வண்ணம் கொண்ட வெண்ணிலவே 27

லேசாக வெளிச்சம் ரூமிற்குள் எட்டிப் பார்க்கவும் கண் விழித்தான் சுதாகரன். பக்கத்தில் உமாவைக் காணவில்லை. சட்டென்று மூண்ட கோபத்துடன்,

மதூ…!” என்றான் சத்தமாக. அவன் போட்ட சத்தத்தில் அடித்துப் பிடித்து ஓடி வந்தாள் உமா.

என்ன அத்தான்? என்ன ஆச்சு?” அவள் முகத்தில் பதட்டம் தெரிந்தது. அவளையே ஆழ்ந்து பார்த்தான் சுதாகரன்.

எப்படா விடியும், ஓடலாம்னு பாத்துக்கிட்டே இருப்பியா?” நிதானமாக அவன் கேட்ட பாணியில் அவளுக்குச் சிரிப்பு வந்தது.

இதுக்குத் தான் இப்பிடி சத்தம் போட்டீங்களா? நான் பயந்து போயிட்டேன். காஃபி கொண்டு வரட்டுமா?”

ம்…”

பார்வதி அம்மா இன்னும் வரலை. நான் தான் போடுவேன், பரவாயில்லையா?”

ம்ம்பரவாயில்லை. உன் காஃபியும் வர வர முன்னேறுது மது. ஸோ டோன்ட் வொர்ரி.” சொல்லிவிட்டு பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டான் சுதாகரன்

கிச்சனில் நின்றிருந்தாள் உமா. ரெண்டு காஃபி தயாரிக்க குறைந்தது அரை மணி நேரமாவது தேவைப்பட்டது அவளுக்கு. காலைக்கடன்களை முடித்துக் கொண்டு வந்த சுதாகரன் அவளைப் பின்னோடு அணைத்துக் கொண்டான்.

மது…”

ம்…”

காஃபி இன்னைக்கு கிடைக்குமா? இல்லை…”

ஸாரி அத்தான். என்னதான் தலை கீழா நின்னாலும் இந்தக் கிச்சன் வேலை மட்டும் எனக்குப் பிடி படவே மாட்டேங்குது.”

பரவாயில்லை விடு, கொஞ்சம் கொஞ்சமா பழகிக்கலாம்.” சொல்லிவிட்டு, அவள் கொடுத்த காஃபியை வாங்கிக் கொண்டான் சுதாகரன். ஆவலாய் அவன் முகத்தையே அவள் பார்த்திருக்க,

ம்டோன்ட் வொர்ரி, செம டேஸ்ட்டா இருக்கு.” என்றான். அந்தச் சின்னப் பாராட்டில் மகிழ்ந்து போனாள் உமா

அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் சுதாகரன். எதையோ கேட்க அவள் நினைப்பதும், பின் தயங்குவதும் அப்பட்டமாகத் தெரிந்தது. எதுவாக இருந்தாலும் அவள் வாயிலிருந்தே வரட்டும் என்று அமைதியாக இருந்தான்.

அத்தான்.”

ம்…”

கார்த்திக் அண்ணா கால் பண்ணினாங்களா?”

நைட்டே பண்ணினான் டா.”

அவங்க ஏதாவது வருத்தப்பட்டாங்களாமா?”

எவங்க?” சீரியஸாகக் கேட்டான் சுதாகரன். அவன் அருகில் வந்து, அவன் டீ ஷேர்ட்டை விரல் நுனியால் அளந்தாள் உமா.

அவங்க தான், அந்த ரவீனா.” அவள் பதிலில் முறைத்துப் பார்த்தான் சுதாகரன்.

இல்லை அத்தான். வருத்தப்பட்டுக்கிட்டே போனாங்களாஅதான் மனசு கேக்க மாட்டேங்குது.”

மது, என் மனசை, என் லவ்வை நான் உனக்கு இன்னும் சரியாக் காட்டலையோன்னு தோணுது.”

அப்படியெல்லாம் இல்லை அத்தான். உங்களை நான் சரியாப் புரிஞ்சுக்கிட்டதால தான் நேத்து நீங்க தப்பினீங்க.”

அப்பிடியா? ஐயையோ, பயமா இருக்கே! இல்லைன்னா அம்மணி என்ன பண்ணியிருப்பீங்க?”

சும்மா போங்க அத்தான், கேலி பண்ணிக்கிட்டு.” அவனை விட்டு அவள் நகர்ந்து போக, அவள் பின்னோடு போனான் சுதாகரன்.

மத்தவங்களுக்காக எல்லாம் நம்மால வாழ முடியாது மது.”

புரியுது அத்தான். இருந்தாலும் மனசுல ஒரு சின்ன சங்கடம். ஐயோ! அந்தப் பொண்ணு ஆசை நிறைவேறல்லையேன்னு.”

அப்போ அத்தானைத் தூக்கி அவளுக்குக் குடுத்திடு.” அவன் சொன்னதுதான் தாமதம், கை வேலையை விட்டுவிட்டு அவனை இறுக்கமாக அணைத்தாள் உமா.

ஐய்யைய்யோ! நான் மாட்டேன்பா.” என்றவளை இன்னும் தன்னோடு சேர்த்தணைத்தான் சுதாகரன்.

முடியாதுன்னு புரியுதில்லை, அப்புறம் உனக்கெதுக்குடி இவ்வளவு வாய்அந்தத் தனிமையை இருவரும் மனமாற ரசித்தார்கள்

அத்தான்…”

ம்…”

இன்னைக்கு கண்டிப்பா மில்லுக்குப் போகணுமா?”

இல்லாட்டி முதலாளி திட்டுவாரே மது.”

திட்டிடுவாரோ உங்க முதலாளி? அவர் வாயிலேயே ஒன்னு போட்டுற மாட்டேன்.”

ஹாஹாஅப்பிடியா மது? இதுக்காகவே எங்க முதலாளியை உன் கண் முன்னாடி என்னைத் திட்டச் சொல்லனும்.”

அத்தான்விளையாடாதீங்க. கண்டிப்பா இன்னைக்குப் போகணுமா?” சிணுங்கினாள் உமா.

ஆமாண்டா. நேத்து கோயம்புத்தூர் வரைக்கும் போன வேலை சக்ஸஸ் ஆயிடுச்சு இல்லையா, அது சம்பந்தமா கொஞ்சம் வேலை இருக்கு. அதை முடிச்சுட்டு சீக்கிரமா லன்ச்சுக்கு வந்திடுவேன். கே.”

ம்…” சொல்லிக் கொண்டு இருக்கும்போதே பார்வதி அம்மா வந்துவிட, விலகிப் போனான் சுதாகரன்.

                           ——————————————————————

பார்வதி அம்மா சமையலை முடித்துவிட்டுக் கிளம்பிப் போயிருக்க, சுதாகரனுக்காகக் காத்திருந்தாள் உமா. லேசான அலங்காரம் வேறு

சீக்கிரமாவே வாறேன்னு சொல்லிட்டு என்ன பண்ணுறாங்க அத்தான்?’ எண்ணமிட்டபடி குறுக்கும், நெடுக்குமாக நடை பயின்று கொண்டிருந்தவளைக் கலைத்தது ஃபோன். குந்தவி அழைத்துக் கொண்டிருந்தார்.

சொல்லுங்க அத்தை.”

உமா, நம்ம கார் வீட்டுக்கு வெளியே நிக்குது. நீ கொஞ்சம் ஹாஸ்பிடல் வரைக்கும் வர்றியாடா?”

என்னாச்சு அத்தை? ஏதாவது க்ரிடிகல் கேஸா? எனக்கு யூஸ்ஃபுல்லா இருக்குமா?”

நீ வாடா, நான் அதுக்கப்புறம் விளக்கமாக எல்லாம் சொல்லுறேன்.”

இப்போ என்னால வர முடியாது அத்தை. அத்தான் இப்போ சாப்பிட வருவாங்க, நான் அவங்களுக்காகத்தான் காத்துக்கிட்டு இருக்கேன்.” இவள் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே, குந்தவியின் ஃபோனை யாரோ வாங்கினார்கள்.

மது…” தீனமாக ஒலித்தது சுதாகரனின் குரல்

அத்தான், என்னாச்சு அத்தான்? ஹாஸ்பிடல்ல நீங்க என்ன பண்ணுறீங்க?” பதட்டத்தோடு சத்தம் போட்டாள் உமா

ஒரு சின்ன ஆக்ஸிடென்ட் மது.” சுதாகர் கையிலிருந்த ஃபோனை வாங்கிய குந்தவி,

பயப்படுற மாதிரி ஒன்னுமே இல்லை உமா. மில்லுல இருந்த மெஷின் ஒன்னு லேசாக கிழிச்சிருக்கு. நீ கிளம்பி உடனே வா.” குந்தவி சொன்னதுதான் தாமதம், காரில் இருந்தாள் உமா.

மூளை மரத்துப் போனாற் போல் இருந்தது. வீட்டைப் பூட்டினாளா இல்லையா எதுவுமே ஞாபகம் இல்லை. சுதாகரனைப் பார்க்கும் வரை துடித்துக் கொண்டிருந்தாள். ட்ரைவரை விரட்டாத குறையாக ஹாஸ்பிடல் வந்து சேர்ந்திருந்தாள். அடித்துப் பிடித்து ஓடி வந்தவளைப் பிடித்து நிறுத்தினார் குந்தவி.

அத்தை, அத்தான் எங்க? என்னாச்சு அத்தை?” 

உமா, எதுக்கு இப்பிடி டென்ஷன் ஆகுற? நான் தான் ஒன்னும் இல்லேன்னு சொல்லுறேன் இல்லையா?”

அத்தானை நான் பாக்கணும்.” கண்ணீர்க் குரலில் குழந்தை போல சொன்னாள் உமா.

ஒரு டாக்டர் மாதிரி பிஹேவ் பண்ணு உமா.”

நான் இப்போ உங்க பையனோட பொண்டாட்டி, டாக்டர் கிடையாது. என் அத்தான் எங்கேன்னு சொல்லுறீங்களா?” காட்டமாக குந்தவி மேல் பாய்ந்தாள் உமா. வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டவர், ரூமிற்கு அவளை அழைத்துச் சென்றார்.

கட்டிலில் கால் நீட்டிப் படுத்திருந்தான் சுதாகரன். முழங்காலிற்குக் கீழே பெரிதாக பேன்டேஜ் போடப்பட்டிருந்தது. கொஞ்சம் ஆழமாக இருந்ததால் தையல் போட்டிருந்தார்கள்.

அத்தான், என்னாச்சு? எதுக்கு நீங்க மெஷின் பக்கமெல்லாம் போனீங்க?” கேட்டபடி அவன் பக்கத்தில் அமர்ந்தாள் உமா

அது ஒன்னுமில்லை மது. இந்த மெஷினை மாத்தனும்னு மாமா சொன்னாங்க. அதான் ஒரு தரம் பாக்கலாம்னு போனேன்.” குரலில் வலியின் அளவு தெரிந்தது.

இதெல்லாம் நீங்கதான் அங்க பண்ணனுமா? அந்த என்ஜினீயர் என்ன பண்ணுறார்.” 

என்ன மது பேசுற? அவங்க பண்ணினாலும் நாமளும் ஒரு கண்ணை வெச்சுக்கனும் இல்லையா?” சுதாகரன் பேசிக் கொண்டிருக்கும் போது உள்ளே நுழைந்த தமிழ்ச்செல்வன் வசமாக மாட்டிக் கொண்டார்.

என்னப்பா இது? இவ்வளவு பெரிய காயம் வர்ற மாதிரி அப்பிடி என்ன மெஷினை வச்சிருக்கீங்க? பழுதானா தூக்கிக் குப்பையில போட மாட்டீங்களா?” தன் மீது பாய்ந்த மகளை பரிதாபமாகப் பார்த்தார் தமிழ்.

அதுவந்துஉமா, இருபது லட்சம் பெறுமதியான மெஷின்…” 

உங்களுக்கு காசுதான் இப்போ பெருசாப் போச்சா? இவளின் கேள்விக்கு ஏதோ பதில் சொல்லப் போன தமிழைத் தடுத்த குந்தவி, அவர் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு ரூமை விட்டு வெளியே வந்தார்.

சாரி குந்தவி, நான் இப்பிடி நடக்கு…” தமிழ் சொல்லி முடிப்பதற்குள் அங்கிருந்த பென்ச்சில் அமர்ந்த குந்தவி விழுந்து விழுந்து சிரித்தார். சிரிக்கும் குந்தவியை ஆச்சரியமாகப் பார்த்தார் தமிழ்ச்செல்வன்.

என்ன தமிழ், இந்த உமா இப்பிடிப் பண்ணுறா? நான் அவனோட அம்மா, என்னையே மிரட்டுறா?” சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தார் குந்தவி.

கொஞ்சம் பெரிய காயம்தான் தமிழ், இல்லேங்கலை. ஆனா உம் பொண்ணு மிரட்டுற அளவுக்கு ஒன்னும் இல்லைப்பா.”

நான் சுதாக்கிட்ட மெஷினைப் பத்தி மட்டும் தான் சொன்னேன் குந்தவி. அந்த செக்ஷ்னுக்கு நாங்க யாருமே அத்தனை சுலபத்துல போகமாட்டோம். ஆனா சுதாக்கு எல்லாத்தையும் ஆராயனும்.” 

எனக்குத் தெரியாதா தமிழ். அவன் எப்பவுமே அப்படித்தானே. எல்லாத்தையும் அக்கு வேற ஆணி வேறா அலசுவான்.” இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஓட்டமும் நடையுமாக வந்தார் இளமாறன்

என்னாச்சு தமிழ்? சுதாக்கு அடிபட்டிடுச்சுன்னு மில்லுல சொன்னாங்க.” அடித்துப் பிடித்துக்கொண்டு ரூமிற்குள் போகப் போனவரை இழுத்துப் பிடித்தார் குந்தவி.

நாங்க இப்போதான் உமா வாயாலே நல்லா வேண்டிக் கட்டிக்கிட்டு இருக்கோம். நீயும் போய் வாங்கப் போறயா மாறா?” குந்தவி கேட்கவும், வியப்பாகப் பார்த்தார் இளமாறன்.

எதுக்கு உமா உங்களைத் திட்டுறா?” இளமாறன் கேட்கவும் அத்தனையையும் சொன்னார் தமிழ்ச்செல்வன்

என்னோட கண் திருஷ்டிதான் எல்லாத்துக்கும் காரணம் குந்தவி. நேத்து சுதா அத்தனை சந்தோஷமா இருந்தான். நீங்க ரெண்டு பேரும் சண்டை சச்சரவில்லாம இப்பிடியே இருக்கனும்னு சொன்னேன்பா.” 

நல்ல வேளை இது உமாக்குத் தெரியாது மாறா. இல்லாட்டி என் அத்தானுக்கு உங்களாலதான் இப்பிடி ஆச்சுன்னு உன்னை ஒரு பிடி பிடிச்சிருப்பா.”

ஐயோ குந்தவி! அப்போ நான் தப்பிச்சுட்டேனா?” இளமாறன் கேட்க, சிரித்தபடியே மூவரும் கான்டீன் வந்திருந்தார்கள்

மாறா, உனக்கு ஞாபகம் இருக்கா? நீங்க ரெண்டு பேரும் முதல் முதலா என்னைப் பாக்குறதுக்கு என்னோட காலேஜுக்கு வந்திருந்தீங்களே?” எண்ணங்கள் பின்னோக்கிப் பயணிக்க, கேட்டார் குந்தவி.

மறக்க முடியுமா குந்தவி? தமிழ் அவங்க அம்மாக்கிட்ட உண்மையை சொல்லி பர்மிஷன் வாங்கிட்டான். நான் எங்க அம்மாக்கிட்ட ஊர்ல இல்லாத பொய்யை எல்லாம் சொல்லி கோயம்புத்தூர் வர்றதுக்குள்ள நான் பட்ட பாடு இருக்கே?” அங்கலாய்த்தார் இளமாறன்.

அத்தனை பொய் சொல்லிட்டு வந்து ஐயா அடிச்ச சைட்டைத் தெரியுமா குந்தவி உனக்கு? ஒரு பொண்ணை விட்டு வெக்கலியே.” தமிழ் கலாய்க்க,

வாலிபத்துல இதெல்லாம் சகஜமப்பா.” சமாளித்தார் இளமாறன்.

அன்னைக்கு நீங்க ரெண்டு பேரும் என்ன சொன்னீங்கன்னு ஞாபகம் இருக்கா?” இளமாறனும், தமிழ்ச்செல்வனும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டனர்.

நம்ம மூணு பேரும் கடைசி வரைக்கும் இப்பிடி ஒன்னாவே இருக்கனும்னு நான் சொன்னதுக்கு, நாங்க இருப்போம், நாளைக்கு ஒரு கல்யாணம் ஆனா நீ எங்களையெல்லாம் மறந்திடுவேன்னு சொன்னீங்க. நான் மறந்துட்டேனாப்பா?” கலங்கிய குரலில் குந்தவி கேட்கவும் வாயடைத்துப் போனார்கள் ஆண்கள் இருவரும்

மாறா, நீயும் காலா காலத்துல ஒரு கல்யாணத்தைப் பண்ணி ஒரு பொண்ணைப் பெத்திருந்தா, என்னோட இளைய மருமகள் உம் பொண்ணாத்தான் இருந்திருக்கும்.” குந்தவி சொல்லி முடிக்கவும் அங்கே ஒரு கனமான மௌனம் நிலவியது.

ஆனாலும் பரவாயில்லை. உனக்குன்னு ஒரு துணையையாவது தேடிக்கிட்டயே, அதுவரைக்கும் சந்தோஷம். இல்லைன்னா அதுவே என்னையும், தமிழையும் நெருடிக்கிட்டே இருந்திருக்கும்.”

ரொம்ப உணர்ச்சி வசப்படாத குந்தவி, அது உன் உடம்புக்கு ஆகாது.”

இல்லை மாறா, மனசு ரொம்பவே சந்தோஷமா இருக்கு. இன்னைக்கு இருக்கிற உலகம் அன்னைக்கு இருக்கலை. ஒரு ஆணும், பொண்ணும் பேசினாலே தப்புன்னு நினைச்ச காலத்துல நாம நட்போட இருந்திருக்கோம். அதே நட்பை இன்னைக்கு வரைக்கும் தொடர்ந்ததுமில்லாம உறவா வேற மாத்தியிருக்கோம். பெருமைப்பட வேண்டிய விஷயம்தானே.”

கண்டிப்பா குந்தவி. அதுக்கு நாம மட்டும் காரணம் இல்லை. நமக்கு அமைஞ்ச வாழ்க்கைத் துணைகளும் காரணம்.” தமிழ் சொன்னதை குந்தவியும் ஏற்றுக் கொண்டார்.

வயது மறந்து, கவலை மறந்து அந்த நண்பர்கள் மூவரும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். ‘பாரதி மேல்நிலைப் பள்ளி‘, அவர்களை மிரட்டியகனகம்மா டீச்சர்யாரையும் விட்டு வைக்கவில்லைஇவர்களின் சிரிப்புச் சத்தம் கான்டீனை நிறைத்திருந்தது.

                            ————————————————————–

ஆழ்ந்த நித்திரையில் இருந்தான் சுதாகரன். வலி கொஞ்சம் அதிகமாக இருக்கவே, தூக்க மாத்திரை கொடுத்திருந்தார்கள். உமா இம்மியும் அவனை விட்டு நகரவில்லைஅத்தனை பேரும் அங்கு கூடியிருந்துவிட்டு கலைந்து போயிருந்தார்கள்.

குந்தவிக்கு அன்று தியேட்டரில் டியூட்டி இருக்க, அவர் கிளம்பியிருந்தார். தமிழும், ஆராதனாவும் ரூமிற்கு வெளியே இருந்த பென்ச்சில் அமர்ந்திருந்தார்கள்.

இன்னைக்கே வீட்டுக்கு போயிடலாமா? குந்தவி என்னங்க சொன்னா?”

சுதா எந்திருச்சதும் வீட்டுக்கு போயிடலாமாம் ஆரா. ஆனாலும் உம் பொண்ணு பண்ணின அட்டகாசம் இருக்கே.”

இல்லையா பின்னே, அடிபட்டு படுத்துக் கிடக்குறது அவ வீட்டுக்காரர் இல்லை. அப்பிடித்தான் பிஹேவ் பண்ணுவா.” இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே தூரத்தில் காந்திமதி வருவது தெரிந்தது.

ஆரா, இந்தம்மா எதுக்கு இப்போ இங்க வருது? சொல்லிக் கொண்டிருக்கும் போதே சுதாகரன் இருந்த ரூமிற்குள் போனார் காந்திமதி.

அப்போதுதான் கொஞ்சம் தெளிந்து, எழுந்து உட்கார்ந்திருந்தான் சுதாகரன். களைத்துப் போயிருந்தவனுக்கு ஜூஸ் கொடுத்திருந்தாள் உமா

சுதாகரா!” கூவியபடி உள்ளே நுழைந்தார் காந்திமதி.

பாட்டி…”

என்னப்பா இது? இவ்வளவு பெரிய கட்டு? ஆண்டவா, இதுக்குத்தான் தலையால அடிச்சுக்கிட்டேன், இவங்க மில்லுக்கெல்லாம் போகாதேன்னு. நீ கேக்கலியே.” பாட்டி புலம்பித் தீர்க்க, ஸ்தம்பித்துப் போனாள் உமா.

காந்திமதியைத் தொடர்ந்து உள்ளே வந்த தமிழும், ஆராதனாவும் கூட இந்தக் குற்றச்சாட்டில் நிலை குலைந்து போனார்கள்.

பாட்டி என்ன பேசுறீங்க?”

உனக்கு ஒன்னும் தெரியாது சுதாகரா. கூட இருக்கிறவங்க ராசிதான் உன்னை ஆட்டி வைக்குது.” பாட்டியின் பேச்சில் கண்களை மூடித் திறந்தாள் உமா.

இப்போ நீங்க என்ன சொல்ல வர்றீங்க பாட்டி?”

சொல்லச் சொல்ல கேக்காம நீதான் ஒன்னைக் கட்டிக்கிட்டு இருக்கி…” காந்திமதி முடிப்பதற்குள் குறுக்கிட்டது சுதாகரனின் குரல்.

போதும், நிறுத்தறீங்களா பாட்டி.” சுதாகரனின் அத்தனை நாளைய ஒட்டுமொத்த பொறுமையும் பறந்திருந்தது.

சுதா, நான் என்ன…”

நீங்க ஒன்னும் சொல்ல வேணாம். நீங்க இதுவரைக்கும் சொன்னதெல்லாம் போதும். நானும் வயசுல பெரியவங்க, மனசு நோகப் பேசிடக் கூடாதுன்னு பாத்தா நீங்க இஷ்டத்துக்குப் பண்ணுறீங்க.”

அப்பிடியில்லை சுதா…”

எப்பிடியில்லை பாட்டி? இதுவரைக்கும் உங்களுக்கு யாரையும் பிடிக்கலை. ஆனா இப்போ மது எம் பொண்டாட்டி. அந்த மரியாதையைக் கூடவா அவளுக்கு நீங்க குடுக்கமாட்டீங்க?” சுதாகரனின் பேச்சில் அங்கிருந்த அத்தனை பேரும் வாயடைத்துப் போனார்கள்.

உங்களை வருத்தப்படுத்தக் கூடாதுங்கிற காரணுத்துக்காக உங்களைச் சுத்தி இருக்கிற அத்தனை பேரும் அமைதியாப் போறாங்க. அவங்க உங்களைத் திரும்பப் பேச எத்தனை நேரம் எடுக்கப்போகுது? இதையெல்லாம் நீங்க என்னைக்குப் புரிஞ்சுக்கப் போறீங்க பாட்டி?” தலைகுனிந்து போனார் காந்திமதி. எதுவுமே பேசவில்லை.

நீங்க யாரும் வேணாம்னுதானே தனியா போய் இருக்கேன். அங்கேயும் வந்து சண்டை போர்றீங்க. இப்போ என்னடான்னா, என்னை விசாரிக்கறதுக்கு முன்னாடி, சம்பந்தமே இல்லாம மதுவைத் திட்டுறீங்க.” சுதாகரனின் காட்டமான குரலில் அதற்கு மேலும் அங்கு நிற்காமல் கிளம்பி விட்டார் காந்திமதி

சுதாகர் அவரைத் தடுக்கவும் இல்லை, தடுக்கப் போன தமிழ்ச்செல்வனையும் கை நீட்டித் தடுத்து விட்டான்.

மாமா, மில்லுல கார் நிக்குது. உங்க ட்ரைவரை அனுப்பி அதை எடுத்து வரச் சொல்லுங்க.”

இல்லை சுதா, நாங்க உங்க கூட…”

யாரும் வர வேணாம். எனக்கு என் மது மட்டும் போதும்.” யாரும் சொன்னதையும் கேட்காமல், உமாவை ட்ரைவ் பண்ணச் சொல்லி தன் black Audi இல் வீடு வந்து சேர்ந்தான் சுதாகரன்.

மதியம் சமைத்த உணவு அப்படியே டைனிங் டேபிளில் வைத்தபடியே இருந்தது. சூடு பண்ணி இருவரும் உண்டு முடித்தார்கள். நடப்பதற்கு கொஞ்சம் சிரமமாக இருந்தாலும், சமாளித்துக் கொண்டான் சுதாகரன்.

நேரம் இரவு எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. உமா கொடுத்த பெயின் கில்லரைப் போட்டுக்கொண்டு சுதாகரன் டீ வியில் நியூஸ் பார்த்துக் கொண்டிருக்க, அவன் பக்கத்தில் வந்து நின்றாள் உமா.

மது, என்னடா?”

அத்தான், நான் ஒன்னு சொன்னா நீங்க கோபிக்கக் கூடாது.”

நீ வில்லங்கமா எதுவும் சொல்லாம, உருப்படியா பேசினா நான் எதுக்கு கோபிக்கப் போறேன்?” புன்னகையோடு வந்தது பதில்.

அத்தான்…”

சொல்லு மது.”

இன்னைக்கு நீங்க ஹாஸ்பிடல்ல பாட்டிக்கிட்ட நடந்துக்கிட்டது தப்பு அத்தான்.” சொன்னவளை ஆச்சரியமாகப் பார்த்தான் சுதாகரன்.

அவங்க பேசினது தப்புத் தான். அதுக்காக நீங்க அவங்களை பதிலுக்குப் பேசினது ரொம்பவே ஜாஸ்தி அத்தான்.” சுதாகரனிடமிருந்து ஒரு பெருமூச்சு மட்டும் வந்தது.

நீங்க தான் அவங்க உலகம்னு பல தடவை நீங்களே சொல்லி இருக்கீங்க. அப்படிப்பட்ட நீங்களே அவங்களை இப்பிடி எடுத்தெறிஞ்சு பேசினா, அவங்க நிலைமையை கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.” அவள் சொல்லவும், சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்தான் சுதாகரன்.

மது என் ஃபோனைக் குடு.” அவள் கொடுக்கவும் வாங்கியவன், மகேஷை அழைத்தான்.

மகேஷ், பாட்டியை இங்க கொஞ்சம் கூட்டிட்டு வர்றியா? என்னால இப்போ வர முடியாது.”

“…..”

நான் சொன்னேன்னு சொல்லு, அவங்க கண்டிப்பா வருவாங்க.” சொல்லிவிட்டு சுதாகரன் வைக்க, அவன் சொன்னதைப் போலவே கொஞ்ச நேரத்தில் மகேஷோடு வந்திறங்கினார் காந்திமதி

அழுதழுது முகம் வீங்கிப் போயிருந்தது. உமாவிற்கே பார்ப்பதற்கு கவலையாக இருந்தது. எழும்ப முடியாமல் சோஃபாவில் அமர்ந்திருந்த சுதாகரன்,

பாட்டி.” என்றான். அவன் அழைத்தது தான் தாமதம், அனைத்தையும் மறந்து விட்டு,

சுதாகரா…” என்று அழைத்தபடி அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டார் காந்திமதி

ஸாரி பாட்டி, ஏதோ ஒரு கோபத்துல இன்னைக்கு உங்களை ரொம்பவே திட்டிட்டேன்.”

பரவாயில்லை, நானும் கொஞ்சம் உனக்குக் கோபம் வர்ற மாதிரிப் பேசிட்டேன்.” பேசுவது காந்திமதி தானா என்று வாய் பிளந்து பார்த்திருந்தார்கள் உமாவும், மகேஷும்

சற்று நேரம் அங்கு மௌனம் நிலவியது. மேலே என்ன பேசுவது என்று தெரியாமல் சுதா மௌனமாக இருக்க,

சாப்பிடுறீங்களா பாட்டி?” என்றாள் உமா. பாட்டியோடு எப்போதுமே பேச்சைத் தவிர்க்கும் உமாவே பேசவும் ஆச்சரியப்பட்டான் சுதாகரன்.

எங்க வீட்டுல எம் மருமகள் எனக்காக சமைச்சு வச்சிருக்கா. நான் அங்க சாப்பிட்டுக்குவேன்.” எங்கோ பார்த்துக்கொண்டு வந்தது பதில். வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள் உமா.

அது யாரு பாட்டி உங்க மருமகள்? அந்த ஒன்னுக்குமத்த குந்தவியா?” இதைக் கேட்காவிட்டால் அவன் மகேஷ் அல்லவே!

என்னடா, நாரதர் இன்னும் வாயைத் தொறக்கல்லையேன்னு பாத்தேன். வந்துட்டயா?” பாட்டியின் கேலியில் வாய் விட்டுச் சிரித்தான் சுதாகரன்

ஆமா, உங்களுக்கு நேரங் கெட்ட நேரத்துல ட்ரைவர் வேலை பாக்குறேன் இல்லை, நீங்க இதுவும் பேசுவீங்க, இதுக்கு மேலேயும் பேசுவீங்க.”

சரி சரி, புலம்பாத. சுதாகரா, காலை பத்திரமா பாத்துக்கோ. பாட்டி காலையில வந்து உன்னைப் பாக்குறேன்.” என்றவர்,

கல்யாணம் பண்ணிக்கிட்டா மட்டும் போதாது. புருஷனை நல்லா பாத்துக்கவும் தெரியணும்.” உமாவிற்கான சேதியை சுவரைப் பார்த்த படி சொன்னார் காந்திமதி. சுதாகரனுக்குமே அவர் செய்கை பார்த்து சிரிப்பு வந்தது.

                                  ——————————————————————

புயல் அடித்து ஓய்ந்தது போல இருந்தது வீடு. எத்தனை தடங்கல் வந்தாலும், தனக்கும் உமாவிற்குமான புரிதலில் எந்தச் சிக்கலும் இல்லாமல் பார்த்துக் கொண்டான் சுதாகரன்

விளக்குகள் அனைத்தையும் ஆஃப் பண்ணிவிட்டு, சுதாகரனின் ரூமை எட்டிப் பார்த்தாள் உமா. கட்டிலில் கால் நீட்டி அமர்ந்திருந்தான் சுதாகர்.

மது, என்னால இன்னைக்கு தூக்கிட்டு எல்லாம் வரமுடியாது. நீயே வந்திர்றயா?” என்றான். லேசான வெட்கத்தோடு புன்னகைத்தாள் உமா.

இல்லை அத்தான்நீங்க தூங்கிட்டீங்கன்னு நினைச்சேன்.” சொன்னவளைத் தன் அருகில் உட்காருமாறு கை காட்டினான் சுதாகர். பக்கத்தில் உட்கார்ந்தவளை இன்னும் இழுத்து தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டான்

அத்தான் கால்ல பட்டிடப் போகுது.”

இல்லையில்லை, நான் கவனமாகத் தான் இருக்கேன்.” சொல்லிவிட்டு சற்று நேரம் மௌனமாக இருந்தான் சுதாகரன்.

மது…”

ம்…”

நம்ம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சுப் போய்த்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.” அவன் பேச்சில் ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள் உமா.

வாழ்க்கைன்னா எல்லாம் இருக்கும். எப்பவுமே நம்ம கொஞ்சிக்கிட்டு இருக்க முடியாது. கோபம், சண்டை எல்லாம் வரும். எது எப்ப வந்தாலும், நான் உன் மேல வச்சிருக்கிற பாசத்திலேயோ, நீ என் மேல வச்சிருக்கிற அன்புலயோ சந்தேகம் வந்திடக் கூடாது.” அவன் சொல்லவும் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள் உமா.

நீ இன்னும் சின்னப் பொண்ணு இல்லைடா, இது நம்ம குடும்பம், நம்ம வீடுநாளைக்கே நமக்கு பிள்ளை குட்டின்னு வரும். வருமில்லை மது?”

கண்டிப்பா அத்தான்.”

குட், அப்போ சந்தோஷம் மட்டும் வராது. ஒரு சில பிரச்சினைகளும் சேர்ந்து வரும். எது எப்பிடி வந்தாலும், உன் அத்தான் உன்னோட நிப்பான், என்னோட மதுவும் எங்கூட நிக்கனும்.” 

சொன்னவனை நிமிர்ந்து பார்த்து அழகாகப் புன்னகைத்தாள் உமா. அந்தச் சம்மதத்தில் மனம் குளிர்ந்தவன், அவள் இதழ்களில் மென்மையாக முத்தமிட்டான்.

பாட்டி இனி அளந்து தான் பேசுவாங்க. ஆனா சகஜமான ஒரு நிலைமையை எதிர்பார்க்க முடியாது. அதுக்காக, ‘எனக்காக வேண்டி கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப் போ மது‘, அப்பிடியெல்லாம் நான் சொல்லமாட்டேன். தப்புன்னு தோணிச்சுதுன்னா உடனே கண்டிச்சிரு. வளர விடாதே.” ஆணித்தரமாகச் சொன்னான் சுதாகரன்.

ரொம்பப் பேசுறீங்க அத்தான்.” புன்னகையோடு சொன்னாள் உமா.

பேச்சு வேணாங்கிறியா?” 

நம்மைப் பத்தி மட்டும் பேசுங்க அத்தான். மத்தவங்களைப் பத்திப் பேசத்தான் வாழ்க்கை நீண்டு போய் இருக்கே?”

அதுவும் சரிதான். இன்னொரு ஸ்கெட்ச் போடலாமா மது?”

ம்நீங்களும், நானும் இருக்கிற மாதிரி.”

நோநோஒன்லி மது. அந்த லாஸ்ட் ட்ரோயிங் எப்போ பண்ணினது சொல்லு?” கண்சிமிட்டியபடி கேட்டான் சுதாகரன்.

எப்போ?”

இடி, மின்னல் வந்துச்சே. அதுக்கு அடுத்த நாள். சோதனைடி மனுஷனுக்கு.” சொல்லியபடியே அவளை இன்னும் இறுக்கியணைத்தான்

அதுக்காக, உங்க இஷ்டத்துக்கு வரைவீங்களா?”

கற்பனைக்கும், நிஜத்துக்கும் அத்தனை வித்தியாசம் இல்லை மது.” சிரித்தபடி சொன்னவனை நாலு அடி அடித்தாள் உமா.

ஐயோ! என் கால்.”

காலா? நான் கையில அடிச்சா நீங்க காலைக் காட்டுவீங்களா?” சொன்னபடியே அவன் காதைத் திருகினாள் உமா

அந்தத் திருமூர்த்தி ஃபால்ஸுக்கு இன்னொரு தடவை போகணும் மது.”

ம்கால் சரியானதும் போகலாம் அத்தான். அன்னைக்கு வேணுமின்னு தானே என்னை ஷூ எடுக்கச் சொல்லலை?”

ஆமா.” சாதாரணமாகச் சொன்னவனை முறைத்துப் பார்த்தாள் உமா.

சரிதான் போடி. பக்கத்துல கூட வர விடலைன்னா எப்பிடி? இன்னொரு தடவை போய் நாம ரெண்டு பேரும் குளிக்கிறோம், புரிஞ்சுதா?”

ம்கீழே வேணாம் அத்தான். அன்னைக்கு மாதிரி மேலே போகலாம், யாரும் இருக்க மாட்டாங்க.”

டன்!”

அத்தை வீட்டுக்குப் போனதும் ப்ளான் தானா அத்தான்?”

இல்லடா, அது சுதாக்கு யோகம் தானா அடிச்சுது.” சொல்லிவிட்டு பெருங்குரலெடுத்துச் சிரித்தான் சுதாகரன்.

பாட்டி வருவாங்கன்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல்லை. அது போதாததுக்கு நீ வேறே உங்கம்மா வீட்டுல போய் உக்காந்துக்கிட்டே. நாம ரெண்டு பேரும் சேந்து அங்க இருந்தப்போ அத்தை, மாமா முகத்துல அவ்வளவு சந்தோஷம் இருந்துது. அதைப் பாத்தப்போதான் அம்மா, அப்பாவும் இதே போலதானே சந்தோஷப் படுவாங்கன்னு தோணிச்சு.”

ம்கண்டிப்பா.”

அந்த சந்தோஷத்தை எதுக்கு நான் குடுக்க மறுக்கனும்? அதான், அப்பிடியே அங்க இருந்து கிளம்பிட்டேன். சந்தோஷத்தைக் குடுக்க நான் நினைச்சேன். ஆனா அந்தப் பயணம் எனக்கு எவ்வளவு சந்தோஷத்தைக் குடுத்துது தெரியுமா?” அவள் கூந்தலுக்குள் முகம் புதைத்து அவன் சரசமாகக் கேட்க, அந்தக் குரலின் பேதம் புரிந்தவள்,

அத்தான்கால்…” என்றாள்.

சும்மா போடி, கால், கைன்னு ஏதாவது சொல்லிக்கிட்டு.” அவளை லேசாகக் கடிந்தவன்,

நிலாவைப் பாத்தியா மது?” என்றான். திறந்திருந்த ஜன்னலில் வெளியே முழு நிலா ஜொலித்துக் கொண்டிருந்தது. அதைத் திரும்பிப் பார்த்தவள்,

நிலா எப்பவுமே அழகுதானே அத்தான்.” என்றாள்.

எம் மதுவும் எப்பவும் அழகுதான்டி.” சொன்னவன், நிலவை மறந்து விட்டு, மதுவில் மூழ்கிப் போனான்.

முந்தைய தலைமுறையின் கண்ணியமான நட்பில் சேர்ந்தவர்கள், தெய்வீகக் காதலில் கரைந்து போனார்கள். காலம் அவர்கள் கண் முன்னே பரந்து விரிந்து கிடந்தது.

 

 

error: Content is protected !!