Veenaiyadi nee enakku 17(2)

Veenaiyadi nee enakku 17(2)

“இப்ப கொஞ்சம் முன்னாடி தான் நான் சாரியெல்லாம் சொன்னேன்… உனக்கு அந்தச் சாரி தேவையில்லை… அதை வாபஸ் வாங்கிக்கறேன்… இனிமே நீயும் நானும் எனிமீஸ் தான்…” வேகவேகமாக அவள் பேச,

“உன் சாரி எனக்கெதுக்கு டார்லிங்? நான் சாரி கட்றதே இல்ல… அன்ட் இன்பாக்ட் எனக்கு, நீ சாரி கட்டியிருந்தா கூடப் பிடிக்காது…” என்று வேண்டுமென்றே ஒன்றுமறியாதவனைப் போலக் கூறிவிட்டுச் சில்மிஷமாகப் புன்னகைக்க, முழுதாகப் பத்து நொடிகள் தேவைப்பட்டது மகாவுக்கே! அவன் கூறியதன் அர்த்தம் பிடிபட!

“டேய் பிசாசே… பேயே…” என்று ஆரம்பித்தவள், கையில் கிடைத்த கழியோடு அவனைத் துரத்தத் துவங்க, அவளிடம் சிக்காமல் ஓடினான் ஷ்யாம்.

“ஏய் பூசணிக்கா… உன்னால என்னைப் பிடிக்க முடியாது…” கத்திக் கொண்டே ஓடியவன் பின்னால்,

“என்கிட்ட சிக்குன, இன்னைக்குச் சிக்கன் 65 தான்டி…” என்று மஹா பதிலுக்குக் கத்தினாள்.

“யாரு யாரை 65 போடறாங்கன்னு பார்க்கலாம்…” என்றபடியே வேகமாக ஓடியவனை அவளால் பிடிக்க முடியாவிட்டாலும், அவளால் முடிந்தளவு முயன்றாள். அவனோ அந்த மேட்டின் மேல் ஏறி நின்று கொண்டு, தஸ்ஸு புஸ்ஸு என்று மூச்சு வாங்க தன்னை நோக்கி ஓடி வந்த மஹாவை சிரித்தபடி பார்த்துக்கொண்டிருந்தான்.

“என்னமோ நடக்க முடில… கால் வலின்னு சொன்ன? அந்த வலியெல்லாம் இப்ப எங்க போச்சு டார்லிங்?” அவனது இதழ்கடைஓரம் கேலியில் வளைந்தது.

மேலே வந்தவள், இடையோடு கீழே குனிந்து, கைகளையும் தொங்க விட்டபடி மூச்சு வாங்கினாள்.

அட ஆமாம்ல… என்று தனக்குத் தானே ஷொட்டி கொண்டாள் மஹா! ஆனாலும் இவன் பேசிய லொள்ளுக்கு, இவனை அப்படியே சும்மா விடுவதா?

நெவர்…

“என் கால், என்னோட வலி… உனக்கென்னடா எருமை?”

“ஆமா காட்டெருமை… எனக்கென்ன? ஆனா உன்னை ஓட வெச்சுட்டேன்… பார்த்தில்ல…” என்று காலரை ஏற்றி விட்டுக் கொண்டு கெத்து காண்பித்தவனை எரிச்சலாகப் பார்த்தாள்.

“உன்னையெல்லாம்…” என்றவள், இன்னொரு முறை அவனைத் துரத்தத் தயாராக,

“ம்ம்ம்… எஸ்… ஸ்டார்ட் மியுசிக்…” என்று அவளைப் பார்த்தபடி தயாரானவனைக் கண்டவள், சற்று தாமதித்தாள்.

இது சரியில்லையே… என்று அவள் பார்த்த பார்வையில்,

“பாம்பே மனிஷால்லாம் உன்கிட்ட பிச்சை வாங்கணும் பாப்பா… எனக்கே ஒரு நிமிஷம் ஹார்ட் பக்குன்னு ஸ்டாப்பாகிடுச்சு…” என்று அவன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சொன்னதன் அர்த்தம் விளங்க,

“எருமை மாடு… ஐ ல் கில் யூ…” இருந்த இடத்தில் நின்று கொண்டே அவள் தரையை உதைத்தாள்.

“கமான்… கமான்… இன்னொரு தடவை ஸ்டார்ட் பண்ணு… ரன் பேபி ரன்… ரன் மிர்ச்சி ரன்…” சாக்லேட் விளம்பரத்தில் வருவதைப் போலக் கேலியாகக் கூறியவனைக் கொலைவெறியோடு பார்த்தாள்.

எந்தப் பக்கம் போனாலும் கேட்டைப் போடறானே!

இவன் முன் மீண்டும் ஓடி பல்பை வாங்க வேண்டுமா? நோ… இவனை வேறொரு சமயத்தில் தான் நாக் அவுட் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு நிதானமாக முறைத்தபடி நடந்து சென்றவள், தனது பேக் பேக்கை திறந்து வாட்டர் கேனை எடுத்தாள். தாகத்தில் தொண்டை வரண்டு விட்டது… இவனோடு சண்டையிட்டதோடு, காலை முதல் எதுவும் உண்ணாதது வேறு! முதலில் தாகத்தைத் தீர்த்துக் கொள்வோம் என்று எண்ணியவள்,

“ச்சீ பே… எருமைமாடு…” என்று பழித்துக் காட்டி அவனைத் திட்டிவிட்டு மடக் மடக் என்று நீரை அருந்தினாள்.

“ஏன் பாப்பா ஓடலை… நீ ஓடி வர்றதை பார்க்க ஆவலா வெய்ட் பண்ணிட்டு இருந்த என்னை ஏமாத்தாதே பாப்பா… ஏமாத்தாதே…” விடாமல் கலாய்த்துக் கொண்டிருந்தவனை என்னதான் செய்ய?

கையில் கிடைத்தது ஒரு சின்னக் கல்!

அவனைக் குறிபார்த்து விட்டெறிந்தாள்!

சட்டென அவன் நகர்ந்து விட, எங்கோ பறந்து போய் விழுந்தது அந்தக் கல்!

“ஜஸ்டு மிஸ்ஸு… ஒரு நூல்ல மிஸ் ஆகிடறது…” என்று சிரிக்காமல் சொன்னவன், “ஹரஹர மகாதேவகி…” என்று கண்ணடிக்க, ஒரு கணம் திகைத்தவள்,

“டேய்… உன்னை…” படு கோபமாக, பக்கத்தில் இருந்த இன்னொரு பெரிய கல்லை எடுத்து அவனைக் குறி பார்க்க, “இந்தக் கல்லாவது மிஸ்ஸாகாம…” என்று அவன் ஆரம்பித்தபோதே அவனது வில்லங்கத்தைப் புரிந்து கொண்டவள், “ச்சே…” என்றவாறு அந்தக் கல்லைத் தூக்கி வேறு புறம் அடித்தாள்.

“உங்களுக்கு இன்னும் சரியாவே எயிம் பண்ணவே தெரியல… இன்னும் பயிற்சி வேண்டும் அமைச்சரே…” அலட்டிக்கொள்ளாமல் கூறியவனை இனி எதைக் கொண்டு தான் அடிப்பது?

“ஆமா… கரெக்டா எயிம் பண்ணி ஒரு நாள் இல்ல ஒரு நாள் உன் மண்டைய உடைக்கத்தான் போறேன்…” பல்லைக் கடித்துக் கொண்டு அவள் கூற,

“பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்…” என்று அவன் சிரித்தபடி கண்ணைச் சிமிட்ட, ஒரு கணம் உறைந்து மீண்டும் உயிர்த்து வந்தாள் மஹா. அவன் தன்னை கஸ்டடி எடுத்து, தனது சகோதரனை மிரட்டிக் கொண்டிருப்பவன் என்பது ஒரு நொடி மறந்து தான் போனது. அவனது லீலாவிநோதங்களும் சாகசங்களும் தான் அறிந்ததுதான், அதுவும் அவன் வாயாலேயே என்பதெல்லாம் மறந்துதான் போனது.

ஒரே நொடியில் தன்னை மீட்டுக் கொண்டவள், அவனை முறைத்தபடி திரும்பிக் கொண்டாள். அந்த ஒரு நொடி தடுமாற்றத்தையும், அவள் தன்னை மீட்டுக் கொண்டதையும் அவனது கண்களும் உள்வாங்கிக் கொண்டது.

மெலிதாகப் புன்னகைத்துக் கொண்டவன், அதற்கும் மேல் வம்பிழுக்காமல் மௌனமாகினான்.

மாலை மங்க துவங்கியிருந்தது. பறவைகள் தத்தமது கூட்டைச் சென்றடையும் வேளை. அதுவரை சில்லென்று வீசிய காற்று இப்போது வெடவெடத்தது. இன்னும் இரவுக்கு இன்னமும் குளிர் அதிகமாகலாம்.

தூரத்தில் சில வட்டமான குடிசைகள் தென்பட்டன. மலைஜாதியினரின் இருப்பிடமாக இருக்கலாம். காலை முதல் உண்ணாமல், இவ்வளவு தூரம் நடந்த அசதி வேறு!

பசியை விடத் தாகமும், தாகத்தைக் காட்டிலும் அசதியும் அதிகமாக இருந்தது. நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

அந்தப் புல்வெளியில் கால்களை நீட்டி அமர்ந்து விட்டாள். தூரத்தில் சில குடிசைகள் தென்பட்டன.

ஷ்யாம் கைகளைக் கட்டிக் கொண்டு சூரியன் அஸ்தமிப்பதை கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

தலைக்கு மேலே மேகங்கள் மிதந்து கொண்டிருக்க, ஆதவனின் கரங்கள் சிவந்த பொன்னிற கதிர்களைப் பரப்பிக் கொண்டிருந்த அந்த வேளையில், ஊடுருவிய குளிரையும் பொருட்படுத்தாமல் அவன் அரசனின் கம்பீரத்தோடும் தோரணையோடும் நின்று கொண்டிருக்கக் கண்டாள்.

ஆனால் ஈரம் சற்றும் இல்லாத சர்வாதிகார அரசன்! கடைசிச் சொட்டு ரத்தம் வரை உறிந்து எடுத்து விடக்கூடிய கொடூர அரசன்!

முயன்று தன் பார்வையை வேறுபக்கம் திருப்பினாள்.

சற்று நேரம் நின்று கொண்டிருந்தவன், அவனது பேக் பேக்கை பிரித்து, படபடவென வேலை பார்க்க ஆரம்பித்தான்.

பத்து நிமிடத்தில் அந்த ரெடிமேட் டென்ட் தயாராகி இருந்தது. இழுத்து ஒரு பெரிய கல்லோடு கட்டியவன், கைகளைத் தட்டிக் கொண்டு அந்தக் கல்லின் மேலிருந்து குதித்தான்.

“என்ன மிர்ச்சி… பசிக்குதா?” சோர்வாகக் கால்களை நீட்டி, கைகளைப் பின்னால் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தவளை பார்த்து ஷ்யாம் கேட்க,

“இல்லையே… பசியா… அப்படீன்னா? நாமெல்லாம் அந்த இந்திரலோகத்தைச் சேர்ந்தவர்களாயிற்றே சுவாமிஜி… நமக்கும் பசிக்கும் ஏதாவது தொடர்பு உண்டா என்ன?” என்று கேலியாகக் கேட்டவளை, அதே சிரிப்போடு பார்த்தான்.

“ஆமாம் குழந்தாய்… சரியாகச் சொன்னாய்… அதனால் நமக்குச் சோமபானம் மட்டுமே போதும்…”

“அடப்பாவி… சோம பானமா? இப்பவா? இங்கயா?” அதிர்ந்து வாய்மேல் கை வைத்தவளை பார்த்துச் சிரித்தான்.

“ஹரஹர மகாதேவகி… அப்படியெல்லாம் சொல்லக் கூடாது குழந்தாய்… அது ஒரு அற்புதமான சுக்க்கானுபவம்… நீயும் ட்ரை செய்து பார் குழந்தாய்…” என்று சிரித்தவன் நிறுத்திக் கொள்ள,

“உங்களது மண்டையில் வேண்டுமானால் ஒன்று போடுகிறேன் சுவாமிஜி…”

“நீ ஒன்றுமறியா குழந்தை என்று நினைத்தேன்… ஆனால் நீ எல்லாம் தெரிந்த ஏகாம்பரியாக இருக்கிறாயே குழந்தாய்…”

“டேய் எக்கச்சக்க பசில இருக்கேன்… ஓவரா டபுள் மீனிங்ல பேசிக் கடுப்பேத்தாத…”

“ஹரஹர மகாதேவகி… சுவாமிஜி பரவச நிலைக்குச் செல்ல வேண்டும்… டிஸ்டர்ப் பண்ணாதே குழந்தாய்…” என்றவன், அந்தச் சிறிய ஸ்காட்ச் ஃபிளாஸ்க்கை கையில் எடுத்துக் கொண்டவன், அவளுக்குச் சப்பாத்தி ரோலை எடுத்துக் கொடுத்தான், சிரிப்போடு!

“இதை முதல்லையே குடுத்து தொலையறதுக்கு என்ன?” என்று கடுகடுத்தவள், பசியில் அலுமினியம் ஃபாயிலில் சுற்றப்பட்டிருந்த அந்தச் சப்பாத்தியை அவசரமாகப் பிரித்துக் கடித்தாள்.

உள்ளே உருளைக் கிழங்கு ஸ்டப்ஃபிங் செய்யப்பட்டு அமிர்தமாக இருந்தது. அதோடு பசி ருசி அறியாதல்லவா!

உலகத் தொலைகாட்சிகளில் முதன் முறையாக என்பது போல, வாழ்நாளிலேயே முதன் முறையாக இரண்டு வேளை உணவைத் தொடர்ச்சியாக உண்ணாமலிருந்து இருக்கிறாள். என்ன கொடுமை!

இத்தனைக்கும் வரும் வழியில் கிடைத்த பழங்களை எல்லாம் விழுங்கி இருந்தாள்… மாசில்லாத சுனை நீரை அள்ளி அள்ளிப் பருகியிருந்தாள். ஆனாலும் உண்ணவில்லையே என்றும் வழியெங்கும் முனகிக் கொண்டே தான் வந்தாள். அவன் தான் உணவு உள்ளே போனால் நடக்க முடியாது என்று இழுத்துக் கொண்டு வந்திருந்தான்.

அவள் உண்ணும் வேகத்தைப் பார்த்தவன், “உனக்குத் தீனி வாங்கிக் கொடுத்தே உங்கப்பா பர்ஸ் காலியாகி இருக்கும் போல…” என்று கிண்டலடிக்க, “என் வயிறு… நான் சாப்பிடறேன்… உன் வேலைய பார்த்துட்டு போ…” என்று உணவிலிருந்து கண்களை எடுக்காமல் கூறியவளை பார்த்து மெலிதாகப் புன்னகைத்தான்.

அவளை விடுத்து சுற்றிலும் பார்வையை ஓட்டினான். சூழ்நிலையை முதலிலேயே ஸ்கேன் செய்திருந்தான். இரவு தங்கலுக்கு உகந்த இடமா என! தூரத்தே தென்பட்ட அந்தக் கிராமம் அவனுக்குச் சற்று பரிச்சயமானதுதான். முதலில் வந்தபோதெல்லாம் கொஞ்சமாக அறிமுகமும் உண்டு. அந்தத் துணிச்சலில் தான் இங்கே டெண்ட்டை அமைத்ததும். அவன் தனியாக இருந்தால் எங்கு வேண்டுமானாலும் இருந்து விட முடியும். உடன் மகாவும் இருப்பதால், அவளது பாதுகாப்பை பற்றியும் யோசிக்க வேண்டியிருக்கிறது அல்லவா!

யோசித்துக் கொண்டே ஸ்காட்சை சிப்பியவனைக் கலைத்தது மகாவின் குரல்!

“வெறும் வயித்துல குடிக்காதே ஷ்யாம்… நீயும் சாப்பிடு…”

திரும்பிப் பார்த்தான்.

“நான் குடிப்பேன்… குடிக்காம இருப்பேன்… அதைப் பத்தி உனக்கென்ன? உன் வேலைய பாரு…” அவளது தோரணையிலேயே கூறியவனை முறைத்துப் பார்த்தாள்.

“உன் மேல நான் அக்கறைலலாம் சொல்லல… குடிச்சுட்டு நீ மட்டையாகிட்டா என்ன பண்றது?” உதட்டைச் சுளித்துக் கொண்டு அவள் கூற,

“ஏய்… என்னமோ சரக்கடிச்சுட்டு நடு ரோட்டுல கவுந்து கிடக்கற மாதிரி பேசற… ஐ ஆம் டீசன்ட் யூ நோ… ஜஸ்ட் எ சிப் தான்…”

“ம்ம்ம்… மண்ணாங்கட்டி டீசன்ட்டு… சரக்கு இஸ் ஆல்வேஸ் எ சரக்கு… அதை நீ என்ன பேர் வேண்ணாலும் சொல்லிக் கூப்பிட்டுக்க…” என்று எரிச்சலாகக் கூறியவள், “ஒரு டாக்டரா சொல்றேன் ஷ்யாம்… வெறும் வயித்துல நல்லதில்லை… அதுவும் இவ்வளவு தூரம் நடந்து வந்து இருக்க… கொஞ்சம் சப்பாத்தி சாப்ட்டுட்டு வேண்ணா இதைச் சாப்பிடு…”

இப்போது அவள் வார்த்தைகளை ஏனோ மறுத்துப் பேசத் தோன்றவில்லை. பதில் பேசாமல் சப்பாத்தியை மென்றவனைத் திருப்தியாகப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டாள்.

சாப்பிட்டு முடித்தவன், பேசாமல் எழுந்து சற்றுத் தூரம்வரை நடந்து சென்றான். ஸ்காட்சோடு சிகரெட்டும் பிடிக்க வேண்டும் போலத் தோன்றியது. அதற்கு ஒரு கதாகாலட்சேபத்தை அவள் நிகழ்த்துவாள் என்பதையும், அதைத் தான் கேட்க நேரிட வேண்டியிருக்கும் என்பதையும் உணர்ந்தவன் சப்தம் இல்லாமல் நகர்ந்து விட்டான்.

சற்று நேரம் கழித்து வந்தவனின் கைகளில் மங்குஸ்தான், ஆரஞ்சு, ப்ளம்ஸ் போன்ற பழங்கள். ஆர்வமாக வாங்கியவள், “செம டேஸ்ட்ல… என்ன இருந்தாலும் ஃப்ரெஷ்னா எப்பவுமே ஸ்பெஷல் தான்… இல்லையா?!” என்று சிரிக்க,

“ஆஹான்… அப்படியா?” சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தவனின் இதழ்கள் கேலியாய் வளைந்தன. அவனைக் கேள்வியாய் பார்த்தவள், தோள்களைக் குலுக்கிக் கொண்டு தனது வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.

சுள்ளிகளைச் சேர்த்து குவித்து வைத்தவன், காய்ந்த மரக் கிளையை உடைத்து அதோடு சேர்த்து, லைட்டரை உபயோகித்துப் பற்ற வைத்தான்.

“ஷ்யாம்… இந்தச் சிகரெட் பிடிக்கறவங்களால ஒரு யூஸ் இருக்கு… தெரியுமா?” என்று அவள் கேலியை உள்ளடக்கிக் கேட்க, அவன் இப்போது அலட்சியமாக, “நீயே சொல்லேன்…” என்றான்.

“அவசரத்துக்குத் தீப்பெட்டி இல்லையேன்னு முழிக்கவே தேவையில்லை. நடமாடும் டிப்பார்ட்மென்ட்டல் ஸ்டோர்ஸ் பக்கத்துலையே இருக்கும்…” என்று சிரிக்க, “நான் லைட்டர் தான் யூஸ் பண்றது… வேண்ணா நீயும் ஸ்மோக் பண்ணிக்க…” என்று லைட்டரை அவளிடம் தூக்கிப் போட, ஒரு கணம் அதிர்ந்து விழித்தாள் மஹா.

“நான் வில்ஸ் தான் பிடிப்பேன்… உனக்கு ஓகே வா?” இதழோரம் புன்னகையை அதக்கியபடி அவன் கேட்க, சுயநினைவுக்குத் தன்னை மீட்டுக் கொண்டாள் மஹா.

“டேய்… உன்னையெல்லாம் பெத்தாங்களா? இல்ல செஞ்சாங்களா?”

“அதை மிஸ்டர் ஆத்மநாதன் கிட்டயும், மிசஸ் ஜோதி கிட்டயும் தான் டீ நீ கேக்கணும்…” என்று ஏளனக் குரலில் கூறியவனின் கண்களை நேராகப் பார்த்தாள்.

“கண்டிப்பா சான்ஸ் கிடைச்சா கேப்பேன் ஷ்யாம்… இவனை எல்லாம் ஏன் பெத்தீங்கன்னு…” என்றவள், தலையைச் சிலுப்பிக் கொண்டு, “ப்ச்… உன்னோட பேரன்ட்ஸ் உன்னை மாதிரி தானே இருப்பாங்க?! அவங்க கிட்ட மட்டும் நியாயம் கிடைக்குமா என்ன?” அவளது குரலில் சுருதி குறைந்து விட்டது.

உள்ளுக்குள் ஏதோ செய்தது. என்னதான் அவனிடம் தொழில் விஷயத்தைப் பேசமாட்டேன் என்று வாக்குக் கொடுத்து இருந்தாலும், அவளால் பேசாமலிருக்க முடியவில்லை. பாதிக்கப்பட்டவளின் உள்ளக் குமுறல் அதுவல்லவா! என்னதான் பேசிச் சிரித்தாலும், அவள் இப்போது கைதி என்பதும் பிணை என்பதும் மாறிவிடவா போகிறது?

அவளது எண்ணப்போக்கை படித்தவன், “என்னோட பேரன்ட்ஸ் நிச்சயமா என்னை மாதிரி இல்ல மிர்ச்சி… அப்பா ரொம்பவே நியாயம் பார்ப்பாங்க… அவங்கல்லாம் பைனான்ஸ் தொழிலுக்குச் சரிப்படவே மாட்டாங்க… அவங்க தலையீட்டை நான் விரும்பறதும் இல்ல… என்னைப் பொறுத்தவரை நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்… அப்படித்தான் இருந்தாகணும்…” என்று இடைவெளி விட்டவன், ஒரு பெருமூச்சோடு,

“நிறைய விஷயம் வெளிப்படையா பேச முடியாது… என்னையோ பேர் என்னை நம்பி அவங்க பணத்தைக் கொடுத்து வெச்சு இருக்காங்க… நான் அவங்க பினாமியா இருக்கேன்… ஈவன் மினிஸ்டர்ஸ், எம்எல்ஏ ங்க, அரசியல்வாதிங்கன்னு எத்தனையோ பேர்… அவங்க பணத்துக்கு நான் கணக்கு சொல்லணும்… அவங்களுக்கு வட்டியை நான் கொடுக்கணும்… புலி வாலை பிடிச்ச கதை… வாலை விட்டுட்டா புலி அடிச்சுடும்…” என்று நிறுத்தியவன்,

“உனக்கு வெளியுலகம் தெரியாது… உன்னைப் பொறுத்தவரைக்கும் உன் வீடு தான் உலகம். ஆனா இங்க அப்படியில்லை… அடுத்த நிமிஷம் எதுவுமே சாஸ்வதமில்லை… யார் வேண்ணா எப்படி வேண்ணா துரோகம் பண்ணலாம்… காலை வாரிவிடலாம்… நம்மளை குழில தள்ளலாம்… நல்லா பழகினவனே நம்மளை முடிக்க ட்ரை பண்ணலாம்… அதுக்கெல்லாம் ரெடியாத்தான் இருக்கணும்… அவங்களுக்கு முன்னாடி நாம இறங்கிட வேண்டியிருக்கும்…” என்று நிறுத்தி அவளது கண்களைப் பார்த்தவன்,

“தேளோட இயல்பு கொட்டறது… பாம்போட இயல்பு கடிக்கறது… அதுக்கிட்ட இருக்க விஷம் தான் அதைக் காப்பாத்தும்… பாவம் பார்த்துக் கொட்டாம விட்டாலோ, கடிக்காம விட்டாலோ, அவ்வளவுதான்… நசுக்கி தூக்கி எறிஞ்சுடுவாங்க…” கண்ணெடுக்காமல் கூறியவன்,

“நான் பாம்பாத்தான் இருக்க நினைக்கறேன்… இருப்பேன்… அதுவும் நாகப்பாம்பு… எனக்குத் துரோகம் செய்யற யாரையும் நான் விட்டதே இல்ல… விடவும் மாட்டேன்…” என்று முடிக்க, அவள் பேச்சற்றுப் போய் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். இது போன்ற விளக்கங்களை அவன் வேறு யாருக்குமே கொடுத்ததில்லை என்பதை அவள் அறியமாட்டாள். ஒரு வேளை உள்ளே சென்ற ஸ்காட்சின் வேலையோ?

அவன் கூறிய தோரணை அவளுக்குள் நடுக்கத்தைக் கொடுத்திருந்தது. உடல் மெலிதாக நடுங்க, வேறு பக்கம் திரும்பித் தன்னை நிலைப் படுத்திக் கொள்ள முயன்றாள்.

சுள்ளிகள் பற்றி எரியத் துவங்கியிருந்தன. முன்னர்க் கொழுந்து விட்டெரிந்த தீ, இப்போது சற்று நின்று எரிந்து கொண்டிருந்தது. அதற்கு முன் அமர்ந்திருந்தவன், அந்தப் புல் வெளியில் வானத்தைப் பார்த்தபடி படுத்துக் கொண்டான். அருகிலிருந்த கல்லின் மேல் சாய்ந்தபடி அமர்ந்திருந்தாள் மகா. முன்னிருந்த வெப்பத்தையும் மீறிக் குளிர் உள்ளுக்குள் தாக்கிக் கொண்டிருந்தது.

நடுக்கத்தைக் குறைக்க நெருப்பின் மேல் கைகளைக் காட்டினாள். எப்படி இருந்தாலும் நடுக்கம் குறைவதாக இல்லை.

படுத்துக் கொண்டிருந்தவன், நட்சத்திரங்களைப் பார்வையிட்டபடி,

“ஆனா உன்னை கஸ்டடி எடுத்தது…” என்று நிறுத்தியவன், “பணத்துக்காக இல்ல…” என்று ஆழ்ந்த குரலில் முடிக்க, அவனை வெறித்துப் பார்த்தாள்.

****

போனை வைத்துவிட்டு நிமிர்ந்து அமர்ந்தார் ஆத்மநாதன். நெற்றியில் பொட்டு பொட்டாக வியர்வை அரும்பியிருந்தது. ஹாலிலிருந்த ஏசியின் அளவை சற்று கூட்டி வைத்தார். அந்த இரவு நேரத்தில் கூட, அவருக்கு வியர்த்தது, பதட்டத்தில்!

இரவு உணவைத் தயார் செய்துவிட்டு, அவரை அழைப்பதற்காக வந்த ஜோதி, முகம் வெளிறி அமர்ந்திருந்தவரை பார்த்துப் பயந்து போனார்.

“என்ன இது? இப்படி உட்கார்ந்து இருக்கீங்க? என்னாச்சு ஷ்யாமப்பா?” பயந்து அருகில் வந்தவர், கணவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு தெலுங்கில் கேட்க, நெஞ்சைப் பிடித்துக் கொண்டு பதில் கூற முடியாமல் மனைவியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார் ஆத்மநாதன்.

“ஜோதிம்மா…” என்பது மட்டும் தான் வந்தது. அதற்கும் மேல் அவரால் பேச முடியவில்லை. அவரைப் பொறுத்தவரை எவ்வளவு பெரிய தவறு இது?! சரி செய்யக் கூடியதா?

“சொல்லுங்க ஷ்யாமப்பா…”

பெரும்பாலும் அவரை ஷ்யாமப்பா என்று தான் ஜோதி அவரை அழைப்பது. சில சந்தர்ப்பங்களில் மட்டும் பாவா!

“பையன் ரொம்பப் பெரிய தப்பு பண்ணிட்டு இருக்கான் ஜோதிம்மா… எப்படிச் சரி பண்ண போறோம்ன்னே தெரியல…” என்று கூறியவரை குழப்பமாகப் பார்த்தார்.

“என்னாச்சு?”

“லட்சுமி பிலிம்ஸ் இருக்காங்க இல்லையா… சென்னைல…” என்று அவர் நிறுத்திவிட்டு ஜோதியின் முகத்தைப் பார்த்தார். அவரால் தொடர்ந்து பேச முடியவில்லை.

“ஆமா… முருகானந்தம் உங்களுக்கு நல்ல ப்ரென்ட்டாச்சே…” பழைய நட்பை நினைவில் நிறுத்தி அவர் கூற,

“ம்ம்ம்… ஆமா… ரொம்ப நல்ல ப்ரென்ட்… இப்பதான் தொடர்பு விட்டுப் போச்சு… நான் காண்டாக்ட்ல இருந்திருந்தா இப்படி நடக்க விட்டு இருப்பேனா?” என்று தனக்குத்தானே கூறிக் கொண்டவர், மீண்டுமாய் வியர்வையைத் துடைத்துக் கொண்டார். பதட்டத்தில் அவரது ப்ரெஷர் ஏறிக் கொண்டிருந்தது.

“அவங்க பையன் தான் இப்ப தொழிலைப் பார்க்கறான் போல… நம்ம ஷ்யாம் கிட்ட தான் பைனான்ஸ் வாங்கிருக்கான்… கொடுக்கக் கொஞ்சம் லேட் பண்ணிட்டான் போலருக்கு…” என்று எச்சிலை கூட்டி விழுங்கினார். அடுத்து சொல்லப் போவதின் வீரியத்தை மனைவி தாங்க வேண்டுமே என்ற பயம் அவருக்கு.

மனைவியைப் பொறுத்தவரை நேர்மை மிகவும் முக்கியம். இளமையில் சற்றுத் தாராளமாக இருந்தவர் தான் இவரும். இவரை இழுத்து பிடிக்க, வாழ்வை தக்க வைக்கவெனப் போராட்டம் நடத்தியதில் தான் மகனைக் கவனிக்க முடியாமல் போயிற்று என்று இன்று வரை புலம்பிக் கொண்டிருப்பவர்.

இன்னும் அவன் செய்த காரியம் தெரிந்தால் அவரது எதிர்வினை எப்படி இருக்கும் என்பதை ஆத்மநாதனால் கணிக்க முடியவில்லை. அவராலேயே இந்த அதிர்வைத் தாங்கவியலாத போது மென்மையான மனம் கொண்ட மனைவியை என்ன சொல்ல?

“சொல்லி முடிங்க ஷ்யாமப்பா…” ஜோதிக்கும் உள்ளுக்குள் ஏதோ உருண்டது. வயிற்றைப் பிசைந்தது. ஷ்யாமின் அதிரடிகளுக்குப் பழக்கப்பட்டவர் தான் ஆனாலும் கணவரே உடைந்த கோலத்தில் இருக்கிறார் என்றால்? மகன் செய்த காரியம் தான் என்ன?

“முருகானந்தம் பொண்ணை கஸ்டடி எடுத்துட்டானாம்…” தயக்கமாக இவர் சொல்லி முடிக்க, அதிர்ந்தாலும் ‘இருக்கவே இருக்காது’ என்ற உறுதியோடு ஜோதி அவரை ஏறிட்டார்.

“கண்டிப்பா இருக்காது…” மிகுந்த நம்பிக்கையாகத் தான் கூறினார்.

“இல்லமா… மூணு நாளாகுது போல… கார்த்திக் பைத்தியக்காரன் மாதிரி பேசறான்… அவனுக்கு என்னால சமாதானம் சொல்ல முடியல…” என்றவருக்கு அண்ணனாக கார்த்திக்கின் கோபமும், ஆற்றாமையும் புரிந்தது.

திருமணமாக வேண்டிய தங்கையை இப்படி விட்டு வைக்க யாருக்கு மனம் வரும்? ஒரு நல்ல குடும்பத்தில் வளர்ந்த ஒருவனின் இந்தக் கோபத்தை நியாயமற்றது என்று யார் கூற முடியும்? கார்த்திக்கின் உணர்வுகளை முழுமையாக உள்வாங்கியவரால் அங்கே அமைதியாக இருக்கவே முடியவில்லை.

“சர்… என் உயிரைக் கொடுத்தாவது பணத்தை ஏற்பாடு பண்ணிடுவேன்… ஆனா மகாலக்ஷ்மிக்கு ஏதாவதுன்னா யாரும் உயிரோட இருக்கவே மாட்டோம்… ஆனா அதுக்கு முன்ன உங்க மகன் உயிரோட இருக்க முடியாது… அதை ஞாபகம் வெச்சுக்கங்க…” என்றவனிடம்,

“பெரிய வார்த்தையெல்லாம் எதுக்கு கார்த்தி? நான் இருக்கேன்ல, நான் பார்த்துக்கறேன்ப்பா… முருகானந்தத்துகூடப் பழக்கம் என்ன இன்னைக்கு நேத்தா? ஆதிலருந்து வந்தது…” என்று இவர் கூற,

“சர்… அதை உங்க மகன் மதிக்கலையே?! கல்யாணமாக வேண்டிய பொண்ணுங்க… எப்படி இப்படிப் பண்ணலாம்? பணம் முக்கியம் தான்… ஆனா அந்தப் பணத்தைச் சாப்பிட முடியாதுங்க… அந்தப் பணத்தைக் கொடுத்து யாரும் மூச்சை வாங்க முடியாது… விட்ட மூச்சை வாங்கற வரைக்கும் தான் இந்த ஆட்டமெல்லாம்… வாங்கலைன்னா? அவ்வளவு தான் சர் வாழ்க்கை…”

“கார்த்திக்… புரியுதுப்பா… பையன் கிட்ட தொழிலை விட்டுட்டு நான் மொத்தமா ஒதுங்கிட்டேன்… ஆனா இந்த விஷயத்தை நான் விட்டுட மாட்டேன்… புரிஞ்சுக்க…” என்ற அளவு மட்டுமே அவனைச் சமாளிக்க முடிந்தது.

“ஓகே சர்… என்னோட ஆற்றாமைய உங்க கிட்ட கொட்டிட்டேன்… தப்பிருந்தா மன்னிச்சுக்கங்க…” என்றும் அவன் பாந்தமாகக் கூற, கார்த்திக்கை நினைக்கையில் சற்றுப் பெருமையாகத்தான் இருந்தது. அத்தனை பொறுப்பான மகன். பொறுப்பான அண்ணன்! இதே ஷ்யாமிடம் இந்த மன்னிப்பு என்ற வார்த்தையை எதிர்பார்க்க கூட முடியாதே… அதோடு மன்னிக்கவே தெரியாதவன் அவனல்லவா!

“கார்த்திக்… என்ன நீ? நீங்க எங்க பசங்கப்பா… சின்ன வயசுல மாமா மாமா ன்னு நீங்க ரெண்டு பேருமே என் மேல அவ்வளவு பிரியமா இருப்பீங்க… நான் ஹைதராபாத்லையே தங்க ஆரம்பிக்கவும் தான் நம்ம பழக்கம் விட்டுப் போச்சு… கவலைப்படாதே கார்த்திக்… நான் பார்த்துக்கறேன்…”

ஒரு வழியாக அவனைச் சமாதானப்படுத்தியதை எல்லாம் ஜோதியிடம் கூற, அவரால் ஷ்யாமின் நடவடிக்கையை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

இதுவரை பெண்களை இதுபோல ஷ்யாம் கஸ்டடி எடுத்துப் பார்த்ததில்லையே… கார்த்திக்கிடம் பேசியது மட்டுமில்லாமல், சென்னை அலுவலகத்தைப் பார்த்துக் கொள்ளும் விஜய்க்கும் அழைத்துக் கேட்டாயிற்றே.

மகாவை கஸ்டடி எடுத்ததும் இல்லாமல், கார்த்திக் கடனைக் கட்ட விடாமலும் ஷ்யாம் செய்து கொண்டிருக்கிறான் என்பதையும், அவனது நோக்கத்தைத் தன்னாலேயே அறிந்து கொள்ள முடியவில்லை என்பதையும் அவன் மூலமாகவே கேட்டபோது ஆத்மநாதனுக்கு நெஞ்சு வலியே வரும் போல இருந்தது.

அவன் நோக்கம் தான் என்ன?

அனைத்தையும் ஜோதியிடம் கூறினார்.

கேட்டது முதலே அவரது கண்களில் கண்ணீர்!

“பெண் பாவம் பொல்லாது ஷ்யாமப்பா…” முகத்தைப் பொத்திக்கொண்டு அழுதவரை என்ன சொல்லிச் சமாதானம் செய்ய? செய்தாலும் செய்த வினைக்கு எதிர்வினை உண்டல்லவா!

“எனக்கும் புரியுதும்மா…” என்று மனைவியின் முதுகை தட்டிக் கொடுத்தவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுதார்.

“அது கல்யாணமாக வேண்டிய பொண்ணு… இந்த விஷயம் எப்படின்னாலும் வெளிய தெரியாம இருக்காது… அப்ப அந்தப் பொண்ணோட வாழ்க்கை? ஷ்யாம் ஏன் இப்படிப் பண்ணான்? அவனுக்கு இதெல்லாம் தெரியாதா?” கேள்விமேல் கேள்விகளை அவரது மனைவி கேட்டுவிடலாம். ஆனால் இதை ஷ்யாமிடம் ஆத்மநாதனால் கேட்டு விட முடியாது.

“இதுவரைக்கும் எத்தனையோ கதைய கேட்டுட்டேன்… ஷ்யாமை பத்தி! ஆனா அதெல்லாம் உண்மை பாதி, பொய் பாதி இருக்கும்ன்னு எனக்குத் தெரியும் ஷ்யாமப்பா… ஆனா இப்படியொரு வேலைய அவன் பண்ணி பார்த்ததே இல்லையே… அவனோட புத்தி ஏன் இப்படிப் போச்சு? என் வளர்ப்பு சரியில்லை… என் வளர்ப்பு தான் சரியில்லை…” என்று தலையிலடித்துக் கொண்டு ஜோதி அழ, ஆத்மநாதனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை.

அவரது கண்களும் கலங்கியது. இதை எப்படிச் சமாளிப்பது என்ற கேள்வியைத் தாண்டி, மகாலட்சுமியின் வாழ்க்கையைச் சரி செய்து தர வேண்டிய கட்டாயத்துக்கு ஷ்யாம் தங்களை ஆட்படுத்தி விட்டதாகவே தோன்றியது.

இத்தனை செய்த மகன் எங்கே?

அவன் ஹைதராபாத்தில் இருப்பதாக விஜய்யிடம் கூறியிருந்தாலும், வீட்டிற்கு வரவே இல்லையே?!

அவருக்கு முன் இருந்த மிகப்பெரிய கேள்வி அதுதான்!

ஹைதராபாத்தில் நிலைமை இப்படி இருக்க, கார்த்திக்கின் முன் அமர்ந்திருந்த விஜய் தெளிவாகக் கூறிக்கொண்டு இருந்தான்.

“டோன்ட் வொர்ரி கார்த்திக்… பெரியவர் கிட்ட விஷயத்தைக் கொண்டு போயாச்சு… நாம அங்க போக மாட்டோம்ன்னு பாஸ் நினைச்சு இருப்பார்… இப்ப வேற வழியில்லை… பெரியவர் சொன்னா, பாஸ் கண்டிப்பா கேப்பாங்க… மஹா வந்துடுவாங்க… நீங்கப் பணத்துக்கு மட்டும் அரேஞ்ச் பண்ணுங்க…”

“தேங்க்ஸ் விஜய்… இந்த இக்கட்டான நேரத்துல உங்க யோசனைதான் ஒர்க் அவுட் ஆகும் போல… நியாயமா இருக்க உங்களைப் பார்த்தா எனக்குச் சந்தோஷமா இருக்கு விஜய்…” என்று அவனது கையைப் பிடித்துக் கொண்டான் கார்த்திக்.

“இதெல்லாம் ஒரு விஷயமா கார்த்திக்… மஹா தான் முக்கியம்… மற்றதெல்லாம் அப்புறமா பாருங்க…” என்று கூறியவன், “யாரோ பிருந்தாவோட அப்பாகிட்ட மஹா பேசச் சொன்னாங்கல்ல…பேசியாச்சா?” என்று விஜய் கேட்க,

“ஸ்ஸ்ஸ்… ஆமா… இதோ பேசறேன்…” என்றவன் போனை எடுத்து பிருந்தாவின் எண்ணிற்கு அழைத்தான், அவளது தந்தையிடம் பேச வேண்டி!

அவனது கண்களில் மெல்லிய நம்பிக்கை ஒளி!

ஆனால் ஷ்யாமை எந்த ஆயுதத்தாலும் வளைக்கவே முடியாது என்பதும், அந்த இரும்பும் வளைவது மகாவேங்கடலக்ஷ்மி என்னும் பெரு நெருப்பிடத்தில் மட்டுமே என்பதும் யாருமே அறியாத ஒன்றல்லவா!

error: Content is protected !!