VathsalaRagavan’s Priyangaludan Mugilan – 5
VathsalaRagavan’s Priyangaludan Mugilan – 5
ப்ரியங்களுடன் முகிலன் 05
நிலவை பார்த்து புன்னகைத்தான் முகிலன். நிலவுமே பதிலுக்கு முகிலனை பார்த்து புன்னகைத்திருக்க வேண்டுமோ?
‘ஏன் இப்படி செய்தான்? ஏன் இந்த திருமணத்தை நிறுத்தினான்? வருண் எப்படி போனால், யாரை திருமணம் செய்தால் இவனுக்கென்ன?’ இவனுக்கும் வருணுக்கும் என்னதான் சம்மந்தம்? சரியாக சொல்ல வேண்டுமென்றால் இந்த கேள்விகளுக்கான விடைகள் முகிலனுக்கே தெரியவில்லைதான்.
சில கேள்விக்கான பதில்களும், சில மௌனங்களுக்கான அர்த்தங்களும் மனிதர்களை விட இயற்கைக்கே அதிகம் தெரியுமோ? ஆனாலும் முகிலனிடம் எதுவும் சொல்லாமல் மேகங்களின் பின்னால் ஒளிந்துக்கொண்டது அந்த நிலவு.
மொட்டை மாடியின் தரையில் புரண்டு புரண்டு படுத்தான் முகிலன். சற்று முன் அவனது தந்தை அவனிடம் நடந்துக்கொண்ட விதம் அதுவேதான் அவனுக்குள் இப்போது சுழன்றுக்கொண்டிருந்தது.
கோபம் அவருக்கு. கண் மண் தெரியாத கோபம் அந்த மனிதருக்கு. அவருக்கே இத்தனை கோபம் என்றால் அவர் மகன் எனக்கு அதை விட இரு மடங்காக வராதா என்ன?
சற்று முன்
சோபாவில் சாய்ந்து அமர்ந்துக்கொண்டு தனது அறையின் சுவற்றில் இருந்த அந்த பெரிய டிவி.யில் பார்வை பதித்தபடியே கையிலருந்த பழச்சாற்றை பருகிக்கொண்டிருந்தான் முகிலன்.
எல்லா செய்தி சேனல்களிலும், எல்லா செய்திகளிலும் வருணும், அனுபமாவுமே இடம் படித்திருந்தனர். அவளது பத்திரிக்கையாளர் சந்திப்பையே மாற்றி மாற்றி காட்டிக்கொண்டிருந்தார்கள்.
அறைக்கதவை உடைக்காத குறையாக படாரென திறந்துக்கொண்டு உள்ளே வந்தார் அமுதன் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் இருக்கையை விட்டு எழுந்தான் முகிலன். எப்படியும் அவர் வந்து இவனிடம் வெடிப்பார் என இவன் எதிர்ப்பார்த்துக்கொண்டேதானே இருக்கிறான்.
ஒரு முறை அவரை பார்த்துவிட்டு எதுவுமே நடக்காதது போல் இவன் சர்வ சாதரணமாக பழச்சாறை பருக கொதித்து போனார் தந்தை. அடுத்த நொடி பளாரென அவன் கன்னத்தில் பதிந்தது தந்தையின் கரம். எதிர்பார்க்காத அந்த திடீர் அடியால் சற்றே தடுமாறியவனின் கையிலிருந்து தரையில் கொஞ்சமாய் சிந்தியது பழச்சாறு.
சடக்கென விழி நிமிர்த்தி அவரை அவன் பார்க்க இன்னமும் தணியாத கோபத்துடன் மறுபடியுமாக உயர்ந்த அவர் கரம் கோப ரேகைகளுடன் பெரிதாய் விரிந்த இவன் பார்வையில் மெல்ல கீழிறங்கியது.
ஒரு முறை அவரை ஏற இறங்க பார்த்துவிட்டு, மீசையை நீவி விட்டுக்கொண்டு அவரிடமிருந்து பார்வையை திருப்பிக்கொண்டு சர்வ சாதரணமாக மறுபடியும் பழச்சாற்றை பருகலானான் முகிலன்.
சரியாக சொல்ல வேண்டுமென்றால் அவனுக்குள் சின்னதாய் ஒரு சந்தோஷ பூ பூத்திருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். எப்போதாவது அதிசயமாக அவனுக்கு கிடைக்கும் தந்தையின் ஸ்பரிசம் இப்போது திடீரென கிடைத்ததால் வந்த சந்தோஷம் மகனுக்கு.
சிறு வயதிலிருந்தே அவர் அவனை தொடுவதே அடிப்பதற்காகத்தான் இருக்கும். அதுவும் எப்போதாவது!
உச்சக்கட்ட ஆத்திரம் அவருக்கு ‘திமிருடா உனக்கு. ரத்தம், நாடி நரம்பெல்லாம் திமிரு’ தந்தை உறும திரும்பவில்லை மகன்.. கோப்பையில் இருந்த பழச்சாறு இன்னமும் தீரவில்லையே ருசித்து சுவைத்து அதை பருகிக்கொண்டிருந்தான் அவன்
‘ப்ரெஸ் மீட் வெச்சு அவளை பேச வைக்கறியாடா? வருணுக்கு யாருமில்லன்னு நினைச்சியா? நான் இருக்கேன்டா அவனுக்கு நாளைக்கு காலையிலே பத்து மணிக்கு…… நான் வைக்கிறேன் பார் ஒரு ப்ரெஸ் மீட். அதோட உன் மானம் மரியாதை எல்லாம் பறந்து போகப்போகுது’ சீறினார் அவர்.
இந்த விஷயத்தில் இவனை மன்னிக்கவே முடியாது என்ற ஒரு வெறி அவருக்குள்ளே. என்னதான் நடந்திருக்கும் என யோசித்தே பார்க்க தோன்றாத வெறி.
அசரவே இல்லை முகிலன். அவரிடம் ஒற்றை வார்த்தை பேசாமல் பழச்சாற்றை குடித்து முடித்துவிட்டு சோபாவில் அமர்ந்துக்கொண்டு டி.வி சேனல்களை உருட்டலானான்.
‘மகன் மீது இருக்கும் நம்பிக்கையை விட மற்ற எல்லார் மீதும் அவருக்கு இருக்கும் நம்பிக்கை அதிகம்’ மெல்ல சிரித்துக்கொண்டான் முகிலன்.
‘நாளையோட உனக்கும் எனக்குமான சம்மதம் முடிஞ்சுதுடா. பாரு. இன்னும் பன்னெண்டு மணி நேரத்திலே பாரு நான் அவனை என்னோட சினிமா வாரிசுனு சொல்றதுதானே உனக்கு கோபம். நான் போறேன்…. நான் மொத்தமா வருண் கிட்டே போறேன். அப்போ என்ன பண்றேன்னு பார்க்கிறேன். இனி நான் உன் முகத்திலே முழிக்க மாட்டேன், நீயும் என்னை பார்க்க வாராதே’ பேசப்பேச மூச்சிரைத்தது அவருக்கு.
மெதுவாய் அவர் பக்கம் திரும்பினான் முகிலன்.
‘ஏன் இப்படி டென்ஷன் ஆகறீங்க? என்றான் படு நிதானமாய். ‘பாருங்க பேசினாலே மூச்சு வாங்குது உங்களுக்கு. முதல்லே உங்க உடம்பை பார்த்துக்கோங்க. அப்புறம் அடுத்தவங்க விஷயத்தை பத்தி எல்லாம் கவலை படலாம்’
‘எவ்வளவு பெரிய தப்பை பண்ணிட்டு இப்படி ஒண்ணுமே நடக்காத மாதிரி இருக்கியேடா? உன்கிட்டே எல்லாம் நின்னு பேசிட்டு இருக்கேன் பார் என்னை சொல்லணும் ச்சே…’ .அவனிடம் வெடித்துவிட்டு அறையை விட்டு விறுவிறுவென வெளியேறினார் அமுதன்.
ஏதேதோ யோசனைகளுடன் மாடியில் படுத்து புரண்டுக்கொண்டிருந்த முகிலனின் நாசியை தொட்டது அந்த நாற்றம். சிகரெட் புகையின் நாற்றம். அவனது உடலின் ஒவ்வொரு அணுவும் ஏனோ குலுங்கி துடித்து எழுந்தது.
‘யாரது? யாரது சிகரெட் புகைப்பது பதறிக்கொண்டு எழுந்து நின்றான் முகிலன்.
அவன் உடல் முழுவதும் நடுங்குவது போல் ஒரு உணர்வு கைப்பிடி சுவற்றுக்கு அருகில் வந்து அவன் பார்வையை சுழற்ற கீழே வீட்டின் செக்கியூரிட்டி சிகரெட் புகைத்துக்கொண்டிருந்தான்
படபடவென படிகளில் இறங்கி ஒரு சில நொடிகளில் அவனை அடைந்து ருத்திர மூர்த்தியாக அவன் முன்னால் நின்றான் முகிலன். சற்றே வெடவெடத்து போனான் அந்த காவலாளி. முகிலனின் கண்களில் அப்படி ஒரு தீவிரம். முகிலனிடம் வேலைக்கு வரும் அனைவரிடமும் அவன் போடும் முதல் கட்டளை அவர்கள் புகை பிடிக்க கூடாது என்பதே.
‘சாரி… சாரி சார்..’ அவசரமாக சிகரெட்டை கீழே போட்டு காலால் அணைத்தான். அங்கே சுற்றி இருந்த புகை முகிலனை என்னவோ செய்தது. அவனையே எரிக்கும் பார்வை பார்த்தவன் தன்னை சற்றே நிதான படுத்திக்கொண்டு சொன்னான்.
‘இந்த மாசம் உனக்கு சம்பளம் கிடையாது’
‘சார்… சார்… ப்ளீஸ்…சார்’ அவன் கெஞ்ச அவன் முன்னால் நீண்டது முகிலனின் ஆள்காட்டி விரல். ‘இதுக்கு மேலே ஏதாவது பேசினா உனக்கு வேலையே போயிடும்’ கொஞ்சம் திடுக்கிட்டு மௌனமானான் காவலாளி. முகிலன் சொன்னால் செய்து முடித்து விடுவான் என தெரியுமே அவனுக்கு.
‘இன்னொரு தடவை அதை கையாலே தொடாதே’ உறுதியாய் அவனிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான் முகிலன். அவனுக்குள் அலையடித்துக்கொண்டே இருந்தது. மறுபடியும் மொட்டை மாடிக்கே சென்று படுத்துக்கொண்டான் அவன்.
சிகரெட்!!
பொதுவாக எதையுமே அதிரடியாகவே செய்து பழக்கப்பட்டவன் முகிலன். பயம் என்ற வார்த்தைக்கு பொருளே அறியாதவன்தான். ஆனால் இந்த சிகரெட்?
சிறு வயதிலிருந்தே அதாவது கிட்டதட்ட மூன்று நான்கு வயதிலிருந்தே இந்த சிகரெட் புகையும் வாசமும் அவனை என்னவோ செய்யும். உடல் மொத்தமும் நடுங்கிப்போகும். ஏன் இப்படி? அந்த சிகரெட்டில் அப்படி என்னதான் இருக்கிறது என்ற காரணம் மட்டும் அவனுக்கு புரிந்ததே இல்லை.
இவன் சிறுவனாக இருந்த காலத்தில் எல்லாம் அப்பா நிறைய புகைபிடிப்பார். அவ்வபோது குடிக்கவும் செய்வார். இப்போது இதய நோய் வந்த பிறகுதான் எல்லாவற்றையும் நிறுத்தி இருக்கிறார்.
அவர் பழக்கங்களினாலேயே அப்பாவை விட்டு எப்போதும் சற்றே விலகியே நிற்பான் முகிலன். அப்பாவுமே அவனிடம் அதிகம் ஒட்டியதே இல்லை. முதலில் நடிகனாக இருந்த போதும் சரி. இயக்குனராக மாறிய போதும் சரி அவரது குடும்பத்தை விட படங்கள் மீதுதான் அவருக்கு கவனம் அதிகம்.
அப்போதெல்லாம் ஒரு சில நேரங்களில் புகை வாசத்துடனே அவனை கொஞ்ச வருவார் தந்தை. இவனுக்கு குலை நடுங்கும்.
‘உன்னை எனக்கு பிடிக்கலை போ..’ அவரிடம் விலக இவன் முயலும்போது பட்டென இவன் கன்னத்தில் பதியும் அவர் கரம் ‘போடா.. நீ உங்க அம்மாகிட்டேயே போ..’
அம்மா! படிப்பா? விளையாட்டா? சந்தோஷமா? வருத்தமா? எல்லாவற்றுக்கும் அவனுக்கு அம்மா மட்டுமே துணை. வளர வளர அப்பா இவனிடம் ஒட்டவே இல்லை.
விவரம் தெரிய ஆரம்பித்த பிறகு அப்பா அம்மாவிடமாவது ஓட்டுகிறாரா? என்ற கேள்வி இவனை அவ்வப்போது வந்து தொட்டுவிட்டு செல்லும். இதற்கும் அம்மா இவனுக்கு ஒரு நாள் பதில் சொன்னாள்
அம்மா இந்த உலகத்தை விட்டு பிரிந்து பத்து வருடங்கள் ஆகின்றன. இவனது இருபது வயதில் இவனை விட்டு போனாள் அவள். அதற்கு முன்னால் ஒரு நாள் அவள் கதையை இவனுக்கு சொன்னாள்.
‘அம்மா அப்பாவுக்கு உன்னையும் பிடிக்காதாமா? இவன் மெல்ல கேட்க
‘பிடிக்கும்டா. ஆனா கொஞ்சமா பிடிக்கும்’ என்றாள் அவள். இவன் புரியாமல் பார்க்க
‘உனக்கு மட்டும் சொல்றேன். மனசுக்குள்ளேயே வெச்சுக்கோ’ என்றவள் தொடர்ந்தாள் ‘நான் அப்பாவோட அத்தை பொண்ணுடா. அது உனக்கு தெரியும்தானே. எங்க கல்யாணத்துக்கு முன்னாடி அவர் கூட நடிச்ச ஒரு ஹீரோயினை அவர் லவ் பண்ணி இருக்கார். வீட்டிலே அதுக்கு ஒத்துக்கலை. கட்டாய படுத்தி எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க. அப்பாவால அவளை மறக்கவே முடியலைடா. முதல் காதல்னா அப்படிதான் இருக்கும் போல’
அம்மா சற்றே இடறும் குரலில் சொல்ல வார்த்தைகளே இல்லை முகிலனிடத்தில்.
எங்க கல்யாணத்தின் போது வீட்டிலே அவர் அப்பா அம்மாவுக்கு அவர் மட்டும்தான் இருந்தார். அவங்களை அவரால் எதிர்க்க முடியலை. என்னை கல்யாணம் பண்ணிகிட்டார். அதுக்கு அப்புறம் எனக்கு குறைன்னு அவர் எதுவும் வெச்சதும் இல்லை. வேறே எந்த பொண்ணையும் அவர் அதுக்கு அப்புறம் நிமிர்ந்து பார்த்ததும் இல்லை. ஆனா எதுக்கு எடுத்தாலும் கோபம் வரும் அவருக்கு. என்கிட்டே அவராலே ஏனோ முழுசா ஓட்ட முடியலைடா. இப்படியும் அப்படியுமா எங்க வாழ்கையை ஓட்டிட்டோம்’
‘எனக்கு இன்னொரு சந்தேகமும் உண்டு முகிலா. இதுக்கெல்லாம் பழைய காதல் மட்டும்தான் காரணமா இல்லை மனசிலே வேறே எதுவும் காயம், குற்ற உணர்ச்சின்னு இருக்குமான்னு? அதனாலேயே நம்ம எல்லார் மேலேயும் கோபமோன்னு ஒரு சந்தேகம்’
சிலையாகிப்போனவனாய் அம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தான் முகிலன்.
‘நானும் எத்தனையோ முயற்சி பண்ணி உன்னையாவது அவர்கிட்டே ஓட்ட வெச்சிடணும் பார்க்கிறேன். அதுவும் நடக்க மாட்டேங்குது. அவருக்கு நான்தான் உன்னை அவர்கிட்டே ஓட்ட விடாம பண்ணிட்டேன்னு ஒரு எண்ணம். ஒரு வேளை அம்மா திடீர்னு இல்லாம போயிட்டா..’ அவள் சொல்ல
அந்த வார்த்தையை தாங்கிக்கொள்ள முடியாமல் இவன் ;’அம்மா..’ என இடையில் புக
‘இல்லடா.. அம்மாவுக்கும் உடம்பு முடியலைடா. அப்படி ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா நீ அப்பா சொல்படி கேட்டு நடந்துக்கோ. என்னதான் இருந்தாலும் அவர் உன் அப்பா. அவரோட சண்டை போடாதே’ என்றாள் அம்மா.
அந்த நினைவுகளில் இவன் மனம் அழுந்தி வலித்தது. ‘இப்பவும் நான் சண்டை போடலைமா. அப்பாகிட்டே எந்த சண்டையும் போடலை’ அம்மாவிடம் வாய்விட்டு சொல்லிக்கொண்டான் முகிலன்.
அம்மா அதை சொல்லி இரண்டு வருடங்களுக்குள் அவள் இல்லாமல் போயிருந்தாள்.. அந்த இழப்பிலிருந்து மெல்ல மெல்ல வெளியே வந்தவன் அப்பாவை நோக்கி திரும்ப அதன் பிறகும் அப்பா இவனிடம் அதிகம் ஒட்டவில்லைதான்.
‘இப்போ மட்டும் உனக்கு அப்பா வேணுமாடா’ என்பார் சில நேரங்களில். பதில் இருக்காது இவனிடத்தில்.
இவனது கல்லூரி படிப்பு முடிந்த காலகட்டம் அது. தானும் சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற ஆவல் மெல்ல எழுந்தது இவன் மனதில். நிறைய யோசித்துவிட்டு ஒரு நாள் அப்பாவின் முன்னால் சென்று நின்றான் அவன்.
அப்போது அவர் புதிதாக ஒரு திரைப்படம் இயக்கப்போவதாக ஒரு செய்தி அவன் காதுகளை எட்டி இருந்தது. தனது வாழ்நாளில் முதலும் கடைசியுமாக முகிலன் ஒருவர் முன்னால் தன்னிலை விட்டு இறங்கி பேசியது அந்த ஒரு நாள் மட்டுமே.
‘அப்பா..’ மெதுவாய் அழைத்தான் முகிலன்.
‘ம்?’ என்றார் அன்றைய தினசரியில் பதிந்திருந்த அவரது பார்வையை நிமிர்த்தாமல்.
‘புது படம் எடுக்கறீங்களாபா?’
‘ம்’
‘நான் உங்க படத்திலே ஹீரோவா நடிக்கறேன்பா’ மெலிதாய் ஒரு கெஞ்சல் அவன் குரலில். விருட்டென விழி நிமிர்த்தினார் அப்பா.
‘வாடா என் அருமை மகனே. உனக்குத்தான் என்னை பிடிக்காதே. என் படத்திலே நீ நடிச்சா சரியா வராதே. வேண்டாம்’ விழிகளில் கோபம் மின்ன சொன்னார் அவர்.
‘இல்லப்பா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்’
‘பிடிக்குமா? அம்மா இருக்கிற வரைக்கும் அப்பன்னு ஒருத்தன் இருக்கிறதே உனக்கு கண்ணுக்கு தெரியலையேடா. என்னைக்காவது ஒரு நாள் அப்பானு என் பக்கதிலேயாவது வந்து உட்கார்ந்து பேசி இருக்கியா நீ.’
சற்றே திகைத்தவனாய் அவன் அவரையே பார்த்திருக்க
‘இப்போ மட்டும் உனக்கு அப்பா வேணும். அப்பா எடுக்குற படத்திலே நடிக்கணும். பெரிய பேர் எடுக்கணும். என்னோட சினிமா வாரிசுன்னு வேறே சொல்லிக்கணும். அதானே? மாட்டேன். இந்த படத்திலே ரோட்டிலே போற எவனையாவது கூட்டிட்டு வந்து ஹீரோவாக்க போறேன். இந்த படம் பெரிய ஹிட் ஆகும். அதுக்கு அப்புறம் அவனைத்தான் என் வாரிசுன்னு சொல்ல போறேன்’ என்றார் அவர். சொன்னதை செய்தும் முடித்தார்தான்.
‘நிஜமாகவே சொந்தமென்று சொல்லிக்கொள்ள யாருமில்லாமல், பெரிய படிப்பு நிரந்தர வேலை என எதுவுமில்லாமல் சுற்றிக்கொண்டிருந்தவன்தான் வருண். அவனை அழைத்து வந்து நடிக்கவும் வைத்தார். அவன் இயற்பெயர் என்னவோ? இவர்தான் அவனுக்கு வருண் என பெயர் வைத்தார். அவர் சொன்னதைப்போலவே படம் பெரிய வெற்றி பெற்றது.
அதன் பிறகு ஒவ்வொரு சந்தரப்பதிலும் பல நிகழ்சிகளிலும் வருணை இவரது கலை வாரிசு என சுட்டிக்காட்ட தவறவே இல்லை அப்பா. அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இவன் உள்ளம் சுக்கு நூறாக உடையவும் தவறவில்லை. அதன் பிறகு மெல்ல மெல்ல இவன் மனம் வருணையும் எதிரியாக பார்க்க துவங்கியது.
வருணுக்கு அமுதன் இருந்தார் என்றால் இவனுக்கும் சில இயக்குனர்கள் இருந்தார்கள். இவனை தேடி வாய்ப்புகள் வந்தன. மடமடவென திரைத்துறையில் மேலே ஏற துவங்கியவன் ஒவ்வொரு பேட்டியிலும், ஒவ்வொரு விழாவிலும் பேசும் போதெல்லாம் வருணை உரசிவிட்டுதான் வருவான்.
வருணும் அதையே செய்ய ஆரம்பிக்க இருவரும் பெரிய எதிரிகளாகி போனார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக்கொள்வதையே தவித்தார்கள். வாரிசு வாரிசு என அவனை தூக்கி வைத்து இதோ நாளை அவனையே மகனாக்கிகொள்ள போகிறார். போகட்டும். இதற்கெல்லாம் கவலை படும் ஜென்மம் இல்லை இந்த முகிலன்.
ஆனால் அதன் பிறகு என்ன செய்வானாம் வருண்? இந்த கேள்வி அவனை கொஞ்சம் உறுத்தியது. மெல்ல நிமிர்ந்து நிலவை பார்த்தான் முகிலன்
‘இதோ உன் கல்யாணத்தை நிறுத்தி இருக்கேன். எங்கப்பா உன்கிட்டே வரப்போறார் அடுத்து நீ என்னடா செய்வே? பார்த்துடலாம். அதையும் பார்த்திடலாம்’
மறுநாள் காலை. சுள்ளென்ற வெயில் முகத்தில் அடிக்க மெல்ல விழி திறந்தான் முகிலன். அங்கே மொட்டை மாடியில் இவனையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் ஷ்யாம்.
‘குட் மார்னிங் சார்’
‘மார்னிங் ஷ்யாம்’ என்றபடி எழுந்து அமர்ந்தான் முகிலன்.
‘சார்…’ என்றான் தயக்கத்துடன்
‘ம்?’ என்றபடியே தனது கேசத்தை இரண்டு கைகளாலும் கலைத்து தட்டிவிட்டுக்கொண்டான் முகிலன்.
‘அப்பா வருண் வீட்டுக்கு போறார் போலிருக்கு சார்’
‘நான் அவரை போக சொல்லலை ஷ்யாம்’ வெகு இயல்பாய் சொல்லிக்கொண்டே எழுந்தான் முகிலன்.
‘இல்ல சார்… அவர் அங்கே போறது நல்லாவா இருக்கும்?’ ஷ்யாம் இழுக்க
இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு ஷ்யாமை ஏற இறங்க பார்த்தான் முகிலன் ‘ஆஹான்? நான் கீழே போய் படத்திலே எல்லாம் வர மாதிரி அவர் காலிலே விழுந்து, கெஞ்சி அவர் வண்டி பின்னாலேயே ஓடணும்னு சொல்றியா? சினிமாவிலே கூட நான் அந்த மாதிரி சீன் எல்லாம் நடிக்க மாட்டேன். முகிலன் எப்பவும் முகிலன்தான். அண்டர்ஸ்டான்ட்’
‘சார்…’ ஷ்யாம் ஏதோ சொல்ல முயல
‘எனக்கு பசிக்குது ஷ்யாம். நான் போய் குளிச்சிட்டு வரேன். நீ ரூமுக்கு பிரேக்ஃபாஸ்ட் எடுத்திட்டு வா. நான் கீழே போனால் அவர் போடற சீன் எல்லாம் பார்த்து எனக்கு கடுப்பாகும். அலட்டிக்கொள்ளாமல் சொல்லிவிட்டு விறுவிறுவென படி இறங்கி சென்றுவிட்டிருந்தான் முகிலன்.
தொடரும்…..