வா… அருகே வா! – 22
திலக்கின் நாட்கள் சற்று கடினமாகவே இருந்தது. பல வலிகளோடும், துன்புறுத்தலோடும்!
ராணுவ வீரனாக, அந்த வலிகளை அவன் அழுத்தமாக, பொறுமையாகக் கையாண்டான்.
அதே நேரம் அமைதியாகவும். அவர்களால், அவனிடமிருந்து எந்த ரகசியத்தையும் பெற முடியவில்லை.
இந்திய பாகிஸ்தான் எல்லையில், நெட்டை மனிதனும், குறுந்தாடி மனிதனும் ஏமாற்றத்தில் கடுங்கோபத்திலிருந்தனர்.
‘இவர்கள் கோபம் என்னை என்ன செய்யும்?’ என்ற இறுமாப்போடு, திலக் ஒவ்வொரு நொடியையும் நகர்த்தினான்.
அந்த கூட்டத்திலிருந்த ஒற்றை கண்ணைக் கொண்டவனோ, “திலக்கை கொன்றுவிடலாம்.” என்று உறுதியாகக் கூறிக் கொண்டிருந்தான்.
எல்லார் முகத்திலும் கோபம், கடுமை சற்று அதிகமாக இருந்தாலும், இந்த ஒற்றை கண் கொண்டவனிடம் கொலை வெறி சற்று அதிகமாக இருந்தது.
திலக், அவர்களிடம் அவனைப் பத்திரமாக இந்திய நாட்டிடம் ஒப்படைத்து விட்டால், அவர்களுக்கு எதாவது லாபம் கிடைக்கும் என்று மறைமுகமாக அவர்களுக்கு அறிவுறுத்திக் கொண்டிருந்தான்.
அவர்கள் கூட்டமாக அதைப் பற்றியே ஆலோசித்துக் கொண்டிருந்தனர்.
செல்லமாவின் வலியுறுத்தலில், கதிரேசன் வீட்டிலிருந்து கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தாள் பூங்கோதை.
வள்ளியின் தோழமை பூங்கோதைக்கு சற்று ஆறுதலாக இருந்தது. கயல் அவ்வப்பொழுது பூங்கோதையை பார்த்துவிட்டு, சில மணி நேரம் பேசிவிட்டு சென்றாள்.
அன்று பூங்கோதையை மருமகளாக ஏற்கத் தயங்கியவர் இன்று மகளாக ஏற்றுக் கொண்டார் என்று உறுதி செய்வது போல், அக்கறையாகக் கவனித்துக் கொண்டார்.
ஊர் மக்கள் ஒவ்வொரு விதமாக பூங்கோதையை பேசினர். சிலர் அவள் ராசியைக் குறை கூறினர். சிலர் அவள் செயல்பாட்டைக் குறை கூறினர்.
சிலர் அவள் தைரியத்தைப் பாராட்டினார். பலர் அவளைப் பரிதாபமாகப் பார்த்தனர்.
பூங்கோதையோ இதை எதையும் கண்டுகொள்ளவோ, கேட்டுக் கொள்ளும் மன நிலையிலோ இல்லை.
பூங்கோதைக்கு என்ன தான் நம்பிக்கை இருந்தாலும், அவள் மனதின் ஏதோ ஓர் ஓரத்தில் அச்சம் அவளை அரித்துக் கொண்டிருந்தது.
‘எல்லாரும் அவுக இல்லைன்னு நினைக்குதாக… அராசாங்கம் உற்பட… ஆனால், அவுகளுக்கு ஒன்னும் ஆகலை…’ தன் இடுப்பில் உள்ள மணியைத் தடவிக்கொண்டாள்.
‘அவுகளால, என்னை விட்டு எப்படி போக முடியும்?’ என்ற கேள்வி மட்டும் பூங்கோதைக்குள் உறுதியாக.
‘யாரும் என்னை நம்ப மாட்டேங்கிறாகா… அவுகளும் ஏன் இன்னும் வரலை? அவுக உடம்புக்கு எதுவும் ஆகிருக்குமோ? இல்லைனா எங்கயும் மாட்டிருப்பாகளோ? ரொம்ப கஷ்டப்படுத்தாகளோ?’ என்று பல கவலை தோய்ந்த கேள்விகளோடு நடமாடிக் கொண்டிருந்தாள் பூங்கோதை.
வள்ளிக்கு ஏழு மாதம் நெருங்கவே, வள்ளியின் வீட்டில் வளைகாப்பு நாளை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
பூங்கோதை நிலைமையை மனதில் கொண்டு, வள்ளி மறுப்பு தெரிவித்துக் கொண்டிருந்தாள்.
அன்று மதியம் வள்ளி எதிர்பாராத நேரத்தில் கதிரேசன் வீட்டுக்கு வந்திருந்தான்.
“நீங்க என்ன இப்ப வீட்டுக்கு வந்திருக்கீக?” என்று வள்ளி கேட்க, “சும்மா தான் வள்ளி.” என்று கூறிக் கொண்டு அறையிலிருந்த நாற்காலியில் அமர்ந்து பேச ஆரம்பித்தான் கதிரேசன்.
“வள்ளி… உங்க அம்மா ஏற்கனவே உன் மேல பல விஷயத்தில் கோபமா இருக்காக. நீ வேற பூங்கோதை பேரை சொல்லி வளைகாப்பு வேணாமுன்னு சொல்லுத. உங்க அம்மா மொத்த கோபமும் பூங்கோதை மேல திரும்ப போகுது.” என்று கதிரேசன் கடுப்பாகக் கூறினான்.
“இதை பேசத்தான் இப்ப வந்தீகளா? அம்மா கூப்பிட்டிருந்தாகளா?” என்று வள்ளி கேட்க, கதிரேசன் வள்ளியின் பதிலுக்காகக் காத்திருக்க, வள்ளி பேச ஆரம்பித்தாள்.
“சொன்னா சொல்லட்டும். பூங்கோதை மனசு அவுகளுக்கு புரியுமா?” என்று வள்ளி எங்கோ பார்த்தபடி அசட்டையாகக் கூறினாள்.
“எனக்கே பூங்கோதை மேல இல்லாத அக்கறை, உனக்கென்ன?” என்று கதிரேசன் வள்ளியை தன் பக்கம் திருப்பினான்.
“சக மனுஷங்க மேல உள்ள அக்கறை…” என்று வள்ளி கூற, கதிரேசன் அவளை ஆழமாகப் பார்த்தான்.
“உண்மை தாங்க… ஒரு அக்கறை… அதை எல்லாம் தாண்டி, பூங்கோதை எனக்கு ரொம்ப முக்கியம். அதுல சுயநலமும் இருக்கு. பூங்கோதை சந்தோஷத்தில் உங்க நிம்மதியும் இருக்கே.” என்று வள்ளி அவள் மறுப்பைக் கேலியாகவே சொல்லி முடித்தாள்.
கதிரேசனின் கண்கள் கலங்கியது. “வள்ளி எனக்கு பூங்கோதை விஷயத்தில் பொறுப்பு இருக்கு. அதை தாண்டி உன் மேல பாசம் இருக்கு.அன்பிருக்கு. சொல்ல முடியாத அளவுக்கு காதலும் இருக்கு. நமக்கு இது முதல் குழந்தை. உனக்கும் ஆசை இருக்குமில்லை?” என்று கதிரேசன் வள்ளியின் முகம் உயர்த்தி கேட்டான்.
“ஆசை இல்லாத மனுசங்க உண்டா? ஆனால், அந்த ஆசை மத்தவங்களை வருத்தப்படுத்தக் கூடாது. ” என்று கதிரேசனின் தோள் சாய்ந்து கூறினாள் வள்ளி.
“பூங்கோதையை வருத்தப்படுத்துற எந்த விசேஷமும் வேண்டாம். அது பூங்கோதையை மட்டுமில்லை. எல்லாரையும் வருத்தப்படுத்தும்.” என்று கூற, கதிரேசனின் கண்களிலிருந்து இரண்டு சொட்டு கண்ணீர் வள்ளியின் தோள் தொட்டுச் சென்றது.
வள்ளி பதறி விலகினாள்.
அதே நேரம், பூங்கோதை அவர்கள் அறையை நோக்கி நடந்தாள்.
“நான் உங்களை வருத்தப்படுத்தறேனோ?” என்று வள்ளி கேட்க, “உன்னை மாதிரி ஒரு மனைவி கிடைக்க நான் குடுத்து வச்சிருக்கணும். என்னை புரிஞ்சிகிட்டு… எனக்காக…” என்று கதிரேசன் உணர்ச்சி வசப்பட, வள்ளி முகத்தைச் சுழித்தாள். அதிலும் ஒரு ஆனந்தம்.
கதிரேசன் அவளைப் புரியாமல் பார்க்க, வள்ளி அவன் கைகளை அவள் வயிற்றில் வைக்கக் குழந்தை அசைய வள்ளியின் வயிறு புடைத்துக் கொண்டு நின்றது.
கதிரேசன், குழந்தையின் உணர்வை உணர வள்ளி சந்தோஷத்தில் கண்கள் மின்ன அவனைப் பார்த்தாள்.
அப்பொழுது பூங்கோதை உள்ளே நுழைய, அவள் பார்த்த காட்சியில் பின்னே நடந்து சென்றாள்.
கதிரேசன், வள்ளி பூங்கோதையை கவனிக்கவில்லை.
‘அத்தான் இப்ப வீட்டுக்கு வந்தாகளா? நான் ஏன் கதவை தட்டாமல் உள்ளே போனேன்?’ என்ற கேள்வியோடு அவர்கள் அறியாமல் வெளியே வந்த பூங்கோதையின் கண்களில் அவள் பார்த்த காட்சி தோன்ற தன் வயிற்றில் கை வைத்து குழந்தையின் துடிப்பை உணர்த்தப்படி, ‘மிலிட்டரி… நீ எப்ப வருவ?’ என்ற ஏக்கத்தோடு அவள் அறைக்குள் நுழைந்தாள்.
மருமகனிடம் பேசிவிட்டு அவர்கள் வீட்டுக்கு அப்பொழுது வந்த வள்ளியின் தாயார், வள்ளியின் அறையிலிருந்து ஏக்கமாக வரும் பூங்கோதையை யோசனையாகப் பார்த்தார்.
வள்ளியின் தாயாரை வரவேற்று கதிரேசன் தன் வேலையைக் கவனிக்கச் சென்றான்.
“அந்த பொண்ணு உன் ரூமை எட்டி பார்க்குது… அவ கண்ணில் ஒரு ஏக்கம், பொறாமை தெரியுது. உன் மாப்பிள்ளைக்கு வேற அந்த பொண்ணு மேல தனி பாசம்… இப்படி இருக்கும் பொழுது…” என்று அவர் வள்ளியிடம் பேச, வள்ளிக்கும் அவள் தாய்க்கும் வாக்குவாதம் வர, பூங்கோதை அவர்கள் அறைக்குள் நுழைந்தாள்.
பூங்கோதை வள்ளியிடம் அவள் வளைகாப்பிற்காகப் பேச, தன் தாயைக் குற்றம் சாட்டும் பார்வையோடு பார்த்தாள் வள்ளி.
“பூங்கோதை முன்னே நிற்க வேண்டும்.” என்ற வள்ளியின் பிடிவாதத்தோடு அவள் வளைகாப்பு முடிவானது.
வள்ளியின் வளைகாப்பு சிறப்பாக நடக்க, பூங்கோதைக்கும் வளையல் அடுக்குமாறு வள்ளி வற்புறுத்தினாள்.
‘அவுக வந்திருவாக. எனக்கு என் ஒன்பதாவது மாசம் வளையல் அடுக்கிகளாம்.” என்று பூங்கோதை அழுத்தமாகக் கூற, மறுக்க மனமில்லாமல் அனைவரும் அவள் போக்குக்கே விட்டுவிட்டனர்.
பூங்கோதையின் நம்பிக்கையைக் காப்பாற்றுவது போல், ஓரிரு நாட்களில் திலக்கின் உருவப்படத்தோடு அவன் உயிரோடு இருப்பதாகச் செய்தி வந்தது.
பல நிபந்தனைகளை அவர்கள் விதிக்க, இந்திய அரசாங்கம் திலக்கை உயிரோடு மீட்டு வர அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது. எத்தனை விரைவாக முடியுமோ, அத்தனை விரைவாக திலக் பத்திரமாக மீட்கப் பட்டான்.
கதிரேசன், வள்ளி, பூங்கோதை மூவரும் டெல்லி சென்றனர்.
திலக் அனைத்து மருத்துவ பரிசோதனைகளையும் முடித்து விட்டு வந்தான். கதிரேசன் திலக்கோடு இருக்க, வள்ளி பூங்கோதையோடு இருந்தாள்.
கதிரேசன் அவனை தோளோடு அனைத்துக் கொண்டான்.
பூங்கோதையின் கண்கள் திலக்கை அளவிட்டது. அவன் காயங்களைப் பார்க்கும் பொழுது பூங்கோதையின் கண்கள் கலங்கியது. பூங்கோதையின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.
‘எங்கு அழுத்துவிடுவோமோ?’ என்று அவள் மனம் அச்சம் கொள்ள, எதுவும் பேசாமல் பூங்கோதை மௌனித்தாள். ஆனால், இமைக்கவும் மறந்து தன்னவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
திலக் மேடிட்ட வயிரோடு அசைந்து அசைந்து வரும் தன் மனைவியைக் கண் அசைக்காமல் பார்த்தான். எதுவும் பேசவில்லை.
கதிரேசனும், வள்ளியும் பூங்கோதையை நினைத்து சற்று பயந்திருந்தனர். ‘திலக் எப்படி வருவான்? பூங்கோதை திலக்கை பார்த்து உணர்ச்சிவசப்படுவாளோ?’ என்று எண்ணம் சூழ அவளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
பூங்கோதை வள்ளியோடு நெருக்கமாக நின்று கொண்டாள். சமீபத்தில் ஏற்பட்ட நெருக்கம், அதுவும் திலக்கின் செய்தி அறிந்தது முதல், அந்த நெருக்கம் இன்னும் அதிகாமகிருந்தது.
ஆனால், திலக்கிடம் எதுவும் பேசாமல் வள்ளியோடு ஒட்டிக் கொள்வாள் என்று கதிரேசனும், வள்ளியும் எதிர்பார்க்கவில்லை. திலக் பூங்கோதையை பார்த்தபடி கதிரேசனிடம் பேசிக் கொண்டிருந்தான்.
அவர்கள் டெல்லி விமான நிலையத்துக்கு வந்து விமானத்தில் பயணிக்க ஆரம்பித்தனர்.
பூங்கோதை, வள்ளியை அவளோடு அமர்த்திக் கொண்டாள். திலக், கதிரேசனோடு அமர்ந்து கொண்டான்.
திலக் கதிரேசனோடு அமர்ந்து கொண்டானே ஒழிய, அவன் கண்கள், மனம், எண்ணம் என அனைத்தும் பூங்கோதையையே வட்டம் அடித்தது.
சில நிமிடங்களில் பூங்கோதை கண்ணுறங்கினாள். ‘பல நாட்களுக்குப் பின் அவள் நிம்மதியாக உறங்குகிறாள்.’ என்பதை உணர்ந்து கொண்டான் திலக்.
பூங்கோதை உறங்கியதும், அவன் வள்ளியிடம் இடம் மாறிக்கொண்டான்.
வள்ளி, தன் கணவனோடு அமர்ந்து கொண்டாள். அவர்கள் பேச்சு பூங்கோதையையும், திலக்கையுமே சுற்றி வந்தது.
திலக், தன் மனைவி அருகே அமர்ந்து கொண்டான். பூங்கோதையை ஆழமாகப் பார்த்தான். அவள் தாய்மை, அவள் சோர்வு, அவள் அழகு என அனைத்தையும் ஆசையாகப் பார்த்தான்.
திலக்கின் உடல் நடுங்கியது. பூங்கோதையின் முகத்தில் மண்டி கிடந்த சோர்வு, அவள் அழுத்தி மறைத்து வைத்திருந்த சோகத்தை அப்பட்டமாகக் காட்டியது.
“பியூட்டி… உனக்காக… உனக்காக மட்டும்தென் வந்திருக்கேன் பியூட்டி…” மெல்ல கூறினான் அவள் தூக்கம் கலையக்கூடாதென்று.
அவள் தூக்கத்தைக் கெடுப்பது போல் அசைந்து கொண்டிருந்த அவள் முடியை தன் ஒரு விரலால் மென்மையாக ஒதுக்கி விட்டான்.
‘நீ என்னை பார்த்த பிறகு தான் இப்படி நிம்மதியா தூங்குதய்யா பியூட்டி…’ என்று கேட்டுக்கொண்டு அவளுக்குப் பாதுகாப்பாகச் சாய்ந்து கொண்டான் திலக்.
‘உன்னை பார்ப்பானான்னு யோசிச்சேன். ஆனால், உன்னை பார்த்த பிறகு தோணுத்து பியூட்டி… என்னை விட நீ ரொம்ப கஷ்டப்பட்டிருப்பன்னு…’ என்று எண்ணிக்கொண்டு, பூங்கோதையின் சோர்வைப் போக்கும் வழி தெரியாமல் பார்த்தான்.
பூங்கோதை மேடிட்ட வயிரோடு அமர வசதி இல்லாமல் நெளிய, அவன் கண்கள் அவள் வயிற்றின் பக்கம் திரும்பியது.
பூங்கோதையின் மேடிட்ட வயிற்றை தன் கைகளால் அச்சத்தோடு, பூவை விட மென்மையாகத் தொட எத்தனித்தான்.
திலக்கின் கைகள் நடுங்கியது. அத்தனை அடிகளைத் தாங்கி மீண்டவன் என்று சொல்ல முடியாதபடி அவன் மனதில் அச்சம் படர்ந்தது. திலக் தன் கைகளை மேலே உறுவிக்கொண்டான்.
அச்சத்தை தாண்டி திலக்கின் மனதில் தன் குழந்தையை தொட்டு பார்க்கும் ஆசை பேராசையாக எழுந்தது.
சில நொடிகளில் அவன் கைகள் மீண்டும் அவள் வயிற்றை நோக்கி நெருங்கியது. அப்பொழுது அவள் வயிற்றில், “க்ளுக்…” என்று அசைவு தெரிய அச்சத்தில் திலக்கின் இதயம் வேகமாகத் துடித்து கைகள் நடுக்கத்தோடு மேலே எழ, பூங்கோதையின் செயலில் அவளைப் பிரமிப்பாக பார்த்தான் திலக்.
வா அருகே வா வரும்…