vav-16

vav-16

வா… அருகே வா! –  16

            அந்த வாகனத்திற்குள் அசாதாரண மௌனம் நிகழ, பூங்கோதையின் இதயம், “லப்டப்… லப்டப்…” என்று அதிவேகமாகத் துடித்து, அங்கிருப்பவர்கள் செவிகளிலும் கேட்டது.

            பூங்கோதையின் பயத்தை அறிந்து கொண்ட, அவள் அருகில் தாடி வைத்து அமர்ந்திருந்தவன், “யூ லவ் யுவர் ஹஸ்பண்ட்?” என்று அவன் கேள்வியாக நிறுத்த, ‘லூசா இவன், யாரவது புருஷனை விரும்பாதவளா இருப்பாகளா? இப்படி கேள்வி கேட்குறான்!’ என்ற எண்ணம் தோன்றினாலும், சூழ்நிலை கருதி அதை வெளியிட விரும்பாமல், தன் தலையை மேலும் கீழும் அசைத்தாள்.

           அதன் பின் அங்கு மௌனமே அரங்கேறியது. அதிவேகமாகச் சென்ற அந்த வாகனம், கரடுமுரடான பாதையில் பயணிக்க பூங்கோதையின் அச்சம் அதிகரித்தது.

            ‘யாரும் ஏன் எதுமே பேசமாட்டேங்கறாக? நாம ஏதாவது கேட்கலாமா? கேட்டா பதில் சொல்லுவாகளா?’ போன்ற கேள்விகள் எழுந்தாலும், கேட்பதற்கு அச்சப்பட்டு, ‘எது வந்தாலும், சந்திப்போம்.’ என்ற எண்ணத்தோடு அமைதியாக அமர்ந்திருந்தாள் பூங்கோதை.

                                   அந்த வாகனம் சரேல் என்று நிற்க, தன் கண் கட்டினை அவிழ்க்க முயன்றாள் பூங்கோதை.

   அவள் செய்கையைப் பார்த்துவிட்டு, பூங்கோதையை  ஒரு கரடுமுரடான குரல்  மிரட்ட, வேறு வழியின்றி அவர்கள் சொற்படி அவர்களை பின் தொடர்ந்தாள் பூங்கோதை.

    கண்களைத் திறக்கக் கூடாது என்று எச்சரித்துவிட்டு பூங்கோதையை அவர்கள் வழி நடத்த, அந்த கதவு படாரென்று அடைத்துக் கொண்டது.

          ‘அருகே யாரும், இருக்கிறார்களா? இல்லையா?’ என்ற கேள்வி எழ, தன் கண்களைத் திறக்காமல், பூங்கோதை  அந்த அறைக்குள் மௌனமாக நடந்தாள்.

அப்பொழுது அவள் கால்களில் எதோ தட்டுப்பட, அதை கைகளில் எடுத்து அதை மெல்லத் தடவிப் பார்த்தாள். அதைத் துப்பாக்கி என்றறிந்ததும், அதைத் தூக்கி எறிந்துவிட்டு வேகமாக பின்னே நகர, கால்தடுக்கி பின் பக்கமாகச் சரிந்தாள் பூங்கோதை.

                               பூங்கோதை விழுந்த இடம் மென்மையாக பூக்குவியலைப் போல் இருக்க, பூங்கோதையின் மனதில் அச்சம் மறைந்து, ‘இது மிலிட்டரி வேலையோ?’ என்ற சந்தேகம் எழுந்தது.

     தன்னை நிதானித்து, அவள் எழுந்து தன் கண்களைத் திறக்க, அவள் கைகளை ஒரு கை இறுகப் பற்றி, சுவரோடு சாய்த்தது.

                       பூங்கோதையின் சந்தேகமாக மாறி இருந்த அவள் அச்சம், இப்பொழுது கோபமாக உருவெடுத்து அசட்டையாகச் சுவர் மீது சாய்ந்து நின்றது.

   மெல்லமாக அந்த துப்பாக்கி, அவள் முகத்தைத் தீண்ட, தன் முகத்தை வலது பக்கமாக சடாரென்று கோபமாகத் திருப்பிக் கொண்டாள் பூங்கோதை.

அந்த துப்பாக்கி அவள் முகத்தை தன் பக்கம் திருப்ப முயன்று தோற்றுப் போனது. துப்பாக்கி  தேகமெங்கும் தீண்ட, பூங்கோதையின் உடல் சிலிர்த்தது.

            அவன் மூச்சுக் காற்று, அவள் ஸ்பரிசத்தை தீண்டி, “பியூட்டி…” என்று ஆசையாக ஒலித்தது. பூங்கோதையிடம் பதில் இல்லாமல் போக, “பியூட்டி, கோபமா?” என்று அவன் குரல் கொஞ்சியது.

       பூங்கோதை எதுவும் பேசாமல் போக, தன் கைகளிலிருந்த மணியை அவள் கழுத்தில் அணிவிக்க, “மிலிட்டரி கண்ணை திறக்கணும்.” என்று அழுத்தமாகக் கூறினாள் பூங்கோதை.

                 “கொஞ்சம் நேரம் பியூட்டி…” என்று கூறிக்கொண்டே, அவன் அவளைத் தழுவ, பூங்கோதை அவன் தொடுகையில் தன் வசம் இழந்தாள்.

  அவன் கைகள், அவள் வெற்றிடையை தழுவி, அவன் கட்டிய மணி ஒவ்வொன்றையும், ஆராய்ந்து கொண்டே, “ஏன் பியூட்டி, எனக்கு ஒரு கடுதாசி கூட போடலை.” என்று கேட்டுக்கொண்டே அவளைச் சுற்றி வளைத்தது.

      அந்த நெருக்கத்தை ஏற்க, முடியாமல் பூங்கோதையின் உடல் இறுக, “பியூட்டி…” என்று பதட்டத்தோடு விலகினான் திலக்.

அவசரமாக அவள் கண் கட்டுகளைத் திறக்க, அவள் கண்கள் கண்ணீரைச் சொரிந்தது.

          “பியூட்டி?” என்று பதட்டத்தோடு அவன் கைகளிலிருந்த பொம்மை துப்பாக்கியைத் தூக்கி வீசிவிட்டு, அவள் கண்களைத் துடைக்க, அவன் கைகளை சடாரென்று தட்டிவிட்டாள் பூங்கோதை.

          “மிலிட்டரி, நான் உனக்கு கடுதாசி  போடலைனா, இப்படித்தேன் பண்ணுவியா?” என்று அவன் சட்டை காலரைக் கொத்தாகப் பிடித்திருந்தாள் பூங்கோதை.

      “பியூட்டி… நான் எதுமே வேணும்ன்னு பண்ணலை பியூட்டி. உண்மையிலே ஒரு இக்கட்டான பணித்தேன். நான் உன்கிட்ட பேச முடியாத சூழ்நிலையில்த்தேன் இருந்தேன். கடுதாசி கூட போட முடியலை. எல்லாம் சரியாகுறதுக்குள்ள, நீ கிளம்பிட்ட பியூட்டி. கதிரேசன் சொல்லிட்டான், நீ கிளம்பியதை. அதுதேன், சும்மா விளையாண்டேன் பியூட்டி. ரொம்ப  பயந்திட்டியா?” என்று அவன் அவளை தன் தோளில் சாய்த்து சமாதானம் செய்ய, அவள் அவனிடமிருந்து விலகி நின்று கொண்டாள்.

       “பியூட்டி… மன்னிச்சிரு. கல்யாணம் முடிஞ்சி, நான் உன்னை எங்கனையும் கூட்டிட்டு போகலை. கதிரேசன் கல்யாணத்துக்கு லீவு கேட்டிருக்கேன். நீ வரேன்னு தெரிஞ்சத்தும், ஒரு பத்து நாள், நாம இங்கன சுத்திட்டு, அப்புறம் கல்யாணத்துக்கு ஒண்ணா போகலாமுன்னு நினச்சேன் பியூட்டி.” என்று திலக் பூங்கோதையிடம் கண்களால் கெஞ்சினான்.

        “அப்ப, நான் கிளம்புற அன்னைக்கு கதிரேசன் அத்தானுக்கு எல்லாம் தெரியும். அப்படி தானே?” என்று விசும்பலோடு கேட்டாள் பூங்கோதை.

        திலக், தன் தலையை மேலும், கீழும் அசைக்க, “நீங்க, எல்லாரும் ஒன்னுதேன் எப்பவும். நான் மட்டும்தென்  தனி.” என்று பூங்கோதை தன் தலையைக் குனிந்து கொள்ள, அவள் முகத்தை அழுத்தமாகப் பற்றி, “யாரு பியூட்டி தனி? நாந்தேன்  தனி.” என்று அழுத்தமாகக் கூறினான்.

    “உனக்கு நான் இருக்கேன். எனக்கு நீ இருக்கியா? கல்யாணமான இத்தனை நாளில், ஒரு தடவையாது அதை நீ சொல்லிருக்கியா?” என்று கோபமாகக் கேட்டான் திலக்.

     “எத்தனை கடுதாசி. ஒரு கடுதாசிக்கு பதில் போட்டியா?” என்று அவன் கோபமாகக் கேட்க, அவன் அனுப்பிய அத்தனை கடிதங்களையும் அவன் முன் விட்டெறிந்தாள் பூங்கோதை.

    “என்ன கடுதாசி அனுப்பிருக்கீக? எல்லாம் வெத்து கடுதாசி. உங்க கிட்ட இருந்து கடுதாசி வரலைன்னதும், ஒவ்வொவனா பிரிச்சி பார்த்தேன். ஒண்ணுமே இல்லை அதுல. அப்ப, நான் படிக்கறேனா, இல்லையானு வேவு பாத்துருக்கீக?” என்று பூங்கோதை காட்டமாக வினவினாள்.

     ‘அட… பியூட்டி இது என்ன புது கோணம்?’ என்று எண்ணியவனாக, “வேவுல்லாம் இல்லை பியூட்டி. நான் போட்ட முத கடுதாசிக்கு, நீ பதில் போடலை.” என்று கூறிக்கொண்டு அவள் கொண்டு வந்த கடிதங்களில் அவன் அனுப்பிய முதல் கடிதத்தைப் பிரித்து, அவளிடம் கொடுத்தான் திலக்.

          அதைப் பார்த்தும், ஒரு நொடி தன்னை மறந்து அந்த கடிதத்தைப் பார்த்தாள் பூங்கோதை.

     அவள் ஓவியம் அதில் தத்ரூபமாக! பூங்கோதையின் கோபம் சற்று இளகி இருப்பதாகக் கருதி அவள் அருகே சென்றான் திலக்.

             “பியூட்டி… என் மனசில் உள்ளதை சொல்லணுமுன்னு தோணுச்சு. என்ன எழுதன்னு தெரியலை. என் மனசு முழுக்க நீ தான். அதுதேன் வரைஞ்சி அனுப்பிட்டேன்.” என்று அவன் அவள் முகத்தைப் பார்க்க, பூங்கோதை அவன் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்தாள்.

                           “பியூட்டி… நீ எதுமே சொல்லாததை வைத்து, நீ கடிதத்தை பார்க்கவே இல்லைன்னு தெரிஞ்சிது. அதுக்கு அப்புறம், சரி என்னைக்கி தான் பிரிச்சி பாக்குறேன்னு, வெத்து கடுதாசி விளையாட்டா போட ஆரம்பிச்சேன் பியூட்டி.” என்று அவன் இளக, “உங்களுக்கு என்னைக்கும், என் வாழ்க்கை விளையாட்டு தானே? விளையாட்டா என்னன்னவோ பண்ணுவீக? விளையாட்டா தாலி கட்டுவீக?” என்று பூங்கோதை சாதுரியமாக எங்கோ பார்த்தபடி  திலக்கின் பேச்சைத் திசை திருப்பினாள்.

          “ஏன், என் கடுதாசிக்கு பதில் போடலை? நீயா ஒரு நாள் என்னை கூப்பிட்டுருக்கியா?” என்று அவன் பிடிவாதமாக நிற்க, “பதில் போடலைனா, இபப்டி தான் வரவைப்பீகளா?” என்று பூங்கோதையும் அவள் கேள்வியில் பிடிவாதமாக நின்றாள்.

               “உனக்கு என்னை பிடிக்கலை… வேற வழி இல்லாமத்தேன் என் கூட இருக்க.” என்று திலக் கோபமாகக் கூற, அச்சம், களைப்பு எனப் பல உணர்வுகளில் தாக்கப்பட்டு விசும்பிக் கொண்டிருந்தவள், அந்த ராணுவ வீரனின் சொல்லில் அடிபட்டு அவனைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

 ‘இவளுக்கு அப்படி என்ன பிடிவாதம், மனசில் உள்ளதை சொன்னால் தான் என்ன? என் மேல, எவ்வுளவு பாசம் வச்சிருந்தா, தனியா கிளம்பி வந்திருப்பா? இப்படி கடத்தின பிறகு கூட தைரியமா வருவா?’ என்ற கேள்வியோடு, பூங்கோதை சொல்லியே தீர வேண்டும் என்று பிடிவாதமாக மௌனம் காத்தான் திலக்.

     ‘இவுகளுக்கு என் மனசு தெரியலையா? நான் சொன்னாத்தேன் தெரியுமா? என் அன்பை நான் சொன்னால் தான் புரிஞ்சிக்க முடியுமா?’ என்ற கேள்வியோடு, “ஆமாம்! எனக்கு உங்களை சுத்தமா பிடிக்கலை… பிடிக்கலை… பிடிக்கலை…” என்று கூறிக்கொண்டு சுவரில் சாய்ந்தமர்ந்து, படார் படாரென்று அவள் தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுதாள் பூங்கோதை.

               அவள் கைகளை பற்றி, “ஏன் இப்படி பண்ணுத? நான் அப்படி என்ன கேட்டுட்டேன்?” என்று அவன் கோபமாகக்  கேட்டான். திலக்கின் கோபத்தின்  அளவை காணாமல் போன, பியூட்டி என்ற அழைப்பு கூறியது .

              திலக்கின் கோபம், அவன் குரலிலிருந்த விலகல், பூங்கோதையை உலுக்க, “நான் ஆசைப்பட்ட எதுமே என்  கூட இருந்ததில்லை மிலிட்டரி.” என்று அழுகையினோடு தன் மனதை வெளியிட்டாள் பூங்கோதை.

      அவள் கூறுவதை புரியாமல் பார்க்க, “சின்ன வயசில், ஒரு குழந்தை என்ன ஆசைப்படும்? அம்மா தானே. அதை கூட சாமி எனக்கு குடுக்கலியே. நான், எங்க அப்பா கிட்ட ஆசை ஆசையா போவேனாம்… ஆனால், நான் நடந்து கை பிடிக்கிற வயசில் அப்பா என்னை விட்டுட்டு போய்ட்டாக… ஆச்சி சொல்லுவாக.  நான் ஆச்சி கூட எப்பவும் சண்டை போடுவேன். தாத்தாதென் செல்லம். பாரு… தாத்தாவும் இல்லை.” என்று மெல்லிய விசும்பலோடு கூறினாள் பூங்கோதை.

               பூங்கோதை கூற வருவது புரிந்தாலும், அவளே முடிக்கட்டும் எனக் காத்திருந்தான் திலக்.

   “அத்தானை  எனக்கு பிடிக்கும். ஆனால், அத்தை பேச கூட விடமாட்டாக.” என்று அவள் பேச்சை முடித்தாள் பூங்கோதை.

        “கோட்டிக்காரியா நீ?” என்று திலக் கேட்க, “எனக்கு அதெல்லாம் தெரியாது. எனக்கு உங்களைப் பிடிக்காது. நான் அப்படித்தேன் சொல்லுவேன்.” என்று பூங்கோதை அழுத்தமாகக் கூறினாள்.

            “என் மனசும் அப்படித்தான் நம்பும். நான் உங்க மேல ஆசைப்பட்டா… உங்க கிட்ட அன்பா இருந்தா… என் ராசி… என் ராசி… உங்களை…” என்று முடிக்க முடியாமல், மேலும் சிந்திக்க முடியாமல் கதறி அழுதாள் பூங்கோதை.

       ‘இது என்ன முட்டாள்தனம்? இவளுக்கு எப்படி புரிய வைப்பது?’ என்ற எண்ணம் தோன்ற, “உப்…” என்ற அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான் திலக்.

        “பியூட்டி… இதுக்காக நீ எனக்கு கடுதாசி கூட போடலியா?” என்று அவன் கேட்க, “எனக்கு நீ நல்லாருக்கணும் மிலிட்டரி.” என்று தன் முகத்தை தன் முழங்காலில்  புதைத்துக் கூறினாள் பூங்கோதை.

       திலக்கின் கோபம் வடிந்துதிருநத்து. ‘இவ மேல கோபம் கூட வர மாட்டேங்குது.’ என்று எண்ணியபடி, அவள் தலை கோதினான் திலக்.

  “பியூட்டி… எனக்கு எதுமே ஆகாது.” என்று அவன் கூற, தலை நிமிர்ந்து, கண்ணீரோடு அவன் முகம் பார்த்து தலை அசைத்தாள் பியூட்டி.

                         “நீ, என் மேல கோபப்பட்ட தானே?” என்று பூங்கோதை கேட்க, “உன் மேல எனக்கு கோபம் வருமா பியூட்டி?” என்று திலக் கேட்டான்.

        “வரும்… கோபத்தில் தானே எனக்கு வெறும் கடுதாசி போட்ருக்கீக!” என்று அவள் கூற, “ஹா… ஹா… ” என்று சிரித்தான் திலக்.

               அவன் சிரிப்பை ரசிக்கும் மனநிலையில் இல்லை பூங்கோதை. பூங்கோதை அழுது கொண்டே இருக்க, “ஏன் பியூட்டி… இப்படி அழுத? வரும் பொழுது தைரியமா வந்த பியூட்டியா இது?” என்று திலக் கேட்டான்.

       “வரும் பொழுது உங்களுக்கு ஒன்னும் ஆகிருக்காதுன்னு நம்பினேன் மிலிட்டரி. ஆனால், அந்த மாதிரி எதாவது ஆகிருமோன்னு பயமா இருக்கு. என்னை விலக்கி வச்சிரு மிலிட்டரி.” என்று வாய் வார்த்தையால் மட்டுமே கூறிக்கொண்டு, அவனை ஒட்டிக்கொண்டு கதறி அழுதாள் பூங்கோதை.

                  தன்னை மட்டுமே ஆதாரமாக நம்பி அவன் மேல் சாய்ந்திருக்கும் மனைவியின் தலை கோதினான். அவளுக்குத் தான் மட்டுமே ஆதரவு என்று புரிய வைக்கும் நோக்கோடு, அவள் அழுகைக்குத் தோள் கொடுத்தான்.

                    “என்னை விலக்கி வச்சிரு மிலிட்டரி… என்னை விலக்கி வச்சிரு மிலிட்டரி… ” என்று மட்டுமே சித்தம் கலைந்தவள் போல், அர்த்தம் இல்லாமல், அவள் முனங்க, ‘நான் பண்ணது எவ்வுளவு பெரிய தப்பு. ஏற்கனவே இப்படி குழப்பத்தில் இருக்கிறவளை, நான் வேற விளையாட்டுன்னு சீண்டிவிட்டுடேன்.’ என்று மனம் நொந்துக் கொண்டான் திலக்.

                           பூங்கோதையின் அழுகை நீண்டு கொண்டே போக, “பியூட்டி… நான் பண்ணது தப்புதேன். சண்டை போடு… சமாதானம் செய்யுறேன் பியூட்டி. இல்லை உன் காதலை சொல்லு பியூட்டி. நான் உனக்கு பல மடங்கு திருப்பி தரேன் பியூட்டி. ஆனால், அழாத பியூட்டி… எனக்கு என்ன செய்யனுமின்னு தெரியலை.” என்று சமாதானம் செய்ய வழி தெரியமால் திலக் தடுமாற, தன் மனைவியின் அழுத்தம் அவனையும் தாக்க, அவள் தன் மேல் வைத்திருக்கும் பாசத்தையும் அவள் ஸ்பரிசம் கூற,  திலக்கின் உள்ளம் நெகிழ்ந்து அவன் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.

   நிலையில்லா இவர்கள் வாழ்க்கையை எண்ணி விதியும் கண்ணீர் வடித்தது.

வா… அருகே வா!  வரும்….

error: Content is protected !!