VAV-24

VAV-24

வா… அருகே வா! –  24

      நிலவு தன்னை மேகங்களுக்குள் மறைத்துக் கொண்டு விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தது. பூங்கோதை பேச்சினோடு இயற்கையும் ரசித்துக் கொண்டிருந்தாள்.

               திலக் இயற்கையை ரசிக்கும் மனநிலையில் இல்லை. அதுவும், பூங்கோதை ‘பையன்… உங்களை மாதிரி ராணுவ வீரனா.’ என்று கூறியதிலிருந்து சற்று ஆனந்தம் அதே நேரம் குழப்பம் என்று தவித்துக் கொண்டிருந்தான்.

         “பியூட்டி… நான் மறுபடியும் வேலைக்கு போறதுல உனக்கு…” என்று திலக் தடுமாறினான்.

   திலக்கிடம் அன்றைய பிடிவாதம், அன்றைய கோபம் எதுவுமில்லை. தன்னை விட பூங்கோதை அதிகமாக வருந்தியது போல் தோன்றியது அவனுக்கு. ‘இழப்பு அவளுக்கு தானே?’ என்ற எண்ணம் அவன் மனதில் ஆழமாக எழுந்தது.

   திலக்கின் இந்த கேள்வியில் பூங்கோதையின் குறும்பு மேலே எழ, “நான் வேண்டாமுன்னு சொல்லிட்டா?” என்று பூங்கோதை கேட்க, திலக்கின் கண்கள் கலங்கியது. தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.

    ‘நான் என்ன நினைத்து இவளிடம் இப்படி கேட்டேன்?’ என்று தனக்கு தானே நொந்து கொண்டான்.

     திலக்கின் படபடப்பு அதிகமாக, அவன் தலை சுற்றி கண்கள் இருட்டுவது போல் தோன்ற அருகே இருந்த சுவரில் சாய்ந்தான்.

  “என்ன ஆச்சு?” என்று பதட்டத்தோடு கேட்டுக்கொண்டே பூங்கோதை அவனுக்குச் சொம்பில் தண்ணீர் கொடுக்க, அதை வாங்கிக் கொண்டு மடக்மடக்கென்று வேகமாகக் குடித்தான் திலக்.

           ‘அந்த நெட்டை மனுஷன் மண்டையில் அடிச்சதிலிருந்து இப்படி தான் இருக்கு. இதை பியூட்டி கிட்ட சொல்லனுமா? வேண்டாம்… பயப்படுவா…’ என்று எண்ணிக்கொண்டே, ‘ஒண்ணுமில்லை…’ என்பது போல் தன் தலையை வலப்பக்கமும், இடப்பக்கமும் அசைத்தான் திலக்.

      பூங்கோதை அவனை சந்தேகமாக பார்க்க, “கொஞ்சம் சோர்வு. அவ்விளவுதேன், வேற ஒண்ணுமில்லை.” என்று அவளை தன் அருகே அமர்த்திக்கொண்டு அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.

        திலக்கை சமாதானம் செய்வது போல் பேச ஆரம்பித்தாள் பூங்கோதை.

     “நீங்க திரும்ப ராணுவத்திற்கு போகணும். நீங்க மட்டுமில்லை. நமக்குப் பெண் குழந்தை பிறந்தாலும் சரி, ஆண் குழந்தை சரி.” என்று பூங்கோதை கூற, திலக் அவளை விழி உயர்த்தி பார்த்தான்.

               “முன்னெல்லாம், நானும் எல்லாரை மாதிரியும் ராணுவம்ன்னு சொன்னாலே பயந்தேன். இப்ப தான் நிறைய தெரிஞ்சிகிட்டேன். ராணுவம் அப்படினாலே, இந்திய, பாகிஸ்தான் எல்லையிலிருந்து சுட்டுகிட்டே இருப்பாகன்னு நினைக்கிறது எவ்வுளவு தப்புன்னு. ராணுவத்தில் பல வேலைகள் இருக்கு. எல்லாரும் எல்லையில் நிக்கறதில்ல. ராணுவமினாலே பயப்பட கூடாதுன்னு தெரிஞ்சிகிட்டேன்.” என்று பூங்கோதை கூற, அவளை மெச்சுதலாகப் பார்த்தான் திலக்.

      “ராணுவத்தில் ஆபத்து அதிகந்தேன். அசம்பாவிதங்கள் அதிகமா நடக்குறதுக்கு வாய்ப்பு அதிகந்தேன். ஆனால், எதில் ஆபத்து இல்லை. போலீஸ் வேலையும் அப்படி தான். சாலையில் நடந்து போற பொண்ணுக்கு கூட பாதுகாப்பு இல்லை. நாம நம்ம நாட்டுக்காக பண்ணலைனா யார் பண்ணுவா?” என்று பூங்கோதை தலை சாய்த்துக் கேட்க, கண்ணீரும் புன்னகையும் ஒரு சேர திலக் அவளைப் பார்த்தான்.

     “ராணுவத்தையும், ராணுவத்தில் இருக்கிறவங்களை மதிக்கணும். பயப்படக் கூடாது.” என்று பூங்கோதை ராணுவ வீரனின் மனைவியாகக் கூற, “பியூட்டி… பியூட்டி… பியூட்டி…” என்று அவளை அணைத்துக் கொண்டு அவள் முகமெங்கும் இதழ் பதித்தான் திலக்.

      “பியூட்டி… வேற யாரவது உன் நிலையில் இருந்திருந்தா, இப்படிப் பேசி இருக்க மாட்டாக. இப்படி யோசிச்சிருக்க மாட்டாக.” என்று அவள் முகத்தைக் கையில் ஏந்தி, அவள் நெற்றியோடு தன் நெற்றியை முட்டி உணர்ச்சி பெருக்கோடு கூறினான் திலக்.

          பூங்கோதை அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாகக் கோர்த்துக் கொண்டு, “வேற யாரும் எப்படி சொல்லுவாக. மிலிட்டரி பொஞ்சாதியால மட்டுந்தென் இப்படி சொல்ல முடியும்.” என்று அவன் கழுத்தில் முகம் புதைத்து கூறினாள் பூங்கோதை.

    “அது சரித்தேன்.” என்று திலக் பெருங்குரலில் சிரித்தான்.

        “மிலிட்டரி…” என்று அவள் இசைக்க, “பியூட்டி…” என்று அவன் ராகமிட, இந்த நாட்டு மக்கள் அவர்கள் தியாகத்தை மதித்தார்களா? போற்றினார்களா? என்ற எண்ணமெல்லாம் துளியுமில்லாமல், அவர்கள் கடமையை இனிதே செய்துவிட்ட நிம்மதியோடு இல்லறம் என்னும் கானத்தை இனிமையாக எழுப்பினர் அந்த இளம் ஜோடி.

          மறுநாள் காலையில், கதிரேசன் அவன் வீட்டில் சற்று சோர்வோடு நாற்காலியில் சாய்ந்து  அமர்ந்திருந்தான். வளையல் குலுங்கக் குலுங்க, “ச்சல்… ச்சல்…” என்ற சத்தத்தோடு அவன் அருகே வந்தாள் வள்ளி.

     கதிரேசன் அவளைக் கவனிக்காமல் அமர்ந்திருக்க, “என்ன நான் வந்ததை கூட கவனிக்காம, பலத்த யோசனை?” என்று அவள் கேட்க, வள்ளியின் குரலில் அவளைப் பார்த்து தலை அசைத்தான்.

     அப்பொழுது அவர்களைக் கடந்து சென்ற செல்லம்மா, “நீ பூங்கோதையை காரணம் காட்டி இங்ஙனேயே இருந்துட்ட. அதுதேன் அவனுக்கு உன் அருமை தெரியலை. நீ உங்க அம்மா வீட்டுக்கு போயிருந்தா, உன் அருமை அவனுக்கு தெரிஞ்சிருக்கும்.” என்று செல்லாம்மா கேலி பேசிக்கொண்டே பட்டாளையை கடந்து சென்றார்.

        தன் மாமியாரின் பேச்சுக்கு, புன்முறுவல் பூத்தபடி, “எதுவும் பிரச்சனையா? ஏன் ஒரு மாதிரி இருக்கீக?” என்று வள்ளி கேட்க, ‘ஓண்ணுமில்லை…’ என்று மறுப்பாகத் தலை அசைத்தான் கதிரேசன்.

     “பூங்கோதைக்கு அடுத்த மாசம் வளைகாப்பு பண்ணிருவோமா?  அதுதேன் திலக் அண்ணன் வந்தாச்சில்ல?” என்று வள்ளி கேட்க, எழுத்து நின்று ஆமோதிப்பாகத் தலை அசைத்தான்.

    கதிரேசனின் தலை அசைப்பில் சந்தோஷமிருந்தாலும், அத்தனை உற்சாகமில்லை. அதைக் கண்டு கொண்ட வள்ளி, கதிரேசனின் கைகளைப் பிடித்து,   “என்ன பிரச்சனை?” என்று கேள்வியாக அவன் முன் நின்றாள்.

      ‘மழை இல்லாமல் விளைச்சல் கம்மியாச்சு. அப்புறம் அதீத மழையால் எல்லா பயிரும் நாசம். இதைத்தேன் யோசிச்சிகிட்டு இருந்தேன். இதை சொல்லி வள்ளியையும் வருத்தணுமா?’ என்று எண்ணத்தோடு கதிரேசன் புன்னகைத்தான் வள்ளியைச் சமாதானம் செய்யும் விதமாக.

வள்ளியை இடையோடு அணைத்து சுவரில் சாய்த்து,  “சொல்லடும்மா?” என்று கதிரேசன் கண்சிமிட்டினான்.

“எல்லாரும் வந்து போற இடம் என்ன பண்ணுதீக?” என்று வள்ளி சிடுசிடுக்க, “நீ தானே கேட்ட?” என்று கதிரேசன் வள்ளி செல்ல வழி விடாமல் வழிமறித்து நின்றான்.

     “என்னை கவனிக்க கூட இல்லை… இப்ப மட்டும் என்னவாம்?” என்று வள்ளி கழுத்தை நொடித்து வெட்கப்பட, அவள் வெட்கத்தில் மயங்கி, வள்ளியின் முகத்தை விரல்களால் தீண்டி, “கவனிக்கணுமா?” என்று கதிரேசன் உதட்டை மடித்துக் கேட்டான்.

    “ம்… பூங்கோதை, திலக் அண்ணா பிரச்சனை முடிஞ்சி நேத்துதேன் சந்தோஷமா சிரிச்சீக! அதுக்குள்ள காலையில் என்ன யோசனை?” என்று வள்ளி அவள் கேள்வியில் விடாப்பிடியாக நின்றாள்.

     “பூங்கோதை பிரச்சனை முடிச்சிருச்சுன்னு, நீ உங்க அம்மா வீட்டுக்கு கிளம்பிருவியோன்னுதேன்.” என்று கதிரேசன் கண்களில் ஏக்கத்தோடு கூறினான்.

    “உண்மையா? என்னை பத்தித்தேன் நினைச்சீட்டு இருந்தீகளா?” என்று வள்ளி ஆர்வமாகக் கேட்க, “உன் நினைப்பு இல்லாமல் என்னால் இருக்க முடியுமா?” என்று புருவம் உயர்த்தி கேட்டான் கதிரேசன்.

      வள்ளி அவன் தோளில் சாய்ந்து, “நான் அம்மா வீட்டுக்கெல்லாம் போகலை. இங்கனத்தேன் இருக்க போறேன்.” என்று வள்ளி உரிமையோடு கூற, “சந்தோசம் வள்ளி.” என்று நெகிழ்வோடு கூறினான் கதிரேசன்.

    “நீங்க இப்படி எல்லாம் தீவிரமா யோசிக்கக் கூடாது சரியா?” என்று வள்ளி கேட்க, “ம்…” என்று கதிரேசன் புன்னகைத்தான்.

  “இப்படியே சிரிச்சிகிட்டே இருக்கனும்.” என்று கதிரேசனின் நாடி பிடித்து, வள்ளி செல்லமாக கூற, ‘நான் இவ சந்தோஷமா இருக்கனும்ன்னு நினச்சா, இவ என்னை சந்தோஷமா இருக்க சொல்லுதா.’ என்று பெருமூச்சோடு தலை அசைத்தான் கதிரேசன்.

   திலக்கின் வீட்டில், “பியூட்டி… பியூட்டி…” என்று காட்டமாகக் கத்திக்கொண்டிருந்தான் திலக்.

    “நீ என்ன காபி தான் குடிக்கறியா? உன்னை நான் ஜூஸ் தானே குடிக்க சொன்னேன். வீடியோ காலில் சரி சரின்னு தலையை தலையை ஆட்டிட்டு சொல் பேச்சே கேட்கறதில்லை.” என்று திலக் கோபமாகக் கேட்டான்.

   பூங்கோதை அவனைச் சட்டை செய்யாமல் கால்களை ஆட்டியபடி அமர்ந்திருந்தாள்.

ஜூஸ், பழங்கள் என பூங்கோதை முன் கடை பரப்பப்பட்டிருக்க, பூங்கோதை எதுவும் சாப்பிடாமல் திலக்கை பாடாக படுத்திக் கொண்டிருந்தாள்.

   “ஆச்சி… ரெண்டு பெரு இருக்கீக… எம் பொஞ்சாதியை சரியா கவனிக்கலை. அதுதேன் அவ இப்ப ஒண்ணுமே சாப்பிட மாட்டேங்குறா.” என்று திலக் கடுப்பாகக் கூற, பூங்கோதை, “க்ளுக்…” என்று சிரித்தாள்.

    “என்ன சிரிப்பு?” என்று திலக் கேட்க, ‘ஏதுமில்லை…’ என்பது போல் தோள்களைக் குலுக்கினாள் பூங்கோதை.

      “மிலிட்டரி நல்ல கேளு. கிழவி ரெண்டு பெரும் எனக்கு ஒரு வாய் தரமாட்டாக. எப்பப்பாரு ஒரே அழுகாச்சி.” என்று பூங்கோதை அவள் பங்கிற்கு திலக்கை கடுப்பேற்றிக் கொண்டிருந்தாள்.

      பூங்கோதையின் குறும்பு மீண்டிருந்தது. முத்தமா ஆச்சி, பார்வதி ஆச்சி இருவரும் பூங்கோதையை வாஞ்சையோடு பார்த்தனர்.

    ‘இத்தனை நாட்கள், இந்த சமுதாயத்தை, அவள் கவலையைத் தனியே அழுத்தமாகக் கையாண்ட பெண்ணா இவள்?’ என்று கேள்வி இருவர் கண்களிலும் தேங்கி நின்றது.

           பூங்கோதையின் பிடிவாதமும் சேட்டைகளும் இன்று சற்று அதிகமாக இருப்பதாகவே ஆச்சி இருவருக்கும் தோன்றியது.

     திலக் செய்து கொண்டிருந்த ஆர்ப்பாட்டமும் சிறிதளவும் குறை இல்லை. இத்தனை நாட்கள், மனைவியைக் கவனிக்காததை மொத்தத்தையும் இன்று ஒரே நாளில் கவனிக்க முடிவு செய்தவன் போல் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தான் திலக்.

     “பூங்கோதை… ஆப்பிள் ஜூஸ் குடி.” என்று அவன் மிரட்ட, “முடியாது.” என்று திட்டவட்டமாக மறுத்தாள் பூங்கோதை.

   “அவளுக்கு ஆப்பிள் பிடிக்கலை. விட்டுரு.” என்று பார்வதி ஆச்சி பூங்கோதைக்கு சாதமாகப் பேச, “நீங்க அவளுக்கு ரொம்ப செல்லம் குடுக்கறீக.” என்று திலக் அவர்களிடம் பாய்ந்தான்.

     “இவன் குடுக்குற செல்லத்தில் தான் அவ இதெல்லாம் பண்ணிட்டு இருக்கா. இதுல நம்மளை சொல்லுதான் பாரு.” என்று பார்வதி ஆச்சி, முத்தமா ஆச்சியின் காதில் கிசுகிசுக்க, அவர் ஆமோதிப்பாகத் தலை அசைத்தார்.

          “பியூட்டி… உன்னை குடிக்க வைக்கட்டுமா?” என்று திலக் அவள் கன்னங்களை தன் பக்கம் திருப்ப, “என்ன மிலிட்டரி, தீவிரவாதிகளை மிரட்டுத மாதிரி என்னை மிரட்டலாமுன்னு பார்க்கறீகளா?” என்று பூங்கோதை எகிறினாள்,.

    ஆச்சி இருவரும்,  அவர்கள் சண்டையைச் சுவாரசியமாகப் பார்த்தபடி அமர்ந்திருக்க, யாரும் எதிர்பாராத நேரத்தில் அவள் கன்னத்தில் இதழ் பதித்துவிட்டான் திலக்.

      ஆச்சி இருவரும் வெட்கப்பட்டு முகத்தைச் சிரிப்பினோடு திருப்பிக்கொள்ள, “மிலிட்டரி உன்னை…” என்று பூங்கோதை பற்களை நறநறத்தாள் பூங்கோதை.

     அவள் கோபத்தை ரசித்தபடி, “பியூட்டி… குடி… இல்லைனா…” என்று அவள் உதடுகளை அவன் ரசனையோடு பார்க்க, “நான் குடிச்சீரேன்.” என்று மடமடவென்று குடித்துவிட்டு, டம்ளரை நங்கென்று வைத்தாள் பூங்கோதை.

        “நான் நினச்சா நினச்சதுதேன்.” என்று அவன் திலக் கண்சிமிட்ட, “பிடிவாதம்…” என்று முணுமுணுத்தாள் பூங்கோதை.

    “பிடிக்கலையா?” என்று திலக் கண்களில் காதலோடு கேட்க, பூங்கோதை வெட்கப்பட்டு தலை அசைத்து  சிரித்தாள்.

      “ம்… க்கும்.. இது தான் வேணும்ன்னு சொல்லிருந்தா, என் பேரன் அப்பவே குடுத்திருப்பான். நீயும் சட்டுபுட்டுனு குடிச்சிருப்ப. இதுக்கு இவ்வுளவு ஆர்பாட்டமா?” என்று கழுத்தை நொடித்துக் கொண்டு பார்வதி ஆச்சி கூற, “அதுதேன்… தினமும் குடுத்திருப்பா.” என்று முத்தமா ஆச்சி கேலி பேசிக் கொண்டு கிளம்பினார்.

      “கிழவி ரெண்டுக்கும் நக்கலை பார்த்தீகளா?” என்று பூங்கோதை கடுப்படிக்க, “ஹா… ஹா…” என்று பெருங்குரலில் ரசித்து சிரித்தான் திலக்.

     அப்பொழுது அவன் அலைபேசி ஒலிக்க, அதை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான் திலக்.

பேசி முடித்த திலக்கின் நெற்றி சுருங்கியது. சில நிமிடங்களில் அவன் தலை வலி அதிகமாகியது. அவன் உலகம் தட்டாமாலை சுற்றுவது போல் இருக்க, அருகே இருந்த இரும்பு கம்பியை இறுக்கமாகப் பிடித்தான் திலக்.

     பல நிமிடங்கள் கடந்தும் திலக் உள்ளே வராமல் போக, அவனைத் தேடிக்கொண்டு வெளியே வந்தாள் பூங்கோதை.

  “என்ன ஆச்சு?” என்று பூங்கோதை அவன் தோள்களைத் தொட, திலக்கிடம் அசைவில்லை.

      “மிலிட்டரி…” என்று அவள் அழைக்க, சரேலென்று திரும்பிப் பார்த்தான் திலக்.

          “அப்படி கூப்பிடாத…” என்று திலக் மூச்சு வாங்கியபடி கூறினான்.

    “மிலிட்டரி… என்ன…” என்று பூங்கோதை பேசுமுன், “அப்படி கூப்பிடாதன்னு சொல்றேன்ல?” என்று திலக் கர்ஜிக்க, என்ன நடந்தது என்ற கேள்விக்குப் பதில் தெரியாமல் யோசனையோடு பூங்கோதை ஒரு அடி பின்னே நகர்ந்தாள்.

வா அருகே வா வரும்…

error: Content is protected !!