சென்று.. அங்கிருந்து பழிப்பு காமித்தாள்..
“உன்னை...” என்றவாறு அவளை நீச்சல் அடித்து துரத்த தொடங்கினான். அவளின் வேகத்திற்கு இவனால் முடியாவிட்டாலும் ஏற்கனவே அவள் நீச்சல் அடித்ததால் களைத்திருந்தாள்.. இப்போது இன்னும் வேகமாய் அவனின் கையில் சிக்காதவாறு நீந்த.. ஒரு கட்டத்தில் அந்த காதல் மீன்களின் ஆட்டம் நன்றாக இருட்டி நிலவும் எட்டிப் பார்க்கையில் முடிவிற்கு வந்தது.
அவளின் இடுப்பில் கட்டியிருந்த துப்பட்டா கையில் சிக்கவும் அதை பிடித்து இழுக்க.. அவனின் மார்பில் வந்து விழுந்தாள் ருத்ரா.
“மாட்டுனியா…” என்றவாறு அவளை பிடித்தவன்… குனிந்திருந்தவளின் முகத்தை நிமிர்த்த.. நிலவொளியில் தன் தேவதையை பார்த்தவனுக்கு தெவிட்டவில்லை.. அவளின் நெற்றியில் படிந்த கார்குழலை ஒற்றை விரல் கொண்டு விலக்கினான்.. பின் அவளது கன்னத்தைப்பற்றி கண்களுக்குள் உற்று நோக்க...
அதில் வெட்கமும் மயக்கமும் கரைபுரண்டு ஓடியதை அந்த நிலவொளியிலும் கண்கூடாக கண்டான். அதற்கு மேல் தன் உள்ளத்தை மறைக்க முடியாமல்…
“ருத்.. மை லவ்.. உன்னை பார்த்த நாளிலிருந்து உன்னை மட்டும் தான் நினைச்சிட்டு இருக்கேன்.. உன் கூட வாழ் நாள் முழுக்க வாழ, பேச, விளையாட, காதலிக்க நான் ரொம்ப ஆவலா இருக்கேன்.. நீ என்கூட இருப்பியா… ?”
என்று காதலாகிய தன் மனைவியிடம் அந்த நீரையும் நிலவையும் சாட்சியாக வைத்து காதலை சொன்னான் கார்முகிலன்.
அவன் காதலை கூறியதும் தன் காதலை கூறலாம் என்று நினைத்த ருத்ராவிற்கு இப்போது வார்த்தைகளே வரவில்லை.
முகிலன் இவளையே பார்த்துக்கொண்டிருப்பது புரிய.. அவனது கையைப் பிடித்திருந்த தன் கைகளால் அவனது இடுப்பை அணைத்தவள், மெதுவாக அவன் மார்பில் தலைசாய்த்து..
“ம்ம்… நான் எப்போவும் உங்க கூடவே இருப்பேன் முகி”
என்று அவன் இதயத்தின் அருகே கூற..
அந்த நொடி… முகிலனின் இதயசிம்மாசனத்தில் இன்னும் அழுத்தமாய் கம்பீரமாய் ஏறி அமர்ந்தாள் முகியின் ருத்.
அதன் பிறகு அங்கு பேசுவதற்கோ கேட்பதற்கோ அவசியமின்றி தான் போனது. அவர்களை அவர்களின் காதல் உலகில் சஞ்சரிக்க விட்டு நாம் வீட்டில் டென்ஷனுடன் அங்கும் இங்கும் உலாவும் கார்த்தியை பார்ப்போமாக..
கார்த்திக்கு முத்ரா அழுதுக்கொண்டு சென்றதே கண்ணில் தோன்றி அவஸ்தையை ஏற்படுத்தியது. போதாக்குறைக்கு தாய் தந்தை கிளம்பியதும் வீட்டிற்கு வராமல் நேரே ஹாஸ்டல் சென்று விட்டாள்.
எப்பொழுதும் காலையில் கல்லூரிக்கு காயுவுடன் சென்று தான் ஹாஸ்டல் செல்வாள் என்பதால் தன்னை தவிர்க்க தான் மாலையே கிளம்பியிருக்கிறாள் என்று கண்டுக்கொண்டான். அவள் இருக்கும் பொழுதெல்லாம் இயல்பாய் இருந்த அவனின் பாழாய்ப்போன மனது அவள் இல்லாத பொழுதுதான் மனதிற்கினியவளை தேடித் தவியாய்த் தவித்தது.
இதற்கு மேல் காதலைப் பூட்டி வைக்க அவன் என்ன முகிலனா.. ?
நேரே பெற்றோரின் அறைக்கு சென்றான்.. அங்கு தன் தாய் மற்றும் தந்தை உறங்க ஆயித்தம் ஆக.. இவன் போய்..
“அம்மா.. எனக்கு கல்யாணம் பண்ணி வையுங்க”
என்றான் மொட்டையாக.
“அடேய்.. உன் சேட்டைக்கு நேரம் காலம் இல்லையா.. ? எங்காவது.. யாருக்காவது கல்யாணம் நடந்ததை பார்த்தா… கல்யாணம் பண்ணி வையுங்கன்னு சொல்ல வேண்டியது.. அதை நம்பி பொண்ணு போட்டோலாம் காமிச்சா.. தொட்டு கூட பார்க்காமலே வேண்டாம்னு சொல்ல வேண்டியது… போடா..”
என்று வழக்கம் போல் விளையாடுவதாக நினைத்து தலையணையை சரி செய்தபடியே உரைத்தார் அபிராமி.
“ஏன்.. ஏன்.. வீட்டுலயே பொண்ணு இருக்கும் போது வெளிய தேடுறீங்க… அதான் அண்ணியோட தங்கச்சி முத்ரா இருக்கால்ல..”
என்று பெற்றோருக்கு தன் மனதை நேரடியாக உரைக்காமல் சுத்தி வளைத்து உரைக்க..
இருவரும் இப்படி ஒரு கோணத்தை யோசிக்காததால் திகைத்து தான் போயினர்.
மாணிக்கவேல் மௌனமாய் அவனை ஆராய்ச்சியோடு பார்த்தார்.
அபிராமி தான்.. பதறி போய்..
“டேய்.. நிஜமாவா.. ? அப்புறம் பொண்ணு கேட்ட பிறகு எனக்கு கல்யாணம் வேணாம்னு சொன்ன உன் அண்ணா வாழ்க்கையும் சேர்ந்து போயிடும் டா.. அவனே இப்போ தான் வாழ ஆரம்பிச்சிருக்கான்..”
என்று அவனின் மனது புரிந்தும் புரியாதது போல் வெறுப்பேற்ற.. ( இந்த அம்மாக்களுக்கு இதே தான் வேலையே.. புள்ளைங்கல வெறுப்பேத்துறதுனா ஹல்வா சாப்பிடுற மாதிரி.. )
“இப்போ நீங்க கேட்குறீங்களா.. இல்ல நானே போய் பொண்ணு கேட்கட்டுமா…?”
என்று தன் வாழ்நாளிலேயே முதன் முதலாக சீரியசாக பேசினான் கார்த்தி.. அவனின் வாழ்கையல்லவா.. ?
“அவசரத்திற்கு போறந்தவனே.. இருடா.. அப்படி எதுவும் பண்ணி இப்போவே உன் வருங்கால மாமனார் கிட்ட கெட்ட பேர் வாங்கிறாத.. நான் பேசுறேன்”
என்று கூறியது அபிராமி அல்ல.. மாணிக்கவேல் தான்.
அதைகேட்டதும் அழகாய் கன்னத்தில் குழி விழ சிரித்தவன்…
“தேங்க்ஸ் பா..”
என்று கூறி.. பின் சந்தோஷத்தில் தாயை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டான்.
“சீ.. போடா போடா.. நான் ஒன்றும் முத்ரா இல்லை”
என்று நம் மைண்ட் வாய்சையே சவுண்டாக கூறிய அபிராமி அவனை அறையை விட்டு வெளியே தள்ளினார்.
அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் முத்ராவை எண்ணி கனவுலகில் மிதந்து ஒரு பாடலை சீழ்க்கை அடித்தவாறே தன் அறைக்குள் புகுந்தான் கார்த்திகேயன்… அது என்ன பாடல் என்று உன்னிப்பாய் கவனிக்க.. அந்த பாடலோ இதோ..
காதல் ஆசை யாரை விட்டதோ
உன் ஒற்றை பார்வை ஓடி வந்து
உயிரை தொட்டதோ…
காதல் தொல்லை தாங்கவில்லையே
அதை தட்டி கேட்க உன்னை விட்டால்
யாரும் இல்லையே…
யோசனை மாறுமோ பேசினால் தீருமோ…
உன்னில் என்னை போல காதல் நேருமோ…
ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை போலவே
உன்னை விடுமுறை தினமென பார்கிறேன்
என் இளமையின் தனிமையை நீ மாற்று
என் நேரமே அன்பே…
நான் பிறந்தது மறந்திட தோணுதே
உன் ஒரு முகம் உலகமாய் காணுதே
உன் ஒரு துளி மழையினில் தீராதோ
என் தாகமே…