VAV-18

VAV-18

வா… அருகே வா! –  18

                  சில்லென்ற காற்று, கேபிள் கார் பயணம் பல இடங்களில் படித்தது, திரைப்படத்தில் பார்த்தது என காஷ்மீர், பனி மலை பற்றிய பூங்கோதையின் கற்பனை பலவாறாக விரிந்திருந்தாலும், அதை நேரில் பார்க்கும் பொழுது பூங்கோதை பிரமித்துப் போனாள்.

          பூங்கோதை தன் இரு கைகளாலும் அவள் வாயை மூடினாள். கண்களை மலர்த்தி அந்த பனி சூழ்ந்த மலையைப் பார்த்தாள்.

                          தூரத்தில் உயர்ந்த மரங்கள். பச்சை நிறத்தில் தான் இருந்தன. ஆனால், அந்த பச்சை நிறத்தை மறைந்து கொண்டு பனி அதன் இருப்பை காட்டிக் கொண்டு இருந்தது.

                  தன்னை சுற்றிப் பார்த்தாள் பூங்கோதை. அத்தனை கூட்டம் இல்லை. இருந்தவர்களும் அவளைக் கவனிக்கும் நிலையில் இல்லை என்று அறிந்ததும், ஒய்யாரமாகக் குதித்தாள் பூங்கோதை.

     பூங்கோதைக்கு தன் சந்தோஷத்தை எப்படி வெளிப்படுத்துவது என்று புரியவில்லை.

                         அவள் அணிந்திருந்த  ஜெர்கின், க்ளோவ்ஸ் அந்த பனிக்கு இதமாக இருந்தது.

பனிக்கட்டியைத் தூக்கி மேலே எறிந்தாள்.  அந்த பனி சூழ்ந்த மலையில் அமர்ந்து கொண்டு சர்ரென்று வழுக்கி விளையாடினாள்.

      குழந்தைத்தனத்தோடு விளையாடிக் கொண்டிருந்த மனைவியை ரசனையோடு பார்த்தான் திலக்.

           திலக் எதுவும் பேசவில்லை. அவளை தன் அலைபேசியில் படம் பிடித்துக் கொண்டிருந்தான். பூங்கோதை திலக்கை கவனிக்கும் நிலையில் இல்லை.

அந்த அழகை ரசித்துவிட்டு, திலக் அருகே வந்து நின்று கொண்டாள் பூங்கோதை.

                “என்ன பியூட்டி… குளிரில் பேச்சு வரலையா?” என்று பூங்கோதையை வம்பிழுத்தான் திலக்.

“எனக்கு குளிரவே இல்லை. நான் நல்லாத்தேன் இருக்கேன்.” அசட்டையாகக் கூறினாள் பூங்கோதை.

    “மிலிட்டரி…” என்று பூங்கோதை அழைக்க, திலக் அவளை நோக்கித் திரும்பினான்.

         அவனை  அழைத்து விட்டு  வேறு பக்கம் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் பூங்கோதை.

“பியூட்டி…” என்று திலக் அவளை அழைத்து புருவம் உயர்த்த, அவன் கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு, சர சரவென்று அந்த பனி சூழ்ந்த மலையில் ஓடினாள் பூங்கோதை.

       திலக்கின் முகத்தில் புன்னகை விரிந்தது. அவன் முகத்திலும் ஓர் வெட்கம். தலை அசைத்துச் சிரித்துக் கொண்டே அவள் பின்னே ஓடினான் திலக்.

                            “பியூட்டி… சத்த நில்லு…. பய நட… சறுக்கிரும்… விழுந்திருவ…” என்று எச்சரித்துக் கொண்டே அவள் செல்லும் வழியை மறைத்துக் கொண்டு நின்றான் திலக்.

 பூங்கோதை வெட்கத்தில் முகம் சிவந்து, தன் முகத்தை கைகளால் மூடிக் கொண்டாள்.

               “குளிருக்கு, முகத்தை கையால் எல்லாம் மூட கூடாது பியூட்டி. வேற வழி இருக்கு.” குறும்பு கொப்பளிக்கக் கூறினான் திலக்.

   தன் கைகளை விலக்கிக் கொண்டு, “எனக்கு குளிரவே இல்லை.” என்று இறுமாப்போடு கூறினாள் பூங்கோதை.

        “ஆஹா… சரி விடு. அதை அப்புறம் பாப்போம். பியூட்டி… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ கொடுத்தது எனக்கு வேணும்.” என்று திலக் வம்பிழுத்தான்.

   “அதெல்லாம் எப்பவும் தோது படாது.” என்று குளிர் தாங்காமல், அவள் கைகளைக் குறுக்கே கட்டிக்கொண்டு உதடு வெடவெடக்க கூறினாள் பியூட்டி.

     திலக் அவனை நெருங்க, ‘ஐயோ… சும்மா இருக்கிறவகளை நாந்தேன் சீண்டி விட்டுட்டேனோ?’ என்று அச்சமும் வெட்கமும் கலந்து அவனைப் பார்த்தாள் பூங்கோதை.

      குளிருக்கு சிவந்த அவன் கன்னங்கள், வெட்கத்தில் இன்னும் சிவக்க ஆரம்பித்தது. அவள் கன்னங்களின் சிவப்பை ரசித்தபடி, தன் கைகளால் அவளைக் கன்னத்தை தட்டி, “ஸ்னோ பைக் ரைட் போவோமா பியூட்டி?” என்று அவள் தோள் மேல் கைபோட்டு திலக் கேட்க, ஆர்வமாகத் தலை அசைத்தாள் பூங்கோதை.

      திலக் பைக் ஓட்ட,  அந்த பைக் பனிக்கு இடையே சறுக்கிக் கொண்டு சென்றது. இருபக்கமும் பனித்துகள்கள் பறக்க, பூங்கோதை அதை ஆர்வமாகப் பார்த்தாள்.

       சில இடங்களில், பைக் வேகமாகச் சறுக்க பூங்கோதையின் மனத்தில் அச்சம் சூழ்ந்தது.

 “மிலிட்டரி…” என்று முணுமுணுத்துக்கொண்டு அவனை இறுகக் கட்டிக்கொண்டாள்.

     “பியூட்டி பயப்படாத… நான் இருக்கேன்ல?” என்று திலக் அவளுக்குத் தைரியம் கொடுக்க, “நான் ஒன்னும் பயப்படலை.” என்று பூங்கோதை மெட்டு விடாமல் கூறினாள்.

    “ஓ… ஆசையில் கட்டிகிட்டியா பியூட்டி?” என்று அவனும் விடாமல் பேச்சு வளர்க்க, பூங்கோதை, ‘இவுகளை…’ என்று திலக்கை மனதில் திட்டியபடி மௌனமாக அமர்ந்திருந்தாள்.

    “என்ன பியூட்டி சத்தத்தை காணும்?” என்று அவன் கேட்க, “உங்க தலையில் போடுறதுக்கு, இந்த பனிக்கட்டியில் பெரிய பனிக்கட்டியை தேடுதேன்.” என்று பூங்கோதை முணுமுணுத்தாள்.

      “என்ன முணுமுணுப்பு பியூட்டி? குளுருது… பயமா இருக்குன்னு உண்மையை ஒத்துக்கணும்.” என்று அவன் அவளிடம் வம்பிழுக்க, அவள் அவனுக்குப் பதிலடி கொடுக்க,  அந்த குளிரை உள்வாங்கியபடி, வெண்மை நிறைந்த அந்த தூய்மையை ரசித்தபடி, இயற்கையைச் சிலாகித்தபடி அவர்கள் ஸ்னோ பைக் ரைடை முடித்தனர்.

                     அவர்கள் மெல்லமாக அந்த பனிக்கட்டி மலையில் நடக்க, எதிர்பாராதவிதமாகப் பனி மழை பொழிய ஆரம்பித்தது.

      வெள்ளை பூக்கள் போல் அந்த பனித்துளிகள் பூங்கோதையை தீண்ட, அந்த குட்டி பனிக்கட்டிகளை கைகளில் ஏந்தி, பனிக்கட்டிகளா? வெள்ளை பூக்களா என்று ஆராய ஆரம்பித்தாள் பூங்கோதை.

    அந்த பனி மழையில் நனைத்தபடி, பூங்கோதையின் உதடுகள் பாடலை உச்சரிக்க ஆரம்பித்தது.

” புதிய வானம் புதிய பூமி

 எங்கும் பனி மழை பொழிகிறது…

    நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ண

            பூமழை பொழிகிறது

               ஓஹோ ஹோ…”

           என்று கைகளை விரித்து ஒரு முறை சுற்றினாள் பூங்கோதை.

    பூங்கோதையை நெருங்கிய, திலக்

” புதிய சூரியனின் பார்வையிலே உலகம்

        விழித்துக் கொண்ட வேளையிலே

        இமயத்தில் இருக்கும் குளிர்காற்று

    இன்று இதயத்தைத் தொடுகிறது…” என்று பூங்கோதையின் காதில் கிசுகிசுத்தான்.

      பூங்கோதை அந்த பனித்துகளில், விரல்களால்

            மிலிட்டரி  பியூட்டி… மிலிட்டரி  பியூட்டி…             மிலிட்டரி  பியூட்டி…  மிலிட்டரி  பியூட்டி… என்று இதய வடிவத்தை இடையில் சேர்த்து எழுதினாள் பூங்கோதை.

      அவள் தலை முடி விரிந்து கிடக்க, அதில் பனித் துளிகள் ஆங்காங்கே சிக்கிக் கொண்டது.

       அவள் முடியை ஒதுக்கி விட்டு, “விறைக்கலையா பியூட்டி?” என்று குறும்போடு கேட்டான் திலக்.

     “எங்களுக்கெல்லாம் அவ்வுளவு சீக்கிரத்தில் விறைக்காது.” என்று பூங்கோதை கழுத்தை நொடிக்க, பூங்கோதை எதிர்பார்க்காத நேரத்தில் அவள் ஜெர்கினுக்குள் பனிக்கட்டிகளைப் போட்டுவிட்டு கலகலவென்று சிரித்தான் திலக்.

     “மிலிட்டரி…” என்று அலறிக்கொண்டு, அவள் ஜெர்கினை கழட்டினாள்.

          திலக் பனிக்கட்டிகளோடு விரட்ட, பூங்கோதை அந்த பனிக்கட்டிகளில் சரிந்து விழுந்தாள்.

      பூங்கோதையின் முகம், கைகள், இடை என அனைத்து இடங்களிலும் பனித்துகள்கள் ஒட்டிக் கொள்ள, “இப்ப குளிருதா பியூட்டி?” என்று கேட்க, கைகளை உதறிக்கொண்டு, மொதமொத்தென்று கோபமாக நடந்தாள் பூங்கோதை.

    “பியூட்டி… இவ்வுளவு தூரம் வந்திட்டு, இது கூட இல்லைனா எப்படி?” என்று திலக் கேட்க அவள் வேகமாக நடக்க அவளை அந்த பனிக்கட்டிக்கு இடையில் இருக்கும் மரத்தில் சாய்த்தான் திலக்.

பூங்கோதை குளிரில் நடுங்கினாள். பனித்துளிகள் அவள் தலை முடிக்கிடையில் சிக்கிக் கொள்ள, பூங்கோதையின் முடி விறைத்துக் கொண்டு நின்றது.

     அவள் முடியை ஒதுக்கிக் கொண்டு, “கோச்சிக்கிட்டியா பியூட்டி?” என்று மென்மையான குரலில் கேட்டான் திலக்.

                     கோபமில்லை… ஆனால் குளிர் அதை எப்படிச் சொல்லுவாள் பூங்கோதை?

    பூங்கோதை மௌனிக்க,  அவன் அவளை நெருங்கி உடலிலிருந்த பனித்துளிகளை ஊதினான்.

     குளிரில் அவள் உடல் நடுங்க, அவன் அருகாமையில், அவன் சுவாசத்தில் இன்னும் நடுங்கினாள் பூங்கோதை.

     ‘யாரும் அவர்களைப் பார்க்கிறார்களா?’ என்ற எண்ணத்தோடு தன் கண்களைச் சுழல விட்டாள் பூங்கோதை.

      “நம்மளை யாரும் பார்க்க மாட்டாக… இங்கன அவ்விளவு கூட்டமும் இல்லை.” உல்லாசமாக ஒலித்தது திலக்கின் குரல்.

    பூங்கோதை எதுவும் பேசவில்லை.

       “கோபமான்னு கேட்டேன்.” என்று திலக் அழுத்தமாகக் கேட்டுக்கொண்டு, அவள் வெற்றிடையில் உள்ள பனித்துளிகளைச் சரி செய்தான்.

       பூங்கோதை உடல் நடுங்க அவனிடம் ஜெர்கினை கேட்க, “குளிருதுன்னு சொல்லு… கொடுக்கறேன். அது என்ன கீழ விழுந்தும் மீசையில் மண் ஒட்டலைங்கிற மாதிரி, பனியில் உருண்டும் குளிரலைங்கிற?” என்று விடாப்பிடியாகக் கேட்டான் திலக்.

     பூங்கோதைக்கு மெல்லக் கோபம் எட்டிப் பார்த்தது.

    பிடிவாதமாக நின்றாள்.  திலக்கின் கண்களுக்கு அவள் கோபம் தெரியவில்லை. அவள் அழகே மேலோங்கி தெரிந்தது.

                  ‘அது என்ன எப்ப பாரு என்னை சீண்டிகிட்டே இருக்கிறது?’ என்ற எண்ணத்தோடு அவன் கைகளிலிருந்த ஜெர்கினை படக்கென்று பிடிங்கி கொண்டு தன் உதட்டைச் சுழித்துக் கொண்டே முன்னே நடந்தாள் பூங்கோதை.

      பூங்கோதையின் கோபம் திலக்கை  இன்னும் ஈர்க்க, பூங்கோதையை மேலும் வம்பிழுக்கும் நோக்கோடு திலக்கின் உதடுகள் பாடலை மெல்ல முணுமுணுத்தது.

“நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப்பூ திடுக்கென்று மலரும்

நீ வெடுக்கென்று ஓடினால் உயிர்ப்பூ சருகாக உலரும்…”

     திலக்கின் பாடலில், பூங்கோதை அவனை முறைக்க…  திலக்கின் கண்களை அவளை ரசனையோடு பார்த்தது.

“இரு கைகள் தீண்டாத பெண்மையை என் கண்கள் பந்தாடுதோ…”

       பூங்கோதை விலகி நடக்க, அவளை தன்னோடு சேர்த்துக் கொண்டு நடந்தான் திலக்.

“மலர்மஞ்சம் சேராத பெண்ணிலா எந்தன் மார்போடு வந்தாடுதோ…” என்று திலக் பாட, “கொஞ்சம் பாடாம வாரீகளா? உங்களுக்கு ராகமே வரலை.” என்று பூங்கோதை பட்டென்று கூறினாள்.

    “பியுட்டி இப்படி பொசுக்குன்னு உண்மை எல்லாம் சொல்ல கூடாது. மிலிட்டரி மனசு கஷ்ட படுமில்லை?” என்று அவன் கேலி பேச, “நல்ல படட்டும்.” என்று பூங்கோதை அழுத்திக் கூறினாள்.

        “பியூட்டி… இப்படி எல்லாம் கோச்சிக்க கூடாது. நான் உன்னை போட்டிங் கூட்டிட்டு போறேன்.” என்று திலக் பூங்கோதையை சமாதானம் செய்தான்.

    பூங்கோதைக்கு கோபம் எல்லாம் இல்லை. இதுவரை யாரிடமும் அவள் கோபம் கொண்டதில்லை. அவளை யாரும் சமாதானம்  செய்ததுமில்லை. பூங்கோதைக்கு திலக்கின் சமாதானம் பிடித்திருக்க, அதை ரசித்தாள்.

         திலக்கும் பூங்கோதையின் மனம் அறிந்தவன் போல் அவளைத் தாங்கினான்.

அதன் பின் அவர்கள் டால் லேக் சென்றனர்.

      பூங்கோதையும் ஏதோ கோபமாக இருப்பது போல் அவனிடம் பேசாமல், பாசாங்கு செய்து கொண்டிருந்தாள்.

      “பியூட்டி… இந்த ஐஸ் கட்டி விளையாட்டுக்கெல்லாம், நீ இப்படி பண்றது சரி இல்லை.” என்று அவளைச் செல்லமாக மிரட்டிக்கொண்டே அவளை ஷிகாரா ரைட் அழைத்து சென்றான்.

       “இப்படி மர படகில் போறதுதேன் ஷிகாரா ரைட்.” என்று திலக் கூற, அவன் கூறுவதற்குத் தலை அசைத்துக் கேட்டுக்கொண்டாள் பூங்கோதை.

    “இப்படி மர படகில் காய்கறி விற்பாக…” என்று மரப்படகில் வியாபாரமாகிக் கொண்டிருந்த காய்கறிகளை கை காண்பித்தபடியே திலக் பூங்கோதையை அருகில் அமர்த்திக் கொண்டு படகில் பயணித்தான் திலக்.

     பூங்கோதையும் அவள் தோளில் வாகாக சாய்ந்து கொண்டு தண்ணீருக்கு இடையே இருக்கும் வீடுகள், கடைகள் அனைத்தையும் ரசித்தபடி பயணித்தாள்.

    படகு சவாரி முடிந்து, திலக்கும், பூங்கோதையும் கரை ஏறும் பொழுது,  திலக்கின் கண்களில் அப்படி ஒரு காட்சி விழுந்தது.

                            ஒரு குறுந்தாடி மனிதன், தன் கண்களை அங்குமிங்கும் சூழவிட்டபடி  வேகமாகப் படகிலிருந்து இறங்கினான்.  திலக்கின் மனதில் ஏதோ பொறி தட்ட, பூங்கோதையின் கைகளில் பணத்தைத் திணித்துவிட்டு, “நீ உனக்கு வேண்டியதை வாங்கிட்டு இரு. நான் இதோ வந்திறேன். நீ இங்கனயே இரு.” என்று தன் அலைபேசியில் யாரிடமோ பேசிக்கொண்டே பூங்கோதையின் கண்களிலிருந்து மறைந்தான் திலக்.

  பூங்கோதை ஆர்வமாகக் கடைகளைப் பார்க்க ஆரம்பித்தாள்.

                 தனக்கு வேண்டியதை வாங்க ஆரம்பித்தாள். முதலில் வேகமாக நகர்ந்த நேரம், செல்ல செல்ல மெதுவாக நகர ஆரம்பித்தது.

         பூங்கோதையின் மனதில் அச்சம் சூழ ஆரம்பித்து.

       ‘அலைபேசியில் அழைப்போமா?’ என்ற எண்ணத்தோடு அவள் அலைபேசியை எடுக்க, “ஏதும் ரகசிய  வேலைக்குப் போய், நான் அழைத்ததில் சத்தம் கொடுத்து, பிரச்சனை ஆகிருச்சுனா?’ என்ற கேள்வி எழ, அவனை அழைக்கப் பயந்து கொண்டு திலக்கிற்கு அழைக்காமல் காத்திருந்தாள் பூங்கோதை.

நிமிடங்கள் நீண்டு கொண்டே போக,  அந்த இடத்தை இருள் கவ்வ ஆரம்பித்தது.

   குளிர் அதிகமாக, பூங்கோதைக்கு உடல் வெடவெடக்க ஆரம்பித்தது.

                        காலையில் ரம்மியமாகத் தெரிந்த அதே இடம் இப்பொழுது அவளை நடுங்கச் செய்தது. அங்கிருந்த மரப்பலகையில் அமர்ந்தாள். எழுந்து நடந்தாள். நேரம் தான் நகர்ந்தே ஒழிய, திலக் வரவில்லை.

        அங்கு நின்று கொண்டிருந்த மனிதர்களைப் பார்த்தாள் பூங்கோதை. எதோ புரியாத பாஷை பேசிக்கொண்டிருந்தனர்.

          ‘குளிர்க்குன்னு எதோ தலையில் கட்டிருக்காக. கண்ணுமட்டும் தான் தெரியுது. இதிலே புகை வேற. நிக்கிறது காஷ்மீர்ல, இங்கன பயம் கிடையாதுன்னுதேன் மிலிட்டரி சொன்னாக. ஆனால், எனக்கு யாரை பார்த்தாலும் தீவிரவாதி மாதிரியே இருக்கே.’ என்று அச்சத்தோடு சிந்திக்க ஆரம்பித்தாள் பியூட்டி.

      “இவுக எங்கன போனாக? கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? ஒருவேளை, அவுகளுக்கு எதுவும் ஆகிருக்குமோ?” என்று திலக்கை திட்ட ஆரம்பித்து, புலம்பலில்  முணுமுணுத்தப்படி முடித்தாள் பூங்கோதை.

    பூங்கோதையின் உள்ளம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. துடிக்கும் காரணத்தைத் தான் அவளால் கணிக்க முடியவில்லை.

                             ‘நான் என்னை நினைச்சி பயப்புடுதேனா? இல்லை அவுகளை நினைச்சி பயப்புடுததேனா?’ என்று குழப்பத்தில் தன் நகங்களைக் கடித்துத் துப்பியபடி தூரத்தில் தெரிந்த அந்த இருள் நிறைந்த மலையைப் பார்த்தபடியும், கரையோரமாக உறங்கிக்கொண்டிருந்த மரப்படகுகளை பார்த்தபடியும் நின்றுகொண்டிருந்தாள் பூங்கோதை.

        பூங்கோதை தெம்பிழந்தவள் போல் காணப்பட்டாள்.   ‘எங்கே இந்த குளிரில், பயத்தில் மயங்கி விடுவோமோ?’ என்ற கேள்வியும் அவளுள் எழுந்தது.

    ‘நமக்கு நல்லது வேற அவ்வுளவு சீக்கிரத்தில் நடக்காது. ரெண்டு நாளா சந்தோஷமா இருக்கேன். எதுவும் பிரச்சனை ஆகிருமோ?’ என்று பூங்கோதையின் மனம் தறிகெட்டு ஓட ஆரம்பித்தது.

     என்ன செய்வதென்று தெரியாமல், பூங்கோதையின் கண்கள் கலங்க ஆரம்பிக்க… தொலை  தூரத்தில் தெரிந்த திலக்கின் உருவத்தைக் கண்டுகொண்டாள் பூங்கோதை.

     குளிர், அச்சம், குழப்பம் என அனைத்தும் மறைந்து, சிட்டாகப் பறந்தாள் என்று தான் கூற வேண்டும்.

        திலக்கை இறுகக் கட்டிக்கொண்டாள் பூங்கோதை.

           “ரொம்ப கோவமா இருந்த மாதிரி தெரிஞ்சிது… நான் போகும் பொழுது… இப்ப கோவம் போயிருச்சா?” என்று திலக் சந்தேகம் கேட்க, “இப்ப இந்த நயாண்டி முக்கியமா?” என்று கடுப்பாகக் கேட்டாள் பூங்கோதை.

    “பயந்துட்டியா பியூட்டி? ஒரு முக்கியமான சோலி… அதுதேன் உன்கிட்ட பேச கூட முடியல.” என்று திலக் பூங்கோதையை விலக்காமல் அவள் தலை கோதி கூறினான்.

                   “இதுக்கு கோவிச்சுக்க கூடாது பியூட்டி. உன்னை சமாதானம் செய்ய என்ன வேணாலும் செய்வேன்.” என்று தன் மனைவியைச் சமாதானம் செய்து கொண்டே,  அவர்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு  அழைத்துச் சென்றான் திலக்.

           திலக் அவர்கள் இருவருக்கும் உணவு வாங்கி கொண்டு, அறைக்குள் செல்ல, “என்ன வேணாலும் செய்வீகளா?” என்று சந்தேகமாகக் கேட்டாள் பூங்கோதை.

   “பியூட்டி. இதுல என்ன சந்தேகம்? நீ சொல்லி கேட்காமலியா? கேளு…” என்று திலக் அங்கிருந்த நாற்காலியில் சோர்வாகச் சாய்ந்தபடி கேட்டான்.

    பூங்கோதை கேட்டதில், “ஏய்…” என்று அலறினான் திலக்.

        திலக்கின் கோபம் புரியாமல், அவன் முகத்தைப் பார்க்காமல் பூங்கோதை பேசிக்கொண்டே போக அவள் கன்னத்தில், “பளார்…” என்று  திலக்கின் கைகள் வேகமாக இறங்கியது.

     தன் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு பூங்கோதை அவனைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

வா அருகே வா வரும்…

error: Content is protected !!