வண்ணம் கொண்ட வெண்ணிலவே 14
அந்த வீட்டின் வரவேற்பறையில் இளமாறனும், தமிழ்ச்செல்வனும் உட்கார்ந்திருந்தார்கள். எதிரே இருந்த சோஃபாவில் அபிமன்யு. ரஞ்சனி எல்லோருக்கும் காஃபி கொண்டு வந்து கொடுத்தாள்.
“எடுத்துக்கோங்க அங்கிள்.” தமிழ், ரஞ்சனியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தார். உமாவை விட சின்னப் பெண். ஆனால் நடை உடை பாவனையில் உமாவை விட ஒரு முதிர்ச்சி தெரிந்தது.
“எடுங்க அங்கிள்.” மீண்டும் அந்தப் பெண் வற்புறுத்தவே, எடுத்துக் கொண்டார்.
“ரஞ்சிம்மா, லைப்ரரியில பாத்தோமே டாக்டர் உமா, அவங்க அப்பாதான் இவங்க.”
“அப்பிடியா! உமாக்கா அப்பாவா நீங்க அங்கிள்? எப்பிடி இருக்காங்க உமாக்கா?” அந்தப் பெண்ணின் குரலில் உமாவின் பெயரைச் சொன்னதும் அத்தனை ஆனந்தம் தெரிந்தது.
“நல்லா இருக்காம்மா. நீ எப்பிடி இருக்கே?”
“நான் நல்லா இருக்கேன் அங்கிள், உமாக்காவை நான் விசாரிச்சதா சொல்லுங்க அங்கிள்.”
“சரிம்மா.” காலிக் கப்புகளை எடுத்துக் கொண்டு ரஞ்சனி நகர,
“சொல்லுங்க அங்கிள், எதுக்காக நீங்க வீடு தேடி வரனும், சொல்லி அனுப்பி இருந்தா நானே வந்திருப்பேனே.”
“பரவாயில்லைப்பா, எனக்கு ஒரு தேவைங்கறப்போ நானே வர்றது தான் முறை.”
“என்ன தேவை அங்கிள்? அதுவும் எங்கிட்ட.” அந்தக் குரலில் கேலி இருப்பது போல் தோன்றவில்லை தமிழுக்கு.
“நேரடியா பேசிடலாம் அபி, உங்க தரப்புல எல்லாம் நியாயமானதா இருக்கும் பட்சத்தில எதுக்கு மேலிடத்திலிருந்து ப்ரஷர் குடுக்குறீங்க?”
“ஏன்னா கலெக்டர் உங்க பக்கம் சாஞ்சுட்டாங்களே அங்கிள்.” சட்டென்று வந்தது பதில்.
“இல்லைப்பா, அவங்க நியாயத்தின் பக்கம் சாஞ்சிருக்காங்க.”
“எனக்கு அதைப்பத்தி எல்லாம் தெரியாது அங்கிள். நான் குடுத்த ப்ளான் முதற்கொண்டு அத்தனையையும் அவங்க சந்தேகமாத்தான் பாக்குறாங்க. ஏன் இந்த ஃபாக்டரியை நல்ல முறையில என்னால ரன் பண்ண முடியாதா?”
“உங்க வயசு அவங்க அனுபவம் இல்லையா அபி? அவங்க சேர்விஸ்ல உங்களை மாதிரி எத்தனை பேரை பாத்திருப்பாங்க?”
“ஐ ஆம் ஸாரி அங்கிள், இப்போ எங்கிட்ட நீங்க என்ன எதிர்பாக்குறீங்க?” இப்போது அந்தக் குரலில் ஒரு சலிப்புத் தெரிந்தது.
“நிறுத்துங்க தம்பி, எல்லாத்தையும் நிறுத்திடுங்க.”
“வாட்? என்ன அங்கிள் ஜோக் பண்ணுறீங்களா?”
“இல்லைப்பா, நீங்க தொழில் பண்ணுறதுக்கு நாங்க எதிரி கிடையாது. ஆனா அந்தத் தொழிலை எங்க ஊர்ல பண்ணாதீங்க. வேற எங்கேயாவது பண்ணுங்க, அவ்வளவுதான் நாங்க உங்ககிட்ட கேக்குறது.”
“இந்த தொழிலுக்காக நான் எவ்வளவு செலவு பண்ணி இருக்கேன்னு உங்களுக்கு தெரியுமா அங்கிள்?”
“யாரைக் கேட்டு தம்பி செலவு பண்ணினீங்க?”
“யாரைக் கேக்கனும் அங்கிள்?”
“ஊர்ல இருக்கிற நாலு பெரியவங்களை பாத்து நீங்க பேசி இருக்கனும்.”
“அது எதுக்கு? நான் அரசாங்கத்துக்கிட்ட தானே அனுமதி கேக்கனும்?”
“அந்த அரசாங்கமே நாங்க தான் தம்பி. நீங்க பேசி முடிவெடுத்த அரசாங்கம் உங்களுக்கு அனுமதி கொடுத்திரும், ஆனா மக்கள் எதிர்ப்பாங்க.”
“எதுக்கு எதிர்க்கனும்? நான் அவங்களுக்கு நல்லதுதானே பண்ணப்போறேன்.”
“அபி, வாழ்க்கையிலயும் சரி, தொழில்லையும் சரி, நிறையப் பாத்திட்டோம் பா. ஆரம்பத்துல இப்பிடித்தான் எல்லாம் ஆரம்பிக்கும். அதுக்கப்புறம் படிப்படியா எல்லாம் மாறும். அப்புறம் நாங்க இறங்கி போராடனும், நீங்க இப்போ கைக்குள்ள வெச்சிருக்கிற அதே அரசாங்கத்தை வெச்சு எங்களை நொறுக்குவீங்க. நாங்க நிறைய உயிரை பலிகுடுத்துட்டு வாயை மூடிக்கிட்டு நிக்கனும், இது எங்களுக்குத் தேவையா, சொல்லுங்க?”
இத்தனையும் பேசும் போதும் இளமாறன் அமைதியாக உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். தமிழ் இங்கு வரும் போதே எச்சரித்திருந்தார். காரியம் பெரிது, கோபப் படக்கூடாது என்று. இப்போது அபிமன்யு யோசனையில் ஆழ்ந்தான். பேச்சு இத்தனையும் வெளியே நடந்து கொண்டிருக்க, ரஞ்சனி அத்தனையையும் உள்ளே இருந்தபடி கேட்டுக் கொண்டிருந்தாள். தனியே இருக்கும் அண்ணாவுக்கு துணையாக அவளும் கிளம்பி வந்திருந்தாள். அபியின் யோசனையைப் பார்த்த தமிழ்ச்செல்வன்,
“இதுல யோசிக்க எதுவுமே இல்லைப்பா. உங்களுக்கு எவ்வளவு நஷ்டமோ அதை ஊர் சார்பா நாங்க குடுக்கிறோம். ஏத்துக்குங்க தம்பி.”
“ரொம்ப சிம்பிளா சொல்லிட்டீங்க அங்கிள். பிசினஸ்ல ரெண்டு சைடும் திருப்திப் படனும் அங்கிள். நீங்க மட்டும் திருப்தியான போதுமா?”
“உங்களைத் திருப்திப் படுத்த நான் என்ன செய்யனும் தம்பி?” நிதானமாக வந்தது தமிழின் கேள்வி. மாறன், தமிழின் கையை சட்டென்று பிடிக்க, அதிலிருக்கும் எச்சரிக்கை உணர்வைப் புரிந்து கொண்டவர், மாறனைப் பார்த்து லேசாகச் சிரித்தார்.
“என்ன வேணும்னாலும் செய்வீங்களா அங்கிள்?” அபியின் குரலில் ஒரு நிதானம் இருந்தது. எதிரில் இருப்பவன் சாமர்த்தியசாலி என்று தமிழுக்குப் புரிந்தது.
“எங்கிட்ட இருக்கிறது என் சொத்தும், எம் பொண்ணும் தான். என்னை விட அதிகமா உங்ககிட்ட சொத்து இருக்கு, நீங்க அதுக்கு ஆசைப் படப் போறதில்லை. கேரளத்துப் பைங்கிளிகளை பாத்த கண்ணுக்கு எம்பொண்ணு ரதியாவும் தெரியப் போறதில்லை, வேற என்ன தம்பி வேணும்?”
நீ எத்தன் என்றால் நான் எத்தனுக்கு எத்தன், என்று நிரூபித்தார் தமிழ்ச்செல்வன். மாறன் வாயடைத்துப் போனார். பேச்சின் போக்கில் அவர் வயிற்றில் புளி கரைந்தது. இந்தப்பயல் ஏடாகூடமாக எதையோ கேட்கப் போகிறான் என்று தான் நினைத்திருந்தார். ஆனால் அதை தமிழ் திசை திருப்பிய விதம் ஆச்சரியமாக இருந்தது. தன்னோடு இருந்து கொண்டு இந்தப் பயலைப் பற்றி இத்தனை விஷயம் தெரிந்து வைத்திருக்கிறானே என்று எண்ணிக் கொண்டார்.
“ஹா… ஹா…” வாய்விட்டுச் சிரித்தான் அபி.
“அங்கிள் யூ ஆர் ஸ்மார்ட், உங்க பொண்ணை நான் கேட்டா என்ன பண்ணுவீங்க அங்கிள்?” தமிழை நேராகப் பார்த்துக் கேட்டான் அபிமன்யு.
“குடுக்க முடியாதுப்பா. அது ஏற்கனவே முடிவான விஷயம். அதை இனிமேல் அழிச்சு மாத்த முடியாது.” எந்த விதத் தயக்கமும் இல்லாமல் வந்தது தமிழின் பதில்.
“என்னாலேயும் எதையும் அழிச்சு மாத்த முடியாதுன்னு நான் சொன்னா?”
“மோதிப் பாக்கலாம் அபி, வேற வழியில்லை.” வந்த வேலை நிறைவாக முடியாமலேயே கிளம்பினார்கள் மாறனும், தமிழும்.
அவர்கள் சென்றதுதான் தாமதம், ரூமை விட்டு வெளியே வந்தாள் ரஞ்சனி. சோஃபாவில் கால்நீட்டி அமைதியாக அமர்ந்திருந்தான் அபிமன்யு. முகம் மட்டும் சிந்தனையைக் காட்டியது.
“அண்ணா…”
“என்ன ரஞ்சனி?” சிந்தனை கலைய நிமிர்ந்து பார்த்தான் அபி.
“என்னண்ணா நடக்குது இங்க?”
“எதைச் சொல்றம்மா?”
“அவங்க ரெண்டு பேரும் வந்தாங்க, பேசினாங்க சரி… அதுக்கு நீ ஏதேதோ டிமாண்ட் வெச்சயே, அது சரியா?”
“நீ என்ன சொல்ல வர்றேங்குறதை தெளிவா சொல்லும்மா. நான் ஏற்கனவே குழப்பத்துல இருக்கேன்.”
“நீ உமாக்காவை லவ் பண்ணுறயா?” நேரடியாக வந்தது ரஞ்சனியின் கேள்வி.
“இல்லையே, அப்பிடி யாரு சொன்னா?”
“அப்போ எதுக்கு அவங்க கிட்ட பொண்ணு கேட்டே?”
“ஏன் கேக்கக் கூடாதா? எனக்கு அந்தத் தகுதி இல்லையா என்ன?”
“அந்தப் பொண்ணுக்கு வேறொரு இடத்தில நாட்டம் இருக்குன்னு தெரிஞ்சும் கேக்குறது தப்புண்ணா?”
“பொடலங்கா நாட்டம். இப்ப வந்து போன ரெண்டு மடப்பசங்களும் ஊருக்காக இவ்வளவு பேசுறானுங்களே, பொண்ணு வாழ்க்கையை பத்தி நினைச்சுப் பாத்தானுங்களா?” இப்போது சூடாக வந்தது அபியின் கேள்வி.
“அவங்களுக்கு தெரியாத எது உனக்குத் தெரிஞ்சு போச்சு?” ரஞ்சனிக்கு குழப்பமாக இருந்தது. இந்த அண்ணா என்ன பண்ணுகிறான்? உமாவைக் காதலிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டே பெண் கேட்கிறான். இல்லாவிட்டால் அந்தப் பெண்ணின் வாழ்க்கைக்கு என்ன பாதகம் வந்து விடும்?
“விடு ரஞ்சனி, அந்தப் பொண்ணு தலையில என்ன எழுதி இருக்கோ அதுதானே நடக்கும்.”
“அண்ணா, என்னென்னவோ சொல்லுற, எனக்கு ஒன்னும் புரியல. உன்னால அந்தப் பொண்ணுக்கு எந்த… ஆபத்…”
“சீச்சீ… என்ன பேசுற ரஞ்சனி? உனக்கே இது அபத்தமா தெரியலையா?”
“அப்படீன்னா சரிதாண்ணா.” ரூமிற்குள் போன ரஞ்சனி முதல் வேலையாக அப்பாவிற்கு அழைத்து இங்கு நடந்த அத்தனையையும் சொல்லி முடித்தாள். அமைதியாகக் கேட்டிருந்த நாராயணனின் முகம் சிந்தனை வசப்பட்டது.
————————————————-
மில்லிற்குப் போன தமிழ்ச்செல்வனும், இளமாறனும் நேராக கான்டீனில் போய் உட்கார்ந்தார்கள். அவசரமாக காஃபி ஆர்டர் பண்ணினார் மாறன்.
“என்ன மாறா, ரொம்பவே ரெஸ்ட் லெஸ்ஸா தெரியுறே?” சிரித்துக்கொண்டே கேட்டார் தமிழ்.
“எப்பிடிப்பா உன்னால சிரிக்க முடியுது? அந்தப் பய உமாவைப் பத்தி பேசின உடனே எனக்கு அப்பிடியே கோபம் தலைக்கு ஏறிச்சு பாரு.”
“இதுக்குதான் காலா காலத்துல ஒரு கல்யாணத்தைப் பண்ணி குழந்தை குட்டிங்களைப் பெத்துக்கனும்னு சொல்லுறது. அப்பிடி பண்ணி இருந்தா இந்தப் பொறுமை எல்லாம் தானா வந்திருக்கும்.”
“எங்க ஆரம்பிச்சு எங்க வந்து முடிச்சான்பா, என்னால நம்பவே முடியல.”
“இல்லை மாறா, நாம போன உடனேயே அங்க உமாவைப் பத்தின பேச்சு வந்திடுச்சு. நான் அப்பவே உஷாராகிட்டேன்.”
“நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கலைப்பா, இந்தப்பய இப்பிடிக் கேப்பான்னு. எனக்கு இப்போ இருக்கிற பயமெல்லாம் இவனால நம்ம உமாக்கு ஏதாவது ஆபத்து வந்திருமோன்னுதான்.”
“இல்லை மாறா, பய அந்த ஜாதி கிடையாது. நான் விசாரிச்ச வரைக்கும் கொஞ்சம் சுகவாசி. மத்தபடி கெட்டவன் கிடையாது. இந்த வயசுக்கே உரிய உல்லாசங்கள் உண்டே தவிர, நல்லவன் தான்.”
“நல்லவன் எதுக்குப்பா பொண்ணு கேக்குறான்?”
“சரியாப் போச்சு போ, பொண்ணுன்னு இருந்தா நாலு பேர் கேக்கத்தான் செய்வாங்க மாறா. இதையெல்லாம் நாம தப்பா எடுத்துக்க முடியாது.”
“என்னவோ போ, எனக்கு ஒன்னுமே புரியமாட்டேங்குது.” அங்கலாய்த்த மாறனைக் கலைத்தது அவரது ஃபோன். எடுத்துப் பார்த்தவர்,
“விசாலாட்சிப்பா.” என்றார்.
“ம்… நீ பேசு மாறா, நான் வேலைகளை கவனிக்குறேன்.” சொல்லி விட்டு நகர்ந்தார் தமிழ்ச்செல்வன். நடந்த அத்தனையையும் ஒன்று விடாமல் விசாலாட்சியிடம் ஒப்பித்த மாறன், தனக்குப் பின்னால் முகம் இறுக நின்றிருந்த சுதாகரனைக் கவனிக்கவில்லை.
ஏதோ தகவல் கேட்பதற்காக இளமாறனை நெருங்கிய சுதாகரன் அவர் ஃபோனில் யார் கூடவோ பேசவும், பேசி முடிக்கும் வரை காத்திருந்தான். ஆனால் அவர் பேசிய பேச்சு, அவன் தாடைகளை இறுகச் செய்தது. வந்த வேலையை விட்டு விட்டு தன் இருக்கைக்கு திரும்பியவன், இரண்டு, மூன்று ஃபோன் கால்கள் பேசினான். முகத்தில் பதட்டம் அப்பட்டமாகத் தெரிந்தது. கடைசியாக உமாவின் நம்பரை அழுத்திவிட்டு அவளுக்காகக் காத்திருந்தான். மறுமுனை,
“அத்தான்.” என்றது.
“மது, அம்மா ஒரு சீரியஸ் கேஸுக்காக கோயம்புத்தூர் வரை வந்திருக்காங்க. நீ அவங்களோட கிளம்பி வந்திரு.”
“அத்தான், நாளை காலை நான் இங்க கண்டிப்பா இருக்கனுமே.”
“இன்னைக்கு நைட்டே நான் உன்னை ஹாஸ்டல்ல விட்டிர்றேன்டா.”
“ஹை… சூப்பர், என்னத்தான் விசேஷம்?”
“உன்னைப் பாக்குறதுதான் விசேஷம், வேற என்ன?”
“ஐயோ… ஐஸ் பலமா இருக்கே, என்ன ரீஸன் வேணும்னாலும் இருக்கட்டும். எனக்கு உங்களை பாக்குறதுக்கு ஒரு சான்ஸ், அது போதாதா?”
“ம்… சரி மது, வேலை இருக்கு நான் அப்புறமா கூப்பிடுறேன், பை.”
“பை அத்தான்.”
—————————————————–
அந்த black Audi சர்ரென்று வந்து பென்ஸுக்குப் பக்கத்தில் நின்றது. காரை விட்டிறங்கிய சுதாகரன், மறுபுறம் வந்து கார்க்கதவைத் திறந்து விட்டான்.
“இறங்கு மது.” உள்ளிருந்தபடியே வீட்டை ஒரு நோட்டம் விட்டவள்,
“யார் வீடு அத்தான்?” என்றாள்.
“இறங்கி வாம்மா சொல்லுறேன்.” காரை விட்டிறங்கியவள், சுதாகரனோடு சேர்ந்து நடந்தாள். வீட்டின் கதவு திறந்தே இருந்தது. சோஃபாவில் அமர்ந்திருந்த அபிமன்யு லாப்டாப்பில் மூழ்கி இருந்தான். யாரோ வரும் அரவம் கேட்டு நிமிர்ந்து பார்த்தவன், நிச்சயமாக சுதாகரனை எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் பண்பாடு தலை தூக்க,
“வாங்க.” என்றான் பொதுவாக.
“மது, மீட் மிஸ்டர் அபிமன்யு, என்னோட ஃப்ரெண்ட். நம்ம ஊருக்கு புதுசா டை மில் நடத்துறதுக்காக வந்திருக்காங்க.”
“ஓ… அப்பிடியா அத்தான். எனக்கு இவங்களை ஏற்கனவே தெரியும், பாத்திருக்கேனே.” கள்ளமில்லாமல் வந்தது உமாவின் பதில்.
“அபி, இது மது, மாதுமையாள். இப்போதைக்கு மாதுமையாள் தமிழ்ச்செல்வன், ஆனா கூடிய சீக்கிரமே மாதுமையாள் சுதாகரன்.” தோளோடு உமாவை சேர்த்தணைத்தவன், நிதானமாக அறிமுகப்படுத்தினான். அபிமன்யுவின் முகத்தில் பாராட்டுதலாக ஒரு புன்னகை வந்தது. சத்தம் கேட்டு உள்ளேயிருந்து வந்த ரஞ்சனி, உமாவைக் கண்டதுதான் தாமதம்,
“உமாக்கா!” என்று கூறிக்கொண்டே ஓடி வந்து கையைப் பிடித்துக் கொண்டாள்.
“எப்பிடிக்கா இருக்கீங்க?” என்று கேட்டவாறே உமாவையின் கையை அவள் ரூம் நோக்கி இழுக்க, சுதாகரனைத் திரும்பிப் பார்த்தாள் உமா. ‘போ‘ என்று அவன் கண்ணால் அனுமதி வழங்கியதும், ரஞ்சனியோடு உள்ளே போனாள் உமா.
“உக்காருங்க சுதாகரன். அப்புறம், என்ன திடீர் விஜயம்? புதுசா நட்பெல்லாம் கொண்டாடுறீங்க?” அபியின் குரலில் சிரிப்பிருந்தது.
“சில பேர்கிட்ட அறிமுகப் படுத்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுது அபி, நான் என்ன செய்யட்டும்?” சுதாகரனின் குரலில் கேலி இருந்தது.
“ம்… மாதுமையாள் சுதாகரன். கேக்க நல்லாத்தான் இருக்கு.”
“கேக்க மட்டுமில்லை, வாழவும் அதுதான் நல்லா இருக்கும். மத்தவங்க தள்ளித்தான் நிக்கனும்.”
“ம்… அப்படீங்கிறீங்க, எந்தளவு நல்லா இருக்கும் சுதாகரன்? உங்கம்மா இன்னைக்கு வரைக்கும் உங்க பாட்டிக்கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறாங்களே, அந்தளவுக்கா?”
“அபி…!”
“எதுக்கு டென்ஷன் ஆகுறீங்க? உங்க நல்ல விஷயத்தைப் பத்தித்தானே நானும் பேசுறேன். தி பேமஸ் கைனோகோலோஜிஸ்ட் மாமியார் கிட்ட பேரன் பேத்தி காணுற வயசுல திட்டு கேக்குறாங்களே, அந்த நல்லதைத் தானே மிஸஸ் மாதுமையாள் சுதாகரனும் பாக்கப் போறாங்க?”
“அபி…! தட் இஸ் நன் ஒஃப் யுவர் பிஸினஸ்.”
“ஒஃப் கோர்ஸ், என் வீடு தேடி வந்து, இந்த பிஸினஸைப் பத்தி பேசுறது நீங்கதான் சுதாகரன். அதுக்கு நான் பதில் தான் சொல்லிக்கிட்டு இருக்கேன்.” பெண்கள் இருவரும் பேசியபடி வெளியே வர இவர்களின் வாக்குவாதம் தடைப்பட்டது.
“கிளம்பலாமா அத்தான். இப்போ கிளம்பினாத்தான் லேட் ஆகாம போய்ச்சேரலாம். ரஞ்சனி, கண்டிப்பா நீங்க எங்க வீட்டுக்கு ஒரு நாள் வரனும்.”
“கண்டிப்பா உமாக்கா, கூடிய சீக்கிரம் உங்க கல்யாண விருந்து இருக்காமே, அண்ணா சொன்னாங்க. நான் விருந்தை ஒரு பிடி பிடிக்க வர்றேன் என்ன?”
“கட்டாயம்.” சிரித்துக் கொண்டே உமா விடைபெற, அபியை முறைத்துக் கொண்டே காரை ஸ்டார்ட் செய்தான் சுதாகரன். அந்த black Audi சீறிக்கொண்டு நகர்ந்தது.