vizhi21

மின்னல் விழியே – 21

எவ்வளவு சொல்லியும் கேளாமல் முதலிரவுக்கு ஏற்பாடு செய்த
தாயை மனதில் திட்டிக்கொண்டே சுமியின் அறைக்குள் நுழைந்தான்
அகில்.

அவன் உள்ளே நுழையவும் கைகளை கட்டிக் கொண்டு
பார்த்திருந்தாள் சுமி. அவன் முகத்தையே பார்க்க விரும்பாதவள் அவன்
முகத்தை பார்த்தவாறு நிற்க, அவன் தான் தடுமாறினான் அவளின்
பார்வையில்..

“சுமி…” என்ன பேசுவது.. எப்படி ஆரம்பிப்பது எனத் தெரியாமல்
அவன் பார்க்க, அவளோ ஒற்றை வார்த்தையாக,

“கெட் அவுட்…” என்றாள்.

“என்ன??”.. ஏதோ சுனாமி தாக்க தயாராகுகிறது என தன்னை
தயார்படுத்திக் கொண்டவன் அவளை அப்பாவியாக நோக்க, சுமியின்
கண்களில் தீப்பொறி பறந்தது..

“வெளியே போன்னு சொன்னேன்.”.

அவள் திட்டுவாள், கோபப்படுவாள், கேள்வி கேட்பாள்,
அனைத்தையும் சமாளித்து அறையின் ஒரு மூலையில் முடங்கிக்
கொள்ளலாம் என்று அவன் எண்ணிக்கொண்டு வர, அவன் மனைவியோ
வேறுவிதமாக தாக்கினாள்..

“வெளியே போறதா???? என்ன விளையாடுறியா?? இப்போ நான்
வெளியே போன எல்லாரும் என்னன்னு கேட்பாங்க..” கோபம் வந்தாலும்
அடக்கிக் கொண்டு அவன் கேட்க,

“அதை பத்தி எனக்கு கவலை இல்லை.. நீ வெளியே போ.,. உன்
முகத்தை கூட எனக்கு பார்க்க பிடிக்கல” என்றவள் முகத்தை சுழித்தாள்…
அதில் அகிலுக்கு அடிவாங்கியது போல் இருந்தாலும் அமைதியாக
அவளை ஏறிட்டான்..

“சுமி ப்ளீஸ் புரிஞ்சிக்கோ.. நான் இப்போ வெளியே போனா.. ஏன்
எதுக்குன்னு கேள்வி வரும்.. நான் இங்கயே ஒரு ஓரமா யாருக்கும்
தொந்தரவு இல்லாம படுத்துக்கிறேன்..” உடம்பு தேறி வந்திருக்கும் தாயை
வருத்தப்பட வைக்க வேண்டாமென அவன் நினைக்க, சுமியோ அதை
சிறிதும் கண்டுக்கொள்ளவில்லை..

“இப்போ நீ போகாட்டி.. நான் வெளியே போய்டுவேன்.. என்ன
சொல்ற??? வெளியே போறியா இல்லையா???” என்றவள் அவன் வெளியே
போயே ஆக வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தாள்..

அவளை சில நொடிகள் பரிதாபமாக ஏறிட்டவன் அப்போதும் அவள்
அசையாமல் நிற்கவும் வேறு வழியில்லாது வெளியே கிளம்பினான்.. ஏன்
இப்படி செய்தாய்?? என்று ஒரு வார்த்தை கூட கேட்காமல் தனக்கு
தண்டனை கொடுக்கும் மனைவியை திட்டவும் முடியாமல் வெறுக்கவும்
முடியாமல் அடங்கி போனான் அகில்..

அவன் சென்றதும் தரையில் மடிந்து அமர்ந்தவள் அவ்வளவு நேரம்
இருந்த தைரியம் காணாமல் போக, தலையை கையால் தாங்கியவாறு
தன் எண்ணங்களில் சுழன்றாள்…

ஹனியை விக்கியோடு தூங்க வைத்துவிட்டு தங்கள் அறைக்குள்
நுழைந்தான் திரு.. வினுவோடு நிறைய பேச வேண்டும், எப்படியாவது
சமாதானம் செய்துவிட வேண்டும் எனப் பல பல திட்டங்களோடு திரு
உள்ளே நுழைய, அவன் வந்ததும் வேகமாக அவன் கையில் பெட்ஷீட்டை
திணித்தாள் வினு.

“நீ என்ன பண்றன்னா?? அப்படியே மொட்டை மாடிக்கு போற.. அங்க
தான் எங்கண்ணன் தூங்கிட்டு இருப்பான்.. அவன்கிட்ட இதுல ஒரு
பெட்ஷீட்டை குடுத்துட்டு, நீயும் ஒரு பெட்ஷீட்டை அவன் பக்கத்துலயே
விரிச்சி படுத்துக்கிற” என்றவள் இன்னொரு பெட்ஷீட்டையும் அவன்
கையில் கொடுக்க, திரு அதிர்ச்சியில் வாய் பிளந்தான்..

வினு அவளது அறைக்கு வரும் போது தான் அகில் மொட்டை மாடி
கதவை திறந்துக் கொண்டு சென்றான்.. அவன் செல்வதை யோசனையாக
பார்த்தவளுக்கு, என்ன நடந்திருக்கும் என்று புரிய, இதற்கு முடிவு
கட்டுவதற்காகவே திருவிடம் அப்படி கூறினாள் ஆனால் அவன்
அதிர்ச்சியாக பார்க்கவும்,

“என்னடா எதுக்கு அப்படி பார்க்கிற?? போ போய் என் அண்ணா கூட
தூங்கு” என்க,

திருவோ முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு, “ஏன் புஜ்ஜி மா??
எனக்கும் உங்க அண்ணாவுக்கும் தான் ஃபர்ஸ்ட் நைட்டா??” என்றான்
கேள்வியாக…

அவளது கேள்வியில் சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டவள்,
“இங்க பாரு அரசு.. என் அண்ணாவும் உன் தங்கச்சியும் நல்லா வாழ்ற
வரைக்கும் நமக்குள்ள இருக்கிற பிரச்சனைகள் முடிவுக்கு வராது..
புரிஞ்சிதா?? என் அண்ணாவுக்காக தான் இந்த கல்யாணம்..” என்றவள்
முகத்தை கடுமையாக வைத்துக் கொள்ள..

“நீ யாருக்காகவும் என்னை கல்யாணம் பண்ணிருக்கலாம் புஜ்ஜி
ஆனா நான் உனக்கே உனக்காக தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..
இனியும் இந்த செல்ல ராட்சசியை தவிக்க விடக்கூடாது.. சரியோ தப்போ
நீ உன் அண்ணா பக்கம் நிக்கிற, நானும் ஒரு முறை உன் அண்ணா பக்கம்
நின்னு பார்த்துடலாம்னு வந்துட்டேன்..” என்றவனின் கண்களிலும்
வார்த்தையிலும் காதல் வழிந்தது..

அவனது வார்த்தைகள் தன்னை வசியம் செய்வது போல்
உணர்ந்தாள் வினு.. அவன் தன்னை புரிந்துக்கொள்ள முயற்சிக்கிறான்
என்று மகிழ்ச்சியாக இருந்தாலும் இப்போதைக்கு அண்ணனின் வாழ்வை
சரி செய்ய வேண்டும் என்பதே பிரதானமாக தோன்ற,

“அண்ணா அங்க தனியா இருப்பான் அரசு… நீ போ..” என்றவள்
அவன் முகத்தை காண முடியாமல் திரும்பி நின்றுக்கொண்டாள்..

“ஹும்ம் போறேன்…” என்றவன் அவளை நெருங்கினான்.. அவனது
முரணான செய்கையில் அவள் திரும்பாமல் அப்படியே நிற்க, அவளை
பின்னாலிருந்து அணைத்துக் கொண்டவன், அவள் உச்சந்தலையில்
அவனது நாடியை பதித்தவாறு நின்றான்..

அவள் தலையில் சூடியிருந்த மல்லிகைப்பூ, அவனை வா வா என்று
அழைக்க, அதன் மணத்தை உள்வாங்கியவாறே,

“இன்னைக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட். புஜ்ஜி… உனக்கு ஒன்னுமே
தோணலையா??” என்றான் கிசுகிசுப்பாக.. அவன் செய்கை அவளை
வசமிழக்க செய்தாலும் தன் மனதை கட்டுக்குள் கொண்டு வந்தவள்.

“எதுவும் தோணலை… நீ கொஞ்சம் சீக்கிரம் போன.. என் அண்ணன்
குளிர்ல இருந்து தப்பிச்சிடுவான்..” என்றாள்..

“ம்க்கும் பத்து நிமிஷம் கழிச்சி போன உங்கண்ணன் ஒன்னும்
உறைஞ்சிட மாட்டான்.. சரியான சாமியார்” அவன் அகிலை திட்ட,
அவனை விலக்கிவிட்டு வினு கோபமாக முறைத்தாள்..

“எங்கண்ணாவை என்னடா சொன்ன???” அவள் எகிற, திரு அவள்
இதழ்களை சிறை செய்தான்.. முதலில் திமிறியவள் பின் அவன்
கைகளுக்குள் கட்டுப்பட, அவன் கள்ளச்சிரிப்புடன் அவளை விட்டு
விலகினான்,..

“உன்னால என்மேல கோபமா இருக்கிற மாதிரி ரொம்ப நாள் நடிக்க
முடியாது புஜ்ஜி.. சீக்கிரம் என்னை மன்னிச்சிடு” என்றவன் உல்லாசமாக
சிரிக்க, வினு அவனை அடிக்க வந்தாள். அவளிடமிருந்து லாவகமாக
தப்பியவன், அவள் அவனை பிடிப்பதற்குள் அங்கிருந்த பெட்ஷீட்டையும்
எடுத்துக் கொண்டு ஒரே ஒட்டமாக ஓடினான்…

அவன் கொடுத்த முத்ததின் தித்திப்பில் அவள் முகம் தானாக மலர,
‘சரியான ஹிட்லர்’ என்று தனக்குள் முணுமுணுத்தவள் ஹனியை தேடி
சென்றாள்..

விக்கியின் அறைக்குள் நுழைந்தவள் அவனது மெத்தையில்
படுத்திருந்த ஹனியை கையில் தூக்கிக் கொள்ள, சரியாக சுமியும் வந்து
சேர்ந்தாள்..

இரண்டு பேருமே ஒருவரையொருவர் எதிர்பாராமல் திகைத்தனர்.

“நீ இங்க என்ன பண்ற வினு???” தன் அண்ணாவோடு இல்லாமல்
ஹனியை தூக்கிக் கொண்டு என்ன செய்கிறாள் என்பது போல் சுமி பார்க்க,
அவள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினாள் வினு..

“அ..அது அண்ணி..” என்ன சொல்லி சமாளிப்பது என அவள்
மனதுக்குள் யோசித்துக் கொண்டிருக்க, விக்கி தன் அறைக்கு வந்தான்.

இருவரையும் அங்கே பார்த்தவன் வினுவை கேள்வியாய்
நோக்கினான்,..

“இங்க என்ன பண்றிங்க ரெண்டு பேரும்???”

“ஹனியை தூக்கிட்டு போக வந்தேன்..” இரண்டு பேருமே அட்சுரம்
பிசகாமல் கூற, விக்கி அவர்களை லூசாமா நீங்க என்ற ரேஞ்சுக்கு பார்த்து
வைத்தான்..

“என்ன சொல்றிங்க ரெண்டு பேரும்??? ஹனி என்கூட இருக்கட்டும்.
நீங்க ரெண்டு பேரும் போங்க” என்றான் இன்று அவர்களின் முதலிரவை
மனதில் வைத்துக் கொண்டு.

“இல்ல நீ எதுக்காக பார்த்துக்கணும். என் பொண்ணை நான்
பார்த்துக்குவேன்”.. வினு தான் முந்திரிக்கொட்டையாக சுமியின் முன்பே
கூற, சுமி வினுவின் கையில் இருந்த ஹனியை வெடுக்கென்று
வாங்கினாள்..

“நான் இருக்கேன் என் பொண்ணை பார்த்துக்கிறதுக்கு… நீ போய் என்
அண்ணாவை பார்” என்றவள் அதற்கு மேல் அங்கு நிற்காமல்
சென்றுவிட்டாள்.. அவள் செயலில் வினுவும் விக்கியும் தான் அதிர்ந்து
நின்றனர்..

“அவங்களுக்கு நம்மளை பிடிக்கல வினு..” தன் அக்காவின் கையில்
இருந்து குழந்தையை பறித்ததை பார்த்ததும் விக்கிக்கு ஒரு
மாதிரியாகிவிட்டது.

“சே சே அப்படி இல்ல டா.. ஹனியை ரொம்ப நாள் பிரிஞ்சி
இருந்ததுனால, இப்போ அன்பை கொட்ட நினைக்கிறாங்க.. நாம
புரிஞ்சிக்கணும்.”. என்றவள் தம்பியின் தோள்களில் ஆதரவாக தட்டினாள்..

“அது சரி.. நீ எதுக்காக இங்க வந்து நிக்கிற??? உண்மையை சொல்லு
வினு.. மச்சான் உன்கிட்ட கோபப்பட்டாங்களா??” என்று அவளை உற்று
பார்த்தான்..

“விக்கி.. உன் மச்சான் என்கிட்ட சண்டை போட்டுட்டு மொட்டை
மாடியில போய் படுத்துகிட்டான்..” வராத கண்ணீரை வருவது போல்
கண்களை துடைத்துக் கொண்டவள் பரிதாபமாக பார்க்க, விக்கிக்கு
ஆத்திரமாக வந்தது.

“என்ன சொல்ற வினு?? அந்த ஹிட்லர் சண்டை போட்டுச்சா
உன்கிட்ட??” .

என்கிட்ட பர்மிஷன் கேட்காமா கிஸ் பண்றியா?? இரு நான் என்
தம்பியை வச்சி உனக்கு வைக்கிறேன் ஆப்பு.. மனதில் திருவை நினைத்து
விஷமமாக சிரித்தவள் தன் பதிலுக்காக காத்திருக்கும் விக்கியிடம்,

“ஆமா டா.. அவங்க தங்கச்சி வாழ்க்கை நல்லா இருந்த மட்டும் தான்
என்னை நல்லா பார்த்துக்குவானாம்.. அதுவரைக்கும் அவன் மூஞ்சிலையே
முழிக்க கூடாதாம்…” எட்டப்பன் வேலையை சரியாக செய்தவள்
விக்கியின் முகத்தில் கோப ரேகைகளை பார்த்துவிட்டு,

“சரி டா நான் போய் தூங்குறேன்…” சோகமாக கூறுவது போல்
கூறிவிட்டு அங்கிருந்து தன் அறைக்கு சென்றாள்…

மாடிக்கு வந்த திரு அங்கு கண்டது நிலவை வெறித்தவாறு
நின்றிருந்த அகிலை தான்… அவன் வந்ததை கூட கவனிக்காமல் அவன்
நிலவில் பாட்டி சுட்ட வடையை தேடிக்கொண்டிருக்க.,

“ஹ்ம்ம ஃபீல் பண்ண வேண்டிய நானே சும்மா இருக்கேன் இவன்
எதுக்கு இப்படி சோக கீதம் வாசிக்கிறான்??” மனதுக்குள் அகிலை
நினைத்து கவுண்டர் கொடுத்தவன் தனக்கும் அகிலுக்கும் பெட்ஷீட்டை

விரித்துவிட்டு, படுத்தான்.. அப்போது கூட அகில் திரும்பாமலே நிற்க, திரு
அவனை கண்டுக்கொள்ளாமல் கண்மூடி தன் புஜ்ஜியுடன் டூயட் பாட
சென்றான்.. கனவில் !!!

திருவை இன்று ஒரு வழி செய்துவிட வேண்டும் என்று
வேகவேகமாக வந்த விக்கி அங்கு தன் அண்ணனை கண்டதும் மேலும்
கோபமுற்றான்..

“அண்ணா!!! நீ இங்க என்ன பண்ற???” எரிச்சலாக கேட்டவன்
பெட்ஷீட்டில் சுகமாக படுத்திருந்த திருவை உறுத்து விழித்தான்..

அவன் சத்தத்தில் அகில் திரும்பி பார்த்தான் என்றால், டூயட்டை
பாதியில் கேன்சல் செய்துவிட்டு, திரு விழித்து பார்த்தான்.. அப்போது தான்
அகிலும் திருவை கவனித்தான்…

“அரசு.. நீ இங்க என்னடா பண்ற???” தங்கையோடு இல்லாமல் இவன்
இங்கு என்ன செய்கிறான் என்பது போல் அவன் பார்க்க, அகிலின்
கேள்வியில் விக்கி காண்டாகினான்..

“நீ ஃபர்ஸ்ட் ஏன் இங்க வந்த?? உனக்கு இங்க தான் தூங்குறதுக்கு
இடம் ஒதுக்கி தந்தாங்களா?? நீ இங்க வந்ததுனால தான் மச்சானும் நம்ம
வினுகூட சண்டை போட்டுட்டு இங்க வந்துட்டாங்க..” என்றவன் அகிலிடம்
பாய…

விக்கியின் கோபத்தை ஏதோ ஹாலிவுட் மூவி பார்ப்பது போல்
பார்த்துக் கொண்டிருந்த திருவுக்கு, அவனது கடைசி வார்த்தையில்
கொரியன் மூவி பார்த்தது போல் இருந்தது…. ஒன்றும் புரியவில்லை..!!!

‘சண்டையா யாரு யார்கிட்ட போட்டாங்க??’ மைன்ட் வாய்சில்
நினைத்தவன், எழுந்து அமர்ந்து விக்கியை பார்த்தான்..

“என்னடா சொல்ற சண்டையா???” அகில் அரசுவின் முகத்தை
பார்க்க, விக்கியோ,

“ஆமா சண்டை தான்.. இங்க பாரு அகில் அண்ணா.. நீ இவரோட
தங்கச்சியை நல்லா பார்த்துக்கிட்டா தான் இவர் என் அக்காவை நல்லா
பாரத்துக்குவாராம்… எனக்கு என் அக்காவை கஷ்டப்படுத்தினா ரொம்ப
கோவம் வரும்.. அதுக்கு காரணம் யாரா இருந்தாலும் சும்மாவிட
மாட்டேன்…”என்றவன் திருவிடம் காட்ட முடியாத கோபத்தை தன்
அண்ணனிடம் காட்டிவிட்டு திருவை முறைத்துப் பார்த்தான்..

திரு, தான் சொல்லாதை சொன்னதாக கூறும் விக்கியை
விசித்திரமாக பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.. ‘இவன் என்ன புதுசா
சொல்றான்.. நான் எப்போ அப்படி சொன்னேன்??? ஒரு வேளை என்
செல்ல ராட்சஷி இப்படி இவன்கிட்ட சொல்லிட்டாளா’ என்று சரியாக
வினுவை கணித்தவன் அவளை நினைத்து பல்லை கடித்தான்..

தன்னை விட சிறியவன் தன்னை அதட்டும் அளவிற்கு தான்
இருக்கிறோம் என்று அகிலுக்கு வருத்தமாக இருந்தாலும் விக்கிக்கு
வினுவின் மேல் உள்ள பாசம் தெரியும் என்பதால்,

“எனக்கும் அவ தங்கச்சி தான் விக்கி. அவ மேல எனக்கும் அக்கறை
இருக்கு டா..” பரிதவிப்பாக கூறியவன் திருவையும் விக்கியையும் மாற்றி
மாற்றி பார்த்தான்..

“அக்கறை இருந்தா சரி தான்…” அழுத்தமாக கூறியவன், வந்த
வேகத்தில் போய்விட்டான்.. திரு தான் அவனின் பாசத்தை ஆச்சரியமாக
பார்த்திருந்தான்..

அக்காவிற்காக சொந்த அண்ணனிடமே சண்டையிடும் தம்பி.. ஹம்ம்
பாசக்கார குடும்பம் தான். அவர்களின் குடும்பத்தை சிலாகித்தவன்
அடுத்ததாக தன்னை முறைக்கும் அகிலை கண்டுக்கொள்ளாமல் தான்
விட்ட வேலையை செய்ய ஆயத்தமானான்.. அது தான் டூயட் ஆடுவது…

“அரசு.. நீ இங்க என்ன பண்ற?? கீழே போ,… வினு வருத்தப்படுவா..”
அகில் அடுத்ததாக ஆரம்பிக்க,

“இன்னும் எவ்ளோ நேரம் தான்டா இதையே மாத்தி மாத்தி கேட்க
போறிங்க.. எனக்கு தூக்கம் வருது.. டோன்ட் டிஸ்டிர்ப்” என்றவன்
கண்களை மூடிக்கொண்டான்..

அவனிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லாது போகவும் அவனையே
பார்த்துக்கொண்டு நின்றான் அகில்.

“என்னை சைட் அடிக்கிற உரிமை என் பொண்டாட்டிக்கு தான்
இருக்கு.. நீ தூங்கு“ கண்ணை மூடியாவாறே திரு கூற, அகிலுக்கு
புன்னகை அரும்பியது அவனது குறும்பில்.. அவனுக்காக விரித்திருந்த
பெட்ஷீட்டில் சென்று படுத்துக் கொண்டவன்,

“ப்ளீஸ் டா அரசு.. கீழே போ..” என்றான் தங்கைக்காக…

“எனக்கு எப்போ போகணும்னு தெரியும் நீ உன் வேலையை பாரு..”
முகத்தில் அடித்தாற் போல கூறியவனின் பதிலில் அகிலின் மனது சுருங்கி
போனது..

“அரசு..” சற்று நேரம் கழித்து மீண்டும் அகில் அழைக்க, அரசுவும்
“ம்ம்” என்றான்..

“எப்போடா உன் தங்கச்சி என்னை மன்னிப்பா???” என்றான்
அடுத்தகட்ட கேள்வியாக…

“ம்ம் நீ அவ கால்ல விழுந்து மன்னிப்பு கேளு..சரியா போய்டும்”
எல்லாம் செய்துவிட்டு இப்போது என்ன செய்வது என்று தன்னிடமே
கேட்கும் அவன் மேல் எரிச்சலாக வந்தது திருவிற்கு..

மிகப் பெரிய தீர்வு கிடைத்துவிட்டது போல் உணர்ந்த அகில்
பிரகாசமாக, திருவின் முகத்தை ஏறிட்டவாறே..

“கால்ல விழுந்து மன்னிப்பு கேட்ட என்னை மன்னிச்சிடுவாளா டா”
என்றான் சிறுவன் போல்..

“இல்ல… அந்த கால்ல வச்சே உன்னை மிதிச்சிடுவா..”
என்றவனுக்குள் சுமியின் காலில் அகில் விழுவது போன்ற காட்சி தோன்ற,
வாய்விட்டு சிரித்தான்.. அவன் கூறியதில் அகில் திகைத்தாலும்
அவனுக்கும் சிரிப்பு வந்தது..

மீண்டும் சற்று நேரம் அமைதியாக இருந்த அகில்,

“அரசு…” என்க,

இவன் வேற ஒருத்தன் நிம்மதியா டூயட் ஆட விடமாட்டான்.. இது
என்னடா ஹீரோவுக்கு வந்த சோதனை… மனதில் அகிலை வறுத்தவன்,
கண்ணை திறவாமலே,

“ம்ம்” என்றான்..

“எவ்ளோ நாளாச்சி டா நாம இப்படி ஒன்னா தூங்கி???” பிரிந்த
காதலனை போல் அகில் கூற, திரு அதிர்ச்சியில் வேகமாக கண்ணை
திறந்து அவன் பக்கம் சரிந்து படுத்தான்..

“அடேய்ய்யய்… சத்தமா சொல்லாத டா.. யாரச்சும் தப்பா நினைச்சிற
போறாங்க.. நாம எங்கடா தூங்கினோம்??? குரூப் ஸ்டடின்னு ஒரு
கூட்டமா… தானே டா என் வீட்டு மொட்டை மாடில கும்மியடிச்சிங்க…
இப்போ நாம மட்டும் இருந்த மாதிரி பேசுற??? அமைதியா தூங்குடா..
எனக்கு வேற இப்போ தான் கல்யாணம் ஆகிருக்கு..” என்றவன் தலையில்
அடித்துக்கொண்டு மீண்டும் நிலவை பார்த்தவாறு படுத்தான்..

“இங்க யாருடா வரப்போறாங்க???” பகையை மறந்து தன்னிடம்
பேசுபவனை விடத் தோன்றவில்லை அவனுக்கு..

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உன் தம்பி வந்தானே.. அவன்
போதாது?? இதையே தப்பா புரிஞ்சிக்கிட்டு டிவோர்ஸ் வாங்கி

குடுத்துடுவான்…” என்றான் நக்கலாக.. ஆயிரம் தான் அகில் மீது கோபம்
இருந்தாலும் ஏனோ அவன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறிக்
கொண்டிருந்தான் அவன்..

“ஹ்ம்ம்.. விக்கியா??? வினு கூடவே வளர்ந்ததுனால அவ மேல
ரொம்ப பாசம்… எங்க எல்லாரையும் விட அவனுக்கு அவ தான் ஃபர்ஸ்ட்..”
அகிலின் குரலில் அத்தனை பெருமை..

“தெரியுது தெரியுது.. அண்ணன் உன்னையே திட்டுறதுலையே
தெரியுது..” என்றவனின் குரலில் கேலி இழையோடியது..

“எங்க வீட்ல எல்லாருமே இப்படி தான்.. ஒரே தங்கச்சி
அப்படிங்கறதுனால பாசம் ஜாஸ்தி.. நிகியும் அதிகமா பேசாட்டாலும்
வினுவுக்கு ஒன்னுன்னா சும்மா விட மாட்டான்…” என்றவன் சற்று
இடைவெளிவிட்டு மீண்டும்,

“என் அப்பா மட்டும் ரொம்ப ஸ்ட்ரிக்ட்.. அவங்க நினைக்கிறதை தான்
நாங்க பண்ணணும்னு நினைப்பாங்க.. எனக்கும் அவங்களுக்கும் ஒத்துப்
போகாது, அதனால தான் நான் பெங்களூர் வந்து படிச்சேன்.. உன்னோட
அப்பா ரொம்ப நல்லவங்க அரசு.. அந்த மாதிரி அப்பா வேணும்னு ரொம்ப
ஏக்கமா இருக்கும்.” என்றவனுக்கு திருவின் குடும்பத்தோடு கழித்த ஆறு
வருடங்களும் கண் முன் காட்சியாக விரிந்தது..

“அதான் என் அப்பாவை கொண்ணுட்டியே.. அப்புறம் என்ன???
நிம்மதியா தூங்கு” அத்தனை நேரம் இருந்த இலகு தன்மை காணாமல்
போய்விட, திருவுக்குள் அவனது தந்தையின் இறப்பு தோன்றி அவனை
வதைத்தது..

“அரசு.. அப்படி சொல்லாத டா.. நான் அவரை என்னோட அப்பாவை
விட ரொம்ப உயரத்துல வச்சிருக்கேன்… நான் எப்படி டா அவர் சாக
ஆசைப்படுவேன்..” என்றவன் எழுந்து அமர்ந்து திருவை பார்த்தான்.. அவன்
கண்களில் அத்தனை தவிப்பு.. ஆதரவு இல்லாமல் தவிக்கும் சிறுவன்
போல் தோன்றினான் திருவின் கண்களுக்கு…

“நான் பழச பத்தி பேச விரும்பல அகில்..பேச பேச அது
முடிவில்லாம போய்கிட்டே தான் இருக்கும்.. என் தங்கச்சி இனியாச்சும்
சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கிறேன்.. நீ எனக்கு எதாச்சும் உதவி
பண்ணணும்ன நினைச்சா இதை மட்டும் பண்ணு…” என்றவன் அதற்கு
மேல் பேச விரும்பால் அவனுக்கு எதிர்புறமாக திரும்பி படுத்து கண்களை
மூடிக்கொண்டான்.

‘நான் அப்படி இல்லை டா’ உரக்க கத்த வேண்டும் போல்
இருந்தாலும்.. தன்னை அடக்கிக் கொண்டு அகிலும் தன் இடத்தில் படுத்து
கண் மூடினான்.. ஆனால் மனமோ எப்போதும் போல் தூங்கமலே
விழித்திருந்தது…

தன்னை வருடும் கரத்தின் சுகத்தில் திருவிற்கு விழிப்பு வர, அவன்
அருகே மண்டியிட்டு அமர்ந்து, அவன் முகத்தருகில் தன் முகத்தை
வைத்து பார்த்துக் கொண்டிருந்த வினுவை கண்டதும் அவன் உதடு
புன்னகையில் விரிந்தது..

“புஜ்ஜி மா..” சோம்பலாக கூறியவன் அவளை தன் கைகளுக்குள்
சிறைபிடிக்க, அவளோ அவனை விட்டு திமிறினாள்..

“டேய்.. விடுடா.. விடுடா..” என்ற சத்ததில், தான் காண்பது கனவு
அல்ல என்பது புரிய, திருவின் மூளைக்குள் மணியடித்தது..

“நல்ல சான்ஸ் திரு.. விட்டுடாத…” மனதுக்குள் நினைத்தவன்
வினுவை தன்னோடு இறுக்கிக் கொள்ள, அவளோ அகில்
விழித்துவிடுவானோ என்ற பயத்தில் அவனை விட்டு திமிறினாள்..

“டேய் அரசு.. விடு டா.. அண்ணா பார்த்துற போறான் டா..” என்றாள்
பதட்டமாக…

“ம்ம்ஹும் முடியாது.. நீ அமைதியா அப்படியே இருந்தா நானும்
எதுவும் பண்ணாம விட்டுடுவேன்…” கணவனாக டீல் பேசினான் திரு..

சற்று தள்ளி அகில் படுத்திருக்க, அவளை மொத்தமாக தனக்குள்
சிறை வைத்திருந்தான் திரு.. அகில் திரும்பி படுத்தால் நிச்சயம் தங்களை
கவனித்துவிடுவான் என்பதால் வினுவும் அவனது டீலிற்கு ஒத்துக்
கொண்டு அவனிடமிருந்து திமிறாமல் இருந்தாள்..

“விடு டா.. அண்ணா பார்த்தா கேவலம் டா..” என்றவள் அவனிடம்
கெஞ்ச, திருவோ அதை கண்டுக்கொள்ளாமல்

“அவன் ஒரு சாமியார்.. இப்போ தான் வேப்பிலை அடிச்சிருக்கேன்..
காலைல தான் எழும்புவான்..” என்றவன் அவளை தன்னோடு மேலும்
இறுக்கினான்…

“புஜ்ஜி.. என்னை மிஸ் பண்ணுனியா?? அதான் ஓடி வந்துட்டியா??”
கிறக்கமாக அவன் அவளது காதில் கேட்க, அவள் கூச்சத்தில் நெளிந்தாள்..

“போடா… ரொம்ப குளிருதே.. உனக்கு இன்னொரு பெட்ஷீட்
தரலாம்னு வந்தேன் பாரு ஃபர்ஸ்ட் என்னை நானே செருப்பால
அடிச்சிக்கணும்…” என்றவள் அவனிடமிருந்து விடுபட போராட..

“பிஞ்ச செருப்பா பிய்யாத செருப்பா???” அவளது அருகாமையில்
அவனுள் இருந்த பழைய திரு விழித்துக் கொள்ள, வினு அவனை
விலக்கிவிட்டு எழுந்து அமர்ந்தாள்… அவனும் எழுந்து அவளருகில்
அமர்ந்தவன்,

“ஜஸ்ட் ஃபன் டா…. புஜ்ஜி நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா
இருக்கேன்..” என்றவன் அவளிடம் அனுமதி கேட்காமலே அவள் மடியில்
தலை வைத்து படுத்தான்.. அவளது கையை எடுத்து தன் தலையில்
வைத்து கோதுமாறு கூறியவன்,

“எனக்கு இன்னைக்கு உன் கழுத்துல தாலி கட்டும் போது எப்படி
இருந்துச்சு தெரியுமா??” என்றான் ஆர்வமாக..

கைகள் தானாக அவன் தலையை கோத, என்னவென்பது போல்
பார்த்தாள்..

“எனக்கு ஒரு அம்மா கிடைச்சிட்ட மாதிரி ஒரு ஃபில்.. என்னை
பார்த்துக்க.. எனக்காக யோசிக்க.. இந்த மாதிரி செல்லம் கொஞ்சுறதுக்கு..
வம்பு பண்றதுக்கு… எல்லாத்துக்குமே” என்றவன் உற்சாகமாக

கூறிக்கொண்டே போக, வினுவிற்கு அவன் தன் தாயை எவ்வளவு மிஸ்
செய்கிறான் என்று புரிந்தது..

“புஜ்ஜி மா எனக்கு உன்னை கிஸ் பண்ணணும் போல் இருக்கு”
என்றவன் அவள் மடியில் இருந்து எழும்ப, அவள் அவசரமாக தன்
அண்ணனை திரும்பி பார்த்தாள்..

“வேணாம் டா.. நீ என்கிட்ட உதை வாங்க போற..” என்றவள் தன்
வாயை கையால் மறைத்தாள்.. தன் அண்ணனை பக்கத்தில் வைத்துக்
கொண்டு அவன் செய்யும் சேட்டையை பார்த்து நொந்துப் போனாள்
அவள்..

அவனோ சிரித்துக் கொண்டே அவள் நெற்றியில் முத்தமிட்டான்..
அதில் அவள் மூச்சுக் காற்று சீரானது..

அவனை திட்டுவதற்காக வாயெடுத்தவள் யாரோ வரும் அரவம்
கேட்டு பதறினாள்.. அரசுவுமே யாராக இருக்கும் என்று படியருகே
பார்த்தான்..

“அய்யோ யாரோ வராங்க.. நான் இப்போ எங்க போய்
ஒளிஞ்சிக்கிறது..” பதட்டமாக கேட்டவள் அவன் முகம் பார்க்க,

“வா புஜ்ஜி மா.. அந்த டேன்க் பின்னாடி போய் ஒளிஞ்சிக்கலாம்..”.
என்றவன் அவளுக்கு யோசிக்க அவகாசம் தராமல் அவளை இழுத்துக்
கொண்டு அங்கிருந்த சின்டக்ஸ் டேக்கின் பின்னால் சென்று ஒளிந்துக்
கொண்டான்…

“ஆமா நீ எதுக்கு என் கூட ஒளிஞ்சிருக்க?? நீ அங்கயே படுத்திருக்க
வேண்டியது தானே???” அவள் புருவம் உயர்த்த, அவன் திருதிருவென்று
முழித்தான்..

அவள் அருகாமையில் இத்தனை நெருக்கத்தில் இருக்கும் வாய்ப்பை
கைநழுவ விட்டுவிடுவானா என்ன???

சிறிய இடம் என்பதால் வினு மொத்தமாக அவனோடு ஒட்டி
அமர்ந்திருந்தாள்.. பதட்டத்தில் வினு அதை கவனிக்காவிட்டாலும் அவள்
கணவன் கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி அவளை
அணைத்துக் கொண்டிருந்தான்..

“யாரா இருக்கும்??? சே என்னை இங்க உன்கூட பார்த்துட்டா என்ன
பண்றது??? நான் போட்டுருக்கிற ப்ளான் எல்லாம் வேஸ்டா போகுமே…”
என்றவள் மெல்லிய குரலில் புலம்ப, அவள் கூறுவது அவனை யோசிக்க
வைத்தாலும்,

“எல்லாம் உன் தம்பியா தான் இருக்கும்.. அவன் தான் ஃபர்ஸ்ட்
வந்து சத்தம் போட்டுட்டு போனான்..” என்றான் கிண்டலாக…

“என்னது..!! வந்து சத்தம் போட்டுட்டு போனானா?” என்றவள் அங்கே
படியருகே பார்த்தாள்..திருவின் மீது வினு அமர்ந்திருந்ததால் அவனால்
பார்க்க முடியவில்லை..

“என்ன உன் அருமை தம்பி தானே???” மெல்லிய சிரிப்போடு திரு
கேட்க,

“வர்றது என் அருமை தம்பி இல்ல.. உன் அருமை தங்கச்சி….” வினு
கூறியதில் டேங்கின் பின்னால் இருந்து எட்டிப்பார்த்தவனின் கண்கள்
வியப்பில் விரிந்தது..

விழிகள் தொடரும்…..