vizhi30

vizhi30

ஏழு வருடங்களுக்கு பின்…

வினுவின் மொத்த குடும்பமும் ஏர்போர்டில் காத்திருந்தனர்.. அனைவரும் கும்பலாக நின்று உற்சாகமாக பேசிக் கொண்டிருக்க, அவர்களை கடந்து சென்ற அனைவரும் அவர்களை ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டே சென்றனர். இவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள் என்றால் யாரோ பெரிய வீ.ஐ.பீ வருகிறார் போலும் என்று நினைத்துக் கொண்டு அங்கிருந்தவர்களும் அவர்களின் மேல் ஒரு கண்ணை பதித்தவாறு இருந்தனர்…

“மம்மி ப்ளைட் எப்போ தான் வரும்???” பொறுமையில்லாமல் தன் அருகே அமர்ந்திருந்த வினுவிடம் கேட்டாள் ஹனி.

ஹனி இப்போது ஐந்தாம் வகுப்பில் இருக்கிறாள்.. அத்தனை பொறுப்பானவள்… தன் வீட்டு வானரங்களை எல்லாம் சமாளிப்பது இவள் தான்… அவளுக்கு துணையாக ரித்தின்.. இருவரும் ஒரே வயதுடையவர்கள் என்பதால் அக்கா தம்பி என்ற உறவை தாண்டி இருவரும் நண்பர்களாக இருக்கிறார்கள்..

ஹனி கேட்டதும் மகளை திரும்பி பார்த்தாள் வினு.. முகத்தில் சந்தோஷம் வழிய அத்தனை அழகாக இருந்தாள்..

“ப்ளைட் ரீச் ஆகிடுச்சு குட்டி… இப்போ வந்துடுவான்…” மகளிடம் உரைத்தவள் திரும்பி கணவனை பார்க்க, அவன் அகிலோடு வெகு தீவிரமாக தொழிலை பற்றிக் பேசிக் கொண்டிருந்தான்.. எப்போதும் பிஸ்னெஸ் என்று ஓடும் குமார் கூட நிகிலோடு அமர்ந்து சுவாரஸ்யமாக ரித்தினை பற்றி பேசிக் கொண்டிருக்க, கடந்த நான்கு வருடங்களாக சொந்த முயற்சியில் தொழில் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வரும் கணவன் மட்டும் அண்ணனின் அலம்பல் தான் தாங்கவில்லை..

திருவும் அகிலும் ஒன்றாக இனைந்து இப்போது பிஸினெஸ் செய்கிறார்கள். அதில் குமாருக்கு வருத்தம் தான் என்றாலும் அவர் தடுக்கவில்லை.. ஆனால் நான்கு வருடங்களில் இருவரின் அபார வளர்ச்சியையும் பார்த்து குமாரே வாய் பிளந்துவிட்டார்.. அந்த அளவிற்கு திருவும் அகிலும் திறமைசாலிகளாக இருந்தார்கள்..

நிகில் எப்போதும் போல் தன் தந்தையோடு பிஸினெஸை பார்த்துக் கொள்ள, வினுவும் அவர்களோடு இணைந்துக் கொண்டாள்.. சுமியும் அருகில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் நர்ஸாக பணி புரிகிறாள்.. டாக்டருக்கு படிக்கிறாயா என்ற அகில் கேட்ட போதும் அவள் சம்மதிக்கவில்லை.. இதில் தான் தனக்கு சந்தோஷம் என்றுவிட்டாள்…

கௌரவம், ஸ்டேட்டஸ் என்று ஒரு காலத்தில் புலம்பிய குமார் தான் இன்று மருமகளை காலையும் மாலையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டு கூப்பிட்டு வரும் பொறுப்பை ஏற்றுள்ளார்.. அனுவிடமும் கம்பெனி பக்கம் வருகிறாயா என்று நிகில் அழைத்துப் பார்த்தான்… ஆனால் அவள் மறுத்துவிட்டாள்.. சுதாவுக்கு துணையாக வீட்டையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்வது தான் பிடித்திருக்கிறது என்று கூறிவிட்டாள்…

“பார்த்தியா குட்டி.. இங்க வந்த அப்புறம் கூட உன் டேடிக்கும் அப்பாவுக்கும் பிஸினெஸ் தான்…” மகளிடம் உரைத்தவள் அவர்களை நோக்கி சென்று இருவரின் காதையும் பிடித்து திருக, இருவரும் வலியில் அலறினர்…

“புஜ்ஜி விடு டி…”

“ரெண்டு பேரும் என்ன பண்றீங்க?? நாம எதுக்காக இங்க வந்துருக்கோம்னு மறந்துடுச்சா??? இனி இன்னொரு வார்த்தை பிஸினெஸ் பத்தி ரெண்டு பேர் வாயில இருந்து வந்தாலும்” கண்களை உருட்டி மிரட்டியவள், “மொட்டை மாடியில தான் தூங்கணும்” என்றாள் அழுத்தமாக…

திரு பரிதாபமாக பார்த்தான் என்றால் அகில் அவனை பார்த்து கேலியாக சிரித்தான், அவர்களை கவனித்துக் கொண்டிருந்த சுமி அருகில் வர…

“என் அண்ணாவுக்கு துணையா நீயும் மொட்டை மாடில தான் தூங்கணும் அகி” வினுவை பார்த்து கண்ணடித்தவாறே தன் அண்ணாவுக்கு சுமி சப்போர்ட் செய்ய, இப்போது திரு கேலியாக தன் நண்பனின் முகத்தை பார்த்தான்…

“வினும்மா அப்படி மட்டும் பண்ணிடாத குட்டி… நாங்க இனி பிஸினெஸ் பத்தி பேசவே மாட்டோம்.. அப்படி தானே டா??” அகில் உடனே சமாதானக் கொடியை பறக்கவிட்டான்..

“யார் நீ?? எதுக்காக என்கிட்ட பிஸினெஸ் பத்தி பேசுற??, நான் என் பொண்டாட்டி சொல்ற வேலையை தவிர வேற எந்த வேலையும் செய்ய மாட்டேன் புரிஞ்சுதா???” அகிலை விட ஒரு படி மேலே சென்று திரு தன் மனைவிக்கு கூஜா தூக்க, சுமியும் வினுவும் கலகலத்து சிரித்தார்கள்..

“அடப்பாவி நீயா டா இது???” அகில் வாயில் கை வைக்க, திரு எதுவும் அறியா பிள்ளை போல் முகத்தை வைத்துக் கொண்டான்… அவர்களின் சம்பாக்ஷணையை கவனித்துக் கொண்டிருந்த ஹனிக்கு கோபம் வந்துவிட,

“டேடி.. ப்ளைட் எப்போ வரும்??? அதை சொல்லுங்க??” இடுப்பில் கை வைத்து முறைத்தவளை நால்வரும் திரும்பி பார்த்தனர்..

திரு வந்து அவளை தன் கையில் தூக்கிக் கொள்ள, வினு அவளை சமாதானம் செய்யும் முயற்சியில் இருந்தாள்…

“ஹனி குட்டி.. உன் பெஸ்ட் ப்ரெண்ட் இப்போ வந்துடுவான்..” திரு தன் செல்ல மகளை சமாதானம் செய்ய, அகிலும் சுமியும் அவர்களை கனிவுடன் பார்த்திருந்தனர்..

இருவருமே ஹனியை அவர்களுக்கு விட்டுக் கொடுத்துவிட்டார்கள்.. இருவரின் வீடும் அருகில் தான் என்பதால் சுமிக்கு பெரிதாக கவலையில்லை.. எங்கிருந்தாலும் ஹனியின் மகிழ்ச்சி தான் முக்கியம் என்பதால் ஹனி வினுவின் வீட்டில் வாரத்தில் முக்கால்வாசி நாட்கள் தங்கிக் கொண்ட போதும் சுமி தடுக்கவில்லை..

எவ்வளவு தான் பெருந்தன்மையாக நடந்துக் கொண்டாலும் மனதில் ஓரம் வலிக்கவே செய்த்து ஆனால் அதையும் அகில் தன் முழு காதலால் சரி செய்துவிட்டான்… ஹனி அங்கு சென்றுவிட வினு தன் குழந்தைகளை சுமியிடம் விட்டுவிட்டாள்.. யார் யார் யாரின் பிள்ளைகள் என மற்றவர்கள் குழம்பும் அளவிற்கு ஒருவரின் மேல் ஒருவர் அளவு கடந்த அன்பை செலுத்தினர்…

வினு ஹனியை சமாதானம் செய்துக் கொண்டிருக்கும் போதே, திருவின் கையில் இருந்து நழுவி இறங்கியவள், “பக்கி மாமா!!!” என்ற அலறலுடன் அவர்களை நோக்கி வந்துக் கொண்டிருந்தவனிடம் ஓடினாள்…

அவள் கூவலில் அனைவரும் திரும்பி பார்க்க, அங்கு தன் அழுத்தமான நடையுடனும், கம்பீரமான தோற்றத்துடனும், மூன்று வருடங்கள் கழிந்து தாய்நாடு திரும்பிய உற்சாகம் முகத்தில் கரைபுரண்டு ஓட, தன் குடும்பத்தை நோக்கி வேகமாக வந்துக் கொண்டிருந்தான் விக்கி…

திரு மற்றும் வினுவின் திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் கழித்து விக்கி அமெரிக்கா கிளம்பிவிட்டான்.. சிறிது நாட்கள் தன் சொந்த காலில் நின்று சம்பாதிக்க வேண்டும் அதுவும் அமெரிக்க செல்ல வேண்டும் என்பதே அவனது கனவு என தெரிந்துக் கொண்ட வினு, உடனடியாக தந்தையிடம் கூறி ஏற்பாடு செய்துவிட்டாள்.. பழைய குமாராக இருந்திருந்தால் நிச்சயம் அனுப்பியிருக்க மாட்டார் ஆனால் இப்போது இருப்பவர் தன் பிள்ளைகளின் சந்தோஷத்துக்காவே வாழ்பவர் அதனால் ஒத்துக் கொண்டார்..

இதே போல் மொத்த குடும்பமாக வந்து தான் அவனை வழியனுப்பி வைத்தார்கள்… அவனை பிரிவதில் வினு தான் அதிகம் கலங்கிவிட்டாள்.. பிறந்ததில் இருந்து எப்போதும் தன்னோடு ஒன்றாகவே இருந்தவன் முதல் முறையாக பிரியவும் அவளால் சட்டென்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. ஆனால் அவனின் கனவுகளுக்கு மதிப்பளித்து அனுப்பி வைத்தாள்…

இதோ அதோ என்று மூன்று வருடங்கள் கழிந்துவிட்டது…

வெகு நாட்கள் கழித்து அவனை கண்டதும், அனைவரின் கண்களும் பனித்துவிட்டது.. அவனும் அவனது குறும்புத்தனமும் இல்லாமல் வீடு களையிழந்தது போல் தோன்றும் அனைவருக்கும் அதிலும் வினுவிற்கு இரண்டாம் குழந்தை பிறந்த சமயம் கூட வர முடியாமல் அவன் பிராஜக்டில் அசைனாகிவிட வினு அவன் மேல் கோபத்தில் இருந்தாள். …

தன்னை நோக்கி ஓடி வந்த ஹனியை தூக்கி ஒரு சுற்று சுற்றியவன், அவனது குட்டி தோழியின் உச்சந் தலையில் இதழ் பதித்தான்..

“ஐ மிஸ்ட் யூ மாமா…” ஹனி அவன் கழுத்தில் தொங்கியவாறு கூற, அவனும் அவளை அணைத்துக் கொண்டான்…

“மீ டூ மிஸ்ட் யூ பேபி…” அவளை அணைத்தவாறே அங்கு நின்றுக் கொண்டிருந்த தன் குடும்பத்தினரிடம் விரைந்தான்…

நேராக தந்தை தாயிடம் வந்தவன் அவர்களின் நலனை விசாரிக்க அவர்களும் அவனின் நலனை விசாரித்தனர்… நிகிலும் அகிலும் அவனை அணைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, அனு அவன் கைகளை பற்றிக் கொண்டாள்…

“வாடா நல்லவனே.. நீ இல்லாம வீடு ரொம்ப நல்லா இருந்துச்சு.. இனி அவ்வளவு தான்..” அனு பொய்யாக அலுத்துக் கொள்ள…

“நல்லா இருந்துச்சா???? அது தப்பாச்சே.. அதான் நான் வந்துட்டேனே.. இனி ரணகளத்தை உருவாக்கிடுவோம் சரியா???” தலை சாய்த்து விக்கி கூற, அனு அவனை பார்த்து சிரித்தாள்..

அடுத்ததாக சுமியும் தன் பங்கிற்கு அவனை நலம் விசாரிக்க, இறுதியாக வினு மற்றும் திருவிடம் வந்தான்..

“ஹாய் மச்சான்..” திருவை இழுத்து அணைத்துக் கொண்டவன் ஓரக் கண்ணால் தன் அக்காவை காண, அவன் எதிர்ப்பார்த்தது போல் அவனை உக்கிரமாக முறைத்துக் கொண்டிருந்தாள்..

“எப்படி டா இருக்க குட்டி மச்சான்???”

“ஃபைன் மச்சான்.. என்ன உங்க வொய்ப் ரொம்ப சூடா இருக்காங்க போல இருக்கு????” முறைத்துக் கொண்டிருந்தவனை அவன் சீண்ட, திருவும் திரும்பி வினுவை பார்த்தான்…

மூன்று மாதங்களுக்கு முன்பாகவே வருவேன் என்றவன் கடைசி நொடியில் புதிய ப்ராஜக்ட் அசைன் ஆகியிருப்பதால் வர இயலாது என்று கூறிவிடவும் வினு அவன் மேல் பயங்கர கோபத்தில் இருந்தாள்… அவன் கூறும் சமாதானங்களை ஏற்காதவள் அவனிடம் பேச மாட்டேன் என்றுவிட.. அக்கா தம்பி இருவருக்கிடையிலும் தூது சென்றுக் கொண்டிருந்தான் திரு..

“மச்சான்.. ஐ மிஸ்ட் யூ… உங்களை நான் டெய்லி தேடுவேன் தெரியுமா???” வினுவை பார்த்தவாறே திருவிடம் விக்கி உரைக்க, வினு ஒரு முறை திரும்பி திருவை முறைத்துவிட்டு மீண்டும் முகத்தை திருப்பிக் கொண்டாள்…

“நீ என்னை மிஸ் பண்ணின??? இதை நான் நம்பணும்???” திரு நக்கலாக கேட்க, விக்கி அசடு வழிந்தான்..

“ஏன் டா டேய்.. ஒரு நாளாச்சும் என்கிட்ட பேசுறதுக்காக போன் பண்ணிருக்கியா டா?? வினு என்னப் பண்ற?? வினுவை என்கிட்ட பேச சொல்லுங்க மச்சான்.. பேபி என்னப் பண்ற?? இந்த மாதிரி தானேடா கேட்டு என் உயிரை வாங்கின.. இப்போ என்னவோ என்னை விட்டு பிரிஞ்ச பழைய காதலி மாதிரி மிஸ்ட் யூ அப்படிங்கறக???” திரு சரியாக கோர்த்து விட, வினுவிற்கு சிரிப்பு எட்டி பார்த்தது..

“ஹேய் மச்சான்.. ஸ்டாப் ஸ்டாப் இப்படியா என்னை பத்தி எல்லாத்தையும் சொல்லுவீங்க??? உண்மையை எல்லாம் இப்படி பப்ளிக்ல சொல்லக் கூடாது மச்சான்..” திருவிடம் உரைத்தவன் தன் அக்காவிடம் செல்ல, இவ்வளவு நேரம் அவனது வரவை ஆவலாக எதிர்ப்பார்த்து காத்திருந்தவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்..

“அக்கா…” எப்போதும் அவளை வீழ்த்தும் ஆயுதத்தை அவன் சரியாக உபயோகிக்க, இந்த முறை வினு அசையவில்லை..

“யாருடா அக்கா.. இந்த அக்காவை மறந்து அங்க இருந்த தானே.. போடா..” வினு முறுக்கிக் கொள்ள, அவன் தன் அக்காவை தன் தோளோடு அணைத்துக் கொண்டான்…

“விடு டா.. எனக்கு என் வினு தான் முக்கியம்னு சொன்னதெல்லாம் பொய்.. என் பிள்ளையை கூட நீ பார்க்க வரல..” வினு குற்றப் பத்திரிக்கை வாசிக்க, விக்கி அவளை பாவமாக பார்த்தான்..

“வினு சாரி வினு… அந்த டைம் மூனு வருஷ அக்ரிமென்ட் இருந்துச்சு. என்னால வர முடியல மா ப்ளீஸ்.. உன் ஒரே ஒரு சின்ன தம்பியை மன்னிச்சிடு மா..” விக்கி தோப்புக் கரணம் போட ஆரம்பிக்க, வினுவும் லேசாக இறங்கி வந்தாள்..

“சரி சரி.. இந்த ஒரு தடவை மன்னிச்சிட்டேன்.. இனி போக கூடாது சரியா???”

“இனி போகவே மாட்டேன்… ப்ராமிஸ்.. கல்யாணம் முடிஞ்சு ஹனி மூன் கூட போக மாட்டேன் போதுமா????” விக்கி தலை சாய்த்து கேட்க, வினு சிரித்துவிட்டாள்…

“பொய் சொல்லாத டா.. இப்போவே உமாவை நீ எந்த நாட்டுக்கு கடத்திட்டு போலாம்னு ப்ளான் பண்றது எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா???”

“ஹேய் வினு.. அப்படியெல்லாம் இல்ல டி..” என்றவனுக்கு தன்னவளை நினைத்து வெட்கம் வந்தது…. இன்னும் ஒரு வாரத்தில் இருவருக்கும் திருமணம்… ஏழு வருட காதல்… வினுவின் திருமணத்திற்கு பின் உமாவின் கைப்பேசி எண்ணை கண்டுபிடித்து.. அதன்பின் அவளிடம் நட்பை வளர்த்து அன்பையும் நம்பிக்கையும் உரம் வைத்து அவர்கள் வளர்த்த செடியில் காதல் பூத்திருந்தது. அப்போது உமா கல்லூரியின் இரண்டாம் ஆண்டில் இருந்தாள்… அவளின் படிப்பு முடியும் தருவாயில் இருவரின் திருமணத்தை பற்றியும் வீட்டில் பேச ஆரம்பிக்க, விக்கி தான் இருபத்தியைந்து வயதில் திருமணம் வேண்டாம் என மறுத்து வெளிநாடு சென்றுவிட்டான். உமாவும் விக்கி சொல்வதையே ஆமோதித்தாள்.. அதன்பின் படிப்பை முடித்தவள் கடந்த மூன்று வருடமாக தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறாள்…

திருமணத்தை ஒத்தி வைத்தாலும் இருவரும் போனில் தங்கள் காதல் பயிரை வளர்க்க, இதற்கு மேல் பொறுக்க முடியாது என இருவர் வீட்டிலும் திருமண ஏற்பாடுகளை தொடங்கிவிட்டனர்….

உடனடியாக வராவிட்டால் உமாவிற்கு வேறு திருமணம் செய்து வைக்கப் போவதாக வினு மிரட்ட, அலறியடித்து ஓடி வந்துவிட்டான்…

அக்காவும் தம்பியும் பேசிக் கொண்டிருக்க, திரு அவர்களை பார்த்தவாறே அகிலின் தோள் மேல் கைப் போட்டுக் கொண்டான்..

“எனக்கு சந்தேகமா இருக்குடா…” தீவிரமான திரு குரலில் கேட்டதும் அகில் அவனிடம் என்னவென்க,

“நிஜம்மா நான் கதையோட ஹீரோ தானாடா??? எனக்கு என்னமோ அவனை பார்த்தா தான் ஹீரோ மாதிரி இருக்கு… ரொம்ப பிழியுறாங்க டா பாசத்தை..” அழுவது போல் திரு போலியாக நடிக்க, அகில் வாய்விட்டு சிரித்தான்…

“அவங்க ரெண்டும் பேரும் கருவில் இருந்தே ஒன்னா இருக்காங்க டா.. ஒருத்தரோட நிழல் மாதிரி சுத்தினவங்க.. வினு பெரிய பொண்ணாண அப்புறம் எங்கம்மா விக்கியை அவ கூட தூங்க விட மாட்டாங்க.. அதுக்கே அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி ஒரு வாரம் ஹாஸ்பிட்டல்ல அட்மிட்டாகி, ஒரு கலவரத்தை உண்டு பண்ணினவன் டா அவன்…” அகிலும் தன் தம்பியை பற்றி கூற, திரு வியப்பாக கேட்டான்.. அவனுக்கும் அவன் தங்கை மேல் அளவு கடந்த பாசம் இருக்கிறது தான். ஆனால் இந்த அளவிற்கு ஒவ்வொரு நொடியும் பாசத்தை காண்பித்து விடுவானா என்பது சந்தேகமே…

“ஒரு வயசுக்கப்புறம் அவனே புரிஞ்சிக்கிட்டு தனி ரூமுக்கு போயிட்டான்… அந்த அளவுக்கு ரெண்டும் ஒட்டி பிறந்ததுங்க…” தன் தம்பி தங்கையை பற்றிய பூரிப்பில் அகில் கூற, திருவிற்கு கூட லேசாக பொறாமை எட்டிப் பார்த்தது…

அனைவரும் பேசிக் கொண்டிருக்க, அப்போது தான் அவர்களையே சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்த அவன் வினுவின் கண்களில் விழுந்தான்..

“யாருடா அது???” விக்கியின் விலாவில் இடித்தவாறு வினு கேட்க, விக்கி அப்போது தான் ஞாபகம் வந்தவனாக தன் தலையில் அடித்துக் கொண்டான்..

“ஹய்யோ.. சாரி சாரி.. இங்க வா டா.. ஏன் அங்கயே நிற்கிற????” அவர்களை பார்த்துக் கொண்டிருந்த அந்த நெடியவனை அருகில் அழைத்தவன், அவன் தோளில் கைப் போட்டுக் கொண்டு அனைவருக்கும் அறிமுகப்படுத்தினான்..

“மீட் மை ஜுனியர் உதய் ப்ராகாஷ்… என்கூட தான் வொர்க் பண்ணினான்.. பயங்கர டேலன்ட்..” தன் நண்பனை அவன் பெருமையாக அறிமுகப்படுத்த, அனைவரும் அவனிடமும் நலம் விசாரித்தனர்..

ஆறடி உயரத்தில் அத்தனை கச்சிதமாக இருந்தான். படிய வாரிய கேசம் அதற்கும் அடங்க மாட்டேன் என்பது போல் சிலுப்பிக் கொண்டு நின்றிருந்த முன்னுச்சி முடிகள்.. வெகு தூர பயணம் என்ற போதும் கசங்காத ஆடைகளுடன் புத்துணர்ச்சியாக நின்றிருந்தான்.. பார்த்ததும் மரியாதை கொடுக்க தோன்றும் தோற்றத்தில் இருந்தவனை அனைவரும் ஆச்சரியாக பார்த்தார்கள்..

“டேய் விக்கி.. நிஜம்மா இவன் உன் ப்ரெண்டா டா??? இவ்வளவு நீட்டா இருக்கிறவன் எப்படி டா உன் கூட ப்ரெண்ட ஆகினான்???” அனு சந்தேகமாக விக்கியை காண, மற்றவரின் முகத்திலும் அதே வியப்பு தான்..

“அண்ணிணிணி…” அனுவை பார்த்து பல்லை கடித்தவன் நண்பனிடம் திரும்பி, “பார்த்தியா உதய் என் குடும்பத்தை.. என்னை டேமேஜ் பண்றதை மட்டுமே கடமையா வச்சிருப்பாங்க..” என்றவன் தன் அண்ணியிடம் திரும்பி, “அண்ணி இவன் கதையெல்லாம் கேட்டிங்க அப்புறம் தெரியும் இவன் எவ்வளவு நல்லவன்னு.. சரியான ப்ராடு.. லவ் பண்ற பொண்ணை ஏமாத்திட்டு அமெரிக்காவுக்கு ஓடி வந்துருக்கான்..” இத்தனை மணி நேரம் உதயின் கதையை கேட்டதில் காண்டாகி விக்கி உரைக்க, அனைவரும் அவனை நம்பாமல் பார்த்தனர்…

“சீனியர் நான் ஏமாத்தல..” உதய் தன் பக்க நியாயத்தை உரைக்க, விக்கி அவனை தடுத்துவிட்டான்..

“ம்ம்ஹும் நீ என்ன சொன்னாலும் நான் ஏத்துக்க மாட்டேன்.. நீ விட்டுட்டு வந்தது தப்பு தான்..” விக்கி அவனிடம் கோபமாக உரைக்க, உதய் எதுவும் கூறாமல் அமைதியானான்..

அவர்கள் பேசுவது புரியாமல் அனைவரும் விழிக்க, வினு தான் என்னவென்று கேட்டாள்…

“என்னடா விக்கி சொல்ற?? எதுக்காக உதய் கிட்ட இப்படி பேசுற??”

“அது பெரிய கதை நான் அப்புறம் சொல்றேன்..” வினுவிடம் உரைத்தவன், தன் நண்பனிடம் திரும்பி, “ரொம்ப உன் பொம்மூவை காக்க வச்சிடாத டா.. பாவம் அந்த பொண்ணு… சீக்கிரம் கிளம்பு.. அப்படியே அடுத்த வாரம் என் கல்யாணம்.. வந்துடு…” என்க,

“கண்டிப்பா சீனியர். என் பொம்மூ அழுததுயெல்லாம் போதும். நான் கிளம்புறேன்.. எனக்கு இன்னும் பஸ் பிடிச்சி என்னோட ஊருக்கு போகணும்..” அனைவரிடமும் விடை பெற்று கிளம்பியவனை வழியனுப்பி வைத்தவர்கள், விக்கியின் உடைமைகளை எடுத்துக் கொண்டு கிளம்ப ஆயத்தமானார்கள்..

விக்கி தான் திடிரென்று ஞாபகம் வந்தவனாக,

“ஹேய் வினு.. என் படைத் தளபதிங்க எல்லாம் எங்க??” விக்கி சொன்ன பின் தான் அவர்களும் தங்கள் குழந்தைகளை தேடினர்.. சுற்றும் முற்றும் பார்த்தவர்கள் தங்களை நோக்கி ரித்தின் வரவும் அவனிடம் குழந்தைகள் எங்கே என்க, அவன் அவர்களை ஏர்போர்டின் வெளியே அழைத்து சென்று காண்பித்தான்..

அங்கு சுமி மற்றும் அகிலின் இரண்டாவது தவப் புதல்வன், ஆதி கீழே கிடக்க, அவன் மேல் ஏறி அமர்ந்து அவன் முடியை பற்றி அடியில் பிய்த்து எடுத்துக் கொண்டிருந்தாள் வினு மற்றும் திருவின் இரண்டாவது தவப் புதல்வி கவியரசி.

அருகில் அவர்களின் சண்டையை தடுக்க தெரியாமல் கையை பிசைந்துக் கொண்டு நின்றான் வினுவின் முதல் வாரிசு அர்ஜுன்..

விக்கி அமெரிக்க கிளம்பும் சமயத்தில் தான் வினு கருவுற்றிருந்தாள் அதனால் அவன் கவியை நேரில் பார்த்ததில்லை.. ஆதிக்கும், அர்ஜுனுக்கும் அவன் செல்லும் போது மூன்று வயதிருக்கும். அவர்களோடு அவன் அடித்த லூட்டிகள் ஏராளம்.. இப்போது மூன்று வருடங்கள் கழித்து அவர்கள காணும் போது புல்லரித்தது அவனுக்கு.. இருவரும் சற்று வளர்ந்திருந்தார்கள்…..

“கவிக்குட்டி.. என்னடா பண்ற??? எதுக்கு ஆதியை அடிக்கிற???” வேகமாக சென்று தன் மகளை வினு கையில் தூக்க, அவளோ வினுவை சற்றும் மதிக்காமல்..

“ம்மா.. தள்ளு.. ஆதி பிச்சு பிச்சு.. விடு விடு..” வினுவின் கையை தட்டி விட்டவள் ஆதியை மீண்டும் அடிக்க போக, ஹனி வந்து இருவரையும் பிரித்துவிட்டாள்..

“லூசு.. என்னை அடிச்சிட்டா.. இன்னைக்கு உன்னோட டாய்ஸ்ஸ உடைக்கல.. ஐ யம் நாட் ஆதித்யா குமார்…” சீரியல் வில்லன் ரேஞ்சுக்கு பேசியவனை வாய் பிளந்து பார்த்தான் விக்கி.. அகிலும் சுமியும் பொறுமையின் சிகரங்களாக இருக்க அவர்கள் பெற்றெடுத்த செல்வம் மட்டும் எப்படி இவ்வளவு கோபக்காரனாக இருக்கிறான் என்று விக்கி வியக்க, அதே கவலை தான் அகிலுக்கும்..

பொழுது விடிந்தால் போதும் ஆதியும் கவியும் சண்டையிட தொடங்கிவிடுவார்கள்… அவர்களை சமாளிப்பதே பெரும் சவாலாக இருக்கும் அனைவருக்கும்…

“அர்ஜு எதுக்காக தங்கச்சியும் ஆதியும் சண்டை போடுறாங்க???” எப்போதும் அர்ஜுன் பொய்யுரைக்க மாட்டான் என்பதால் வினு தன் மகனிடம் கேட்க..

அவன் தங்கையையும் ஆதியையும் மாற்றி மாற்றி பார்த்தான், பின் மெல்லிய குரலில், “அம்மா.. கவி தான் ஆதியை பர்ஸ்ட் அடிச்சா…” என்க, அதில் வினுவின் மகளுக்கு கோபம் வந்துவிட்டது..

“ம்மா.. அச்சு பொய் சொல்லான்.. ஆது பூ ப்பூ பண்ணினான்..” தன் இரு விரல்களையும் வாயில் வைத்து சிகரெட் பிடிப்பது போல கவி செய்து காண்பிக்க, அவர்களுக்கு புரிந்து போனது… யாரோ ஒருவர் செய்ததை மகன் திரும்ப செய்திருக்கிறான் என்று.. ஆனால் அதை செய்து காண்பித்த கவியின் அழகில் மொத்த குடும்பமும் மயங்கி தான் போனது..

கண்களை உருட்டி தன் பிஞ்சு விரல்கள் இரண்டையும் தன் இதழில் வைத்து அவள் செய்து காட்டியது அத்தனை அழகாக இருந்தது.. அவள் செய்யும் ஒவ்வொன்றுமே ரசனையாக தான் இருக்கும்… அது தான் ஆதியின் பிரச்சனையே.. எப்போதும் அவனை மட்டுமே கொண்டாடுபவர்கள் புதிதாக வந்த கவியை கொண்டாடவும் அவனால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.. அதற்காக தான் இந்த அடிதடி எல்லாம்..

அகிலுக்கு மகனை நினைத்து கோபம் வர, அவனை அடிக்க கையை ஓங்கிக் கொண்டு வந்தான்..

அவன் செய்யப் போவதை உணர்ந்து மற்றவர்கள் அகிலை தடுக்க முயல, அதற்குள் ஆதியை கட்டிப்பிடித்து தன் மாமவை, கண்ணை உருட்டி மிரட்டினாள் கவியரசி..

“ஆது அடிக்காத…” தன் மாமாவிடம் கூறியவள் ஆதியை கட்டிப்பிடித்துக் கொள்ள அனைவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.. இது தினமும் நடப்பது தான்.. இருவரும் எவ்வளவு சண்டையிட்டாலும் கவி அவனை யாரிடமும் மாட்டிவிட மாட்டாள்… அவனை அடிக்க வந்தாலும் தடுத்துவிடுவாள்.. அவர்களின் பாசம் அனைவருக்கும் புரியாத புதிர் தான்…

“கவி பேபி..” விக்கி அழைக்க, அவ்வளவு நேரம் ஆதியை மாட்டிவிடுவதிலும் காப்பாற்றுவதிலும் பிஸியாக இருந்தவள் இப்போது விக்கியை காண, அவளுக்கு சட்டென்று ஞாபகம் வந்து விட்டது..

“மிக்கி மாமா???” வீடியோ சேட்டில் அவனை தினமும் காண்பதை வைத்து அவள் தலைசாய்த்து சந்தேகமாக கேட்க.. அவளை வாரி அணைத்துக் கொண்டான் விக்கி…. அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டவன்,

“ஹனிக்கு பக்கி மாமா.. உனக்கு மிக்கி மாமாவா??? அப்போ யாரும் என்னை விக்கி மாமான்னு கூப்பிட மாட்டிங்க…” சலித்துக் கொள்வது போல் கூறினாலும் அவன் முகத்தில் சிரிப்பே அதிகம் இருந்தது..

“விக்கி மாமா.. நான் கூப்பிடுவேன்..” அர்ஜுன் நல்ல பிள்ளையாக கூற, விக்கி அவனை பார்த்து புன்னகைத்தான்.. அப்படியே திருவின் மறுமதிப்பு… அதிகம் ஹனியோடு இருப்பதால் மிகவும் பொறுப்பு..

விக்கியின் கையில் இருந்தவளை பார்த்த ஆதி கடுப்பாகி, “ஹேய் மங்கி அவங்க மிக்கி இல்ல.. விக்கி.. நீ தப்பா சொல்ற…” வந்தவுடன் தன் மாமாவையும் ஈர்த்துவிட்ட பொறாமையில் ஆதி கொந்தளிக்க, விக்கி அவனை சிரிப்புடன் பார்த்தான்..

“அவ என் அக்கா மக டா.. என்னை எப்படி வேணும்னாலும் கூப்பிடுவா.. உனக்கு என்ன???” கோபம் போல் விக்கி கேட்க, ஆதிக்கு கோபம் வந்துவிட்டது..

“ஓ. மங்கி.. நீ போ.. அந்த வீடியோ கேம் உனக்கு தர மாட்டேன்.. நானும் அர்ஜுவும் விளையாடுவோம்..” அவனும் முறுக்கிக் கொள்ள,

“நான் கவிக்காக நிறைய வீடியோ கேம் வாங்கிட்டு வந்திருக்கேன்.. அதை கொடுப்பேன்.. உன்னோடதை நீயே வச்சிக்கோ..” விக்கியும் விடாமல் அவனோடு குழந்தையாக மாறி சண்டை பிடிக்க, அவனோ விக்கியையும் கவியையும் முறைத்து பார்த்துவிட்டு தன் அன்னையின் அருகே சென்று நின்றுக் கொண்டான்..

அடுத்த நிமிடம் கவியும் விக்கியிடம் இருந்து இறங்கி ஆதியிடம் சென்றிருந்தாள்.. அவர்கள் இருவரும் மழலை பாஷையில் ஏதோ பேசிக் கொள்ள, விக்கி வியப்பாக பார்த்தான்..

“ரொம்ப ஷாக் ஆகாத.. எவ்ளோ அடிச்சிக்கிட்டாலும் ரெண்டும் ஒரே இடத்துல தான் இருக்கும்.. நீ வா…” தன் தம்பியின் தோளில் தட்டியவள் அங்கிருந்து கிளம்பினர்.. தங்கள் கார் அருகே வரும் போது ராமின் தந்தையும் அவரது மனைவியும் வர, அனைவரும் அவர்களை பார்த்து புன்னகைத்தனர்..

எப்படி இருக்கீங்க அங்கிள்?? என்ன தான் அவர்கள் மகன் செய்தது தவறு என்றாலும் வயதான இவர்களிடம் முகத்தை திருப்ப யாராலும் முடியவில்லை.. அதனால் விக்கியே புன்னகை முகமாக பேசினான்..

“நல்லா இருக்கேன் விக்கி.. இன்னும் ஒரு வாரத்துல கல்யாணத்தை வச்சிட்டு இப்போ தான் இந்தியா வந்துருக்க…” ரகுவும் அவனிடம் கிண்டல் செய்ய, அவன் சிரித்து வைத்தான்..

“என்ன அங்கிள் இந்த பக்கம்???”

“நாங்க மலேசியா போறோம் பா.. இங்க தனியா இருந்து என்ன செய்ய போறோம் அதான் கிளம்பிட்டோம்..” பதிலை விக்கியிடம் கூறினாலும் கண்கள் தன் நண்பரிடமே இருந்தது.. தன் மகன் செய்த பாவத்திற்காக குமாரின் நட்பை இழந்தார் ரகு… வினுவின் திருமணம் முடியும் வரை ராமிற்கு ஜாமின் வழங்கக் கூடாது என தன்னால் ஆன முயற்சிகளை எல்லாம் செய்தார் குமார்..

என்ன தான் தவறு செய்திருந்தாலும் மகன் மேல் உள்ள பாசத்தில் அவனுக்காக , தன் நண்பரிடம் ரகு பேச, குமார் சிறிது யோசனைக்கு பின் ராமின் மேல் தொடுத்த வழக்கை வாபஸ் வாங்கினார்.. அதோடு அவர்களோடு இருக்கும் தொழில் சம்பந்தமான தொடர்புகளை துண்டித்தவர் தன் கண் முன் ராம் வரக் கூடாது என்று கண்டிசனை போட்டே அவனை சும்மாவிட்டார்..

ரகுவும் மகன் உயிரோடு வந்தால் போதும் என அவனை உடனே பார்சல் செய்து மலேசியா அனுப்பிவிட்டார்.. இங்கிருந்த தொழில்களை விற்று அங்கு தொழில் ஆரம்பித்து அவனிடம் ஒப்படைத்தவர் இனி இந்தியா பக்கம் வரக் கூடாது என கூறி, அவரே சென்று மகனை அடிக்கடி பார்த்து வந்தார்… ராமும் தன் தந்தை பேச்சை மீறினால் உள்ள தொழிலும் கெட்டு விடும் என பெட்டி பாம்பாக அடங்கிவிட்டான்…

இப்போது மகனோடு சென்று தங்கிக் கொள்ளலாம் என கிளம்பிவிட்டார்கள் ராமின் பெற்றோர்கள்…

“ஓ.கே பா நான் கிளம்புறேன்.. ஃப்ளைட்டுக்கு டைமாச்சு” அனைவரிடமும் விடை பெற்றவர் கிளம்ப, அவர்கள் செல்வதை அசையாமல் பார்த்திருந்தனர் வினுவின் குடும்பத்தினர்…

ஒவ்வொருவரின் வாழ்க்கையும் தான் எப்படி மாறிவிடுகிறது என எண்ணியவர்கள் அதன் பின் தங்கள் வீட்டிற்கு கிளம்பினர்…

குமாரின் நட்பு விட்டுப் போனதில் ரகுவிற்கு நிறைய வருத்தம் தான் என்றாலும் அவர் அதை முழுமனதாக ஏற்றுக் கொண்டார்… அன்று ஒரு நொடி தவறியிருந்தாலும் அகிலின் உயிர் போயிருக்குமே.. அதை நினைக்கும் போது ரகுவிற்கே மனது கலங்கும் போது அவனை பெற்றவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்ற எண்ணமே அவரை ஒதுங்க வைத்தது.. எவ்வளவு தான் வெளியே அதிகம் பேசாவிட்டாலும் என்றும் தங்கள் நட்பு மாறாது என்று நம்பிக்கை அவரிடம் அதிகமாகவே இருந்தது…

வீட்டிற்கு வந்த பின் மூன்று வருட பிரிவையும் சமன் செய்வது போல் அனைவரும் விக்கியை விழுந்து விழுந்து கவனிக்க, விக்கி தான் அவர்கள் அன்பில் திக்குமுக்காடி போனான்…

அவனது கல்யாண வேலைகளும் ஜோராக துவங்க, விக்கியும் உமாவும் கடலை போடுவதிலும் கனவுகள் காண்பதிலும் தங்கள் பொழுதை கழித்தனர்… திருமணம் முடிந்த பின், விக்கியும் அவர்களின் கம்பெனியில் சென்று பொறுப்பேற்றுக் கொள்ள போவதாக கூற, அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி…

நாட்கள் கடக்க விக்கியின் கல்யாண நாளும் அழகாக விடிந்தது… அய்யர் கூறும் மந்திரங்களை கூறிக் கொண்டிருந்தான் விக்கி.. அவன் அருகில் திரு, அகில், நிகில் என அனைவரும் கம்பீரமாக நிற்க, வினுவும் சுமியும் மணப்பெண்ணான உமாவை அழைத்துக் கொண்டு வந்தார்கள்..

விக்கியின் அருகில் அமர வைத்தவர்கள் தங்கள் துணையின் அருகில் சென்று நின்றுக் கொண்டனர்.. அவர்களின் குழந்தைகள் அனைவரும் மேடையயை சுற்றி வளைத்துக் கொண்டு நிற்க, குமாரும் சுதாவும் தம்பதிகளாக நின்றுக் கொண்டிருந்தனர்…

மாலை மறைவில் விக்கி தன் சேட்டையை உமாவிடம் துவங்க அவள் நெளிந்துக் கொண்டிருந்தாள்…. அவனின் முகத்தை துடைப்பது போல் குனிந்த திரு அவன் காதில் அமைதியாக இருக்குமாறு முணுமுணுக்க, அவன் அசடு வழிந்தவாறு அமைதியானான்…

அனைவரின் ஆசிர்வாதத்தோடும் விக்கி உமாவின் கழுத்தில் மூன்று முடிச்சையும் போட, வினு திருவை பார்த்திருந்தாள்.. அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்… அவர்களின் திருமண நாள் ஞாபகம் வந்தது இருவருக்கும்… அதன் பின் அன்று முழுவதும் ஒரு வித மயக்கத்திலே பொழுதை கழித்தனர் திருவும் வினுவும்…. திருமணத்திற்கு முதல் நாளே ரிசப்ஷன் வைத்துவிட்டதால் மாலையில் அனைவரும் சற்று ரிலாக்ஸ்சாகிவிட்டார்கள்..

அன்றிரவு விக்கியின் அறையை தயார் செய்துக் கொண்டிருந்தனர் அகிலும், திருவும்.. உற்சாகமாக தன் அறைக்குள் வந்தவன் அங்கிருந்தவர்களை கண்டு திகைத்து நிற்க, அவர்கள் இருவரும் அவனை கண்டுக் கொள்ளாமல் அரட்டை அடிப்பதும்… பூக்களை ஆங்காங்கே தூவுவதுமாக இருந்தனர்..

“ஹேய் மச்சான் என்ன பண்றீங்க???,”

“என்னப் பண்றோமா??? ரொம்ப தீவிரமா ரூமை ரெடி பண்றோம்…” அகிலின் குரலில் தீவிரம் இருந்தாலும் வெகு நிதானமாக தயார் செய்துக் கொண்டிருந்தார்கள் இருவரும்..

“தெய்வங்களா… நீங்க ரெடி பண்ணிண வரைக்கும் போதும்.. ப்ளீஸ் கிளம்புங்க..” அழுதுவிடுபவன் போல் விக்கி உரைக்க, திருவும் அகிலும் சட்டமாக அவனது கட்டிலில் அமர்ந்துக் கொண்டனர்…

“அந்த ஆப்பிளை எடு அகி… காலையில் இருந்து வேலை செய்து ரொம்ப டையர்ட்…” திரு உரைக்க, அகிலும் சிரித்தவாறே அவன் சொன்னதை செய்தான்…

“மச்சான் என்னப் பண்றிங்க??, டேய் அகி என்னடா இதெல்லாம்?? திருவிடம் பேசி பிரோயோஜனம் இல்லை என அகிலிடம் முறையிட்டான்..

“என்னடா இதெல்லாமா??? ஒன்ஸ் அப்பான் ஏ டைம்…” என்றவன் அடுத்தது மறந்ததாக நெற்றியில் தட்டிக் கொள்ள, விக்கி அவனை கொலை வெறியில் முறைத்தான்..

“ஒன்ஸ் அப்பான் ஏ டைம் என்ன??? ஒரு சிங்கம் இருந்துச்சா??” விக்கி கடுப்பாக கேட்க, திரு திரும்பி அகிலை பார்த்தான்.. அவன் தெரியாது என்பது போல் தோளை குலுக்க..

“ஹான் நியாபகம் வந்துடுச்சு.. ஒன்ஸ் அப்பான் ஏ டைம்.. எங்களோட காதலியை நாங்க பார்க்க போன நேரம் நீ.. எங்களை வழிமறிச்சி மிகப் பெரிய பாவம் செய்துவிட்டாய்.. அதற்க தண்டனையாக இன்றிரவு உனக்கு எதுவும் கிடையாது..” ஆங்கிலத்தில் ஆரம்பித்து செந்தமிழில் முடித்தவனை விக்கி பே என்று பார்க்க, அகிலும் ஆமாம் ஆமாம் என ஒத்து ஊதினான்..

“அடப்பாவி மச்சான் அதுக்கு பழி வாங்குற நேரமா யா இது… நான் ரொம்ப பாவம் யா.. டேய் அண்ணா நீயாச்சும் சொல்லுடா.. அதான் இப்போ ரெண்டு பேருக்கும் குழந்தைங்க இருக்காங்களே.. நான் இனி தான்டா ரெடி பண்ணணும்…” வெட்கமே இல்லாமல் விக்கி கெஞ்ச, திரு சிரித்துவிட்டான்.. அவன் மட்டும் இல்லாமல் வாசலில் உமாவை அழைத்து வந்த வினுவும் சுமியும் கூட சிரித்துவிட, விக்கி பாவமாக தன் அக்காவை பார்த்து வைத்தான்…

“முடியாது முடியாது… நீ மட்டும் அன்னைக்கு எங்களை மாமாகிட்ட போட்டுக் கொடுத்த.. இப்போ மட்டும் நாங்க பாவம் பார்க்கணுமா??, அதெல்லாம் முடியாது.. இன்னைக்கு நாங்க ரெண்டு பேரும் இங்க தான் இருப்போம்..” திரு தன் பிடியிலே நிற்க, அகில் சுமியை பார்த்துக் கொண்டிருந்தான்… திருமணத்திற்காக என்று சுமியும் அழகாக தயாராகியிருக்க, காலையில் இருந்தே அவளை விழுங்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.. இப்போது அவளை பார்த்ததும் விக்கி, திரு எல்லாம் அவனுக்கு மறந்துவிட,

“சரி டா அரசு…. எனக்கு தூக்கமா வருது.. நான் தூங்க போறேன்.. வா சுமி போவோம்..” திரு எதுவும் சொல்வதற்கும் அகில் நைசாக கழண்டு விட… திரு அவனை எரிப்பது போல் பார்த்தான்…

“அவன் போனா போறான் துரோகி.. நான் போக மாட்டேன்..” திருவின் செயலில் தன் தலையில் தானே அடித்துக் கொண்ட வினு அவனை இழுத்துக் கொண்டு வெளியேற, விக்கி வேகமாக கதவை அடைத்துக் கொண்டான்.. உமாவை அழைத்துக் கொண்டு தான்…

“என்னை விடு வினு.. நான் இன்னும் கொஞ்ச நேரம் அவனை கதறடிச்சிருப்பேன்…” சிறுவன் போல் திரு கூற, வினு அவனை காதலாக பார்த்தாள்..

“சரி போ.. போய் அவன் கூட விளையாடு.. நான் கூட இன்னைக்கு நமக்கு எதாச்சும் ஸ்பெஷலா நடக்கும்னு நினைச்சேன்.. சரிப் போ…” அவனை விட்டு வினு நகர்ந்து செல்ல, வேகமாக அவள் பின்னால் சென்றவன்,

“ஹேய் புஜ்ஜி… இரு இரு.. அதுக்குள்ள கேன்சல் பண்ணிடாத.. இந்த டே நமக்கும் ஸ்பெஷல் தான்..” அவளின் தோளின் மேல் கைப் போட்டவன் அவர்கள் வீட்டை நோக்கி நடையை கட்டினான்… வினு எதுவும் பேசவில்லை.. இன்று நிஜமாகவே அவளுக்கு முக்கியமான நாள் தான்…. காலையில் இருந்து அவனிடம் தனியாக பேசும் சந்தர்ப்பம் வாய்க்காததால் வினு இப்போது வேண்டும் என எண்ணியிருந்தாள்…

இருவருமாக கீழே இருந்த அனைவரிடமும் சொல்லிக் கொண்டு தங்கள் வீட்டிற்கு கிளம்ப, சட்டென்று எதோ நினைவு வந்தவனாக திரு மீண்டும் மேலே சென்றுவிட்டு வந்தான்..

“என்னடா??” வினு கண்களாலே கேட்க, ஒன்றும் இல்லை என் தலையாட்டியவன் தங்களின் வீட்டை நோக்கி சென்றனர்..

தங்கள் அறைக்கு வந்தவர்கள் உடை மாற்றிக் கொண்டு படுக்கையில் விழ, திரு வினுவை அணைத்துக் கொண்டான்…

“என்ன ஸ்பெஷல் புஜ்ஜி???” அவள் காது மடல்களை தன் இதழால் உரசிக் கொண்டே திரு கேட்க, கூச்சத்தில் நெளிந்தவள்..

இன்னையோட ஏழு வருஷம் ஆகப் போகுது என்றாள்..

என்னது என யோசித்தவன் தன் திருமண நாளா என்று யோசிக்க, அப்படி எதுவும் இல்லை.. அதற்கு இன்னும் நாட்கள் இருந்தது.. வேறு என்ன என யோசித்தவன் புரியாமல் அவளை பார்க்க, அவளே பதிலையும் கூறினாள்..

“ஏழு வருஷத்துக்கு முன்னாடி இதே நாள் தான்.. நான் உன்னை முதல் முறையா பார்த்தேன்… அப்போவே என் மனசுல நீ ஆழமா பதிஞ்சிட்ட டா அரசு…எப்பவுமே எனக்கு இந்த நாள் ரொம்ப ஸ்பெஷல் தான்..” அவனை முதன் முதலாக பார்த்ததை மனதில் கொண்டு வந்தவள் அந்த நாளுக்கே சென்றுவிட்டாள்…

தன் காரில் வந்து மோதிய அந்த பெண்ணை அடித்த காட்சியை ஓட்டிப் பார்த்தவளுக்கு சிலிர்த்தது.. அன்றிரவே அவனுடன் சண்டை.. மீண்டும் மறுநாள் காலையில் அவனை தங்களின் டீம் லீடராக சந்தித்தது.. அன்றே தன் காதலை கூறியது என் அனைத்தும் படமாக விரிய, திருவும் அந்த நாட்களை எண்ணிப் பார்த்தான்..

பார்த்த அன்றே காதலை சொல்லி.. துரத்தி துரத்தி காதல் செய்து, தான் தாலி கட்டும் முன்னே தன்னையும் கொடுத்து, தன் தங்கையின் வாழ்வை மீட்டது என அவன் வாழ்வையே புரட்டிய புயல் அவள்…

அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டவன், “லவ் யூ புஜ்ஜி… நீ மட்டும் என் வாழ்க்கையில வராம போயிருந்தா.. நான் நிறைய இழந்திருப்பேன்.. தேங்க்ஸ் டா.. இதுக்கெல்லாம் நான் என்ன செய்ய போறேனோ???” உணர்ச்சிவசமாக திரு கூற, அவன் நெஞ்சில் இருந்து எழுந்தவள், அவனை அடியில் பிண்ணினாள்..

“எனக்கே தேங்க்ஸ் சொல்றியா??? ஒழுங்கு மரியாதையா அடுத்த எல்லா ஜென்மத்துலையும் என்னோட அரசுவாவே பிறந்து என்னை லவ் பண்ணிட்டே இரு.. “ அவன் முடியை பிடித்து ஆட்டியவாறே அவள் உரைக்க, அவளை தன் கைக்குள் அடக்கியவன்,

“கண்டிப்பா டா.. நீ சொன்னாலும் சொல்லாட்டியும் எப்போவும் உனக்கு நான் தான்..” அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டவன், இப்போ தான்டி தெரியுது.. என் பொண்ணு எப்படி இந்த சின்ன வயசுலயே எல்லாரையும் அடி பின்னியெடுக்கிறான்னு.. எல்லாம் உன்னோட டிரைனிங் தான்…” திரு தன் மகளை நினைத்து சிரிக்க, வினுவிற்கும் அவளை நினைத்து புன்னகை மலர்ந்தது..

“ஆமாம் கவி எங்கடா?? அர்ஜு எப்படியும் ரித்தின் கூட தான் இருப்பான்.. மேடம் எங்க?? உன் பக்கத்துல தூங்காட்டி அவளுக்கு தூக்கம் வராதே..” தாயை விட தந்தையை தேடும் மகளை அவள் செல்லமாக வைய, திரு சத்தமாக சிரித்தான்…

“புஜ்ஜி… நம்ம பசங்க எல்லாம் இப்போ உன் அண்ணா ரூம்ல இருப்பாங்க..” கட்டிலில் எழுந்து அமர்ந்தவாறு திரு கூற, வினு குழப்பமாக பார்த்தாள்..

“என்னடா சொல்ற??,”

“என் கூட சேர்ந்து விக்கியை கலாய்க்கிறேன்னு சொல்லிட்டு, பொண்டாட்டியை பார்த்ததும் அவன் பின்னாடி போனாவனை சும்மா விட்டுடுவேனா?? அதான் நாம கிளம்புறதுக்கு முன்னாடி.. ஹனி ரூம்ல சமத்த இருந்த நம்ம பசங்க, அகி பசங்கன்னு எல்லாரையும் அகில் கதை சொல்லப் போறதா சொல்லி அங்க கிளப்பி விட்டுட்டு வந்துட்டேன்…” பெரிய சாதனை படைத்துவிட்டது போல் திரு பெருமை பீற்றிக் கொள்ள, வினுவிற்கே தன் அண்ணனின் நிலையை நினைத்து பரிதாபமாக இருந்தது.. அதுவும் கதை என்று கூறிவிட்டால் கவியை கையில் பிடிக்க முடியாது.. கண்டிப்பாக கூறியே ஆக வேண்டும் அதை விட இடையில் அவள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லி மாளாது…

“பாவம் டா எங்க அண்ணன்… மத்தவங்களை கூட சமாளிச்சிடுவான்.. ஆனா உன் அறுந்த வாலு பொண்ணை சமாளிக்கிறது தான் கஷ்டம்..” வினு உச்சுக் கொட்ட, அங்கு வினு கூறியது போல் கவியிடம் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்தான் அகில்..

அறைக்குள் நுழைந்து சுமியை அணைக்க தான் செய்தான் அதற்குள் கதவை உடைக்காத குறையாக உள்ளே வந்தனர் ஆதி, கவி, அர்ஜுன், ஹனி மற்றும் ரித்தின்.. அகில் தடுமாறி என்னவென்று கேட்க, கவி தான் கதை சொல்லு மாமா என அவன் முதுகில் தொற்றிக் கொண்டாள்..

திரு தான் தங்களை அனுப்பியதாக ஹனியும் ரித்தினும் போட்டுக் கொடுத்து விட, தன் நண்பனை திட்டியவாறே அவர்களுக்கு கதை கூற துவங்கினான் அகில்… சுமியோ அகிலை நினைத்த மனதில் சிரித்தவாறு தானும் குழந்தையாக மாறி கதை கேட்க துவங்கினாள்..

அகிலின் அறையில் என்ன நடந்துக் கொண்டிருக்கும் என்பதை யூகித்து திரு சிரித்துக் கொண்டிருக்க, வினு அவன் சிரிப்பை ஆசையாக பார்த்தாள்..

ஒரு காலத்தில் புன்னகைக்கு கூட பஞ்மாக இருந்தவன் இப்போதெல்லாம் வாய் விட்டு சிரிக்கிறான்.. அவன் கன்னத்துக் குழியை தொட்டு பார்த்தவள், அவனை அணைத்துக் கொள்ள, அவனும் சிரிப்பதை நிறுத்தி விட்டு வினுவை அணைத்துக் கொண்டான்..

“லவ் யூ டா அரசு.. உன் கூட நிறைய வருஷம் வாழணும்… அதுவும் எல்லாரும் பொறாமை படுற அளவுக்கு…” மெல்லிய குரலில் கூறியவள் அவன் நெஞ்சில் இதழ் பதிக்க, அவன் அவள் முகத்தை தன் கைகளில் ஏந்தினான்..

அவள் கண்களுக்குள் ஊடுருவி பார்த்தவன் குறும்பு சிரிப்புடன், “இன்னைக்கு நைட் ஸ்பெஷல்னு யாரோ சொன்னாங்க.. இப்போ எனக்கு வேணும்” என்றவன் அவள் இதழ்களை சிறைபிடிக்க, அவனிடம் விரும்பத்துடனே இசைந்தாள் வினு…

ஆண்டுகள் எத்தனை கடந்தாலும் அவர்களின் காதல் மட்டும் என்றும் மாறப்போவதில்லை என்பது நிச்சயமே…

முற்றும்…

கதை முடிவடைந்தது தோழமைகளே.. இந்த கதையில் வந்த உதய் பிரகாஷ் யார் என்று யோசித்திருப்பீர்கள்.. அவன் எனது அடுத்த கதையின் நாயகன்… அதாவது அடுத்தும் கதையெழுதி உங்களை டார்ச்சர் பண்ண சீக்கிரம் வருவேன்னு சொல்றேன்…. டாட்டா மக்களே… உதய் பிரகாஷ் மற்றும் அவனது பொம்மூவோடு “முன்பனி கால பூவிலே “ என்னும் அடுத்த கதையில் உங்களை சந்திக்கிறேன்…

error: Content is protected !!