Vathsala Ragavan’s Priyangaludan Mugilan 12

ப்ரியங்களுடன் முகிலன் 12

ஏதோ ஒரு பெரிய குழப்பத்தில் விழுந்து எழுந்துக்கொள்ள முடியாமல் தவிப்பனை போல் உள்ளங்கைகளுக்குள் முகம் புதைத்து அமர்ந்திருந்தவனை பார்த்துக்கொண்டே நின்றிருந்தான் அப்போது வீட்டுக்குள் நுழைந்த தனா.

‘இப்போ கூட எனக்கு அவளை ரொம்ப பிடிக்குமே. அதுக்காக எங்க  கல்யாணம் நடக்கலைங்கிறதுக்காக நான் சோகமா எல்லாம் திரிய முடியாது புரியுதா?’ அது முடிஞ்சு போச்சுன்னா முடிஞ்சு போச்சு அவ்வளவுதான் அதையே தலையிலே சுமந்திட்டு சுத்த முடியாது தனா’

சில நாட்களுக்கு முன்னால் சொன்னானே வருண். இப்போது அதைதான் தலையில் சுமந்து அமர்ந்திருக்கிறானோ? இத்தனை நாள் அவனுடன் பழகியவனால் அவன் மனதை சட்டென கணிக்க முடிந்தது.

‘பாஸ்….’ என்றான் கொஞ்சம் இறங்கிய குரலில் ‘நீங்க இப்படி இருந்தா நல்லா இல்லை’

‘ஆங்…’ நிமிர்ந்தான் வருண்.

‘இல்ல பாஸ்.. அனு மேடம் வேணும்னா ஒரு தடவை நேரிலே போய் பார்த்திட்டு வந்திடலாம்’

‘பாஸ்..’ முகத்தில் சிரிப்பை கொண்டு வந்துக்கொண்டு தனாவின் சட்டை காலரை சரி செய்து கொண்டே கண் சிமிட்டினான் வருண் ‘எனக்கு லைட்டா தலைவலி அவ்வளவுதான் பாஸ். நீங்க ரொம்ப யோசிக்காதீங்க பாஸ். நாளைக்கு புது படம் ஷூடிங் போகணும் பாஸ். ஞாபகம் வெச்சு காலையிலே சீக்கிரம் வந்திடுங்க பாஸ்’ சிரித்தபடியே சொல்லிவிட்டு விறுவிறுவென மாடி ஏறி சென்றிருந்தான் வருண்.

பொதுவாகவே வருணை பொறுத்தவரை வாழ்கையில் இதுவரை எந்த ஒரு விஷயமும் அவனின் மனதை இந்த அளவு பாதித்தது இல்லைதான்.

ஆனால் இவள் விஷயத்தில் காரணம் புரியாத ஏதோ ஒரு பயப்பந்து அவனது அடி மனதில் சுற்ற ஆரம்பித்திருந்தது. மயூரா அவனுக்கு நெருங்கிய தோழி என்ற போதிலும் அவளிடம் கூட இதை பற்றி பெரிதாக சொல்லிக்கொள்ளவில்லைதான் வருண்.

‘இது மாதிரி லவ் ஃபெய்லியருக்கு எல்லாம் தாடி வளர்க்குற ஆள் நான் இல்லை மயூரா நீ ஃப்ரீயா விடு’ என முடித்திருந்தான் அவளிடம்.

கடந்த இரண்டு நாட்களை விட இன்று ரொம்பவுமே அழுந்திக்கிடந்தது மனது. அவள் மீது அவன் வைத்த உண்மையான நேசம்தான் இந்த உள்ளுணர்வை தருகிறது என்று அவனுக்கு புரியவில்லை..

தனது அறைக்கு வந்து கைப்பேசியை உருட்டினான் மறுபடியும். அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இப்போது அவளது புகைப்படங்களை பார்க்க துவங்கினான். அதில் ஒரு புகைப்படம். அவள் மடிசார் புடவையில் இருக்கும் புகைப்படம்.

இப்போது அவள் நடித்துக்கொண்டிருக்கும் ஒரு திரைப்படத்தின் காட்சிகளுக்காக அவள் மடிசார் புடவை அணிந்து நடிக்கிறாள் அவள். அது அவளுக்கு அப்படி பொருந்தி போகிறது.

சில மாதங்களுக்கு முன் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூருவில் நடந்துக்கொண்டிருந்தது,

இவளை பார்ப்பதற்கென்றே அந்த படப்பிடிப்பு தளத்திற்கு சென்றவன் அவளை மடிசார் புடவையில் பார்த்த போது அது அவள்தான் என அவனால் சில நொடிகள் அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லைதான்.

‘பேபி…’ கூவியே விட்டான்தான் வருண் ‘என்ன பேபி இவ்வளவு அழகா இருக்கே’

‘நான் எப்பவுமே அழகுதான் போ…’ சிணுங்கிவிட்டு கேமரா முன்னால் சென்றவளை விட்டு விழி அகற்றவே முடியவில்லை அவனால்.

‘இங்கே பாரு இன்னைக்கு பூரா நீ இந்த மேக் அப் கலைக்ககூடாது பேபி. அப்போது  கிடைத்த சின்ன இடைவெளியில் அவளிடம் கைப்பேசியில் கிசுகிசுத்தான்

அன்றைய படப்பிடிப்பு முடிந்து அவள் காருக்குள் வந்து அமர அவளை அப்படியே இழுத்து தன்னோடு சேர்த்துக்கொண்டான் வருண். அவளை முத்தமிட்டு தீரவில்லை அவனுக்கு.

‘இங்கே பாரு பேபி. நம்ம கல்யாணத்துக்கு நீ மடிசார் புடவைதான் கட்டறே நான் சொல்லிட்டேன்’ அவன் சொல்ல அழகான வெட்கத்துடன் தலை அசைத்தாள் அனுபமா.

அன்றைய இரவில் பெங்களூரு சென்னை நெடுஞ்சாலையில் அவளை காரில் ஏற்றிக்கொண்டு பறந்தான். இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என கிசுகிசுக்கள் பரவிக்கொண்டிருந்த காலமது.

பெங்களூருவில் இவர்களை அத்தனை அடையாளம் தெரியாது எனும் ஒரு தைரியத்தில் காரை நடு வழியில் நிறுத்தி, அவன் கீழறங்கி  யாரும் பார்த்து விடுவார்கள் என பயந்து இறங்க மறுத்தவளை அப்படியே மடிசார் புடவையோடு சேர்த்து  அள்ளிகொண்டு  காரிலிருந்து இறக்கி தூக்கி சுழற்றி அவளை சிரிக்க வைத்து, வெட்கப்பட வைத்து  முத்தமிட்டு அவளுக்குள் கரைந்த காலங்கள் திரும்ப வரவே வராதா?

ஏக்கத்துடன் அவளது புகைப்படத்தையே பார்த்திருந்தான் வருண் ‘என்னடி ஆயிற்று பெண்ணே. சொல்லிவிடேன். அதையாவது சொல்லிவிடேன்.

முகிலன் வந்து மேடையில் ஆடிய காட்சியும், அவன் அனுபமாவை பார்த்த பார்வை எல்லாமே வருண் கண் முன்னால் வந்து வந்து போய்க்கொண்டே இருந்தது.

மறுபடியும் மடிசார் புடவையுடன் உன்னை மடியில் ஏந்திக்கொள்வேனா மாட்டேனா? புலம்பியது வருணின் உள்ளம் 

‘ஆம் ஏந்திக்கொள்வான்தான்… ஆனால்?’

அதே நேரத்தில்

அங்கே அந்த விருது வழங்கும் விழாவில் அமர்ந்துக்கொண்டு மயூராவின் கைப்பேசிக்கு முயன்றுக்கொண்டே இருந்தார் வெங்கட்ராமன். சார்ஜ் இல்லாமல் அணைந்து போயிருந்தது அது.

பொதுவாக மயூராவின் நண்பர்களை பற்றிக்கூட அதிகம் அக்கறை எடுத்துக்கொண்டதில்லை வெங்கட்ராமன். மயூரா வருண் நட்பு பற்றி கூட இந்த நிமிடம் வரை அவர் அறிந்ததில்லை.

ஆனால் இன்று மயூரா முகிலனுடன் சென்றதில் இருந்து இவரது கற்பனை எட்டு திக்கிலும் பறக்க இவருக்குள் பதற்ற அலைகள் வீசிக்கொண்டே இருந்தன. நினைக்க நினைக்க மனம் ஆறவே இல்லை அவருக்கு.

அதே நேரத்தில்

வெங்கட்ராமன் மன ஓட்டங்களை படித்தது போலவே இதழ்களில் ஓடிய ரகசிய புன்னகையுடன் காரை செலுத்திக்கொண்டிருந்தான் முகிலன்.  திடீரென மௌனமாக அமர்ந்திருந்தவளின் பக்கம் திரும்பியவன்

‘உங்க போன்லே சார்ஜ் இல்லையோ’ என்றான்.

‘ஆமாம் எப்படி கரெக்டா கேக்கறீங்க?’ அவள் வியக்க

‘ஒன் பிளஸ் ஒன் டூ தானே. சார்ஜ் இருந்திருந்தா இத்தனை நேரத்துக்கு உங்க போன் அலறி இருக்குமே. உங்க அப்பா கூப்பிட்டு இருப்பாரே எங்கே இருக்கே? எங்கே இருக்கேன்னு?’ முகிலனது தொனியில் கிண்டல் தொனிக்க

‘எங்கப்பா அப்படி எல்லாம் கிடையாது.. அப்படி எல்லாம் எப்பவும் என்னை ஸ்பை பண்ண மாட்டார் அவர்’ சட்டென சொன்னாள் மகள்.

‘அஹான்..’ இதழ்களுக்குள் புன்னகைத்துகொண்டான் முகிலன். ‘எந்த மகள் தனது தந்தையை விட்டுக்கொடுத்திருக்கிறாளாம்?

கார் அந்த தெருவுக்குள் நுழைய மயூராவின் விழிகள் வியப்பில் விரிய தெருவின் மீதே பதிந்திருந்த முகிலனின் விழிகளில் ரசிப்பின் பாவம்.

‘நாம எங்கே போறோம் முகிலன்?’

‘ம்?’

‘இல்ல இந்த ரோடு…’

‘நாம கண்டிப்பா உங்க வீட்டுக்கு போகலை; கவலை படாதீங்க’ என்றான் சாலையை விட்டு பார்வையை விலக்காமல்.

சில நிமிடங்களில் கார் அந்த வீட்டு கேட்டின் அருகில் சென்று நின்றது. வீட்டு கேட் பூட்டி இருக்க காரின் ஹாரனை ஒரு முறை அழுத்திவிட்டு சற்றே பொறுமையாக காத்திருந்தான் முகிலன். பொதுவாக இப்படி எல்லாம் இருக்கும் நேரத்தில் ஹாரனை நிறுத்தாமல் அடிப்பதே முகிலனின் வழக்கம். ஆனால் இப்போது?

விருது விழாவை விட்டு கிளம்பும் போது அவன் முகத்தில் இருந்த இறுக்கம் கூட சற்றே குறைந்து விட்டதைப்போல் பட்டது மயூராவுக்கு. சில நொடிகள் கழித்து இவன் அடுத்த ஹாரன் கொடுக்க ஓடி வந்து கேட்டை திறந்தார் அந்த வீட்டின் சமையல்காரர் சந்தானம்.

கார் சென்று போர்டிக்கோவில் நிற்க விழிகளை ரசனையுடன்  சுழற்றியபடியே இறங்கினான் முகிலன். சந்தானம் வணக்கம் சொல்ல அதை புன்னகையுடன் ஏற்றுக்கொண்டான். கையில் தனது கைப்பையையும், அந்த விருதையும் எடுத்துக்கொண்டு இறங்கினாள் மயூரா.

‘இந்த வீடு?’ என்றபடியே அவனை அவள் கேள்வியாக பார்க்க

‘ம்?’ என்றான் முகிலன். காரின் மீது சாய்ந்து நின்று ஏனோ அவளை சில நொடிகள் பார்த்துக்கொண்டே நின்றிருந்தான் அவன்.

‘இல்ல இந்த வீடு யாரோடதுன்னு..’ அவள் அவனை கலைக்க

‘எங்க தாத்தா வீடு’ என்றான் முகிலன். ‘நீங்க அமைதியான ஒரு இடத்துக்கு போகணும்ன்னு சொன்னீங்க இல்லையா? அதான் இங்கே வந்தேன். எனக்கு அமைதி தேவைப்படும் போதெல்லாம் நான் இங்கேதான் வருவேன்.’ என்றான் அவன் நிதானமாக.

‘ஓ… இத்தனை நாள் பக்கத்து வீட்டிலேயே இருக்கேன். இது உங்க தாத்தா வீடுன்னு எனக்கு தெரியாது’ என்றாள் மயூரா.

சின்ன ரசனையான புன்னகையுடன் அந்த வீட்டின் தோட்டத்தை பார்த்தபடியே அவள் பார்வையை திருப்ப அவள் பார்வையில் விழுந்தது அந்த போர்டிகோவில் நின்றிருந்த அந்த பைக். அது மிகவும் பழைய பைக் என்று மயூராவுக்கு தோன்றியது.

‘இது யார் வண்டி?’ என்றாள் அதை பார்த்தபடியே.

‘எங்க சித்தப்பா கண்ணனோடது’ என்றான் அதை விட்டு விழி அகற்றாமல். அந்த ‘கண்ணன்’ என்ற பெயரை சொன்ன போது அவனுக்குள் ஏதோ ஒரு பரவசம் வந்து போனது.

‘இது அவர் அவரோட ஃப்ரெண்ட்க்காக வாங்கினதாம். .நான் அவரை பார்த்தது இல்லைனாலும் எனக்கு மனசுக்குள்ளே அவரை ரொம்ப பிடிக்கும்’ அதை ஏனோ அவளிடம் அதை சொல்லிக்கொள்ள வேண்டும் என தோன்றியது அவனுக்கு.

‘எங்க அம்மா எங்க சித்தப்பா பத்தி அப்பப்போ சொல்வாங்க. முக்கியமா அவரையும் அவரோட ஃப்ரெண்டையும் பத்தி. அவ்வளவு கிரேட் ஃப்ரெண்ட்ஷிப்’ அவன் சிலாகித்து சொல்ல

‘ஓ…’என்றாள் இவள் அவனது முகபாவங்களை ரசித்தபடியே.

சில நொடிகள் சுற்றி இருக்கும் எல்லாவற்றையும் ரசித்தவன் ‘உள்ளே வாங்க மயூரா வெங்கட்ராமன்’ என்றான் பழைய அழுத்தமான தொனியிலேயே.

‘எங்கே வந்தாலும் இதை விட மாட்டான் இவன்’ சலித்துக்கொண்டாள் தனக்குள்ளே.

வீட்டுக்குள் நுழைந்து விழிகளில் ஓடிய மகிழ்ச்சி ரேகைகளுடன் வீட்டை அளந்துக்கொண்டே  நடந்தவன் ஒரு துள்ளலுடன் மாடிப்படி ஏறினான். அங்கே இடது பக்கம் இருக்கும் முதல் அறைக்குள் நுழைந்தான். அவன் பின்னால் நடந்தாள் இவள்.

‘வாங்க … மேடம்..’ என்றான் புன்னகையுடன். ‘அந்த மேடம் மயூரா வெங்கட்ராமனை விட நன்றாக இருப்பதாக தோன்றியது அவளுக்கு.

சில்லென்ற ஏசி காற்று வருடியது அவள் முகத்தை ‘உட்காருங்க மேடம்’ என்றான் முகிலன். அமர்ந்தாள் அவள்.

இண்டர்காமை எடுத்து ‘குடிக்கறதுக்கு ஏதாவது கொண்டு வாங்க சந்தானம்’ சொல்லிவிட்டு அவனும் அமர்ந்தான்.

சுவற்றில் மாட்டப்பட்ட பெரிய டி.வி, அறை ஓரத்தில் இருந்த ஒரு சின்ன குளிர்சாதன பெட்டி, அழகான சுவர் அலங்காரங்கள், நாடு நாயகமாக ஒரு சோபா என படு நேர்த்தியாக இருந்தது அந்த அறை

‘இது நான் பிறந்து பத்து வயசு வரைக்கும் வளர்ந்த வீடு. அதனாலே இந்த வீட்டு மேலே ஒரு சின்ன காதல் எனக்கு’ என்றான் அவள் முகம் பார்த்து.

‘காதலா? உனக்கு அதெல்லாம் கூட வருமா என்ன?’ சரியான கல்லுளி மங்கன் நினைத்து சிரித்துக்கொண்டாள் தனக்குள்ளே.

அதற்குள் குடிப்பதற்கு பழச்சாறு வர அதை அதை பருகியபடியே மெல்ல மெல்ல விழி நிமிர்த்தி சின்ன ரசிப்புடன் அவள் முகம் பார்த்தான் முகிலன். பழச்சாறை ருசித்துக்கொண்டிருந்தவளின் பார்வை திடீரென அவனை சந்திக்க சட்டென சுதாரித்துக்கொண்டவன்

‘எஸ்… மயூரா வெங்கட்ராமன்’ என அந்த பழச்சாறை டீ பாயின் மீது வைத்துவிட்டு சாய்ந்து அமர்ந்துக்கொண்டான் ‘ நாம இப்போ கதைக்கு வருவோமா?’

‘ஷ்யூர்..’ நிமிர்ந்து அமர்ந்தாள் மயூரா. ‘அடுத்து என் பெஸ்ட் ஃப்ரெண்ட். வருண் வேறே என் போன் கால்க்காக வெயிட் பண்ணுவான். நான் சீக்கிரம் பேசிட்டு கிளம்பறேன்’ என்றாள் அவனை ஓரக்கண்ணால் பார்த்தபடியே. அவனை ஏனோ சீண்டிப்பார்க்க வேண்டுமென தோன்றியது அவளுக்கு.

‘ஆ…ஹான்..’ அவன் முகத்தில் மெலிதாய் ஒரு மாற்றம்.

‘ஒரு முறை இந்த விஷயத்தில் உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன் என்பதால் இதை வைத்தே என்னிடம் விளையாடலாம் என நினைத்தாயோ பெண்ணே?’ என யோசித்தபடியே அவளை ஏற இறங்க பார்த்தான்.’

‘நான் கதைக்கு போலாம்னு சொன்னேன் மயூரா வெங்கட்ராமன்’ என்றான் சற்றே சூடாக ‘உங்க போன் கால்க்காக யாரெல்லாம் வெயிட் பண்ணுவாங்கன்னு லிஸ்ட் கேக்கலை. ஆமாம் உங்க பெஸ்…ட்…..டூ ஃப்ரெண்டையே இந்த படத்துக்கு ஹீரோவா போட வேண்டியதுதானே. எதுக்கு என்கிட்டே வந்தீங்க?’ அவன் குரலில் நிறையவே நக்கலும் அழுத்தமும்.

கண்களை நிமிர்த்தி நேராக அவன் கண்களை பார்த்தாள் மயூரா ‘எல்லா இடத்திலேயும் எல்லாரையும் வெச்சிட முடியாது முகிலன். இது உங்களுக்கான இடம். இதிலே வேறே யாரையும் நிறுத்தி பார்க்க என்னாலே முடியாது’

‘நாம கதைக்கு போகலாம்னு நினைக்கிறேன் மயூரா வெங்கட்ராமன்’’ அவள் எந்த அர்த்தத்தில் சொன்னாளோ இவனுக்கு அது எப்படி உள்ளே சேர்ந்ததோ வெடுக்கென அவளை விட்டு பார்வையை திருப்பிக்கொண்டான்.

கதையை சொல்ல ஆரம்பித்ததுமே படு உற்சாகமாகிப்போனாள். அவள் கதையை விவரித்த விதத்தில் இவனுமே வியந்துதான் போனான். இவனுமே கதைக்குள் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிப்போகும் ஒரு பிரமை. ஒரு பக்கம் அவளை பார்க்கும் போது கொஞ்சம் பெருமையாக கூட இருந்தது.

கதையோடு ஒன்றிப்போனவள் ஒரு காட்சியை விவரிக்கும் சுவாரஸ்யத்தில் எதிரில் அமர்ந்திருந்த இவனின் கையை பற்றிக்கொண்டாள். அதை அவளே அறியவில்லைதான். இவன்தான் தடுமாறிப்போனான்.

இது என்னவென்று புரியாத ஒரு சந்தோஷ பிரவாகம் அவனுக்குள்ளே. அவள் தன் பாட்டுக்கு கதையை விவரித்துக்கொண்டிருந்தாள்.

‘அவனது உடலின் அத்தனை அணுக்களும் ‘மயூரா.. மயூரா என’ கூவ. அவளை பார்த்த சில மணி நேரங்களிலேயே இது எப்படி சாத்தியம் என யோசித்தபடியே சில நொடிகள் இவன் அவள் முகத்தையே பார்த்திருக்க

‘வேண்டாம் முகிலா. இது வேண்டாம்’ உச்சந்தலையில் யாரோ சட்டென அடித்த உணர்வு அவனுக்கு.

சட்டென சுதாரித்து வெகு இயல்பாய் கையை விலக்கிக்கொண்டு மீதமிருந்த பழச்சாறை எடுத்து சோபாவில் சாய்ந்து அமர்ந்து பருகியபடியே மறுபடி கதைக்குள் தன்னை திணித்துக்கொண்டான் முகிலன்.

‘இது இவருக்கான நிரந்தர இடம் என இந்த உலகத்தில் எதுவும் இல்லை மயூரா. காலமும் நேரமும் கூடி வந்தால் எந்த இடத்திலும் யாரும் பொருந்திப்போவார்கள்’ தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் அவள் சற்று முன் சொன்ன வார்த்தைகளுக்கு பதிலாக.

கதையை முடித்துவிட்டு அவனை தவிப்புடன் அவன் முகம் பார்த்தாள் மயூரா ‘உங்களுக்கு கதை ஒகேவா?’

‘எக்சலென்ட்’ என்றான் திருப்தியான புன்னகையுடன்

‘நிஜமாவா? உங்களுக்கு பிடிச்சிருக்கா?’ பரபரத்தாள் பெண்.

‘ம்’ நிறைவாய் தலை அசைத்தான்.

‘அப்போ மத்த விஷயமெல்லாம் எப்போ…’ கேட்டவளின் முகத்தில் அப்படி ஒரு ஆர்வம்

‘யாரு ப்ரொட்யூசர்? அவன் கேட்க அவள் பெயர் சொல்ல

‘நாளைக்கு ஷ்யாம் அனுப்பறேன் அவர்கிட்டே பேச. யூ டோன்ட் வொர்ரி. படம் முடிஞ்சதுன்னு நினைச்சுக்கோங்க’ என்றான் உறுதியாக.

‘தேங்க்ஸ். தேங்க்ஸ். தேங்க் யூ சோ மச் முகிலன்’ அவள் சந்தோஷமாய் உற்சாகமாய் சிரிக்க மறுபடியும் அவளுக்குள் விழ ஆரம்பித்த மனதை காப்பாற்றி கைப்பற்றி அதை திசை திருப்பினான் முகிலன்.

‘உங்ககிட்டே பாரதியார் பத்தி ஏதாவது புக்ஸ் இருக்கா?’ கேட்டான் அவளை பார்த்து. ‘கொஞ்சம் ஹோம் வொர்க் பண்ணனும் இந்த காரெக்டர்க்கு’

‘புக்ஸ் இருக்காவா? நீங்க வேறே. அதுவும் இந்த படம் பத்தி யோசிக்க ஆரம்பிச்சதிலிருந்தே நான் இந்த புக்ஸ் கையிலே வெச்சிட்டேதான் சுத்தறேன்’ என்றபடியே அங்கிருந்த தனது கைப்பையிலிருந்து அந்த மூன்று புத்தகங்களை எடுத்து அவனிடம் நீட்டினாள் மயூரா.

‘ரொம்ப பழைய புக்ஸ்தான். ஆனா சூப்பர் புக்ஸ் மூணும். ஒண்ணு பாரதியார் கவிதைகள் அதோட விளக்கங்கள். மத்த ரெண்டும் அவர் வாழ்கையை பத்தினது. இந்த மூணு புக்கும் எனக்கு மனப்பாடம்’

‘ஆ..ஹா…ன்…’ என்றபடியே அதில் ஒரு புத்தகத்தை திருப்பி முதல் பக்கத்தை பார்த்தவனின் உடல் ஒரு முறை குலுங்கி ஓய்ந்தது. அவன் விழிகள் வியப்பில் விரிந்தன. மூன்று புத்தகங்களின் முதல் பக்கத்திலும் இருந்தது  அந்த கையெழுத்து ‘ப்ரியங்களுடன் கண்ணன்’

‘இ… இந்த புக்ஸ் உங்களுக்கு எங்கே கிடைச்சது.’ என்றான் வியப்பு மேலிட்ட குரலில்.

‘எனக்கு என்னோட பத்து வயசிலே எங்க வீட்டிலே பழைய பொருள் எல்லாம் தூக்கி போடும் போது கிடைச்ச புக்ஸ். இதிலேர்ந்துதான் நான் பாரதியார் பத்தி நிறைய தெரிஞ்சுகிட்டேன்.’

‘இது எங்க சித்தப்பா புக்ஸ் மாதிரி தெரியுது. கண்ணன் அவர்தான்’ என்றான் முகிலன் புத்தகத்தை அவசரமாக திருப்பிக்கொண்டே.

‘அது எப்படி எங்க வீட்டுக்கு வந்ததுன்னு தெரியலையே’

‘அது அவரோட ஃப்ரெண்ட் பக்கத்து வீட்டிலே இருந்தார்னு சொல்வாங்க எங்க அம்மா. அவருக்கு ஒரு வேளை இவர் கொடுத்திருக்கலாம். இன்னமும் அவன் விழிகள் அந்த புத்தகத்தை விட்டு அகலவில்லை.

‘ஏன் அந்த வீட்டிலே ஃப்ரெண்ட் மட்டும்தான் இருந்தாராமா? வேறே பொண்ணு யாரும் இருந்தா அவளுக்கு கூட கொடுத்திருக்கலாம் இல்லையா? பட்டென கேட்டுவிட்டாள் மயூரா.

‘பொண்ணா?’ இவன் புருவங்கள் ஏறி இறங்கின. அம்மா மீராவை பற்றிய கதைகளை அவனிடம் சொன்னதில்லைதான். வியப்புடன் அவள் முகம் பார்த்தான் முகிலன் ‘ஏன் அப்படி சொல்றீங்க?’

‘தெரியலை என்னவோ தோணிச்சு. சொன்னேன். பைக்கும் ஃப்ரெண்ட்க்கு புக்கும் ஃப்ரெண்ட்க்கா?’ சின்னதாய் ஒரு ஏக்கம் தொனித்தது போல் இருந்தது அவள் குரலில். அதை புரிந்துக்கொண்டதை போல் அவன் அவளை  ஆராய்ச்சி பார்வை பார்க்க

‘ஆமாம் . இப்போ உங்க சித்தப்பா எங்கே இருக்காங்க?’ சட்டென திசை மாற்ற முயன்றாள் அவள்.

‘ம்?’ அந்த கேள்வியில் திடுக்கிட்டது போல் அவளை பார்த்தான் முகிலன்.

‘இல்ல உங்க சித்தப்பா எங்கே இருக்காங்கன்னு கேட்டேன். ஒரு வேளை அவர் இல்லையோ? சாரி’

‘இல்ல மயூரா வெங்கட்ராமன். அவர் இருக்கார்’ என்றான் இவன் அழுத்தமாக.

‘இருக்காரா?  எங்கே?’ இவள் பரபரப்பாக கேட்க

‘அதெல்லாம் உங்களுக்கு இன்னொரு நாள் சொல்றேனே. இப்போ ஐ நீட் எ பிரேக். ஷூட்டிங்லேர்ந்து வந்து அப்படியே கிளம்பி வந்திட்டேன்’

‘‘ஷ்யூர்.. ‘ஷ்யூர்….. நான் கிளம்பறேன்..’ சொன்னவள். ‘நீங்க ரிலாக்ஸ் பண்ண என்ன பண்ணுவீங்க. பாட்டு கேட்பீங்களா?’ என்றாள் அவன் முகம் பார்த்து.

‘மொட்டை மாடியிலே வானத்தை பார்த்து படுத்திட்டு இருப்பேன். அதை விட பெரிய ரிலாக்சேஷன் கிடையாது எனக்கு. எப்பவுமே எல்லா வீட்டு மொட்டை மாடியும் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். அதுவும் இந்த வீட்டு மொட்டை மாடி ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். சின்ன வயசிலே ஓடி விளையாடின இடம்’ அவன் சிலாகித்து சொல்ல

‘ஓ கிரேட்.. என்ஜாய்..’ சொல்லிவிட்டு விடைபெற்று நகர்ந்தாள் அவள்

அவள் தனது வீட்டுக்குள் செல்வதற்குள் இவன் மொட்டை மாடிக்கு வந்திருந்தான். அவன் அங்கிருந்து வீட்டுக்குள் செல்பவளையே பார்த்திருக்க, அவள் அங்கிருந்து இவனை பார்த்து கையசைத்துவிட்டு நகர ஒரு ஆழ்ந்த மூச்சுடன் தரையில் சாய்ந்தான் முகிலன்.

அடுத்து வரப்போகும் மழைக்கான அறிகுறிகளுடன் வானம் தயாராகிக்கொண்டிருக்க.

‘ஏன் அந்த வீட்டிலே அவர் ஃப்ரெண்ட் மட்டும்தான் இருந்தாராமா? வேறே பொண்ணு யாரும் இருந்தா அவளுக்கு கூட கொடுத்திருக்கலாம் இல்லையா? அவளது அந்த கேள்வியும், அந்த நேரத்து அவளது முக பாவமும் அவனுக்குள் ஏனோ இப்போது சிரிப்பை விதைக்க

‘சரி அப்படியே வைத்துக்கொள்வோம். அவர் ஒரு பெண்ணுக்கு கொடுத்ததாகவே இருக்கட்டும்’ தனக்குள்ளே சொல்லியபடியே அங்கே வீசிய குளிர் காற்றை சுவாசிக்கலானான் முகிலன்.

                                  தொடரும்…..

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!