11
“இது என்னோட போன்…” என்று மெல்லிய குரலில் தனக்குள்ளே கிசுகிசுத்தாள் மஹா.
“நான் மட்டும் என்னோடதுன்னா சொன்னேன்?” என்று கேலியாகக் கூறியவன், “ம்ம்ம்… பிப்டி டூ மிஸ்ட் கால்ஸ்…” என்றவன், அவளைக் கீழ் பார்வையாகப் பார்க்க, அதுவரை இருந்த மனநிலை மாறி, இப்போது தவிக்க ஆரம்பித்து இருந்தாள்.
“ஷ்யாம்…” தவிப்பாக அவனை அழைக்க,
“எஸ் டார்லிங்…” கிண்டலாக அவன் பதிலுரைத்ததைக் கேட்டவளுக்குக் கோபம் வந்தது, அவனது ‘டார்லிங்’ கில்!
“டோன்ட் கால் மீ ஆஸ் டார்லிங்…”
“ஓகே… நான் கூப்பிடலை…” என்று அவன் திரும்பிச் செல்ல, மஹா பல்லைக் கடித்தாள். ‘பேயே… பிசாசே… எருமை மாடு… போனையும் எடுத்துகிட்டு போறானே…” என்று கடுப்பாக மனதுக்குள் திட்டியவள், திரும்பவும்,
“ஷ்யாம்… ப்ளீஸ்…” என்று அழைக்க, அவனது நடை நின்றது.
திரும்பிப் பார்த்து, “இன்னும் கொஞ்சம் கிக்கா கூப்பிடேன்… ஐ லைக் இட்…” என்று அவன் கேலியாகக் கூறினாலும், அவள் ஷ்யாம் என்றழைக்கும்போது அவனுக்குள் என்னன்னவோ ஆனது. என்னவாகிறது என்பது அவனுக்குப் புரியவில்லை. அந்தக் குரலை அவன் மிகவும் விரும்பினான்.
அவனை முறைத்துப் பார்த்த மஹா, “ப்ளீஸ்… அண்ணா ரொம்பவே பயந்து போயிருப்பாங்க… ஒரு தடவை பேசறேனே…” எனும் போதே திரும்பவும் அந்தச் செல்பேசியில் அழைப்பு வந்தது, ‘அண்ணா காலிங்…’ என்று ஒளிர்ந்தது.
“அண்ணா காலிங்…” என்று அவன் அதையும் வேறு படித்துக் காட்ட, அவள் அவசரமாக அவனருகில் வந்தாள், தவித்தபடி!
“ப்ளீஸ் ஷ்யாம்… போனை குடு… ஒரே ஒரு தடவை பேசிடறேன்…” அவள் கெஞ்ச ஆரம்பிக்க, அவளது கண்களை ஆழ்ந்து பார்த்தான் அவன்.
“ப்ளீஸ் ஷ்யாம்…” என்று அவள் மீண்டும் கேட்க,
“மோர் இமோஷன்ஸ் ப்ளீஸ்…” கையில் செல்பேசியை வைத்தபடி மிகவும் இயல்பாக அவன் கூற, அவனை வெறித்துப் பார்த்தாள் மஹா.
“விளையாடாதே ஷ்யாம்… ப்ளீஸ்…”
அவள் கெஞ்ச, அவனோ அவளது கண்களில் கண்ணீர் தென்படுகிறதா என்பதை மட்டுமே ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தான்.
செல்பேசி அடித்து ஒய்ந்தது.
“என்ன போட்டிக்கு ரெடியா… என்ன சொல்ற?” மஹாவை பார்த்துக் கேட்டவனை வெறுப்பாகப் பார்த்தாள். அவ்வளவு கெஞ்சியும் இவன் மனம் இரங்கவே இல்லையே!
அதை அவள் கண்கள் மிகவும் சரியாகப் பிரதிபலிக்க, அதை உணர்ந்த ஷ்யாம்,
“ஏன்? நான் உன்னைச் சாப்பிட சொல்லி இவ்வளவு நேரம் பேசினேனே… அதை நீ கேட்டியா? நான் மட்டும் உடனே கேட்டுடனுமா?”
“ஆனாலும் நீ ரொம்பவே அரகன்ட்…” அவளது வார்த்தைகளில் அவ்வளவு சூடு!
“யூ ஆர் ஈக்வலி அரகன்ட்ன்னு சொன்னா மட்டும் ஃபெமினிசம் பேசுவ… ரைட்?!”
“சரி… விட்டுடு… நான் அரகன்ட் தான் ஒத்துக்கறேன்… ஆனா என்னோட போனை மட்டும் கொடு ஷ்யாம் ப்ளீஸ்…” அவளுடைய அப்போதைய தேவை கார்த்திக்குடன் பேசுவது. அதை எப்படியாவது செய்தால் போதுமென்று தோன்றியது அவளுக்கு.
“அப்படீன்னா… நான் சொன்னதைச் செய்…” என்று அவன் முடிக்கவும், அவனை முறைத்துப் பார்க்கத்தான் முடிந்தது அவளால்! இவனுடன் இப்போது வாக்குவாதம் செய்து கொண்டிருப்பது சரியா என்ற கேள்வி தோன்றியது.
“சரி… வா…” என்று அவள் டைனிங் டேபிளை நோக்கிப் போக,
“ச்சே… ஜஸ்ட் மிஸ்ட் மிர்ச்சி… வேற ஏதாவது சொல்லியிருந்தா கூட ஒத்துகிட்டு இருப்பதானே…” கிண்டல் தொனியில் அவன் கூற, அவள் முறைத்தாள்.
“உனக்கு அகம்பாவம் ரொம்ப ஜாஸ்தி…” தட்டிட்லியை விழுங்கிக் கொண்டே அவள் கூற,
“என் வீட்லயே உட்கார்ந்துட்டு, என்னையே இப்படி விமர்சனம் பண்ற தைரியம் உனக்கு மட்டும் தான் வரும்… ஐ அப்ரிஷியேட்…” என்றவனுக்கும் சரியான பசி!
அவள் உண்ணாமல் அவன் மட்டும் தனியாக உண்ணப் பிடிக்காமல் இருந்து விட்டதன் எபெக்ட்… சொல்லாமல் கொள்ளாமல் நான்கு இட்லிகளை விழுங்கியபோது தான் அவனுக்கு அவனது பசியின் அளவே தெரிந்தது.
அவள் பட்டினி இருக்கிறாள் என்பதற்காகத் தானும் எதற்காகத் தானும் உண்ணாமல் காத்து கிடக்க வேண்டும் என்பதை மட்டும் அவன் ஆராயவில்லை. அதை அவளிடம் கூறவுமில்லை.
இருவரும் உண்டு கொண்டிருக்கும் போதே அவனது அலைபேசி அழைக்க, எடுத்துப் பார்த்தவனின் புருவம் முடிச்சிட்டது. விஜய் தான் அழைத்துக்கொண்டிருந்தான்.
எடுக்கவில்லை!
எப்படியும் கார்த்தியுடன் தான் இருக்க வேண்டும். அவனுக்காகத்தான் அழைப்பதும் என்பதைப் புரிந்து கொண்டவனுக்கு விஜய்யை எப்படி ஹேண்டில் செய்வது என்பது தான் குழப்பமே!
கண்டிப்பாக அவனுக்கும் தனக்கும் இந்த விஷயத்தில் கருத்து மோதல் வந்தே தான் தீரும்… ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தை எப்படித் தான் சமாளிப்பது?
அவன் தன்னிடம் வேலை பார்ப்பவன் என்றெல்லாம் ஒதுக்கவே முடியாது. ஒரு மலையை உளிகொண்டு உடைக்க முடியாது… ஆனால் விஜய் கண்டிப்பாக மகாவுக்காக வெடிகுண்டாக மாறும் சந்தர்ப்பங்கள் வரலாம். இவள்மேல் அவனுக்கிருக்கும் மயக்கம் எதை வேண்டுமானாலும் செய்ய வைக்கும். அதோடு சென்னையின் வியாபார ரகசியங்கள் முழுவதும் அவனுக்கு அத்துபடி.
அதனால் அவனை இதற்கும் மேல் வளர்த்து விடுவதும் சரியல்ல… அதோடு பகைமை பாராட்டுவதும் சரியல்ல என்று முடிவெடுத்துக் கொண்டவன், வந்த காலை அட்டென்ட் செய்து பேசினான்.
“சொல்லு விஜி…”
“பாஸ்… நம்ம கார்த்திக் அவங்க சிஸ்டர் கிட்ட பேசனும்ன்னு சொன்னாங்க… அதான் உங்க கிட்ட கேட்டுடலாம்ன்னு கூப்பிட்டேன்…”
“தாராளமா பேசட்டும் விஜி… என்னோட பேஸ்டைம்ல இருந்து கால் பண்ணித்தரேன்… அவங்க பேசட்டும்…”
இவனுக்குத் திடீரென இவ்வளவு தயாள குணம் எங்கிருந்து வந்தது என்ற குழப்பத்தோடு, “ஓகே பாஸ்…” என்று அவன் வைத்து விட, ஃபேஸ்டைமில் விஜிக்கு அழைத்தான் ஷ்யாம்.
இருவருமாகப் பேசட்டும் என்று அவளிடம் தன்னுடைய ஐபோனை கொடுத்தவன், சற்று தள்ளி அமர்ந்து கொள்ள, தனக்கு முன் அலைபேசியை ஏந்திப் பிடித்தபடி கலக்கமாகக் காத்திருந்தாள் மகா வேங்கடலக்ஷ்மி.
“அண்ணா…” தழுதழுத்த குரலில் மஹா அழைக்க, மறுபுறம், “லட்டும்மா…” என்ற கார்த்திக்கின் குரலோடு அவனது தவித்த முகத்தையும் பார்த்தவளுக்கு, தொண்டையை அடைத்தது.
“சாரி பாப்பா… என்னால உனக்கு எவ்வளவு கஷ்டம்… இதுக்கு என்னை நானே மன்னிக்க முடியாது லட்டு…”
“அதெல்லாம் ஒன்னும் இல்லண்ணா… எனக்கு எந்தக் கஷ்டமும் இல்ல… நான் தைரியமாத்தான் இருக்கேன்…” உண்மையிலேயே அவள் அவ்வளவு தைரியமாகத்தான் இருந்தாள். எது வந்தாலும் சமாளிக்க முடியுமென்ற தீர்க்கம் அவளிடம் எப்போதுமே உண்டு. இப்போது தைரியம் தேவைப்படுவதெல்லாம் கார்த்திக்குத்தான் என்பதை உணர்ந்து கொண்டவள், அதற்கும் மேல் கலங்கவில்லை. தனது கலக்கத்தையும் கலங்கிய முகத்தையும் கார்த்தியிடம் காட்ட விரும்பவில்லை.
முக்கியமாக ஷ்யாம் முன் உடையவே கூடாது என்பதை ஒரு தீர்மானமாகவே வைத்துக் கொண்டாள்.
முக்கியமாக அழுது விடவே கூடாது. அதற்கான சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தக் கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டவளை அசைத்துப் பார்த்தது கார்த்திக்கின் கண்ணீர்.
ஒரு கையில் போனை பிடித்தபடி, ஒரு கையால் முகத்தைத் தாங்கிக்கொண்டு விக்கி விக்கி அழுதுக்கொண்டிருந்தான் அவளது தமையன்.
அவனது தைரியலட்சுமி மகாவேங்கட லக்ஷ்மி. தங்கையாக இருந்தாலும் அவனுக்கே நிறையச் சமயங்களில் தைரியம் கொடுப்பவள். அவள் இல்லாமல் அவனால் எதையும் சிந்திக்க முடியவில்லை.
அவனது கண்ணீரை பார்த்தபோது அவளுக்கு நெஞ்சைப் பிசைந்தது.
“அண்ணா…” சற்று கறாராக அவள் அழைக்க, நிமிர்ந்து பார்த்தது கார்த்திக் மட்டுமல்ல… ஷ்யாமும் தான்.
இந்த நிலையிலும் இவளுக்கு இருக்கும் தைரியத்தை எண்ணி அவனால் வியக்காமல் இருக்கவே முடியவில்லை. அவளை இன்னமும் சீண்டி அவளது தைரியத்தைக் குலைக்கும் ஆசை வந்ததது.
புருவத்தை உயர்த்தி ஷ்யாம் பார்க்க, அவனை மேல் பார்வையாகப் பார்த்த பாவையவள், தனது தமையனிடம்,
“அண்ணா… நீ இப்பத்தானே தைரியமா இருக்கணும்… எனக்கு நீ தைரியம் சொல்லணும்… நீ இப்படி அழுதா எப்படிண்ணா?”
உள்ளுக்குள் இருந்த ஆற்றாமையை அவள் வெளிப்படுத்த, கண்களைத் துடைத்துக் கொண்டான் கார்த்திக். அதுவரை அவனால் தாங்கவியலாமல் இருந்த ஒன்றை இப்போது எளிதாக எதிர்கொள்ளும் நிலைக்கு வந்திருந்தான்.
“இல்ல பாப்பா… இனிமே அழமாட்டேன்…” என்று முகத்தைத் துடைத்துத் தெளிவானவன், “என்னோட தைரியமே நீ தான்டா குட்டிம்மா… நீ தைரியமா இருடா… அண்ணன் பார்த்துக்கறேன்… எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம்… தலைய அடகு வெச்சாவது உன்னைக் கூட்டிட்டு வந்துடுவேன்… அதை மட்டும் நம்பு பாப்பா…”
“கண்டிப்பா நீ செய்வண்ணா… ஆனா அப்பாவுக்கு இந்த விஷயத்தைச் சொல்லிட்டியா?” கலக்கமாக அவள் கேட்க,
“இல்லடா… யாருக்குமே தெரியாது… தெரிஞ்சா அவ்வளவுதான்… பாவம் டா அப்பா…” எனும் போதே வார்த்தைகள் தழுதழுக்க,
“சொல்லிடாதே… பணத்துக்கு என்ன செய்றதுன்னு யோசிக்காதே… தியேட்டர் நல்ல விலைக்குப் போகும்… அதை டிசால்வ் பண்ணிடு… என்ன விலைன்னாலும் ஓகே ண்ணா…” என்று தெளிவாக அவள் கூற,
“பாப்பா அது உன் பேர்ல இருக்கறது… அதை நான் கை வைக்கமாட்டேன்..”
“எனக்கு எதுவும் தேவையில்லை ண்ணா… இப்ப நமக்கு நம்ம சுயமரியாதை தான் முக்கியம்… இதைவிட அசிங்கம் வேற இல்ல… இங்க இருக்க ஒவ்வொரு செக்கண்டும் எனக்கு நெருப்பு மேல இருக்க மாதிரி இருக்கு… பவர் ஆப் அட்டார்னி உன்கிட்ட இருக்கு… நீ வந்த விலைக்குக் கொடுத்துடு…”
அவளது திட்டத்தையும் அதைச் செயல்படுத்த சொல்லும் விதத்தையும் பார்த்த ஷ்யாம் உள்ளுக்குள் அயர்ந்து தான் போனான். அதைக் காட்டிலும் அவளது அந்த நிமிர்வும், துணிச்சலும் அவனை ஆச்சரியப்படுத்தியது. ஆண்களே இது போன்ற சந்தர்ப்பத்தில் உடைந்து போய் அழுவதைப் பார்த்திருக்கிறான்.
ஆனால் இவள்?
“சரி பாப்பா… உன் பேர்ல இருக்கறதை நான் கடைசியாத்தான் கை வைப்பேன்… இது என்னோட தப்பு… நான் தான் பொறுப்பு… எதுன்னாலும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்கறேன்…” என்றவனுக்கு ஆயிரம் யானை பலம் வந்திருந்தது.
“சரி ண்ணா… எனக்கு இங்க எந்த ப்ராப்ளமும் இல்ல… அப்படியே எதுன்னாலும் நான் சமாளிப்பேன்… நீ பயப்படாதே…” என்று ஷ்யாமை கீழ் பார்வையாகப் பார்த்துக் கொண்டே அவள் கூற, ஷ்யாமின் முகத்தில் புன்முறுவல் மலர்ந்தது.
‘செம காரம் தான் இந்த மொளகா…’ என்று எண்ணிக்கொண்டவனுக்கு அவளை எப்படி உடையச் செய்வது என்ற கேள்வி உதித்தது. இப்போது அது அவனுக்கு ஏனோ அவனது மானப்பிரச்சனை போலத் தோற்றமளித்தாலும், இந்த விளையாட்டு அவனை ஈர்த்தது.
வீடியோ காலை ஆப் செய்துவிட்டு நிமிர்ந்து ஷ்யாமை பார்க்க, அவனது கண்களில் குறும்பு கூத்தாடியது.
“லட்டுப் பாப்பா…” இதழ்கடையில் சிரிப்பை அதக்கிக்கொண்டு அவன் சொல்லிக்காட்ட, கையில் இருந்த ஐபோனை அவனை நோக்கி எறியப் போனாள்.
“ஏய்… என்னோட ஐபோன்…” அவசரமாக அவன் நகர்ந்து அவள் எதிரில் வந்து அமர்ந்துகொண்டு போனை பிடுங்கியவனைப் பார்த்து,
“அப்படீன்னா ஒழுங்கா பேசணும்…” என்று அவள் பத்திரம் காட்டினாள்.
“காரியமாகற வரைக்கும் ப்ளீஸ் ஷ்யாம்ன்னு ரொமாண்டிக்கா கெஞ்ச வேண்டியது… இப்ப போனை தூக்கி போடறியா?” என்று சிரித்துக் கொண்டே அவன் வம்பிழுக்க, அவளது முகம் விளக்கெண்ணெய்யைக் குடித்தது போலானது.
“நானா…?ரொமாண்டிக்கா…?” என்று இழுத்தவள், “ஐயோ ஆண்டவா… இந்தக் கொசுத்தொல்லை தாங்கலப்பா…” என்று தலையிலடித்துக் கொள்ள,
“இனிமே ப்ளீஸ் ஷ்யாம்ன்னு நீ சொல்லும்போது ரெக்கார்ட் பண்ணி ப்ளே பண்ணி காட்டறேன் பார் மிர்ச்சி… எவ்வளவு கிக்கா கூப்பிடற தெரியுமா?!”
“மண்ணாங்கட்டி…” என்று எழுந்து கொள்ள முயல, உடன் எழுந்தவன்,
“சரி மிர்ச்சி… உனக்கு எதுவும் வேண்டாம்ன்னு ஈசியா சொல்றியே… வாழ்க்கையோட முதல் தேவை பணம்… அது தெரியுமா உனக்கு?” என்று கேட்க, திரும்பி நின்று அவனை ஆழ்ந்து பார்த்தவள், கைகளைக் கட்டிக் கொண்டு,
“பணம்…” என்று கேலியாகக் கூறியவள், “அது வெறும் அச்சடிச்ச காகிதம்…” அழுத்தமான குரலில் அவள் கூற,
“அந்தக் காகிதத்தைத் தான் இந்த உலகமே கொண்டாடுது… தேடுது… அதை வெச்சுத்தான் ஒருத்தரோட அந்தஸ்தை நிர்ணயம் பண்ணுது… நம்ம முதல் தேவை அந்தக் காகிதம் தான்…”
“அதை முதல் தேவையா நினைக்கறவங்க கிட்ட இதைச் சொல்லு… எனக்கும் தேவைதான்… இல்லைன்னு சொல்லமாட்டேன்… நான் ஒன்னும் முற்றும் துறந்த முனிவரும் இல்ல… ஆனா ப்ரையாரிட்டின்னு ஒரு விஷயம் இருக்கு… எது முதல் தேவை, எது அடுத்தத் தேவைன்னு நமக்கு நாமே சுய நிர்ணயம் செய்ய வேண்டியது அவசியம்… அந்தக் காகிதத்தைவிட முக்கியமான நிறைய விஷயங்கள் இருக்கு… அதைப் பற்றி உனக்குத் தெரியல ஷ்யாம்…”
“எனக்குத் தெரிஞ்சது எல்லாம் அந்தப் பேப்பர் தான் மிர்ச்சி… என்னோட தேவையும் அந்தப் பேப்பர் தான்… அந்தப் பேப்பர் மூலமா கிடைக்கற அந்தஸ்து, பலம், மரியாதை இதெல்லாம் ஒரு போதை… அந்தப் போதை ஒரு மனுஷனை வசியப்படுத்திட்டா அவனை எந்தப் போதனையும் மாற்ற முடியாது… அது ஒரு சுழல்…” என்றவனை உணர்வுகளைத் துடைத்து ஆழ்ந்து பார்த்தவள்,
“ரைட்… உனக்கு உன்னோட நியாயம்… எனக்கு என்னோட நியாயம்… இது பேரலல் லைன்… அன்ட் இட் கேன் நெவர் மீட்…” என்று கூறிவிட்டு நகரப் பார்க்க, அவளை ஒற்றைக் கையால் தடுத்து,
“ஒய் நாட்… இஃப் இட் மீட்ஸ்?” புருவத்தை உயர்த்தி ஆழ்ந்த குரலில் கேட்க, அவனை வெறித்துப் பார்த்தாள். வயிற்றுக்குள் ஏதோ ஒன்று உருண்டது.
“அது எப்படி முடியும்? சான்ஸே இல்ல…” என்று உறுதியாகக் கூறியவளை கண்களைச் சுருக்கிக் கொண்டு பார்த்துப் புன்னகைத்தான்.
“நீயா என் வழிக்கு வந்தா?”
“ரப்பிஷ்… ஜஸ்ட் இம்பாசிபிள்…”
“இட் வில்… ஐ சேலஞ்ச்…” என்று உறுதியாக அவன் கூற,
“ப்ச்… அது முடியவே முடியாது…”
“உன்னை என்கிட்ட சரண்டராக வெச்சுட்டா?” புருவத்தை உயர்த்திக் கொண்டே அவன் கேட்க,
“ஸ்டுபிட் மாதிரி பேசாதே…” என்று அவள் நகர,
“வெச்சுட்டா??” அவனது தொனியில் விளையாட்டுத்தனம் இருந்தாலும், நான் செய்தே தீருவேன் என்ற உறுதியும் தெறித்தது. மஹாவுக்கு அவளது தன்மானத்தை உசுப்பி விட்டார் போல ஆனது.
“அப்படி ஒன்னு நடக்கவே நடக்காது… அப்படி மட்டும் ஆனா நீ என்ன சொன்னாலும் நானும் கேட்கறேன்…”
“கண்டிப்பா ஒரு நாள் சொல்வ மிர்ச்சி… நீ என்ன சொன்னாலும் செய்றேன்னு சொல்வ… சொல்ல வைப்பேன்…” கைகளைக் கட்டிக் கொண்டு தெளிவாக, ஒவ்வொரு வார்த்தையாக அவன் உச்சரிக்கும்போது, அவளது நெஞ்சம் படபடவென அடித்துக் கொண்டது. அதை அவள் வெளிகாட்டிக் கொள்ளவில்லை. கைகள் சில்லிட்டுப் போனது.
கண்டிப்பாக அது நடக்க முடியாது என்பதில் மஹா உறுதியாக இருந்தாள் தான். ஆனாலும் அதைத் தாண்டி அவனது அந்தத் துளைக்கும் பார்வையும், அதில் தெறித்த உறுதியும் அவளை உள்ளுக்குள் ஏதோ செய்தது.
தேவை இல்லாமல் வம்பை இழுத்து விட்டுக் கொள்கிறோமோ என்று ஒரு பக்கம் யோசித்தாலும், அவளது தன்மானத்தைச் சோதிக்கும் அவனது வார்த்தைகளைப் புறம் தள்ளவும் முடியவில்லை.
“பார்க்கலாம்…” என்றவள், அவனைத் தாண்டி அந்த அறையிலிருந்து வெளியேறினாள்.
அங்கு அவன் முன் நின்று கொண்டிருப்பது மூச்சடைப்பதைப் போலிருந்தது.
அவன் எப்படிப்பட்டவன் என்பதில் அவளுக்குச் சந்தேகம் இல்லை. அவனொரு நாகம்… அந்த நாகத்தைச் சீண்டி விட்டால் அது கொத்தாமல் விடாது என்பதும் உறுதி! ஆனால் அந்த நாகத்தைச் சீண்ட வேண்டும் என்று தான் நினைக்கவே இல்லையே என்ற நினைவில் அவளது முகம் சுருங்கியது.
வெளியே இரவு விளக்குகளின் ஒளிர்வில் மிளிர்ந்த அந்தத் தோட்டத்தைக் கண்கள் விரிய பார்த்துக்கொண்டிருந்தாள். உள்ளுக்குள் எவ்வளவு அழுத்தமாக உணர்ந்தாலும், அந்தத் தென்றல் காற்றும், காற்றில் மிதந்து வந்த அருவியின் வாசமும் அவளை எங்கோ அழைத்துச் சென்றது.
மனதிலிருந்த துயரமும், துன்பமும் மெதுமெதுவாகக் கரைவது போலத் தோன்றியது.
தூரத்தில் தெரிந்த நிலவும் அந்த இரவும் அவளை ஆற்றுப்படுத்தியது.
திரும்பிப் பார்க்காமல் நடக்கத் துவங்கினாள்.
தன்னை ஏன் இவன் தடுக்காமல் இருக்கிறான் என்பது அவளுக்குப் புரியவில்லை. எப்படியும் தன்னால் தப்ப முடியாது என்று எண்ணுகிறானா?
அவன் இந்தளவு நம்பிக்கையாக விட்டு இருக்கிறானென்றால் ஒன்று சுற்றிலும் உள்ள பாதுகாப்பை இவன் பலப்படுத்தியிருக்க வேண்டும், அல்லது இது ஆளரவமில்லாத வனாந்தரமாக இருக்க வேண்டும்.
இரண்டாவது தான் உண்மையென்று தோன்றியது.
சுற்றிலும் யாருமே இல்லாத ஒரு ஒரு வனாந்தரம்.
இங்கு இப்படியொரு வீடா? இப்படியொரு இடத்தில் ஒருவன் இருக்கக் கூடுமா?
தோட்டத்தையும் தாண்டி நடக்க நடக்க வெளிச்சம் குறைந்து கொண்டே வந்து இருள் சூழ்ந்தது. சுற்றிலும் மரங்கள் அடர்த்தியாக இருந்ததால் எப்படியும் பகலிலேயே இருள் சூழ்ந்து தான் இருக்கும்.
இருள் கவ்வவும், நடையின் வேகம் குறைந்தது. இனியும் நடப்பது உசிதமல்ல… ஏதாவது மிருகமோ, பாம்போ எதிர்ப்பட்டாலும் அதிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ளத் தன்னிடம் எதுவுமே இல்லை என்பதை நினைவில் இருத்தியவள் அப்படியே நின்றாள்.
ஆனால் ஷ்யாமுக்கு காட்டு விலங்கும் கூடத் தேவலாம் என்று ஒரு மனம் வாதிட்டது.
ஓடை சலசலக்கும் ஓசை கேட்டது. கண்கள் இருளுக்குப் பழகியிருக்க, சுற்றியும் பார்த்தாள். பத்தடி தாண்டி ஒரு சிறு ஓடை ஓடிக்கொண்டிருப்பது தெரிந்தது. நிலவின் ஒளி பட்டு நீர் பளபளத்தது.
பௌர்ணமி வருவதற்கு இன்னும் இரண்டு நாட்களே மீதமிருக்கலாம். பைரவி தான் இந்த விஷயத்தில் மிகவும் கறார். பௌர்ணமி தோறும் கன்னிப் பெண்கள் விரதம் இருந்தாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து மஹாவை வற்புறுத்தி இருக்க வைப்பவர். அப்போது தான் மனம்போல் மாங்கல்யம் அமையுமாம்.
இப்போது அதை நினைத்து மனதுக்குள் கேலியாக நினைத்துக் கொண்டாள். தான் இதுபோல நிலவின் துணையுடன் மட்டும் ஒரு நாள் இரவைக் கழிக்க வேண்டியிருக்கும் என்று அவர் அறிந்திருப்பாரா?
விரதம் முடிந்தவுடன் பௌர்ணமி நிலவைத் தரிசனம் செய்தபிறகு தான் அன்றைய விரதம் முடித்து இரவு உணவைக் கண்ணில் காட்டுவார். அதுவரை அவள் எவ்வளவுதான் கெஞ்சினாலும் கொஞ்சினாலும் பைரவியிடம் வேலைப் பலிக்காது.
பாதையைக் கவனித்து நடந்தவள், ஓடையின் கரையை ஒட்டி அமர்ந்தாள். அங்குப் பெரிதாக முட்களோ எதுவுமோ இல்லை. பெரும்பாலும் அது மனிதர்கள் உபயோகிக்கும் பகுதியாகத்தான் தோன்றியது. ஆனால் நீர் கண்ணாடியாகப் பளபளத்தது. சலசலக்கும் ஓசை வேறு மெல்லிய சங்கீதமாக ஒலித்தது.
அதுவொரு சிறு ஓடை.
நீரில் கைவைத்துப் பார்த்தாள். சில்லென்று இருந்தது.
அந்தச் சூழ்நிலையில் மஹாவுக்குப் பாட வேண்டும் போலத் தோன்றியது. பாட்டும் நடனமும் பைரவியின் கைங்கரியம். பாட்டை ஆர்வமாகக் கற்றுக் கொண்டவளுக்கு நடனத்தில் பெரிதாக லயிப்பில்லை. காரணம் வேறு ஒன்றுமில்லை. அடவுகளின் கணக்கு வழக்கே அவளால் தாக்குப் பிடிக்க முடியாத ஒன்று என்பதோடு உடலும் வளையவில்லை.
‘அரைமண்டி போடு பாப்பா…’ என்று அவளது குரு கூறினால், அது கால் மண்டியாக மட்டும் தான் இருக்கும்… மீறிப் போனால் முக்கால் மண்டியாக இருக்கும். மகா சரியான அரைமண்டி போட்டதாகச் சரித்திரமும் இல்லை. பூகோளமும் இல்லை.
‘நாலாவது நாட்டடவு ஆடு பாப்பா…’ என்று கூறினால் விழிப்பாள். நாலாவதின் கணக்கு நினைவிலிருந்தால் தானே?
ஆனால் பாட்டில் ஆர்வம் அதிகம்! அத்தனை ஸ்வரத்தையும் பிசகாமல் நினைவில் இருத்தி வைப்பாள்.
“எருமை… இது ஞாபகம் இருக்கு… உனக்கு அடவுக் கணக்கு ஞாபகம் இல்லையா?” என்று பைரவிதான் மண்டையில் கொட்டுவார், சிறு வயதில்!
“ம்மா… டான்சையும் உட்கார்ந்துட்டே ஆடச் சொல்லு… நான் ஆடறேன்…” என்று சொல்லி வேறு இன்னும் வாங்கிக் கட்டிக் கொள்வாள்.
இப்படியே பைரவி போராடிப் போராடியே ஒரு வழியாகப் பாட்டை முழுதாகவும், நடனத்தை அரைகுறையாகவும் கற்க வைத்தார்.
மஹாவின் ஆர்வத்திற்கு ஏற்றார் போல, அவளுக்குத் தேன் குரல். எத்தனை வளைத்தாலும் வளையும். அதனால் எத்தகைய கடினமான நோட்ஸ்ஸாக இருந்தாலும் சற்றும் பிசகாமல் பாடி விடுவாள். ஆனால் அதை ப்ரொபெஷனலாக எல்லாம் செய்யவில்லை. கல்லூரியில், நவராத்திரி விழாக்களில், கோவில்களில் என்று இவள் பாடும்போது அதை ரசிக்கவென ஒரு தனிக் கூட்டம் உண்டு!
இப்போதும் இந்தச் சூழ்நிலையில் பயம் வருவதற்குப் பதில் அவளுக்குப் பாடல் தான் வந்தது. கண்களை மூடித் தியானித்து,
யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே கண்ணனோடுதான் ஆட
பார்வை பூத்திட பாதை பார்த்திட பாவை ராதையோ வாட
இரவும் போனது பகலும் போனது மன்னன் இல்லையே கூட
இளைய கன்னியின் இமைத்திடாத கண் இங்கும் அங்குமே தேட
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ…
ஆசை வைப்பதே அன்புத் தொல்லையோ…
பாவம் ராதா…
பாடலில் ஆழ்ந்து தன்னை மறந்து பாடிக் கொண்டிருந்தாள் மஹா.
அவனையும் மறந்து அருகில் அமர்ந்திருந்தான் ஷ்யாம். அவன் அருகில் அமர்வதை அவள் உணர்ந்தாள். அவன் தான் என்று அவளது மனம் சொன்னது… அவனது வாசனையும் இப்போது அவளுக்குச் சற்று பழக்கமாகி இருந்தது. கண்களைத் திறக்காமலே அவன் தான் என்பதைக் கண்டுகொண்டாள். ஆனாலும் கண்களைத் திறக்கவில்லை. மனதில் எந்த விதமான தடுமாற்றமும் கூட இல்லை. அந்த அளவில், சூழ்நிலையோடும் பாடலோடும் ஆழ்ந்து அமிழ்ந்து போயிருந்தாள்.
பாடி முடித்தவுடன் மெல்ல கண்களைத் திறந்து அவள் பார்க்க, சற்று தள்ளிக் கற்பாறையில் அமர்ந்திருந்த ஷ்யாம் கண்களைத் திறக்கப் பிடிக்காமல் மூடி, அந்த இதத்தில் லயித்திருந்தான்.
கண்கள் மூடியிருந்த அந்த நிர்விகல்பமான முகத்தை ஆழமாகப் பார்த்தாள்!
குழந்தை ஒன்று தாயின் தாலாட்டில் மயங்கிக் கண்மூடி இருப்பதைப் போலத்தான் தோன்றியது மஹாவுக்கு! அந்த முகத்தில் எந்தவிதமான கள்ளமும் இல்லை… கல்மிஷமும் இல்லை. இது அனைத்தையும் மறந்த நிலையா? இல்லை துறந்த நிலையா?
இல்லையென்றால் இவையெல்லாம் தனது கற்பனையா என்று தனக்குத் தானே கேள்வி கேட்டுக் கொண்டாள்.
இவன் தான் இரண்டு மொழி திரைப்படத் துறையை ஆளும் ராட்சசனா?
இவன் தான் சற்று முன் வரை அவளைக் கார்னர் செய்து அழ வைத்துக் காட்டுவேன் என்றவனா?
அன்றும் தான் பாடியபோது, இவன் அதில் லயித்து, அவளைப் பார்த்த பார்வையின் அர்த்தத்தை இன்று வரை அவளால் மொழி பெயர்க்க முடியவில்லையே!
“ஷ்யாம்…” மெல்லிய குரலில் அவள் அழைக்க, கண்களைத் திறக்க விரும்பாமல், “ம்ம்ம்…” என்றான்.
“போலாமா?”
“என்னைக் கேட்டுட்டா நீ வந்த?” கண்களை மூடியவாறே அவன் கூறிய பதிலில் கடுப்பானவள், எழுந்து கொள்ள முயல, அவளது கைகளைப் பிடித்துத் தன்னருகே மீண்டும் அமர்த்தினான்.
“ப்ச்… டோன்ட் டச் மீ…” என்று அவனது கையை அவள் உதறப் பார்க்க,
“ஓகே… அக்செப்டட்… ஆனா ஒழுங்கா உட்கார்…” என்று அவளை இருத்தி வைக்க, “நீ சொல்லி நான் உட்கார வேண்டிய அவசியம் இல்ல…” என்று அதே கடுப்போடு அவள் கூற, “ப்ச்… கொஞ்ச நேரம் பேசாதே…” என்று அவன் கிசுகிசுப்பாகக் கூறி மீண்டும் கண்களை மூடிக் கொண்டான்.
இவன் என்னதான் செய்கிறான் என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க,
“உன்னைப் பிடிக்கவே இல்ல மிர்ச்சி…” என்று அவன் கண்களை மூடிக் கொண்டே அவன் கூற,
“அதைப் பத்தி எனக்கு என்ன கவலை?”
“ம்ம்ம்… ஆனா உன்னோட வாய்ஸ்… இட் இஸ் ஜஸ்ட் மெஸ்மெரைஸிங்…” என்று அனுபவித்துச் சொல்ல, அவள் பதிலேதும் கூறவில்லை.
“ம்ம்ம்ம்… ஐஸ்க்ரீம் மாதிரி… உள்ளுக்குள்ள ஜில்லுன்னு என்னமோ பண்ணுது…” என்றவன், கண்களைத் திறந்து அவளைப் பார்த்து,
“இன்னொரு தடவை பாடேன்…” என்று அவளது கண்களைப் பார்த்து அவன் கேட்க, அவளுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. அவன் கூறுவதை எல்லாம் கண்மண் தெரியாமல் மறுக்க வேண்டும் என்று தான் அவள் முடிவெடுத்து வைத்திருந்தாள். ஆனால் இப்போது அதைச் செயல்படுத்த முடியாமலும், அவன் கேட்டதை ஒப்புக்கொள்ள முடியாமலும், இரண்டுக்கும் இடையில் தவித்தாள். காரணம் ஈகோ… இவன் கேட்டு நாம் செய்வதா என்ற ஈகோ!
“ம்ஹூம்… முடியாது…” என்று அவள் எழுந்து கொள்ள, அவனுக்கு முன்பு எப்போதையும் விட எரிச்சல் மிகுந்தது. தான் இவ்வளவு இறங்கிப் போய்க் கேட்டும் கூட மறுப்பவளா என்ற எரிச்சல்.
“இப்ப பாட முடியுமா முடியாதா?” அதே எரிச்சலோடு அவன் கேட்க,
“உனக்கு எல்லாமே மெக்கானிக்கல் தான் ஷ்யாம்… நீ நினைச்சதை பண்ணனும்… ஆனா அதுக்கு நான் ஆள் கிடையாது… மிரட்டி உன்னால பூவை மலர வைக்க முடியுமா? பழத்தைப் பழுக்க வைக்க முடியுமா? அது மாதிரி தான் மியுசிக் ஒரு பீலிங்… அதுவும் தானாத்தான் மலரனும்… அது உன்னை மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் புரியவே புரியாது…” என்றவள், அந்த இருளில் நடக்கத் துவங்கினாள்.
Leave a Reply