VET25

VET25

kaakha-kaakha-movie-stills-10.jpg

ஆச்சர்யகுறி

தமிழ் அவன் சொன்ன வார்த்தைகளால் அப்படியே நிலைகுலைந்து நின்றிருந்தாள். 

அவர்கள் நட்பை தவறான கண்ணோட்டத்தோடு பலரும் பேசிய போது அவர்களுக்கு விளக்கம் கூற கூட விருப்பமில்லாமல் அலட்சியமாய் தூக்கி எறிந்தவளால், இன்று அவ்விதம் முடியவில்லை.

அவனா தன்னிடம் அப்படி சொன்னது ? என இன்னும் அவளால் நம்ப முடியவில்லை. ரவி அவளை பற்றி தவறாய் சொன்ன போது ஒரு வார்த்தை கூட விளக்கம் கேட்காமல் தன்னை புரிந்து கொண்டவனாயிற்றே. அந்த நம்பிக்கைதானே அவர்களுக்குள் உறவு பாலத்தை கட்டமைத்து அவளை அவனிடம் இணைத்தது.

அந்த நம்பிக்கை இப்போது இல்லாமல் போனதா ?

இந்த வேதனையை கடந்து அவன் அப்படி பேசுபவன் அல்லவே என்று அவள் மனம் கணவன் மீதான நம்பிக்கையையும் விட்டொழிக்காமல் பிடித்திருந்தது.

அவள் இப்படி சிந்தனையில் மூழ்கியிருந்த காரணத்தால் அத்தனை நேரம் ரணகளப்பட்டு கொண்டிருந்த அந்த அறை நிசப்தமாய் மாறியிருந்தது.

வீரேந்திரன் அந்த மௌனத்தை கலைக்கும் விதமாய் “தமிழ்” என்றழைக்கவும் அவள் அவனை நிமிர்ந்து நோக்கினாள்.

அவள் அழவில்லை. ஆனால் அவள் முகம் முற்றிலுமாய் வெளுத்து போயிருந்தது. உதடுகள் துடித்திருக்க அவளின் விழிகள் கனல் ஏறியிருந்தது. அந்த கூர்மையான விழிகள் அவனைகுறி வைத்து தாக்கியபடி

“ஏன் வீர்?!! …. என் ரூம்ல இருக்கிற திங்ஸை எல்லாம் உடைச்சும் கூட உங்க மனசு ஆறலயா ?!… என்னையும் உடைச்சி வேதனைப்படுத்தி பார்த்தாதான் உங்க மனசு ஆறும்… இல்ல…” என்று கேட்க அவன் பதில் பேசாமல் நின்றிருந்தான்.

இல்லை ! அவள் முகத்தில் ஊற்றெடுத்த வெறுப்பை பார்த்து பதில் பேச முடியாமல் உறைந்திருந்தான்.

அவள் தாங்க முடியாமல் அவன் சட்டையை பிடித்து “ஏன் சிலை மாறி நிக்கிறீங்க ?!… சொல்லுங்க நானும் ரகுவும் ப்ஃரண்டு இல்லன்னா… அப்புறம் வேறென்ன ?… அதையும் உங்க வாயாலயே சொல்லிடுங்க… நீங்க இதுவரைக்கும் எனக்கு செஞ்ச அவமானத்தோட சேர்த்து அந்த அவமானத்தையும் நான் தாங்கிக்கிறேன்” என்று படபடவேன பொறிந்து தள்ளினாள்.

வீரேந்திரன் அதற்கு மேல் தான் அமைதி காப்பது சரியல்ல என அவள் பேசியதை கேட்டு தவிப்போடு “இல்லடி… நான் அப்படி !” என்று பொறுமையாய் அவன் எடுத்துரைக்க எண்ணி அவள் கன்னங்களை அவன் கரம் தழுவிட யத்தனிக்கும் போதே அவள் அவன் கைகளை அவசரமாய் தட்டிவிட்டு “தொடாதீங்க… ஐ ஹேட் யூ” என்று சொல்லி விலகி நின்று கொண்டாள்.

தன் மனைவி துச்சமாய் பார்த்த பார்வையும் நிராகரிப்பும் அவனை அவமானத்தின் உச்சத்தில் நிறுத்திவிட,
அவளை வீம்புக்கென்றே வெறியோடு தன்னருகில் இழுத்து அவள் இடையை அழுத்தமாய் வளைத்து கொண்டான்.

அவள் எரிச்சலோடு “என்னை விடுங்க…” என்று தவித்தவளிடம் “சரியான அவசர குடுக்கை… எல்லாதிலயும் அவசரமா டி உனக்கு” என்று கேட்டபடி உச்சந்தலையில் அடித்தான்.

“ஆ… வீர்ர்ர்” என்று அவள் வலியால் தலையில் தேய்த்தபடி குழப்பமாய் பார்த்திருக்க, 

“என்னை அவ்வளவு சீப்பான மென்டாலிட்டியானவன்னு நினைச்சிட்ட இல்ல… லூசு… நான் சொன்ன அர்த்தம் வேற… நீ புரிஞ்சிக்கிட்ட அர்த்தமே வேற” என்றான்.

அவள் புருவங்கள் உயர “மாற்றி பேசாதீங்க… ப்ஃரண்டுன்னு சொல்லி ஏமாத்த பார்க்காதன்னு தானே 
என்கிட்ட சொன்னிங்க… ” என்றாள். 

“ஆமாம் சொன்னேன்… அதுக்காக… நான் உன்னை அந்த இடியட் ரகுவோட சேர்த்து வைச்சி சந்தேகப்படறன்னு அர்த்தமா?!” என்றான்.

தமிழ் யோசனைகுறியோடு அவனையே பார்த்திருக்க, வீரேந்திரன் எரிச்சலோடு “நம்மோட முதல் சந்திப்பில ஆரம்பிச்சி இந்த செகண்ட் வரைக்கும் நீ என்னை தப்பாவே புரிஞ்சிட்டிருக்க டி” என்று சொல்ல

“…..” அவள் பதிலின்றி அவன் முகத்தையே பார்த்திருந்தாள்.

அவனே மேலும் கம்பீரமான குரலோடு தொடர்ந்தான்.

“உன்னை விட நட்பு மேல எனக்கு மரியாதை அதிகம் தமிழ்… எனக்கும் காலேஜ்ல நிறைய கேர்ள் ப்ரண்ட்ஸ்… அது உனக்கும் தெரியும்… ஏன் ? என் காலேஜ் மெட் ஒருத்தன் என்னையும் என் ப்ரண்டையும் இணைச்சி தப்பா பேசிட்டான்னு அவன் மூஞ்சி முகரை எல்லாம் உடைச்சி காலேஜ்ல சஸ்பென்ஷன் வரைக்கும் போயிருக்கேன்… அதுமட்டுமா !… அந்த ஸ்வேதா… உன்னையும் என்னையும் தப்பா சேர்த்து வைச்சி பேசின ஒரே காரணத்துக்காக எதை பத்தியும் யோசிக்காம கல்யாணத்தை நிறுத்தினவன்… அதெப்படிறி நானே அப்படி ஒரு தப்பை செய்வேன்னு நீ நினைச்ச” என்று கேட்ட அவன் விழிகள் அவளை எரிப்பது போல் பார்த்திருந்தன.

அவள் தவிப்போடு ‘ஏன் எனக்கு இப்படி நடக்குது?… நான்தான் மறுபடியும் தப்பா புரிஞ்சிக்கிட்டேனா… ?!’ என்று எண்ணியவளுக்கு உள்ளூர அவன் அப்படி யோசிக்கவில்லை என்பது நிம்மதியாய் இருந்தது. 

வீரேந்திரனை நிமிர்ந்து நோக்கியவள் “நான் வேணும்டே உங்களை தப்பா நினைக்கல வீர் …. நீங்க பேசின டோன் அப்படி இருந்துச்சு… அதுவும் ப்ஃரண்டுன்னு சொல்லி ஏமாத்தாதேன்னு சொல்லும் போது… பதினைஞ்சி வருஷ நட்பு… சட்டுன்னு மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு… அதுவும் வேற யார் சொல்லி இருந்தாலும் பரவாயில்லை… நீங்க சொல்லும் போது” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள்.

அவளையே உற்று பார்த்தவன் கோபத்தோடு “இப்பவும் அதேதான்டி சொல்றேன்… நீங்க இரண்டு பேரும் என் கண்ணு முன்னாடியே ஒருத்தரை ஒருத்தர் தெரியாத மாதிரி நடிச்சிருக்கீங்க… இப்ப திடீர்னு ப்ஃரண்டுன்னு சொன்னா… நான் நம்பனுமா?!” என்று கேள்வி எழுப்பியவன் கோபத்தோடு அவள் இடையை வளைத்திருந்த அவன் கரத்தை இறுக்கினான். 

“வலிக்குது வீர்… விடுங்க… “

“நீ எனக்கு ஏற்படுத்தின காயத்தைவிடவா இது பெரிய வலி?” என்று சொல்லும் போது அவள் இடையை நெறிக்கியிருந்த கரத்தால் அவதியுற்றபடி

“ரொம்ப அரெகன்ட்டா நடந்துக்கிறீங்க” என்றாள்.

“நீதானே என்னை அரெகன்ட் ஸேடிஸ்ட் ஈகோஸ்டிக்னு சொல்லுவ… நான் அப்படிதான் நடந்துப்பான்” என்றான் அழுத்தமாக.

“உங்க கோபம் நியாயம்தான்… ஆனா உங்களை ஏமாத்தனும்ங்கிறது எங்க எண்ணம் இல்ல… எங்க சூழ்நிலை அப்படி அமைஞ்சி போச்சு” என்றாள்.

“அப்படி என்னடி பெரிய சூழ்நிலை ?!… 
அன்னைக்கு ஸ்டேஷ்னல அவன் உன்கிட்ட பேசிட்டிருக்கிறதை பார்த்து… 
கேட்டதுக்கு… உன்னை யாருன்னே தெரியாதுன்னு அப்பட்டமா பொய் சொல்லிட்டான்… இதுதான் பதினைந்து வருஷ நட்பா ?” என்று கேட்கவும் 

“அன்னைக்கு இருந்த நிலைமைக்கு அவன் மட்டும் என்னை ப்ரண்டுன்னு உங்ககிட்ட சொல்லி இருந்தா… நீங்க அவனை கடிச்சி கொதிறி இருப்பீங்க… ?” 

“என்ன சொன்ன ?!! … என்ன சொன்ன கடிச்சி கொதிறிடுவேனா… என்னை பார்த்தா எப்படிறி தெரியுது இரண்டு பேருக்கும்… சிங்கம் புலி மாதிரியா” என்று கேட்க 

அவள் உள்மனம் ‘ஆமாம்னு சொன்னா அதுக்கு வேற என்னை இன்னும் டார்ச்சர் பண்ணுவானே’ என்று எண்ணியபடி நின்றிருந்தாள்.

அவன் அவளை பார்த்து “சரி… நாம மூணுபேரும் காஞ்சிபுரத்தில மீட் பண்ணோம்ல… அப்ப நீ சொல்லியிருக்கலாமே?!” என்று கேட்க

“சொல்லி இருக்கலாம்… ஆனா நம்ம கல்யாணத்தினால நான் ஏற்கனவே அப்செட்டா இருந்தான்… அந்த நேரத்தில நான் அவனை வேற அறிமுகபடுத்தி உங்ககிட்ட வாங்கி கட்டிக்க சொல்றீங்களா ?… அதுவும் இல்லாம அந்த ரகுவுக்கு வேற உங்களை பார்த்து கொஞ்சம் பயம்… அதான்” என்றாள்.

“யாரு ?! அவனுக்கு பயமா ?! நான் அன்னைக்கு உன்னை அடிச்சதை தப்பா புரிஞ்சிகிட்டு அந்த ராஸ்கல் என்னை பார்த்து என்ன கேட்டான்னு தெரியுமாடி ?!”

அவள் புரியாமல் விழித்தபடி “என்ன கேட்டான் ?” என்றதும்

“ஹ்ம்ம்ம்… பொண்டாட்டிய கை நீட்டி அடிக்கிறவன் எல்லாம் ஆம்பிளையான்னு கேட்டான்… அதுவும் நேரடியா கேட்காம யாரையோ கேட்கிற மாதிரி”

அவள் அதிர்ச்சியோடு ‘அடப்பாவி ரகு… இப்படி சனியனை தூக்கி தானே பனியன்ல போட்டுக்கிட்ட… இந்த கோபத்தை எல்லாம் மனசில வைச்சுகிட்டுதான் இவன் என்னை போட்டு இப்படி ஜுஸ் பிழியிறானா.. ப்ரண்டுன்னு ஒரு அறை லூசு… புருஷன்னு ஒரு முழு லூசு… இரண்டுக்கும் இடையில் நான் மாட்டிக்கிட்டு முழுக்கிறேன்… என்ன பொழப்புடா ?!!’ என்று அவள் எண்ணி கொண்டிருக்க

அவன் அவள் முகபாவங்களை உற்று கவனித்தபடி “ஏதோ மனசுக்குள்ள திட்டிறன்னு தெரியுது… ஆனா என்னன்னு தெரியல… என்னடி நினைச்ச ?” என்று கேட்டான். 

“நான் ஒரு மண்ணும் நினைக்கல… என்னை முதல்ல விடுங்க ப்ளீஸ்… மென்டல் டார்ச்சர் தர்றது பத்தாதுன்னு.. இப்படி பிஸிக்கல் டார்ச்சர் பன்றீங்க…” என்றாள்.

அவன் சிரித்துவிட்டு “போலீஸ் விசாராணைன்னா இப்படிதான்டி என் தமிழச்சி… !” என்றான்.

“எது? இது விசாரணையா ? எந்த ஊர்ல ஏசிபி சார் இப்படி கட்டிபிடிச்சிட்டு விசாரணை பண்ணுவாங்க? முதல்ல என்னை விடுங்க” என்று அவனிடம் இருந்து விலகி முயற்சித்திருந்தவளை அந்த கோபத்திலும் ரசித்தவன் 
சற்று நிதானமாய் தன் பிடியை விலக்கி விட்டு பின்னே வந்தான்.

அவன் கரம் விடுபட்ட பிறகே அவள் தேகத்தின் ரத்தம் ஓட்டம் தடைப்பட்டு சீரானது போல உணர்ந்தவள் அவள் உடலை நெளித்தபடி விலகி வந்து நிற்க அப்போது “ஸ்ஸ்ஸ்.. ஆ…” என்று வலியால் துடித்தாள்.

அவள் பாதத்தில் அவன் உடைத்த படங்களின் கண்ணாடி துகள்கள் குத்தி குருதி வழிய தொடங்கியது. அதனை அவன் கவனித்த நொடி அவள் கரத்தை பற்றி படுக்கையில் அமர வைத்தான்.

“அறிவில்லடி உனக்கு… பார்த்து கால் வைக்க மாட்டியா?” என்று கடிந்து கொண்டான்.

அவள் கோபத்தோடு “நான் பார்த்து கால் வைக்கிறது இருக்கட்டும்… நீங்க செஞ்ச வேலையாலதான் எனக்கு இப்படியாயிடுச்சு… நீங்க செஞ்ச தப்புக்கு என்னை திட்டிறீங்களாக்கும்” என்று கேட்கும் போதே அவன் யோசிக்காமல் தரையில் அமர்ந்து அவள் காலில் இருந்த கண்ணாடி துகளை துடைத்து தன் கைகுட்டையால் ரத்தம் வராமல் கட்டினான். 

அத்தனை நேரம் கோபத்தால் அவளை படாய்படுத்தியவனா இவன் என எண்ணும் அளவிற்காய் அவன் செயல் அவளை திகைப்புற செய்தது. 

அவன் அவளை நிமிர்ந்து நோக்கி “வா.. டாக்டர்கிட்ட போயிட்டு வரலாம்… ஸெப்டிக் ஆகிட போகுது” என்றான். 

அவள் கோபம் மீண்டும் தலையெடுக்க “உங்க அக்கறையே வேண்டாம் சாமி… என்னை ஆளை விடுங்க… திடீர்னு எப்படி ஒரு சேஞ்ச் ஓவர்… நீங்க என்ன 
ஸ்ப்லிட் பர்ஸ்னாலிட்டியா.. எப்ப அந்நியனா மாறீங்க எப்போ ரெமோவா மாறீங்கன்னு எனக்கு சத்தியமா தெரியல ” என்று கேட்டவளை 

“என்னடி கிண்டலா ?!” என்று கேட்டபடி எழுந்து நின்று கோபமாய் முறைக்க 

“சீர்யஸா சொல்றேன்… அப்ப்பபோ நீங்க காட்டிற அக்கறையும் காதலும் எனக்கு புல்லரிக்குது… அதே நேரத்தில 
உங்க கோபம்… என்னை கொல்லுது…” என்றவள் மெல்ல எழுந்து கொள்ள, பாதத்தை ஊன்ற முடியாமல் தடுமாறப் போனவளின் கரத்தை அவன் பிடிக்க வர அதனை விரும்பாதவளாய் அவனை விட்டு ஒதுங்கி நின்றுகொண்டாள்.

அவனோ அவளின் நிராகரிப்பை பார்த்து பதில் பேசாமல் அமைதியாய் அவளையே பார்த்திருக்க

தமிழ் தீர்க்கமான விழியோடு “உங்களுக்கு என்ன? தர்மா கேஸ் விஷயத்தில நீங்க கேட்கிற கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்லனும் … ரைட்… நான் சொல்றேன்… பட் இன்னைக்கு என்னால முடியாது … நாளைக்கு இந்த கேஸ் பத்தி டீடைலா எல்லாத்தையும் சொல்றேன்… நீங்க இப்போ இங்கிருந்து கிளம்பிடுங்க வீர்… நானும் டென்ஷனா இருக்கேன்… நீங்களும் என் மேல கோபமா இருக்கீங்க… தேவையில்லாம நமக்குள்ள பிரச்சனை வளர வேண்டாம்” என்று அவள் அதிகார தொனியில் உரைக்க அவனின் கோபம் அதிகரித்தது. 

இருந்தும் அவள் சொன்னது போல பிரச்சனையை வளர்க்க விரும்பாமல் “போறேன்டி… ஆனா நாளைக்கு நீ பதில் சொல்லல… இன்னும் மோசமான வீரை நீ பார்க்க வேண்டியிருக்கும்… எனக்கு என் கடமைதான் முக்கியம்… அதுக்கிடையில யார் வந்தாலும் இந்த ரூம் மாதிரிதான் அவங்க நிலைமையும்” என்று அவளை எச்சரித்துவிட்டு அந்த அறையை விட்டு வேகமாக வெளியேறினான்.

தமிழ் அவன் சொன்னதை கேட்டு கோபம் வந்தாலும் மறுபுறம் அவள் பாதத்தை பிடித்து கட்டு போட்டவனும் அவன்தானே என எண்ணமும் வர அவனை புரிந்து கொள்ள முடியாமல் தலையில் கைவைத்தபடி தவிப்போடு அமர்ந்து கொண்டாள். 

வீரேந்திரன் கீழே போனதும் அவனை ரவியும் விஜயாவும் போகவிடாமல் வழிமறித்து நின்று கொண்டு அவனை சங்கடத்தில் ஆழ்த்தி கொண்டிருந்தனர்.

அவர்கள் சொல்லும் எதையும் காதில் வாங்காமல் அவன் தப்பி போக எண்ண அவர்கள் விடாமல் சாப்பிட்டு போக சொல்லி வற்புறுத்தி கொண்டிருந்தனர்.

தேவி அந்த சமயத்தில் தன் அக்காவை பார்க்க அவள் அறைக்கு புகுந்தாள்.
அங்கே சென்று பார்த்தவளுக்கு பேரதிர்ச்சி. அவள் இரு கருவிழிகளும் அசைவின்றி நின்றுவிட்டது. அவள் பார்த்து பார்த்து வியந்த அறை அத்தனை அலங்கோலமாய் மாறியிருந்தது. 

தேவி இது பற்றி தன் அக்காவிடம் கூட கேட்காமல் நிலைமையை சமாளித்து புறப்பட இருந்த வீரேந்திரனை வழிமறித்து “ஏன் மாமா இப்படி செஞ்சீங்க ?” என்று கேட்கும் போதே அவள் கண்கள் கலங்கியிருந்தன.

அதோடு நிறுத்தாமல் அவள் மேலும் “அக்கா அவ ரூமை எப்படி வைச்சிருப்பான்னு தெரியுமா? எப்படி உங்களால இப்படி செய்ய முடிஞ்சிது… யாரும் அவ ரூம்ல ஒரு பொருளை கூட தொட விடமாட்டா” என்று கேட்க ரவிக்கு ஒரளவுக்கு என்னவென்று புரிந்தது.

அவன் தங்கையிடம் “தேவி கொஞ்சம் அமைதியா பேசு” என்று கூறி தன் தங்கையை அமைதியாக்க முயன்று கொண்டிருந்தான். 

வயதில் சிறியவள் எனினும் அவள் கேள்வி வீரேந்திரன் மனதை குத்தி துளையிட்டது. 

தமிழ் அப்போது அறையை விட்டு வெளியே வந்து நடப்பதை பார்த்த மறுகணம் “தேவி…போதும் நிறுத்து… நீ நினைக்கிற மாதிரியெல்லாம் எதுவும் இல்ல… நான்தான் எல்லாத்தையும் கலைச்சி போட்டேன்… நீ முதல்ல வழிவிடு… அவருக்கு வேலை இருக்கு… புறப்படட்டும்” என்றாள்.

அந்த சமயத்தில் விஜயா குறுக்கிட்டு தமிழிடம் “என்ன தமிழ்… நீயே இப்படி பேசிற… உங்களுக்குள்ள பிரச்சனையா இருந்தால் அதை பேசி தீர்த்துக்கலாம்… இப்படி அவரை தனியா அனுப்பிறது சரியில்லை… நாளைக்கு உங்க அப்பா வந்த பிறகு பார்த்து பேசிட்டு இரண்டு பேருமா ஒண்ணா கிளம்புங்க… ஏதோ எனக்கு தோணுச்சு சொல்லிட்டேன்மா…நான் சொல்றதை நீ கேட்கனும்னு நினைச்சா கேளு… ” என்றார். 

அவளின் சித்தி இத்தனை நாள் அல்லாது அவளின் நலனுக்காக இன்று பேச, அவளால் மறுத்து பேச முடியாமல் வீரேந்திரனை தவிப்போடு பார்க்க, அவன் என்ன செய்யட்டும் என்பது போல் கேள்வியாய் அவளை பார்த்தான்.

அவள் தயக்கத்தோடு யோசித்தவள் பின் அவனிடம் போக வேண்டாம் என விழிகளாலயே சமிக்ஞை செய்ய, அவள் மீது அத்தனை கோபம் இருந்தாலும் அவள் சொல்வதை நிராகரித்து செல்ல முடியாமல் ஏதோ ஒன்று அவனை தடுத்தது. அதன் பிறகு வேறு யோசனையின்றி அங்கேயே தங்க சம்மதித்தான். 

அவனை தடுத்தது வேறொன்றுமில்லை. காந்தமாய் இழுக்கும் அவளின் விழியின் மீதான ஈர்ப்புதான். 

அத்தனை நேரம் அவர்கள் தடுத்த போது 
பிடி கொடுக்காமல் பிடிவாதமாய் செல்ல பார்த்தவன் அவளின் ஒற்றை விழியசைவில் நின்றுவிட்டான் என்பதை கண்டு மூவருமே வியந்திருந்தனர்.

வீரேந்திரன் தமிழுக்கும் கூட அவர்கள் உறவு ஒரு ஆச்சர்யகுறிதான். எப்போது அவர்கள் எந்நிலையில் இருப்பார்கள் என்பதை அவர்களாலயே தீர்மானிக்க முடியவில்லை.

Hi friends,
Sorry for the delay,
ஒரு பெரிய அத்தியாயத்தை தர திட்டமிட்டு அது பெரிதாய் வளர்ந்து கொண்டே போக, பல வாசகர்களின் கேள்வியால் வேறுவழியின்றி பாதி அத்தியாயத்தை நிறுத்திவிட்டு இதுவரை பதிவிடுகிறேன்.

விரைவில் அடுத்த அத்தியாயம் அவர்களின் ஊடலோடு…

உங்கள் கருத்துக்காக ஆவலோடு காத்திருக்கிறேன். முக்கியமாய் பிடித்திருந்தால் லைக் பட்டனை அழுத்த மறந்துவிடாதீர்கள். 

Comments

hqdefault-1.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!