Veenaiyadi nee enakku 15
Veenaiyadi nee enakku 15
15
“இப்ப நான் ஏதாவது பண்ணியே ஆகணும்ன்னு ரொம்ப ஆசைப்படற போல இருக்கே…” சின்னச் சிரிப்போடு அவன் கூறினாலும், அந்தக் குறும்பில், அவள் உணர்ந்தது அவனது வெகு தீவிரமான மனோபாவம். அவனது குரலில் விளையாட்டுத்தனம் இருந்தாலும், அதில் தெறித்த தீவிரம் அவளது நெஞ்சை படபடக்கச் செய்தது. ஆனாலும் மஹா தன்னுடைய கெத்தை விட்டு விடுவாளா? அதைக் காட்டிக் கொள்ளாமல், தள்ளி நிற்க முயன்று கொண்டே,
“வாட்? என்ன உளர்ற?” என்று எரிச்சலாகக் கேட்க,
“ஆமா… சும்மா இருக்கவனை, நீ ஒன்னும் பண்ண முடியாது, பண்ண முடியாதுன்னு சீண்டி விடறதோட உள்ளர்த்தம், ஏதாவது என்னைப் பண்ணேங்கறதாம்… அது உனக்குத் தெரியாதா?”
முகத்தைத் திருப்பியவளை, தன் பக்கம் திருப்பியவாறே அவளது முக வடிவை அளந்தவாறு அவன் கூற, அதைக் கேட்டவள், இன்னமும் கொதிநிலைக்குச் சென்றாள்.
அவன் அவளை இழுத்து சுவரோடு நிறுத்திய இடம் ஹாலை ஒட்டிய சிறு சந்து… மாடிக்குச் செல்வதற்காக வெளியிலிருந்து செல்லும் படி போல… அந்தப் படி வெளியே தெரியாமலிருக்க ஒரு சிறு சந்து போன்ற அமைப்பு அது. இந்த மரப் படியை மேலே மூடிக் கொள்ளலாம்… மூடிதான் இருந்தது. அதனால் வெளிச்சமும் காற்றும் குறைவாகவே இருக்க, அவனது அண்மை இன்னும் எரிச்சலைத் தூண்டியது.
“ரொம்ப ஓவரா கற்பனை பண்ற…” என்றவள், அவனைத் தள்ளி நிறுத்த முயன்று, “தள்ளி நில்லு…” என்று முகத்தைச் சுளித்துக் கொண்டு கூற,
“நான் தள்ளி நிற்கனும்னா, என்னைத் தேவையில்லாம சீண்டாதே…”
“உன்னைப் போய் நான் எதுக்குச் சீண்டப் போறேன்? எனக்கு அதான் வேலை பாரு…” என்றவள், அவனைப் பெரு முயற்சி கொண்டு தள்ள முயல, ஒரு சிறு முயல் பெரிய பாறையை நகர்த்துவது போல இருந்தது. முடியவில்லை… ஆனாலும் விடாமல் முயன்றாள்.
“நீ மறுபடியும் மறுபடியும் என்னை டெம்ப்ட் பண்ணி விட்டுட்டே இருக்க…” என்று குறும்பாகக் கூறியவனை மேலும் முறைத்தாள்.
“நானா…” கோபத்தில் முகம் சிவக்க அவனைப் பார்வையால் எரித்தபடி கேட்க, அவன் வேகமாகத் தலையாட்டினான். அந்தத் தலையாட்டலில் தான் எவ்வளவு கள்ளத்தனமும் சில்மிஷமும்?!
வெண்ணெய்த் திருடிய கண்ணனை அவன் தாய் மிரட்ட, அவனோ தான் உண்ணவே இல்லையென வாய் முழுவதும் வெண்ணெய் வழியச் சொன்ன காட்சி தான் ஏனோ அவளுக்கு நினைவுக்கு வந்தது.
அவன் எத்தகைய நிலையை அவளுக்கு உருவாக்கி வைத்திருக்கிறான், அவள் எந்த நிலையில் இருக்கிறாள் என்பதெல்லாம் தற்காலிகமாக மறந்து தான் போய்விட்டது, அவன் குறும்பாகத் தலையாட்டிய அந்த நொடியில்.
இந்தக் கல்மிஷத்துக்கும் அவனது செயல்களுக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா என்று தீவிரமாக யோசிக்கத் தோன்றினாலும் அந்தக் கள்வனின் அண்மை அதைச் செய்யவிடவில்லை.
“நானா உன்னை டெம்ப்ட் பண்றேன்?” மீண்டும் அவளே கேட்க, அவன் மீண்டும் வெகு வேகமாகத் தலையை ஆட்டியபடி,
“எஸ்… என்னோட சார்ம்ல நீ மயங்கிட்ட போல… ஆனா எனக்குத்தான் உன் மேல இன்டரஸ்டே வர மாட்டேங்குது…” அதே சில்மிஷத்தோடு கூற, அவள் உச்சபட்ச எரிச்சலில்,
“அட ச்சீ… பே…” என்று கடுப்படித்தவள், “இவன் பெரிய மன்மதன்… இவன் அழகுல மயங்கிட்டோமாம்…” என்று முணுமுணுத்து விட்டு, “ஓவரா சீனப் போடாத…” என்று செந்தணலாகக் கொதித்தவள், தனது மொத்த சக்தியையும் திரட்டி, அவன் எதிர்பார்க்காத நேரத்தில் நெஞ்சில் கைவைத்து, ஒரே தள்ளாகத் தள்ளி விட்டாள்.
அவனும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், சிரித்தவாறே நகர்ந்தவன்,
“சொன்னாலும் சொல்லலைன்னாலும் எத்தனை பேர் என்னோட டேட் கேட்டு வெய்ட் பண்றாங்க தெரியுமா? ஷ்யாம்னா கெத்துடி…” என்று மீசையைத் தடவ,
“ஷப்பா… இந்தக் கொசுத் தொல்லை தாங்கலடா ஆண்டவா…” என்று கைகளை உயர்த்தி மேலே பார்த்து வணங்க, அதற்கும் சிரித்தவன்,
“அதை இன்னொரு கொசு சொல்லுது…”
“டேய்… மண்டைல கல்லை தூக்கிப் போட்டு கொன்னுடுவேன்… ரொம்பப் பண்ற நீ…”
“ஏய்… உனக்குக் கொஞ்சமாவது பயம் இருக்கா? என்னோட கஸ்டடில இருந்துகிட்டு இந்தளவு வாயாடிட்டு இருக்க?
“ஹலோ… நான் எதுக்குப் பயப்படனும்? எனக்குக் கராத்தே தெரியும்… என்னைப் பாதுகாத்துக்க எனக்குத் தைரியம் இருக்கு… இப்பவும் நான் சொல்றது ஒண்ணுதான்… உன்னால என்னை ஒண்ணும் பண்ண முடியாது ஷ்யாம்… இந்த மிரட்டலை எல்லாம் வேற எங்கயாவது போய் வெச்சுக்க…”
அவள் அவனுக்காக அதைக் கூறினாளா அல்லது தனக்குத் தானே தைரியம் கூறிக்கொண்டாளா என்பது தான் அவளுக்கே புரியவில்லை. ஆனால் அவளது அந்த எண்ணவோட்டத்தை அவன் புரிந்து வைத்து இருந்திருந்தான்.
ஆனாலும் அந்தப் போராட்டமான நேரத்தில் கூடச் சற்றும் பதட்டமில்லாமல், தனக்குத் தானே தைரியத்தைக் கூறிக் கொண்டு, தன்னையும் எதிர்த்து நிற்கும் அவளது அந்தச் சுபாவம் அவனுக்குள் சுவாரசியத்தை விதைத்தது.
அவளை இன்னமும் சீண்டிப் பார்க்க சொன்னதும் அந்தச் சுவாரசியம் தான்.
அவள் அதிகபட்சமாகப் பேசி அவனை எரிச்சல் படுத்திய போது கோபப்பட்டதைப் போல இன்னமும் அவனது கோபத்தை இழுத்துப் பிடித்து வைக்கவும் முடியவில்லை. அது அவனது சுபாவமும் இல்லை.
லேவாதேவியில் அவன் ஒரு கொடூரன். ராட்சசன்!
ஆனால் தனிப்பட்ட முறையில் ‘ஷ்யாம்’ என்பவன், வாழ்க்கையை அனுபவிக்கப் பிறந்தவன். அவனது ஒவ்வொரு நொடிகளும் விலை மதிப்பில்லாதவை, அவனைப் பொறுத்த மட்டில்.
புதிய புதிய அட்வஞ்சர்களை வெகு விருப்பத்தோடு செய்வான். பெண்கள் எப்படியோ, அப்படியே ஸ்கை டைவிங், ஸ்கூபா டைவிங் என்று ஆரம்பித்து அத்தனையும் அவனுக்கு மிகவும் பிரியமானவை. அதே தீவிரத்தோடு தனிமையையும் ஏகாந்தத்தையும் ரசிக்கும் முரண் அவன்!
ஒரே ஒரு கேமராவை மட்டும் தூக்கிக் கொண்டு காட்டில் தனியாக நாட்கணக்கில் சுற்றுவதும் நடக்கும். தன்னந்தனியாகப் பல மணி நேரம் இயற்கையை ரசித்தபடி மலை உச்சியில் படுத்திருப்பதும் நடக்கும்.
கப்பலில் நாள் கணக்காக நடுக்கடலில் தனித்து இருக்கவும் பிடிக்கும்… இவையெல்லாம் அவனைப் பொறுத்தமட்டில் தேவ நிமிடங்கள்… இயல்பான அவனது வாழ்க்கை முறையை விலக்கி வாழக் கிடைக்கும் சந்தர்ப்பங்கள். அவற்றை விரும்பி ஏற்பவன் அவன்!
இவையெல்லாம் வெளியுலகம் அறியாதவை… தனிப்பட்டவை!
இதில் எந்த ஷ்யாம் உண்மை? அது அவன் மட்டுமே அறிந்த ஒன்று!
இப்படிப்பட்டவனுக்கு ‘மஹா’ ஒரு சுவாரசியமான அட்வஞ்சர்!
அவளோடு வாயாடுவது, வம்பிழுப்பது, அவளை எரிச்சல்படுத்திப் பார்ப்பது, அவளது கண்ணீரை பார்க்க வேண்டும் என்று அவளைக் கோபப்படுத்துவது எல்லாமே அவனைப் பொறுத்தமட்டில் சுவாரசியமான விளையாட்டுகள்.
மஹா எப்படி என்றால், சற்றும் யோசிக்காமல் பேசிவிட்டுப் பின் யோசிப்பவள். தான் பேசியது தவறு எனும் பட்சத்தில் மன்னிப்பு கேட்கவும் தயங்கியதே இல்லை. ஆனால் ஷ்யாம் அப்படி அல்ல… மன்னிப்பு கேட்பதும் சரி, மன்னிப்பதும் அவனது அகராதியில் கிடையவே கிடையாது. எதிலும் இறங்கிப் போவதும் அவனால் ஆகவே ஆகாத ஒன்று. ஆனால் இதே பிடிவாதம் மஹாவுக்கும் உண்டு. ஆனால் அது வேறு விதம்.
எப்போதுமே பெண்களின் பிடிவாதம் நீரைப் போல, உடைக்கவே முடியாது ஆனால் போகும் வழியை மாற்றி விட முடியும். ஆனால் ஆண்களின் பிடிவாதம் கல்லைப் போல. போகும் வழியை மாற்ற முடியாது ஆனால் உடைத்து விட முடியும்.
தான் ஒரு பாறை என்று நினைத்திருந்தாலும் அதில் விழும் ஒரு சிறு விதை போதும்… அந்த விதைக்கு உதவியாக நீரும், வெளிச்சமும் இருக்கும் பட்சத்தில் பாறையை உடைத்து விட்டு இடுக்கில் மரமாகத் தழைத்து விடக் கூடும்.
மஹாவின் இயல்பே, வருவதை அப்படியே ஏற்றுக் கொள்வது. வாழ்க்கையுடன் போராடி, தான் நினைத்ததை அடைந்தே தீர வேண்டும் என்றெல்லாம் எண்ணியது கிடையாது. அவளது தோழி மருத்துவம் படிக்க ஆசைப்பட்டதால் தோழியைப் பிரிய முடியாமல், தானும் அதே துறையைத் தேர்ந்தெடுத்தவள் மஹா.
ஆனால் எடுத்துக்கொண்ட அந்தத் துறையை மனம் ஒன்றி படித்து அத்தனை பாடத்திலும் சிறப்பாகத் தேறுமளவு அவளிடம் உண்மையான உழைப்பு இருந்திருக்கிறது.
ஆனால் ஷ்யாம் என்பவனுக்குத் தான் நினைத்ததை மட்டுமே அடைந்து பழக்கம். பிடிக்காத ஒன்றை, விரும்பாத ஒன்றை, தேவையில்லாத ஒன்றை அவன் நினைத்துக் கூடப் பார்க்க மாட்டான். ஆனால் ஒன்று தேவையெனப் பட்டுவிட்டால், அதை எப்பாடு பட்டாவது அடைந்து விடுவான். அதில் இதுவரை தோல்வியென்பதே கண்டதில்லை.
மஹா வளைந்து கொடுத்து போவது போலத் தோன்றினாலும், எடுத்த முடிவையும், கொண்ட கொள்கைகளையும் என்றுமே மாற்றிக் கொண்டதில்லை.
இத்தகைய இரு துருவங்களுக்கிடையே உறவு எப்படிப்பட்டதாக இருக்கும்?
‘உன்னிடம் விருப்பம் தோன்றவே இல்லை…’ என்று கூறும் ஷ்யாமும், அவனை வெறுப்பின் உச்சியில் வைத்துப் பார்க்கும் மஹாவும் ஒரு கோட்டில் இணைய முடியுமா?
இணைந்தால் அது யுத்த சரித்திரம் ஆகிவிடக்கூடிய ஆகச் சிறந்த வாய்ப்புகள் பல உள்ளதால், இவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த விதி, அதையும் செய்து பார்க்க விழைந்தது.
இது விதிக்கு சுவாரசியமான அட்வென்ச்சர் போல… மனிதர்களைக் கைப் பொம்மைகளாக்கி, இந்த விதி தான் எப்படி எப்படியோ பொம்மலாட்டத்தை நடத்தி விடுகின்றது… தன் கால் கொண்டு ஆடும் விளையாட்டல்ல நம் வாழ்க்கை, அந்த விதி நூல் கொண்டு ஆட்டி வைக்கும் விளையாட்டே இந்த வாழ்க்கை என்பதை ஒவ்வொருவருக்கும் புரிய வைக்கத்தான் இந்தக் காலமும் போராடுகின்றது.
ஆனால் அந்த மௌனமொழியை மொழிபெயர்க்கத்தான் நமக்கு சக்தி இல்லையே!
தனக்குத் தானே தைரியம் கூறிக் கொண்டவளை வேடிக்கையாகப் பார்த்தான் ஷ்யாம்.
“இருக்கட்டும் மிர்ச்சி… நீ குங்க் பூ பாண்டா தான்… நான் ஒத்துக்கறேன்… இப்போதைக்குக் கொஞ்சம் வழி விட்டா நான் கிளம்புவேன்…” என்று அவன் சிரியாமல் கூற, அப்போதுதான் அந்தக் குறுகலான சிறு சந்தை தான் மறைத்து நின்று கொண்டிருப்பதையே அவள் உணர்ந்தாள்.
அதோடு அவள் கண்ணில் பட்டது, அருகில் இந்நேரம் வரை நெருக்கமாக நின்று கொண்டிருந்தவனின் குறும்பும், கல்மிஷமும்!
தவறான பார்வையோ, சின்னத்தனமான செய்கையோ அதில் இல்லை என்பது அவளுக்குப் புரிந்திருந்தது. அவளை வேண்டுமென்றே வம்பிழுக்கவெனவும், சினமேற்படுத்தவுமே அவன் இப்படிச் செய்கிறான் என்பதைப் புரிந்தவள்,
“போறதுனா போக வேண்டியதுதானே? நானா உன் கையப் பிடிச்சு இழுத்தேன்?” என்று கோபமாக ஆரம்பித்துக் கிண்டலாக முடிக்க,
“அப்ப நான் உன் கையப் பிடிச்சு இழுத்தேன்னு சொல்றியா?” அதக்கப்பட்ட சின்னச் சிரிப்போடு அவன் கேட்க,
அவனைக் கையெடுத்து வணங்கியவள்,
“ஷப்பா… நீ கிளம்பு… காத்து வரட்டும்…” என்றவள், ஒதுங்கிக் கொள்ள,
“அந்தப் பயம் இருக்கட்டும்டி…” என்று வேண்டுமென்றே புன்னகைத்தபடி ‘டி’ போட்டவனை நெருப்பாக முறைத்தாள் அவள்.
“அடிபணியாதவங்களை விதவிதமா பயமுறுத்தி அடிபணிய வைக்கறது தான் உனக்குக் கைவந்த கலையாச்சே…” என்று அதே கோபத்தோடு அவள் வார்த்தைகளைவிட, அதுவரை அங்கிருந்த இதமும், அவனது மென்மையும் காணாமல் போனது.
“அப்படி என்ன செஞ்சேன் மஹாவேங்கட லக்ஷ்மி?” முழுப் பெயரிட்டு அழைத்து, முழுவதுமாக நிமிர்ந்து நின்று அவன் கேட்க, அவனது கோபத்தைக் கண்டெல்லாம் அவள் மருளவில்லை.
அவளும் நிமிர்ந்து நின்று அவனை நேருக்கு நேராகப் பார்த்தாள்.
“இப்பவும் உன்னோட மனசாட்சியைத் தொட்டு சொல்லு… உங்க தொழில் விஷயத்துல, ஒண்ணும் தெரியாத எங்களைப் பணயமாக்கறது தப்புன்னு உனக்குத் தெரியலையா?”
அவளது கண்களைப் பார்த்தவன், கண்ணெடுக்காமல்,
“இது என்னோட தொழில் மகாவேங்கடலக்ஷ்மி… இங்க இந்த மனசாட்சி, மனசில்லாத சாட்சிக்கெல்லாம் இடமில்லை… நீ சொல்ற மாதிரி இமொஷனலா யோசிச்சா நான் துண்டு போட்டுட்டு போகணும்… நான் அறிவை மட்டுமே நம்புவேன்… மனசை கிடையாது… என்னோட தேவை என் பணம்… அவ்வளவுதான்…” என்றவன் சற்று இடைவெளி விட்டான்.
“அதுக்காக உன்னை நான் எந்த வகையிலும் டார்ச்சர் பண்ணவே இல்லையே… யூ ஆர் கம்பார்ட்டபிள்… பை ஆல் மீன்ஸ்… என்கிட்டே இந்தளவு பேசற கம்போர்ட் ஜோன்ல தான் நீ இருக்க… அதை மறந்துடாதே…”
அவள் பேச இடம் கொடாமல் அவன் கொட்டி தீர்த்து விட, அவளும் அவனை மறித்துப் பேச வில்லை.
ஆனால் அவன் பேசியதில் உள்ள முரண்களை அவனே உணரவில்லை…
அந்த முரண்களை அவனும் ஒப்புக்கொள்ளவில்லை… அவளும் ஒப்புக்கொள்ளவில்லை…
தொழிலுக்காக மட்டும்தான் அவளை கஸ்டடி எடுத்ததாகக் கூறினாலும், அதில் இருந்த உள்நோக்கமெல்லாம் அவனது மனம் அறியும்… அவள் தான் குறி என்று அவளும் அறிந்தது தான்!
“கம்போர்ட் ஜோன்… ஹா… ஜோக்…” என்று சிரிக்க,
அவளை உறுத்து விழித்தான் அவன்.
“கார்த்திக்கை பணம் அரேஞ்ச் பண்ண விடாம பண்றது உனக்குக் கம்போர்ட் ஜோனா?” சூடு குறையாமல் கேட்டவளை ஆழ்ந்து பார்த்தவன்,
“நான் யாருக்கும் எந்த விளக்கமும் சொல்லத் தேவையில்லை… என்கிட்டே விளக்கம் கேட்க, இதுவரைக்கும் யாரும் ட்ரை பண்ணதும் இல்ல… நீயும் அதே லிமிட்ல நில்லு மஹா வேங்கடலக்ஷ்மி… தேவைல்லாம உள்ள வரணும்னு நினைச்சா உனக்குத்தான் சேதாரம்…” என்று நிதானமாகக் கூறி விட்டு, அவளைத் திரும்பிப் பார்க்காமல் சென்று அவனது அறைக்குள் மறைந்தான்.
கல்லாகச் சமைந்தாள் மஹா…
எந்த வகையில் இவனை உணர வைப்பது?
தலை சுற்றியது அவளுக்கு!
இவன் போகும் பாதை எவ்வளவு தவறானது என்பதைப் புரிந்து கொள்ளவே மாட்டானா?
கீழிருக்கும் கை எப்போது வேண்டுமானாலும் மேலே போகலாம்… மேலிருக்கும் கை எப்போது வேண்டுமானாலும் கீழேவும் வரலாம்…
பணம் என்ற ஒன்றை வைத்து எளியாரை வலியார் வதைப்பதென்பது பஞ்சமகா பாதகம்… அந்தப் பாதகத்தை இவன் செய்யலாமா? செய்ய விடலாமா?
அவன் ஏன் அந்தப் பாதகத்தைச் செய்யக் கூடாது என்று அவள் நினைக்க வேண்டும்? அவனது பாவ புண்ணியக் கணக்கைப் பற்றிக் கவலைப் பட இவள் யார்?
அந்த யோசனையெல்லாம் மஹாவுக்குத் தோன்றவில்லை.
வெளிச்சமும் காற்றும் இல்லாத அந்தச் சிறிய சந்து போன்ற இடத்திலேயே வெகுநேரம் நின்றிருந்தாள், தன் நினைவு இல்லாமலேயே!
அறைக்குச் சென்று கிளம்பி ஒரு பெரிய பேக் பேக்கோடு கிளம்பி வந்தான். பர்முடாஸ், டி ஷர்ட்டில் தான் இருந்தான்… ஆனால் பேக் பேக் சற்றுப் பெரியதாக இருந்தது. காலில் கனத்த ஸ்போர்ட்ஸ் ஷூ, அதுவும் வித்தியாசமாக… கிளம்பி வந்தவனை உணர்வு இல்லாமல் பார்த்தாள்.
“ஒரு டூ த்ரீ டேஸ் ஆகும்… நாகம்மா வந்து உனக்குச் சமையல் பண்ணி வெச்சுட்டு போய்டுவா… பத்திரமா இருந்துக்கோ… எங்கயும் வெளிய போயிடலாம்ன்னு நினைக்காதே… உனக்குத் தான் அது டேஞ்சர்… சுத்தி வைல்ட் அனிமல்ஸ் அதிகம்…” என்று கூறியவன், அத்தோடு முடிந்தது என்று கிளம்ப எத்தனிக்க, அப்போதுதான் ஜெர்க்கானாள் மஹா.
முன்னர் விட்டுச் சென்றது போல, மீண்டுமா?
தலை சுற்றியது அவளுக்கு!
வீட்டுக்குள் தனியாக அடைந்து கிடக்க வேண்டுமா?
பைத்தியமே பிடித்து விடுமே!
அதிலும் இரண்டு மூன்று நாட்கள் என்றால்?
கார்த்திக் பணத்தைப் புரட்டிவிட்டால்?
இவன் எதைப் பற்றியும் கவலைப் படாமல் கிளம்புகிறானே?
“கார்த்திப் பணத்தை ரெடி பண்ணிட்டா என்ன பண்ண? இப்ப சென்னை தான் போறியா?” தெளிவு படுத்திக் கொண்டேயாக வேண்டும் இப்போது அவளுக்கு!
“அதெல்லாம் ரெடி பண்ண மாட்டான்…” உறுதியாகக் கூறியவனின் பார்வை எங்கோ நோக்கியிருந்தது.
“பண்ணிட்டா?”
“அதான் பண்ண முடியாதுன்னு சொல்றேன்ல…” கத்தியைப் பாய்ச்சுவது போல அவன் பாய்ச்ச… அவளுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. இதற்கும் மேல் இதைப் பற்றி இவனிடம் பேசுவது வீண்!
தன்னைத் தானே தேற்றிக் கொண்டு, “சரி எங்க போற?” என்று கேட்க,
“நான் எங்க போறேன்னு என் அம்மா கிட்டயே சொன்னதில்லை… கேட்டா பதில் வராதுன்னு அவங்க உட்பட எல்லாருக்குமே தெரியும்…” என்றவன், தனது ஷூ லேசை குனிந்து கட்டினான்.
பார்வையில் அவனையும் மீறிய அலட்சியம் தெறித்தது.
“தனியா என்னால மூணு நாள் இங்க இருக்க முடியாது ஷ்யாம்… எனக்குப் பைத்தியம் பிடிச்சுடும்…” வேறு வழி இல்லாமல், தொண்டைக் கமற கூறியவளை, நிமிர்ந்து மீண்டுமாய் ஆழ்ந்து பார்த்தான்.
“அழுகை வருதா மஹா?” உணர்வற்று அவன் கேட்ட கேள்வியில் நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், எதுவும் கூறாமல் உள்ளே செல்ல, பேக் பேக்கை கீழே வைத்துவிட்டு, அந்தச் சிட் அவுட்டில் அமர்ந்தான் ஷ்யாம்.
சற்று நேரம் யோசித்தவன், ஒருவாறாக முடிவெடுத்துக் கொண்டு வீட்டினுள் சென்றான்.
அங்கே ஹாலில் கிடந்த சோபாவில், தலைக்குக் கையை முட்டுக் கொடுத்து அமர்ந்திருந்தாள் மஹா. அவளுக்கு அந்தச் சூழ்நிலையை எப்படிக் கையாள்வது என்று தெரியவில்லை. தன் மேல் திணிக்கப்பட்ட அநியாயங்களை அவளால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. மனம் குழம்பியிருந்தது… எதிர்காலத்தை எண்ணி பயம் வந்தது. ஆனால் அதை அவன் முன் வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள முடியாத சூழல், அவளது மனதை அளவுக்கு மீறி அழுத்தியது.
நாகம்மாள் டிபனை செய்து வைத்துவிட்டு பெருக்குவதற்காகப் பெருக்குமாற்றோடு ஓரப்பார்வையாக இருவரையும் பார்த்தபடி மாடியை நோக்கிப் போனாள்.
வெளியில் மெலிதாகச் சூரியன் தலைகாட்டிக் கொண்டிருந்தாலும் குளிர் இன்னமும் விட்டபாடில்லை. உடலைத் துளைத்துக் கொண்டுதானிருந்தது. அதோடு சில்லென்ற காற்று வேறு… அவ்வப்போது ஊசி துளைப்பது போல!
அவள் முன் சென்று அமர்ந்தவன், அவளை மேலிருந்து கீழாக வருடினான் பார்வையால்!
அவளது சூழ்நிலையும் பயங்களும் புரிந்திருந்தது… ஆனால் அவனது ஈகோவை அவனால் விட்டுக் கொடுத்துவிட முடியவில்லை… ஆண் என்ற ஈகோவை தாண்டி, ‘தான் ஷ்யாம்’ என்ற ஈகோ அவனை ஆட்டுவித்தது!
“ம்கூம்…” செறுமியவனை அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை. அவன் தன் முன் தான் அமர்ந்திருக்கிறான் என்பதையும், தன்னைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதையும் அவள் அறிவாள். ஆனால் நிமிர்ந்து அவனைப் பார்த்தேயாக வேண்டுமா? உள்ளுக்குள் கொதிப்போடு அலட்சியமும் சேர்ந்து கொண்டது.
அவள் நிமிர்ந்து பார்க்கமாட்டாள் என்பதை உணர்ந்தவன், “எனக்குத் தனிமைன்னா பிடிக்கும் மஹா…” யாரிடமும் வெளிப்படுத்திக் கொள்ளாதவன், தன்னுடைய முகமூடியற்ற உருவை அவளிடம் வெளிப்படுத்தத் துவங்கினான்.
ஆச்சரியமாகக் கண்களைத் திறந்தவள், இன்னமும் குனிந்து கொண்டே கேட்க,
“இந்தக் காட்டுல பல நாள் தனியா சுத்தியலைஞ்சு இருக்கேன்… பேர்ட் வாட்சிங், வைல்ட் லைப் போட்டோ கிராஃபி, ட்ரெக்கிங் இப்படிப் பல பேர் சொல்லலாம்… ஆனா அதெல்லாத்துக்கும் அடிப்படை அந்தத் தனிமை. எனக்கு அந்தத் தனிமை வேணும்…” என்றவனை வியப்பாக நிமிர்ந்து பார்த்தாள்.
இவனுக்குள் இப்படியொரு எண்ணமிருப்பதே அவளைப் பொறுத்தமட்டில் ஆச்சரியம் தானே!
“இப்படியொரு வீடு எனக்கு இங்க இருக்கறது விஜிக்கு கூடத் தெரியாது…” என்றவனின் முகத்தில் மெல்லிய புன்னகை.
“சோ இப்ப நீ ஃபாரஸ்ட்குள்ள போகப் போறியா?” கண்களை விரித்து ஆச்சரியமாகக் கேட்டாள் மஹா. அதுவரை அவள் அவன்மேல் கொலைவெறியிலிருந்தாள் என்பதெல்லாம் மறந்து போய்விட்டது. பஞ்சு மிட்டாயை ஆர்வமாகப் பார்க்கும் குழந்தையின் மனநிலைக்கு இப்போது வந்துவிட்டாள்.
மெடிக்கல் ஸ்டுடன்ட் என்பதைத் தாண்டி அவளது பிரியம் பயாலாஜி.
விதம் விதமான செடிகொடிகளையும் மரங்களையும், விலங்குகளையும் பார்ப்பதென்பது அவளுக்கு வெகுவிருப்பமான ஒன்று!
“எஸ்… ஒரு த்ரீ டேஸ் தான்… வந்துடுவேன்… அதுவரைக்கும் நான் இல்லாம நிம்மதியா ஜாலியா இருப்பன்னு நினைச்சா இப்படி வயலின் வாசிக்கற?” சின்னச் சிரிப்போடு கேட்டவனை முறைத்தவள்,
“நான் எதுக்கு வயலின் வாசிக்கணும்?” என்று அவனிடம் கடுப்படிக்க நினைத்தவள், அதை விடுத்து யோசனைக்குள் ஆழ்ந்தாள்.
‘இவன் மூன்று நாட்கள் விட்டுவிட்டு போய்விட்டால் கார்த்தியோடு தான் எப்படித் தொடர்பு கொள்வது? தொடர்பு கொள்ள இருக்கும் ஒரே வழி இவன் தானே? அதுவும் இல்லாமல் பணத்தை அண்ணன் தயார் செய்துவிட்டால் இவனை எப்படித் தொடர்பு கொள்வது?’ அவளுக்குக் கண்ணைக் கட்டியது.
இந்த நேரத்தில் தான் இவனோடு பகை பாராட்டிக் கொண்டு இங்குத் தனித்திருக்க வேண்டுமா என்று யோசித்தது மனம். தனித்து இருப்பது என்பது, நாகம்மாள் வந்து சமைத்து வைத்து விட்டுப் போனாலும், பைத்தியம் பிடித்து விடும் என்பதோடு, உடன் பிறந்தவன் என்ன செய்கிறான் என்று தெரியவில்லை என்றால் அவளால் இருக்கவே முடியாது.
இவனோடு இருந்தால் மட்டுமே இந்த இக்கட்டு இவளுக்கு இல்லை. இல்லையென்றால் மூன்று நாளைக்குள் ப்ரெஷர் எகிறுவது உறுதி என்று எண்ணிக் கொண்டு,
“ஷ்யாம்ம்ம்ம்ம்…” என்று இழுத்தாள். அவளது அந்த இழுவை, அவன் முகத்தில் புன்னகையைப் பூக்க செய்தது. அவனும் அவளது முக மாற்றங்களைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தான். வித விதமாக மாறிய அவளது உணர்வுகள், கடைசியாக எதையோ முடிவெடுத்தார் போல மாறியதையும் கண்டு கொண்டிருந்தான்.
“என்ன்ன்ன்ன மிர்ச்சி?” அவளைப் போலவே இழுத்து அவன் கேட்க, தற்காலிகமாகப் போர் நிறுத்தம் செய்ய முடிவு செய்திருந்தவள்,
“நானும் வர்றேனே… ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்…” என்று கேட்டவளை, நம்ப முடியாமல் அதிர்ந்து பார்த்தான். இவளோடு தனியாகக் காட்டிலா?
அய்யயோ… இந்தப் பிள்ளைபூச்சியைக் கட்டிக் கொண்டு அங்கேயுமா? நோஓஓ என்று குரல் கொடுத்தது அவன் மனம்.
“வாட்ட்ட்ட்ட்…”
“வாத்துமில்ல… கோழியுமில்ல… நானும் வர்றேன்… அவ்வளவுதான் மேட்டர்…” என்று அவள் எழுந்து கொள்ள,
“ஹலோ… அதுக்கு நான் ஒத்துக்கணும்…”
“அதெல்லாம் முடியாது… நானும் வருவேன்…” பிடிவாதமாக அவள் கூற,
“லூசே… உன்னையெல்லாம் கூட்டிட்டு போக முடியாது… ஆல்ரெடி நீ ஒரு ஹாஃ பாயில்ட்… இந்த அழகுல உன்னைக் கூடவே வெச்சுட்டு நான் சுத்த முடியுமா? நோ… ஒழுங்கா நீ இங்க இரு… வேணும்னா நாகம்மாவ இங்கயே படுத்துக்கச் சொல்றேன்…” என்று அவன் முடித்துவிட்டு கிளம்ப எத்தனிக்க, அவனுக்கு முன்பாகப் போய் நின்று கொண்டாள்.
“ப்ளீஸ் ஷ்யாம்… எனக்கு இங்க தனியா இருந்தா போர் அடிக்குது… நீ இருந்தா அட்லீஸ்ட் சண்டையாச்சும் போடுவ… ப்ளீஸ் ஷ்யாம்…ப்ளீஸ் என்னையும் கூட்டிட்டு போ…” என்று அவள் கெஞ்ச துவங்க,
“ம்ம்ம் அப்படி வா வழிக்கு… அங்கயும் வந்து என் கூடச் சண்டை போட்டு, என்னோட மூடை ஸ்பாயில் பண்ற ஐடியாவோட தான் வர்றேன்னு சொல்ற… ஆளை விடும்மா சாமி…” என்று அவளை இடை வரை குனிந்து வணங்க, அவள் அருள் பாலித்தாள்.
“அடிங்க…” என்றவன், “ஓடிடு…” என்று கூறிவிட்டு வெளியே போக முயல… அவன் பின்னே ஓடினாள் மஹா.
“டேய் ஷ்யாம்… நான் சண்டையே போடமாட்டேன்… மதர் ப்ராமிஸ்…” என்னவோ பல காலம் பழகியவனை அழைப்பது போல ‘டேய்’ போட்டு அழைத்து வைக்க,
“என்ன ‘டேய்’ யா?” என்று அவன் வேண்டுமென்று அதிர்வது போலப் பார்க்க,
“இல்ல… ‘ங்க’… ஷ்யாம்ங்க… ஷ்யாம்ங்க… நானும் வர்றேங்க… ப்ளீஸ்ங்க…” என்று வார்த்தைக்கு வார்த்தை ‘ங்க’ போட, அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை… ஆனாலும் காட்டிக்கொள்ளாமல்,
“ஏய்… லூசு… நான் போறதே தனியா இருக்க வேண்டித் தான்… இதுல நீயா? என்னால முடியாது… அதோட நீ ஒரு சிடுமூஞ்சி… நொச்சு… ப்ளேடு… ரம்பம்… உன்னைக் கூட்டிட்டு போய் நான் என்ன பண்ண?”
அவளைப் பற்றிய அவனது கணிப்பை எல்லாம் தடை இல்லாமல் கூற, அவளது வெடிக்கக் காத்திருக்கும் வால்கனோவானாள்!
“வாட்… நான் நொச்சு… ப்ளேடு… ரம்பம? வேண்டாம்…” அவளது கெஞ்சல் மோடை சற்று நேரம் கேன்சல் செய்தவள், மீண்டும் கடுப்பு மோடுக்கு தாவ,
“இல்லையா பின்ன? நான் என்ன உன்னை டேட் பண்ணவா இங்க கூட்டிட்டு வந்துருக்கேன்? கஸ்டடி மா கஸ்டடி…” என்று அவளுக்கு ஞாபகப் படுத்த முயல, அவளோ அதைக் கண்டுகொள்ளாமல்,
“அதனால? வீட்டுல அடைச்சு வெச்சு, கை காலைக் கட்டிப் போட்டு, சோறு தண்ணி கொடுக்காம இருக்கப் போறியா?”
“அதான் இந்தளவு ஓவரா வாய் பேசறல்ல… ஒழுங்கா நாகம்மாவோட இரு…” என்று அவன் முடித்தவனைக் கெஞ்சலாகப் பார்த்தாள்.
அந்த மான் விழிகள் அவனைக் கருந்துளையாக உள்ளே இழுப்பது போலத் தோன்றியது அவனுக்கு. தலையை உதறிக்கொண்டவன், தனது கவனத்தைத் திசை திருப்பினான்.
“ப்ளீஸ் ஷ்யாம்… மூணு நாள் அண்ணா கூடப் பேசவே முடியாது… உன் கூட இருந்தாலாவது கார்த்திகிட்ட அப்பப்ப பேசிப்பேன்… ப்ளீஸ்… கன்சிடர் பண்ணேன்…” இறுதியாக ஒரு முறை என்று சற்று சீரியசாகவே கூறியவளை, ஆழமாகப் பார்த்தான்.
“போற இடத்துல முக்கால்வாசி இடத்துல மொபைல் சிக்னல் கிடைக்காது மிர்ச்சி… அதோட ரொம்ப டேஞ்சர்ரான பிளேஸ்… ட்ரெக்கிங், அதுவும் இந்த மழை நேரம்… என்ன வேண்ணா எப்படி வேண்ணாலும் நடக்கும்… நான் தனியானா எப்படின்னாலும் சமாளிச்சுக்குவேன்… ஒரு பொண்ணா உன்னால சமாளிக்க முடியாது… சொல்றதை புரிஞ்சுக்கோ…”
அவளைக் கஷ்டப்படுத்த வேண்டும் என்று கூறியவன், அவளுக்கு எப்படியெல்லாம் பிரச்சனை வரக்கூடும் என்று கூறி அவளது பாதுகாப்பிற்காக மறுத்துக் கொண்டிருந்த முரண் அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது.
“நான் என்சிசி ஸ்டுடன்ட்… எனக்கு இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்ல… இதைவிடக் கஷ்டமான சிச்சுவேஷனையெல்லாம் சும்மா இப்படி முடிச்சுட்டு போயிருக்கேனாக்கும்…” என்று சொடக்கு போட்டுப் பெரிய பிஸ்தாவை போலச் சொன்னவளை, சிரிப்பு மாறாமல் பார்த்தான்.
சிறு குழந்தையைப் போலான அவளது அந்த ஆர்ப்பாட்டம் அவனுக்குப் புதிது! அவனைச் சுவாரசியமாகப் பார்க்க வைத்தாள் காரமான குல்பி!
மிர்ச்சி குல்பி!
“அட லூசே… உனக்குக் கொஞ்சம் கூடப் பயமே இல்லையா? நான் எப்படின்னும் தெரிஞ்சே என் கூடத் தனியா வர்றேங்கற?”
வேறு வழி இல்லாமல் இப்படியும் கேட்டுவிட்டான் அவன்!
“உன்னைப் பத்தி எனக்கு நல்லா தெரியும் ஷ்யாம்… அதனால தான் நான் தைரியமா வர்றேங்கறேன்… என்கிட்டே மிஸ்பிஹேவ் பண்ணணும்னா முதல் நாளே நீ பண்ணிருப்ப… உன்னோட இன்டென்ஷன் அதுவா இருக்கல… நான் இப்படிதான்னு சொல்ற தைரியம் உன்கிட்ட இருக்கு… என்னை மாதிரி நல்லவன் கிடையாதுன்னு நீ எந்தச் சீனையும் போடலையே… நல்லவன்னு சொல்றவனுங்க சான்ஸ் கிடைச்சா யூஸ் பண்ணிக்குவானுங்க… ஆனா வேண்டாம்ன்னா கம்ப்ளீட்டா தள்ளி நிற்கற செல்ப் கண்ட்ரோல் உனக்கு இருக்கு…” என்று இடைவெளி விட்டவள், “என்னைப் பத்தியும் உனக்குத் தெரியும்…” என்று முடித்தாள்.
அவனைப் பற்றிய கம்ப்ளீட் அசெஸ்மென்ட்டை கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் மஹா கூற, அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. தான் இப்படித்தான் என்பது அவன் அறிந்தது தான். அதை ஒரு பெண், அவனை முழுமையாகப் படித்து, அதையும் ஒப்புவிக்கிறாள் என்பது அவனது மிகப் பெரிய ஆச்சரியம்.
முதன் முறையாக ஒரு பெண்ணிடம் இம்ப்ரெஸ்ஸாகி நின்றான் ஷ்யாம்!
ஈர்ப்பும் இல்லாமல், நட்பின் சாயல் கூட இல்லாமல், எந்த வகையான உறவும் இல்லாமல், அதுவும் ராட்சசன் என்று வெளியில் இருக்கும் பிம்பத்திற்கு மாறான அவளது வாக்குமூலம் அவனை வெகுவாக வியப்பிலாழ்த்தியது!
“ம்ம்ம்ம்…” என்று யோசிப்பது போலப் பாவனைச் செய்தவன், “சரி… கூட்டிட்டு போறேன்… ஆனா கண்டிஷன்ஸ் இருக்கு…” என்று அவன் கூற,
“யாஹூ…” என்று அவள் குதித்தாள்.
“உஷ்… சொல்றதை ஒழுங்கா கேளு…” கண்டிப்பான குரலில் அவன் கூற,
“ம்ம்ம்… சொல்லு…” புன்னகையோடு அவள் கேட்க அமர்ந்தாள்.
“என்கிட்ட பண விஷயமா சண்டைப் போடக் கூடாது…” முதல் கண்டிஷனாக கூறியவனைக் கேள்வியாகப் பார்த்தாள். “இந்த மாதிரியான ட்ராவல்ஸ்ல தொழிலைப் பத்தி நினைக்கக் கூட மாட்டேன்… அதுவும் இல்லாம எனக்கு இது வேற, அது வேற…”
“ம்ம்ம்… ஓகே…”
“எதுக்காகவும் எனக்கு அட்வைஸ் பண்ணக் கூடாது… எனக்குச் சுத்தமா பிடிக்காது…”
“ம்ம்ம்… எனக்கும் தான் அட்வைஸை கேட்கப் பிடிக்காது… ஓகே டன்…”
“என்னோட ட்ரிப் ஸ்பாயிலாகற மாதிரி எதுவும் பண்ணக் கூடாது… அப்படியே உன்னைக் கழட்டி விட்டுட்டு நான் போயிட்டே இருப்பேன்… என்ன சொல்ற?” இரக்கமில்லாத குரலில் கூறியவனைப் புன்னகையோடு பார்த்தாள்.
“ஓகே… அக்செப்ட் பண்ணிக்கறேன்…” என்றவளை மென்புன்னகையோடு ஆழ்ந்து பார்த்தவன்,
“இதுல எதுவும் ப்ளான் பண்ணிருக்கியா மிர்ச்சி?” என்று கேட்க,
“என்ன ப்ளான்?” புருவத்தை உயர்த்தி மஹா கேட்க,
“இந்த ட்ரிப்ல என்னை மயக்கி, உன் அண்ணனை ரிலீவ் பண்ணி விடனும்ன்னு…” அவனது இயல்பு படிதான் கேட்டான் என்றாலும், அவனது கேள்வி அவனுக்கே அபத்தமாகத்தான் பட்டது.
எதிலும் ஏமாந்து விடக் கூடாது என்ற அவனது குணம் தான் அது!
அதைக் கேட்டவளுக்குத்தான் அது பெரும் அருவருப்பாக இருந்தது. ஆனால் அதைக் காட்டிகொள்ளாமல்,
“உன்னை நான் மயக்கனும்ன்னு நினைக்கணும்னா நீ அட்லீஸ்ட் ஃப்ரெஷ் பீஸா இருக்கணும் ஷ்யாம்… அதுதான் என்னைப் பொறுத்தவரைக்கும் பேசிக் குவாலிபிகேஷன்…” என்றவளுக்குச் சிறு புன்னகை கூட மலர்ந்தது. அதைக் கேட்டவனுக்கும் கூட!
“என்கிட்டயே இந்த லொள்ளு பேசற ஒரே ஆள் நீ தான்… யாரும் என்கிட்டே இப்படிப் பேசினது இல்ல… பேசத் தைரியம் வந்ததும் இல்லை…” என்றவன், அவளது தலையில் தட்டி,
“அப்புறம் என்ன தான் ரீசன்? உன் அண்ணன் அங்க பணத்துக்கு அலைஞ்சுட்டு இருக்கான்… அந்த நினைப்பே இல்லாம இப்படி ஜாலியா ஊர் சுத்த கிளம்பிட்டியேன்னு சமூகம் உன்னைத் திட்டாதா?” குறும்பாகக் கேட்க,
“இடுக்கண் வருங்கால் நகுக…” என்ற அவளது குறளுக்கு அர்த்தம் புரியவில்லை அவனுக்கு. தமிழ் பேசுவான் என்றாலும் கல்வி அனைத்தும் தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் என்பதால் தமிழ் பேசும் அளவு மட்டுமே பரிச்சயம்.
“மீனிங்… மீனிங்?” என்று கேட்க,
“ஓ நீ ஜிலேபி பார்ட்டில்ல…” என்று கிண்டல் செய்தவள், “கஷ்டம் வரும்போது சிரிக்கனுமாம் ஜிலேபி…” என்று சிரித்துக் கொண்டே கூற,
“கிண்டல் பண்றியா? சுந்தரத் தெலுங்கு ம்மா…” என்று காலரை ஏற்றி விட்டுக் கொள்ள,
“இருக்கட்டும்… எப்படி இருந்தாலும் தமிழ்ல இருந்து பிரிஞ்சு போனவங்க தானே நீங்க?”
“ஷப்பா… இந்த ஓட்டை பாயிண்ட்டை வெச்சுட்டு நீங்க உங்களை டிபென்ட் பண்ணிட்டே இருங்க…” என்றவன், “அதை விடு… உன்னை என்னால இன்னுமே நம்ப முடியல மிர்ச்சி…” என்று சிரிக்க,
அவனை ஆழ்ந்து பார்த்தவள், ஒரு நிமிடம் புன்னகையை அடக்கிக் கொண்டு குறும்பாக,
“இந்த ஸ்டேஜ்ல நான் செய்யக் கூடியதுன்னு எதுவும் கிடையாது… நீ ஒரு பிசாசுங்க்றது தெரிஞ்ச விஷயம்… நீயாத்தான் கீழ இறங்கி வரணும்… ஆனா அண்ணா எப்படி இருந்தாலும் பணத்தை ரெடி பண்ணிடுவான்… எனக்கு அவன் கூடக் கம்யுனிகேஷன்ல இருக்கணும்… அவன் என்ன பண்றான்னு தெரியலைன்னா ரொம்பக் கஷ்டம்… ஆனா அதைத் தாண்டி இப்படியொரு ட்ரிப் இனிமே கிடைக்காதுல்ல… சோ ஐ வான்ட் டு எஞ்சாய்… அவ்வளவுதான்…” என்று தோளைக் குலுக்கிவிட்டு,
“ஜஸ்ட் எ ரேஷனல் தாட்… அன்ட் ஐ ம் ஜஸ்ட் அனதர் ரேஷனலிஸ்ட்…” என்றவள், புருவத்தை உயர்த்தி என்ன என்பதைப் போல அவனைப் பார்க்க, அவனது முகத்தில் மெல்லிய கோடாக இருந்த புன்னகை விரிந்து, சிரிப்பாக வெடித்துக் கிளம்பியது!
அவளுமே அந்தச் சிரிப்பில் இணைந்து கொண்டாள்.
அவர்களோடு விதியும் இணைந்து கொண்டது!