VNE 18 (2)

VNE 18 (2)

மகா சட்டென பேசிவிடுவாளே தவிர, எந்த இடத்தில் எப்படி நடக்க வேண்டும் என்று தெரியாதவள் அல்ல என்பது இவளுக்கு உறுதி தான். ஆனாலும் தான் எப்போதும் உடனிருந்து பார்த்துவிட்டு, இப்போது அவள் தனியாக எதையாவது செய்து வைத்து விடுவாளோ என்ற பயம் தான்… வேறென்ன?

காதலெனப்படுவதும் நட்பெனப்படுவதும் யாதெனில் அது நம்பிக்கை… துணை… உறுதி… நேர்மை… துணிவு!

அதன் செயல் வெறும் இன்பத்தில் பங்கெடுப்பது மட்டுமல்ல… உற்றவரின் துன்பத்தையும் தனதாக நினைத்து அதில் பங்கு கொள்வது. நானிருக்கிறேன் உனக்காக என்ற நம்பிக்கையை கொடுப்பது. உன்னை நானறிவேன் என்று இணையின் நேர்மையை தான் பறைசாற்றுவது. உனக்காக எதையும் செய்வேன் என்று எப்போதும் துணையிருப்பது. எந்த சூழ்நிலையாக இருப்பினும் உன்னை கைவிட மாட்டேன் என்ற உறுதியை கொடுப்பது. வாழ்க்கையின் கடைசி நொடிகளையும் இருவரும் கைப்பிடித்தவாறு அழகான புன்னகையோடு கடக்க முடியும் என்ற துணிவை கொடுப்பது காதல் மட்டுமல்ல நட்பும் கூடத்தான்!

குளித்துவிட்டு தயாராகி இவன் வர, இவள் அவசரமாக கோதுமை தோசையோடு தேங்காய் சட்னி மட்டும் செய்திருந்தாள். சமையலறையில் அவளின் அவசரத்துக்கு கிடைத்தது அதுதான் என்பதோடு கார்த்திக்கின் பேவரைட் அதுவென்று இவளுக்கு தெரியும்.

“தேங்க்ஸ்…” என்று சிறுபுன்னகையோடு அங்கேயே அமர்ந்துகொண்டு உண்டவனை பார்த்து மென்மையாக சிரித்தாள்.

“இப்ப என்ன பண்ணலாம்ன்னு இருக்கீங்க?” வார்த்த தோசையை அவனது தட்டுக்கு இடம் மாற்றியபடியே இவள் கேட்க,

“தியேட்டரை கொடுத்துடலாம்னு முடிவு பண்ணிருக்கு… அவனுக்கு கொடுக்க வேண்டியதுக்கு விடவே அதிகமா போகும்… லட்டோட யோசனைதான்… ஆனா இன்னும் சரியா அமைய மாட்டேங்குது…”

“ஏன்?”

“கடைசி நிமிஷத்துல பின் வாங்கறாங்க… அதான் உன் அப்பா ரியல் எஸ்டேட்ல கொஞ்சம் தரோவானவங்கன்னு லட்டு சொன்னா… அதான் அவர் கிட்ட பேசலாம்ன்னு…” என்று அவன் நிறுத்த,

“அப்பா ஜெனீவால இருக்காங்களே…” என்று யோசனையாக பார்த்தாள். அவர் இல்லாத போது மருத்துவமனையில் வேண்டுமானால் அவள் முடிவெடுக்க முடியும். ஒற்றை மகளாகவும், அதோடு பதினோரு வயதில் தாயை இழந்த காரணத்தாலும் சுப்பிரமணியம், அதாவது பிருந்தாவின் தந்தை, அவரது மருத்துவமனையில் அத்தனை வேலைகளையும் பழக்கி விட்டிருந்தார். அதோடு எந்த நேராமாக இருந்தாலும் தெளிவோடும் புத்திசாலித்தனத்தோடும் தேவையான அளவு துணிச்சலோடும் இருக்க வேண்டும் என்பது அவரது ட்ரைனிங். அந்த இயல்பு பிருந்தாவிடம் வெகுவாக பிரதிபலிக்கும்.

“ம்ம்ம்… வேற என்ன பண்றதுன்னு பாக்கறேன்…” கார்த்திக்கின் குரலில் அவனையும் அறியாமல் சோர்வு வந்து சேர்ந்தது.

“சியர் அப் கார்த்திக்… ஏதாவது வழி கிடைக்காம போகாது… அப்பா கிட்ட பேசிட்டு நானே ஏதாவது செய்ய முடியுமான்னு பார்க்கறேன்…” என்றவள், தோசைக் கரண்டியை அடுப்பு மேடையில் வைத்து விட்டு தனது செல்பேசியை எடுத்து தந்தைக்கு அழைப்பு விடுத்தாள்.

ரிங் போய்க்கொண்டே இருக்க, அழைப்பு எடுக்கப்படவில்லை.

இரண்டாவது, மூன்றாவது முறை என்று முயன்று கொண்டே இருந்தாள். கூடவே மெல்லிய பதட்டம். அவளது தந்தையும் இப்படி செய்யக் கூடியவர் இல்லையே. தனது அழைப்பை பார்த்தால் எத்தகைய சூழ்நிலையாக இருந்தாலும் எடுத்து பேசாமல் விட்டதில்லையே. என்னவாயிற்றோ என்ற பயம் லேசாக ஆட்கொண்டது.

சட்டென தோன்ற மணியை பார்த்தாள். ஏழரையை தொட்டுக் கொண்டிருந்தது. நெற்றியில் யோசனையாய் கைவைத்துக் கொண்டாள். இப்போது ஜெனீவாவில் அதிகாலை மூன்று மணியிருக்குமா? தனக்குத்தான் கார்த்திக் பைத்தியம் பிடித்திருக்கிறது என்றால், அவரும் இந்த நேரத்தில் காலை அட்டென்ட் செய்ய முடியுமா என்ன? அதுவுமில்லாமல் உறங்கும் போது சைலென்ட்டில் போட்டு விடுவாரே!

“ப்ச்… அப்பா தூங்கிட்டு இருப்பாங்க போல இருக்கு…” என்று சொன்னவள், “மஹா கிட்ட பேசினீங்களா?” என்று கார்த்திக்கை கேட்க,

“ம்ம்ம்… அது தைரியமா தான் இருக்கு… எனக்குத்தான் நெருப்பு மேல உட்கார்ந்து இருக்க மாதிரி இருக்கு…” என்று கூற, மெலிதாக புன்னகைத்தாள் அவள்.

“நான் தான் சொன்னேனே… உங்களை விட அவளை எனக்கு நல்லா தெரியும்… அந்த அராத்து கிட்ட சிக்கினவன் தான் தொலைஞ்சான்…” என்று சிரித்தவள், “டோன்ட் ஒர்ரி…” என்று கூறியவள், “அவ வந்தவுடனே நான் உங்களுக்கு கோதுமை தோசை செஞ்சு தந்தேன்னு தான் முதல்ல சொல்வேன்…” என்று கேலியாக முடிக்க, அவனும் மெலிதாக புன்னகைத்தான்.

“அதுக்காவது சீக்கிரமா லட்டை கூட்டிட்டு வரணும்…” சிறு கசப்போடு கூறியவனின் கண்கள் அவனறியாமல் கலங்கின.

“அடடா… சிவாஜி… கண்ணை துடைங்க… இப்ப இமோஷனலா அனுகினா கண்டிப்பா சரி வராது… நீங்க முதல்ல தெளிவாகுங்க சிவாஜி…” குரலில் கிண்டலிருந்தாலும், உள்ளுக்குள் மனம் வெகுவாக வருந்திக் கொண்டிருந்தது.

“ஆனாலும் உங்க ரெண்டு பேருக்குமே இந்த வாய்க்கொழுப்பு அதிகம் தான்…” என்று தங்கையையும் சேர்த்து கார்த்திக் பேச, “உங்க தங்கச்சி கூட இத்தனை வருஷமா குப்பை கொட்றேன் இல்லையா…” என்றவளின் உதட்டில் மில்லிமீட்டர் சிரிப்பு.

“மஹா தப்பா நினைக்க மாட்டாளா பிருந்தா…?”

“என்ன தப்பா?” என்று யோசனையாய் இவள் கேட்க,

“ம்ம்ம்… இல்ல நாம இப்படி பேசினது தெரிஞ்சா…” என்று கார்த்திக் இழுக்க,

“இப்படி ஒரு இளிச்சவாய் தான் அண்ணியா வரணும்ன்னு விதி இருந்தா அதை மாத்தவா முடியும்ன்னு அவ எப்பவோ சொல்லிட்டா…” என்று சொல்லும்போதே முகம் சிவக்க, வேறு பக்கம் திரும்பி கொண்டாள் பிருந்தா.

“அடப்பாவிகளா… எல்லாம் கூட்டு களவாணிகளா?” என்று சிரித்தான்.

“ம்ம்ம்… ரொம்ப முக்கியம்…” என்று உதட்டை சுளித்தவள், “இந்த விஷயத்தை அப்புறம் பாருங்க… இப்ப உங்க தங்கச்சி பக்கிட்ட இருந்து அந்த ஆளை காப்பாத்துங்க…” என்று சிரிக்க,

“எல்லாம் நேரம் தான்…” என்று அவளது மண்டையில் தட்டியவன், “இப்ப ரொம்பவே தெளிவா இருக்கு பிருந்தா. தேங்க்ஸ் ஃபார் கம்மிங்…” என்று ஆழ்ந்த குரலில் கூற,

“அம்மாவை முதல்ல இங்க வர சொல்லுங்க… அவங்க இருந்தா உங்களுக்கு இவ்வளவு குழப்பம் இருக்காது. அதுவுமில்லாம இது மாதிரி டைம்ல அப்பாவை அங்க இருக்க வைக்கறது சரியில்லை. எதுவா இருந்தாலும் நாம இருந்தா சமாளிக்கலாம்…” என்று கூறியவளை பார்த்து,

“அம்மா ரொம்ப அழறாங்க. என்ன பண்ண? அவங்களை சமாதானப்படுத்தவா? இல்ல பிரச்சனைய பாக்கவா?”

“அழாம என்ன பண்ணுவாங்க? பெத்தவங்க இல்லையா?! இந்த நேரத்துல தான் நம்ம தோள் அவங்களுக்கு தேவை. அழறாங்கன்னு சொல்லி நாம அதை மறுக்க கூடாது…”

“அவங்க அப்படிதான் அழுவாங்கன்னு தெரியும்… ஆனா அம்மா அழுதா என்னால எதையும் யோசிக்கக் கூட முடியாது. எல்லாமே ஃப்ரீஸ்ஸான மாதிரி ஆகிடும்…”

“இது தப்பு. அவங்க மனக்கஷ்டத்தை வேற யார் கிட்ட சொல்ல முடியும்? பொதுவாவே ஜென்ட்ஸ்  வெளிய எங்க வேண்ணாலும் போவீங்க… ஸ்ட்ரெஸ் பஸ்டர் அதிகம்… வீட்ல இருக்க லேடீஸ் என்ன பண்ணுவாங்க? எதையாவது சொல்ல வந்தா நீ இப்படித்தான்னு முடிக்க வேண்டியது… அவங்க சொல்றதை எதையும் காது கொடுத்து கேட்கறது இல்ல. அப்புறம் அவங்க டிப்ரஸாகாம எப்படி இருப்பாங்க?”

 “நான் அப்படில்லாம் கிடையாதுன்னு உனக்கு தெரியாதா? இந்த விஷயத்துல அம்மா அழுதா என்னால யோசிக்க முடியலன்னு தான் சொல்றேன். ஆம்பிளைங்களும் பாவம் தான். நாங்களும் குடும்பத்துக்காக எத்தனையோ விஷயம் பண்றோம்…” என்று வெளிப்படையாக கூறியவனை கண்களில் சிரிப்போடு பார்த்தாள்.

“நீங்க நல்லவங்க தான் ஒத்துக்கறோம்… இல்லைன்னு சொல்லலை… ஆனா அம்மா ஏதாவது சொல்ல வந்தா காது கொடுத்து கேளுங்க…” என்று கூறியவளை ஆழ்ந்து பார்த்தவன்,

“இந்த பொண்ணுங்க எல்லாம் சீக்கிரமா மெச்சூர்ட்டா ஆகிடறாங்க. நாங்க பார்த்து வளர்ந்த குட்டீஸ் நீங்க ரெண்டு பேரும்… ஆனா லட்டும் அவ்வளவு தெளிவா பேசறா, நீயும் அப்படித்தான்…”

“உங்களுக்கும் சேர்த்து நாங்க யோசிச்சுக்கறோம்… கவலைய விடுங்க…” என்று அவள் சிரிக்க, “அடிங்…” என்று அவளை மிரட்டியவன்,

விஜய்யிடம் பேசுவதற்காக செல்பேசியை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு சென்றான். முன்தினம் ஷ்யாமுடைய அப்பாவுடன் பேசியதற்கு என்ன பிரதிபலிப்பு இருக்கக் கூடும் என்று யோசனையாக இருந்தது. அதோடு பிருந்தாவின் அப்பாவும் ஜெனீவாவில் இருப்பதால் என்ன செய்யலாம் என்று அவனுக்கு யோசிக்க வேண்டும்.

ஆனால் சொல்லி வைத்தார் போல ஒவ்வொருவரும் கடைசி நேரத்தில் கைவிடுவது தொடர்கதையாகி இருந்தது. இதற்கு பின்னணியில் ஷ்யாம் இருக்கக் கூடும் என்று கார்த்திக்கால் நினைக்க முடியவில்லை.

அவனுக்கு தேவை பணம். அதை தடுக்க முயல்வானா என்ன?

தந்தையின் அழைப்புக்காக பிருந்தா காத்திருக்க, கார்த்திக் தனக்குத் தெரிந்த ஒவ்வொருவரையும் அழைத்து தியேட்டரை விற்க விலை சொல்லிக் கொண்டிருந்தான்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த பிருந்தாவுக்கு தான் மனம் கனத்து போனது. அதிலும் காரியமாகாமல் போனை ஆப் செய்யும் போதெல்லாம் அவனது எரிச்சல் வேறு வெளிப்படையாக தெரிந்தது.

எப்படிப்பட்ட பாரம்பரியமான குடும்பம் இது? எத்தனை பெருமைகளை கொண்டது? எத்தனை பேருக்கு வாழ்க்கை கொடுத்தவர்கள் இவர்கள்? தலைமுறை தலைமுறையாக பெருமையை கட்டிக் காத்து வந்த குடும்பமல்லவா!

அதிலும் முத்து முத்தாக இரண்டு வாரிசுகள்!

அவ்வளவு பொறுப்பான கார்த்திக்கும் அறிவான மகாவும். அதிலும் குற்றம் எதுவுமே சொல்ல முடியாதவன் கார்த்திக். இவர்களுக்காக இந்த நிலை என்று மனம் கிடந்து அடித்துக் கொண்டது.

அவன் எதிரில் சென்று அமர்ந்தவள், அவனது மனநிலையை சற்று மாற்றும் பொருட்டு ,

“பேசாம உங்க மாமனார் கிட்ட இப்பவே வரதட்சணைய வசூல் பண்ணிடலாமா?” கண்ணடித்தபடி கேட்டவளை முதலில் புரியாத பார்வை பார்த்தவன், புரிந்தபின் சிவந்த முகத்தோடு,

“அடிங்க… வரதட்சணையா? ஓடிடு… ஆனாலும் உனக்கு இவ்வளவு பேராசை இருக்கக் கூடாது… ட்வென்டி குரோர்ஸ் கேக்குதா உனக்கு?” என்று அவன் சிரிக்க,

“இருக்கட்டும்… ஹாஸ்பிட்டல்ல தான் பணத்தை மூட்டை கட்டறாங்கல்ல… கொடுத்தா ஒன்னும் குறைஞ்சு போய்ட மாட்டார்…” என்று கிண்டலாக இவள் கூற, அவளை நேருக்கு நேராக பார்த்தான் கார்த்திக்.

“தயவு செஞ்சு உனக்கும் இந்த பிரச்சனைக்கும் இப்படி கனெக்ட் பண்ணிக்காத பிருந்தா. எப்படியாவது நான் சுதாரிச்சுடுவேன். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. உன் அப்பா கிட்ட என்னை பத்தின இம்ப்ரஷன் நல்லபடியா இருக்கணும்… தியேட்டரை அவர் சேல் பண்ணி கொடுக்கட்டும். அது போதும். மற்றபடி வேற மாதிரி அவர் கிட்ட இப்ப தயவு செஞ்சு பேசிடாத… ப்ளீஸ்…”

அவனது இயல்பறிந்த பிருந்தாவுக்கு அவன் கூறியது புதிதாகவே இல்லை. இப்படித்தான் சொல்வான் என்பதும் தெரியும். பெருமையாக அவனைப் பார்த்தபடி தலையாட்டினாள். கார்த்திக் வெறுமனே சொன்னாலே தலையாட்டலை தவிர வேறெதுவும் செய்யாதவள், இப்போது என்ன செய்ய போகிறாளாம்?!

ஹைதராபாத்திலும் இதே டென்ஷன், வேறு வடிவத்தில்!

ஷ்யாமின் தந்தையும் தாயும் விஜய்யை ஒரு வழியாக்கி இருந்தனர்.

“அவன் ரொம்பவே கெட்டுப் போனது உன்னால தான் விஜி… எல்லாம் தெரிஞ்சு இருந்தாலும் வேற வழியில்லாம பேசாம இருந்தேன்… உன்னை சொன்னா ஷ்யாம் கோபப்படுவான்னு…” நேரடியாக ஜோதி குற்றம் சாட்ட, விஜய்யால் எதுவும் பேச முடியவில்லை.

“அப்படியென்ன வெறி உங்க ரெண்டு பேருக்கும்? ஒரு குடும்பத்தை குலைக்கறது எவ்வளவு பெரிய பாவம் தெரியுமா?”

“தெரியும் மேடம்… நான் நாய் வேஷம் போட்டுட்டேன்… குறைச்சு தான் ஆகணும்…” சிறிய குரலில் கூறியவனை அப்படியே வறுத்து எடுத்தால் என்னவென்று தோன்றியது ஜோதிக்கு.

இந்த இடத்தில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், விஷயம் மொத்தத்தையும் சொன்னது கார்த்திக். அதற்கு பின்னாலிருந்து தூண்டியது மட்டுமே விஜய்.

இவர்களை பொறுத்தவரை இன்னமும் விஜய் ஷ்யாமின் கைத்தடி தான். ஜோதியாக கேட்டதால் விஷயத்தை ஒப்புக்கொண்டிருக்கிறான் என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தனர்.

ஏனென்றால் விஜய் அந்த வட்டத்திலிருந்து வெளியே வர விரும்பவில்லை.

பரமசிவன் கழுத்திலிருக்கும் வரை மட்டுமே இந்த பாம்பிற்கு மதிப்பு என்பதும், வெளியே வந்தால் தன்னை மிதித்து தூக்கி எறிய எத்தனையோ பேர் காத்திருக்கின்றனர் என்பதும் அறிந்தவன் விஜய்.

மஹாவின் மேல் உள்ள காதலை எப்படியாவது நிறைவேற்றிக் கொள்ளவும் வேண்டும்… அதே சமயத்தில் ஷ்யாமை ரொம்பவுமே பகைத்துக் கொள்ளவும் கூடாது என்பதுதான் அவனது வியூகம். தானே சொன்னால் எப்படியும் ஷ்யாமுக்கு தெரிந்து விடும். அதே சமயத்தில் ஹைதராபாத்துக்கு தெரியாமலும் இப்போது மறைத்து வைக்கவும் முடியாது என்று பல வழிகளில் யோசித்து, தன்னால் எப்படி விலாங்கு மீனாக நழுவ முடியும் என்று ஆலோசித்து தான் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தான்.

அனைத்தையும் தாண்டி ஷ்யாமை பழி தீர்க்க வேண்டும் அவனுக்கு!

தீர்ப்பானா? தீர்க்கப்படுவானா?

****

error: Content is protected !!