varaga nathikaraiyoram 5

varaga nathikaraiyoram 5

சற்று தொலைவில் ஆற்றின் நடுவில் உள்ள பாறையில் பளிச்சென்று ஒரு பளிங்குமுகம் தெரிந்தததும் முகிலன் திடுக்கிட்டது ஒரு கனமாக இருக்கலாம், பின்பு அவன் விரைந்து அந்த பாறையை நெருங்க… அதில் அந்த பளிங்குமுக பெண்ணோ விழிப்பும் அல்லாத மயக்கமும் அல்லாத ஒரு நிலையில் இருந்தாள்.

அவள் மட்டும் முழுதாக மயங்கி பாறையை விட்டாளானால், பின் அவளது உடலை கண்டுபிடிப்பதும் கூட கடினமாகிவிடும் என்று ஆற்றின் வேகத்தை வைத்து கணித்தவன், விரைந்து அவளை காக்க ஏதேனும் வழி உண்டா என்று சுற்றும் முற்றும் தேடினான்.

அவனுக்கு ஆற்றுநீச்சல் தெரியுமென்றாலும் அதை பல வருடங்கள் முன்பே  விட்டுவிட்டு வீட்டின் பின்புறமுள்ள நீச்சல் குளத்தை தஞ்சமடைந்ததால், இக்கட்டான சூழ்நிலையில் அதனை சோதித்துப்பார்க்க விரும்பவில்லை.

அவனுக்கு பின்புறம் அவனின் உயரத்தைவிட உயரமான நாணல் புல்லை பார்த்தான். அதை வளைத்தால் அவளுக்கு அருகில் செல்லுமா என்று சோதித்து பார்க்க, அது பாறையை தொட்டது. மேலும் பலம் தாங்குமா என்றும் இவன் பலத்தை வைத்து இழுத்து பார்க்க, வராகநதி நீர் குடித்து வளர்ந்த புல் அது. சோடை போகுமா…?

 

என்னை பற்றி கொண்டால் நிச்சியமாக கரையேறலாம்… என்று அது வாக்கு குடுப்பது போல் இருந்தது, அதன் பலமும், வளர்ச்சியும்.

இனி இவன் செய்யவேண்டியது அவள் பற்றிக்கொண்டால் இழுப்பது மட்டும்தான்… ஆனால் அது ருத்ராவிற்கு தெரிய வேண்டுமே.. தனக்காக ஒருவன் இவ்வளவு வேலைகளை செய்து கொண்டிருக்கிறான் என்று அறியாமல், அவள் இன்னும் அரைகுறை மயக்கத்திலேயே பாறையில் சாய்ந்திருந்தாள்.

அவளை எவ்வாறு எழுப்புவது…? என்று குழம்பியவன், பக்கத்தில் உள்ள சிறுசிறு கற்களை எடுத்து மொத்தமாக அவள் மீது விழுமாறு எறிந்தான்.

கற்களில் சில ருத்ராவின் மீது பட்டு பல தண்ணீரில் விழுந்தது… தண்ணீரில் விழுந்ததால் நீர் அவள் முகத்தில் தெறிக்க, அது அவளது மயக்கத்தை போக்க முயன்றது.

இப்போது முகிலனும்,

“ஹலோ இந்த பக்கம் பாருங்க… இந்த புல்லை எவ்ளோ முடியுமோ அவ்ளோ கெட்டியாக பிடிச்சிக்கோங்க…”

என்று கத்தினான்.

அவளும் அவன் சொன்னதை ஒருவாறு கவனித்து புல்லை நோக்க, அது இவள் இருக்கும் பாறையின் ஓரத்தை தொட்டது… இவள் சிறிது முயற்சித்தால் அதனை  பற்றிவிடலாம்…

தன் பலத்தை பயன்படுத்தி, சிறிது சிறிதாக நகர்ந்து வந்தவள், புல்லை கைப்பற்றிக்கொண்டாள். அதற்கே இவள் சக்தி முழுதும் வடிந்தது போல இருந்தது.

இவள் பிடித்ததும்… முகிலன்,

“நல்ல பிடிச்சிக்கோங்க… விட்டுறாதீங்க”

என்றவாறு  மெதுவாக இழுக்க ஆரம்பித்தான். ஒரு வழியாக அவள் அவனை நெருங்கியதும், கையை பிடித்து தூக்கினான்.

சில மணிநேரங்கள் நீரிலேயே இருந்ததால் கால்கள் கிடுகிடுவென நிற்க முடியாமல் நடுங்கியது. பற்றுகோலுக்கு அவனது சட்டையை இறுக பற்றினாள்.

முகிலனும் அவள் நிலையுணர்ந்து… தோளை இறுக்கிபிடித்து சிறிது தன்மேல் சாய்த்தவாறே நடத்தி சென்று படித்துறையில் அமர வைத்தான்.

நடக்கும் பொழுதே சிறிது உணர்வுக்கு வந்தவள், அந்நிய ஆடவனின் தொடுகையில் நெளிந்தாள்… ஆனாலும் அவனது தொடுகை ஒரு பெண்ணாக தன்னை உரசாமல், சக உயிருக்கு உதவும் எண்ணத்தில் இருக்கவே… இயல்புக்கு வந்து படித்துறையில் அமர்ந்தாள்.

படித்துறையில் அமர்ந்ததும் தான் தன்னை காப்பாற்றியவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“ரொம்ப தாங்க்ஸ்”

என்று நலிந்த குரலில் கூறியவள், தன் துப்பட்டாவை  வயிற்றில் கட்டியிருப்பதை அறிந்து அதனை எடுத்து  நீரை  பிழிந்து போர்த்திகொண்டாள். மீண்டும் மயக்கம் வரும் போல் இருக்கவே… ருத்ரா முகிலனிடம்,

“சார்… என் வீட்டிற்கு நான் இங்க இருக்கேன் னு சொல்லணும்… எல்லாரும் பயந்துருப்பாங்க அதனால…”

என்று கூறி கொண்டிருக்கும் பொழுதே அவன் தன் போனை அவளை நோக்கி நீட்டியிருந்தான்.

அதனை வாங்க கை நீட்டியவள், கைகள் ஈரமாக இருப்பதை உணர்ந்து,

“நான் நம்பர் சொல்றேன்… நீங்களே அவங்களை வர சொல்றீங்களா..?”

என்றாள்.

அவளால் இன்னும் தான் உயிர் பிழைத்ததை நம்ப முடியவில்லை. இந்த மனநிலையில் பேச முடியாது என்று தோன்றவே அவ்வாறு கேட்டாள்.

அவனும் சரி என்று கூறி அவள் சொல்ல சொல்ல நம்பர் அழுத்தியவன் எழுந்து நின்று தன் குடும்பத்தினர் தென்படுகிறார்களா ?.. என கோவிலை பார்த்தவாறே  கால் செய்தான்.

அந்த பக்கம் எடுக்க காத்திருந்தவன், இவள் பெயர் என்ன என்று கேட்க நினைத்து திரும்பி அவளை பார்த்தான்.

ருத்ராவோ மிகுந்த சோர்வாக படித்துறையில் இருக்கும் சுவற்றிலேயே தலை சாய்ந்திருந்தாள். அவளை தொந்தரவு செய்ய விரும்பாமல் மீண்டும் திரும்ப, போனில்

“ஹலோ…” என்று ஒரு ஆண் குரல் கேட்டது.

இவனும் அது அப்பாவா அண்ணாவா என்று தெரியாததால்,

“ஹலோ… சார் நான் ராஜேந்திர சோழீஸ்வரன் கோவில்ல இருந்து பேசுறேன்… உங்க வீட்டு பொண்ணு இங்க தான் இருக்காங்க… உங்களை வந்து கூப்பிட்டு போக சொன்னாங்க… நாங்க கோவில் படித்துறையில் தான்  இருக்கோம்… கொஞ்சம் சீக்கிரம் வாங்க”

என்றான்.

அதை கேட்ட கருணாகரனிற்கு போன உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது… பின்னே அப்பொழுது தான் அவர் தனது ஆட்களுடன் இரண்டு சக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்து ஆற்றோரமாக பதைபதைப்புடன் தேடியவராகிற்றே…

தனது மகள் பாதுகாப்பாக இருக்கிறாள் என்று தெரிந்ததும், அவர்

“ரொம்ப நன்றி ஐயா… அவள் நல்லாயிருக்கிறாள் தானே…? ஒன்னும் பிரச்சனையில்லையே…”

என்று கேட்டார்.

முகிலனும் “அதெல்லாம் ஒன்னும் இல்ல சார்… அவங்க கொஞ்சம் சோர்வா இருக்காங்க.. அவ்ளோ தான்”

என்றான்.

“நீங்க எனக்கு எவ்ளோ பெரிய உதவி பண்ணியிருக்கிங்கனு உங்களுக்கு தெரியாது… இதோ இப்போ ஒரு கால்மணி நேரத்துல வந்துடறோம் பக்கத்துல தான் இருக்கிறோம். அதுவரை அவள பார்த்துகொள்ளுங்கள்”

என்றார் ருத்ராவின் தந்தை.

முகிலனும்

“சரிங்க சார் நீங்க வாங்க… நாங்க அதுவரை படித்துறையில் வெயிட் பண்ணுறோம்”

என்று கூறி அவர் சம்மதிச்சதும் தனது போனை அணைத்தான்.

அங்கே கருணாகரன் தன் ஆட்களிடம் மகள் கிடைத்துவிட்டாள் என்று கூறி, வண்டியை மட்டும் வாங்கி மற்றவர்களை நன்றி சொல்லி அனுப்பி வைத்தார்.

“இன்னும் வீட்டிற்கு சொல்லவில்லையே அவங்க வேற பயந்து போய் இருப்பாங்க…”

என்று எண்ணியவர் போனை எடுத்து வீட்டின்  லேண்ட்லைன் எண்ணிற்கு அழைத்தார்.

தன் அக்காவை பற்றி ஏதாவது செய்தி கிடைக்குமா..? என்று வாசலுக்கும் போனுக்கும் இடையே டென்ஷனாக நடந்து கொண்டிருந்த முத்ராதான், மணிஅடித்ததும் ஓடிசென்று எடுத்தாள். அப்பாவிடம் இருந்து அக்காவை பற்றிய செய்தியை கேட்டவள், சந்தோசத்துடன்

“அம்மா….அக்கா கோவில் படித்துறையில் தான் இருக்காளாம்… அப்பா சொன்னாரு… நானும் என் வண்டியில் போயிட்டு வரேன்.. குறுக்குவழில போனா பத்தே நிமிசத்துல்ல கோவிலுக்கு போயிருவேன்…”

என்று கூறிக்கொண்டிருக்கும் போதே தனது ஸ்கூட்டிபெப்ட் சாவியை எடுத்தவள், சிட்டாக பறந்திருந்தாள்.

சீதாவோ… ருத்ரா கிடைத்த நிம்மதியில் இருந்தவர், இப்போது முத்ரா கிளம்பியதும்…

“ஏய் நில்லுடி… அவ இங்க தான வருவா அதுக்குள்ள நீ எதுக்கு அங்க போற”

என்றவாறு வெளியே வர அங்கு முத்ரா இருந்தால்தானே… அவள் பறந்து தான் போய்விட்டாள் போல.

“ஒருத்திய தான் அவசரக்குடுக்கையா பெத்தேன்னு நினைச்சா… எனக்கு பிறந்த ரெண்டுமே அவசரக்குடுக்கைகளாக இருக்கே ஆண்டவா… நீ தான் இவங்களையும், இவங்கள கட்டிக்க போற  புண்ணியவான்களையும் காப்பாத்தனும்…”

என்று புலம்பியவாறு கடவுளுக்கு நன்றி சொல்ல பூஜையறைக்கு சென்றார்.  

கோவில் படித்துறையில்…..

முகிலன் நினைத்திருந்தால் அவளை வீட்டிற்கே சென்று விட முடியும் அல்லது கோவிலுக்குள் சென்று தனது பெற்றோரிடம் கூறியிருக்கலாம்.

ஆனால் ஏனோ அவனால் இப்படி ஒரு பெண் தற்கொலை செய்ய முயன்றாள் என்று ஊராருக்கு தெரியவிடுவதில் உடன்பாடில்லை. அவர்கள் என்ன என்ன கதை கட்டுவார்கள் என்று தெரியாதவன இவன்…?

பெற்றோர் அருகில் ஊர்ப்பெரியவர்கள் நிறைய பேர் இருப்பதால் அவன் அங்கு செல்லவுமில்லை.

ஆம்.. அவனை பொறுத்தவரை அந்த பெண் தற்கொலைக்கு முயற்சி செய்து தண்ணீரில் விழுந்து… பின்பு உயிரை விட பயந்து பாறையை பற்றிகொண்டிருந்திருப்பாள் என்று அவனாகவே ஊகித்து கொண்டான்.

அணை திறந்துவிட்டிருப்பதை நீரின் வேகத்தை பார்த்தே தெரிந்துக்கொண்ட முகிலன், உள்ளூரில் இருக்கும் இவளுக்கு தெரியாதா..? பின்னே யாரேனும் அணை திறந்த பிறகு குளிக்க வருவார்களா என்ன…? என்று எண்ணிக்கொண்டான்.

கார்முகிலனிற்கு இப்போது எரிச்சலாக இருந்தது…

“ஏன் இப்படி செய்யணும்…? இவளுக்கு என்ன குறையா இருக்கமுடியும்…?

என்று எண்ணியவாறு திரும்பி அவளை பார்த்தான்.

அவளது தோள்பற்றி அழைத்து வந்தபொழுது கண்ணில் பட்டாலும் கருத்தில் பதியாத அப்பளிங்குமுக பெண்ணின் அழகு, இப்போது கார்முகிலனின் கண்ணிலும் பட்டு கருத்திலும் பதிந்தது.

இருளையே தோற்கடிக்கும், சடைபின்னிய இடுப்பளவு  கருங்கூந்தல், தண்ணீரில் நனைந்ததால் ஒட்டியிருந்தது… பிறைநிலாவை ஒத்திருக்கும் நெற்றி… வில்லை போல் வளைந்து நீண்ட புருவம்… கண்மூடி இருந்ததால் பளிச்சென்று தெரியும் அடர்ந்த குடை இமைகள்… காதில் சிறிய மணிவைத்த பூத்தோடு. சிறிய மூக்கு…அதில் ஒற்றை புள்ளியாய் மூக்குத்தி… அவளது அழகை அதிகப்படுத்தி காட்டியது. லிப்ஸ்டிக் இல்லாமலே சிவந்திருக்கும் இதழ்கள்… நீரில் நீண்ட நேரம் இருந்ததால் வெளுத்திருக்கும் தேகம் என அவன் பார்வை அவளை ஆராய்ந்தது.

இன்னும் எங்கெங்கு அவன் பார்வை போயிருக்குமோ… அவள் துப்பட்டாவை வைத்து போர்த்தியிருந்ததால் அந்தளவோடு நின்றது.

மெதுவாக அவள் அருகில் நெருங்கினான். இதுவரை தன்னிடம் பேசினால் அன்றி யாரிடமும் தொழிலை தவிர்த்து தானாக சென்று பேசாதவன், அவளிடம் பேச வேண்டும் என்று தன் வாழ்நாளிலேயே முதன்முதலாக நினைத்தான்… ஆனால் பெயர் தெரியாததால் அவளை வாங்க போங்க என்று அழைக்க பிடிக்காமல்…

“உங்க வீட்டில் சொல்லிட்டேன்.. இன்னும் 15 மினிட்ஸ்ல வரேன்னு சொன்னாங்க”

என்று கூறினான்.

திடீரென்று கேட்ட குரலில் தூக்கிவாரி விழித்த ருத்ரா… பின்பு அவன் சொன்னதை கேட்டு சரி என தலையாட்டினாள்.

அவள் விழித்ததை பார்த்து என்ன நினைத்தானோ… அவள் அருகில் அமர்ந்து

“உன் பெயர் என்ன…? எதுக்கு ஆத்துல விழுந்த..?”

என்று வினவினான்.

அதை கேட்டவள்…

“என்னோட பேர் ருத்ரா…”

என்பதோடு நிறுத்திக்கொண்டாள். ஏன் விழுந்தோம் என்று சொல்ல விரும்பாமல் சொல்லவில்லையா… இல்லை எப்படி சொல்ல என்று தெரியாமல் சொல்லவில்லையா… என்பது அவளுக்கு மட்டும் தான் வெளிச்சம்.        

அடுத்த கேள்வியின் பதிலுக்காக அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தவன், அவள் அமைதியாக ஆற்றை பார்க்கவும் சுறுசுறுவென்று ஏறிய கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு,

“ஏன் விழுந்தனு கேட்டேன்…”

என்று சிறிது அழுத்தி கேட்க…

(டேய் அவளே அதிசயமா உன் கேள்விக்கு பதில் சொல்லி அமைதியா இருக்கா… நீ ஏன்டா அவள வம்புக்கு இழுக்குற)

அவளோ அவனை ஏறிட்டு பார்த்து

“தெரியாம விழுந்துட்டேன்… ஆத்துல தண்ணி அதிகமா இருக்குறத கவனிக்கலை”

என்றாள்.

அவள் சொன்ன உண்மை இவனுக்கு பொய் சொல்வதாக தெரிந்ததோ…? அல்லது ஸ்கூல்க்கு நேத்து ஏன் வரலன்னு ஆசிரியர் கேட்டால், சின்னப்புள்ளங்க சொல்லுமே, எனக்கு பீவர் மிஸ்னு அதை போல் அவளது பதில் இருந்ததோ…? அவன் அவளை நம்பாமல் பார்த்து,

“இதை நான் நம்பனுமா..?”

என்று கேட்டான்.

அதே நேரத்தில் வண்டியை கோவில் வாசலில் நிறுத்திவிட்டு ருத்ராவை காண சந்தோசம் கலந்த பயத்தோடு ஓடிவந்து.. பிரகாரம் வழியாக படித்துறையை அடைய விரைந்தாள் முத்ரா.

காயுவும் அதன் ஓரமாகத்தான் நின்று செல்பி எடுத்துக்கொண்டிருந்தாள். செல்பி எடுத்தே சார்ஜ் முடிய போவதால், பிரகாரத்தின் நடுவில் இருந்த தன் அண்ணனிடம் அவன் ஒரு வாரத்திற்கு முன்பு வாங்கிய லேட்டஸ்ட் மாடல் போனை கேட்டாள். அவன் சற்று தொலைவில் இருந்தவாறே,

என்னுடைய போன்லயும் சார்ஜ் தீர்த்துராதடி…. ஆஃபீஸ்ல இருந்து கால் வரும்”

என்றவாறே நீட்டினான்.

அவ்வளவு தான் தெரியும் எங்கிருந்தோ ஓடிவந்த பெண் கையை இடித்துவிட அவனது போன் கைத்தவறியது.

அது கீழே விழும் முன் பிடித்துக்கொண்ட காயு, தட்டி விட்டவளை சற்று கோபமாக நிமிர்ந்து பார்க்கஅவளோ கலங்கிய முகத்தோடு

சாரி…”

என்று சொல்ல... காயுவும் அவள் முகத்தை பார்த்து சிறிது இறங்கி

“பரவாயில்லை”

என்று கூறும் முன் சென்றுவிட்டாள்.

அவள் இடித்ததும்… தன் என்பதாயிரம் ரூபாய் போன் காலி… என்று நினைத்து பேய் அடித்தது போல் நின்ற கார்த்தி… அதை தன் தங்கை பிடித்ததும் கண்ணைமூடி  பெருமூச்சுவிட்டு கடவுளுக்கு நன்றி சொன்னான்.

பின்பே நியாபகம் வந்தவனாக அந்த பெண்ணை திட்ட அவளை நோக்கி திரும்பஅங்கு ஒருத்தி வந்ததற்கான தடயமே இல்லாமல் தங்கை மட்டும் அவனது போனை வைத்து செல்பி எடுத்துக்கொண்டிருக்கவும்… அவளிடம் சென்று

எங்க என் போனை தட்டிவிட்டவ…? ஒரு சாரி கூட சொல்லாம ஓடிட்டா…”

என்று கேட்க,

அவன் தங்கையோ

அதெல்லாம் கேட்டுட்டாங்களே என்கிட்டபாவம் என்ன கஷ்டமோ முகமெல்லாம் கலங்கி இருந்ததுகுரலும் வெளிய வரல.. அதான் விட்டுட்டேன்.. விடு கார்த்தி அதான் போன் பத்திரமா இருக்குல்லஅப்புறம் என்ன..?”

என்று தன் தமையனை சமாதானம் செய்தாள்.

“உன் புது போனை தட்டிவிட்டிருந்தா தெரிஞ்சிருக்கும்அது என் போன் தானே”

என்று கேட்டவன்

உனக்கெல்லாம் எதுக்குடி செல்பிஇந்த மூஞ்சிக்கெல்லாம் செல்பி ஒரு கேடா…? கொடு என் போனை…”

என்று பிடுங்கிக்கொண்டு ஓடியே போனான். பின்னே யாரு அவகிட்ட அடிவாங்குறது

இவளும் தன்னை கிண்டல் செய்தவனை துரத்திக்கொண்டே ஓடினாள். அம்மா அப்பா அருகில் வந்ததும் அவர்கள் மெதுவாக நடக்க பெரியவர்கள் முன் அறிமுகம் செய்ய இவர்களை பிடித்துக்கொண்டனர் பெற்றவர்கள்.

ஹப்பாடி… தப்பிச்சிட்டோம் என்றவாறு கார்த்தி அங்கு நின்று தங்கைக்கு அழகு காமிக்க… அவன் கெட்டநேரம் ஆபீசில் இருந்து கால் வந்தது.

அதை எடுத்து காதுக்கு கொடுத்தபடி நகர்ந்தான். தங்கையும்

“வாடா… வா.. இப்போ வசம்மா மாட்டுனியா” என்று கருவியவள்,

“அம்மா.. நானும் அண்ணாகிட்ட போறேன் என்றவாறு அவனை பின்பற்றினாள்.

படித்துறையில்….இதை நான் நம்பனுமா என்று முகிலன் கேட்டதும்… இப்போது எரிச்சல்படுவது ருத்ராவின் முறையானது.

“நீ நம்புனா எனக்கென்ன நம்பலைனா எனக்கென்ன… உன் வேலைய பார்த்துட்டு போடா…”

என்று வாய் வரை வந்த வார்த்தையை அவன் செய்த உதவியை எண்ணி கடினப்பட்டு உள்ளே அமுக்கியவள்… என்ன சொல்வது என்று அவனை பார்த்துக்கொண்டே யோசித்தாள்.

அதேநேரத்தில் தன் தமக்கையின் முதுகை படியின் மேல் இருந்தே பார்த்துவிட்ட முத்ரா,

“ருத்ரா….” என்று சந்தோசத்துடன் கூவ…

தன் தங்கை குரல் கேட்ட ருத்ராவும் முகிலனை மறந்து சட்டென்று எழுந்து பின்னால் திரும்பினாள்.  

படிகளில் சடசடவென இறங்கிய முத்ரா ருத்ராவின் அருகில் நெருங்கியது தான் தாமதம்… அவளை இறுகி அணைத்து நெஞ்சில் முகம் புதைத்தவள்… இவ்வளவு நேரம் பட்டபாட்டில் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.

 

 

 

 

error: Content is protected !!