vkv – 7

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 7

1990 அன்று.

சிங்கா நல்லூர் ஏரி சல சலவென அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது. குறைச்சலாக இருந்த நீர் மட்டம் அந்த வருட மழைவீழ்ச்சியின் அளவை வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஏரியோரமாக இருந்த படிக்கட்டில் இளமாறனும், தமிழ்ச்செல்வனும் கால் நீட்டி அமர்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்தார்கள்

ஏரியை ஒட்டி இருந்த நாலு ஏக்கர் நிலத்தை பார்வையிட வந்திருந்தார்கள். வியாபாரம் இப்போது நன்றாக முன்னேறி இருந்ததால் தங்கள் ஊருக்கு ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்று தமிழின் மனதில் ஒரு ஆசை. தன் தந்தையிடமும் கலந்து ஆலோசிக்க அவரும் அனுமதி அளித்திருந்தார்

ஊருக்கு இப்போது அதிமுக்கியம் சகல வசதிகளுடன் கூடிய ஒரு ஹாஸ்பிடல் தான் என்று முடிவெடுத்து, அதற்கான ஆரம்ப கட்ட வேலைகளில் இறங்கி இருந்தார்கள் நண்பர்கள் இருவரும்

மாறனின் முகத்தில் கவலை அப்பட்டமாகத் தெரிந்தது. இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் மாறனின் அம்மா தவறி இருந்தார். எத்தனை நல்ல வைத்தியம் பார்த்தும் எதுவும் பலனளிக்கவில்லை. அந்த சோகத்திலிருந்து மாறனை மீட்கவே  இந்த ஹாஸ்பிடல் பணியில் தமிழ் அதிக ஆர்வம் காட்டினான்.

மாறா, இடம் கே தானேப்பா?”

ஆமா தமிழ், முடிச்சிரலாம். விசாலமா, நல்ல காத்தோட்டமா இருக்கு. இதை விட நல்லதா நமக்கு அமையாதுப்பா.”

அதுவும் சரிதான். முடிச்சிரலாம், குந்தவிகிட்ட இதுபத்தி பேசினாயா மாறா?”

ஆமா தமிழ், குந்தவிகிட்டயும், மச்சான்கிட்டயும் பேசிட்டேன், அடுத்த மாசம் குந்தவிக்கு பிரசவத்திற்கு டேட் குடுத்திருக்கிறதால இப்போதைக்கு அவங்களால வரமுடியாதாம். நம்மளை ஆரம்பிக்க சொன்னாங்கப்பா.”

ம்அதுவும் சரிதான், ஆறுதலாவே வரட்டும். காந்திமதி அம்மா எப்பிடி இருக்காங்களாம்? இப்பவாவது குந்தவியோட பாசமா இருக்காங்களாமா?”

மச்சான் பக்கத்துல இருந்ததால குந்தவி அவ்வளவு விலாவரியா பேசலை தமிழ். ஆனா ஏதோ சுமுகமா போகுதுன்னு நினைக்கிறேன்.”

குந்தவி கல்யாணம் இப்ப நினைச்சாலும் கனவு மாதிரி இருக்கு மாறா, ஆனாலும் மச்சானை பாராட்டனும். அம்மாக்கு தெரியாம கோயம்புத்தூரில குந்தவி பேர்ல வீடு வாங்கி, அதையும் குந்தவி அப்பா வாங்கின மாதிரி ஒரு நாடகம் ஆடிகிரேட்பா அந்த மனுஷன். குந்தவியோட அப்பா அன்னைக்கு மச்சான் காலடியில விழுந்தவர் தான், இன்னும் எழுந்திரிக்கல்லை.”

ஆமா தமிழ், அப்பிடி ஒரு மனுஷன் தேடினாலும் கிடைக்க மாட்டாங்க. குந்தவி லக்கிதான்.”

அப்புறம் என்ன மாறா, சட்டுப் புட்டுன்னு நீயும் ஒரு நல்ல பொண்ணை பாத்து கல்யாணம் பண்ணு. இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருப்பே?”

ஏம்பா தமிழ், உனக்கென்னப்பா அவ்வளவு கோபம் எம்மேல? சிவனேன்னு இருக்கிறவனை வம்புல மாட்டுற?”

அப்படி இல்லை மாறா, உனக்குன்னு ஒரு துணை வேணாமா?”

தமிழ் நீ என்ன சொன்னாலும் நான் கேட்டுக்கிறேன், ஆனா இந்த ஒரு விஷயத்துல மட்டும் என்னை வற்புறுத்தாத. எனக்கு இந்தப் பொண்ணுங்க, கல்யாணம், குடும்பம் இதுலெல்லாம் ஆசை வரலைப்பா. நம்மோட தேவைக்கு கல்யாணம் பண்ணி ஒரு பொண்ணோட வாழ்க்கையை சீரழிக்கப்படாது.”

அப்போ, இப்படியே இருக்கப் போறியா?”

இருந்தா என்ன? எனக்கு உறவுன்னு சொல்லிக்க நீ இருக்க, குந்தவி இருக்கா. கை நிறைய சம்பாதிக்கிறேன், எனக்கு என்ன குறைப்பா?”

ஒரு குறையும் இல்லையில்லை, அப்போ ஏன் தயங்குற? கல்யாணத்தை பண்ணிக்கோ.”

எனக்கு எப்போ தோணுதோ அப்ப பண்ணிக்கிறேன்.”

உனக்கு அறுபது வயசுல தோணும், அப்ப பண்ணிக்குவயா?”

ஏன்? என்ன தப்பு? அறுபது வயசுலயும் அப்படி ஒரு எண்ணம் வருதுன்னா, அந்த வயசுலயும் என்னைக் கவர ஒரு ஜீவன் இருக்குதுன்னு தானே அர்த்தம். எத்தனை வயசுங்கிறது முக்கியம் இல்லை தமிழ், தோணனும்அதுதான் முக்கியம்.”

நல்லாத்தான் பேசுற, கிளம்பலாம்பா, அம்மா கோவிலுக்கு போகணும்னு சொன்னாங்க. யாரோ தாசில்தார் பொண்ணுக்கு கல்யாணமாம். எங்க வீட்டு பூஜை அறையில ஒரு தாலி வருஷக் கணக்கா இருக்குதில்லை, அதையும் கோயில் உண்டியல்ல போடனுமாம். சீக்கிரமா வந்திடுன்னு சொன்னாங்க.”

சரி தமிழ், நீ கிளம்பு. வீட்டுல இருக்கிற சித்தி மாத்திரை கேட்டாங்க, நான் மெடிக்கல் ஷாப் வரை போகனும்.”

ம்சரிப்பா, நான் கிளம்பறேன்.”

                                          **    **    **    **    **    **

நல்லூர் கிராமத்தின் அந்த அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. கொஞ்சம் பழமையான கோயிலும் கூட. அன்று கல்யாணம் இருந்ததால் அலங்காரம் பலமாக இருந்தது. தமிழ்ச்செல்வன் காரை ஓர் ஓரமாக நிறுத்த, சிதம்பரமும், தமிழரசியும் இறங்கினார்கள்

ஊரின் முக்கிய புள்ளிகள் அனைத்தும் அங்கு கூடி இருக்க அவர்களோடு ஐக்கியமாகிப் போனார் சிதம்பரம். தாசில்தார் வீட்டுக் கல்யாணம் என்பதால் கொஞ்சம் சிரத்தை எடுத்து அலங்காரமாக வந்திருந்தார் தமிழரசி. முகூர்த்தத்திற்கு நேரம் இருப்பதால் அம்மாவும், பிள்ளையும் கோயில் உண்டியலை நோக்கிப் போனார்கள். இந்தத் தாலி வீட்டில் இருக்கும் வரை மீண்டும் கல்யாணப் பேச்சு தடைப்படும் என்று யாரோ ஒரு சாமியார் சொன்னதால் தமிழ்ச்செல்வனையும் கையோடு அழைத்து வந்திருந்தார் தமிழரசி.

அம்மா தாயே, நான் இந்தத் தாலியை நல்ல நேரம் பாத்துத்தான் செஞ்சேன். ஆனா, மணமேடை வரைக்கும் வந்தது கழுத்துல ஏறாமப் போச்சு. என் குடும்பத்துக்கு இனி நீதான் ஒரு நல்ல வழி காட்டனும் அம்மாமனமுருகி பிரார்த்தித்தார் தமிழரசி.

தமிழ் இந்தத் தாலியை உன் கையால நீயே உண்டியல்ல போடுப்பாதமிழரசி நீட்டிய தாலியை உண்டியலருகே தமிழ் கொண்டு போக,

கொஞ்சம் பொறுப்பா!” கணீரென்று ஒலித்தது அந்தக் குரல்.

அதுக்குன்னே ஒரு கழுத்து காத்துக்கிட்டு இருக்கே, உனக்கு அது புரியல்லையா?” 

குரல் வந்த திசையில் திரும்பிப் பார்க்க ஒரு வயதான மூதாட்டி கோயில் தூணில் சாய்ந்தபடி இருந்தார். நரையும், கூனுமாக இருந்தவர்க்கு வயது என்பதுக்கு மேல் இருக்கும். தமிழின் கைகள் லேசாக நடுங்க, தமிழரசிக்கு உடல் வேர்த்தது.

அம்மா! யாரு நீங்க? என்ன சொல்லுறீங்க? எனக்கு ஒன்னுமே புரியலையே.”

அம்மாடி, வந்த வேலையை முதல் கவனி, அதுக்கப்புறம் இந்த தாலியை என்ன பண்ணுறதுன்னு யோசிக்கலாம்.”

இதுக்காகத்தானேம்மா கோயிலுக்கு வந்தேன்.”

அந்த மூதாட்டியின் முகத்தில் மெல்லிய கீற்றாக ஒரு புன்னகை தோன்றியது. தனது கையை நீட்டி பக்கத்திலிருந்த கோயில் மண்டபத்தை காட்டினார்.

அம்மா, அவங்க அந்தக் கல்யாணத்தை காட்டுறாங்கம்மா.”

தமிழ் தன் அம்மாவிடம் சொல்ல, தமிழரசி அந்த மூதாட்டியை திரும்பிப் பார்த்தார். ‘போஎன்பது போல் அவர் சைகை காட்ட தன்னையறியாமல் மகனின் கையைப் பிடித்துக் கொண்டு தாசில்தார் வீட்டுக் கல்யாணம் நடக்கும் மண்டபத்தை நோக்கி நடந்தார் தமிழரசி.

கல்யாணம் இரண்டு பட்டுக் கொண்டிருந்தது. மாப்பிள்ளையும், பெண்ணும் மணவறையில் உட்கார்ந்து சம்பிரதாயங்களை செய்து கொண்டிருந்திருப்பார்களாக இருக்கும். இடையில் ஒரு பெண் வந்து கத்திக் கொண்டிருக்க எல்லாம் பாதியில் நின்றது. போலிஸ் வேறு வந்திருந்தார்கள்.

தமிழ், என்னப்பா நடக்குது இங்கே?”

ஒன்னும் புரியலைம்மா, எதுக்கு போலிஸெல்லாம் வந்திருக்குன்னு தெரியலையே?” அம்மாவும், மகனும் பேசிக் கொண்டிருக்க அவர்களை நோக்கி வந்தார் சிதம்பரம்.

அரசி, கேட்டியா சங்கதியை, இந்த மடப்பய பரமேஸ்வரன் பெரிய என்ஜினீயர் பையன்னு சரியா விசாரிக்காம கல்யாணம் வரைக்கும் வந்திருக்கான். இப்ப என்னடான்னா யாரோ ஒரு பொண்ணு, எனக்கும் இந்த மாப்பிள்ளைக்கும் ஏற்கனவே ரெஜிஸ்டர் கல்யாணம் நடந்திருச்சுன்னு ஆதாரத்தோட வந்து நிக்குது. போதாததற்கு போலிஸை வேற கூட்டிக்கிட்டு வந்திருக்கு.”

என்னங்க என்னென்னமோ சொல்லுறீங்க?”

வேற என்னத்தைச் சொல்ல, கலி முத்திப் போச்சு. இந்த அதிர்ச்சியில பரமேஸ்வரன் மயங்கி விழுந்திட்டான். டாக்டர் பாத்துக்கிட்டு இருக்காங்க.”

ஐயையோ! ஒன்னும் ஆபத்தில்லையே?”

இல்லைன்னு தான் சொல்லுறாங்க, ஆண்டவன் தான் காப்பாத்தனும்.” 

தன் கையோடு மாப்பிள்ளையை அந்தப் பெண் அழைத்துக் கொண்டு போக, மாப்பிள்ளை வீட்டார் ஒவ்வொருவராக கலைந்து போனார்கள். யாருமற்ற அனாதை போல அந்தப் பெண் மணவறையில் முழித்துக் கொண்டு நின்றாள். மணப்பெண் அலங்காரத்தில் அத்தனை அழகாக இருந்தாள். பார்ப்பதற்கு குழந்தை போல இருந்தது அந்த முகம்.

தமிழரசி அந்த நொடி சட்டென்று முடிவெடுத்தார். தன் கணவனையோ, மகனையோ ஒரு வார்த்தை கலந்து ஆலோசிக்கவில்லை.

ஐயரே! அங்க என்ன பார்வை, உக்காந்து ஆக வேண்டியதை பாருங்க.” என்றார்.

அரசி! என்ன பண்ணுற நீ?” சிதம்பரம் அதட்ட, எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை அவர்

தமிழ்! மணவறையில போய் உக்காரு.”

அம்மா!”

அம்மாதான் சொல்லுறேன், போய் உக்காரு.”

ரொம்பச் சின்னப் பொண்ணு மாதிரி தெரியுதும்மா.”

இது ஆண்டவன் போட்ட முடிச்சு தமிழ், மறுத்து எதுவும் பேசாதே.” என்றவர் கோயில் கருவறையை நோக்கி சாஷ்டாங்கமாக நிலத்தில் வீழ்ந்தார். தமிழ்ச்செல்வனுக்கு மெய் சிலிர்த்தது.

தமிழ்ச்செல்வன் அந்தப் பெண்ணை கொஞ்ச நேரம் நிதானமாக பார்த்தான். அவ்வளவு அழகாக இருந்தாள். கல்லூரிக்கு போய்க்கொண்டிருக்கும் பெண்ணை மாலையும் கழுத்துமாக உட்கார வைத்திருப்பார்கள் என்பது பார்த்தாலே தெரிந்தது. எதையோ தொலைத்து விட்டது போல் அவள் நின்ற தோற்றம், சில வருடங்களுக்கு முன் தன் நிலையை படம் பிடித்துக் காட்ட, அந்த நொடி முடிவெடுத்தான் தமிழ்ச்செல்வன். இனி வாழ்க்கை முழுமைக்கும் தனக்கான பெண் இவள்தான் என்று.

அதன்பிறகு மந்திரம் போட்டது போல அத்தனையும் மாறிவிட்டது. அவசரமாக வாங்கிய மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு தமிழ் மணவறையில் அமர, என்றோ செய்த தாலியை அழகே உருவாக இருந்த ஆராதனாவின் கழுத்தில் கட்டினான் தமிழ்ச்செல்வன்.

                                     **    **    **    **    **    **

2018 இன்று.

தனக்கு முன்னால் ஜோடியாக நின்றிருந்த சுதாகரனையும், உமாவையும் வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தார் குந்தவி. சற்று நேரத்திற்கெல்லாம் அவர் கண்களில் இருந்து அருவியாக கண்ணீர் கொட்டியது.

அத்தை! என்னாச்சு அத்தை? ஏன் அழுறீங்க? உங்களுக்கு பிடிக்கலைன்னா எதுவும் வேணாம் அத்தை. நீங்க அழாதீங்க, நீங்க அழுதா என்னால தாங்க முடியாது.” உமா பதற, கேள்வியாக தன் அம்மாவைப் பார்த்தான் சுதாகரன்.

உமா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் ஒரு டெலிவரி பாத்தேன். பொண் கொழந்தைடா. நீ பொறந்தப்போ கூட அப்பிடித்தான் இருந்தே. உங்கம்மாக்கும் நான் தான் டெலிவரி பாத்தேன். உன்னை முதன் முதலா தூக்கினப்போ, இவ என் சுதாக்குத்தான்னு அப்பவே என் மனசுல ஆசை வந்திருச்சு.” கண்களில் கண்ணீர் வழிய வாய் விட்டுச் சிரித்தார் குந்தவி.

என் ஆசை நிறைவேறிடிச்சு உமா. ஹாஹாகூப்பிடு உன் அப்பனை, இனிமேல் என்னை பேர் சொல்லிக் கூப்பிடுவானா?‌நான் இப்போ மாப்பிள்ளையோட அம்மா.” 

உணர்ச்சி மேலிட சத்தமாகச் சிரித்தார் குந்தவி. சுதாகரனும், உமாவும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் முகத்திலும் சிரிப்பு தொற்றிக் கொண்டது.

உமா! லேபர் வாட் வரை போய், இப்ப அங்க என்ன சிட்டுவேஷன்னு பாத்துட்டு வா.”

சரிங்கத்தை.” அத்தானோடு ஏதோ தனியாகப் பேசவே தன்னை அத்தை அனுப்புகிறார் என்று புரிந்து கொண்ட உமா சட்டென்று வெளியேறினாள்.

சுதா, இந்த முடிவுல உறுதியா இருக்கயா?”

அம்மா!”

விளையாட்டு இல்லை சுதா, இத்தனை வருஷமா என் மனசுல இப்படி ஒரு ஆசை இருந்தும் நான் ஏன் அதை வெளியே சொல்லல்லை தெரியுமா

ஏன்?” 

வற்புறுத்தி வர்ற உறவு எத்தனை நாளைக்கு நீடிக்கும் சொல்லு. எக்காரணத்தைக் கொண்டும் உமாவோட வாழ்க்கை பாதிக்கப் படக்கூடாது. அதைத் தமிழ் தாங்குவானோ இல்லையோ நான் தாங்க மாட்டேன்.”

இப்போ ஏன் இப்படி பேசுறீங்க?”

காரணமாத்தான், இந்தக் கல்யாணத்துக்கு உங்க பாட்டியோட முழு எதிர்ப்பும் இருக்கும்.”

அதைச் சொல்றீங்களா? அதை நான் பாத்துக்கிறேன்.”

என்னடா, இவ்வளவு ஈசியா சொல்லிட்டே!”

அதான் நான் சொல்லுறேன் இல்லைம்மா, பாட்டியை நான் சம்மதிக்க வைக்குறேன். யூ டோண்ட் வொர்ரிஅழகாக சிரித்தான் சுதாகரன்.

                                    **    **    **    **    **    **

லைட்டை எல்லாம் ஆஃப் பண்ணி விட்டு பெட் ரூமிற்குள் வந்தார் ஆராதனா. தமிழ்ச்செல்வன் தூங்காமல் கட்டிலில் சாய்ந்தபடி ஏதோ யோசனையில் இருந்தார்.

தூங்காம என்ன யோசனை?”

ஆரா, வேலையெல்லாம் முடிச்சுட்டயா?”

ம்சொல்லுங்க.”

சுதா இன்னைக்கு மில்லுக்கு வந்திருந்தான்.”

ம்…”

படிப்பு முடிஞ்சிருச்சே, என்ன பண்ணப் போறேன்னு கேட்டேன்.”

ம்…”

உங்ககிட்ட தொழில் கத்துக்கணும் மாமான்னு சொன்னான்

நல்ல விஷயம் தானே, இதுக்கா இவ்வளவு யோசனை?”

இல்லைம்மா, எல்லாத்தையும் தெளிவா பேசணும் இல்லையா? நாளைக்கு வீணான மனவருத்தங்கள் வந்திரக்கூடாதுன்னு சொன்னேன்” 

அதுவும் சரிதான், அவங்க பாட்டி தெரிஞ்சே பேசும்.”

ம்ஆனா சுதா இன்னொரு விஷயம் சொன்னான் ஆரா.”

என்னவாம்?”

உன்னோட பாட்டி இன்னைக்கு எம் பொண்ணைப் பத்தி பேசினது எனக்குப் பிடிக்கலை, எங்களுக்கு அப்படியொரு எண்ணமே இல்லாதப்போ எப்பிடி அவங்க அப்பிடிப் பேசலாம்னு கேட்டேன்.”

சரியாத்தானே கேட்டிருக்கீங்க.”

அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா?”

என்ன?”

உங்களுக்கும், அத்தைக்கும் ஏன் மாமா அப்பிடியொரு எண்ணம் வரலை? எங்கிட்ட என்ன குறை இருக்குன்னு கேட்டான் ஆரா.”

“……..”

எனக்கு என்ன சொல்லுறதுன்னே புரியலைம்மா.”

சுதா மனசுல அப்பிடி ஒரு எண்ணம் இருக்காமா?”

தெளிவா ஒன்னும் சொல்லலை, ஆனா நான் சொன்னா நீங்க ஒத்துக்கணும், அத்தைக்கிட்டயும் சொல்லுங்கன்னு சொன்னான்.”

நீங்க ஏதாவது வாக்கு குடுத்துட்டீங்களா?”

என்ன பேசுறம்மா, நான் எதுக்கு வாக்குக் குடுக்கணும்?”

நீங்க என்ன சொல்ல வர்றீங்க?”

இங்கப்பாரு ஆரா, இதுல முடிவெடுக்க வேண்டியது உமாதான். உமாக்கு விருப்பம் இருந்ததுன்னா எனக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை.”

என்னங்க பேசுறீங்க நீங்க? அந்தம்மா கூட எப்பிடி வாழமுடியும்?”

நம்ம பொண்ணு வாழப்போறது சுதா கூட, அந்தம்மா கூட இல்லை.”

அந்தம்மா நம்ம பொண்ணை நிம்மதியா வாழ விட்ருமா? அதுவும் சுதா பாட்டியின்னா அப்படியே தலை கீழா மாறிடுவான். நம்ம பொண்ணுக்கு எதுக்கு இப்படியொரு தலை வேதனை.”

குந்தவியும் அந்த வீட்டுல தானே வாழுறா?”

அதுக்கு, நம்ம பொண்ணும் அங்க போய் கஷ்டப்படனுமா? அந்தம்மாவோடது நாக்கா? இல்லை தேள் கொடுக்கா? இதெல்லாம் எதுக்கு நம்ம உமாக்கு? ஏன்? ஊர் உலகத்துல வேற மாப்பிள்ளையே இல்லையா?”

இது உமாவோட வாழ்க்கை, அவளே முடிவு பண்ணட்டும்.”

அப்பிடியெல்லாம் விட முடியாதுங்க. அவளுக்கு என்ன தெரியும் இவ்வளவு பெரிய முடிவெடுக்க?”

ம்பாக்கலாம்.” 

மௌனமாக தூங்க ஆரம்பித்தார் தமிழ்ச்செல்வன். மனதிற்கு கொஞ்சம் கவலையாக இருந்தது. சுதாகரனின் ஆசைக்கு மறுப்புச் சொல்லவும் முடியவில்லை. அதேநேரம் ஒரு தாயாக உமாவின் வாழ்க்கையை பற்றி அக்கறை கொள்ளும் ஆராதனாவையும் குறை சொல்ல முடியவில்லை. நடப்பது நடக்கட்டும் என்று கண்ணயர்ந்தார்.

                                       **    **    **    **    **

படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள் உமா. மனதில் சந்தோஷம் நிறைந்திருந்தது. கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இன்றைய விடியல் தனக்கு இத்தனை மகிழ்ச்சியை அள்ளிக் கொடுக்கும் என்று.

மகேஷ் சொன்ன விஷயங்கள் வேதனையை கொடுக்கவே கோயிலுக்கு கிளம்பினாள். ஆனால் அதன் பிறகு நடந்ததெல்லாம் இனித்தது. அத்தான் மனதில் என் நினைப்பு இருந்திருக்கிறதா? இல்லாமல் இருந்திருந்தால் ஃபோனில் எதற்கு ஃபோட்டோ வைத்திருக்க வேண்டும். அப்படியென்றால் அந்த ரவீனா யார்? மகேஷ் விளையாடி இருப்பானோ

சுதாகரன் மேல் அத்தனை பாசம் இருந்தது உமாவிற்கு. மகேஷோடுதான் நட்பு என்றாலும், சுதாகரன் தான் அவள் ஹீரோ. நாளாக நாளாக அந்த அன்பு காதலாகிப் போனது. பாட்டிக்காக தன்னை அவமானப் படுத்திய வேதனை ஒரு புறம் இருந்தாலும், அத்தான் மேல் கிறக்கம் இருந்தது.

ஒரு கை தட்டி ஓசை வருமாஎன்று அந்தக் காதலை தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டாள் உமா. இன்று அத்தான் அழைத்து தானாகப் பேசிய போது சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டாள். ஆனால் அதிசயம் என்னவென்றால், அத்தானுக்கும் தன் மேல் ஒரு அபிப்பிராயம் இருந்திருக்கும் போல் இருக்கிறதே! காதல் இல்லாமல் கட்டிப் பிடிப்பார்களா என்ன? தவையணைக்குள் முகம் புதைத்துக் கொண்டாள் உமா. இதுவரை உணர்ந்திராத உணர்வு அவளை ஏதோ செய்தது. ஃபோன் சிணுங்கவே எடுத்துப் பார்த்தாள். அத்தான் என்றது.

சொல்லுங்க அத்தான்.”

என்ன பண்ணுற மது?”

தூங்குறேன் அத்தான்.”

அடிப்பாவி! உனக்கு தூக்கம் வருதா?”

ம்சும்மா கண்ணைக் கட்டுது. நீங்க தூங்கலையா?” சிரிப்பை அடக்கிக்கொண்டு பேசினாள் உமா.

ம்ஹூம், தூக்கம் வரலை பொண்ணே.”

ஏன் அத்தான்?” வேண்டுமென்றே சீண்டினாள் உமா.

தெரியலை மது, ஒரு குழந்தை முகம் அடிக்கடி தொல்லை பண்ணும். ஆனா இன்னைக்கு…”

இன்னைக்கு என்னாச்சு அத்தான்?” அவள் குரலும் குழைந்து போனது.

தெரியலை மது, ரொம்ப டிஸ்டேர்ப்டா இருக்கு. ஒரு பொண்ணு ரொம்பத் தொல்லை பண்ணுறா.” அடிக்குரலில் அவன் சிரித்த சிரிப்பு, அவள் உயிரின் ஆழத்தை தீண்டியது. தன்னை மறைத்துக் கொண்டவள்,

நல்லா பாருங்க அத்தான், ரவீனா தானே அது?” கேலியாக வினவ,

மதூ…!” 

கர்ச்சனையாக வந்தது சுதாகரனின் குரல். ஃபோனை சட்டென்று அவன் துண்டிக்க, துடித்துப் போனாள் உமா. மீண்டும் மீண்டும் அழைக்கஸ்விச்ட் ஆஃப்என்று வந்தது. ‘ஐயோ, என்ன இது?’ உமாவிற்கு பயமாகிப் போனது. விளையாட்டாகச் சொன்னது வினையாகிப் போனதே! கண்களில் கண்ணீர் வடிய செய்வதறியாது உட்கார்ந்து இருந்தாள் உமா.