VNE 45(4)
VNE 45(4)
“என்ன சங்கடம் வேண்டி கிடக்கு? நாளைக்கு அவன் உன்னோட மருமகன்… ரெண்டு வீட்டோட நல்லது கெட்டதுக்கும் அவன் தான் முன்னாடி நிக்கணும்… இப்படியெல்லாம் இன்னும் ரவுடித்தனம் செஞ்சா யார் மதிப்பா?”
“நானா… மத்தவங்களுக்காக நாம வாழ முடியாது…” என்றவனை முறைத்தவர்,
“இப்படியே பேசி என் வாயை அடைச்சு பழகிட்ட ஷ்யாம்…” என்று கம்மிய குரலில் கூற, அதற்கும் மேல் அவரிடம் மறைக்க முயலவில்லை. அருகில் சென்று அமர்ந்தவன், அவரது கையை பிடித்துக் கொண்டான்.
“நானா… நான் சொல்றதை பொறுமையா கேக்கணும்… டென்ஷனாக கூடாது…” என்றவன் கார்த்திக்கு கண்ணைக் காட்ட, அவன்,
“ப்பா… கொஞ்சம் வாங்கப்பா…” என்று தந்தையை அழைத்தான். இதையெல்லாம் கேட்டு இவர் வேறு இன்னும் டென்ஷனாக வேண்டுமா என்ற எண்ணம் தான் ஷ்யாமுக்கு! டைனிங் ஹாலில் இருந்த மகாவை அழைத்து தன்னோடு அமர வைத்துக் கொண்டான்.
முருகானந்தமும் இருவருக்கும் தனிமை கொடுத்து எழுந்து விட, சிறிய குரலில் நடந்தவற்றை, ஆங்காங்கே சிலவற்றை மறைத்து, கொஞ்சம் பூசி மொழுகி கூறினான்.
அத்தனையும் அப்படியே கூறிவிடலாம், ஆனால் அவரது மனம் புண் படும். உண்மையை சொல்கிறேன் பேர்வழி என்று போனால் இவரது நிம்மதியும் தான் அழியும் அல்லவா!
ஆனால் தனிப்பட்ட தனது புகைப்படங்களை விஜி பகிர்ந்து விட்டான் எனும் போதே அவருக்கு ரத்தம் கொதித்தது. ஷ்யாமுடைய தந்தையல்லவா… என் மகனின் அந்தரங்கத்தை பகிர இவன் யார் என்ற கோபம்.
ஆனால் இன்னொரு மனமோ மகாவை நினைத்து கலங்கியது.
அத்தனை கலக்கமாக கண்களில் நீர் சூழ அமர்ந்திருந்த அந்த பெண்ணை பார்க்கையில் அவருக்கு மனம் கசிந்தது.
இத்தனையும் சகித்துக் கொண்டேயாக வேண்டிய கட்டாயம் இந்த பெண்ணுக்கு இருக்கிறதா என்ன?
தன் மகனை பற்றி நன்றாகவே அறிந்த அவருக்கு, அவன் செய்தது சரிதான் என்று தோன்றியது. ஆனால் மஹா?
சொல்லி முடித்தவன், கைகளை கோர்த்துக் கொண்டு முகத்தை தாங்கியபடி வேதனையோடு அமர்ந்து விட, அருகில் இருந்த மஹாவுக்கு மனம் கசிந்தது. அவனது கோபத்தை தாங்கிக் கொள்வாள். ஆனால் வேதனையை தாள முடியவே இல்லையே! ஆனாலும் அவன் செய்தது தவறுதான். அதை மறக்க முடியாதே!
“நான் யார நானா நம்பறது? இனிமே இவ பக்கத்துல உக்கார கூட கேமரா இருக்கான்னு bug detector எ வெச்சு பார்க்கனுமா?” குனிந்தபடியே ஷ்யாம் கேட்க, மஹாவுக்கு நெருப்பின் மேல் அமர்ந்திருப்பதை போல இருந்தது.
நாதன் அவனது கைகளை பிடித்துக் கொண்டார்.
“நீ எதுக்குடா மத்தவனை நம்பனும்? உன் அப்பன் மலை மாதிரி இருக்கேன்… அந்த விஜிக்கு நீ கொடுத்த ட்ரீட்மென்ட் தப்பு தான்… ஆனா அவனை உள்ள வெச்சு வெளுத்து வாங்கியிருக்கணும்… ஆனா ஷ்யாம்… இன்னொரு விஷயம்… உனக்கும் மஹாக்கும்…. கல்யாணம்… இப்ப தேவையா?” என்று கேட்க,
“ஏன் நானா?” ஒரு மாதிரியான குரலில் கேட்க, மகாவும் அதிர்ந்து பார்த்தாள்.
“இல்ல… அந்த புள்ளை மனசையும் பார்க்கனும்ல…” என்று தயங்க,
அவன் மறுப்பை தெரிவிக்க முயல்வதற்குள் மஹா முந்திக் கொண்டாள்.
“மாமா… இவங்க ஆயிரம் பேர் கூட பழகி இருக்கலாம்… இன்னும் சொல்வாங்க, உலக அழகிங்க எல்லாம் என்னோட காலடிலன்னு…” என்று அவள் கூறும் போதே இடையிட்டவன்,
“ஏய் விளையாட்டா சொன்னதையெல்லாம், ஏன்டி இப்படி சொல்லி மானத்தை வாங்கற?”
“உனக்கும் எனக்கும் பேச்சு இல்லை… என்கிட்டே பேசாத…” என்று கைகாட்டி அவனை நிறுத்தியவள், “நான் லவ் பண்ணது, பண்ணிட்டு இருக்கறது, இனிமே பண்ண போறது எல்லாம் இவங்க ஒருத்தங்களை மட்டும் தான்… என் தலைவிதி விழுந்து தொலைஞ்சுட்டேன்…” கடுப்பாக கூறினாலும், அதிலும் அவள் காதல் தெரிய, சிறு புன்னகையோடு அவளை பார்த்தான் ஷ்யாம்.
“இல்லம்மா… இப்ப உனக்கு ஈசியா தெரியலாம்… ஆனா பின்னாடி வாழ்க்கைல எந்த பிரச்னையும் வர கூடாது…” என்று கூறிய நாதனை பார்த்து,
“பின்னாடி வாழ்க்கையோ முன்னாடி வாழ்க்கையோ… எதுவா இருந்தாலும்… நான் மிசஸ் ஷ்யாம் மட்டும் தான் மாமா… நானே வேண்டாம்ன்னு நினைச்சாலும் என்னால இந்த பரதேசிய விட்டுட்டு இருக்க முடியும்ன்னு தோணலை… ஆனா எனக்கு இருக்க கோபத்துக்கு அப்படியே இவனை…” என்று பல்லைக் கடிக்க, அவள் ஒருமைக்கு மாறியதை கண்டுக் கொள்ளாமல் நாதன் சிரித்தார்.
அவள் கூறுகையில் கொஞ்சமும் விடாமல் அவளது முகத்தையும், அதில் தெரிந்த நவரசத்தையும், அவளது காதில் தொங்கிக் கொண்டிருந்த தொங்கட்டானின் அழகையும், அவளது உதடுகளையும், அது அழகாக வளைவதையும், அவளது கோபத்தையும், முக சிவப்பையும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். பெரியவர்கள் வந்திருப்பதால் சேலையில் இருந்தவளை குறும்பாக பார்த்தபடி இருந்தான்.
“டேய் தம்பி… உனக்குன்னு எப்படிடா இப்படி ஒரு ஏமாளி புள்ளை வாச்சுருக்கு?” என்று கேட்க,
“இவளை பார்த்தா உங்களுக்கு ஏமாளி மாதிரி தோணுதா?” என்று சலித்துக் கொண்டவன், “இந்த பிசாசோட ஒவ்வொரு கேள்வியும் புல்லட் மாதிரி… ஒன்னும் முடியல நானா…”
“அடேய் மகனே… வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு… உனக்கு இப்படியொரு பொண்ணு தான்டா வேணும்… இல்லைன்னா நீயல்லாம் அடங்கற கேஸா?”
“ஹும்ம்ம்… புலிய புல்லை திங்க வைக்க பாக்கறீங்க…” என்று சலிக்க,
“ஆமா… இவுங்க பெரிய புலியாக்கும்?” என்று உதட்டை சுளித்தவள், கடுப்போடு எழுந்து செல்ல, இவனும் புன்னகைத்துக் கொண்டான்.
மனம் சற்று லேசானதை போல இருந்தது.
அவ்வப்போது மருத்துவமனைக்கு அழைத்து விஜியை பற்றியும், அவன் எப்படி இருக்கிறான் என்பதையும் கேட்டுக் கொண்டுதான் இருந்தான்.
இளங்கவி, விஷ்ணு மற்றும் சிவச்சந்திரன் என்று அனைவருமாக விஜியிடம் இருந்த டாக்குமெண்ட்சை தேடிக் கொண்டு தான் இருந்தனர். ஆனாலும் இன்னமும் அவை சிக்கியபாடில்லை.
“அந்த புள்ளை பெருந்தன்மையா சொல்லலாம் ஷ்யாம்… ஆனா அது மனசுல எவ்வளவு கஷ்டமிருக்கும்? அதை புரிஞ்சுக்கணும் நீ…” என்று நாதன் சிறு குரலில் கூற,
“கண்டிப்பா நானா… ஆனா உங்க மருமக கிட்ட சொல்லி என்னை கண்கலங்காம பார்த்துக்க சொல்லுங்க…” என்று கிண்டலாக கூறியவனை, கார்த்திக்,
“சாப்பிட வா ஷ்யாம்….” என்றழைக்க,
“கொஞ்சம் ப்ரெஷ் அப் ஆகணுமே கார்த்திக்…” எனவும், கார்த்திக் மஹா புறம் திரும்பி,
“டேய் லட்டு… மச்சானை உன் ரூமுக்கு அழைச்சுட்டு போ…” என்று கூற, தமையனை முறைத்தாள். ‘ஏன் உன் ரூமுக்கு கூட்டிட்டு போயேன்…’ என்ற செய்தி அதனுள் ஒளிந்திருக்க, அதை அவளது உடன்பிறப்பு கண்டு கொண்டால் தானே!
முனுமுனுவென முணுமுணுத்துக் கொண்டே ஷ்யாமை பார்க்க, அவனோ கார்த்திக்கை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். இருவருக்குமிடையே சங்கேத பாஷை போல… ‘திருடன்கள்’ என்று பல்லைக் கடித்தாள்.
“வர்றதுக்கு வெத்தலை பாக்கு வெச்சு அழைக்கணுமா?” என்று சுருக்கென்று கேட்க, அவள் பக்கம் திரும்பிய ஷ்யாம்,
“ஏன் ஊதுபத்தியை விட்டுட்ட லட்டு? அதையும் வெச்சா ஒரு மார்கமா இருக்கும்ல…” கண்ணடித்தவனை முறைத்தாள்.
“என்ன மிஸஸ் ஷ்யாம்? ஒன்னும் சொல்லாம முறைக்கறீங்க? இதுல உங்க கருத்தை பதிவு செய்ய மாட்டீங்களா?” என்று கலாய்க்க,
“நீ பண்ண வேலைக்கெல்லாம் அது ஒன்னு தான் குறைச்சல்…” என்றபடி அவளது அறைக்குள் சென்றவள், ஒரு துண்டை எடுத்து அவன் முன் நீட்டி,
“ப்ரெஷ் ஆகிட்டு வா…” என்று வெளியேற முயல, அவளது கையைப் பிடித்து இழுத்து சுவரோடு ஒட்டியபடி நிற்க வைத்தான்.
அவள் அதிர்ந்து கதவை பார்க்க, ஆட்டோமேடிக் லாக் செவ்வனே தன் பணியை செய்திருந்தது.
“ஏய் என்னடா பண்ற?” என்று கோபமாக கூறியபடி அவனை தள்ளி நிறுத்த முயல,
“என்ன பண்றேன்னு உனக்கு விளக்கம் வேற கொடுக்கனுமா?” என்று அவன் குறும்பாக புன்னகைக்க,
“வேண்டாம்…” என்று அவனது நெஞ்சில் கைவைத்து தள்ளி நிறுத்த அவள் முயல,
“ஹேய்… ரொம்ப சீன் காட்டாத…” என்றவன், “இன்னைக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ் அதிகமா இருக்கு… அதனால…” என்று இழுக்க,
“அதனால…” அதிர்ந்து பார்த்தாள்.
“நீ வேற இன்னைக்கு ரொம்ப பேசிட்ட குல்பி…” என்று கவலையாக கூற,
“நீ என்ன ஊமையாவா இருந்த? நீயும்தான்டா பேசின…” எனவும்,
“சரி ரெண்டு பேருக்குமே டென்ஷனா இருக்குல்ல…” என்று சிரித்தபடி கேட்க,
“ம்ம்ம்… ஒன்னும் இல்ல… தள்ளி நில்லு…” என்று கடுப்பாக கூறினாள்.
“ம்ம்ம்… அப்படியா?” என்றவன், அவளது வெற்றிடையில் கைவைக்க, திக்கென்றது அவளுக்கு.
உருக முடியவில்லை… குழையவில்லை. அவளது அந்த இறுக்கம் அவனுக்கும் தெரிந்தது. அதுபோலத்தான் அவனுக்கும்.
முடியவில்லை. ஏதோவொரு உணர்ச்சி மனதை அழுத்தியது. அவளிடம் முன்பு போல நெருக்கத்தை காட்ட முடியவில்லை. இதுவே முன்னர் என்றால் அவளை பார்த்தவுடனே மனம் ஜிவ்வென்று பறக்கும். அணைக்க துடிக்கும். முத்தமிட தவிக்கும். ஆனாலும் வெகுவாக தன் மனதை அடக்கிக் கொண்டு புன்னகைப்பான்.
ஆனால் இப்போது அந்த வேதியியல் மாற்றங்கள் நிகழவில்லை. முதலில் தோன்றவில்லை. குற்ற உணர்ச்சி மனதை அழுத்தியது.
இந்த உணர்ச்சியோடு அவளை வாழ்நாள் முழுவதும் எதிர்நோக்க முடியுமா என்று தான் தோன்றியது.