Vathsala Ragavan’s Priyangaludan Mugilan-10

Vathsala Ragavan’s Priyangaludan Mugilan-10

                    ப்ரியங்களுடன் முகிலன் 10

இந்த பெண் பார்க்கும் படலம் முடிந்து நான்கைந்து நாட்கள் கடந்திருந்தன . மீராவின் முகத்தில் முன்பிருந்த கலகலப்பு மட்டும் இல்லவே இல்லை. எப்போதுமே அவளுக்குள் இழையோடும் ஒரு தாழ்வு மனப்பான்மை இப்பொது இன்னும் கொஞ்சமாக வளர்ந்திருந்தது.

கண்ணனுக்கு தன்னை பிடிக்கிறது என்பது அறிவுக்கு புரிந்தாலும் அதை மனம் ஒப்புக்கொள்ளும் நிலையில் இல்லை. இன்று ஏதோ சின்ன ஈர்ப்பு என் மீது அவனுக்கு. அந்தஸ்திலும், அழகிலும் நான் எட்டாத உயரத்தில் இருக்கிறான். கொஞ்ச நாட்களில் அந்த ஈர்ப்பு காணாமல் போகும். அதன் பிறகு என் பக்கம் கூட திரும்ப மாட்டான் அவன்.

ஏதோ ஒரு மந்திரம் போல் அதையே திரும்ப திரும்ப இதையே அவளுக்கு சொன்னது அவள் மனம்.

அன்று மாலை வேளையில் பாட்டு கிளாஸ் முடிந்து வரும் வழியில் அந்த கடையில் நுழைந்தாள் மீரா. அது ஒரு இசைத்தட்டு நூலகம். அங்கே ஒலிநாடாக்களும் கிடைக்கும்.

நினைத்தால் ஒரு விரல் சொடுக்கில் நினைத்த பாடல்களை பதிவிறக்கம் செய்யும் காலம் இல்லை அது, இளையராஜா போன்ற இசை அமைப்பாளர்களும், இனிமையான பாடகர்களும் மக்கள் மனதில் ஆட்சி செய்துக்கொண்டிருந்த காலமது.  ஹிந்தி சினிமா இசையிலிருந்து இடம் பெயர்ந்து தமிழ் இசை காதலர்கள் உருவான காலமும் அதுதான்.

அப்போது  இந்த இசைத்தட்டு நூலகங்களின் மூலம், அவர்கள் தங்களுக்கு வேண்டிய பாடல்களை காஸெட்டுகளில் பதிவு செய்து கொள்வர்

அவள் கண்கள் அங்கே சுற்றி சுற்றி எதையோ தேடிக்கொண்டிருந்த நேரத்தில் மிகவும் பரிச்சயமான அந்த குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தாள் மீரா..

‘சொல்லுங்க ரஸ்னா மேடம் என்ன வேணும்?’ அவன் முகம் அவளை பார்த்த சந்தோஷத்தில் மலர்ந்து கிடக்க துள்ளும் குரலில் கேட்டான் கண்ணன்.

இவனுக்கு இங்கே என்ன வேலை என்று பார்த்தவளுக்கு கடைக்காரனுடன் அவனுக்கு நல்ல பழக்கம் போலும் என்று புரிந்தது.

அவனது தந்தை பெரிய இயக்குனர், அண்ணன் பெரிய நடிகர் என அவர்கள் குடும்பத்துக்கு ஊரில் தனி மரியாதை உண்டு எனும் போதிலும் வீட்டில் வேலை பார்க்கும் வேலைக்காரர்கள் முதற்கொண்டு எல்லாரிடமும் சரிக்கு சரியாய் அமர்ந்துகொண்டு பேசும் குணம் கண்ணனுடையது.

அது போலவே அந்த பகுதியில் இருக்கும் கடைகளில் இருக்கும் எல்லாருடனும் நல்ல பழக்கம் உண்டு இதுவெல்லாம் அமுதனுக்கு நிறையவே எரிச்சலை கொடுக்கும்.

‘சொல்லுங்க என்ன வேணும்?’ மலர்ந்த புன்னகை கலையாமல் அவளை பார்த்து கேட்டான் கண்ணன்.

‘எனக்கு ரெ…ரெ…ண்டு பிளாங்க் கேஸெட் வேணும்’ என்றாள் கொஞ்சம் தடுமாறும் குரலில். அது ஏனோ அவன் முகம் நேராக பார்க்கவே முடியவில்லை அவளால். அங்கிருந்து ஓடி போய்விடலாம் என்று கூட தோன்றியது.

ஆனால் இன்று அந்த கேஸெட்டுகளை வாங்கியே ஆக வேண்டுமென்று ஒரு ஆசை அவளுக்கு. மாதவன் மாலையில் வாங்கித்தருகிறேன் என்று சொல்லியும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை அவளால். அவளை பொறுத்தவரை  ஆடியோ காஸெட்டுகள், என்பது  மிகப்பெரிய விஷயம். இன்னும் அவற்றை அவள் கண்ணால் கூட கண்டதில்லையே

ஒரு வகையில் அவள் வருவாளோ என நினைத்துக்கொண்டுதான் இருந்தான் கண்ணன். அவள் வீட்டில் வந்திருக்கிறதே அந்த புது ஸ்டீரியோ டேப் ரெகார்டர். மாதவன்தான் நேற்று வாங்கி தந்திருந்தான் அவளுக்காக. இசை அவளது வருத்தங்களைபோக்கும் ஒரு நல்ல நண்பன் என்பது இருவருக்குமே தெரியும்தான்.

நேற்று மாலை முழுவதும் கடைகளை அலசி வாங்கி வந்திருக்கிறான் மாதவன். கண்ணனும் அவனுடன் இருந்தான். இதோ இன்று கேசெட்டுகளை வாங்க இவள் வந்திருக்கிறாள்.

‘கொடுத்திடுவோம். ஆமாம் அந்த கேஸெட் வாங்கிட்டுப்போய் என்ன பண்ண போறே?’ என்றான் சிறு புன்னகையுடன் அவன் முகம் ரசித்தபடியே.

‘என்னமோ பண்றேன். சரி எனக்கு வேண்டாம் நான் போறேன். மாதவன் வந்து வங்கி தரட்டும்’ அவனிடம் பேச்சு வளர்க்க விரும்பாதவளாக அவள் நகரப்போக

‘சரி சரி கொடுக்கறேன் இரு. ஸிக்ஸ்ட்டி வேணுமா? நைண்ட்டி வேணுமா? டி- ஸீரீஸ்’ காஸெட்டே கொடுத்திடவா? என்றான் இதழ்களுக்குள் மறைத்துக்கொண்ட புன்னகையுடன். இவையெல்லாம் என்னவென்றே அவளுக்கு தெரியாது என அவனுக்கு தெரியும்.

அன்றைய நாட்களில் ஸிக்ஸ்ட்டி மற்றும் நைண்ட்டி என இரண்டு காஸெட்டு வடிவங்கள் உண்டு .. ஸிக்ஸ்ட்டி என்றால், ஒரு மணி நேரம் ஓடும்  ஸிக்ஸ்ட்டி நிமிடங்கள். நைண்ட்டி – ஒன்றரை மணி நேரங்கள்.

‘அப்படின்னா என்ன?’ திரும்பி பேந்த பேந்த அவன் முகம் பார்த்தவளின் முகம் பார்க்கும் போது அவள் மீதிருந்த காதல் இன்னும் பல மடங்கு ஆனது போலே தோன்றியது அவனுக்கு

‘அது நீ எத்தனை நேரம் பாட்டு கேட்பேங்கிறது பொறுத்து கேசட் இருக்கு. உனக்கு எது எது வேணும்.’

‘அது நான் ரொம்ப நேரம் கேட்பேன். ரேடியோலே பாட்டு வரும் போது அதை அப்படியே அந்த டூ இன் ஒன் ரெகார்டர்லே போட்டு ரெகார்ட் பண்ணிடலாம்னு மாதவன் சொன்னான். அதுக்குதான் வாங்க வந்தேன்’ அவனுடன் தேவை இல்லாமல் பேச வேண்டாம் என அவள் சற்று முன் போட்டுக்கொண்ட கட்டுப்பாடுகளை மறந்தவளாக படபடத்தாள் மீரா. அவள் குரலில் அப்படி ஒரு ஆர்வம்.  

சினிமா பாடல்களின் மீது இத்தனை காதலா பெண்ணே? அதில் கொஞ்சம் எடுத்து என் மீதும் வைத்துவிடேன் என நினைத்துக்கொண்டவன் ‘ரேடியோலே பழைய பாட்டுத்தானே வரும்’ என்றான். ‘நான் உனக்கு இப்போ வந்த புது பாட்டெல்லாம் ரெகார்ட் பண்ணி தரவா? குரல் முழக்க நேசம் தளும்ப அவன் கேட்க

சட்டென இரண்டடி பின் வாங்கினாள் மீரா ‘அதெல்லாம் வேண்டாம். நான் கிளம்பறேன்’ என்றாள் இதையெல்லாம் தொடர விரும்பாமல்

‘ஹேய்… இரு இரு ரஸ்னா… உனக்கு என்ன பாட்டெல்லாம் வேணும்னு மட்டும் சொல்லிட்டு போ’ நான் இன்னைக்கு நைட் ரெகார்ட் பண்ணி மார்னிங் மாதவன்கிட்டே கொடுத்து அனுப்பறேன்’

அவன் சொல்லி முடிக்க அவள் கண்களில் மின்னல் ஓடி மறைந்தது. ‘அது வந்து நிறைய பாட்டு பிடிக்கும் ‘தோகை இளமயில், நீலவான ஓடையில்..’ என அவசரமாக சொல்ல ஆரம்பித்தவள் சட்டென நிறுத்திக்கொண்டாள்.

’இல்ல நீங்களா பார்த்து ஏதாவது பாட்டு போட்டு குடுங்க’ சொல்லிவிட்டு சில அடிகள் நடந்தவள் ஏதோ ஒரு ஆவல் உந்தித்தள்ள நின்றாள்

‘இதயக்கோவில்’ படம் பாட்டு எல்லாம் கிடைக்குமா? போன மாசம்தான் ரலீஸ் ஆச்சு. நான் என் ஃப்ரெண்ட். வீட்டிலே கேட்டேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அதான்.’ விழிகளில் தயக்கமும், ஆவலும் போட்டி போட கேட்டாள் மீரா.

‘கண்டிப்பா’ என்றான் வாஞ்சையில் ஊறிய தொனியில்.

‘தேங்க்ஸ்’ அடுத்த நிமிடம் அவள் அங்கே நின்றிருக்கவில்லை.

அதுவரை திரைப்பாடல்களில் பெரிய நாட்டம் எல்லாம் அவனுக்கு இருந்ததில்லை. ஆனால் அன்று இரவு முழுதும் பாடல்களுக்குள் மூழ்கித்தான் போனான். அவளுக்கு இது பிடிக்குமா? அது பிடிக்குமா என தேடித்தேடி தேர்ந்தெடுத்துக்கொண்டிருந்தான் அவன்.

சரியாக சொல்ல வேண்டுமென்றால் அந்த பாடல்களுக்குள் அவளை தேடிக்கொண்டிருந்தான் கண்ணன். அந்த நேரத்தில் அவளுக்கு பிடித்த அந்த பாடல்களின் மீதே அவனுக்கு ஒரு காதல் பிறந்தது என்றே சொல்ல வேண்டும். அன்றிலிருந்து அவனும் பாடல்கள் கேட்க துவங்கி இருந்தான்.

இரண்டு நாட்கள் கடந்திருந்த நிலையில் அமுதன் ஷூட்டிங் முடிந்து வீடு திரும்பி இருந்தான். அன்று காலையில் கண்ணன் வீட்டில் இல்லாத நேரமது. அந்த நேரத்தில் அவனை சந்திக்க சென்றிருந்தான் மாதவன். கண்ணன் இருந்திருந்தால் அமுதனை இவன் சந்திக்கும் நேரத்தில் ஒரு காவல் போல் நின்றிருக்க மாட்டானா என்ன?

மாதவனுக்கு எப்படியும் அமுதனுடன் நடித்தாக வேண்டும். அதற்கு நிச்சயாமாக கண்ணன் தடை சொல்லவான் என தெரிந்தே அவன் இருக்கும் நேரத்தில் போக வேண்டாம் என தவிர்த்திருந்தான் மாதவன்.

வீட்டுக்குள் நுழைந்து அவனை சந்திக்கும் அனுமதி கிடைக்கும் வரை தோட்டத்திலேயே நின்றிருந்தான் மாதவன்..

‘டேய்… டேய்… பைத்தியமா உனக்கு ? இவன் இப்படி நிற்பது தெரிந்தால் வெடிப்பான் கண்ணன்.

அவனை பொறுத்தவரை அமுதன் அவனது தெய்வம். அவனை சந்திக்க காத்திருப்பதில் எந்த தவறும் இல்லை கிட்டதட்ட ஒரு மணி நேர காத்திருப்புக்கு பிறகு அவனை உள்ளே அழைத்தான் அமுதன். தனது அறையில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு அவன் அமர்ந்திருந்த தோரணையே அவனது அகந்தையை பறை சாற்றியது. ஆனால் இரு எதுவமே மாதவனை பாதிக்கவில்லை.

அமுதனிடம் இருப்பது எத்தனை பெரிய திறமை. அவனை சுற்றி எத்தனை பெரிய கூட்டம். அவனுக்கு அகந்தை இருப்பதில் என்ன தவறு? இது மாதவனின் வாதம்.

‘சொல்லு என்ன விஷயம்?’ மொத்தமாக அலட்சியத்தில் ஊறிய குரலில் கேட்டான் அமுதன்.

‘அண்ணா…’ என்றான் மாதவன் அவனை தலை முதல் கால் வரை பார்த்து ரசித்தபடியே.

‘அண்ணனா யார் யாருக்கு அண்ணன். இந்த உறவு கொண்டாடுற பழக்கம் எல்லாம் கண்ணனோட நிறுத்திக்கோ. என்னை சார்னு கூப்பிடு’ என்றான் அழுத்தமாக.

‘சரி சரி சார்..’ உங்களுக்கு பிடிக்கலைன்னா இனிமே அப்படி கூப்பிடலை படபடத்த போதிலும் இவன் எனக்கு அண்ணனாக இருந்திருக்க கூடாதா என்று ஏங்கியது மாதவனின் மனம்.

‘சரி என்ன வேணும் சீக்கிரம் சொல்லு தேவை இல்லாமல் நான் டைம் வேஸ்ட் பண்றது இல்லை.’

‘இல்ல அண்.. சார் என் வாழ்க்கையிலே எனக்கு ஒரே லட்சியம். உங்களோட ஒரே படமாவது நடிக்கணும். ஒரே ஒரு சீன் கூட போதும். என்னோட இந்த ஒரு ஆசை நிறைவேறிட்டா போதும் எனக்கு வாழ்க்கையிலே’

‘நடிக்க போறியா?’ உனக்கு நடிப்புக்கு ஸ்பெல்லிங் தெரியுமா?’ சிரித்தான் அமுதன்.

‘இல்ல சார் யாரவது கத்துக்கொடுத்தா சரியா கத்துக்குவேன். நான் நிறைய படம் பார்ப்பேன்’ அவன் குரலிலும், கண்களிலும் அப்படி ஒரு கெஞ்சல்.

இவன் இப்படி நிற்பதை பார்த்திருந்தால் கண்ணன் அவன் கன்னத்தில் இரண்டு அறை அறைந்திருந்திருந்தாலும் ஆச்சர்யமில்லை. கண்ணன் அடிக்கடி சொல்வதைப்போல் தன்னுடைய தகுதி என்னவென்று மாதவனே அறிந்திருக்கவில்லை. அமுதன் மீது கண்மூடித்தனமாக ஒரு பக்தி.

ஆனால் இப்போது அமுதனின் மனம் வேறே ஏதேதோ கணக்குகள் போட்டுக்கொண்டிருந்தன.

‘நீ நம்ம மன்றத்திலே இருக்கியா?’ என்றான் மாதவனை ஆராய்ச்சி பார்வை பார்த்துக்கொண்டே.

‘இருக்கேனே. ரொம்ப வருஷமா இருக்கேனே. நம்ம மன்றத்திலே நான் இல்லாம இருப்பேனா சார்?’ என்றான் இவன் அவசரமாக. சில நொடிகள் கண்களை மூடிக்கொண்டு யோசித்த அமுதன்.

‘பத்து பன்னெண்டு நாளிலே தீபாவளி வருதில்ல. நம்ம தீபாவளி ரிலீஸ் போஸ்டர் எல்லாம் நிறைய கிராமத்திலே ஓட்டணும். மன்றம் சார்பா ரிலீஸ் அன்னைக்கு கட் அவுட்க்கு பாலபிஷேகம் எல்லாம் பண்ணனும்.  நீ ஒரு வாரம் கழிச்சு வந்து என்னை பாரு. அப்போ உனக்கு நான் கொஞ்சம் வேலை தரேன். அதெல்லாம் சரியா முடிச்சிட்டேனா உனக்கு ஏதாவது ஒரு சான்ஸ் உண்டு என் படத்திலே’ என்றான் மாதவன் முகம் பார்த்து.

சத்தியமாய் தரையில் கூட கால் படாத உணர்வு மாதவனுக்கு. ‘கண்டிப்பா சார் கண்டிப்பா  வரேன். அடுத்த ஒரு வாரத்திலே உங்களை பார்க்க வரேன்’ என்றான் சந்தோஷ பரபரப்புடன்.

‘சரி கிளம்பு…’ அமுதன் சொல்ல

‘ரொம்ப தேங்க்ஸ் சார்..’ சொல்லிவிட்டு நகர என்ன தோன்றியதோ

‘மாதவன்’ அழைத்தான் அமுதன். திடீரென அமுதன் பெயர் சொல்லி அழைக்கவும் தலை கால் புரியாத சந்தோசம் மாதவனுக்கு .

‘சொல்லுங்க சார்’

‘உனக்கு பைக் ஓட்ட தெரியுமா?’ கேட்டான் அமுதன். அந்த நாட்களில் பைக் என்பது சாதரண நடுத்தர குடும்பத்து இளைஞர்களின் எட்டாத கனவு. பணக்கார இளைஞர்கள் பெண்களை கவர்ந்து இழுக்க தங்களின் அடையாளமாக காட்டிகொள்ளும் ஒரு விஷயம். நிச்சயமாக அதற்கெல்லாம் வசதி இல்லை மாதவனிடம்.

‘இல்லையே சார். எனக்கு பைக் ஓட்ட தெரியாதே..’ மாதவன் கவலை தோய்ந்த குரலில் இழுக்க

‘சீக்கிரம் கத்துக்கோ. பின்னாலே உபயோகப்படும்’ சொல்லிவிட்டான் அமுதன். அவன் எதை மனதில் வைத்துக்கொண்டு சொன்னான் என்பதை அறியாத இவனுக்கு உச்சக்கட்ட மகிழ்ச்சி.

அன்று மாலை நான்கு மணி இருக்கும். லேசாக மழை தூறிக்கொண்டிருந்த அந்த நேரத்தில் தள்ளு வண்டியில் வந்த அந்த பால் ஐஸை சுவைத்துக்கொண்டே அந்த தெரு ஓரத்தில் இருந்த மரத்தடியில் நின்றிருந்தனர் நண்பர்கள் இருவரும்.

‘என்னடா ரெண்டு நாள் ஆச்சு ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கிற?’ இது கண்ணன்.

‘எதை பத்திடா?’

‘மீராகிட்டே கேசட் எல்லாம் கொடுத்தியா இல்லையா?

‘கொடுத்திட்டேன்டா அதுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். ரெண்டு நாளா திரும்ப திரும்ப அதையே கேட்டுட்டு இருக்கு. அதுவும் இதயக்கோவில் பாட்டெல்லாம் திரும்ப திரும்ப கேட்டுட்டே இருக்கு. அந்த படம் பார்க்கணுமாம் அதுக்கு’ மாதவன் சொல்லிக்கொண்டே போக

‘அப்படியாடா? நிஜமாவா? நிஜமாவே ரொம்ப சந்தோஷமா மீராக்கு?’ ஏதோ அவள் சந்தோஷத்தை கண் முன் பார்த்ததை போல் ஒரு மகிழ்ச்சி கண்ணனின் குரலில்,

அதே நேரத்தில் மாதவனுக்கு தன் கவலை. கண்ணனிடம் கேட்பதா வேண்டாமா என்ற தயக்கமும் கூட. ஆனால் நம் கண்ணன்தான் நண்பனின் முகம் பார்த்தே அவன் மனம் சொல்வானே.

‘என்னடா என்னமோ சொல்ல வரே. ஆனா சொல்ல மாட்டேங்கிற. என்கிட்டே என்னடா மாதவா? ஐஸை சுவைத்த படியே நண்பனின் கைப்பிடித்து முகம் பார்த்தான் கண்ணன்.

‘இல்லடா ஒண்ணுமில்லை…’

‘ஏதோ இருக்கு. சொல்லு..’ இவன் அழுத்த

‘ரெண்டு மூணு நாளைக்கு ஒரு பைக் கிடைக்குமாடா? எனக்கு ஓட்ட கத்துக்கணும்’

‘பைக்கா?’ கண்ணனின் முகத்தில் வியப்பு கோடுகள். ‘என்னடா திடீர்னு?’ என்றான் முடிந்த ஐஸ்கிரீம் குச்சியை குப்பையில் போட்டபடியே.

அமுதன்தான் இதை சொன்னான் என்று சொன்னால் கண்டிப்பாக ஒப்புக்கொள்ள மாட்டான் கண்ணன். ‘உனக்கு  எதுக்குடா வேண்டாத வேலை’ என்பான் கண்டிப்பாக. சொல்லவில்லை மாதவன். அமுதனை பார்த்ததையோ, அவனிடம் பேசியதையோ சொல்லவே இல்லை கண்ணனிடம்.

‘இல்லடா. என்னமோ ஆசையா இருக்கு.’ என்றான் மாதவன் தலை குனிந்தபடியே. அது எப்படி நண்பனின் முகம் பார்த்துகொண்டே உண்மையை மறைத்து பேசுவதாம்?

‘ஆசையா இருக்கா? உனக்கா? அவ்வளவுதானே விடு நாளைக்குள்ளே ஏற்பாடு பண்ணிடுவோம்’ சொல்லிவிட்டான் கண்ணன். நண்பன் ஆசைப்பட்டதை கொடுக்காமல் இருந்துவிட முடியுமா என்ன நம் கண்ணனால்.

‘ரொம்பவெல்லாம் கஷ்டப்படாதே.’ மாதவன் அவசரமாக சொன்னான். கண்ணனிடம் அப்போது இருந்தது ஒரு பஜாஜ் ஸ்கூட்டர்தான்.

‘கஷ்டமா? கண்ணனுக்கா. அதுவும் மாதவன் விஷயத்திலேயா?’ சின்ன சிரிப்புடன் இடம் வலமாக தலை அசைத்தான் கண்ணன் ‘மாதவனுக்காக கண்ணன் எதையும் செய்வான். எதையும்’

மறுநாள் மதியம் கிட்டத்தட்ட அதே நேரத்தில் மாதவனின் கண்முன்னே ஊஞ்சலாடியது அந்த பைக் சாவி.

‘இந்தா புது பைக். உனக்குத்தான் எடுத்துக்கோ’ கண்ணன் அழகு புன்னகையுடன் சொல்ல ஆடிப்போனான் மாதவன்.

‘டேய்… புது பைக்கா? எப்படிடா அதுக்குள்ளே வாங்கினே? எப்படிடா?’

‘டப்பு இருந்தா எல்லாம் எவ்வளவு சீக்கிரம் வேணும்னாலும் வாங்கலாம் மாப்பிளே. சும்மா ஜமாய். இந்தா வெச்சுக்கோ. உனக்குத்தான்’

‘எனக்கா? எனக்கே எல்லாம் வேண்டாம்டா. நான் சும்மா கொஞ்சம் ஓட்ட கத்துக்கணும் அவ்வளவுதான்’

‘ஏன்டா நான் உனக்கு எதுவும் வாங்கி கொடுக்க கூடாதா என்ன? நீ எனக்கு கேமரா வாங்கி கொடுத்த போது நான் வாங்கிக்கலையா என்ன?

‘அது வேறே இது வேறேடா’

‘என்ன வேறே வேறே? எல்லாம் ஒண்ணுதான். என்ன இது எங்கப்பா பணம்னு யோசிக்கறியா? கண்டிப்பா இல்லை. என் பணம். கம்பனி அப்பாவோடதாக இருந்தாலும் நான் தினமும் அதிலே உழைக்கறேன்டா. அதுக்கான பணத்திலேதான் வாங்கினேன்’ என்றான் கண்ணன் அழுத்தமாக.

‘அதுக்கு இல்லடா கண்ணா’

‘எதுக்கும் இல்லைடா மாதவா. நீ முதல்லே வண்டி ஒட்டு வா’ சொல்லிவிட்டு அவன் திரும்பிய நேரத்தில் அங்கே பாட்டு கிளாசுக்கு செல்ல சைக்கிளில் வந்துக்கொண்டிருந்தாள் மீரா.

‘டேய்,,, மீராடா’ கூவினான் கண்ணன். கடகடவென அவனது யோசனைகள் விரிய அவ; முன்னாலேயே அந்த யமஹா பைக்கை உதைத்து கிளப்பி மாதவனையும் ஏற்றிக்கொண்டு சர்ரென கிளம்பி தெருவை ஒரு வட்டமடித்து வந்து மறுபடியும் அவளை கடந்து சென்ற கண்ணனை அவளால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

காலை ஊன்றி சைக்கிளை நிறுத்தி இருந்தாள் மீரா. எத்தனை கட்டுப்படுத்திக்கொள்ள முயன்றும் கேட்காத அவள் கண்கள் அவ.ன் பைக்கின் பின்னாலேயே செல்லத்தான் செய்தன.

‘என் கண்ணன் அழகன்தான்’ சொன்னது அவள் அறிவு. ‘ஆம் அழகன்தான். அவன் அழகுக்கு நீ எல்லாம் அவன் அருகில் கூட செல்ல முடியாது அதைதான் நான் பல நாட்களாக சொல்லிக்கொண்டிருக்கிறேன்’ கூடவே அவள் மனமும் சேர்ந்து உறுத்த மறுபடியும் சைக்கிளை மிதித்துக்கொண்டு அங்கிருந்து அகன்றாள் அவள்.

இரண்டு நாட்களின் தொடர் பயிற்சியில் நன்றாகவே பைக் ஓட்ட பழகி இருந்தான் மாதவன். இதில் அவனை விட கண்ணனே அதிகம் மகிழ்ந்து போயிருந்தான்.

‘இதிலே காலிலே கியர் எல்லாம் போடணும் இல்ல மாதவ். எப்படி நீ இவ்வளவு சீக்கிரம் கத்துகிட்டே’ வியப்புடன் கேட்டுக்கொண்டே,தாவணியை வெகு ஜாக்கிரதையாக இழுத்து சொருகிக்கொண்டு ஒரு சின்ன படபடப்பான உள்ளத்துடன் அந்த பைக்கில் ஏறி அமர்ந்த மீராவை மாதவன் ஒரு ரவுண்ட் அழைத்து செல்ல அதை கண்கள் மின்ன பார்த்துக்கொண்டே இருந்தான் கண்ணன்.

‘எங்க வீட்டிலே பைக்கை நிறுத்த கூட இடமில்லைடா. உங்க வீட்டிலே நிக்கட்டும்’ கண்ணன் எத்தனை கட்டாயப்படுத்தியும் பைக்கை கண்ணன் வீட்டிலேயே நிறுத்தி இருந்தான் மாதவன்.

இன்னும் இரண்டு நாட்கள் கடந்திருக்க, அன்று கையில் நான்கு ரயில் டிக்கெட்களோடு கண்ணன் அலுவலகத்துக்கு வந்தான் மாதவன்.

இப்போது போல் இணையத்தில் டிக்கெட்ட்டுகள் பதிவு செய்யும் வசதிகள் இல்லை அந்த காலத்தில். பொதுவாக ரயில் நிலையத்து எடை பார்க்கும் சாதனத்தில் வரும் டிக்கெட்டுகளின் தோற்றத்தில் இருக்கும் அந்த கால டிக்கெட்டுகள். நினைத்ததும் டிக்கெட்டுகள் கிடைக்கும் வாய்ப்பும் அப்போது இருந்தது

ஏதோ ஒரு ஃபைலில் மூழ்கி இருந்தவன் நண்பனை பார்த்து மலர்ந்தான். ‘வாடா. என்னடா திடீர்னு இந்த பக்கம்?’ என்றபடியே இண்டர்காமில் இரண்டு காபி கொண்டு வரச்சொன்னான் கண்ணன்.

மூணு நாள் ஊருக்கு போயிட்டு வரலாம்னு இருக்கோம்டா. இந்த பொண்ணு பாக்குற விஷயத்துக்கு அப்புறம் இந்த மீரா பொண்ணும் ரொம்ப டல்லா சுத்திட்டு இருக்கு. அதான் மூணு நாள் ஊட்டி போய் சுத்திட்டு வரலாம்னு இப்போதான் சென்ட்ரல் போய் இன்னைக்கு சாயங்காலம் கிளம்ப கோயம்புத்தூர் வரைக்கும் டிக்கெட் எடுத்திட்டு வரேன்’ என்றான் மாதவன்.

‘ஹேய்… ஊட்டியா…’ மகிழ்ந்து போய் கூவினான் கண்ணன் ‘சொல்லி இருந்தா நம்ம காரிலே போயிருக்கலாம் இல்ல?’

‘இல்லடா மாமா அதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டார். ஆயிரம் யோசனை செய்வார்’

‘சரி அங்கே போய் எங்கே தங்க போறீங்க?’

‘அது அங்கே போய் ஏதாவது ஹோட்டல்..’

‘எதுக்கு ஹோட்டல்?’ என்றான் கண்ணன் ‘நம்ம பைக்காரா கெஸ்ட் ஹவுஸ் எதுக்கு இருக்கு?’

‘டேய்… டேய்… அதெல்லாம் வேண்டாம்… நாங்க எங்கயாவது..’

‘நாளைக்கு நீ கோயம்புத்தூர்லே இறங்கும் போது நான் காரோட ஸ்டேஷன்லே இருப்பேன்’ என்றபடியே பியூன் கொண்டு வந்த காபியில் ஒன்றை எடுத்து மாதவனிடம் நீட்டினான் கண்ணன்

‘கண்ணா எதுக்குடா?’

‘கண்ணன் சொன்னா சொன்னதுதான். நீ மேலே எதுவும் பேசாதே என்றவன் இன்னொரு விஷயம் தெரியுமா? அண்ணன் நேத்துதான் ஊட்டி ஷூட்டிங் கிளம்பி போனான்’ சொல்லிவிட்டு நாக்கை கடித்துக்கொண்டான்  ‘இதை எதற்கு இவனிடம் சொன்னேன்’

‘அண்ணன் ஷூட்டிங்கா. ஊட்டிலேயாடா? மொத்தமாக மகிழ்ச்சி கடலில் விழுந்தவனின் எண்ணம் முழுவதும் இப்போது அமுதனே நிறைந்து இருந்தான்.

மறுநாள் காலை ரயில் கோவையை அடைந்த நேரத்தில் ரயில் நிலைய நடை மேடையில் நின்றிருந்தான் கண்ணன். மாதவன் அவன் வருவதாக யாரிடமும் சொல்லி இருக்கவில்லை

மீரா ரயிலை விட்டு இவன் சட்டென அவள் முன்னால் சென்று நின்று ரகசியமாய் கண்சிமிட்ட அவளும் அறியாமல் வியப்பும் மகிழ்ச்சியுமாய் சில நொடிகள் மலர்ந்துதான் போனது அவள் முகம். இவனுக்குள் சில்லென்ற பனிமழை.

உடனேயே சுதாரித்துக்கொண்டு கஷ்டப்பட்டு மனதை அவனிடமிருந்து பிடுங்கிக்கொண்டு பார்வையை வேறே பக்கம் திருப்பிக்கொண்டாள் அவள். இவனை பார்த்ததில் அவளது தந்தைக்கு கொஞ்சம் உறுத்தல்தான். இருப்பினும் அந்த நிலையில் எதுவும் பேசிக்கொள்ள தோன்றவில்லை அவருக்கு.

அக்டோபர் மாத கோவை இதமான தூறலுடன் வரவேற்றது அவர்களை. ரயில் நிலைய வாசலில் நின்றது கண்ணனின் கன்டஸா கார். அப்போது புதிதாக அறிமுகம் ஆகி இருந்த கார் அது.

அப்பா, அம்மா, மீரா மூவரும் காரின் பின்னால் அமர்ந்துக்கொள்ள மாதவனை தனதருகில் அமர்த்திக்கொண்டு ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து வெகு லாவகமாக கிளப்பினான் காரை.

கோவையின் சாலைகளின் இரு புறங்களிலும் மரங்கள். அந்த காலை நேரத்திலும் சில்லென்ற பனித்தூறல் தாலாட்டிக்கொண்டிருந்தது. ஊர் முழுவதுமே குளிர் காற்றில் மயங்கிக்கிடந்தது. இங்கெல்லாம் வருவது மீராவுக்கு இதுவே முதல் முறை.

‘கோயம்புத்தூறே இப்படி இருந்தால் ஊட்டி எப்படி இருக்குமாம்?’ இமைக்க மறந்து ஊரை ரசித்திருந்தாள் அவள். கண்ணனின் பக்கம் திரும்பினால் எங்கே அவனை ரசித்து விடுவோமோ என்ற பயத்துடனே சற்று கவனமாகவே இருந்தாள் அவள்.

கண்ணனுடைய கோவை வீட்டில் குளித்து, காலை உணவை முடித்து தயாராகி வழியில் சாப்பிட தேவையான சிற்றுண்டிகளுடன் ஊட்டியை நோக்கி கிளம்பி இருந்தனர் அனைவரும்.

மேட்டுப்பாளையம் நெருங்க நெருங்க குளிர் இன்னமும் அதிகமாக முத்தமிட்டது அவர்களை. காரின் முன் பக்க கண்ணாடியில் அவள் முகம் தெரியும்படியே வைத்துக்கொண்டு காரை ஓட்டிக்கொண்டிருந்தான் கண்ணன்.

சற்று முன் பெய்த மழையுடன் கூடி சிலிர்ந்திருந்த மரங்களையும், நனைந்த களித்திருந்த சாலைகளையுமே பார்த்திருந்தாள் மீரா. மறந்தும் கூட கண்ணாடியில் அவன் முகம் பார்த்துவிடவே கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தாள் அவள்.

கலகலகலவென நிறுத்தாமல் பேசியபடியே வண்டி ஓட்டிக்கொண்டிருந்தான் கண்ணன். அப்பாவையும் சேர்த்து அனைவருமே அவனுடன் கலகலத்துக்கொண்டு, சிரித்துக்கொண்டு, சிற்றுண்டிகளை சுவைத்துக்கொண்டே வர இவளிடம் மட்டும் மௌனத்தின் அரசாட்சி. ஐம்புலங்களையும் கொஞ்சி வருடி தாலாட்டும் இயற்கை ஒன்று போதாதா இவள் துணைக்கு.

அப்படியுமே அவளது கட்டுப்பாட்டையும் மீறி அவளையே  தொட்டு தொட்டு மீண்டுக்கொண்டிருந்த அவன் பார்வை வட்டதுக்குள் ஒரு முறை இவள் கண்கள் சிக்கி ஒரு ரகசிய கண் சிமிட்டலை பரிசாக பெற்று முகம் சிவந்து திரும்பிக்கொண்டாள்தான் மீரா.

‘உனக்கு என்னை பிடிக்கிறது பெண்ணே. பிடிக்கத்தான் செய்கிறது. ஆனாலும் என்னையும் ஏமாற்றி உன்னையும் ஏமாற்றிக்கொள்கிறாய். அது ஏன்?’ இந்த கேள்விதான் அவனை துளைத்துக்கொண்டிருந்தது.

                      தொடரும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!