நீலாங்கரை பங்களாவின் மொட்டை மாடியில் கடலை வெறித்தபடி அமர்ந்திருந்தான் விஜி. அந்த முன் காலைப் பொழுதின் குளுமையோ, இதமாக வீசிய கடற்கரை காற்றின் மென்மையோ அவனது மனதை ஊடுருவவில்லை. மொட்டை மாடியில் அமைக்கப்பட்டிருந்த அந்த முல்லைப் பந்தலிலிருந்து வீசிய முல்லை வாசமும் அவனை ஈர்க்கவில்லை.
அவன் ரசித்து அமைத்த பந்தலது. மொட்டை மாடி முழுவதுமே பச்சை பசேலென்று தான் இருக்கும். டென்ஷனாக இருக்கும் சமயத்தில் அங்கு வந்து அமர்ந்து கொண்டு கடலை பார்வையிட்டபடி இருப்பது அவனுக்கு பிடித்த ஒன்று.
ஆனால் இம்முறை எந்த விதமான இதமும் அவனுக்குள் பரவவில்லை. எதிலும் பிடித்தமில்லாமல் அவன் அமர்ந்திருந்த தோரணை வெறுமைக்குள் இருத்தி வைத்திருந்தது. கடந்த ஆறு மாதங்களாக அவனது கனவிலும் நினைவிலும் ஒரு முகத்தை மட்டுமே விரும்பியிருந்தான்.
அவள் மகாவேங்கட லக்ஷ்மி.
முதன்முதலாக விமானநிலையத்தில் அவளை பார்த்த நொடியிலிருந்து அவனது மனதுக்குள் கொலுவிருந்தவளை அசால்ட்டாக தட்டி விட்டு, அவளை கவர்ந்து கொண்டவனை நினைத்து அவனது மனதுக்குள் கோபம், வெறுப்பு, ஆத்திரம், சீற்றம் என அனைத்தும் சுழற்றியடித்துக் கொண்டிருந்தன. அனைத்தும் அவன் ஒருவனின் மீது மட்டுமே!
ஷ்யாம்!
எத்தனை செய்திருப்பான் ஷ்யாமுக்காக… உடலையே செருப்பாக தைத்து போடாத குறையாகத்தானே அவன் உழைத்தது. விரும்பியோ விரும்பாமலோ இவனது வாழ்க்கை தடம் மாறியதே அவனோடு சேர்ந்த பின் தானே. அவனுக்காக கொலை கூட செய்ய அஞ்சியதில்லையே!
அவன் ஒரு பங்கு செய்ய சொன்னால், இவன் பத்து பங்காக செய்து பயத்தை காட்டி வைத்ததால் தானே இன்றும் ஷ்யாமின் பெயரை சொல்லும் போதே அத்தனை அச்சம் நிலவியது. அந்த அச்சத்திற்கு காரணம் யார்? தான் தானே என்று பிடிவாதம் பிடித்தது அவனது மனது.
தான் ஆசைப்பட்ட ஒரே பெண் மஹா. தனக்காக அவளை விட்டுக் கொடுத்து இருக்கலாமே. தன்னிடமிருந்து அவளை தட்டிப் பறித்து விட்டால் தான் அப்படியே விட்டு விட தானென்ன அவ்வளவு முட்டாளா? அதுவுமில்லாமல் தன்னுடைய பண பரிவர்த்தனைகளை எப்போது அவன் நோண்ட ஆரம்பித்து விட்டானோ எப்படியும் முழுவதுமாக துடைத்து விடுவான் என்பதும் திண்ணம். தேனை எடுப்பவன் புறங்கையை சுவை பார்க்காமல் இருப்பானா என்ன?
இந்த இரண்டு விஷயமுமே விஜியை கோபத்தின் உச்சிமுனையில் நிறுத்தியிருந்தன.
யார் இருந்தாலும் இல்லையென்றாலும் ஷ்யாமின் அணுகுமுறையில் மாற்றம் வந்து விட போவதில்லை என்பதை விஜியின் மனம் ஒப்புக்கொள்ள மறுத்தது. விஜி அவனுக்காக உழைத்தான் என்றாலும் அதற்கும் மேல் சேர்த்திருந்தான் என்பதை அவனாக கூற மாட்டான். ஆனால் அவனது மனசாட்சி அறியுமே! விஜி, ஷ்யாமின் முகத்தை அணிந்த முகமூடி என்பதை அவன் உணரவில்லை. முகமூடிகள் முகமாக முடியுமா?
முகமாக முயன்று கொண்டிருந்தான் விஜி!
இன்னொருவரின் முகத்துக்கு தான் உரிமை கொண்டாட முயல்வது வெட்கக்கேடானது.
தன்னுடைய உண்மையான முகத்தோடும் நேர்மையான மனதோடும் மகாவின் முன் நின்றிருந்தால் கண்டிப்பாக அவனை திரும்பிப் பார்த்திருப்பாள். ஆனால் இருவருமே மறந்த ஒரு விஷயம் என்னவென்றால் அது அவளின் மனது.
யார் நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் அவள் நினைத்தால் மட்டுமே அது அர்த்தமான ஆசையாக இருக்க முடியும் என்பதை இருவருமே உணரவில்லை. அவள் கடை சரக்கோ, உயிரற்ற ஜீவனோ இல்லை… ரத்தமும் சதையுமான மனுஷி. அவளுக்கும் மனம் உண்டு… அதில் ஜீவனுண்டு… தன்னுடைய முடிவுகளை தான் மட்டுமே எடுக்க முடியும் என்பதில் தீவிரமான பிடிவாதமும் உண்டு.
யாரும் அவர்களது முடிவுகளையும், செயல்களையும் மகாவின் மேல் திணிக்க முடியாது என்பதை இவன் அறியவில்லை.
ஷ்யாம் தலையிட்டதால் தான் மகாவை தான் அடைய முடியவில்லை என்று நினைப்பது எவ்வளவு பெரிய அறிவிலித்தனம்?! அவள் விரும்ப வேண்டாமா?
ஒருவருடைய உடலால் பெண்ணின் அருகிலிருந்து அந்த பெண்ணை வசியப்படுத்துவதை விட, மனதால் அருகிலிருந்து அவளிடம் வசியமாகி, அவளையும் தன் வசப்படுத்துவதே காதல் என்பதாம்!
முன்னதற்கு ஆயுள் குறைவு… பின்னதற்கு ஆயுள் அதிகம்!
அதை இந்த இருவருமே உணர்வது எப்போது?
கடலை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவனின் செல்பேசி அழைத்தது.
விஷ்ணு அழைத்திருந்தான்.
அட்டென்ட் செய்யாமல் அதை வெறுமையாக பார்த்தான். மனம் வெகுவாக காயப்பட்டு இருந்தது. ஷ்யாம் எப்படியும் தன்னை கண்டுக் கொள்வான். ஆனால் முடிந்தவரை அவனை புண்படுத்த வேண்டும். சில தோல்விகளையாவது பரிசளிக்க வேண்டும். மஹாவை அவன் கஸ்டடி எடுத்த போது திக்கு தெரியாமல், என்ன செய்வதென புரியாமல் தான் விழித்ததை போல அவன் விழிக்க வேண்டும்.
அதற்காகத்தான் முதலில் நடராஜை தூண்டி விட்டு மீடியாவில் அவனது பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காக செய்தியை வர செய்தது. ஆனால் இவனே எதிர்பார்க்காத ஒன்றாக முருகானந்தத்திற்கு ஹார்ட் அட்டாக் வந்துவிட, இவன் எதிர்பார்த்த விளைவு வேறு மாதிரியாகி விட்டது.
அதை ஷ்யாம் உபயோகப்படுத்திக் கொண்டது போல ஆகிவிட, உண்மையில் விஜி வெறுத்துப் போனான். அதிலும் செய்தி தந்தவர்களே மன்னிப்பையும் கேட்க, பைரவியிடம் எக்கச்சக்கமான நல்ல பெயரை சம்பாதித்துக் கொண்ட ஷ்யாமை பார்க்கும் போது என்ன செய்வது என்று புரியாமல் விழித்தான் விஜி.
அவ்வளவு சீக்கிரத்தில் தன்னை பகைத்துக் கொள்ள ஷ்யாம் விரும்ப மாட்டான் என்பதும் விஜிக்கு தெரியும். ஏனென்றால் சென்னை கிளையின் முழு கண்ட்ரோலும் இவனிடம் தான் இதுவரை இருந்து வந்தது. இப்போது இளங்கவியை உள்ளே நுழைத்து இருந்தாலும் எட்டு வருட கணக்கு… முழுவதுமாக இவனிடம் மட்டுமே இருக்கிறது அல்லவா. பல ரகசிய உடன்படிக்கைகள், பண பரிமாற்றங்கள் அனைத்தும் இவன் பிடியில்.
தன்னை பகைத்துக் கொள்வது இவை அனைத்துக்கும் உலை வைக்கும் வேலை என்பதை அறியாதவனா?
விஷ்ணு மீண்டும் அழைத்தான்.
பத்தாவது கால்!
அட்டென்ட் செய்து காதுக்கு கொடுத்தான்.
“விஜிண்ணா…” என்ற விஷ்ணுவின் குரல் கேட்க,
“சொல்லு விஷ்ணு…” எதையும் காட்டிக் கொள்ளாமல் விஜி கேட்க,
“உங்களை உத்தண்டிக்கு பாஸ் வர சொன்னாங்க ண்ணா…” என்றவனை,
“கொஞ்சம் பிஸியா இருக்கேன் விஷ்ணு…” என்றவனின் வார்த்தைகளை அந்த புறத்தில் விஷ்ணுவால் நம்பவே முடியவில்லை. பாஸ் அழைத்து விஜி பிஸியாக இருக்கிறேன் என்று கூறுவதை கொஞ்சமும் ஏற்க முடியவில்லை.
“இங்கயும் கொஞ்சம் அர்ஜன்ட் தான் ண்ணா… வந்துட்டு போய்டுவீங்களாம்…” என்று கொஞ்சம் கண்டிப்பான குரலில் விஷ்ணு கூற,
“இல்ல விஷ்ணு… இப்ப வர முடியாது…” என்று முடிக்க, அந்த செய்தியை அப்படியே ஷ்யாமுக்கு கடத்தினான் விஷ்ணு. ‘சரி விட்டுடு…’ என்று அவன் சைகை காட்டவும்,
“சரிண்ணா” என்றபடி வைத்துவிட்டான்.
இதுவரை வரசொல்வது என்றால் அது ஷ்யாமே தான் அழைப்பான். யாரையும் விட்டெல்லாம் அழைத்ததில்லை. ஆனால் இன்று விஷ்ணுவை வைத்து அழைத்திருக்கிறான் என்றால், முந்தைய காலங்களில் இப்படியாக யாரையேனும் அழைக்க விஷ்ணுவை உபயோகப்படுத்திய நேரங்கள் அவன் கண் முன் வந்து போனது.
கட்டபஞ்சாயத்துகளில் உடன் நிற்பவன் விஷ்ணு. ஷ்யாம் கண் காட்டினால் எதிரிலிருப்பவனின் கையை யோசிக்காமல் உடைக்கும் கண்மூடித்தனம் உண்டு. அவனுக்கு யோசிக்க தெரியாது. ஷ்யாம் என்ன செய்ய சொல்கிறானோ அதை மட்டுமே கண்ணை மூடிக் கொண்டு செய்து முடித்துவிட்டு வந்து நிற்பான்.
ஆக விஷ்ணு அழைக்கிறான் என்றால் ஷ்யாம் தன்னை முழுவதுமாக கண்டு கொண்டான் என்பதுதான் அர்த்தம். ஆனால் இப்போதுதான் கண்டுகொண்டான் என்பதை விஜியால் நம்ப முடியவில்லை. எதுவொன்றுக்கும் ஒற்று, அந்த ஒற்றுக்கு ஒற்று என்றிருப்பவன், இத்தனை நாட்களாக தன்னை எப்படி விட்டு வைத்தான் என்றும் புரியாமல் எழுந்தான்.
இப்போது சென்னையிலிருப்பது உசிதமல்ல. மொத்தத்தில் இந்தியாவில் இருப்பதே உசிதமல்ல. எங்கு செல்வது என்று யோசிக்க ஆரம்பித்தான். அப்போது அவனது நினைவுக்கு வந்தது நேபாளம் தான். அவனுக்கு பிடித்த இடம் என்பதோடு ஷ்யாமின் ஆட்களால் அவ்வளவு சீக்கிரத்தில் சல்லடையில் சலிக்க முடியாத இடம்.
ஒரு முடிவாக நினைத்துக் கொண்டு, ட்ராவல்ஸ்ஸுக்கு கால் செய்து காத்மண்டுவுக்கு டிக்கட் புக் செய்தான். ஜெட் ஏர்வேஸ், பதினொன்று இருபதுக்கு விமானம் என்று நோடிபிகேஷன் வந்தது.
இடது கை மணிக்கட்டை திருப்பி நேரத்தை பார்த்தான். பத்தாக பதினைந்து நிமிடங்கள் இருந்தன. இப்போது கிளம்பினால் சரியாக இருக்குமென்று எண்ணிக் கொண்டவன், அவசரமாக அவனது துணிகளை ட்ராலி பேகில் அடைத்தான். முக்கியமான சில டாக்குமென்ட்சை எடுத்துக் கொண்டவன், சில பென் டிரைவ்களை பத்திரப்படுத்தினான்.
இப்போது கிளம்பிவிட்டால் ஷ்யாமிடம் சிக்க தேவையில்லை. அவனை எதிர்கொள்ள அவன் தயங்கவில்லை. அவன் செய்ய வேண்டிய காரியங்கள் இன்னும் சில இருப்பதால் அதையும் செய்து விட்டு மொத்தமாக அவனை பார்க்க வேண்டும் என்று தான் நினைத்திருந்தான்.
மொத்தமாக அவன் வீழ்வதை பார்க்க வேண்டும்.
வீழ்ந்து எழ முடியாமல் தவிப்பதை தான் காண வேண்டும்.
வீட்டை பூட்டிவிட்டு காரை ஸ்டார்ட் செய்ய, அவனது செல்பேசி அழைத்தது.
எடுத்துப் பார்த்தான்.
ஷ்யாமின் எண் ஒளிர்ந்து கொண்டிருந்தது.
மனதுக்குள் மெல்லிய நடுக்கம்!
இன்னொரு இரண்டு மணி நேரத்தை கடந்து விட்டால் ஷ்யாமால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் அந்த இரண்டு மணி நேரத்தை கடக்க வேண்டுமே என்று மனம் சோர்ந்தது.
தயங்கியபடியே எடுத்தவன், “பாஸ்…” என்று சிறிய குரலில் அழைக்க,
“உத்தண்டி வா விஜி…” நேரடியாக அழைத்தான் ஷ்யாம்.
“பாஸ்… கொஞ்சம் அர்ஜண்ட்டா தஞ்சாவூர் கிளம்பிட்டு இருக்கேன்…” என்றபடியே காரை ஓட்டியபடி அவன் பதில் கொடுக்க,
“ஹும்ம்ம் அப்படியா?” என்று யோசித்த ஷ்யாம், “எதுல தஞ்சாவூர் போற விஜி?” என்று கேட்க,
“கார்ல தான் பாஸ்…” எனவும்,
“எந்த தஞ்சாவூர்?” ஒரு மாதிரியான குரலில் ஷ்யாம் கேட்க,
தன்னை சுற்றிலும் நான்கு இன்னோவா. எங்கும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. அவர்கள் போகும் வழியில் தான் போக வேண்டும் என்பது போல அவனை தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.
இனி அவ்வளவுதான்.
ஒரு நீண்ட பெருமூச்சோடு வேகத்தை குறைத்தான். நான்கு இன்னோவாவும் ஒன்று போல வேகத்தை குறைத்து இன்னும் அவனது காரை நெருக்கி பிடித்தது.
விஜி காரின் கதவை கூட திறக்க முடியாது என்பது போல…
“இது சரியில்ல பாஸ்…” என்றவனின் குரலில் கடுமை ஏறியிருந்தது. இனியும் தேவையில்லாமல் நடிக்க வேண்டுமா என்ற எண்ணத்தில்!
“எது சரின்னு நான் சொல்றேன் விஜி…” ஷ்யாம் அமர்த்தலாக கூற,
“எல்லாரையும் மாதிரி நீங்க என்னையும் கணக்கு போட்டுட்டீங்க பாஸ்…” மிரட்டலான குரலில் கூற,
“ஆஹான்…” என்றவன், “நீ என்ன சொல்றதுன்னாலும் என் முன்னாடி வந்து சொல்லு…” என்றவன், இடைவெளி விட்டு,
“நவ் யூ ஆர் ட்ராப்ட்…” என்றான்!
*****
உத்தண்டி வீட்டுக்கு விஜி அழைத்து வரப்பட்டு ஒரு மணி நேரமாகி இருந்தது. வெளி ஹாலில் அமர்ந்திருந்தானே தவிர ஷ்யாம் வரும் வழியை காணோம். விஷ்ணுவும் இளங்கவியும் மட்டும் இருந்தனர். நெருப்பின் மேல் அமர்ந்து இருந்ததை போலிருந்தது. அந்த வீட்டில் எத்தனையோ உரிமையாக வளைய வந்திருக்கிறான். ஆனால் இப்போது அப்படி சொந்தமாக எண்ண முடியவில்லை. ஒட்ட மறுத்தது. உள்ளுக்குள் ஏனோ பிசைந்தது. எப்படியும் பிரச்சனை பெரிதாகும் என்று தோன்றியது.
எதனை பெரிதாலும் பரவாயில்லை. எதிர்பார்த்தது தானே ! எதுவாக இருந்தாலும் ஒரு கை பார்த்து விடலாம் என்று எண்ணிக் கொண்டான்.
துணிந்தவனுக்கு தூக்கு மேடையும் பஞ்சு மெத்தை!
அந்த துணிச்சல் எப்போதோ விஜிக்கு வந்து விட்டிருந்தது. இப்போது அதோடு தெளிவும் தைரியமும் சேர்ந்து கொண்டது!
வெளியே பவுன்சர்களை போல காட்சியளித்த பத்து பேர் அங்கும் இங்குமாக நடை பயின்று கொண்டிருந்தனர். அவர்களில் பலரை விஜிக்கும் தெரியும். பணம் வசூலிக்க செல்லும் போது உடன் வருபவர்கள் அவர்கள். மிரட்டுவதற்காக மட்டுமே இருப்பவர்கள். அதிகபட்சமாக, கை கால்களை உடைத்து இருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொருவனும் பத்து ஆட்களுக்கு சமம். அந்தளவு உடலை வளர்த்து வைத்திருந்தனர்.
ஒரு மணி நேரம் கடந்த பின், நிதானமாக வந்தான் ஷ்யாம், காரிலிருந்து இறங்கி வந்தவனோடு வந்தவனை பார்த்து உள்ளுக்குள் சற்று அதிர்வாக இருந்தது.
அவன் கார்த்திக்!
அவனது முகமும் கறுத்து சிறுத்திருந்தது!
“வாங்க கார்த்திக்…” என்று மரியாதையாகத்தான் உள்ளுக்குள் அழைத்தான் ஷ்யாம். ஆனால் அதில் சற்று இறுக்கமும் இருந்தது. அது விஜியை கண்டதால் கூட இருக்கலாம்!
“ம்ம்ம்…” என்று உள்ளே நுழைந்தவனுக்கு, விஜியை கண்டதும் சற்று தைரியமாக இருந்தது. உடன் ஆதாரமாக பற்றிக் கொள்ள ஒருவன் இருக்கிறான் என்ற களிப்பு!
என்ன இருந்தாலும் மகாவின் பிரச்சனையின் போது அவ்வளவு தூரம் தோள் கொடுத்தவனாயிற்றே என்ற நன்றி கார்த்திக்கு எப்போதும் உண்டு. அதனால் தான் வருமானவரித் துறைக்கு பெட்டிஷனை விஜியின் ஆலோசனையின் பேரிலேயே செய்தான். பெட்டிஷன் போட்டதோடு மட்டுமில்லாமல், அவனுக்கு தெரிந்த பெரிய தலைகளை வைத்து பிரஷர் கொடுத்தான். கார்த்திக்கின் தலையீடு இல்லையென்றால் இவ்வளவு பெரிய சோதனை வர வாய்ப்பில்லை என்பது விஜிக்கும் தெரியும். அதை தான் ஷ்யாமும் உணர்ந்து கொண்டான்.
“உக்காருங்க கார்த்திக்…” என்றவன், “மகேந்த்ரா…” என்று அழைத்தான்.
அவனது அழைப்பில் அவசரமாக வந்த மகேந்தரனிடம், “கார்த்தி சாருக்கு ஜூஸ் கொண்டு வா…” என்றதோடு, விஜியின் புறம் திரும்பி, “நீ என்ன சாப்ட்ட விஜி?” என்று கேட்க, “ஜூஸ் குடிச்சேன் பாஸ்…” எனவும்,
“பரவால்ல… இன்னொன்னு சாப்பிடு…” என்றவன், “ரெண்டு பேருக்கும் ஜூஸ் மகி… எனக்கு ஹாஃப் கிளாஸ் மட்டும் ஆப்பிள் ஜூஸ்…” என்றவன், விஷ்ணு இளங்கவியின் பக்கம் திரும்பியவன், “டேய் நீங்களும் போய் சாப்பிடுங்கடா…” என்று அவர்களையும் புன்னகையோடு விரட்டினான்.
இப்போது அவனுக்கு அந்த இருவரிடமும் தனியாக பேச வேண்டும் என்பதை புரிந்து கொண்டவர்கள், “ஓகே பாஸ்…” என்றபடி சமையலறையை நோக்கி நகர்ந்தனர்.
இருவருக்கும் எதிராக அமர்ந்து கொண்டவன், மிகவும் இயல்பாக இருந்தான். கோபத்தையும் எரிச்சலையும் காட்டிக் கொள்ளவே இல்லை.
ஜூஸை கொண்டு வந்து கொடுத்த மகேந்திரன், இருவருக்கும் கொடுத்து விட்டு, ஷ்யாமுடைய கண்ணாடி கோப்பையில் ஜூஸுடன் வைட் ரம்’மை கலந்தான், அவனது முகத்தை பார்த்தபடியே. உடன் ஐஸ் கியூப்ஸ்! ஷ்யாமுக்கு மிகவும் பிடித்த காக்டெயில் அது, ரசித்து பருகுவான்! போதுமென்று அவன் சைகையில் கூற, ரம் பாட்டிலை அங்கேயே வைத்து விட்டு உள்ளே சென்றான்.
கண்ணாடி கோப்பையை எடுத்தவன், சிப் சிப்பாக அருந்தியபடி சிகரெட்டையும் பற்ற வைத்துக் கொண்டான்.