vkv 22

vkv 22

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 22

கதவு தட்டும் சத்தம் கேட்கவும் உமா கதவருகில் சென்று

யாரது?” என்றாள்.

மது, நான்தான்டா, கதவைத் திற.” சுதாகரனின் குரல் கேட்கவும் தான் தாழ்ப்பாளை நீக்கினாள். உள்ளே வந்தவன்,

என்னாச்சு மது? எதுக்கு கதவை லாக் பண்ணி வச்சிருக்கே?” என்றான்.

எங்க போனீங்க?”

சும்மாதான், ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸை பாக்கப் போயிருந்தேன்.”

போகும் போது சொல்லிட்டு போகமாட்டீங்களா?”

சொல்லலாம்னு வந்தேன். நீ அசந்து தூங்கிட்டு இருந்தே மது. அதான் டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு…” அவன் முடிக்காமல் இழுக்கவும் அவனை ஒரு பார்வை பார்த்தவள்,

போகும் போது சொல்லிட்டு போங்க. நான் என்னன்னு எடுத்துக்கிறது. அதுக்கப்புறம் சீக்கிரம் வீட்டுக்கு வந்திருங்க. இருட்டிடுச்சுன்னா எனக்கு தனியா இருக்க பயமா இருக்கும்சொல்லி விட்டு டைனிங் டேபிளை நோக்கிப் போனாள்

ஆஹா! மழை வரும் அறிகுறிகள் தெரிந்ததால் தான் இன்று அத்தனை பேரும் ஏழு மணியோடு கிளம்பி இருந்தார்கள். இல்லாவிட்டால் அரட்டைக் கச்சேரி ஒன்பது மணிவரை நீளும். ‘தப்பினேன்டா சாமி, வாழ்க மழைஎன்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான் சுதாகரன்.

ஒரு ஒட்டுதல் இல்லாவிட்டாலும் இத்தனை இயல்பாக அவள் பேசியது சுதாகரனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அவளிடம் சொல்லிவிட்டு போகவே அவள் ரூம் வரை வந்திருந்தான். கடந்த ஒரு வாரமாக இருந்த மன அழுத்தம் நீங்கியதோ, இல்லை அவன் அருகாமை கொடுத்த ஆறுதலோ எதுவோ ஒன்று அவளுக்கு நிம்மதியைக் கொடுக்க மீண்டும் அடித்துப் போட்டாற் போல தூங்கி விட்டாள் உமா. சொல்ல வந்தவன் சொல்லிக் கொள்ளாமலேயே போய்விட்டான்.

நேராக டைனிங் டேபிள் சென்றவள் அவன் வாங்கி வந்திருந்த டின்னரை ப்ளேட்டில் வைத்துக் கொண்டிருந்தாள். அப்போதுதான் அவளை ஆழ்ந்து பார்த்தான். மெல்லிய பின்க் நிற நைட்டியில் கூந்தலை பின்னாமல் விரித்து விட்டிருந்தாள். இடையைத் தழுவி நின்ற கூந்தலைப் பார்த்து பெருமூச்சு விட்டான் சுதாகரன். நண்பர்கள் வேறுமச்சான் ஃபர்ஸ்ட் நைட்டா இன்னைக்கு?’ என்று உசுப்பி விட்டிருந்தார்கள். அவர்கள் கேலியை சமாளிப்பதற்குள் போதும் போதுமென்றாகி இருந்தது. அது போதாததற்கு இவள் வேறு சோதிக்கிறாளே! சுதாகரன் மனது புலம்பித் தீர்த்தது.

ஒன்றாக வளர்ந்திருந்தாலும் பருவ வயதின் ஆரம்பத்திலேயே ஏற்பட்ட பிணக்கினால் சுதாகர் உமாவைப் பார்த்த தருணங்கள் சொற்பம் தான். அதிலும் அவளை இதுபோன்ற பிரத்தியேக ஆடைகளில் பார்த்ததே கிடையாது. வரி வடிவத்தில் மெய்மறந்து நின்றான் அவள் கணவன். சாப்பாட்டை பரிமாறியவள் அவனைத் திரும்பிப் பார்க்க, சமர்த்தாக வந்து அமர்ந்து கொண்டான்.

சப்பாத்தியை போட்டுக் கொண்டவள் டீவியை ஆன் பண்ணினாள். இனிமையான பாடல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. ஆனால் அதுவும் சுதாகரனுக்கு சோதனையாகவா வந்து விடியவேண்டும்?

குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்

மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்.

விஜயகாந்தும், கஸ்தூரியும் திரையில் இருபது பேர் நடனமாட, கூடவே ஆடிக் கொண்டிருந்தார்கள். பாட்டில் உமா லயித்துப் போக காதைப் பொத்திக் கொண்டான் சுதாகர். அது ஒரு பாடாக முடிய, அடுத்து ரஜனியும், மீனாவும் ஆரம்பித்தார்கள்.

ஒருநாளும் உனை மறவாத

இனிதான வரம் வேண்டும்.

சுதாகரனுக்குப் பொறுமை பறந்தது. அதற்கு மேல் பொறுக்க முடியாமல்,

மது, டீவியை ஆஃப் பண்ணுறயா? ப்ளீஸ்…” என்றான்.

ஏன்? நல்ல பாட்டுத்தா…” சொல்லிக் கொண்டே அவனைத் திரும்பிப் பார்த்தவள், பாதியில் நிறுத்திவிட்டாள். அந்தக் கண்களில் அத்தனை தாபம் இருந்தது. அதன் பிறகு அங்கு மௌனமே குடிகொண்டிருந்தது.

சாப்பிட்டு முடித்தவள் மொட்டை மாடிக்குப் போனாள். லைப்ரரியாக இருந்த ரூமிற்குப் பக்கத்தால் படிக்கட்டுகள் போக மேலே மொட்டை மாடி இருந்தது. குழந்தைகளாக இருந்த போது, உமாவும், மகேஷும் இந்த மொட்டை மாடியில் விளையாடியது இன்னும் ஞாபகம் இருந்தது உமாவிற்கு.

சுற்றிவர இருந்த இடை உயரக் குட்டிச் சுவரில் சாய்ந்து கொண்டவள் தூரத்தே தெரிந்த சிங்கா நல்லூர் ஏரியை பார்த்தபடி நின்றாள். சுதாகரனின் பார்வை அவளை ஏதோ செய்தது. எப்போதும் தன் உணர்வுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் அத்தான், தான் நினைத்ததையே நடத்தி முடிக்கும் அத்தான் இன்று அத்தனை அனுசரனையாக நடப்பது ஆச்சரியமாக இருந்தது

அவனை அப்படிப் பார்ப்பதற்கு கஷ்டமாக இருந்தாலும், இது இப்படியே தொடர்ந்தால் தானும் இன்னுமொரு குந்தவியாகத்தான் மாற வேண்டி இருக்கும் என்று அவள் உள் மனது எச்சரித்தது. எண்ணத்தின் நாயகனே படியேறி இவள் பக்கத்தில் வந்து நின்றான்.

மது, நாளையிலிருந்து நான் மில்லுக்கு போகலாம்னு நினைக்கிறேன். ஒரு வாரத்துக்கு மேல லீவ் போட்டாச்சு. இனிமேலும் போகாட்டி நல்லா இருக்காது.” அவன் சொல்லவும் தலையாட்டினாள் உமா.

உனக்கு இன்டெர்ன் தொடங்க கொஞ்ச நாளாகும் இல்லையா? அதுவரைக்கும் அம்மா கூட ஹாஸ்பிடல்ல…” வழமை போல இன்றும் அவளுக்கும் சேர்த்து அவனே முடிவெடுத்து பேசிக்கொண்டே போனவன், பாதியிலேயே தன் தவறை உணர்ந்து பேச்சை நிறுத்தினான்.

சொல்லு மது, உன்னோட ஐடியா என்ன? என்ன பண்ணுறதா இருக்கே?” என்றான் அவனது கேள்வியில் ஆச்சரியப் பட்டவள்,

நல்லா தூங்கனும், ரெஸ்ட் எடுக்கனும், அம்மா, அப்பாவோட டைம் ஸ்பென்ட் பண்ணனும்.” என்றாள்.

தாராளமா பண்ணு. நாளையிலிருந்து சமையலுக்கு ஆள் வந்திரும். அவங்களே வீட்டையும் க்ளீன் பண்ணிடுவாங்க. நீ நல்லா தூங்கி ரெஸ்ட் எடு. உங்க வீட்டுக்கு எப்பெல்லாம் தோணுதோ அப்பெல்லாம் போ. தகவல் சொல்லிட்டேன்னா அதுக்கேத்தா மாதிரி நானும் ப்ளான் பண்ணிக்குவேன். ஏன்னா இந்த வீட்டுக்கு ஒரு சாவி தான் இருக்கு.” அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மின்னல் ஒன்று அடித்து, இடி இடித்தது

மழை வரும் போல தெரியுது.” சொன்னவள், சட்டென்று உள்ளே சென்று விட்டாள். கைகளைக் கட்டிக் கொண்டு இயற்கையை கொஞ்ச நேரம் ரசித்திருந்தான் சுதாகரன். எங்கும் இருள் படர்ந்திருக்க, தூரத்தே மின்னல் வெளிச்சத்தில் தெரிந்த ஏரியும், உடலைத் தழுவிச் சென்ற குளு குளுக் காற்றும் அத்தனை சுகமாக இருந்தது

கொஞ்சம் பெரிதாக இடி இடிக்கவே மொட்டை மாடியின் கதவை மூடிவிட்டு படிகளில் இறங்கிக் கொண்டிருந்தான். கதவுகள் அனைத்தும் லாக் பண்ணி இருக்கவே, ஒரு குளியல் போட்டு விட்டு தூங்கலாம் என்ற எண்ணத்தோடு கை நீட்டி சோம்பல் முறித்தவனைக் கலைத்தது அவன் ஃபோன். மெஸேஜ் ஒன்று வந்திருக்கவே எடுத்துப் பார்த்தான். தமிழ்ச்செல்வன் அனுப்பி இருந்தார்.

இடி இடித்தால் உமா பயப்படுவாள், கொஞ்சம் கவனித்துக் கொள்என்றிருந்தது மெஸேஜ். வாய்விட்டுச் சிரித்தான் சுதாகரன். சின்னப் பெண்ணாக இருக்கும் போது அவள் அப்படிப் பயப்படுவது சுதாகரனுக்குத் தெரியும். ஆனால் இன்னும் அது தொடர்வது அவனுக்குத் தெரியாது. நேராக அவள் ரூமிற்குச் சென்று கதவைத் திறந்து பார்க்க, முழங்காலில் முகம் புதைத்து, காதிரண்டையும் கரங்களால் பொத்தி கட்டிலில் அமர்ந்திருந்தாள்

பொங்கிய சிரிப்பை அடக்கிக் கொண்டான் சுதாகரன். இப்போது சிரித்தால் அடி நிச்சயம் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். கதவைத் திறந்த சத்தம் கேட்டும் அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை. அவளருகில் கட்டிலில் போய் அமர்ந்தவன்,

மது.” என்றான். அப்போது பார்த்து பலமாக இடி இடிக்க அவனுக்குள் புதைந்து கொண்டாள் உமா. அவளை லேசாக அணைத்து முதுகில் தட்டிக் கொடுத்தவன்,

என்ன மது இது? சின்னக் குழந்தை மாதிரி.” என்றான். அதற்கும் அவளிடம் பதிலில்லாமல் போக,

தூங்குடா.” என்றான். அவன் ஷேர்ட்டை அவள் இறுக்கிப் பிடிக்க,

இல்லையில்லை, நான் போகல்லை. நீ நிம்மதியா தூங்கு மது.” சொன்னவன் அவளை வசதியாகப் படுக்க வைத்து பக்கத்தில் அமர்ந்து கொண்டான். அவனை ஒட்டிக் கொண்டே உறங்கிப் போனாள் உமா. அவள் அருகாமை இதம் கொடுக்க சுதாகரனும் உறங்கிப் போனான்.

கன்னத்தில் யாரோ தட்டவும் கண்விழித்துப் பார்தான் சுதாகரன். அறைக்குள் வெளிச்சம் பரவியிருக்க, உமாவின் முகம் மிகவும் அருகாமையில் தெரிந்தது

மழை விட்டிருச்சு.” என்றாள். ‘என்ன சொல்கிறாள் இவள்?’ ஒன்றும் புரியாமல்,

சரிடா.” என்றவன் புரண்டு படுக்க எத்தனிக்கும் போதுதான் அதைக் கவனித்தான். அவள், அவன் மார்பில் முகம் புதைத்துப் படுத்திருக்க, அவளை அசைய விடாமல் அவன் அணைத்துப் பிடித்திருந்தான். ‘இதுக்குத் தான் அம்மணி முறைச்சுப் பாத்தாங்களா? அவங்க நம்ம மேல தலை வெச்சுக்குவாங்களாம், ஆனா நாம மட்டும் அணைச்சுக்கிட்டா முறைப்பாங்களாம். நல்ல நியாயம்டா சாமி.’ மனதுக்குள் நினைத்துக் கொண்டவன்,

சாரி மது.” சொல்லிவிட்டு கைகளை விலக்கிக் கொண்டு புரண்டு படுத்தான்.

உங்க ரூம் அங்க இருக்கு.” கண்களைச் சுருக்கி ஒரு விதமாகச் சொன்னாள் உமா. சொன்னவளைத் தலையைத் திருப்பிப் பார்த்தவன்,

சரிதான் போடி.” என்றுவிட்டு, விட்ட தூக்கத்தை தொடர்ந்தான். பாத்ரூமிற்கு போன உமா முகத்தில் லேசான புன்னகை இருந்ததோ!

                                         —————————————————————–

மில்லில் முடிக்க வேண்டிய வேலைகள் நிறையவே இருந்தது சுதாகரனுக்கு. ரொம்ப பிஸியாக அதில் மூழ்கி இருந்தவனைக் கலைத்தது தமிழின் குரல்.

சுதா, எப்போ வந்தே? வெளியே காரைப் பாக்கலையே நான்.” தமிழின் குரலில் அத்தனை துள்ளல் இருந்தது. அவரைப் பார்த்துப் புன்னகைத்தவன்,

மது என்னை ட்ராப் பண்ணிட்டு அத்தையை பாக்கப் போயிருக்கா மாமா.” என்றான்

என்னது, உமா வீட்டுக்கு போயிருக்காளா?” என்று ஆச்சரியப் பட்டவர், மாறனை உரக்க அழைத்தார். பதறியடித்துக் கொண்டு வந்த மாறனிடம்,

மாறா, இன்னைக்கு இருக்கிற மீட்டிங்கை நீயும், சுதாவும் பாத்துக்கங்க. நான் வீட்டுக்கு போறேன்.” சொல்லிவிட்டு நகர்ந்தவரைத் தடுத்தது இளமாறனின் குரல்.

என்னாச்சு தமிழ்? இப்போ தானே வந்தே.” கேட்டவருக்குப் பதில் சொல்லாமலேயே போய்விட்டார் தமிழ்ச்செல்வன்.

என்னாச்சு சுதா? எதுக்கு இப்பிடி கண் மண் தெரியாம ஓடுறான்.”

ஒன்னுமில்லை மாமா, மது வீட்டுக்கு போயிருக்கான்னு சொன்னேன். அதான் பொண்ணைப் பாக்க இந்த ஓட்டம் ஓடுறாங்க.” சுதா சொல்லி முடிக்க வாய் விட்டுச் சிரித்தார் இளமாறன்.

…! அதுதான் சங்கதியா?” சொல்லியபடி சுதாவின் பக்கத்தில் அமர்ந்தவர்,

அப்புறம், எப்பிடிப் போகுது சுதா வாழ்க்கை?” என்றார். அவரைப் பார்த்து சோர்வாகப் புன்னகைத்தான் சுதாகரன். பெருமூச்சு ஒன்று மட்டுமே பதிலாகக் கிடைத்தது. அவன் முதுகில் தட்டிக் கொடுத்தவர்,

கவலைப்படாதே சுதா. எல்லாம் காலப் போக்குல சரியாகிடும். உன் மேல உமா எவ்வளவு அன்பு வச்சிருக்கான்னு நான் சொல்லி நீ தெரிஞ்சுக்க வேண்டியதில்லை. அந்த அன்பு நிச்சயம் எல்லாத்தையும் சரி பண்ணிடும்.” என்றார்.

ரொம்பவே கில்ட்டியா இருக்கு மாமா. தமிழ் மாமாவோட பொண்ணுக்கு நடக்க வேண்டிய கல்யாணம் மாதிரியா நடந்துது எங்க கல்யாணம். அவங்களுக்கு எவ்வளவு ஆசை இருந்திருக்கும். எல்லாத்தையும் நான் நாசம் பண்ணிட்டேன்

அப்பிடி இல்லை சுதா. கல்யாணம் சிம்பிளா நடந்தது வருத்தமா இருந்தாலும், நீயும், உமாவும் கல்யாணம் பண்ணிக்கிட்டது தமிழுக்கு அத்தனை சந்தோஷம். இப்போ என்ன? ஊரைக் கூட்டி பெருசா ஒரு விருந்து வெச்சு உங்க கல்யாணத்தை அறிவிச்சாப் போச்சு. என்ன நான் சொல்றது?” சோர்ந்திருந்தவன் முதுகில் பலமாகத் தட்டியவர்,

சியர் அப் சுதா. புதுசாக் கல்யாணம் ஆனவன் மாதிரியா இருக்கே. கலகலப்பா இருப்பா.” என்றார்.

முடியலை மாமா.‌ நான் தான் எல்லாத்தையும் நாசம் பண்ணிட்டேன். என்னையே சுத்தி சுத்தி வந்த பொண்ணு. இப்போ மூணாவது மனுஷி மாதிரி பேசுறப்போ வலிக்குது.” 

சரி விடு, உமாவோட கோபம் நமக்குத் தெரிஞ்சது தானே. எல்லாம் சரியாப் போயிடும்.”

இது கோபம் இல்லை மாமா, வருத்தம். நான் அவளை விட்டுக் குடுத்துட்டேனேங்கிற வருத்தம்.”

ம்புரியுது.”

தாத்தாவை எங்கம்மாவே பாத்தது கிடையாது. அப்பாவும் பாட்டியை எதிர்த்து அம்மாவை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அவங்க உலகமே நான் தான். அவங்களை எதிர்த்துப் பேச என்னால முடியாது எங்கிறதுக்காக, நான் மதுவை விட்டுக் கொடுக்கிறேன்னு அர்த்தம் இல்லை மாமா. இதுவே இன்னொருத்தர் முன்னாடி நான் அவளை விட்டுக் கொடுத்திருவேனா, சொல்லுங்க?”

கண்டிப்பா மாட்டே.”

மதுவைக் காணலைன்னு சொன்னப்போ உயிரே போயிடுச்சு. அவளை எம்பக்கத்திலேயே வெச்சுக்கனும்னு தோணிச்சு. அவ்வளவுதான் மாமா. எனக்கு இந்த உலகத்துல வேற எதுவும் வேணாம். எம் மது என் பக்கத்துல, என் கண்பார்வையில பத்திரமா இருந்தா போதும்.”

புரியுது சுதாகரா.”

எங்கம்மா, அப்பா பத்தி நான் கவலைப்படலை. அவங்களுக்கு எப்பிடியாவது நான் மதுவைக் கல்யாணம் பண்ணிக்கனும், அவ்வளவுதான். ஆனா, அத்தை, மாமாக்கு நான் நியாயம் பண்ணலேன்னு தோணுது மாமா.”

இல்லைப்பா. நானும், குந்தவியும் என்ன நினைக்கிறோமோ அதுதான் தமிழோட எண்ணமும். நடந்த நி்கழ்வுல தமிழுக்கு சந்தோஷம்தான். ஆனா ஆராதனாவுக்குத் தான் வருத்தம் இருக்கு. அவங்க பொண்ணு இல்லையா சுதாகரா? அதுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் குடுக்கனும்னு தானேப்பா அவங்க நினைப்பாங்க?”

கண்டிப்பா மாமா, அதை நான் தப்பு சொல்லலை.”

ஒன்னுக்கும் வழி இல்லாதவங்களே தன்னோட குழந்தைகள் நல்லா வாழனும்னு தான் நினைப்பாங்க. அப்பிடி இருக்கும் போது, தமிழோட அந்தஸ்துக்கு அவங்க எவ்வளவு பெரிய இடமா பாத்திருக்க முடியும் சொல்லு?”

“…………..”

உன்னை நான் குறைச்சுப் பேசுறதா நீ நினைக்காதே. எம் பையனை நானே அப்பிடிப் பேசுவனா? நான் யதார்த்தத்தை சொல்லுறேன்.”

நான் தப்பா எடுக்கலை மாமா.”

அத்தனையையும் தாண்டி இந்த நிச்சயதார்த்தம் நடந்ததுன்னா, அதுக்குக் காரணம் உமாவும், தமிழும் தான். ஆராதனாக்கு இந்தக் கல்யாணம் ஆரம்பத்துல இருந்தே பிடித்தம் கிடையாது. அது எனக்கு நல்லாவே தெரியும்.”

ம்…”

தமிழுக்கு உன்னை தன்னோட மாப்பிள்ளையா எடுக்கனும்னு ரொம்பவே பிரியம்.”

என்னை இல்லை மாமா, குந்தவியோட மகனை.” இதைச் சொல்லும் போது லேசாகச் சிரித்தான் சுதாகரன்.

குந்தவியோட மகன்தான் வேணும்னா மகேஷை செலக்ட் பண்ணி இருக்கலாமே. எவ்வளவு அழகா உங்க பாட்டியை ஆஃப் பண்ணுறான். அப்பிடி இல்லை சுதா. தமிழுக்கு உன்னை ரொம்பவே பிடிக்கும். இப்போ நீ அவனோட ஒட்டுமொத்த சொத்தையும் கேளு, எதையும் யோசிக்காம கண்ணை மூடிக்கிட்டு சைன் பண்ணுவான்.”

அந்த அன்புக்கு நான் நியாயம் பண்ணலையே மாமா.” 

ஏன் அப்பிடி நினைக்குறே? இதுவரைக்கும் பண்ணலைன்னா என்ன? இனிப் பண்ணு. அவனோட பெரிய சொத்தே உங்கிட்ட தானே இருக்கு. அதை பத்திரமா பாத்துக்க. அதை உள்ளங்கையில வெச்சுத் தாங்கு. இதைவிடப் பெரிய சந்தோஷத்தை தமிழுக்கு யாரும் குடுத்திற முடியாது சுதா. தமிழோட சந்தோஷம் மட்டும் இல்லை, அவன் குடும்பத்தோட சந்தோஷமே இப்போ உங் கையில்தான் இருக்கு சுதா.” சொல்லி முடித்த இளமாறன், சுதாகரனைத் தோளோடு அணைத்துக் கொண்டார்.

உமாக்கிட்ட தன்மையாப் பேசு. நீ எவ்வளவு அன்பு அவமேல வெச்சிருக்கேன்னு காட்டு. அவளுக்கே அது தெரிஞ்சிருந்தாலும், அதை நீயா உணர வைக்கும் போது இன்னும் நம்பிக்கை வரும். இப்போ மீட்டிங்குக்கு போகலாமா?” இளமாறன் குறும்பாகக் கேட்கவும், சிரித்தான் சுதாகரன்.

 

 

 

 

error: Content is protected !!