VKV 18

VKV 18

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 18

விடிந்தும் விடியாத அந்த காலைப் பொழுதினில், தமிழ்ச்செல்வனுக்கு சொந்தமான அந்த கல்யாண மண்டபத்தில் நாதஸ்வர ஒலி மங்கலகரமாக ஒலித்துக் கொண்டிருந்தது. தங்கள் முதலாளியின் சீமந்த புத்திரியின் நிச்சயதார்த்தத்திற்கு ஓடி ஓடி வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள் ஊழியர்கள் அத்தனை பேரும்

உறவுகளும், சொந்தங்களும் கொஞ்சம் கொஞ்சமாக வந்த வண்ணமிருக்க, நிச்சயத்திற்கு ஐயர் குறித்துக் கொடுத்த நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. முதலில் மாப்பிள்ளை, பெண் வரவேற்பு நடத்திய பிறகு, நிச்சய தாம்பூலம் மாற்றிக் கொள்வதாக ஏற்பாடாகி இருந்தது.

பெண்ணை அழைத்துவர தமிழ்ச்செல்வன் வேறாக ஏற்பாடுகள் செய்வதை முற்றிலும் மறுத்திருந்தான் சுதாகரன். சம்பிரதாயங்கள் எதற்கும் அவன் ஒத்துக் கொள்ளாமல் முரண்டு பிடிக்க, தமிழ்தான் இறங்கி வர வேண்டி இருந்தது. மண்டபம் முழுவதுமாக நிரம்பி இருக்க, அன்றைய விழாவின் நடுநாயகமாக வந்து நின்றது அந்த black Audi.

ஆங்காங்கே பதிக்கப்பட்டிருந்த சிவப்பு ரோஜாக்கள் வைரமென மின்ன, பளிச்சென்று வந்து நின்றது Audi. ட்ரைவர் சீட்டிலிருந்து இறங்கிய சுதாகரன், பழுப்பு நிற கோட் சூட்டில் ஜம்மென்று இருந்தான். வயிட் கலர் ஷேர்ட்டும், முகம் பார்க்கலாம் போல இருந்த ஷூவும் அவனை இன்னும் கம்பீரமாகக் காட்டியது. நன்றாக ஜெல் தடவி தலையை அடக்கி வைத்திருந்தான். மறுபக்கம் வந்து காரை சுதாகரன் திறந்து விட்டு கையை நீட்ட, அந்தக் கரத்தைப் பற்றியது உமாவின் வெண் பளிங்குக் கரம்

சுதாகரின் ஆடை நிறத்திலேயே கண்ணைப் பறிக்கும் வேலைப்பாடுகள் கொண்ட சராரா அணிந்திருந்தாள் உமா. சொல்லப் போனால் அந்த ஆடையின் கனத்தைத் தாங்க முடியாமல் காரை விட்டு கஷ்டப்பட்டே இறங்கினாள். ஆடையில் இருக்கும் அலங்காரம் போதாததற்கு, அத்தனை ஆபரணங்களைப் பூட்டி இருந்தார் ஆராதனா. தங்கம் என்ற பேச்சிற்கே இடமில்லாமல் அனைத்தும் வைரத்தில் மின்னியது. வந்திருந்த சொந்த பந்தமெல்லாம் வியந்து போய் பார்க்கும் வண்ணம் இருந்தது உமாவின் அலங்காரம்.

அத்தனை கண்களும் தங்களை மொய்த்ததில் உமா கூச்சப்பட, பற்றிய அவள் கையை விடாமல் மேடைக்கு அவளை அழைத்து வந்தான் சுதாகரன். எங்கோ இருந்து பறந்து வந்த விசில் சத்தத்தில் உமாவும், சுதாகரும் திரும்பிப் பார்க்க, அங்கே மகேஷ் நின்றிருந்தான். பெரு விரலையும், சுட்டு விரலையும் வளைத்துப் பிடித்துசூப்பர்என அவன் காட்ட, உமா வெட்கத்தோடு சுதாகரன் முகம் பார்த்தாள். உலகத்தையே வென்று விட்ட மகிழ்ச்சி தெரிந்தது சுதாகரன் முகத்தில்

கண்களில் பெருமிதமும், சந்தோஷமும் பொங்க குந்தவியும், பிரபாகரனும் ஒரு புறம் நிற்க, முகம் கொள்ளாப் பூரிப்போடும், சற்றே பதட்டத்தோடும் நின்றனர் ஆராதனாவும் தமிழ்ச்செல்வனும். இளமாறன் தன் புத்தம் புது மனைவியோடு கிளம்பி வந்திருந்தார். தமிழ்ச்செல்வனின் பெற்றோருக்கு விசாலாட்சியின் பேரில் வருத்தம் இருந்தாலும், தங்களுக்கு கிடைத்திருக்கும் நிறைவான மருமகளின் காரணத்தினால் அவரை இலகுவாக ஏற்றுக் கொண்டனர். சில முகச் சுழிப்புகளை எதிர்பார்த்து, கொஞ்சம் இறுக்கத்துடனேயே மண்டபம் வரை வந்திருந்தார் விசாலாட்சி. ஆனால் இவர்களின் செய்கைகளைப் பார்த்தபோதுமேன்மக்கள் என்றும் மேன்மக்கள் தான்என்றுதான் நினைக்கத் தோன்றியது.

உற்றம், சுற்றம், நண்பர்கள் வட்டம் என அத்தனை பேரும் மேடையேறி வாழ்த்துக்கள் சொல்ல, ஃபோட்டோ, வீடியோ என அந்த இடமே அமளி துமளிப்பட்டது. இது அத்தனையிலும் ஒட்டாமல் ஒரு இறுகிய முகத்தோடு அனைத்தையும் பார்த்திருந்தார் காந்திமதி. முகத்திலிருந்து எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் பார்வை மட்டும் அவ்வப்போது உமாவை தீண்டிச் சென்றது.

நல்ல நேரம் நெருங்கி வர, நிச்சயதார்த்தப் பத்திரிகை படிக்க ஆயத்தங்கள் செய்யப்பட்டன. இப்போது பொறுப்பை தமிழரசி எடுத்துக் கொண்டார். ஆண்கள் அத்தனை பேரும் ஒதுங்கிக் கொள்ள, அந்த மண்டபத்தையே சீர் வரிசைகளால் நிரப்பினார்கள் மாமியாரும், மருமகளும்

ஊரே வியந்து போகும் அளவிற்கு பதினேழு வெள்ளித் தாம்பாளங்களில் தங்க நகைகள் உட்பட சீர்கள் நிரம்பி இருக்க, பாத்திரம், பண்டங்கள் வேறாக அணிவகுத்து நின்றன. சிதம்பரம் ஐயா ஒரு தரம் மீசையை முறுக்கி விட்டுக் கொண்டு சபையை ஒரு பார்வை பார்த்தார். குந்தவியின் முகத்தில் ஒரு திருப்தியும், பெருமையும் தெரிந்தது.

மாப்பிள்ளை வீட்டாரும், பெண் வீட்டாரும் அமர்ந்து கொள்ள, ஐயர் பத்திரிகையை வாசிக்க ஆரம்பித்தார்.

நிகழும் மங்களகரமானஎன்று ஆரம்பித்து பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் வேர்களைச் சொல்லி முடித்தவர், பெரியோர்களின் ஆசியுடன் கோயம்புத்தூர் ஸ்ரீ பிரபாகரன் மற்றும் ஸ்ரீமதி குந்தவி தம்பதியரின் புதல்வன் சிரஞ்சீவி சுதாகரன் என்ற கல்யாணராமனுக்கு, நல்லூரைச் சேர்ந்த ஸ்ரீ தமிழ்ச்செல்வன் மற்றும் ஸ்ரீமதி ஆராதனா தம்பதியரின் புதல்வி சௌபாக்யவதி மாதுமையாள் என்கிற ராஜலக்ஷ்மியை திருமணம் செய்து கொள்ள உத்தேசித்து நிச்சய தாம்பூலம் மாற்றப்படுகிறது. கணீர்க் குரலில் ஐயர் படித்து முடித்து சுபம் சொல்ல, உமாவைப் பார்த்து ரகசியமாக கண்ணடித்தான் சுதாகரன்.

பெண்ணிற்கு அடையாளம் போட ஐயர் அனுமதியளிக்க, தன் பாக்கட்டில் இருந்த அந்த வைர மோதிரத்தை உமாவின் கரம் பற்றி அணிவித்தான் சுதாகரன்

அண்ணா, மோதிரம் மட்டும்தானா?” எங்கிருந்தோ மகேஷ் குரல் கேட்க, உமாவின் முகம் பார்த்தவன், அவள் கையை தன் வசம் எடுத்து புறங்கையில் முத்தம் வைத்தான். சபையிலிருந்த சின்னஞ் சிறுசுகள் ஆரவாரப் பட பெரியவர்கள் புன்னகைத்துக் கொண்டார்கள்

சபையில் உட்கார்ந்திருந்த குந்தவி எழுந்து வந்தவர், தன் மருமகள் கழுத்தில் அந்த நீளமான ஆரத்தை அணிவித்து அழகு பார்த்தார். உமாவின் நெற்றியில் முத்தம் வைத்தவரின் கண்களில் கண்ணீர் நிறைத்திருந்தது. உமா அவரைப் பார்த்து புன்னகைக்க, சுதாகர் அம்மாவை தோளோடு அணைத்துக் கொண்டான்.

சட்டென்று உமாவின் அருகில் வந்த தமிழரசி, அவள் கையில் நீளமான வெல்வெட் பெட்டியை நீட்ட, அவரைக் கேள்வியாகப் பார்த்தாள் உமா.

மாப்பிள்ளைக்கு நீ போட்டு விடும்மா.” சொன்னவர் பெட்டியைத் திறக்க, உள்ளே வைர பிரேஸிலட் மின்னியது. சுதாகரனின் புருவங்கள் ஒரு தரம் ஏறி இறங்கியது. ஆசையாக அந்த பிரேஸிலெட்டை அவன் கரங்களில் உமா அணிவிக்க,

மகேஷ், இப்போ ஒன்னும் கேக்கமாட்டியா?” என்றான் சுதாகர் சத்தமாக. உமா அவனை செல்லமாக முறைக்க, சபையில் சிரிப்பொலி எழும்பியது.

அதன்பிறகு விருந்தும், கேளிக்கைகளும் என பொழுது கரைந்து போக, நெருங்கிய சொந்தங்கள் மாத்திரம் மண்டபத்தில் எஞ்சி இருந்தனர். பிரபாகரனும், குந்தவியும் மன நிறைவோடு சொந்த பந்தங்களோடு அளவளாவிக் கொண்டிருக்க, இளமாறனும், தமிழும் மிச்சம் மீதமிருந்த வேலைகளை முடித்துக் கொண்டிருந்தார்கள். மகேஷும் கூட மாட ஒத்தாசை பண்ணிக் கொண்டிருந்தான். ஆராதனாவும், விசாலாட்சியும் ஒரு புறம் நட்பு பாராட்ட, கதாநாயகனும், கதாநாயகியும் தங்கள் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள். அத்தனை பேரையும் நிஜத்திற்கு இழுத்து வந்தது காந்திமதியின் குரல்.

என்ன தமிழ்? ரொம்பவே பிஸியா இருக்க போல இருக்கு? முகம் அப்பிடியே சந்தோஷத்துல ஜொலிக்குது! இருக்காதா பின்னே, எத்தனை சுலபமா எம் பேரனை வளைச்சுப் போட்டுட்டே.” தீக்கங்குகளாக வந்தது பாட்டியின் குரல்.

ஒரு கணம் அங்கு அத்தனை அமைதி நிலவியது. எல்லோரும் பேச மறந்து சிலையென அமர்ந்திருந்தார்கள். குந்தவியின் முகத்தில் ஒரு பதட்டம் வந்து அமர்ந்து கொள்ள, ஆராதனாவின் கண்கள் ஒரு தரம் இறுக மூடித்திறந்தது. தமிழின் கையை பக்கத்தில் நின்று கொண்டிருந்த மாறன் ஒரு தரம் அழுத்திப் பிடித்தார்.

என்னப்பா, எதுவும் பேச மாட்டேங்கிறே? அது சரி, சந்தோஷம் கூடினா எப்பிடிப் பேச்சு வரும்?” இடக்காக மீண்டும் வந்தது காந்திமதியின் குரல்.

சந்தோஷம் கூடினா மட்டும் எம் பையனுக்கு பேச்சு வராதுன்னு இல்லை காந்திமதி, பெரியவங்க வில்லங்கமா பேசினாலும் எம் பையனுக்கு பேச்சு வராது.” தமிழரசியிடமிருந்து வந்தது பதில். இந்தத் தாக்குதலை எதிர் பார்க்கவில்லை காந்திமதி. ஆனாலும் அத்தோடு நிறுத்தினால் அவர் காந்திமதி இல்லையே.

உள்ளதைத் தானே நான் சொன்னேன். அதுல வில்லங்கம் எங்க வந்துச்சு?”

எது உள்ளது? நாங்க வக்கத்துப் போயி, எங்க பேத்திக்கு மாப்பிள்ளை எடுக்க நாதியில்லாம உங்க பேரனை வளைச்சிப் போட்டிருக்கோம் எங்கிறதா?” சூடாக வந்தது தமிழரசியின் குரல்.

அம்மா, நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க.” தமிழரசியை நோக்கி கெஞ்சலாக வந்தது தமிழின் குரல்.

எதுக்குப்பா அமைதியா இருக்கனும்? இத்தனை நாளும் இந்தம்மா குந்தவியை வெச்சு உன்னை திட்டித் தீத்தாங்க. யாரோ பெத்த பொண்ணுக்காக எதுக்குப்பா நீ தாழ்ந்து போறேன்னு நாங்களும் தலையால அடிச்சிக்கிட்டோம். நீ கேக்கலை.” இதை தமிழரசி சொல்லும் போது குந்தவியின் தலை தானாகக் குனிந்தது. மனைவியின் அவலத்தைப் பார்த்த பிரபாகரனின் கை முஷ்டிகள் இறுக மூடிக் கொண்டன. தமிழரசி தொடர்ந்தார்.

ஆனா இப்போ என்னடான்னா இந்ந அம்மா, ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசியில மனுஷனை கடிச்ச கணக்கா, எம் பேத்தியைப் பத்தி நாக்குல பல்லைப் போட்டு பேசுவாங்க, அதை நான் கேட்டுக்கிட்டு இருக்கனுமா?”

எதுக்கு உங்களுக்கு இத்தனை கோபம் வருது தமிழரசி? இத்தனை பவுசு இருக்கிறவங்க எதுக்கு எம் பேரனை மாப்பிள்ளையாக்க நினைக்கனும்?” காந்திமதி சொல்லி முடிக்க, உமாவின் பார்வை சுதாகரனைத் துளைத்தது. அந்தப் பார்வை சுதாகரனின் உயிர் வரை சென்று மீண்டது.

தப்புத்தான். உங்க பேரனை எங்க பேத்திக்கு எடுத்தது நாங்க பண்ணின பெரிய தப்புத்தான். ஆனா உங்க மகனும், மருமகளும் எங்க வீட்டுக்கு வந்து, சிதம்பரம் ஐயா வீட்டுல பொண்ணு எடுக்கிறது எங்களுக்கு கவுரவம்ன்னு சொன்னப்போ நீங்க எங்க போயிருந்தீங்க?” அம்பாக வந்தது கேள்வி, கொஞ்சம் நையாண்டியோடு. அந்தத் தொனியில் காந்திமதியின் கோபம் உச்சத்திற்கு போனது. வார்த்தைகள் தாறுமாறானது.

அந்த விளங்காதது ரெண்டும் எம் பேரன் மனசை மாத்தி அவனை இந்தப் படுகுழியில தள்ளிடுச்சுங்க.” காந்திமதியின் இந்தப் பதிலில் உமாவின் முகம் கன்றிச் சிவந்தது. அவள் பார்வை இப்போது முற்றாக சுதாகரனை வெறித்துப் பார்க்க, சுதாகரனுக்கு அந்தப் பார்வை பழைய பொழுதுகளை நினைவு படுத்தியது. அவன் ஏதோ பேச வாயெடுக்க, அதற்குள்ளாக முந்தியது குந்தவியின் குரல்,

அத்தை, என்ன பண்ணுறீங்கன்னு தெரிஞ்சுதான் பண்ணுறீங்களா? கொஞ்சம் பதட்டம் இருந்தாலும், தன்மையாக வந்தது குந்தவியின் குரல்.

வாடி என் மருமகளே, இத்தனை நாளும் புள்ளைப் பூச்சி மாதிரி இருந்துக்கிட்டு, இன்னைக்கு உனக்கும் தைரியம் வந்திருச்சா என்னை எதிர்க்க?” காந்திமதி ஆங்காரத்தின் உச்சத்தில் வார்த்தைகளைக் கொட்டினார்.

உங்களை எதிர்க்கனும்னு பேசலை அத்தை. நடந்து முடிஞ்சிருக்கிறது ஒரு சந்தோஷமான விஷயம். இப்போ எதுக்கு இந்த தேவையில்லாத பேச்சு.” அப்போதும் நிதானமாகவே வந்தது குந்தவியின் பேச்சு.

சந்தோஷமா? யாருக்கு சந்தோஷம்? உன்னை எம் பையன் தலையில கட்டி, என்னோட ஆசைகளையெல்லாம் நாசமாக்கின இந்த கேடுகெட்ட பயலோட பொண்ணுக்கு எம் பேரனை நிச்சயதார்த்தம் பண்ணுறது உனக்கு சந்தோஷமா இருக்கலாம். ஆனா எனக்கு அது கேவலம்.” காந்திமதியின் கண்கள் நெருப்பென ஜொலித்தது.

இத்தனை நாட்களும் தன் மனதுக்குள் பூட்டி வைத்திருந்த கோபமும், ஆங்காரமும் வெடித்துக் கிளம்ப காளியாக மாறி நின்றார் சுதாகரனின் பாட்டி. தன் பேரன் தனக்குப் பிடிக்காததை செய்தது மாத்திரமின்றி, தன்னிடம் அனுமதியே கேட்காதது, அவரது தன்மானத்திற்கு விழுந்த பெரிய அடியாகவே நினைத்தார் காந்திமதி. பேரனின் மேலிருந்த பாசம் அவன் ஆசைக்கு குறுக்கே நிற்காவிட்டாலும், மனதில் இருந்த வன்மம் வெடித்துச் சிதற நேரம் பார்த்துக் கொண்டிருந்தது.

ஆனால் குந்தவியின் நிலைமை கவலைக்குரியதாக இருந்தது. இத்தனை வருட வாழ்க்கைக்குப் பிறகும் தன் மாமியார் வாயிலிருந்து இப்படியொரு வார்த்தை, அதுவும் இத்தனை பேருக்கு முன்னால் கேட்டது அவரை ஏதோ பண்ணியது.

பாட்டி…! என்ன வாய் ரொம்பவே நீழுது? எங்கம்மாவை பாத்தா எப்பிடித் தோணுது உங்களுக்கு? கேக்க நாதியத்தவ மாதிரி தோணுதா? நீங்க பெத்ததும், வளத்ததும் வேணும்னா வாயை மூடிக்கிட்டு நிக்கலாம். நான் நிக்கமாட்டேன். இதுக்கு மேலே வாயைத் தொறந்தீங்க…” சுட்டு விரல் நீட்டி மகேஷ் எச்சரிக்க, இப்போது முற்றிலுமாக உமாவின் பார்வை சுதாகரனை குத்திக் கிழித்தது. இப்போதும் அவன் ஏதோ சொல்ல வாய் திறக்க,

டாலிஈஈஈ!” பிரபாகரனின் குரல் பதறிக் கிரீச்சிட்டது. எல்லோரும் பதட்டத்தோடு திரும்பிப் பார்க்கும் போது கண்டதுநெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்த குந்தவியைத் தான். இடது பக்கம் நெஞ்சில் தோன்றிய வலி எங்கெங்கென என்று சொல்ல முடியாத படி பரவிப் படர, மூச்சுக்குத் திணறினார் குந்தவி. பக்கத்தில் நின்றிருந்த பிரபாகரன் அவரைத் தாங்கிப் பிடிக்க, அவர் ஷேர்ட் காலரை இறுக்கிப் பிடித்தவர் அவர் கைகளில் துவண்டு போனார்.

டாலிடாலி…” குந்தவியின் கன்னங்களில் மாறி மாறி அடித்தார் பிரபாகரன். தான் கோயம்புத்தூரின் ஒரு புகழ்பெற்ற இதய நோய் மருத்துவ நிபுணர் என்பதை ஒரு நிமிடம் மறந்து போய் குந்தவியின் கணவராக மாறி நின்றார் பிரபாகரன். சட்டென அவர் அருகில் வந்த உமா,

மாமா, டைமை வேஸ்ட் பண்ணாதீங்க, அத்தை பல்ஸை செக் பண்ணுங்க? கமான், சீக்கிரம்.” அவருக்கு அவசரமாக அவள் உத்தரவிட, அதன்பிறகே நிஜத்தின் வீரியம் உறைத்தது பிரபாகரனுக்கு. அதன் பிறகு ஒரு டாக்டராக மாறிப் போனார் பிரபாகரன்

பேச்சு மூச்சின்றிக் கிடந்த மனைவியை நெடுங்கிடையாகக் கிடத்தியவர், அவர் இடது பக்க மார்பில் தன் உள்ளங் கைகளை சேர்த்து பலமாக அழுத்தினார். மூன்று முறை செய்து முடித்தவர், குந்தவியின் வாயில் வாய் வைத்து காற்றை அவள் நுரையீரலுக்கு முழுவதுமாக அனுப்பினார். அவர் கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருக,

டாலிடாலிஎன்னை விட்டுப் போயிடாத.” வாய் ஜபித்துக் கொண்டிருந்தது. தமிழ்ச்செல்வன் ஆம்பியூலன்ஸுக்கு கால் பண்ணி இருக்க, தனது முதலுதவியை தொடர்ந்தார் பிரபாகரன். இரண்டு முறை செயற்கை சுவாசம் நடந்த போதும் குந்தவியிடம் எந்த அசைவும் இல்லை. இப்போது கைகளால் அழுத்துவதை விடுத்து, இரண்டு கைகளையும் சேர்த்து தன் மனைவியின் நெஞ்சில் குத்தினார் பிரபாகரன். அத்தனை பேரும் பதட்டத்தோடு பாத்திருக்க, மகேஷ் மட்டும்அப்பா!’ என்று ஏதோ சொல்ல வர, அவனை கைப்பிடித்து தடுத்தாள் உமா.

குந்தவியிடம் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்க சற்றே சோர்ந்தார் பிரபாகரன். எத்தனையோ கேஸ்களை சுலபமாக நடத்தி முடித்தவருக்கு கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. அவரின் நிலை புரிந்த உமா,

மாமா, டோன்ட் கிவ் அப், வன் மோர் டைம்…” அவரின் தோளை உலுக்கி நிஜத்துக்கு அவரைக் கொண்டு வந்தாள் உமா. சுய உணர்விற்கு வந்தவர், மீண்டும் ‘CPR’ தொடர்ந்தார். இந்த முறை பலம் அத்தனையையும் திரட்டி குந்தவியை அழுத்தினார். ஆழ மூச்சிழுத்து, தன் உயிரில் கலந்தவளுக்கு உயிர் பிச்சை அளித்த்தார் அந்த ஆருயிர்க் கணவன்

தன் முழு பலத்துடன் ஒட்டு மொத்த சுவாசத்தையும் தன் மனைவிக்கு கொடுத்துவிட்டு களைப்புடன் அவர் நிமிர, ஓர் இருமல் வெடித்துக் கிளம்பியது குந்தவியிடமிருந்து. மூச்சுக்கு அவர் கொஞ்சம் கஷ்டப்பட, அத்தையை தன் மடி தாங்கிக் கொண்டாள் உமா. நிலத்தில் சரிந்து உட்கார்ந்திருந்த பிரபாகரனைப் பார்த்துக் கொண்டே மூச்சுக்கு அவர் சிரமப் பட,

ஒன்னும் இல்லை அத்தை, இப்போவே ஹாஸ்பிடல் போயிடலாம். நீங்க கொஞ்சம் ஸ்ட்ரெயின் பண்ணிக்காதீங்க. மாமாவுக்கு ஒன்னும் இல்லை அத்தை, உங்களை இப்பிடிப் பாத்ததும் கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டாங்க, அவ்வளவுதான்.” குந்தவிக்கு சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தாள் உமா. ஆனால், அவர் கண்கள் மட்டும் பிரபாகரனை விட்டு அகலவில்லை.

சற்று நேரத்தில் ஆம்ப்யூலன்ஸும் வந்து விட, ஸ்ட்ரெச்சரோடு வந்த மருத்துவமனை ஊழியர்களை ஒதுக்கிவிட்டு தங்கள் ஆருயிர்த் தோழியை ஏந்திக் கொண்டார்கள் தமிழ்ச்செல்வனும், இளமாறனும். வேரறுந்த மரம் போல நிலத்தில் அமர்ந்திருந்த தந்தையை கைத்தாங்கலாக எழுப்பி அவரையும் ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றான் மகேஷ்.

அந்த இடமே ஓய்ந்து போயிருந்தது. சில மணித்தியாலங்களுக்கு முன்பு மங்கலகரமாக சிரிப்பும், கேளிக்கைகளும் என இருந்த கல்யாண மண்டபம் இப்போது அநாதை போல காட்சியளித்தது. சுதாகரன் ஒரு மூலையில் தலையை கைகளால் தாங்கியபடி சுவரை வெறித்துப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தான். நிலைமை இத்தனை தூரம் கைமீறிப் போகும் என்று அறிந்திராத காந்திமதி செய்வதறியாது பார்த்திருக்க, அத்தனையையும் நோட்டமிட்டபடி மண்டபத்தை விட்டு வெளியேறினாள் மாதுமையாள்.

 

error: Content is protected !!