vizhi28
vizhi28
மின்னல் விழியே 28
பௌர்ணமி நிலவு ஜொலித்துக் கொண்டிருக்க.. அந்த காம்பவுன்ட் சுவற்றின் மேல் லாவகமாக ஏறிக் கொண்டிருந்தான் திருநாவுக்கரசு.. சுவற்றின் மேல் ஏறியவன் நாலாப்பக்கமும் யாராவது கவனிக்கிறார்களா என்று ஆராய்ந்துவிட்டு மறுபக்கம் குதிக்க, அந்த பக்கம் நின்றுக் கொண்டிருந்த உருவத்தை பார்த்து பயந்து கத்தப்போனான்…
அதற்குள் திருவை கண்டுக் கொண்ட அந்த உருவம், “அரசு.. கத்திடாத டா” என்க, திரு சற்று ஆசுவாசம் அடைந்தான்.. குரலை வைத்தே அது அகில் என்பதை கண்டுக் கொண்டவன்..
“டேய் இங்க என்னடா பண்ற???” தானே தலையாய கடமைக்காக சென்றுக் கொண்டிருக்கும் போது.. இவன் வேறு நந்தி போல் குறுக்கே வருகிறானே என்று எரிச்சலடைந்தான் திரு. நேரம் வேறு நள்ளிரவை தாண்டிக் கொண்டிருந்தது..
திருவின் கேள்வியில் தடுமாறியவன், “அது அரசு.. நான்… எக்சர்சைஸ் பண்ணிட்டு இருக்கேன் டா…” என்க, திரு அவனை நம்பாமல் பார்த்தான்..
“என்னடா சொல்ற??? அர்த்த ராத்திரியில அதுவும் காம்பவுண்ட் பக்கம் உனக்கு என்ன எக்சர்சைஸ் வேண்டி கிடக்கு????”
“நீ இங்க என்னடா பண்ற??” திரு கேட்ட கேள்வியை கிடப்பில் போட்டவன் தன் கேள்வியை முன்னிறுத்த, இப்போது விழிப்பது திருவின் முறையானது…
“அது அகி.. நானும் எக்சர்சைஸ் தான்டா பண்றேன்” என்றான் அசடு வழிந்தவாறு…
அகிலும் அவனை நம்பாமல் பார்க்க, இருவரும் சிரித்துவிட்டனர்…
“அரசு…சுமி தூங்கிட்டாளா??? “ சுமியை பற்றி நினைக்கும் போதே அகிலின் குரல் குழைந்து விட்டது.. என்னமோ புதிதாக காதலிப்பது போல் ஒரு உணர்வு..
“டேய் அவ என் தங்கச்சி டா” அரசு கலவரத்தோடு..கூறினாலும் அதில் கோபமில்லை… கேலி தான் அதிகம் இருந்தது…
“ம்ச்.. நான் அவ புருஷன் டா.. என் அப்பா ஏன் டா இப்படி பண்ணினாரு.. நான் எவ்வளவு ஆசையா வந்தேன் தெரியுமா வீட்டுக்கு??? இப்படி எல்லாத்தையும் சொதப்பிட்டாரே..” ஏக்கமாக கூறிய நண்பனை பார்த்த திருவிற்கும் உள்ளுக்குள் இதே கேள்விகள் தான் ஓடிக் கொண்டிருந்தது..
‘உன்னை விட நான் அதிகம் ஆசையா இருந்தேன் டா..’ மனதில் சொல்லிக் கொண்டவன் வெளியே சிரித்தவாறே, “அதனால் என்னடா…. இன்னும் பதினைஞ்சு நாள் தானே.. டக்குன்னு ஓடிப் போய்டும்” என்றவன் அகிலின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, “அகி ஏறி குதிச்சிடுவியா டா??? முடியாட்டி கேட் வழியா போ டா” என்றான் சிறந்த நண்பனாக..
“போ டா.. கேட் பக்கம் கூர்க்கா இருப்பான்.. நான் இப்படியே குதிச்சி போயிடுறேன்” என்றவன் ஒரே தாவலில் சுவற்றின் மீது ஏறி அந்த பக்கம் குதித்திருந்தான்…
அகிலை நினைத்து சிரித்தவன் காலையில் நடந்ததை எண்ணிப் பார்த்தான்…
இரு ஜோடிகளுக்கும் திருமணம் என்றதும் மகிழ்ச்சியடைந்தவன், அவர்களை கெஸ்ட் ஹவுசில் தங்க சொல்லவும் நெஞ்சடைக்க நின்றுவிட்டான்… அவனின் திகைப்பை சிறியவர்கள் அனைவரும் கண்டுக் கொண்டாலும், சுதாவும் குமாரும் அதை கவனிக்காமல் திருமணத்தை எப்படி நடத்துவது என திட்டமிட துவங்கிவிட்டனர்…
“ரொம்ப நல்ல விஷயம் ப்பா.. எப்படியும் நாம சுமியையும் ஹனியையும் எல்லாருக்கும் அறிமுகப்படுத்தனும்… அதுக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம்..” நிகில் தான் முதலில் சந்தோஷத்தில் துள்ளியது…
விக்கியோ தன் மச்சானை ஓரக் கண்ணால் பார்த்தவாறே, “எனக்கும் சம்மதம் அப்பா.. ஆனா பதினைஞ்சு நாள்ல நடத்துறது கஷ்டம்.. ஒரு மாசம் கழிச்சி வச்சிக்கலாம் பா” என்க, பதினைந்து நாட்கள் என்றதற்கே அதிர்ச்சியில் உறைந்த திரு, ஒரு மாதம் என்றதும் நெஞ்சில் கை வைத்துவிட்டான்..
திருவின் முகத்தை பார்த்தவாறே நின்றிருந்த வினுவிற்கு சிரிப்பு கொப்பளித்தது… நேற்றே அவளின் பெற்றோர், அவளையும் சுமியையும் அழைத்து பேசிவிட்டனர்.. சுமி முதலில் மறுத்தாலும் பின் வினுவின் வற்புறுத்தலினால் ஒத்துக் கொண்டாள்… அதை திருவிடம் உடனடியாக கூற மனமில்லாமல் அவர்கள் கூறும் போதே தெரிந்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிட்டாள்… அவன் திகைத்து நிற்பதை காணும் போது முன்பே சொல்லியிருக்க வேண்டுமோ என்று தோன்றியது அவளுக்கு..
“என்னங்க.. என் தம்பியையும் வர சொல்லிடுறேன்.. இவங்களுக்கு அப்பா அம்மா இடத்துல இருந்து அவன் கவனிச்சிப்பான்…” சுதாவும் தன் பங்கிற்கு ஆலோசனைகளை வாரி வழங்க… திரு பாவமாக தன் புஜ்ஜிமாவை பார்த்துக் கொண்டிருந்தான்…
அன்றே அவர்களை கெஸ்ட் ஹவுசிற்கு செல்ல சொல்லலாமா என அனைவரும் பேசிக் கொண்டிருக்க, திரு ஒருவழியாக தன்னை தானே தேற்றிக் கொண்டு,
“நான் எப்படியும் இங்க ஒரு வீடு வாங்குறதா இருக்கேன் மாமா… எப்படியும் நாங்க ரெண்டு பேரும் தனிக்குடித்தனம் போறதா இருந்தோம். அதனால சொந்தமா ஒரு வீடு இருந்தா பிரச்சனை இல்லை.. இங்கே பக்கத்துலயே எதாச்சும் வீடு விலைக்கு வருதான்னு பாருங்க…” வீடு வாங்கும் திட்டம் முன்பே அவன் யோசித்து வைத்திருந்ததால் அதை அனைவரிடமும் தெரிவித்தான்…
வினுவின் தந்தைக்கு, தானே மகளுக்கு வீடு வாங்கி கொடுக்க வேண்டும் என்று ஆசையிருந்தாலும் அவரால் சட்டென்று கேட்க முடியவில்லை.. அதோடு நிச்சயம் திரு ஏற்றுக் கொள்வான் என்று தோன்றவில்லை.. அதனால் சிறிது யோசித்தவர்,
“மாப்பிள்ளை நம்ம பக்கத்து வீடு விலைக்கு தான் வருது.. எனக்கு தெரிஞ்சவரோடது தான்.. அவர் பசங்க ரெண்டு பேரும் முப்பையில இருக்காங்க.. அதனால இங்க இருக்கிறதை விற்க முடிவு பண்ணி என்கிட்ட வாங்கிக்குறிங்களான்னு கேட்டுருந்தார்.. அதை பார்ப்போமா???” மகளை மட்டும் வெகுதூரம் அனுப்ப அவருக்கு மனமில்லை.. அதே சமயம் வீட்டோடு மாப்பிள்ளையாகவும் திரு இருக்க சம்மதிப்பான் என்று தோன்றாததால் பக்கத்து வீட்டை எப்படியாவது வாங்கி விடுவது என முடிவு செய்தார்….
“சரி மாமா.. எனக்கு சம்மதம் தான்… பதினைஞ்சு நாளுக்குள்ள முடிக்கிற மாதிரி பாருங்க… ஏன்னா என் மனைவி என்னோட சொந்த வீட்டுக்கு வரணும்னு ஆசைப்படுறேன்…” வினுவை பார்வையால் வருடியவாறே திரு கூற…. அவன் தனக்காக யோசிப்பதை எண்ணி வினு மகிழ்ந்து போனாள்…
அதன்பின் அனைத்தும் வேகமாக நடந்தது… அன்றே பக்கத்துவீட்டு ஓனரிடம் குமார் அலைபேசியில் பேசி சம்மதம் வாங்க, அந்த வீட்டின் சாவியை அவரது உறவினர் ஒருவர் கொண்டு வந்து ஒப்படைத்தார். அன்று மாலையே சுமியும் திருவும் தங்கள் ஜாகையை அங்கே மாற்றிக் கொண்டார்கள்… இரவு நெருங்கும் வேளையில் சுதாவின் தம்பி இசக்கியும் தன் மனைவியோடு வந்துவிட, அவர்களும் திருவின் புதிய வீட்டில் தங்கிக் கொண்டனர்… வீட்டில் அனைத்து பொருட்களும் ஏற்கனவே இருந்ததால் பெரிதாக அவர்கள் சிரமப்படவில்லை.. இருந்தாலும் அனைத்தும் புதிதாக வாங்க வேண்டும் என திரு எண்ணியிருந்தான்..
வீட்டு ஓனர் மும்பையில் இருப்பதால் இரண்டு நாட்களில் வந்து வீட்டை திருவின் பெயருக்கு மாற்றி தருவதாக கூறியிருக்க, கல்யாண வேலைகள் ஜோராக தொடங்கியது….
அனைவரும் ஒன்றாக அமர்ந்து மண்டபம் புக் செய்வது, யாரையெல்லாம் அழைக்க வேண்டும் என லிஸ்ட் போடுவது என கலந்தாலோசிக்க, திருவிற்கு வினுவிடம் தனியாக பேச வாய்ப்பு கிடைக்காமல் போனது.
அதனால் தான் இந்த நள்ளிரவு சாகசம்.. இரண்டு வீடும் அருகருகே என்பதால் ஒற்றை சுவர் மட்டுமே இடையில் இருந்ததால் அது அவனுக்கு எளிதாகி போனது… ஆனால் தன் நண்பனும் தன்னை போல் வருவான் என அவன் எண்ணவில்லை…
அகிலை நினைத்து சிரித்தவாறே வினுவின் வீட்டை திறந்தவன், நேராக வினுவின் அறைக்கு சென்றான். அகில் மட்டும் இப்போது வராமல் இருந்திருந்தால் வினுவிற்கு அழைத்து அவளை வந்த கதவை திறந்து விட சொல்லியிருக்க வேண்டும் என எண்ணியவாறே அவள் அறைக்குள் நுழைய, அங்கு அவனது மனைவியோ ஒரு டெடி பியரை கட்டிக் கொண்டு சுகமாக தூங்கிக் கொண்டிருந்தாள்..
அவளை பார்த்து பெருமூச்சுவிட்டவன், “ஹ்ம்ம் என்னை கட்டி பிடிச்சிட்டு தூங்க வேண்டியவ இப்படி டெடி பியரை கட்டிட்டு தூங்குறா…” சன்னமாக முணுமுணுத்தவன் அவளது டெடி பியரின் மேல் பொறாமை கொண்டவனாக அவள் அருகே நெருங்கி, அதை அவள் கையில் இருந்து உருவ முயன்றான்..
ஆனால் அதற்கு அவசியமே இல்லை என்பது போல் டெடி பியர் அவன் கையோடு வந்தது… திரு திகைக்கும் போதே வினு விழித்து,
“அதை கேட்டா நானே தர போறேன்.. அப்புறம் ஏன் டா பறிச்சிட்டு இருக்க???” என்க,
அவள் சட்டென்று விழித்து கேட்கவும் பயந்தவன் அவள் அருகில் அமர்ந்தான்… தன் நெஞ்சை நீவிக் கொண்டவன்,
“புஜ்ஜி மா நீ தூங்கலையா”
வினுவும் எழும்பி அவன் அருகில் அமர்ந்தவள், “நீ வருவன்னு ஒரு நம்பிக்கை அதான தூங்காமல் இருந்தேன்…” என்றவள் அவன் தோள் சாயப் போக, அவன் விலகி அமர்ந்தான்..
“என்னடா???”
“நான் கோபமா இருக்கேன்…” அவள் முகத்தை பார்க்காமல் திரும்பி அமர்ந்துக் கொண்டான்..
“ஏன்??,”
“எதுக்குனு உனக்கு தெரியாதா????” திரு கோபமாக கேட்க, அவன் கோபம் புரிந்தவள் புன்னகைத்தவாறே அவனை நெருங்கி அமர்ந்தாள்..
“அரசு… அப்பா கேட்டதும் மறுக்க முடியலை டா.. எல்லா பொண்ணுங்க மனசுலயும் ஒரு ஆசை இருக்கும்.. நம்ம மனசுக்கு பிடிச்சவங்களை பெத்தவங்க சம்மதத்தோட ஊரறிய கல்யாணம் செஞ்சிக்கணும்னு… அதே மாதிரி ஆசை சுமி அண்ணிக்கும் இருந்திருக்கும். அதான் ஒத்துக்கிட்டேன்.. ஆனா இந்த வீடு ஷிப்டிங் ப்ளான் எல்லாம் எனக்கு தெரியாது..” பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு வினு கூற, திருவாலும் அதற்கு மேல் கோபத்தை பிடித்து வைக்க முடியவில்லை…
அவன் தங்கையின் திருமணத்தை பற்றி அவனுக்கும் அவன் தந்தைக்கும் கூட ஆயிரம் கற்பனைகள் இருந்ததே..
வினு சொல்வதை பற்றி யோசித்தவனுக்கு அப்போது தான் வினுவிற்கும் அப்படி ஒரு ஆசை இருந்திருக்குமோ என்று தோன்றியது… நல்லவேளை வினுவின் தந்தையிடம் மறுத்து எதுவும் கூறவில்லை என நிம்மதியுற்றவன் மனைவியை திரும்பி பார்க்க, அவளோ அவன் கோபத்தை தணிக்க அவனை நெருங்கி அமர்ந்துக் கொண்டு அவன் விரல்களோடு தன் விரல்களை கோர்த்து கொண்டிருந்தாள்…
“கல்யாணம் ஓ.கே தான் புஜ்ஜி ஆனா இந்த மாதிரி பிரிஞ்சி இருக்கிறது தான் கஷ்டமா இருக்கு..” பாவம் போல் அவன் திரு கூற, வினுவிற்கு உருகிவிட்டது.. அவனை நிறைய தவிக்க விடுகிறோமோ என எண்ணியவள்,
“தனித்தனியா இருக்கோமா?? இப்போ பாரு நாம சேர்ந்து தானே இருக்கோம்…” என்றவள் அவனை அணைத்துக் கொள்ள, அவன் அணைப்பில் கட்டுண்டவன்..
“இன்னும் பிப்டீன் டேய்ஸ் தானே.. நான் சமாளிச்சிக்குவேன்…”
“சரி அந்த வீடு வாங்குறதுக்கு அமௌன்ட் ரெடி பண்ணிட்டியா???” அவர்கள் பார்த்திருக்கும் வீடு அதிக விலை மதிப்புள்ளது.. அந்த வீட்டை வாங்கும் அளவிற்கு அவனிடம் பணம் இருக்கிறதா என்று நேரடியாக கேட்க முடியாமல் வினு கேட்க,
“ஹ்ம்ம் அமௌன்ட் எல்லாம் ரெடி தான் புஜ்ஜி… ஏழு வருஷ சேவிங்ஸ் இருக்கு… அது போதும் வீடு வாங்குறதுக்கும் கல்யாண செலவுக்கும்” என்றவன் மேலும், “பெங்களூர்ல இருக்கிற என்னோட வீட்டை வித்துடலாம்னு பார்க்கிறேன்.. அந்த காசு வந்துட்டா நான் தனியா பிஸினெஸ் தொடங்குறதுக்கும் சரியா இருக்கும்… ஆனா இன்னும் ஒரு ஆறு மாசம் நான் வேலை பார்க்கிற கம்பெனியில் இருந்து வெளியே வர முடியாது.. அக்ரிமென்ட் இருக்கு.. அது முடிஞ்சதும் அங்க இருக்கிற என்னோட ஷேர்சை வித்துட்டு தனியா தொடங்கிக்கலாம்” என்றவன் தன் திட்டங்களை கூறினான்..
அவனது திட்டத்தை மனதில் மெச்சிக் கொண்டாள் வினு..
“அப்புறம் புஜ்ஜி.. அப்பாவோட வீட்டை மட்டும் என்கிட்ட வச்சிட்டு அப்பாவோட சேவிங்ஸ் அப்புறம் பெங்களூர்ல கொஞ்சம் இடம் இருக்கு.. அதை எல்லாம் சுமி பெயர்ல மாத்திடலாம்னு இருக்கேன்.. அப்புறம் ஹனி பெயர்ல ஒரு எப்.டி போட்டிருக்கேன்… அதையும் சுமி கிட்ட ஒப்படைச்சிடலாம்னு இருக்கேன்.. இதுல உனக்கு எதுவும் ப்ராப்ளம் இல்லையே????”
“எனக்கு என் அரசு மட்டும் போதும்… அந்த வீட்டையும் நீ கொடுத்தாலும் ஒன்னும் இல்லை..” என்றவள் இப்போது அவன் தோளில் சாய, அவன் தடுக்கவில்லை… அவள் மாசில்லா காதலில் கரையவே செய்தான்….
“ம்ம்ஹூம் அந்த வீட்டை நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன்.. அது என்னோட ஸ்பெஷல் வீடு.”
அவன் கூறியதும் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து கண்களாலே என்னவென்ற கேட்க,
“அந்த வீட்ல தான் நாம ஒன்னா சேர்ந்தோம்.. எதிர்பாராம் நடந்தது தான் ஆனா அது நமக்கு மறக்க முடியாத விஷயம்.. மறக்கவும் விரும்பாத விஷயம்..” என்றவன் அன்றைய நாளுக்கே சென்றுவிட, வினு அவன் முகத்தை பார்க்க முடியாமல் அவன் மார்பிலே தன் முகத்தை அழுத்தமாக புதைத்துக் கொண்டாள்…
தன் தந்தையோடு வாழ்ந்த வீடு என்பதற்காக தன்னோடு வைத்திருக்க விரும்புகிறானோ என்று தான் அவள் எண்ணினாள் ஆனால் இந்த பதில் எதிர்ப்பாரதது தான்… அதுவும் ஒரு காரணம் தான் என்றாலும் திருவிற்கு அந்த வீட்டை நினைத்தாலே அன்று நடந்த சம்பவங்கள் தான் ஞாபகம் வந்தது…
வினுவிடம் எந்த சத்தமும் இல்லாது போகவும் குனிந்து அவளை பார்த்தவன் அவள் வெட்கப் படுகிறாள் என்று புரிந்துக் கொண்டு,
“ஹேய் புஜ்ஜி அப்படியே தூங்கிடாத மா.. நான் கஷ்டப்பட்டு சுவர் ஏறி குதிச்சி வந்திருக்கேன்..” அவளை சகஜமாக்க அவன் அப்படி கூற, அவள் நிமிர்ந்து அவன் தலையிலே நங்கென்று கொட்டினாள்..
“போடா” என்றவள் கட்டிலில் கிடந்த தலையனையால் அவனை அடியில் மொத்த, திரு சுகமாவே அதை ஏற்றான்… .
சற்று நேரம் பொறுத்தவன், அவள் கையில் இருந்த தலையனையை பறித்து கட்டிலில் தன் முதுகுக்கு பின்னே வைத்தவிட்டு, அவளையும் தன் அணைப்புக்குள் கொண்டு வந்தவாறு தங்கள் காதல் கதைகளை பேச துவங்க, வினுவும் சமத்தாக அமர்ந்து அவன் பேசுவதை கேட்க ரசிக்க துவங்கினாள்…
திருவின் வீட்டினுள் நுழைந்த அகிலின் நிலைமையோ கவலைக்கிடமாக இருந்தது… எது சுமியின் அறை என்று தெரியாமல் தட்டு தடுமாறி ஒருவழியாக கண்டுக் கொண்டவன் அறையினுள் செல்ல, சுமி ஜன்னல் அருகே நின்று வானத்தை வெறித்துக் கொண்டிருந்தாள்..
அவளுக்கு இந்த திருமணம் அவசியம் தானா என்று இருந்தது… ஐந்து வயதில் குழந்தை இருக்கும் போது, இப்போது சென்று மணமகளாக உட்கார பயமாக இருந்தது.. யாராவது தன்னையும் ஹனியையும் தவறாக பேசிவிடுவார்களோ என நிறைய பயம் இருந்தது… ஆனால் அதை காட்டிக் கொள்ளவில்லை… வினுவின் தந்தை கேட்கும் போது வினுவின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சிக்காகவே ஒத்துக் கொண்டாள்.. ஆனால் இப்போது அது தவறோ என எண்ணிக் கொண்டிருந்தாள்….
அகில் வந்தும் அவள் திரும்பி பார்க்காமல் தீவிர சிந்தனையில் இருக்க, அகில் அவளை நெருங்கி வந்து பின்னாலிருந்து அணைத்துக் கொண்டான்.. முதலில் பயந்து கத்த போனவள் பின் அகிலின் தொடுகையை உணர்ந்து அமைதியானாள்…
“அகி இங்க எப்படி வந்த??? அண்ணா பார்த்தா எதாச்சும் நினைப்பான்..” அவன் கையனைப்பில் அடங்கியவாறே அவள் கேட்க, அகிலோ,
“யாரு உன் அண்ணாவா???? உன் அண்ணா இப்போ என் தங்கச்சி கூட டூயட் ஆடுறதுக்கு சுவிட்ச்சர்லேன்ட் போயிருப்பான்..” என்றான் தன் நண்பனை நினைத்து..
“கதவு பூட்டியிருந்துச்சே நீ எப்படி வந்த??” சுமிக்கு இன்னும் அகில் கூறியது புரியவில்லை.. அவள் தலையில் செல்லமாக தட்டியவன்,
“அடியே மக்கு.,.. உன் அண்ணா அவன் மனைவிய பிரிஞ்சி இருக்க முடியாம அப்போவே அங்க ஓடிட்டான்.. நான் வரும் போது தான் காம்பவுன்ட்ல சர்க்கஸ் வித்தை காமிச்சிட்டு இருந்தான்…” என்றவன் நடந்ததை கூற, சுமி அவனை முறைத்தாள்..
“நீயும் அதே மாதிரி தானே வந்திருக்க அப்புறம் என்னோட அண்ணாவை மட்டும் சர்க்கஸ்காரன்னு சொல்ற” தன் அண்ணாவிற்கு சப்போர்ட் செய்தாள் அந்த பாசமிகு தங்கச்சி…
அவளை தன் பக்கம் திருப்பியவன், அவள் கண்களை நேராக பார்த்து, “ஐ லவ் யூ” என்க, சுமியின் கண்கள் கலங்கியது..
காதலித்தாலும் அவர்கள் அதிகம் பேசிக் கொண்டது இல்லை.. அவர்களின் கண்கள் தான் அதிகம் பேசும்… திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பு தான் நேரடியாக காதலை கூறினான்… அதன்பின் அகிலின் கெஞ்சல்களோடு திருமணம்.. அது முடிந்த பின் கணவன் என்ற உரிமை கொடுத்த தைரியத்தில் ஹனியின் ஜனனம்… என அவள் வாழ்வில் எல்லாமே வெகு வேகமாக நடந்து அதோடு முடிந்தும் விட்டது… இப்போது அந்த நாட்கள் கிளர்ந்து எழ, சுமி அவனை அணைத்துக் கொண்டு விசும்பினாள்..
“லவ் யூ டா அகி.. எல்லாத்துக்கும் சாரி..” என்றவள் அதற்கு மேலும் பேசப் போக, அவள் இதழை தன் இதழால் சிறை செய்திருந்தான் அகில்… அவள் மீண்டும் மன்னிப்பை வேண்டி அதன்பின் பழைய ஞாபகங்களை கிண்டி கிளறி பேசுவதில் அவனுக்கு இஷ்டம் இல்லை… அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு ஒரு புதிய அத்தியாயத்தை துவங்க நினைத்தான்…
நீண்ட நேர இதழ் முத்ததிற்கு பின் அவளை விடுவித்தவன், அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்.. சுமிக்கு அவன் கொடுத்த முத்ததில் என்ன பேச வந்தோம் என்பதே மறந்துவிட, வெட்கத்துடன் அவன் மார்பில் சாய்ந்துக் கொண்டாள்…
“இனி, நீ.. நான்.. நம்ம பொண்ணுன்னு சந்தோஷமா இருக்க போறோம்… நம்ம வருங்காலத்தை மட்டும் மனசுல வச்சிக்கோ சுமிம்மா.. எனக்காக நம்ம பொண்ணுக்காக… ப்ளீஸ்” என்றவன் தன் அணைப்பை இறுக்கினான்.. சுமியும் அவன் சொல்வதே சரியென்பது போல் அவன் அணைப்பில் அடங்கினாள்..
இருவரும் ஹனியை பற்றியும் தங்களின் எதிர்காலத்தை பற்றியும் மட்டுமே பேச அதன்பின் அவர்களின் கடந்த கால துன்பங்கள் எல்லாம் அவர்களை விட்டு தூரம் போய்விட்டது…
விடியும் வரை இரு ஜோடிகளும் பேசிக்கொண்டே இருக்க, விடியலில் இருவரும் தங்கள் வீடுகளுக்கு திரும்பியிருந்தனர்… தினமும் இதுவே தொடர்கதையாக, வாழ்க்கை சுவாரஸ்யமாக சென்றது அவர்களுக்கு.. ஒரு பக்கம் கல்யாண வேலைகளும் நடந்துக் கொண்டிருந்தது.. திருவும் அவன் தற்போது இருந்த வீட்டை வினுவின் பெயரில் வாங்கி விட்டான்.. மேலும் திருமண செலவில் பாதி தான் தருவதாக கூறிவிட்டான்… வினுவின் தந்தை மறுத்த போதும் அவன் ஒத்துக்கொள்ளவில்லை… அவன் தங்கைக்கு அவன் செய்தே தீருவேன் என்றான்..
அனைவரும் வினுவிடம் வந்து நிற்க, அவளும் திருவின் பக்கமே பேசினாள்.. வேறு வழியில்லாம் குமாரும் ஒத்துக் கொண்டார்… சுமிக்கு மகிழ்ச்சி தாளவில்லை.. அவனை கஷ்டப்படுத்துகிறோமோ என்று கவலை இருந்தாலும் தனக்காக தன் அண்ணாவும் உடன் இருக்கிறான் என்ற தைரியமே அவளை கவலையில்லாமல் இருக்க வைத்தது…
விடிய விடிய பேசுபவர்கள் கணவன் மனைவி என்ற எல்லைக்குள் செல்லவில்லை..பெரியவர்களின் வார்த்தைக்கு மதிப்பளித்து விலகியே இருந்தார்கள்.. மீண்டும் காதலிப்பவர்கள் போல் அவர்களின் நாட்கள் வண்ணமயமானது…
இன்னும் திருமணத்திற்கு ஒரு வாரமே என்ற நிலையில் அன்றிரவும் திரு சுவர் ஏறி வினுவின் வீட்டு காம்பவுண்டிற்குள் குதிக்க, அதற்காகவே காத்திருந்தாற் போல் அந்த பக்கம் முறைத்துக் கொண்டு நின்றிருந்தான் விக்கி..
அவனை அங்கே எதிர்பாராத திரு திகைக்க, அகில் ஏற்கனவே விக்கியிடம் மாட்டி முழித்துக் கொண்டிருந்தான்…
“குட்டி மச்சான்.. இங்க என்னடா பண்ற???” தன் திகைப்பை மறைத்துக் கொண்டு திரு கேட்க,
“நீங்க இங்க என்னப் பண்றீங்க மச்சான்???” இரு கைகளையும் மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு விக்கி ஒற்றை புருவத்தை உயர்த்தினான்…
திரு திரும்பி அகிலை பார்க்க, அவனும் பரிதாபமாக விழித்துக் கொண்டிருந்தான்…
“நாங்க சேர்ந்து பிஸ்னெஸ் தொடங்க போறோம்.. அதுக்கான டிஸ்கஷனுக்காக வந்தோம்…இல்லடா மச்சான்???” திரு ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டவாறு அகிலை காண, அகிலும் அதை பற்றிக் கொண்டான்..
“ஆமா ஆமா.. அதுக்காக தான் வந்தோம்…”
“எப்படி எப்படி நடுராத்திரி நீங்க பிஸ்னெஸ் பத்தி டிஸ்கஷன் பண்ணுவீங்க.. அதை நான் நம்பணுமா??? என்னை யாருன்னு நினைச்சிங்க??? நான் விக்கி.. எனக்கு எல்லாம் தெரியும்.. ரெண்டு பேரும் திருட்டுத்தனமா உங்க வொய்ப்ஃபை பார்க்க தானே போறிங்க????” விக்கி சரியாக கண்டுபிடித்து கேட்டுவிட, அதற்க மேல் மறைக்க தோன்றாமல்,
“ஆமாம் டா குட்டி மச்சான் அதுக்கென்ன இப்போ???” திரு தான் அகிலின் தோளில் கைப் போட்டவாறே கேட்டான்…
“என்னவா???” தன்னை பார்த்து பயப்படாமல் நிற்பவர்களை உறுத்து விழித்தவன், “நான் பொண்ணு வீட்டுக்காரன்.. இதெல்லாம் தப்பு.. அப்பா கிட்ட சொல்லிக் கொடுப்பேன்..” சிறு பையன் போல் விக்கி புகார் வாசிக்க, திருவும் அகிலும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்…
“என்னடா விக்கி.. நான் உன் அண்ணா டா…. இதுக்கெல்லாம் எதுக்கு அப்பா?? நீ சொல்லிடாத தங்கம்…” அகில் கெஞ்ச,
“இதுக்கு தான் சொல்றது இவனுக்கும் ஒரு காதல் கதையை எழுதியிருந்தா… பையன் அந்த பொண்ணு பின்னாடி சுத்திட்டு இருந்திருப்பான்.. பாசமான தம்பி கேரக்டர் கொடுத்து எப்போவும் அவன் அக்கா பின்னாடி சுத்த விட்டுட்டாங்க…” திரு எரிச்சலாக முனகினான்..
திரு அவ்வாறு கூறியதும் ஏனென்று தெரியாமல் விக்கிக்கு அந்த பச்சை சுடிதார் பெண்ணின் முகம் நினைவுக்கு வர, முயன்று அதனை விரட்டியடித்தான்..
“மச்சான் பேச்சை டைவர்ட் பண்ணாதிங்க.. இப்போ ரெண்டு பேரும் அவங்க அவங்க ரூம்க்கு போய் தூங்குறிங்க.. போங்க…” பெரிய மனிதன் போல் விக்கி கூற, மீண்டும் ஒருமுறை திருவின் கண்களும் அகிலின் கண்களும் சந்தித்துக் கொண்டது..
“ஓ.. அப்போ நாங்க எங்க ரூம்க்கு போகணும்.. இல்லாட்டி நீ உங்க அப்பாகிட்ட சொல்லிக் கொடுத்திருவ…” திரு கேலியாக கேட்க,
விக்கியும், “ஆமா” என்றான்…
“அப்போ சரி.. எங்க கல்யாண நாள் அன்னைக்கு உனக்காக ஒரு சர்ப்ரைஸ் வச்சிருந்தோம்.. உனக்கு தான் அது வேண்டாமே… அதை கேன்சல் பண்ணிடுறோம்…” போலியாக திரு அலுத்துக் கொண்டு, “டேய் அகி.. உன் தம்பிக்கு வேணாமாம் டா…” அகிலையும் அவன் கூட்டு சேர்க்க,
அவன் என்னப் பேசுகிறான் என்று புரியாமல் விக்கி குழப்பமாக ஏறிட்டான்..
“எ..ன்..ன சர்ப்ரைஸ் மச்சான்???” விக்கி திருவின் முகத்தை பார்க்க, திரு திரும்பி அவன் அறியாமல் அகிலிடம் கண் சிமிட்டினான்..
“அது ஒரு பெரிய சர்ப்ரைஸ்.. நீ தேடுற ஒரு விஷயத்தை நாங்க கண்டுப்பிடிச்சிட்டோம்… அப்படி தானே அகி???”
“ஆமா ஆமா… உனக்கு ரொம்ப பிடிச்சது…” அகிலும் அவனோடு ஒத்து ஊதினான்..
“நான் தேடுறதா?? என்ன தேடுறேன்???” மனதுக்குள் தன்னை தானே கேட்டுக் கொண்டவன் இருவரையும் பார்க்க, அங்கு அவர்கள் இல்லை.. அவன் யோசிக்கும் தருணத்தை பயன்படுத்தி தப்பித்து ஓடிவிட்டனர்…
“எங்க போய்ட்டாங்க… சே என்னை ஏமாத்தியிருக்காங்க.. ஹிட்லர்ர்ர்ர்ர்….” திருவை நினைத்து பல்லை கடித்தவன் தன் வீட்டை நோக்கி சென்றான்…
அடுத்த நாட்களும் அதுவே தொடர, விக்கி அவர்களை தந்தையிடம் போட்டுக் கொடுத்துவிடுவதாக கூறி மிரட்டனான். ஆனால் அதற்கெல்லாம் அசராதவர்கள் சர்ப்ரைஸ் என்று கூறி அவன் வாயை அடைத்தனர்…
அதையும் மீறி அவன் தன் தந்தையின் அருகில் நின்றுக் கொண்டு, அவர்களை ஓரக் கண்ணால் பார்த்தவாறே “அப்பா” என்க, திருவும் அகிலும் விக்கித்துப் போனார்கள்…
எப்படியும் திருவும் அகிலும் அவனை கோபித்துக் கொள்ள போவதில்லை.. இருந்தாலும் அவர்களோடு விளையாடுவது அவனுக்கு பிடித்திருந்தது… அதனால் தந்தையை அழைத்து கூறப்போவது போல் பாவனை காட்டினான்…
ஆனால் விக்கியின் தந்தையோ, “என்னடா விக்கி.. அடிக்கடி அப்பா அப்பாங்கிற ஆனா எதுவும் சொல்ல மாட்டேங்கிற” என்க, அவன் உண்மையை கூறாமல் வேறெதுவோ கூறி மழுப்பினான்..
அவனை அழுத்தமாக பார்த்தவர், “இன்னையில இருந்து உன் அண்ணாவையும் மச்சானையும் காம்பவுண்ட் ஏறி குதிக்காம கேட்டை திறந்துட்டு போக சொல்லு.. கூர்க்கா கிட்ட நான் சொல்லிட்டேன்…” இதை பத்தி தானே சொல்ல வந்தாய் என்பது போல் ஒரு பார்வை பார்த்தவர், அசால்ட்டாக கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட, விக்கி அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான் என்றால்,. அகிலும் திருவும் உற்சாகத்தில் துள்ளி குதித்தார்கள்… விக்கியின் தோல்வியை பகிங்கரமாக அவர்கள் கிண்டலடிக்க , விக்கி வெளியே முறைப்பது போல் பார்த்தாலும் மனதுக்குள் மகிழவே செய்தான்..
தனியாக தந்தையை பார்த்து “எப்படி தெரியும்” என ஆர்வம் தாங்காமல் விக்கி கேட்க,
“வீட்டை சுத்தி அத்தனை கேமரா இருக்கு அப்படிங்கறதை நீங்க எல்லாரும் மறந்துட்டிங்க… அவங்க சுவர் ஏறி குதிக்கிறதை முன்னாடியே கேமராவுல பார்த்துட்டு வாட்ச் மேன் சொல்லிட்டான்.. நான் தான் கண்டுக்காதிங்கன்னு சொல்லியிருந்தேன்…” என்றவர் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்த விக்கியின் கன்னத்தில் தட்டிவிட்டு அங்கிருந்து புன்னகையோடு அகன்றார்…
இது நிஜமாகவே தன் தந்தை தானா என விக்கியே ஆச்சரியப்பட்டு போனான்.. அந்த அளவிற்கு மாறிவிட்டார்… ஆனால் அந்த மாற்றமும் அவர்களுக்கு பிடித்திருந்தது…
நாட்கள் ரெக்கை கட்டிக் கொண்டு பறக்க, விடிந்தால் திருமணம் என்ற நிலையில் அனைவரும் மண்டபத்தில் தங்கியிருந்தனர்… வினு வண்ண வண்ண கனவுகளோடு இருக்க, அதற்கு நேர் மாறாக சுமி பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள்…
திருமணத்திற்கு முதல் நாள் ரிசெப்ஷன் என்பதால் வினுவையும், சுமியையும் தயார் செய்துக் கொண்டிருந்தனர் அழகு நிலைய பெண்கள்…
சுமியின் முகத்தை அழகுபடுத்திக் கொண்டிருந்த பெண் அடிக்கடி அவளை அசையாதிங்க மேம்.. கொஞ்சம் அப்படி திரும்புங்க மேம் என்று குரல் கொடுத்துக் கொண்டே இருக்க, வினு திரும்பி தன் அண்ணியை பார்த்தாள்…
முகம் முழுதும் பயம் அப்பட்டமாக தெரிய, வியர்த்து வழிந்துக் கொண்டிருந்தது அவளுக்கு.. அழகு நிலைய பெண், வியர்வை வழியும் முகத்துக்கு மேக் அப் போட முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள்
சுமியை பார்த்தவள் அங்கிருந்த பெண்களை வெளியே அனுப்பிவிட்டு அவளின் தோளில் கை வைக்க., அதற்காகவே காத்திருந்தாற் போல்
“வினு எனக்கு பயமா இருக்கு.. இந்த கல்யாணம் வேண்டாம்.. ஸ்டாப் பண்ண சொல்லிடு ப்ளீஸ்… என்னால முடியாது” என்று அழ துவங்கிவிட்டாள்…
விழிகள் தொடரும்……