4

“இன்னும் எவ்வளவு டிக்கட்ஸ் இருக்கு பிருந்தா?” தன்னுடைய தோழியைப் பார்த்துச் சற்று சோர்வாகக் கேட்டாள் மஹாவேங்கட லக்ஷ்மி. அவளது கொள்ளு பாட்டியின் பெயர். வீட்டினருக்கு மகாலட்சுமி. நண்பர்களுக்கு மஹா.

இவளைக் கிண்டலடிக்க வேண்டுமென்றால் கார்த்திக் அழைப்பது ‘வெங்கட்’. முருகானந்தத்துக்கு எப்போதும் அவள் ‘லட்டு குட்டி’ தான். கோபமாக இருந்தால் மட்டுமே முழுப் பெயரான ‘மஹாவேங்கடலக்ஷ்மி’. பெற்றவளான பைரவிக்கு ‘ஏய் எருமை மாடு…’ என்பது மிகச் சாதாரணம்.

படிப்பது மருத்துவம், இறுதியாண்டு, இன்டர்ன்ஷிப் அவளது கல்லூரியிலேயே! அசாத்திய துணிச்சல் உண்டு. அதற்கேற்றார் போலப் பலதரப்பட்ட வம்புகளையும் வாங்கி வருவதும் உண்டு. சுயமரியாதை அதிகம். வைத்துப் பார்த்துப் பேசமாட்டாள். தான் நினைப்பதைப் பேசிவிட்டுத்தான் யோசிப்பது. ஆனால் மனதளவில் யாருக்கும் சிறு கெடுதலும் நினைத்து விடமாட்டாள்.

தவறு என்றால் அது தவறு மட்டும் தான். அதைச் சரியென்று சொல்லமாட்டாள். சொல்லவும் வராது. அதைத் திமிர் என்றும் சொல்லலாம். ‘உண்மை’ என்றும் சொல்லலாம். நான் அப்படித்தான் என்ற பிடிவாதம் மிகவும் உண்டு. நேர்மையாக இருக்கும்போது யாருக்காகவும் எதற்காகவும் பயம் கொள்ளத் தேவையில்லை என்ற முரட்டுத்தனமும் உண்டு.

அந்த முரட்டுத்தனத்தைத் தான் அவளது அன்னை கண்டிப்பது. ஆனாலும் ஒரு காதில் வாங்கி மறு காது வழியாக விட்டுவிடக் கூடியவள். அவளுக்குப் பிடிக்கவில்லை என்றால் உலகமே அழிந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளவே மாட்டாள். ஆனால் பிடித்து இருந்தாலோ உலகமே எதிர்த்தாலும் அதைச் செய்யாமல் விடமாட்டாள், அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் சரி!

அவள் அடங்கும் ஒரே இடம், தந்தை மட்டுமே! பொதுவாக அவருக்குக் கோபம் வந்ததில்லை. ஆனால் மஹாவை வைத்துக்கொண்டு அவரால் அப்படி இருக்க முடியாது. போகும் இடத்திலெல்லாம் வம்பை இழுத்துக் கொண்டு வந்தால் பாவம் அவரும் என்ன செய்வார்?

ஆனால் பைரவியிடம் மஹாவின் செல்லம் செல்லுபடியாகாது. வீட்டில் பாட்டி முதல் அத்தனை பேரும் மஹாவின் நடிப்பில் ஏமாந்து போய்விட்டாலும் பைரவி மகளின் தகிடுதத்தங்களை வெகுசுலபமாகக் கண்டுபிடித்து விடுவார்.

“ஏய் என்னடி இன்னைக்குத் திருட்டுத்தனம் பண்ணிருக்க?” என்று வகையாக ஆப்பு வைப்பவரை உதட்டைச் சுளித்து, “ஆமா… உன் பையன் மட்டும் தான் நல்லவன்… நாங்கல்லாம் திருட்டுத்தனம் தான் பண்றோம்…” வேண்டுமென்றே தாயை வம்பிழுக்க, அவர் பற்ற வைத்த பட்டாசாக வெடிப்பார்.

“சொன்னாலும் சொல்லலைன்னாலும் அவன் நல்லவன் தான். அவன் உன்னை மாதிரி வாய் பேசறதில்லை… கொழுப்பு கொண்டாடறதில்லை… திமிர்த்தனம் பண்ணிட்டு ஊரைச் சுத்தறதில்லை… ஷாப்பிங் போறேன்னு கன்னாபின்னான்னு செலவு பண்றதில்லை… ப்ரெண்ட்ஸ் ப்ரெண்ட்ஸ்ன்னு தூக்கி வெச்சுட்டு கொண்டாடறதில்லை…” என்று அவர் பட்டியலிட்டுக் கொண்டே போக, கேட்டுக்கொண்டிருந்த மஹாவுக்கே மூச்சடைத்தது.

“ம்மா… ம்மா… கொஞ்சம் மூச்சு விட்டுட்டு பேசு… உன் பையன் உனக்கு உசத்தி தான்… தெரியுது… அதுக்காக இப்படி மூச்சை பிடிச்சுட்டு அவனுக்காகப் பிரசாரம் பண்ணுவியா?” என்று அவள் கிண்டலாகக் கேட்க, அவர் முறைத்தார்.

“மொறைக்காத… தண்ணிய குடி… தண்ணிய குடி…” என்று அதற்கும் கிண்டல் செய்தவளை,

“உனக்கெல்லாம் தினம் முதுகுலையே நாலு போடறவன் தான்டி புருஷனா வரப் போறான்… இந்த வாய்க்கு எல்லாம் அவன்கிட்ட சேர்த்து வெச்சு வாங்கிக் கட்டப் போற…” என்று அவளது தலையில் கொட்டிக் கூற,

“விட்டா நீயே சொல்லிக் குடுப்ப மாதாஜி… நீ யாரு… அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் பெத்த ரத்தினம் இல்லையா…” என்று சிரித்துக் கொண்டே கூற, முறைத்தார் பைரவி.

இருக்காதா? கலியபெருமாள் என்பது மட்டுமே அவளது தந்தையின் பெயர்… அதனோடு வரும் அந்த அய்யம்பேட்டை அறிவுடைநம்பி என்பது இவளாகச் சேர்த்துக் கொண்ட சேர்க்கையாயிற்றே!

எப்போதுமே பைரவியை டென்ஷன் செய்து பார்க்க வேண்டும் என்றால் ‘அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள்’ என்று ஆரம்பித்தால் போதும். அவர் டென்ஷனில் கொதிக்க ஆரம்பித்து விடுவார்.

அதற்கு நீர் ஊற்றி, பாலூற்றி, தேனூற்றி அணைப்பவள், ஒவ்வொரு நேரத்தில் எண்ணையூற்றி பற்ற வைத்தும் விடுவாள். அப்புறம் என்ன? சிவகாசி வெடியைப் போலப் பைரவி பத்தாயிரம் வாலாதான்!

“இவ்வளவு வாய்க்கு எங்க போய் மாட்டப் போறன்னு தெரியலடி எருமை மாடே… கொஞ்சமாவது அடங்கு… இல்லைன்னா பெத்தவ என்னைத்தான் பேசுவாங்க… எப்படி வளர்த்து இருக்கா பாருன்னு… எனக்குத் தேவையாடி இது?”

“என்ன பேசற பைரவி? உன் பொண்ணுக்கு நீயே சாபம் கொடுப்பியா? வாழ வேண்டிய பொண்ணை இப்படியெல்லாம் பேசாதே…” பைரவியின் மாமியார், அதாவது மஹாவின் பாட்டி அவரைக் கடிந்து கொள்வார்.

“உங்க செல்லத்தனால தான் அத்தை இவ இப்படி இருக்கா… தயவு செஞ்சு நான் கண்டிக்கும் போதும் நீங்க அவளைக் கொஞ்சாதீங்க…” இவள் படுத்தும் பாட்டில் பைரவி மாமியாரின் மேல் பாய்வார்.

“ப்ச்… குழந்தைக்கிட்ட பேசற மாதிரியா பேசற பைரவி? அதைச் சொன்னா ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகற?” கிருஷ்ணம்மாள் தன்மையாகக் கேட்டாலும், மஹாவினால் டென்ஷனான பைரவியின் மனநிலை மாறாது.

“குழந்தையா அவ? மாடு மாதிரி வளர்ந்து இருக்கா… இன்னும் ஒரு வருஷம் போச்சுன்னா டாக்டர்… அதுக்கேத்த தன்மை இருக்கா? வர்ற பேஷண்ட்ஸ் கிட்டவும் இப்படித்தான் மல்லுக்கு நிப்பாளா?”

“என்ன இது மாடு அது இதுன்னு? இதுக்குத் தான் சொல்றேன்… குழந்தைய பேசறா மாதிரி பேசுன்னு…” என்று அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஆரம்பித்து விடும்.

இவளும் சப்தம் இல்லாமல் நழுவி விடுவாள், பாட்டிக்குக் கண்ணைக் காட்டி விட்டு!

சப்போர்ட்டுக்கு இப்படி ஆட்கள் இருப்பதால் மஹாவின் வண்டியும் எந்தப் பிரேக்கும் இல்லாமல் ஓடியது.

மஹாவின் தாத்தா அவளது சிறு வயதிலேயே இறந்து விட, அப்போது முதல், குடும்பப் பொறுப்பும் தொழில் பொறுப்பும் ஒற்றை மகனான முருகானந்தத்தின் தோளில்! அவரும் சலிப்பே இல்லாமல் இதுவரை உழைத்துக்கொண்டிருந்தார்.

அவர் முன்னின்றுதான் தன் இரண்டு தங்கைகளின் திருமணமும் முடித்தார். அவர்களுக்கான அத்தனை சீர்களும் இன்று வரை நிறுத்தாமல் செய்வதும் அவர்தான். அதனாலையே கிருஷ்ணம்மாளுக்கு மகன்மீது அவ்வளவு ப்ரியம். தன்னுடைய மகன் என்பதில் பெருமை!

திரைப்பட தயாரிப்பு தவிர, ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்கள், மற்றும் நகைக்கடை என்று தொழில் செய்யும் சற்று பெரிய குடும்பம் தான்.

சென்னை வளரும் நேரத்தில் ஊரிலிருந்து வந்த குடும்பம் என்பதால் அப்போதிருந்தே நிறைய நிலபுலன்களை சென்னைக்கு உள்ளேயே வாங்கிப் போட்டிருந்தனர். அவையெல்லாம் இப்போது மதிப்பு ஏறியிருந்தது. திரைப்பட தயாரிப்பு என்றால் முருகானந்தம் வரைக்குமே பெரிய பட்ஜட் படமெல்லாம் எடுத்ததில்லை. சிறிய முதலீட்டில், தரமான குடும்பப் படங்களை எடுத்து அதில் அளவான லாபம் பார்ப்பது தான் அவர்களது நிறுவனம்.

பெரிதாக அகலக் கால் வைத்ததில்லை. சற்றும் முகம் சுளிக்க வைக்கும் படங்களையும் எடுத்ததில்லை. அந்த மரியாதை அனைவருக்குமே அவர்மேல் உண்டு. ஒரு வருடத்திற்கு முன் முதல் முறையாக ஹார்ட் அட்டாக் வந்தவரை அதற்கும் மேலும் உடலை வருத்த அனுமதிக்கவில்லை அவரது குடும்பம். ஓய்வில் இருந்தாலும் மகனை வழிநடத்திக் கொண்டுதானிருந்தார்.

ஆனால் கார்த்திக்குச் திரைப்பட தயாரிப்பு என்பது அவ்வளவாகப் பிடித்தமில்லாத தொழில். அவன் சற்று நேர்மையை எதிர்பார்ப்பவன் என்பதால் எப்படியும் இருக்கலாம் என்ற இந்தத் தொழில் அவனுக்கு ஒத்துவராத தொழிலாகிவிட்டது.

மஹாவுக்கும் அப்படியேதான். அவள் உள்ளுக்குள் கூட நுழைந்து விடமாட்டாள். அப்படியொரு அவர்ஷன் அந்தத் தொழிலின் மீது.

ஏன் என்று கேட்டால் அவளுக்குச் சொல்லத் தெரியாது. தன் தொழிலைக் காதலித்த முருகானந்தத்திற்கு வாரிசுகள் இருவருமே இப்படி இருந்து விட்டதால் கொஞ்ச நாட்களாகப் படம் தயாரிப்பதையே மறந்து இருந்தார். ஆனாலும் அவரது காதல் சும்மா இருக்க விடவில்லை.

கார்த்திக்கை விடாமல் நச்சரித்து அவனைப் படம் தயாரிக்க ஒப்புக் கொள்ள வைத்து, அதை முன் எப்போதும் இல்லாத அளவு சற்று பெரிய அளவிலும் செய்யத் திட்டமிட்டுத்தான் ஷ்யாமிடம் பெரிய அளவு பணம் வாங்கியிருந்தார்.

கடந்த காலங்களில் சரியாக அவர்கள் திருப்பியதை மனதில் கொண்டு அவனும் எந்தக் கேள்வியும் கேட்காமல் கொடுத்திருந்தான்.

இது போன்ற விஷயங்கள் மஹா அறியாதவை… அறிந்து கொள்ள விருப்பப் படாதவை.

அவளுக்குத் தெரிந்தவரின் கடை அந்த மாலில் இருந்தது. அவர்களிடமும் டிக்கட்டை தலையில் கட்டத்தான் பிருந்தாவும்அவளுமாக அங்கு வந்தது.

அவர்கள் இருவரும் தான் மிக நெருங்கிய தோழிகள். அவள் நகரின் மிக முக்கியமான மிகப்பெரிய மருத்துவமனை உரிமையாளரின் மகள். ஆனால் அதைச் சற்றும் காட்டிக்கொள்ளாதவள். மஹா வேகம் என்றால், இவள் விவேகம். அவள் அநியாயத்தைக் கண்டால் பொங்கோ பொங்கென்று பொங்குவாள். இவள் அதற்கான காரணத்தை ஆராய்வாள்.

மஹா பேசிவிட்டு தான் யோசிப்பாள்… இவள் யோசனையிலேயே கழித்து விடுவாள். இப்படி இரு துருவமாக இருப்பவர்கள் தான் அவ்வளவு நெருங்கிய தோழிகள்!

“இன்னும் நாலு டிக்கட்ஸ் தான் இருக்கு மஹா…” அவளும் சோர்ந்து விட்டாள்.

கடந்த மூன்று நாட்களாக இந்த டிக்கட் புத்தகத்தை வைத்துக் கொண்டு அழைத்துக் கொண்டிருந்தனர். அவர்களது பங்காக நான்கு புத்தகங்களைத் தள்ளி விட்டிருந்தாள் சைந்தவி. அவர்களது அந்தக் குழுவின் மேற்பார்வையாளர்.

நோக்கம் என்னவோ மிகவும் நல்ல நோக்கம் தான். அதனால் தான் வீட்டில் மானம் கெட திட்டு வாங்கினாலும் சரி என்று இவர்கள் இருவரும் அலைந்து கொண்டிருப்பது.

அதுவும் அன்று அலுவலகத்தில் இருபது டிக்கெட் ஒருவனே வாங்கியபோது இருந்த சந்தோஷம் அடுத்த நொடியே அழிந்து விட்டது. அவன் வெளியே போனானோ இல்லையோ, கார்த்திக் அவளை அடிக்காத குறைதான்.

‘இவளுமே சும்மா இருக்க மாட்டாள்’ என்று சலித்துக் கொண்டாள் பிருந்தா.

கார்த்திக் தான் கோபத்தில் எகிறினான் என்றால் மஹாவும் அவ்வளவு சண்டை போட வேண்டுமா என்று அவளை ஒரு வழியாக்கியிருந்தாள்.

“ஹலோ… என்ன ஓவரா ஜிங்ஜாங் அடிக்கற செல்லோ? வாட் மேட்டர்டி ஓடுது?” அவளை ஒரு மார்க்கமாகப் பார்த்தபடி கேட்டவளை பார்த்துத் தலையிலடித்துக் கொண்டாள்.

“லூசே… உனக்கு அண்ணன்னா எனக்கும் அண்ணன் தான்டி அறிவுக்கொழுந்தே…” என்றாள் தப்பிக்கும் மனோபாவத்தோடு!

“ஹாங்… அது… அந்த நெனப்பை எப்பவும் டெம்போரல் லோப்ல ஸ்டோர் பண்ணி வை…” என்று சிரித்தபடியே கூற,

“ஏய்… மெடிக்கல் படிக்கறன்னு காட்டாதே…” என்று அடித்துப் பிடித்துக் கொண்டே ஒரு வழியாக அந்த நான்கு டிக்கட்களையும் தெரிந்தவரின் தலையில் கட்டிவிட்டு நிம்மதி பெருமூச்சு விட்டனர்!

“ஷப்பா… ஒரு வழியா முடிச்சாச்சு…” என்ற சந்தோஷம்!

நல்ல விஷயத்துக்காகத் தான் செய்கிறார்கள் என்றாலும் இருவருக்குமே டிக்கட் புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு அலைவது அவ்வளவு சங்கடமாக இருந்தது. பழக்கமில்லாத செயல்! பணத்திற்காக இப்படி நிற்பது ஒரு மாதிரியாக இருந்தாலும், அது நல்ல விஷயம் என்பதால் மனதை தேற்றிக் கொண்டனர்!

“ஏய் பிருந்தா… வா கொஞ்ச நேரம் ஷாப்பிங் பண்ணலாம்…” என்று மஹா இழுத்துக் கொண்டு ஆர்எம்கேவிக்குள் நுழைந்தாள். நுழையும் போதே சில்லென்ற காற்று அவர்களது தீண்டியது. ‘உஷ்…’ என்று வழிந்த வியர்வையைத் துடைத்தபடி அங்கு ஒரு சில நொடிகள் செலவிட்ட மஹா, தொங்க விட்டிருந்த புடவைகளையும் ரெடிமேடுகளையும் பார்வையிட்டபடியே நகர்ந்தாள்.

“மஹா…” என்று அழைத்த பிருந்தா, அவள் உபயோகிக்கும் பிராண்ட் பெயரைச் சொல்லி, “அந்தக் கடையில பிப்டி பெர்சன்ட் ஆஃப் போட்டுருக்காங்க… வர்றியா போலாம்?” என்று அவள் கேட்க, “ஹை அப்படியா?!” என்று ஆச்சரியப் பார்வை பார்த்தவள், “இரு ஆர்எம்கேவிய ஒரு ரவுன்ட் அடிச்சுட்டு அங்க போலாம்…” என்று அங்கும் ஒரு ரவுன்ட் அடித்து விட்டு, அந்தக் கடையையும் ஒரு ரவுன்ட் அடித்துவிட்டு, ஐஸ்க்ரீம் கடையைத் தஞ்சமடைந்தார்கள்!

அதுவரை ஒரு குண்டூசி கூட வாங்கியிருக்கவில்லை.

“ஏய் என்னவோ கடையவே வாங்கற மாதிரி புரட்டிப் போட்ட, ஒரு கர்சீப் கூட வாங்கலையே லூசி?!” என்று பிருந்தா குறைபட, “டோன்ட் ஒர்ரி செல்லோ… இன்னொரு ரவுன்ட் போகும்போது வாங்கிடலாம்…” என்று அவள் கண்ணடிக்க,

“என்ன வாங்க போற?”

“கர்சீப் செல்லம்… கர்சீப்…” பிரகாஷ்ராஜ் பாணியில் அவள் வேடிக்கையாகக் கூற,

“நீயெல்லாம் உருப்படுவியா? பிசாசே…” என்று அவள் திட்டினாலும் இருவருக்குமே இந்த விண்டோ ஷாப்பிங் தான் மிகவும் பிடித்த விஷயம்.

“ததாஸ்து…” என்று அவள் அருள்பாலிப்பது போலக் கையை வைத்துக் கூற, அவளது தலையில் நங்கென்று கொட்டினாள் பிருந்தா!

“ஏன்டி கொட்டுன?” தலையைத் தடவி கொண்டே அவள் கேட்க,

“ஆமா உள்ள இருக்க ஐட்டம் அப்படியே கொட்டி கீழ வழிஞ்சு போச்சாக்கும்?”

“பின்ன? உன்னால தான் எனக்கு அம்னீசியா வந்துடுச்சுன்னு கார்த்திக் அண்ணாகிட்ட ஒரு படத்தை ஓட்டிக் காட்டப் போறேன்…” என்று கண்ணடிக்க, கார்த்திக்கின் பெயரைக் கூறும் போதே அவள் முகம் சிவந்தாள்.

‘இவளாவது அவனை அண்ணனாக நினைப்பதாவது? உடான்ஸ் விட்டுக் கொண்டிருக்கிறாளா?! உன்னை எல்கேஜிலருந்து பாக்கறேனே பட்டூஸ்…’ என்று நினைத்தவள், “ஏன் செல்லோ… என் அண்ணன் உனக்கும் அண்ணன் தானே?” என்று கிண்டலாகக் கேட்க, முதலில் புரியாமல் அவளைப் பார்த்த பிருந்தா, அவளது கேலி புரிந்து, முகம் சிவக்க,

“ஓய்ய்ய்யி லூசி… அடங்குடி…” என்று கூறும் போதே, அவளது சிவந்த முகம் இன்னமும் சிவந்தது.

“சரி சரி… எப்படியோ ஆல் ஈஸ் பைன், தட் என்ட்ஸ் பைன்…” என்று சிரித்தவள், “ஒரு இளிச்சவாய் அண்ணி கிடைச்சா எனக்கு மட்டும் கசக்கவா போகுது?” என்று சொல்லிவிட்டு, தள்ளி நின்றாள். எப்படியும் தனக்கு அடி கிடைக்கும் என்ற நம்பிக்கை அவளுக்கு.

அவளது அந்தச் செய்கையைப் பார்த்துச் சிரித்தாள் பிருந்தா.

“நீயும் நானும் தான் இப்படிப் பேசிட்டு இருக்கணும் மஹா… உன் அண்ணா கிட்ட எல்லாம் அப்படி இப்படிப் பேசவெல்லாம் எனக்குத் தைரியம் கிடையாது…” என்று அவள் உண்மையைக் கூற,

“நீ சொல்லவில்லை என்றால் பின் வேறு யார் சொல்வார்கள் நிலவே?” அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து முன்னே வந்து, இரண்டு கைகளாலும் அவளது முகத்தைப் பற்றி, கிண்டலாக சினிமா வசனத்தைக் கூறிய மஹாவை முறைத்தாள் பிருந்தா.

“உனக்கு எப்ப பார்த்தாலும் விளையாட்டு தான் மஹா…” என்று கோபித்துக் கொள்ள, “பின் வேறு என்ன வேண்டும் தலைவி? தூது போகச் சொல்கிறாயா? போகிறேன்! ஆனால் அண்ணா என்னை மிகவும் கேவலமாகத் திட்டுவானே தலைவி?!” வேண்டுமென்றே நாடகத் தமிழில் பிருந்தாவை வைத்துச் செய்துகொண்டிருந்தாள் மஹா!

“ஆமா… அந்தச் சாமியார் கிட்ட தூது போயிட்டாலும்? அப்படியே ஓவரா பொங்கி வழிஞ்சு தேடி வந்துட போகுதா?” என்று தனக்குள் பேசுவதாக நினைத்துக் கொண்டு லேசாக முனுமுனுத்துவிட, “தலைவி, மைன்ட் வாய்ஸ் என்று நினைத்துக் கொண்டு சப்தமாகப் பேசுகிறீர்கள்…” என்று அதற்கும் கலாய்த்து, அவளிடம் வாங்கிக் கட்டிக்கொண்டே, அந்தப் பாட்டா ஷோரூமில் நுழைந்தனர்!

“இங்க ஒரு ரவுண்டா? ஷ்ஷ்ஷ்… ஹப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே…”

வேடிக்கையாகக் கூறினாலும், இருவருக்குமே இப்படி அலைவதற்குச் சலிப்பதில்லை.

“என்ன டைப்ல பார்க்கறீங்க மேடம்? சைஸ் என்ன?” என்று அங்கிருந்த சிப்பந்தி மஹாவிடம் கேட்க, அவளும் கூறிவிட்டு சுற்றிலும் பார்த்தாள்.

ஓரளவு பெரிய கடை அது! மாலின் இரண்டாவது தளத்தில் அமைந்திருந்தது. ஆனால் கடையில் கூட்டமெல்லாம் இல்லை. அதற்காக வெறிச்சோடியும் இல்லை. ஆங்காங்கே ஓரிருவர் நின்று செருப்பு மாடல்களை பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஒரு பாய்ன்ட்டட் ஹைஹீல்ஸ் ஸ்டிலட்டோ அவளது கவனத்தைக் கவர்ந்தது. அவள் எப்போதும் வெட்ஜ் சாண்டல்ஸ் தான் அணிவது. ஸ்டிலட்டோ கண்டிப்பாக அவளால் அணிய முடியாது. அவ்வளவாகப் பயிற்சி இல்லை தான். ஆனால் அதன் அமைப்பு அவளை மிகவும் கவர்ந்தது. அதை எடுத்தவள், தன்னுடையதை கழற்றிவிட்டு அதை அணிந்து பார்த்தாள்.

மற்ற செருப்புகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த பிருந்தா இவளைக் கவனிக்கவில்லை.

மகாவேங்கடலட்சுமி வெகு அளவான உயரம் தான். சொல்லப் போனால் சராசரிக்கும் சற்றுக் குறைவு! அதனால் உயரத்தை அதிகப்படுத்திய அந்த ஸ்டிலட்டோ அவளுக்கு வெகுகம்பீரமான ஒரு தோற்றத்தைத் தந்தது. ஆனால் என்ன?! சற்று பூசிய உடல்வாகு, அதோடு சேர்ந்து பயிற்சியும் இல்லாதது, அவளது நடையைத் தத்தக்காபித்தக்கா என்று ஆக்கியிருந்தது.

இவள் மறைவான நடைபயின்று கொண்டிருக்க, வெகுவேகமாக வந்த ஒருவன், இரண்டு ராக்குகளின் இடையிலிருந்த திருப்பத்தில் அவளை எதிர்பார்க்காமல், இடித்து நின்றான்.

முதலிலேயே நடக்கச் சற்றுச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தவள், இப்போது முற்றிலுமாக நிலைகுலைந்து, ஹீல்ஸ் மடங்கி, முட்டி மடங்கி, “ம்மா…” என்று கீழே மடங்கி விழுந்தாள்.

“ஹாய் மிர்ச்சி…” ஷ்யாம் அவளை ஆச்சரியமாகப் பார்த்து அழைக்க, அவனைப் பார்த்து முறைத்தாள்.

‘மீண்டும் இவனா?’

கால் மடங்கியதால், வலி உயிர் போனது. அதை முகம் அப்படியே பிரதிபலிக்க, எழ முயற்சித்தாள்.

முடியவில்லை… வலியில் கெண்டைக்கால் வேறு இழுத்துப் பிடித்தது.

அவள் எழுவதற்காக அவன் கைக் கொடுக்க, அவனை முறைத்தபடி, அதை மறுத்து அவளாகவே எழ முயற்சி செய்ய, முடியவில்லை!

அவன் தோளைக் குலுக்கிக் கொண்டான்!

“கம்மான் மிர்ச்சி… கையைக் குடுக்கறதால உன்னோட பியுரிட்டி குறைஞ்சு போய்டாது…” என்று கிண்டலாகக் கூறியபடியே, அவளுடைய ஒப்புதலை எதிர்பார்க்காமல், அவளது காலில் இருந்த ஸ்டிலட்டோவை கழட்டி வைத்தான்.

ஒரு கணம் அதிர்ந்துதான் போனாள். ஒரு பெண்ணுடைய செருப்பைச் சற்றும் யோசிக்காமல் தொட கண்டிப்பாக ஆண்களால் முடியாது என்பது அவளது எண்ணம். அதை இவன் என்ன இப்படிச் செய்கிறான் என்ற அதிர்ச்சியில் அவனைப் பார்த்தாள்.

ஆனால் அதைக் கழட்டாமல் அவளால் எழ முடியாது என்பதைக் கூட அந்த நேரத்தில் மஹா மறந்திருந்தாள்.

கால் மடங்கி அமர்ந்திருந்த நிலையிலேயே, “பிருந்தா…” என்று சற்றுச் சப்தமாக அழைத்தாள். நான்கு வரிசைகள் தள்ளிச் செருப்பைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த பிருந்தாவுக்கு நடந்த இந்தக் காமெடி தெரியவில்லை. காதும் கேட்கவில்லை. அவள் என்ன கனவா கண்டாள்? எப்போதும் போல அவளுக்குப் பிடித்ததைப் பார்த்துக் கொண்டிருக்க, மஹா எரிச்சலில் இருந்தாள்.

ஷ்யாம் அவளது ஒவ்வொரு செயலையும், எரிச்சலையும், கோபத்தையும் கவனித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். வாய்விட்டுச் சிரிக்க வேண்டும் போலத் தோன்றியது.

“உன்னோட சைசுக்கு இந்த செருப்பு தேவையா? உனக்கே ஓவரா இல்லையா மிர்ச்சி?” உதட்டில் புன்னகையை அதக்கிக் கொண்டு, அவன் கேட்ட கேள்வியில், அவளது ரத்தம் சூடானது.

கையை இறுக்கி முறுக்கிக் கொண்டவள், “பிருந்தா…” இந்த முறை சப்தமாகவே கத்தினாள்.

“ஏய்… ஏன் இப்படிக் கத்தற? டோன்ட் யூ ஹேவ் எனி மேனர்ஸ்?” கேட்டவனைப் பார்த்து,

“எனக்கு மேனர்ஸ் இருக்கா இல்லையான்னு கேட்கறீங்களே? அது உங்களுக்கு இருக்கா? இப்படித்தான் எப்பப் பார்த்தாலும் இடிப்பீங்களா? இதுதான் உங்களுக்கு வேலையா?”

“இங்க பாரு மிர்ச்சி… நீ செருப்பைப் போட்டுட்டு நடக்கறன்னா, அதை வெளிய செஞ்சு இருக்கணும்… ரெண்டு ரேக்குக்கு நடுவில மறைவா பண்ணா? எனக்கென்ன ஜோசியமா தெரியும்? நீ இங்க வாக் ப்ராக்டிஸ் பண்றன்னு? அதுவும் பப்ளிமாஸ் சைஸ்ல இருந்துகிட்டு இவ்வளவு பெரிய ஹீல்ஸ்…” மீண்டும் சிரித்தான்.

“நான் என்ன சைஸ்ல இருந்தா உங்களுக்கு என்ன? என்ன செருப்பைப் போட்டா உங்களுக்கென்ன? இன்னொரு தடவை இந்த மாதிரி சொன்னா மரியாதை இல்ல சொல்லிட்டேன்…” என்று அவள் கை நீட்டி எச்சரிக்கும் போதே அவளருகில் வந்த பிருந்தா, அவளிருந்த நிலையைக் கண்டு பதறினாள்.

“ஏய் மஹா என்னடி இது?” என்று அவசரமாக அவளுக்குக் கைக் கொடுத்தவள், தூக்க முடியாமல் தூக்கினாள்.

“பாரு… உன் ப்ரென்ட்டே உன்னைத் தூக்க எவ்வளவு கஷ்டப்படறாங்க? உன்னைப் பப்ளிமாஸ்ன்னு சொன்னா என்ன தப்பு?” என்று அவன் விடாமல் வம்பிழுக்க, பிருந்தா விழித்தாள்.

“ஹலோ என்ன நடக்குது இங்க?” என்று அவள் கேட்க, அதைக் கவனிக்காத மஹா… சிரமப்பட்டு எழுந்து நின்றவள்,

“இதுதான் உங்களுக்கு லிமிட்… இதுக்கு மேல பேசினா…” என்று எச்சரிக்க,

“பேசினா என்ன பண்ணுவ மிர்ச்சி?” அவனால் அவளைக் கிண்டல் செய்யாமல் இருக்க முடியவில்லை.

“என்ன பண்ணுவேனா?” என்று கோபத்தில் முகம் சிவக்க கேட்டவள், அருகில் ரேக்கிலிருந்த ஒரு புதுச் செருப்பை எடுத்து, “மஹா…” என்று பிருந்தா அவளைத் தடுக்கும் முன்னே, அவன்மேல் விட்டெறிந்தாள்.

ஒரு கணம் உள்ளுக்குள் அதிர்ந்தவன், செருப்பு தன் மேல் படாமலிருக்க, நகர்ந்து கொண்டான். அது தள்ளிப் போய் விழுந்தது.

“அட… திஸ் இஸ் செப்பல்ஷாட்… பட் இட் ஷுட் பி எசியூர்ஷாட்… ஓகே டார்லிங்?” இன்னமும் அவளது கோபத்தைக் கொளுத்தி விட, அவளது முகம் தகதகவெனக் கொதித்தது. அவள் செய்த காரியத்தின் வீரியம் அவளுக்குத் தெரியவில்லை.

அந்த வீரியம் தெரிந்தவன், அதை வன்மமாக மனதுக்குள் வைத்துக் கொண்டால் என்னாவது என்பதையும் அவள் உணரவில்லை. அதுவும் ஷ்யாம் போன்ற ஒருவனின் பகை எத்தகைய விளைவைத் தரும் என்பதை அறியாதவள் மஹா!

“டேய்…ப்…” என்று வார்த்தைகளைத் தேடியவள், “போடா…” என்று கடுகடுத்தாள். விட்டால் அங்கிருந்த அனைத்தையும் எடுத்து அவன்மேல் எறியும் கோபம் வந்தது.

“ஹேய் டார்லிங்… பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்…” சிரித்தபடி சொன்னவன், கண்ணடித்து விட்டு அந்த இடத்தை விட்டுப் போக, அவனது அந்தச் செயலில் அவள் இன்னமும் எரிச்சலடைந்தாள்.