vizhi29

vizhi29

மின்னல் விழியே 29

சுமி கூறியதை கேட்டதும் வினு திகைத்துவிட்டாள்…. என்ன நேர்ந்தது என எண்ணியவள் முதலில் அவளை சமாதனம் செய்வோம் என,

“அண்ணி ரிலாக்ஸ்… அழாதிங்க.. என்னாச்சு… எதுக்காக இந்த பயம்??.. நாங்க எல்லாரும் உங்க கூட தான் இருக்கோம்” ஆறுதலாக அவளை அணைத்துக் கொண்டவள், குலுங்கி அழும் அவளை முதுகில் தட்டிக் கொடுத்து சமாதானம் செய்தாள்..

“வினு… எனக்கு பயமா இருக்கு.. எல்லாரும் தப்பா பேசுவாங்க.. கல்யாணத்துக்கு முன்னாடியே குழந்தை பெத்தவ” என்றவள் அதற்கு மேல் சொல்ல முடியாமல் மேலும் குலுங்கி அழ, வினுவிற்கு அவளது உணர்வுகள் புரிந்தது…

அவளும் இதை யோசித்தாள் தான்.. ஆனால் இப்படியல்ல… ஊரரிய திருமணம் செய்து சுமிக்கும் ஹனிக்குமான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றே நினைத்தாள்.. ஆனால் அது இப்படி எதிராக சுமியை நினைக்க வைக்கும் என்று எண்ணாதவள்,

“அண்ணி ஒன்னுமில்லை.. அழுகையை ஸ்டாப் பண்ணுங்க..” சற்று அதட்டலாக கூறியவள், அவள் கைகளை பற்றிக் கொண்டு… “இங்க பாருங்க அண்ணி.. உங்களுக்கு கல்யாணம் நடந்து அஞ்சு வருஷமாச்சு.. அதுக்கு சாட்சியா ஹனியும் இருக்கா… அது உங்களுக்கும் அகில் அண்ணாவுக்கும் தெரியும்.. அது போதும்.. வேற யாரும் தப்பா நினைச்சாலும் அதை பத்தி நீங்க கவலை பட வேணாம்… அதோட.. நாங்க எல்லாருமே உங்க கூட இருக்கோம்… அப்படி உங்களை தப்பா பேச விட்டுடுவோமா???” சுமிக்கு புரிவது போல் பொறுமையாக எடுத்துக் கூறினாள்…

“நீங்க அகிலோட மனைவின்னு எல்லாருக்கும் தெரியணும் அண்ணி.. அதை தான் உங்கப்பாவும் ஆசைப்படுவாங்க… உங்களை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க.. எல்லாம் அப்பாவும் அம்மாவும் பார்த்துக்குவாங்க…” என்றவள் மேலும் தைரியமளிக்கும் விதத்தில் பேச, சுமி கொஞ்சம் தெளிந்தாள்…

மண்டபத்துக்கு கிளம்பும் முன் தன் தலை மேல் கை வைத்து கண் கலங்கிய திருவின் முகம் :ஞாபகம் வந்தது… அப்பா பார்த்த ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார் என்று உரைத்து அவரின் புகைப்படத்தின் முன் விழுந்து வணங்க செய்துவிட்டே அவளை அழைத்து வந்தான்… தன் அண்ணனை நினைத்துக் கொண்டவள் தன்னை தைரியப்படுத்திக் கொண்டாள்…

“சந்தோஷமா இருங்க அண்ணி.. உங்களுக்காக வெளியே வெய்ட் பண்ற அகில் அண்ணாவை மட்டும் நினைச்சிக்கோங்க…” அவள் தெளிந்துவிட்டாள் என்றுணர்ந்தவள் வெளியே நின்றுக் கொண்டிருந்த அழகு நிலைய பெண்களை வர சொல்ல.. இருவரும் தயாராகினர்…

அனுவும், வினுவின் அத்தை பொன்னியும் வந்து அவர்களை அழைத்து செல்ல, அவர்களுக்காகவே காத்திருந்தனர் அவர்களது ஆருயிர் காதலர்கள்..

மேடையில் ஷெர்வானி உடையனிந்து இளவரசர்களை போல் நின்றிருந்தவர்களின் பார்வை லெஹங்கா அணிந்து இளவரசிகள் போல் நடந்து வந்துக் கொண்டிருந்த தங்கள் மனைவிகளிடம் இருந்தது….

இருவரும் சென்று தங்கள் துணைகளோடு நின்றுக் கொண்டனர்.. சுமியின் முகம் கலங்கி இருப்பதை பார்த்த அகில் அவளின் கையை இறுக்கமாக பற்றிக் கொண்டான்.. அதில் சுமியின் குழப்பமும் அவளை விட்டு அகல.. புன்னகை முகமாக நின்றிருந்தாள்…

திருவின் அருகில் நின்றிருந்தாலும் அடிக்கடி திரும்பி சுமியை கவனித்துக் கொண்டிருந்தாள் வினு.. அவளின் செய்கையை புரியாமல் பார்த்த திரு, அவள் காதில் மெதுவாக,

“புஜ்ஜி மா உன் அரசு இங்க இருக்கேன்.. அது என் தங்கச்சி” என்க, வினுவிற்கு சிரிப்பு வந்தது.. அங்கேயே அவன் முதுகில் இரண்டு அடியை போட அவளுக்கு ஆசை தான் ஆனால் இருக்கும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அமைதியாகிவிட்டாள்…

தொழில் முறை நண்பர்கள் நிறைய பேர் வந்துக் கொண்டே இருக்க, குமார் தன் பேத்தி ஹனியை கையில் வைத்துக் கொண்டு அனைவருக்கும் மருமகனையும், மருமகளையும் அறிமுகப்டுத்தி வைத்தார்.. நிகிலும் மேடையின் அருகேயே நின்றுக் கொண்டான்..

அகிலின் திடிர் கல்யாணத்தை பற்றி ஏற்கனவே அரசல் புரசலாக நிறைய பேர் அறிந்திருக்க, அனைவரிடத்தும் இருவருக்கும் ஐந்து வருடங்களுக்கு முன்பே அமெரிக்காவில் வைத்து திருமணம் முடிந்துவிட்டதாகவும், கருத்து வேறுபாடினால் பிரிந்திருந்தவர்கள் இப்போது இணைந்திருக்கிறார்கள் என உண்மையும் பொய்யுமாக கலந்து கூற, அனைவரும் அவர்களின் காதல் கதையை பற்றி பேசிக் கொண்டனர்…

குமார் கூறியதை மறுத்து வேறுவிதமாக பேச யாருக்கும் துணிவில்லை… அந்த அளவிற்கு குமாரின் செல்வாக்கு இருந்தது… சுதாவின் தம்பி இசக்கிமுத்தவும் அவரது மனைவி பொன்னியும் சுமியை தங்கள் பெண் போல் உரிமையாக பேசவும், அறிமுகப்படுத்தவும் செய்ய, அந்த இடத்தில் சுமியும் திருவும் தங்களுக்கு யாருமில்லை என்பதை மறந்துவிட்டனர்…

வரவேற்பு நல்லபடியாக முடிய திருமண நாளும் அழகாக விடிந்தது.. திருவுடன் வேலை செய்பவர்களும், நண்பர்களும் என நிறைய பேர் வந்திருக்க திருமண மண்டபமே அவர்களின் கிண்டலாலும் கேலிகளாலும் நிறைந்தது..

சுமியும் நேற்று எந்த வித அசம்பாவிதங்களும் நடவாததினால் தெளிந்திருந்தாள்.. அகிலின் முகத்தில் இருந்த புன்னகையை மட்டும் மனதில் நிறுத்திக் கொண்டவள் அவன் கையால் தாலி கட்டிக் கொள்ள போகும் தருணத்திற்காக காத்திருந்தாள்…

வினுவும் திருவின் ஞாபகங்களோடு தயாராக, முகூர்த்த நேரத்தில் இருவரும் மணமேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்..

இருவரும் ஒன்று போல் இளம் சிவப்பு நிறத்தில் பட்டு உடுத்தியிருந்தனர்.. ஏற்கனவே இருவரும் அழகு என்றாலும் முகத்தில் கல்யாண கலையும் சேர்ந்துக் கொள்ள இருவருமே தேவதைகள் போல் ஜொலித்தனர்.. அவர்களை விட்டு கண்களை திருப்ப முடியாமல் பார்த்திருந்தனர் திருவும், அகிலும்…

முதலில் சுமியை அகிலின் அருகில் அமர வைத்தவர்கள், அவர்களின் திருமணத்தை நடத்தினர். அனைவரின் ஆசிகளோடும் அட்சதைகளோடும் அகில் சுமியின் கழுத்தில் தாலி கட்ட, வினு நாத்தனார் முடிச்சை போட்டாள்… வாழ்வில் இப்படி ஒரு தருணம் தனக்கு கிடைக்கும் என்று கனவில் கூட நினைத்திராத சுமி கலங்கிய கண்களோடு அகிலை பார்த்திருந்தாள்.. அவனும் எல்லையில்லா காதலோடு அவனை பார்த்திருந்தான்…

அடுத்ததாக வினுவும் திருவும் அமர, வினுவின் சங்கு கழுத்தில் மாங்கலயத்தை அணிந்து தன்னை முழுதாக அவளிடம் ஒப்படைத்தான் திருநாவுக்கரசு.. நாத்தனார் முடிச்சு போட வந்த சுமியையும் தடுத்துவிட்டான்.. தாலி கட்டும் போது வினு அவன் முகத்தை தான் இமைக்காமல் பார்த்திருந்தாள்… அவளின் பார்வை வீச்சில் திருவும் பார்க்க, அவன் மனதில் ஒரே ஒரு கேள்வி தான்.. இவள் மட்டும் தன் வாழ்வில் வராமல் போயிருந்தால்????… இந்த சந்தோஷம் எல்லாம் அவளால் தான் என் எண்ணியவன் தாலி கட்டியதும் அவள் கன்னத்தில் அழுத்தமாக தன் இதழை பதித்திருந்தான்… வினு வெட்கத்தில் தலையை குனிந்துக் கொள்ள, சுற்றியிருந்த நண்பர்கள் பட்டாளம் ஓ வென கத்தி ஆர்ப்பாட்டம் செய்தது… அதன்பின் சம்பிரதாயங்கள் நடைபெற, திருமணம் இனிமையாக முடிந்தது…

ஹரியும் தன் மனைவி மதுவோடும் குழந்தையோடும் வந்திருந்தான்.. திருவின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை காணும் போது அவனுக்கும் அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.. தன் நண்பன் இப்படி சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று தானே அவன் வேண்டினான்… அது கைக்கூடியதில் அவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி..

மணமக்களுக்கு பரிசளித்துவிட்டு உறவினர்கள் செல்ல, நேரம் மதியத்தை நெருங்கும் வேளையில் கூட்டம் வெகுவாக குறைந்திருந்தது… நெருங்கிய உறவினர்கள் மட்டும் ஆங்காங்கே அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, ஹனியோடும் ரித்தினோடும் விளையாடிக் கொண்டிருந்த விக்கியை அருகில் அழைத்தான் திரு..

“என்ன மச்சான்??? தன்னை நோக்கி வந்தவனிடம் விரைந்தவன், வினு சுமியோடு பேசிக்கொண்டிருப்பதை உறுதி செய்துக் கொண்டு,

“குட்டி மச்சான் நான் சொன்ன சப்ரைஸ் வருது” என்றவன் திரும்பி மண்டபத்தின் வாயிலை சுட்டிக் காண்பிக்க, விக்கியும் தன்னை ஏதோ கேலி செய்ய போகிறான் என்று நினைத்துக் கொண்டு திரும்பி பார்த்தான்.

அங்கு பச்சை நிற பட்டுடுத்தி எளிமையான நகைகள் அணிந்து தேவதையாக வந்துக் கொண்டிருந்தாள் விக்கியை பெங்களூரில் வைத்து அடித்த பெண்…

அவளை அங்கு எதிர்பாராமல் விக்கி ஸ்டன்னாகி நிற்க, மனமோ அவளை ரசித்தது… தினமும் பல பெண்களை கடக்கிறான் ஆனால் அவர்கள் யாரின் முகமும் அவன் மனதில் பதிந்ததில்லை.. ஆனால் தன்னை அடித்த ஒரு பெண்ணின் முகம் மட்டும் தன் மனதில் அழுந்தமாக பதிந்திருப்பதை எண்ணி அவனே நிறைய நாட்கள் வியந்திருக்கிறான்… இப்போதும் அவன் ஆச்சரியத்தில் நின்றுக் கொண்டிருக்க, திரு தான் அவன் தோளை தட்டினான்..

“குட்டி மச்சான்.. எப்படி மை சர்ப்ரைஸ்… நீ தேடின உன் க்ரீன் சுடியை கண்டுபிடிச்சிட்டேன் பார்த்தியா???”

திரு கூறியதும் தன் பார்வையை அவளிடம் இருந்து விலக்கியவன், “மச்சான் அப்படியெல்லாம் எதுவுமில்லை.. நீங்க தப்பா…” விக்கி முடிப்பதற்குள்ளாகவே திரு அவனை நம்பாத பார்வை பார்க்க, அகிலும் அவர்களோடு வந்து சேர்ந்துக் கொண்டான்…

“வாடா அகி.. உன் தம்பி சொல்றதை கேட்டியா??? நாம தப்பா புரிஞ்சிக்கிட்டோமாம்… சார் தேடவே இல்லையாம்…”

விக்கிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை… பெங்களூரில் இருந்த சமயம் அவன் கண்கள் அனிச்சையாக எதாவது க்ரீன் சுடி அவனை கடந்து சென்றால் திரும்பி பார்க்கும் தான் ஆனால் அது காதல் என்றெல்லாம் அவன் நினைக்கவில்லை..

“என்னடா அரசு சொல்ற??? இவனுக்காக நாம கஷ்டப்பட்டு வர வச்சோமே…” அகில் உச்சுக் கொட்ட,

திருவோ, ”உன் தம்பி பொய் சொல்றான் டா.. இந்த பொண்னோட ஞாபகமே இல்லாட்டி எதுக்காக அவன் ரூம் முழுசும் பச்சை கலர்ல மாத்தி வச்சிருக்கான்.. இப்போ போட்டுருக்கிற சட்டையை பாரு அது கூட பச்சை தான்…” திரு விக்கியை கிண்டலடிக்க, விக்கி எப்படி தப்பிப்பது என தெரியாமல் நின்றுக் கொண்டிருந்தான்…

திரு சொல்வதும் சரி தான்.. அவனையும் அறியாமல் அவன் வாங்கும் பொருட்கள் இப்போதெல்லாம் பச்சை நிறத்தில் தான் இருக்கிறது.. அவன் போட்டிருக்கும் சட்டை கூட பச்சை நிறத்தில் இருக்கவும் தான் உடனே வாங்கிவிட்டான்..

இருவருமாக விக்கியை கலாய்த்துக் கொண்டிருக்க.. அந்த க்ரீன் சுடி அவர்களை நெருங்கிவிட்டது.. அதுவும் அவள் விக்கியை பார்த்தவாறே வர, விக்கி பதட்டமாகிவிட்டான்..

“மச்சான் அவ வர்ற..” எதாவது செய்யுங்கள் என்பது போல் விக்கி பயத்தில் பார்க்க, அவனது மச்சானோ,

“ஓ.. அவ வர்ற.. அதனால எங்களை கிளம்ப சொல்றியா???” திரு தானாக கூறிக் கொண்டு அகிலையும் இழுத்துக் கொண்டு அங்கிருந்து நகர, விக்கி தனியாக மாட்டிக் கொண்டு நின்றான்..

“மச்சான் மச்சான்..” அவன் அழைத்தும் அவர்கள் நிற்காமல் செல்ல, அதற்குள் அந்த க்ரீன் சுடி அவன் அருகே வந்துவிட்டாள்.. அவளை அருகில் பார்த்ததும் திகைப்பில் அவன் வலக்கரம் உயர்ந்து, அன்று அவள் அடித்த தன் வலது கன்னத்தை பற்றிக் கொண்டது…

அவன் செய்கையை பார்த்தவள் முதலில் கண்ணை விரித்துவிட்டு பின் வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தாள்…

அதில் விக்கி தன் கன்னத்தில் இருந்த கையை இறக்கிக் கொண்டு வெட்கமே இல்லாமல் அவள் சிரிப்பை ரசிக்க, அவள் தன்னை கட்டுப்டுத்திக் கொண்டு நின்றாள்.. அதற்குள் விக்கியின் அத்தை பொன்னி அவர்கள் அருகே வர,

“அடியே உமா.. உன்னை எப்போ வர சொன்னா எப்போ வந்து நிக்கிற?? வந்ததும் என் மருமகன் கிட்ட உன் சேட்டையை ஆரம்பிச்சிட்டியா???” பொன்னி படபட பட்டாசாக பொறிய, விக்கி அவளது பெயரை மனதில் சொல்லிப் பார்த்துக் கொண்டான்..

தன் அத்தைக்கு அவளை எப்படி தெரியும் என்றெண்ணியவன் தன் அத்தையிடம் திரும்பி,

“அத்தை.. இது…” என்று இழுக்க,

அவரோ, “இது என் தங்கச்சி பொண்ணு.. உமா… பெங்களூர்ல தங்கி படிக்குது… கல்யாணத்துக்காக நான் தான் வர சொன்னேன் ஆனா கடைசியா வந்து நிக்கிறா…” செல்லமாக தன் தங்கை பெண்ணை கடிந்துக் கொண்டார் அவர்..

ஓ அத்தையோட தங்கச்சி பொண்ணா என்று யோசித்தவன், “நான் பார்த்தது இல்லையே” என்றான் அவள் மேல் பார்வையை பதித்துக் கொண்டு..

“நீங்க எல்லாம் வர்ற சமயம் இவ வர மாட்டா மருமகனே… அதோட நீங்க ஊர்ப்பக்கம் வர்றதும் குறைஞ்சு போச்சு… அப்போல்லாம் இந்த அத்தைக்கு துணையா இவ தான் இருப்பா..” என்றவர் உமாவை பற்றி பேசிக் கொண்டே போக, விக்கியும் உமாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்… உமா கண்களால் மன்னிப்பை வேண்ட, விக்கி அவளை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தான்…

உறவினர் ஒருவர் பொன்னியை அழைக்க, அவர் அங்கே செல்ல, விக்கியும் அங்கிருந்து நகரப் போனான்…

“ஹலோ மிஸ்டர்…” அவனை எப்படி அழைப்பது என்று தெரியாமல் உமா அழைக்க, அவளை திரும்பி பார்த்தவன்,
“விக்கி… என் பெயர் விக்கி… ஹலோ கிடையாது” என்றான் சற்ற கோபமாக..

“ஹான் விக்கி.. சாரி விக்கி.. அன்னைக்கு என் மேல தான் தப்பு.. எதோ சின்ன பொண்ணு என் துப்பட்டாவை பிடிச்சி இழுத்தது தெரியாம உங்களை அடிச்சிட்டேன் சாரிங்க… வெளியே வந்த அப்புறம் தான் என் ப்ரெண்ட் நடந்ததை சொன்னா.. உங்க கிட்ட மன்னிப்பு கேட்க நான் திரும்ப வந்தேன்.. ஆனா உங்களை கானோம்…” உமா மன்னிப்பை வேண்ட,

“இப்படி தான் கொஞ்சம் கூட யோசிக்காம அடிப்பிங்களா?? அன்னைக்கு எனக்கு எவ்வளவு அசிங்கமா இருந்துச்சு தெரியுமா???” அவளிடம் வெளியே காட்டமாக கேட்டாலும் அவன் மனசாட்சி அவனை பார்த்து, ‘யாரு நீ அசிங்கப்பட்ட??? இதை நான் நம்பணும் ???’ என்பது போல் காறித் துப்பியது..

அவனிடம் கோபத்தை எதிர்பாராதவள் திகைத்து கண்கள் கலங்க மீண்டும் மன்னிப்பை வேண்ட, விக்கிக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.. அவளை சீண்டுவதற்காக தான் குரலை உயர்த்தினான்.. ஆனால் அவள் கண்களில் கண்ணீரை கண்டதும் அவன் மனதுக்குள் எதுவோ பிசைந்தது..

“ஹேய்.. என்ன ?? நான் விளையாட்டுக்கு தான் சொன்னேன்.. நீ அடிச்சதை அப்போவே மறந்துட்டேன்…” என்றவன் இப்போது சிரிக்க, அவளும் புன்னகைத்தாள்…

“ஹப்பா சிரிச்சிட்டியா.. நான் பயந்துட்டேன்… உன்னை அழ வச்சேன்னு திரும்பவும் வேற யார்க்கிட்டயும் என்னால அடிவாங்க முடியாது மா… மீ பாவம்…” என்றவன் முகத்தை பாவமாக வைத்துக் காண்பிக்க, உமா நன்றாகவே சிரிக்க ஆரம்பித்தாள்..

விக்கியும் சிரிக்க, இருவரும் அடுத்து என்ன பேசுவது எனத் தெரியாமல் நின்றிருந்தனர்… அதற்குள் பொன்னியும் உமாவை அழைக்க, விக்கியிடம் இருந்து விடை பெறுவது போல் தலையசைத்தவள், அவனை திரும்பி திரும்பி பார்த்தவாறே அங்கிருந்து சென்றாள்….

அவள் ஒவ்வொரு முறை திரும்பி பார்க்கும் போதும் அவன் மனம் ரெக்கை கட்டிக் கொண்டு பறக்க, தன் மச்சானை தேடி ஓடினான் நன்றி சொல்வதற்காக…

திரு வினுவின் அருகில நின்று போட்டோகிராபர் சொல்வது போஸ் கொடுத்துக் கொண்டிருக்க, ஓடிச் சென்று திருவை தூக்கியவன் ஒரு சுற்று சுற்றிவிட்டு அவனை இறக்கிவிட்டதும் அல்லாமல் அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்ததையும் பதித்திருந்தான்…

சுற்றியிருந்த அனைவரும் திகைத்து நிற்க, வினு வாயை பிளந்துக் கொண்டு பார்த்தாள்..

“தேங்க்ஸ் தேங்க்ஸ் மச்சான்.. தேங்க்ஸ் எ லாட்… லவ் யூ மச்சான்…” சந்தோஷத்தில் துள்ளியவன் மீண்டும் அவன் கன்னத்தில் முத்தத்தை பதித்துவிட்டு சிட்டாக பறந்தான் தன் தேவதையை தேடி…

ஏன் எதற்கு என்று தெரியாமல் வினு விழிக்க, திரு தன் கன்னத்தை தடவிக் கொண்டு, விக்கியை நினைத்து சிரித்தான்.. பின் வினுவை திரும்பி பார்க்க, அவள் அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்…

“என்ன புஜ்ஜி???”

“ஏன் எப்போவும் உனக்கும் அவனுக்கும் கெமிஸ்ட்ரி நல்லா செட்டாகுது???” மெலிதாக எட்டிப் பார்த்த பொறாமையுடன் வினு கேட்க, திரு அவளை கேலியாக பார்த்தான்..

“என் புஜ்ஜி பொறாமை படுறாங்க போல இருக்கே…”

“அதெல்லாம் நான் பொறாமை படல…” கெத்தாக கூறியவள் முகத்தை திருப்பிக் கொள்ள, அவளை தன் பக்கம் இழுத்தவன்,

“அவன் கூட கெமிஸ்ட்ரி மட்டும் தான்.. ஆனா உன்கூட பையாலஜி சூவாலஜி. அனாட்டமி எல்லாம் செட்டாகும்…” அவள் காதில் அவன் முணுமுணுக்க, அவன் கூறுவது புரிந்து வெட்கத்தில் சிவந்தவள் அவன் மார்பில் தன் முகத்தை மறைத்துக் கொண்டாள்… அந்த அழகிய தருணத்தை போட்டோகிராப்பர்களும் தங்கள் கேமராக்களில் சேமித்துக் கொண்டனர்…

பல பல கற்பனைகளோடு தங்கள் அறைக்குள் நுழைந்தான் அகில்.. அங்கு சுமி கையை கட்டிக் கொண்டு நிற்க, அகிலுக்கு சொல்லாமலே தங்களின் முதல் இரவு ஞாபகம் வந்தது…

அன்று போல் இன்றும் வெளியே விரட்ட போகிறாளோ??? அதற்கு வாய்ப்பில்லையே… மனதுக்குள் நினைத்தவன், அவளை பார்க்க,

“கெட் அவுட்” என்றாள் அன்று போல்.. அதில் ஒரு நொடி திகைத்தவன், அவள் கண்களில் சிரிப்பை கண்டதும், விளையாடுகிறாள் என்று புரிந்துக் கொண்டவனாக, திரும்பி கதவை நோக்கி நடக்க தொடங்கினான்…

அவன் வேறு எதாவது கேட்பான் என் நினைத்தவள், அவன் அவ்வாறு செல்லவும் ஓடிச் சென்று அவன் பின்னால் இருந்து அணைத்துக் கொண்டாள்…

இதை தானே அவன் எதிர்ப்பார்த்தான்… திரும்பி அவளை அணைத்துக் கொண்டவன், “யாரோ கெட் அவுட் சொன்ன மாதிரி இருந்துச்சு… யாரது??” என்றான் குறும்பாக..

“கெட் அவுட் சொன்னா போய்டுவியா??” மிருதுவான குரலில் கூறியவள் அவன் முகத்தை ஏறிட, அகில் அவளை கனிவாக பார்த்தான்…

“எங்க போறதா இருந்தாலும் இனி உன்கூட தான்…” அவளையும் அழைத்துக் கொண்டு கட்டிலில் சென்று அமர்ந்தவன், அவள் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான்..

அவன் தலையை கோதியவள் மௌனமாக இருக்க, அகில் தான் அவள் மடியில் படுத்துக் கொண்டு அவள் முகத்தை ஆசை தீர பார்த்துக் கொண்டிருந்தான்..

“நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.. இந்த நிமிஷத்தை நான் நிறைய நாள் கற்பனையில நினைச்சி பார்த்துக்குவேன்.. ஆனா நிஜத்துல நடக்க வாய்ப்பே இல்லைன்னு மனசு தவிக்கும்.. ஆனா இந்த நொடி நான் உன் கூட இருக்கேன்.. அதுவும் நான் ஆசப்பட்ட மாதிரி உன்னோட மடியில படுத்திருக்கேன்…” தன் ஏக்கங்களை அவன் கொட்டித் தீர்க்க, சுமி மென்னகையோடு பார்த்திருந்தாள்…

“நைட் ஃபுல்லா நீ பழசையே பேசிட்டு இருக்க போறியா அகி???” அவனது பேச்சில் இடையிட்டவாறு அவள் கேட்க, அகில் அவளை ஆச்சரியமாக பார்த்தான்..

அவன் கடந்த காலத்தை பற்றி வருந்துவதை தடுக்க தான் அவள் என்னவோ அவ்வாறு கேட்டாள் ஆனால் அகில் அவளை ரசனையாக பார்க்க, சுமி மானசீகமாக அடித்துக் கொண்டாள்..

“ஹேய் அகி.. நீ நினைக்கிற மாதிரி இல்லை.. நீ ஃபீல் பண்ணக் கூடாதுன்னு தான் சொன்னேன்….” சுமி அவசரமாக தன் அவனுக்கு விளக்க, அவனுக்கு சிரிப்பு வந்தது..

“நான் என்ன நினைச்சேன்???” ஒற்றை புருவத்தை ஏற்றி அவன் கேட்க, சுமி பே என்று விழித்தாள்..

அவன் முகத்தில் குறும்பை கண்டவள் “அகி…” என்று சிணுங்க, அவன் பார்வை இப்போது ரசனையில் இருந்து மாறி அவளை கண்களாலே சிறை பிடித்தது..

“சரி நான் தப்பா நினைச்சிகலை ஆனா எனக்கு இந்த நைட்டை பேசியே வேஸ்ட பண்ண இஷ்டம் இல்லை…” என்றவன் அவளை அணைக்க, அவள் வெட்கத்துடன் அவனிடம் சரணடைந்தாள்…

ஐந்து வருடப் பிரிவுக்கும் சேர்த்து அவன் அவளுள் மூழ்க ஆரம்பிக்க, அங்கே இனிதாக ஒரு அத்தியாயம் துவங்கப்பட்டது…

திருவின் அறையில் அங்கும் இங்குமாக நடந்துக் கொண்டிருந்தாள் வினு.. முகம் முழுதும் யோசனை ரேகைகள் ஓடிக் கொண்டிருக்க, அவளை கட்டிலில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் திரு..

“என்ன புஜ்ஜி பண்ற??” இதோடு மூன்றாவது முறையாக கேட்கிறான் ஆனால் அவளிடம் பதில் இல்லை.. தீவிரமாக எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள்…

இது சரிப்பட்டு வராது என்று எண்ணியவன் பெட்ஷீட்டை எடுத்துக் கொண்டு கிளம்ப, வினு அவனை தடுத்தாள்..

“எங்கடா போற???” அவன் கையில் இருந்ததை பறித்தவள் அதன் இடத்தில் வைத்தாள்…

“நீ ஏதோ யோசிச்சிட்டு இருக்க… அதான் உன்னை தொந்தரவு பண்ண வேணாம்னு என் சாமியார் நண்பனை தேடிப் போக போறேன்..” திரு உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு கூற, வினு தோளில் ஒரு அடியை வைத்தாள்….

“லூசு லூசு.. ரொம்ப நாள் கழிச்சி இப்போ தான் அவங்க சேர்ந்திருக்காங்க… அவங்களை தொந்தரவு பண்ணப் போறியா???” கோபமாக கேட்டவள் இடுப்பில் கை வைத்து முறைக்க, அவனும் அவளைப் போலவே இடுப்பில் கை வைத்து முறைத்தான்..

“நாம மட்டும் அப்போ டைய்லி சேர்ந்து இருந்தோமா??” தன் நிலையில் அவன் நிற்க,

“அது இல்லடா அரசு.. இந்த விக்கி சரியே இல்லை…. இன்னைக்கு முழுசும் அத்தையோட தங்கச்சி பொண்ணு உமா பின்னாடியே சுத்திட்டு இருந்தான்.. அதான் என்னவா இருக்கும்னு யோசிக்கிறேன்…” மண்டபத்தில் வைத்தே வினு கவனித்துவிட்டாள் ஆனால் விக்கியிடம் கேட்க முடியவில்லை… அதனால் இப்போது யோசித்துக் கொண்டிருந்தாள்..

“அது வேற யாரும் இல்ல.. அவனை அடிச்ச க்ரீன் சுடி தான்.. நானும் அகியும் தான் அவளை கண்டுபிடிச்சோம்..” திரு பெருமையாக கூற, வினு அவனை வியப்பாக பார்த்தாள்..

“அவ தான் என் தம்பியை அடிச்சதா?? எங்க அவ??? எவ்வளவு தைரியம் அவளுக்கு.. இரு இன்னைக்கு ரெண்டுல ஒன்னு பார்த்துடுறேன்..” வினு சண்டைக்கு கிளம்ப, திரு தான் அவளை பற்றி தடுத்தான்..

“அடியே எதுவும் பண்ணிடாத டி.. உன் தம்பி அந்த பொண்ணை லவ் பண்றான்..” திரு அவசரமாக உரைக்க, வினு அதிர்ச்சியாக அவனை பார்த்தாள்..

“என்னடா சொல்ற?? லவ்வா?? விக்கியா???” நிஜமாகவே அவளால் நம்ப முடியவில்லை… எப்போதும் அவனை சிறுவனாகவே நினைப்பதால் அவன் காதலிக்கிறான் என்று தெரிந்ததும் அதிர்ந்துவிட்டாள்…

“அதுக்கு ஏன் இப்படி ஷாக்காகுற?? விக்கி தான்.. லவ் தான்… அவனும் பெரிய மனுஷன் தான் மா.. அவனுக்கும் ஆசைகள் இருக்கும்..”

“ஆனா என்கிட்ட சொல்லவே இல்லை.. இரு நான் இப்போவே அவன்கிட்ட கேட்டுட்டு வரேன்..” மீண்டும் புயலாக அவள் கிளம்ப, திரு அவளை விடாமல் தடுத்தான்..

“புஜ்ஜி மா.. அது லவ் தானான்னு அவனுக்கே என்னும் சரியா தெரியலை.. அவன் தெரிஞ்சிக்கிட்டதும் முதல்ல உன்கிட்ட தான் சொல்லுவான்.. இப்போ கொஞ்சம் சைலன்டா இரு…” திரு அவளை சமாதனம் செய்ய, அவள் கலங்கிவிட்டாள்..

தன் தம்பியை கவனிக்கவில்லையோ என்று அவள் தன்னையே மனதுக்குள் திட்டிக் கொண்டிருக்க, திரு அவள் இன்னும் அதையே யோசித்துக் கொண்டிருப்பதை பார்த்து,

“புஜ்ஜி அவன் இன்னும் சின்ன பையன் இல்ல டா,…. நீ அவனை பத்தி கவலைப்படுறதை நிறுத்து.. இவ்வளவு நாள் உன் பின்னாடியே சுத்திட்டு இருந்தான்.. இனி அவனோட லைஃப்பை அவன் பார்க்கணும்.. அவனோட கனவுகளை நனவாக்க அவனை சுதந்திரமா விடணும்.. உன்னோட பாசம் அவனை கட்டிப் போடக் கூடாது…” திரு தெளிவாக கூற, வினுவுக்கும் அவன் கூறுவது சரியென்று தோன்றியது..

“நீ சொல்றது சரி தான் அரசு.. சரி அந்த க்ரீன் சுடியை எப்படி கண்டுபிடிச்சிங்க??”,

“அதுவா.. உன் அத்தைகிட்ட உமாவோட போட்டோ இருந்திருக்கு.. நம்ம ஹனி அதை பார்த்ததும் எடுத்துட்டு வந்து என்கிட்ட.. பக்கி மாமாவ அடிச்ச அக்கான்னு காண்பிச்சா.. அவ்வளவு தான் நான் உங்க அத்தைகிட்ட பேசி விஷயத்தை வாங்கிட்டேன்.. அப்புறம் இன்னொரு விஷயம் புஜ்ஜி மா.. உன் அத்தைக்கு உமாவை விக்கிக்கு கல்யாணம் பண்ணி வைக்க ரொம்ப ஆசை ஆனா உன் அப்பா என்ன சொல்வாரோன்னு பயம்.. அதனால அமைதியா இருக்காங்க..” திரு அனைத்தையும் அவளிடம் கூற, வினு கேட்டுக் கொண்டாள்..

“விக்கிக்கு மட்டும் அவளை பிடிக்கட்டும் டா… நான் ப்ளான் போட்டு உமாவை தூக்கிடுறேன்..” வினு சிறந்த அக்காவாக கூற, திரு தலையில் அடித்துக் கொண்டான்..

முதலிரவில் வைத்து பேச வேண்டிய பேச்சா இதெல்லாம் என்றெண்ணியவன், “புஜ்ஜி.. இன்னைக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட் டா” என்றான் பாவமாக..

அவன் பாவனையில் அவளுக்கு சிரிப்பு வர, “ப்ச்.. தினமும் தானே டா நைட் வருது.. இப்போ இதை விட.. விக்கி மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்கிறது தான் முக்கியம்… அகில் அண்ணா வாழ்க்கையை சரி பண்ண மாதிரி விக்கி வாழ்க்கையையும் சரி நல்லபடியா அமைச்சி கொடுத்தா தான் எனக்கு நிம்மதியா இருக்கும்… அதுவரை…” பேச்சை நிறுத்தியவள் ஓரக் கண்ணால் திருவை காண, அவன் குழப்பமாக பார்த்தான..

“அதுவரை????”

“அதுவரை நமக்குள்ள ஒன்னும் கிடையாது…” வினு பட்டென்று உரைக்க, திரு கொந்தளித்துவிட்டான்…

“நீ சரி வர மாட்ட… இனி பேசி ப்ரோயோஜனம் இல்லை.. உன்னை..”. என்றவன் அவளை கைகளில் அள்ளிக் கொண்டு கட்டிலை நோக்கி செல்ல,

“ஹேய் விடுடா.. நான் ஒரு நல்ல அக்காவா இருக்க விரும்புறேன் டா.. விடு டா..” வாய் என்னமோ விடு விடு என்று கத்தினாலும் அவள் கரங்களை அவனை அணைத்துக் கொண்டது…

நிஜமாகவே பிடிக்கவில்லையோ என அவள் முகத்தை பார்த்தவன் அதில் தெரிந்த சிரிப்பில், “நீ நல்ல மனைவியா இரு புஜ்ஜி மா” என்றவன் நல்ல கணவனாக அவனது வேலையை துவங்கினான்…

அதன்பின் அவள் நினைவில் திரு மட்டுமே நிறைந்திருக்க, வெற்றிகரமாக தன் கணவன் உரிமையை அவளிடம் நிலை நாட்டினான் திருநாவுக்கரசு….

விழிகள் தொடரும்…..

error: Content is protected !!