VNE 31
VNE 31
31
அந்த மருத்துவ குழுவின் முன் அமர்ந்திருந்தார்கள் மஹாவும் கார்த்திக்கும். மிக முக்கியமான கார்டியோ ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்கள் மற்றும் அதை சார்ந்த துறைகளை சேர்ந்த ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்கள் அடங்கிய குழு அது. உடன் ஷ்யாமும் இருந்தான்.
“இன்னைக்கு ஈவினிங் பேஷன்ட்டுக்கு மறுபடியும் கார்டியாக் அரெஸ்ட் வந்திருக்கு மிஸ்டர் கார்த்திக். அவர் ரொம்பவே சீரியஸ் கண்டிஷன்ல இருக்கார்…” என்று தலைமை மருத்துவர் கூற, மஹா உதட்டை கடித்துக் கொண்டு தலைகுனிந்து கொண்டாள், அனைவரின் முன்பும் உடைய முடியாது.
தந்தை இருக்கும் நிலையில் அடுத்த அட்டாக் என்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை அவளும் அறியாதவள் அல்ல. முற்பகலில் ரிலே ரேஸில் ஓடுவதை போல ஆரம்பித்தது. அவரது நிலையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டே அத்தனை பரிசோதனைகளையும் செய்து கொண்டிருந்தனர் மருத்துவர்கள்.
ஒரு மருத்துவ மாணவியாக அவர்களின் அர்ப்பணிப்பையும் வேகத்தையும் பார்த்து வியந்தாள். ஆனால் அது ஷ்யாமின் பெயருக்கான பிரதிபலிப்பு என்பதும் அவளுக்கு தெரியும்.
அந்த கட்டபஞ்சாயத்தை பார்த்து அரண்டு போன தாயை சமாதானப்படுத்த வெகு நேரமாகியது. கார்த்திக் அவர்களோடு அங்கேயே தங்கிவிட, இவர்கள் மட்டுமாக தான் ஹைலி க்ரிடிகல் வார்டுக்கு வந்தார்கள். வரும் வழியெல்லாம் பைரவி புலம்பித் தள்ளி விட்டார்.
“ரொம்ப பெரிய ஹாஸ்பிடல் மஹா…” அந்த வார்டின் ஆடம்பரத்தையும் வசதிகளையும் பார்த்தபடி வந்தார் பைரவி. பொதுவாகவே சுஷ்ருதா ஆடம்பரத்துக்கு பெயர் போனதுதான். ஆனால் இந்த ஸ்பெஷல் வார்ட் ரொம்பவுமே போஷ் என்று சொல்வார்களே, அது போல!
அவளிருந்த குழப்பத்தில் அவருக்கு பெரிதாக பதில் கூற தோன்றவில்லை.
“ம்ம்ம்…” என்று மட்டும் கூறிவிட்டு, தந்தையை பற்றிதான் சிந்தித்தபடி வந்தாள். அடுத்து வெண்டிலேட்டரில் தான் தந்தையை வைக்க வேண்டியிருக்கும். அப்படி வெண்டிலேட்டரில் வைத்தால் எத்தனை சதவிதம் உயிர்பிழைக்க வாய்ப்பிருக்கிறது என்பதை யோசித்தபடி வந்தவளுக்கு, அந்த கட்டபஞ்சாயத்து எல்லாம் பெரிய விஷயமாக இப்போது தெரியவில்லை.
அவனது அறையிலிருந்து வெளிவந்தவுடன் ஷ்யாமின் விஷயம் மனதுக்குள் எங்கோ ஒரு மூலைக்கு சென்றுவிட்டது. எதுவாக இருந்தாலும் அவன் சமாளிப்பான் என்ற தைரியம்… உள்ளுக்குள் பயம் கொஞ்சமாக இருந்தாலும் அந்த தைரியம் அதிகமாக இருந்தது.
இப்போது மனம் முழுவதுமே தந்தை மட்டுமே ஆக்கிரமித்து இருந்தார்.
“இது முழுக்க அவரோடதா மஹா?” என்ற தாயின் சந்தேகம் அவளது மூளைக்குள் நுழையவில்லை. ஏதோவொரு சிந்தனையில் தன்னோடு வந்து கொண்டிருந்த மகளை உலுக்கினார் பைரவி.
“மஹா…”
“ம்ம்ம்… என்னம்மா?” என்று கேட்க,
“சரியா போச்சு போ… எதை திங்க் பண்ணிட்டு இருக்க?”
“அப்பாவை பத்தி தான் ம்மா…” என்றவள், “என்ன சொல்லு?” என்று கேட்க,
“இந்த ஹாஸ்பிடல் முழுக்க அவரோடதான்னு கேட்டேன்…” என்றும் மீண்டும் அந்த கேள்வியை அவர் அழுத்திக் கேட்க,
“எவரோடது?” யாரை இவர் சொல்கிறார் என்று குழப்பமாக பார்த்தாள் மஹா.
“அதான் ஷ்யாம் தம்பியோடதான்னு கேட்டேன்…” என்க, அவளுக்கு பகீரென்றது இனிமையாக! அவனை பொறுக்கி என்று அவர் விளித்ததை சிறு புன்னகையோடு நினைத்துக் கொண்டாள்.
“எனக்கு தெரியாது ம்மா… அவன் கிட்டயே வேண்ணா கேளு…” என்க,
“ஐயோ ஆண்டவா… போதும் சாமி… எவ்வளவு கோபம்?! இப்படியா ஒருத்தனை அடிப்பாங்க?” என்று பயந்தவரை பார்த்து,
“அதுக்கு நாம என்ன பண்ண முடியும்?”
“என்னடி இப்படி சொல்ற? உனக்காகத்தானே இப்படி பண்றார்?” என்று கேட்க,
“ம்மா… எனக்காக இல்லைன்னாலும் இப்படித்தான் பண்ணுவான்… அவனை எதிர்த்து யாரும் பேசிட கூடாது… அதுக்காக என்ன வேண்ணாலும் பண்ணுவான் ம்மா…”
“உனக்கு பயமா இல்லையா மகா?” சற்று தயங்கித்தான் கேட்டார்.
“எதுக்கு ம்மா பயப்படனும்?” இயல்பாக மகள் கேட்டபோது உள்ளுக்குள் அச்சமாகத்தான் இருந்தது.
“அஞ்சுவது அஞ்சாமை பேதைமை மகா…” என்ற தாயை புன்னகையோடு பார்த்தவள்,
“தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள்…” என்றவள், “என்ன அர்த்தம் தெரியுமா?” என்று புன்னகையோடு கேட்டு விட்டு, “யாரையும் ஆராயாம நம்பக் கூடாது. அப்படி ஆராய்ஞ்சு நம்பிட்டோம்னா அவங்களை முழுசா நம்பனும்…” என்றவளை சற்று ஆச்சரியமாகத்தான் பார்த்தார் அவர்.
“என்னன்னவோ சொல்லு…” என்று அவர் அலுத்துக் கொள்ள,
“உண்மையத்தான் சொல்றேன்…” என்று தீர்க்கமாக சொன்னவளை பார்த்தவர்,
“நம்மளை போக சொன்னதே இன்னும் ரொம்ப மோசமா அடி போடவா இருக்கும்…” என்று தனக்குள்ளாக புலம்ப,
“ம்மா… அது நமக்கெதுக்கு? ஷ்யாமாச்சு அவனாச்சு… இப்ப அப்பாவுக்கு வைத்தியம் பார்க்க வந்தியா? ஷ்யாமை பத்தி ஆராய வந்தியா?” என்று சமாதானப்படுத்த முயன்றாலும் அவர் ஆவது போல தெரியவில்லை.
“இல்ல மஹா… அவர் இப்படி இருக்கறதால தான் அவரைப் பார்த்து எல்லாரும் பயப்படறாங்க போல… கார்த்தியும் இதனால தான் பயந்துக்கறான்…” என்ற அன்னையை ஆதூரமாக பார்த்தவள்,
“அவனை பத்தின பேச்சை விடும்மா… எந்தெந்த பிரச்சனைய எப்படி ஹேண்டில் பண்ணனும்ன்னு அவனுக்கு தெரியும்… நீ நம்ம பிரச்சனையை பாரு…” என்று அந்த பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைக்க முயல,
“பாப்பா… அவன் இவன்னு சொல்லாத…” என்றவரை பார்த்தபோது அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“ம்மா… காமெடி பண்ணாத…” என்றபடி தந்தை இருந்த வார்டை நோக்கி போனாள். ஆனாலும் பைரவியின் முகம் தெளியவில்லை. ஒருபுறம் மகளின் ஷ்யாமோடு கூடியதான நட்பு, நட்பு மட்டுமல்ல என்றும் தோன்றியது. அது ஒரு வகையில் பயத்தை கொடுத்தது. தனியாக ஷ்யாமை பார்க்கும் போது பிடித்திருந்தது. ஆனால் அவனது இது போன்ற முரட்டு நடவடிக்கைகளை பார்க்கும் போது அடிவயிற்றை கலக்கியது. என்ன முடிவுக்கு வருவது என்றே தெரியவில்லை.
ஒரு புறம் இந்த பிரச்சனை என்றால் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக கணவரின் உடல்நிலை. அத்தனையையும் மறக்கடிக்கக் கூடியதாக இருந்தது. பெரிதாக பிரச்சனைகள் எதையும் பைரவி பார்த்ததில்லை. கணவர் நன்றாக இருந்தவரை அவர் தான் அத்தனையும் தோளில் சுமப்பார்.
கணவரோடு உடன் பிறந்தவர்களுக்கு செய்வதாக இருந்தாலும், பைரவியின் குடும்பத்திற்கு செய்வதாக இருந்தாலும் எதிலும் முருகானந்தம் குறை வைத்ததில்லை. இரு பக்கமும் வெகு நேர்த்தியாக ஒவ்வொன்றையும் கொண்டு செல்வார். பிரச்சனை எதுவாக இருந்தாலும் பைரவியிடம் வராது.
“அவளுக்கு என்ன மாப்ள தெரியும்? இன்னமும் சின்னப் பொண்ணுதான் அவ…” என்று பைரவியின் சகோதர்களிடமே வழக்கடிப்பவர் அவரது கணவர்.
அதனால் இப்போதுவரைக்குமே எந்த பிரச்சனையையும் பெரிதாக சமாளிக்க தெரியாது. எந்த வார்த்தையை எங்கு பேச வேண்டும் என்று கூட தெரியாது. இந்த வார்த்தையை சொன்னால் கேட்பவர் மனம் சங்கடப்படும் என்று நினைத்துப் பார்த்தெல்லாம் பேசியதில்லை. அந்த அவசியம் அவருக்கு இருந்ததில்லை. மகளையே சமாளிக்க முடியாமல் தான் அவ்வப்போது அவளை கடித்து வைப்பதும் கூட.
அப்படிப்பட்டவர் முதன் முறையாக அழுதது கணவருக்கு முதல் அட்டாக் வந்த போதுதான். வாழ்க்கையே சூனியமானது போல உணர்ந்தார். கணவர் இல்லையென்றால் வாழ்க்கையில் என்ன மீதமிருக்கிறது என்ற கேள்வி அவர் முன் பெரிதாக வந்து நின்று அரட்டியது.
அதிலிருந்து மீண்டபோது தான் சற்று முதிர்ந்தார் பைரவி.
அதற்கு பின் இரண்டாவது முறை அழுதது என்றால் அது தன்னுடைய மகளுக்காக தான். அவளது வாழ்க்கை என்னவாகுமோ என்ற பயத்தில் கலங்கி நின்றார்.
அன்று காலையில் கூட அந்த பயம் வெகுவாக இருந்தது. ஆனால் ஷ்யாமின் அக்கறையும் அனுசரணையும் அவரது அத்தனை பயத்தையும் வெகுவாக போக்கியிருந்தது.
பாதுகாப்புணர்வை தரக் கூடியவர்கள் அரிதானவர்கள். அந்த உணர்வை பைரவியே அறியாமல் அவருக்கு கொடுத்திருந்தான் ஷ்யாம்.
ஏதேதோ நினைவுகள் மனதை அழுத்த, ஒரு விதமான பதட்டத்துடனேயே மகளுடன் சுற்றினார் பைரவி.
முருகானந்தத்திற்கு மீண்டும் உடல்நிலை மோசமாகவும் பைரவியின் மற்ற நினைவுகள் அனைத்தும் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது. மகனும் மகளும் ஒவ்வொரு பரிசோதனையின் போதும் உடன் இருந்தாலும் பைரவிக்கு கணவரை அப்படி பார்க்கும் தைரியம் முற்றிலும் இல்லை.
அவ்வப்போது வந்த ஷ்யாம், “சாருக்கு ஒன்னுமாகாது… கவலைப்படாதீங்க…” என்று தைரியம் கொடுத்துவிட்டு போனாலும், அவரது கலக்கம் தீர்ந்தபாடில்லை.
மருத்துவர்கள் பேச வேண்டும் என்று கூறிய போது உச்சகட்ட அச்சத்தில் பைரவி போகவே இல்லை. கார்த்திக்கும் மஹாவும் தான் போனார்கள். உடன் ஷ்யாமும்.
*****
“டாக்டர்… அவரோட கண்டிஷன் மோசமா இருக்குன்னு தெரியும். ஆனா அடுத்து என்ன பண்றது? அதை சொல்லுங்க…” ஷ்யாமின் இந்த கேள்விக்கு, பதில் கூற யோசித்தார் ரோட்ரிக்ஸ். அவரோடு இன்னும் சில இதய நோய் நிபுணர்களும் இருந்தனர்.
“ஷால் வி கோ ஃபார் எக்மோ?” என்று அவர் யோசனையாக கேட்க,
“டாக்டர்… நுரையீரலும் பிரச்சனையா இருக்கா?” என்று அவசரமாக கேட்டாள் மஹா. எக்மோ இருதயம், நுரையீரல் என்று இரண்டுக்குமேயானது. ஒவ்வொரு சிக்கலாக கூடிக் கொண்டே போய்விடுமோ என்ற கலக்கம் அவளுக்குள்.
“இதுவரைக்கும் இல்ல… ஆனா நிமோனியா அட்டாக் ஆக நிறைய வாய்ப்பு இருக்கு…” என்று இன்னொரு மருத்துவர் கூற,
“ம்ம்ம் எஸ்… வெண்டிலேட்டர் வித் எக்மோ வில் பீ தி ரைட் சாயிஸ்…” என்று கூறிய ரோட்ரிக்ஸ், ஷ்யாமிடம் திரும்பி,
“இந்த எக்மோ மெஷினை நாம நம்ம ஆம்புலன்ஸ்ல கூட இன்ஸ்டால் பண்ணலாம் பாஸ்…” என்று யோசனை தெரிவிக்க,
“அது கொஞ்சம் பெரிய மெஷினரியாச்சே டாக்டர்? அதை எப்படி ஆம்புலன்ஸ்ல?”
“சின்ன போர்ட்டபிள் மெஷின் இருக்கு பாஸ்… அப்ராட்ல யூஸ் பண்றாங்க… தட் மேக்ஸ் வெரி மச் சென்ஸ் இன் ப்ரோவைடிங் எமெர்ஜென்சி கேர்… நம்ம ஆம்புலன்ஸ்ல எல்லாம் அதை இன்ஸ்டால் பண்றது ரொம்பவுமே நல்ல விஷயம்…” என்க, மஹாவின் புறம் திரும்பியவன்,
“நீ என்ன நினைக்கற மஹா? செய்யலாமா?” என்று கேட்க, அவனது கேள்வியில் மஹா இயல்பாகத்தான் இருந்தாள் என்றால் கார்த்திக் குழம்பினான். அவனது அதிரடிகளை எல்லாம் உடனிருந்து பார்த்ததில் சற்று அரண்டு தான் போயிருந்தான்.
“உனக்கெப்படி தோணுது?” என்று கேட்டவளிடம்,
“நீ சொன்னா செய்யலாம்… ஏன்னா இந்த பீல்ட்ல எனக்கு ரொம்ப ஆழமான அறிவெல்லாம் கிடையாது… இவங்க சொல்றதை செஞ்சு கொடுத்துடுவேன்… அவ்வளவுதான்… முழுசா இவங்க எல்லாம் தான் மேனேஜ் பண்ணிக்கறாங்க…” என்று அங்கிருந்த மருத்துவர்களை காட்டியவன், “இனிமே என்ன பண்ணலாம்ன்னு நீ டிசைட் பண்ணு…”
“என்னை ரொம்ப டிபன்ட் பண்ணாத ஷ்யாம்… நான் ஒன்னும் அவ்வளவு ஒன்னும் அறிவாளி இல்ல…” சின்ன புன்னகையோடு கழுவும் மீனில் நழுவும் மீனாக பதில் கூற,
“அது எனக்கும் தெரியும்…” என்று சிரித்தவன், கார்த்திக்கின் புறம் திரும்பி, “கார்த்திக்… உங்க தங்கச்சிய ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பேக் பண்ணிடலாமா? எம்டி எம்பிஏ அங்க போட்டுக்கலாம்…” என்க,
மஹா, “தெய்வமே… ஆள விடு…” என்று கையெடுத்து அவனை வணங்க,
“நோ மேடம் … ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ரைட் சாய்ஸ்… உங்களுக்கு கார்டியோல தான் இன்ட்ரஸ்ட்ன்னு பாஸ் சொன்னாங்க… அங்க போனீங்கன்னா ரொம்பவே பெரிய எக்ஸ்போஷர் கிடைக்கும்… அடுத்தது ஹாவர்ட்… ஹவார்ட் மேக்ன்னா தனியா தெரிவாங்க… லீடர்ஸ் ஆர் மேட் தேர்… சாய்ஸ் இஸ் யுவர்ஸ்…” என்று ரோட்ரிக்சும் கூற,
“ஹவார்ட்ல வெளிநாட்டு ஸ்டுடண்ட்ஸ எடுக்கறதுல நிறைய பாட்டில்நெக்ஸ் இருக்கு… ஆனா ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கொஞ்சம் லிபரல்…” என்று இன்னொரு மருத்துவர் கூறவும் ,
“அப்படீன்னா ஜிமேட் பிரிப்பர் பண்ணனுமா மஹா?” என்று கார்த்திக் கேட்க,
“இல்லண்ணா அங்க MCAT ஸ்கோர் தான் பார்ப்பாங்க… அது வேற எக்ஸாம்…” எனவும்,
“ம்ம்ம் யோசிக்கலாம்டா…” என்று கார்த்திக்கும் கூற, ஷ்யாமின் முகத்தில் புன்னகை.
“சரி… யோசிங்க… யோசிச்சு இந்த அறிவு வாளிய அங்க பேக் பண்ற வழிய பாருங்க கார்த்திக்…” என்று சிரித்தவன், ரோட்ரிக்ஸ் புறம் திரும்பி,
“போர்டபிள் எக்மோ மெஷின் பத்தி தனியா உட்கார்ந்து டிஸ்கஸ் பண்ணிட்டு கண்டிப்பா பண்ணிடலாம் டாக்டர்…” என்று ஒப்புக் கொண்டவன், “இப்ப சாரை எக்மோல வெச்சுருந்தா என்ன மாதிரியான முன்னேற்றத்தை எதிர்பார்க்கறீங்க…” என்று கேட்க,
“ஹார்ட்டுக்கும் லங்க்ஸ்க்கும் கொஞ்சம் ரெஸ்ட் கிடைக்கும்… இட் கேன் ஹீல் இட்செல்ப்… கொஞ்சம் நமக்கும் டைம் கிடைச்சா சர்ஜரி பண்ண முடியுமான்னு யோசிக்கலாம் பாஸ்…” எனவும்,
“யூ மீன் ஓபன் ஹார்ட் சர்ஜரி?” என்ற ஷ்யாமின் கேள்விக்கு,
“ஒரு சின்ன மெஷின பேஷண்ட்டோட நெஞ்சு பகுதில இம்ப்ளான்ட் பண்ற ப்ரோசீஜர் பாஸ்… LVAD, லெப்ட் வென்ட்ரிகுலார் அசிஸ்ட் டிவைஸ். இப்ப பேஷண்ட்டோட ஹார்ட் பம்ப் பண்ண முடியாம சிரமப்படுது. அதை ரெக்டிஃபை பண்ணி ஈஸியா பம்ப் பண்ணிக் கொடுக்க, அந்த மெஷின இன்ஸ்டால் பண்ணிட்டா போதும்…” எனவும், சற்று யோசித்தவன்,
“டாக்டர்… ஐ நீட் த டைரக்ட் ஆன்சர்… அவர் ரிக்கவர் ஆகி வர்றதுக்கு எவ்வளவு பர்சன்ட் சான்ஸ் இருக்கு?”
நேரடியான கேள்விதான். கார்த்திக்கின் மனதிலும் அதே கேள்வி தான் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் அவன் கேட்கவில்லை. கேட்கும் துணிச்சல் இல்லை. தந்தை மீண்டு வருவாரா என்ற கேள்வி எழுவதே அவனுக்கு நடுக்கத்தை கொடுத்தது.
“கண்டிப்பா செவன்ட்டி பைவ் பர்சன்ட் சான்ஸ் இருக்கு பாஸ்…”
“மேக் இட் ஹண்ட்ரட் பர்சன்ட்…” என்று மெலிதாக புன்னகைத்தவனை பார்த்த ரோட்ரிக்ஸ்,
“நாங்க கம்ப்ளீட்டா டேக் ஓவர் பண்ணிருக்கோம் பாஸ்… யூ டோன்ட் ஒர்ரி…” எனவும் கார்த்திக்கு யானை பலம் வந்தது போல இருந்தது.
“எக்மோல என்ன பண்ணுவாங்க டாக்டர்? என்று அவரை பார்த்து கார்த்திக் கேட்க,
“ஒரு சின்ன சர்ஜிக்கல் ப்ரோசீஜர் பண்ணி ஹார்ட் veins ஸ எக்மோ மெஷின்ல கனெக்ட் பண்ணிடுவோம் கார்த்திக் சர்… ஹார்ட் செய்யற வேலைய அந்த மெஷின் செய்யும்… சிவியர் ஹார்ட் பெய்லியர் கேஸ்ல யூஸ் பண்ணுவோம்… இப்ப அப்பா கேஸ்ல எக்மோவோட வெண்டிலேட்டரும் இருக்கும்… சோ ஹார்ட் ஹீலாகி வர நிறைய சான்ஸ் இருக்கு…” என்று கூறியவர், சற்று இடைவெளிவிட்டு , “ஹீலாகும் போது அந்த குட்டி மெஷினை இன்ஸ்டால் பண்ணிட்டா பேஷன்ட் வில் பி ஆல்ரைட்… ஆனா அதுவும் ஒரு டெம்ப்ரவரி சொல்யுஷன் தான்… ஹார்ட் ட்ரான்ஸ்பிளான்ட் பண்றதுதான் ஃபைனல் சொல்யுஷன்….” எனவும் மூவருமே அமைதியாக யோசித்தார்கள்.
இருதய மாற்று அறுவை சிகிச்சை என்பது மிகப்பெரிய ரிஸ்க் அல்லவா!
“ஆனா அந்தளவு ரிஸ்க் போகாம எக்மோலையே ஹீலாகலாம்… எக்மோல ஒரு பைவ் டேஸ் கோர்ஸ் பார்ப்போம்… அதுக்கப்புறமா எந்த இம்ப்ளான்ட்டா இருந்தாலும் டிஸைட் பண்ணலாம் டாக்டர்…” என்று இன்னொரு மருத்துவர் கூற, அதை மற்றவர்களும் ஆமோதித்தனர்.
“இது ஓகே டாக்டர்…” என்று எழுந்து கொண்ட ஷ்யாம், “எனக்கு அப்பப்ப கம்யுனிகேட் பண்ணுங்க…” என்று கூற,
“சியூர் பாஸ்…” என்ற ரோட்ரிக்சுக்கு கைக் கொடுத்தான்.
“ரொம்ப ஜாக்கிரதை டாக்டர்… உங்க எல்லாரோட கம்ப்ளீட் கேர் அவருக்கு இருக்கணும்…” என்று முடிக்க,
“கண்டிப்பா பாஸ்…” என்று கூறிவிட்டு அந்த மருத்துவர்கள் அனைவரும் மகாவின் தந்தை இருந்த வார்டை நோக்கி போக, ஷ்யாம் கார்த்திக்கை பார்த்து,
“என்ன கார்த்திக்? என்ன சொல்றீங்க?” என்று கேட்க, அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அதற்கு முன் அவனாடிய ருத்ர தாண்டவத்தையும் பார்த்திருந்தான், அதற்கு பின்னும் சரி முன்னும் சரி மகாவிடம் அவ்வளவு அனுசரணையாக பேசியவனையும் பார்த்திருந்தான். அத்தனையும் பார்த்தபின்பு அவர்களது தந்தைக்காக அவன் எடுத்துக் கொள்ளும் சிரத்தையையும் பார்த்திருந்தான். இவனை பாம்பென கொல்வதா? பழுதென நினைப்பதா?
அவனது அறையில் வைத்து அந்த நடராஜை வெளுத்து விட்டிருந்தார்கள். அத்தனை அடியை வாங்கினாலும் அவன் வாய் திறக்கவே இல்லை.
கார்த்திக்கு உள்ளுக்குள் திக்கென்று இருந்தாலும் எதையும் காட்டிக் கொள்ளவில்லை.
ஷ்யாமே அவன் வாய் திறக்காமல் இருப்பதை பார்த்து சற்று அயர்ந்து போயிருந்தான். விஷ்ணுவும் இளங்கவியும் எத்தனை முயற்சி செய்தும் அவனிடமிருந்து ஒரு வார்த்தையை கூட வாங்க முடியவில்லை.
“விட்டுடு விஷ்ணு… அவன் போகட்டும்…” என்று கூறிய ஷ்யாமை அந்த இருவருமே ஆச்சரியமாக பார்த்தனர். அது போல அவ்வளவு எளிதில் விட்டுவிடுபவன் அல்லன் அவன்.
வீங்கிய முகத்தோடு, மணிவண்ணனின் தோளை பற்றிக் கொண்டு செல்பவனை பார்த்த ஷ்யாம், சிவச்சந்திரனின் அருகில் வந்து, யாருக்கும் கேட்காத குரலில்,
“அவனோட கால்ஸ், சதீஷ் கால்ஸ், மணிவண்ணன் கால்ஸ் எல்லாத்தையுமே ட்ராக் பண்ணு சந்த்ரா… கம்ப்ளீட் விஜிலன்ஸ் இருக்கனும்… அவனோட அடுத்த வேலை என்னன்னு க்ளோசா வாட்ச் பண்ணு…” என்று கூற,
“சியூர் பாஸ்…” என்று தலையசைத்தான்.
அத்தனையையும் அமைதியாக பார்த்தபடி இருந்தான் விஜி. அவனது முகத்தில் எந்தவிதமான உணர்வும் இல்லை. எதை பற்றியும் கவலையும் கொள்ளவில்லை.
“ம்ம்ம்… அப்புறம் சந்த்ரா….” என்று யோசித்தவன், அவனை வெளியே அழைத்து சென்றான்.
“சொல்லுங்க பாஸ்…” எதுவும் சொல்லாமல் வெளியே வந்தவன் என்னவென கேட்க,
“நம்ம விஜியையும் கொஞ்சம் க்ளோஸா மானிட்டர் பண்ணு…” எனவும் சற்று அதிர்ந்து ஷ்யாமை பார்த்தான் சிவச்சந்திரன்.
“பாஸ்…”
“எஸ்… சம்திங்… ஐ திங்க் ஹீ இஸ் நாட் ரைட்…” எனவும், மேலும் எந்த வார்த்தைகளையும் கூறாமல்,
“ஓகே பாஸ்…” என்றான்.
இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே வெளியே கார்த்திக் வெளியே வர, இவர்களது பேச்சு தடைபட்டது. அவனைப் பார்த்து புன்னகைத்தவன்,
“ஒன் மினிட் கார்த்திக்… சந்த்ராவ அனுப்பிட்டு வரேன்… ப்ளீஸ் வெய்ட்…” என்றவன், “ஓகே டேக் கேர் சந்த்ரா…” என்று அனுப்பிவிட்டு கார்த்திக்கிடம் திரும்பினான்.
“ம்ம்ம்ம்… சொல்லுங்க கார்த்திக்…” எனவும், மெளனமாக அவனை பார்த்தான் கார்த்திக். என்ன சொல்வதென தெளிவில்லை. எப்படி இவனை வெட்டி விடுவது என்ற எண்ணம் மட்டுமே அவனுக்குள் அப்போது!
“ஏன் மஹாவ விடாம பிடிச்சு வெச்சு இருக்கீங்க ஷ்யாம்? அவ பாவம்… உங்களோட டெம்பர்க்கு அவ ஒத்து வர மாட்டா…” இறுக்கமான முகத்தோடு கேட்டவனை சிறு புன்னகையோடு பார்த்தான்.
“போலித்தனமான ஆட்களை பார்த்து அலுத்து போச்சு கார்த்திக்… உண்மையான வெளிப்படையான மனுஷங்களை எனக்கு பிடிக்கும்…” வெகு நேர்த்தியாக கார்த்திக்கின் கண்களை பார்த்தபடி ஷ்யாம் கூற, கார்த்திக் உண்மையாக வாயடைத்து போனான்.
மஹா இவன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையும் நினைவுக்கு வந்தது.
“ஆனா நீங்க சரியான ஆள் கிடையாதே… உங்களை பற்றி எத்தனையோ அலிகேஷன்ஸ்… பண பிரச்சனை முடிஞ்சா விட்டுட வேண்டியதுதானே? இன்னமும் இப்படி தொடர்ந்துட்டே இருந்தா நானும் என்ன பண்றது? அவ சின்ன பொண்ணு… அவ லைப் நல்லா இருக்கணும்… இப்பவே பாப்பாவோட பியுச்சரை நினைச்சா கண்ணைக் கட்டுது… என்னோட தனிப்பட்ட வாழ்க்கைங்கறது எனக்கு இப்ப முக்கியமா தெரியல… மகாவுக்கு ஒண்ணுன்னா நான் சும்மா இருக்க மாட்டேன்… கொலை கூட செய்ய அஞ்ச மாட்டேன் ஷ்யாம்…” மரியாதையாகவே மிரட்டிய கார்த்திக்கை பார்த்து சிரித்தான்.
“நீங்க ஒரு நல்ல அண்ணன் கார்த்திக்… ஐ அப்ரிஷியேட்…” என்று மட்டும் கூறியவனை அத்தனை கோபத்தோடு பார்த்தான் கார்த்திக்.
“ஐ டோன்ட் நீட் யுவர் அப்ரிசியேஷன்… ஸ்டே அவே ப்ரம் மை சிஸ்டர்… இல்லன்னா கண்டிப்பா கேஸ் கொடுக்கத் தான் போறேன்…” எனவும்,
ஷ்யாம் சிரித்தபடி, “என்னன்னு கேஸ் கொடுப்பீங்க கார்த்திக்?” என்று கேட்க,
“பணத்துக்காக மஹாவை நீங்க கடத்திட்டு போனதா கேஸ் கொடுப்பேன்…”
“அதுக்கு அந்த மேடம் ஒத்துக்கணுமே…” என்றவனுக்கு உண்மையில் நகைச்சுவையை கேட்ட உணர்வு.
“ஏன் ஒத்துக்க மாட்டா? ஒத்துக்க வைப்பேன்…” வீம்பாக கூறியவனை ஆழ்ந்து பார்த்தவன்,
“வேணாம் கார்த்திக்… இன்னமும் மஹாவை இழுக்காதீங்க… அவளை ரொம்பவே டேமேஜ் பண்ணியாச்சு… நான் பண்ணதும் தப்பு… அதே தப்பை மறுபடியும் நீங்க பண்ணாதீங்க… வேணும்னா மர்டர் அட்டெம்ப்ட் கேஸ் என் மேல கொடுங்க… அது இன்னமும் ஸ்ட்ராங்கான கேஸ்…” என்று வெகு அமைதியாக கூறியவனை வெறித்துப் பார்த்தான் கார்த்திக்.
“வேற வழியில்லன்னா அதை தான் பண்ணியாகணும்…” என்று முடித்ததை எல்லாம் ஷ்யாம் இப்போது கண்டுகொள்ளவில்லை.
‘என்ன சொல்கிறாய்?’ என்று மருத்துவர்கள் கூறியதற்கு அவனிடமே கருத்து கேட்டவனை என்ன வகையில் சேர்ப்பது என்று புரியாமல் விழித்தான்.
“டாக்டர்ஸ் என்ன சொல்றாங்களோ அப்படி பண்ண வேண்டியதுதான்…” என்று குறுக்காக வந்த மஹாவை பார்த்து,
“ஓகே அறிவு வாளி… இன்னும் உங்க அம்மா ஒன்னும் சாப்பிடாம இருப்பாங்க… என் ரூமுக்கு அவங்களை கூட்டிட்டு போ… உங்க ரெண்டு பேருக்கும் டிபன் அனுப்ப சொல்றேன்…” எனவும்,
“வேணான்டா… எனக்கு சாப்டற மூடே இல்ல…” என்று மஹா மறுக்கவும்,
“கார்த்திக்… இன்னைக்கு எங்கிருந்து மழை வர போகுதுன்னு தெரியல… ‘மஹாவுக்கு’ சாப்பாடு வேணாமாம்…” கிண்டலாக கூறியவனை முறைத்தாள். கார்த்திக்கு கூட மெலிதாக புன்னகை மலர்ந்தது. மஹாவும் சாப்பாடும் இணை பிரியாத தோழிகள் போல!
“அப்பாவுக்கு இப்படி இருக்கும் போது எப்படி என்னால சாப்பிட முடியும்?”
“நீ சாப்பிடாம இருந்தா உங்க அப்பா இப்பவே கியூர் ஆகிடுவாரா? உங்க அம்மாவுக்கு ஏதாவது முடியாம போச்சுன்னா என்ன பண்ணுவ? நாம முதல்ல தெம்பா இருந்தாதான் எல்லா வேலையும் பார்க்க முடியும் மஹா. போய் உங்க அம்மாவை சமாதானம் பண்ணி சாப்பிட வை… அதை விட்டுட்டு லூசு மாதிரியே பேசாத…” என்றுக் கூறிக் கொண்டே மூவருமாக வெளியே வரவும், ஆத்மநாதனும் ஜோதியும் அந்த இடத்திற்கு வந்து சேரவும் சரியாக இருந்தது.
ஷ்யாமை பார்த்த நாதனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தபடி இருந்தது.
“பைரவிம்மா…” என்றபடி பைரவியை நோக்கி வர,
“அண்ணா…” என்றழைத்த பைரவியின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது.
ஆத்மநாதன் திரும்பி ஷ்யாமை பார்த்து முறைத்த முறைப்பில் அவன் ஆவியாகாதது ஒன்றே மிச்சம்.
அதை பற்றியெல்லாம் அவன் கவலைப்படாமல், புன்னகையோடு,
“நானா…” என்றழைத்தபடி அவரை நோக்கி போக,
“வேண்டாம் ஷ்யாம்… நீ எனக்கு மகனும் இல்ல… நான் உன்னோட அப்பாவும் இல்ல…” என்று கடினமான குரலில் அவனை நிர்தாட்சனியமாக மறுத்தார் ஆத்மநாதன்.